துபாய், சிங்கப்பூரில் 'வீரம்' அறிவித்தபடி ரிலீஸாகவில்லை: ரசிகர்கள் ஏமாற்றம்

துபாய்: வீரம் படம் அறிவித்தபடி நேற்று துபாய் மற்றும் சிங்கப்பூரில் ரிலீஸாகவில்லை.

அஜீத் குமார், தமன்னா, சந்தானம், அப்புக்குட்டி, விதார்த், பாலா உள்ளிட்டோர் நடித்த வீரம் படம் இன்று தமிழகத்தில் ரிலீஸாகியுள்ளது.

படம் துபாய், சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, மலேசியா, இலங்கை, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஹாலந்து, கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய வெளிநாடுகளில் நேற்று ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ரிலீஸும் ஆனது.

துபாய், சிங்கப்பூரில் 'வீரம்' அறிவித்தபடி ரிலீஸாகவில்லை: ரசிகர்கள் ஏமாற்றம்

ஆனால் துபாய் மற்றும் சிங்கப்பூரில் மட்டும் படம் அறிவித்தபடி ரிலீஸாகவில்லை. சிங்கப்பூரில் உள்ள ரெக்ஸ் சினிமாஸில் வீரம் படக்காட்சி ரத்து செய்யப்பட்டதால் அங்கு கூடிய அஜீத் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். படப்பெட்டி வராததால் தான் படம் ரிலீஸ் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

வீரம் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

 

வீரம் கெட்டப்பில் வந்த ரசிகர்: அஜீத் என்று நினைத்து முண்டியடித்த ரசிகர்கள்- தடியடி

வீரம் கெட்டப்பில் வந்த ரசிகர்: அஜீத் என்று நினைத்து முண்டியடித்த ரசிகர்கள்- தடியடி

சென்னை: சென்னை உதயம் தியேட்டருக்கு வீரம் அஜீத் கெட்டப்பில் வந்த ரசிகரைப் பார்த்தவர்கள் அஜீத் தான் வந்திருக்கிறார் என்று நினைத்து அவரை பார்க்க முண்டியடித்தனர்.

அஜீத்தின் வீரம் படம் இன்று தமிழகம் முழுவதும் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னை அசோக் நகரில் உள்ள உதயம் தியேட்டரில் வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி இன்று காலை தியேட்டர் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் குவிந்ததால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

அப்போது ரசிகர் ஒருவர் வீரம் படத்தில் அஜீத் வருவது போன்று நரைமுடி, கருப்புக் கண்ணாடி, வேட்டி, சட்டையுடன் காரில் வந்தார். அவரை பார்த்த ரசிகர்கள் அஜீத் தான் வந்துவிட்டார் என்று நினைத்து அவரை காண முண்டியடித்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன் பிறகு அஜீத் கெட்டப்பில் வந்த ரசிகர் காரில் இருந்து இறங்கி வந்து அங்கு கூடியிருந்தவர்களை பார்த்து கையசைத்தார். அவருடன் அஜீத் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

நசீருத்தீன் ஷாவுக்கு என்னாச்சு?

மும்பை: பிரபல இந்தி நடிகர் நசீருத்தீன் ஷா சக நடிகரான பர்ஹான் அக்தரின் நடிப்பை குறை கூறியுள்ளார். இதனால் நசீருத்தீன் நன்றாகத் தானே இருந்தார் திடீர் என்று அவருக்கு என்ன ஆகிவிட்டது என்று பலரும் கேட்கின்றனர்.

இந்தி நடிகர் நசீருத்தீன் ஷா நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர். அவர் கடந்த ஆண்டு வெளியான பாக் மில்கா பாக் படத்தில் பர்ஹான் அக்தரின் நடிப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நசீருத்தீன் ஷாவுக்கு என்னாச்சு?

இது குறித்து அவர் கூறுகையில்,

பாக் மில்கா பாக் ஒரு பொய்யான படம். பர்ஹான் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உடம்பை டெவலப் பண்ணி, முடி வளர்ப்பது நடிப்பில் கடின உழைப்பு இல்லை. அவர் மில்கா போன்று தோன்றவாவது முயற்சி செய்திருக்க வேண்டும். மில்கா தான் இப்படி தான் இருந்தோம் என்று கற்பனை செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் 1960களில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கூடவா இல்லை? என்றார்.

