இன்று நடந்த தனது படத்தின் பூஜைக்குக் கூட வரவில்லை, அஜீத். பூஜைக்கு வந்த பார்வையாளர்களுக்கு பெரும் உறுத்தலாக இருந்ததும் இதுதான்.
முன்பெல்லாம் தான் நடிக்கும் படங்களின் அத்தனை நிகழ்வுகளுக்கும் தவறாமல் ஆஜராவார் அஜீத். பின்னர், தனது படங்கள் வெளியாகும்போது மட்டும் முக்கிய பத்திரிகைகளை அழைத்து பேட்டி கொடுத்துவிட்டு, படம் வெளியான அன்று ஏதாவது ஒரு ஓட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து வந்தார்.
இப்போது அனைத்தும் கட். படத்தில் நடிப்பதோடு சரி. படம் தொடர்பாக எதையும் அவர் பேசுவதில்லை. எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதுமில்லை.
அவ்வப்போது மாறும் அஜீத்தின் பாலிசிகளுள் இது ஒன்று என்றே வைத்துக் கொண்டாலும், அட்லீஸ்ட் பூஜை, ஆடியோ ரிலீஸ் போன்றவற்றிலாவது கலந்து கொள்ளலாமே என ஆதங்கப்படும் சில தயாரிப்பாளர்களும் உண்டு.
இந்த நிலையில் இன்று கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் நடிக்கும் 55வது படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. காலையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் உள்பட பலரும் வந்துவிட்டனர். கடைசிவரை அஜீத் வரவில்லை. அவருக்கு ஜோடி எனப்படும் அனுஷ்காவும் வரவில்லை.
இவர்களைப் பார்ப்பதற்காக காத்திருந்தவர்கள் அடித்த கமெண்ட் : படத்தோட ஷூட்டிங் அன்னிக்காவது வருவாங்களா?