சென்னை: திரைப்படத் துறைக்கு திறன்சார் தொழிலாளர்கள் அதிக அளவில் தேவை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இந்திய தொழில் வர்த்தக அமைப்புகள் கூட்டமைப்பின் (ஃபிக்கி) அங்கமான ஊடகம், பொழுதுபோக்கு திறன்களுக்கான கவுன்சில் தலைவராக உள்ள கமல்ஹாசன், ஃபிக்கி சார்பில் வியாழக்கிழமை தில்லியில் நடைபெற்ற உலகத் திறன்சார் மாநாட்டில் பங்கேற்றார்.
மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது:
இந்திய திரைப்படத் துறையில் திறன்களை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதிக அளவிலான திறன்சார் தொழிலாளர்கள் திரைப்படத் துறைக்கு மட்டுமன்றி, நம் நாட்டுக்கும் அவசியம். இதை கவனத்தில் கொண்டு பல்வேறு திரைப்படத் துறை அமைப்புகளுடனும் திரைப்பட ஊழியர்கள் சங்கங்களுடனும் இணைந்து நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
பயிற்சி முகாம்
சினிமா உதவி இயக்குநர்கள், ஒலி, ஒளிப்பதிவு உதவியாளர்கள், உதவி இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், லைட்மேன்கள், கலை இயக்குநர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், ஆடை வடிமைப்பாளர்கள், டப்பிங் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு சான்றிதழுடன் கூடிய பயிற்சி முகாமை வரும் நவம்பரில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த முகாம் மூன்று நாள்களுக்கு நடத்தப்படும். திரைப்படத் துறையில் அங்கம் வகிக்கும் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் தயாரான 'விஸ்வரூபம்' படம் வெளியான பிறகே அந்தத் துறையின் மதிப்பை திரைப்படத் துறை புரிந்து கொள்ளத் தொடங்கியது.
ஃபிக்கியின் ஊடகம், பொழுதுபோக்குத் திறன்களுக்கான கவுன்சில் மூலம் ஏற்கெனவே பல்வேறு திறன்சார் பயிற்சி வகுப்புகளுக்கு சுமார் 5,000 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால், திறன்சார் தொழிலாளர்கள் 11.25 லட்சம் பேரை தயார்படுத்துவதே எங்களது இலக்கு. இதன் மூலம் ஊடகம், பொழுதுபோக்குத் துறையில் சுமார் 74 பிரிவுகளில் காணப்படும் வேலைவாய்ப்பை பூர்த்தி செய்ய முடியும்," என்றார் கமல்ஹாசன்.