இதற்கு நசீருத்தின் ஷாவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

படத்தில் பர்ஹானுக்கு சகோதரியான நடித்த திவ்யா தத்தா கூறுகையில், நசீர் ஜியை மதிக்கிறேன். ஆனால் அவரின் கருத்தை ஏற்க முடியாது. தியேட்டர்களில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களை நீங்கள் முட்டாளாக்க முடியாது. படத்தில் பர்ஹான் மில்கா போன்று தான் இருந்தார். நசீர் இவ்வாறு பேசியிருப்பது அவரது தரத்தை குறைத்துள்ளது. அவர் பப்ளிசிட்டிக்காக இவ்வாறு செய்கிறார் என்றார்.

 

டிவி நடிகரிடம் கற்பைத் தொலைத்துவிட்டேன், திருமணம் செய்து வையுங்கள் - புதுமுக நடிகை புகார்

சென்னை: தன்னைக் கெடுத்துவிட்டு இப்போது வேறு பெண்ணை மனைவி என்று கூறும் டிவி நடிகருடன் திருமணம் செய்து வைக்குமாறு போலீசில் மனுக்களாகக் கொடுத்து வருகிறார் ஒரு துணை நடிகை.

சென்னை மதுரவாயல் நெற்குன்றத்தை சேர்ந்தவர் ரேணுகா. 26 வயது புதுமுக நடிகையான அவர், ஏற்கெனவே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பல மனுக்கள் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் அவர் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில், "நான் பி.எஸ்.சி. பி.எட். பட்டப்படிப்பு படித்துள்ளேன். திரைப்படம் ஒன்றில் நடிக்கிறேன். உதவி இயக்குனராகவும் உள்ளேன். எனக்கும், டி.வி. நடிகர் ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்தது. அந்த நடிகர் என்ஜினீயரிங் பட்டதாரி. ஆரம்பத்தில் இருவரும் பஸ்சில் வருவோம். அப்போதுதான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது.

கற்பை தொலைத்து விட்டேன்

அவர் என்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்தார். ஒரு முறை அவரது வீட்டுக்கு சென்றிருந்தபோது, அவர் என்னோடு, படுக்கையை பகிர்ந்து கொண்டார். பலமுறை அவரிடம் நான் கற்பை தொலைத்து இருக்கிறேன். அவர்தான் எனது கணவர் என்று மனதளவில் முடிவு செய்துதான், அவரிடம் நெருங்கி பழகினேன்.

தற்போது, அவர் என்னை விட்டு, விலகி சென்று விட்டார். என்னோடு பேச மறுக்கிறார். பேஸ்புக்கில் வேறு ஒரு பெண்ணோடு தனது படத்தை வெளியிட்டு, அந்த பெண் தனது மனைவி என்றும் தகவல் வெளியிட்டு இருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், அவரை சென்று பார்த்தேன். அவர் என்னை யார்? என்று கேட்கிறார். அவரது கேள்வியை கேட்டு, எனது இதயம் நொறுங்கிப்போனது.

அவர் எனக்கு வேண்டும். அவர் இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை. சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, அவரை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மனுக்கள் மேல் மனுக்களாக போலீசாரிடம் தந்தும், நடவடிக்கை எடுக்கவில்லையே என கண்ணீருடன் கமிஷனர் அலுவலக வாசலில் புலம்பினார்.

 

சிம்பு-நயன் இடையே பழைய 'கெமிஸ்ட்ரி'யை கொண்டு வர பாண்டிராஜ் முயற்சி

சிம்பு-நயன் இடையே பழைய 'கெமிஸ்ட்ரி'யை கொண்டு வர பாண்டிராஜ் முயற்சி

சென்னை: நயன்தாரா, சிம்பு இடையே இருந்த பழைய கெமிஸ்ட்ரியை தனது படத்தில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

வல்லவன் படத்தில் நடித்தபோது காதலில் விழுந்த சிம்புவும், நயன்தாராவும் அதன் பிறகு பிரிந்துவிட்டனர். காதல் முறிவுக்கு பிறகு அவர்கள் ஒன்றாக சேர்ந்து நடிக்கவில்லை. இந்நிலையில் தான் சிம்பு பாண்டிராஜ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

சிம்புவுக்கு ஏற்ற ஜோடியை அல்ல தேவதையை ஊரெல்லாம் தேடிய பாண்டிராஜ் இறுதியில் நயன்தாராவை தேர்வு செய்தார். யாரும் எதிர்பாரா வண்ணம் நயன்தாராவும் சிம்புவுடன் நடிக்க சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து சிம்பு-நயன் நடிக்கும் காட்சிகளை படமாக்கும் வேலைகளும் துவங்கிவிட்டன.

