சன் குடும்ப விருது வழங்கும் விழாவில் நீண்டநாட்கள் சன் குடும்பத்தில் இருந்ததற்கான விருது ராதிகா சரத்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த கதாநாயகனுக்கான விருது திருமுருகனுக்கும், சிறந்த கதாநாயகிக்கான விருது திருமதி செல்வம் அபிதாவிற்கும் வழங்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் நாயகர்கள், நாயகிகள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சன் குடும்ப விருதுகள் வழங்கப்படுகின்றன.
2012ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா சில தினங்களுக்கு முன்பு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. சன் டிவியின் தொடர்களைப் பார்த்து வாசகர்கள் தேர்ந்தெடுத்த நடிகர் நடிகையர்களுக்கு இந்த ஆண்டிற்கான சன் குடும்ப விருதுகள் வழங்கப்பட்டன.
சன் டி.வியில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகி வரும் தொடர்கள், அதில் நடித்த சிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன. சன் டிவியில் நீண்ட நாட்களாகப் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
வாழ்நாள் சாதனையாளர் விருது
சன் டிவியில் மெட்டி ஒலி, ஆனந்தம் உள்ளிட்ட தொடர்களில் நடித்த டெல்லி குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் வழங்கப்பட்டது.
ராதிகா சரத்குமாருக்கு விருது
நீண்ட நாள் சன் குடும்பத்தில் இருந்ததற்கான விருது ராதிகா சரத்குமாருக்கு வழங்கப்பட்டது. முதலில் நடிகையாக தொடங்கிய பயணம், சித்தி, அண்ணாமலை, செல்வி, செல்லமே என சன் டிவியில் தொடர்கிறது ராதிகாவின் பயணம். இதேபோல் நீண்ட நாட்களாக டி.வி தொடரின் நேரமான இரவு 9.30 மணியை தக்கவைத்துக் கொண்டதற்கான விருது ராதிகாவிற்கு வழங்கப்பட்டது.
சன் குடும்பத்தில் நீண்ட நாட்கள்
இதேபோல் சன் குடும்பத்தில் நீண்டநாட்களாக தொடர்களை ஒளிபரப்பிவரும் விகடன் டெலிவிஸ்டாஸ் பா.சீனிவாசன், விஷன் டைம்ஸ் ராமமூர்த்தி, அபிநயா கிரியேஷன்ஸ் ஜி.கிருஷ்ணமுர்த்தி, சினி டைம்ஸ் சவுந்தர்ராஜன், ஷான் மீடியா கபிலன், சரிகம பி.ஆர்.விஜயலட்சுமி, ஹோம் மீடியா சுஜாதா விஜயகுமார், யுடிவி சந்தோஷ் நாயர், திரு பிக்சர்ஸ் திருமுருகன், நிம்பஸ் குமார் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த கதாநாயகன் திருமுருகன்
நாதஸ்வரம் தொடரை தயாரித்து நடித்து வரும் திருமுருகன் சிறந்த கதாநாயகனாகவும், திருமதி செல்வம் நாயகி அபிதா சிறந்த கதாநாயகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகை சிறப்பு விருது தங்கம் தொடரில் நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த இயக்குநர் குமரன்
சிறந்த இயக்குநராக தென்றல் தொடர் இயக்குநர் எஸ்.குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த தொடராக திருமதி செல்வம் தொடர் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த மாமனாராக நாதஸ்வரம் தொடரில் நடித்த மகாநதி சங்கரும், சிறந்த மாமியாராக வடிவுக்கரசியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொருத்தமான ஜோடி
சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடரில் பொருத்தமான ஜோடியாக தென்றல் தொடர் நாயகன் நாயகி தீபக், ஸ்ருதி தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த மருமகனாக சதீஷ், சிறந்த மருமகளாக ஸ்ரித்திகாவும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
சகோதரன் சகோதரி விருது
சிறந்த சகோதரனாக செல்லமே தொடரில் நடித்த ராதாரவிக்கும், சகோதரியாக தங்கம் தொடரில் நடித்த அனுராதாவிற்கும் விருது வழங்கப்பட்டது. சிறந்த தாய் தந்தையாக விஜி, மவுலி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.
தேவயானிக்கு விருது
பெண்மையை உயர்த்தும் கவுரவ விருது முத்தாரம் தொடரில் நடித்த தேவயானிக்கு வழங்கப்பட்டது.
காவேரிக்கு நகைக்சுவை விருது
சிறந்த நகைச்சுவை நடிகை விருது தங்கம் தொடரில் நடித்த காவேரிக்கு வழங்கப்பட்டது. நகைச்சுவை நடிகராக முனீஸ்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த வில்லான பாலாசிங், சிறந்த வில்லியாக ராணியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை நடிகராக பொள்ளாச்சி பாபு துணை நடிகையாக சந்தியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருது வழங்கும் விழாவில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.