சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் 'தெய்வத்திருமகள்' படத்தில், மனநிலை பாதிக்கப்பட்டவராக விக்ரம் நடித்து இருக்கிறார். படத்தின் வெற்றியை பகிர்ந்துகொள்ளும் வகையில் நன்றி அறிவிப்பு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ரெயின் ட்ரீ ஓட்டலில் நடந்தது.
நடிகர்கள் விக்ரம், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் அனுஷ்கா, அமலாபால், இயக்குநர்கள் பாலா, விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், யு.டி.வி. தனஞ்செயன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
இயக்குநர் பாலா பேசுகையில், "இந்தப் படத்தைப் பார்க்கப் போகும்போதே அழாமல் இருக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டே சென்றேன். ஆனால் படம் பார்த்த போது என்னை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன். படம் முடியும் வரை அழுதபடி இருந்தேன். விஜய் என்னை ஜெயித்துவிட்டான்," என்றார் உருக்கத்துடன்.
விக்ரம் பேச்சு
"ஒரு படம் வெற்றி பெற்று அதற்கு விழா நடத்தும்போது, அதில் கலந்துகொள்வது சந்தோஷமான தருணம். அந்த மனநிலையில் நான் இருக்கிறேன். படம் வெற்றி பெற்றால், கதாநாயகனைத்தான் முதலில் பாராட்டுவார்கள். ஆனால், 'தெய்வத்திருமகள்' அப்படி இல்லை. அதில் நடித்த எல்லா நடிகர்-நடிகைகளையும் பாராட்டி பேச முடியும்.
அனுஷ்காவும், அமலாபாலும் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரங்களாக பிரகாசித்தார்கள். படத்தின் முதல் பாதியில் நான் கதாநாயகன் என்றால், இரண்டாம் பாதியில் அனுஷ்காதான் கதாநாயகன்.
இயக்குநர்தான் ஹீரோ
இந்த படத்தின் உண்மையான கதாநாயகன், இயக்குநர் விஜய்தான். அவர்தான் என்னை ஐந்து வயது சிறுவனின் மனநிலைக்கு கொண்டு வந்தார். இந்த படத்தை நான் ஒப்புக்கொண்டபோது, என்னை பலபேர் திட்டினார்கள். இப்படிப்பட்ட கதைகளில் நீ ஏன் நடிக்கிறாய்? சாமி மாதிரி சண்டை படத்தில் நடித்துவிட்டு போக வேண்டியதுதானே? என்றார்கள்.
ஆனால் இயக்குநர் விஜய் தன் முடிவில் பிடிவாதமாக இருந்து, படத்தை வெற்றிபெற வைத்து விட்டார்.
மாற்று திறனாளிகள்
மாற்று திறனாளிகளை சமுதாயம் ஒதுக்கக்கூடாது. அவர்களையும் நம்மில் ஒருவராக பார்க்க வேண்டும். அப்படி இருப்பது அவர்கள் தவறல்ல. இந்த கருத்தைத்தான் `தெய்வத்திருமகள்' படத்தில் சொல்லியிருக்கிறோம்,'' என்றார்.