வல்லவன் படத்தில் சிம்பு, நயன்தாரா இடையேயான கெமிஸ்ட்ரி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் அதே கெமிஸ்ட்ரியை தன்னுடைய படத்திலும் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் பாண்டிராஜ்.

7 ஆண்டுகள் கழித்து முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் ஜோடி சேர்ந்துள்ளதால் பாண்டிராஜ் படத்தின் மீது தான் பலரின் கண்களும் உள்ளன.

 

ஜில்லா... ரசிகர்கள் விமர்சனம் இது!

விஜய்க்கு மிக மிக முக்கிய படமான ஜில்லா இன்று எந்த தடங்கலுமின்றி வெளியாகிவிட்டது.

அவரது ரசிகர்களைப் பொறுத்தவரை இது அவர்களின் மானப் பிரச்சினை. 'இளைய தளபதி'யின் இந்தப் படத்தின் வெற்றி தோல்விதான் அவரது எதிர்கால இருப்பை நிர்ணயிக்கும் எனும் அளவுக்கு போய்விட்டது நிலைமை.

ஜில்லா... ரசிகர்கள் விமர்சனம் இது!

எனவே படத்தை வெற்றி பெற வைக்க என்னென்ன செய்ய வேண்டும் அவ்வளவைவும் கடந்த சில தினங்களாக செய்து வருகின்றனர்.

சரி, படம் இன்று வெளியாகி, முதல் சிறப்புக் காட்சியும் பார்த்துவிட்டார்கள்.

ரசிகர்களின் பார்வையில் படம் எப்படி?

முதல் காட்சி பார்த்த பலரும் படம் மிகவும் பொழுதுபோக்காகவும், மாஸ் என்டர்டெயினராகவும் உள்ளதாகத் தெரிவித்தனர்.

ஜில்லா... ரசிகர்கள் விமர்சனம் இது!  

குறிப்பாக விஜய்யின் நடிப்பு பட்டையைக் கிளப்புவதாக ரசிகர்கள் பாராட்டினர். ரசிகர்கள் சொன்னதலிருந்து படத்தின் கதை:

மதுரையின் பெரிய தாதாவான மோகன்லாலிடம் விசுவாச அடியாளாக இருந்த ஒருவரை போலீஸ் சுட்டுக் கொன்றுவிடுகிறது. அடியாளின் மகன்தான் விஜய். தனது வளர்ப்பு மகனாகவே அவரை வளர்த்து ஆளாக்கும் மோகன்லால், ஒரு கட்டத்தில் போலீசில் தனக்கு ஒரு ஆள் வேண்டுமே என்பதற்காக, விஜய்யை போலீஸ் அதிகாரியாக்குகிறார். ஆனால் அந்த விஜய்யே பின்னர் மோகன்லாலுக்கு எதிரியாகிறார்... அதன் பிறகு இருவருக்கும் நடக்கும் யுத்தமே க்ளைமேக்ஸ்.

"படம் சூப்பரா இருந்தது. ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப் பார்த்தோம். பாடல்களும், விஜய்யின் நடனமும் அருமை. பரோட்டா சூரியை பெரிய ரேஞ்சுக்கு கொண்டு சென்றுள்ளது இந்தப் படம்," என்கிறார் விஜய்யின் ரசிகரான மனோஜ்.

ஆனால் சமூபக வலைத் தளங்களில் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஜில்லா... ரசிகர்கள் விமர்சனம் இது!  

சிலர் படத்தை ஒரு முறை பார்க்கலாம். கடைசி அரை மணி நேரத்தை இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என்று எழுதியுள்ளனர். விஜய் திரும்பத் திரும்ப ஏன் தெலுங்குப் பட ஸ்டைலிலேயே கதைகளைத் தேர்வு செய்கிறார் என்றும் கமெண்ட் அடித்துள்ளனர்.

இப்போதான் படம் பார்க்கப் போறேன். இன்று மாலைக்குள் நமது விமர்சனம்...

 

வீரம்... 'பட்டையைக் கிளப்பும் பொங்கல் விருந்து!' - ரசிகர்கள் உற்சாகம்

அஜீத்தின் வீரம்... 'பட்டையைக் கிளப்பும் பொங்கல் விருந்து!' - ரசிகர்கள் உற்சாகம்

பாசக்கார அண்ணன் அஜீத் விநாயகம்.... அவருக்கு மூன்று பிரதர்ஸ். அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பதில் வீராதி வீரர்கள். மனைவி வந்தால் தம்பிகளைப் பிரித்து விடுவார் என்பதால் திருமணமே வேண்டாம் என தம்பிகளோடு வாழ்கிறார் அஜீத். அண்ணனுக்கு திருமணம் நடந்தால்தான் தங்களுக்கு திருமணம் நடக்கும் என்பதால் தங்களுக்கான அண்ணியைத் தேடுகிறார்கள் தம்பிகள். எப்படித் திருமணம் நடந்தது என்பது மீதிக் கதை.

-படம் பார்த்தவர்கள் சொன்ன கதை இது.

படத்தில் இவருக்குத்தான் முக்கியத்துவம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அண்ணன் தம்பிகள் நால்வருக்கும் முக்கியத்துவம் தந்திருக்கிறார்களாம். படம் முழுக்க அஜீத்தின் நடிப்பும் உடல் மொழியும் மிரட்டலாக உள்ளது. தமன்னா அழகு, சந்தானம் காமெடி எல்லாமாகச் சேர்ந்து பொங்கலுக்கு பக்காவான விருந்தாக இந்தப் படம் அமைந்துள்ளது என ரசிகர்கள் தெரிவித்தனர்.

அஜீத்தை வைத்து ஹரி ஒரு அதிரடி படம் எடுத்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது வீரம்...- இது வீரம் பார்த்த ரசிகர்களின் தீர்ப்பு. நம்ம தீர்ப்பை நாளைக்கு சொல்றோம்!

 

வெளியாகின ஜில்லா, வீரம்... தியேட்டர்கள் முன் ரசிகர்கள் கொண்டாட்டம்!

சென்னை: விஜய் நடித்துள்ள ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் படங்கள் பொங்கலை முன்னிட்டு இன்றே உலகம் முழுவதும் வெளியாகின.

இரு நாயகர்களின் ரசிகர்களும் பெரும் ஆரவாரத்தோடு இந்தப் படங்களை வரவேற்று, பார்த்து மகிழ்ந்தனர்.

தமிழ் சினிமா வரலாற்றில் எந்த பொங்கல் பண்டிகையின்போதும் இல்லாத அளவுக்கு இந்த இரு படங்களையும் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

தமிழகத்தில் இன்று காலை இந்தப் படங்கள் வெளியாகின. ஆனால் வளைகுடா நாடுகளில் நேற்று மாலையே படங்கள் வெளியாகிவிட்டன.

வெளியாகின ஜில்லா, வீரம்... தியேட்டர்கள் முன் ரசிகர்கள் கொண்டாட்டம்!

JIlla Fans Reviews

இன்று அதிகாலை 4 மணிக்கு குரோம்பேட்டை வெற்றியில் ஜில்லா படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. காசி, ஏஜிஎஸ், ராக்கி போன்ற திரையரங்குகளிலும் ஜில்லா சிறப்புக் காட்சி காலையில் ஆரம்பமானது. ரசிகர்கள் பெரும் அளவுக்கு வந்ததால், இந்தக் காட்சிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் பலர் திரும்பினர்.

சென்னை மட்டுமல்லாமல், திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி போன்ற நகரங்களிலும் பெரும் உற்சாகத்துடன் ஜில்லா சிறப்புக் காட்சிகளை பார்த்தனர் ரசிகர்கள்.

வீரம்

வீரம் படத்தின் சிறப்புக் காட்சிகளும் சில இடங்களில் காலை 4 மணிக்கே ஆரம்பமாகின. அஜீத் ரசிகர்கள் மிக உற்சாகமாக படத்தை வரவேற்றனர். சில இடங்களில் தாரை தப்பட்டை முழங்க வேட்டி டான்சுடன் ஆட்டம் போட்டபடி அரங்குக்குள் சென்றனர்.

வெளியாகின ஜில்லா, வீரம்... தியேட்டர்கள் முன் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Veeram Fans Reviews

இன்று முதல் நாள் மட்டுமே இரு படங்களையும் சில அரங்குகளில் மட்டும் 6 காட்சிகள் வரை ஓட்டுகின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.

மேலும் பொங்கலை முன்னிட்டு தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதால், படங்கள் எப்படி இருந்தாலும், வசூலுக்கு குறைவிருக்காது என்பது நிச்சயம்.