தமிழக தலைமைச் செயலாளரிடம் விளக்கம் அளிக்க டேம் 999 இயக்குநருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு


டெல்லி: டேம் 999 படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து திரைப்படத்தின் இயக்குநர் சோகன் ராய் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏன் இந்தப் படத்தைத் தடை செய்யக் கூடாது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்குமாறு சோஹன் ராய்க்கு உத்தரவிட்டனர்.

முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி டேம் 999 என்ற பெயரில் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரியான சோஹன் ராய் என்பவர் படம் எடுத்துள்ளார். இந்தப் படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து படத்தைத் திரையிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர். மேலும் தமிழக அரசும் படத்தைத் திரையிட தடை விதித்தது. இதை எதிர்த்து சோஹன் ராய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தப் படத்தை ஏன் தடை செய்யக் கூடாது என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்குமாறு சோஹன் ராய்க்கு உத்தரவிட்டனர்.

மேலும் இந்தப் படத்தை ஏன் வெளியிடக் கூடாது என்பது குறித்து தமிழக அரசும் தனது விளக்கத்தை வருகிற 16ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

இசையமைப்பாளர் தேவா, எல்.ஆர்.ஈஸ்வரிக்கு மஸ்கட் தமிழ் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது


மஸ்கட்: இசை அமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா, பிரபல பாடகி 'கலைமாமணி' எல்.ஆர். ஈஸ்வரி உள்ளிட்டோருக்கு, மஸ்கட் தமிழ்ச் சங்கம் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மஸ்கட்டில் உள்ள குரும் அரைவட்ட அரங்கில், மஸ்கட் தமிழ் சங்கம் சார்பாக 'கீதம் சங்கீதம்' என்ற மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் வகுப்பு மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. மஸ்கட் தமிழ் சங்க தலைவர் ஜானகிராமன் தலைமை உரையாற்றினார். தமிழ் சங்கத்தின் கலாச்சார மற்றும் இலக்கியச் செயலாளர் பஷீர் முகமது நிகழ்ச்சியில் தொகுப்பு உரையாற்றினார். தமிழ் சங்க துணைத் தலைவர் அகமத் ஜமீல் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர் கார்த்திக், பாடகிகள் சுசித்ரா, சைந்தவி, சென்னை சாதகப் பறவைகள் இசைக் குழுவினர் இணைந்து 4 மணி நேரம் திரை இசைப் பாடல்களை பாடி அரங்கில் கூடிய இருந்த 6,000 தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர்.

விஜய் டிவி புகழ் சிவகார்த்திகேயன் தனது வழக்கமான நகைச்சுவை மற்றும் மிமிக்ரியுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் தேனிசைத் தென்றல் தேவா பாடிய 'கவலைப்படாதே சகோதரா' என்ற பாடல் ரசிகர்களிடையே கைத்தட்டலை பெற்று தந்தது.

எல்.ஆர். ஈஸ்வரி பாடிய 'காதோடுதான் நான் பாடுவேன் என்ற பாடல் அரங்கில் இருந்த மூத்த ரசிகர்களுக்கு இளமைக்கால நினைவுகளை ஏற்படுத்தியது. அதன்பிறகு பாடப்பட்ட 'எலந்தப் பழம்... எலந்தப் பழம்' பாடல் பார்வையாளர்களை குதுகலப்படுத்தியது. பாடகர்கள் கார்த்திக்கும், சுசித்ராவும் பாடிய பாடல்கள், இளம் பார்வையளர்களை ஆனந்தப்படுத்தியது.

சினிமா துறையில் இசையமைப்பாளர் தேவா மற்றும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரின் சாதனைகளை பாராட்டி மஸ்கட் தமிழ் சங்கம் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் விளையாட்டுச் செயலாளர் ரகுமுத்து குமார் நன்றியுரை வழங்கினார்.
 

நாகிரெட்டி நினைவு இலவச மருத்துவமுகாம்... ஏவி எம் சரவணன் பங்கேற்பு


மறைந்த சினிமா உலக ஜாம்பவான் நாகிரெட்டி நூற்றாண்டு விழாவையொட்டி இலவச மருத்துவ முகாம் அவர் நிறுவிய விஜயா மருத்துவமனையில் நடந்தது. படத் தயாரிப்பாளர் ஏவி எம் சரவணன் இந்த முகாமைத் தொடங்கி வைத்தார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த மருத்துவ முகாம் விஜயா மருத்துவமனையில் நாகிரெட்டியின் பிறந்த நாளன்று நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு விழா என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஏவி எம் சரவணன் பேசுகையில், "நாகிரெட்டியின் பல்வேறு சேவைகள் மற்றும் சாதனைகளை நினைவு கூர்ந்தார்.

50 மருத்துவர்கள் பங்கேற்ற இந்த முகாமில் 850க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. கலந்து கொண்டவர்களுக்கு எக்ஸ் ரே, இசிஜி என அனைத்தும் இலவசமாகவே எடுத்துத் தரப்பட்டது.

நிகழ்ச்சியில் நாகிரெட்டி அறக்கட்டளையின் நிர்வாகி பி வெங்கட்ராம ரெட்டி, சிஇஓ பி பாரதி ரெட்டி, பொது மேலாளர் ராம்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

பதினோரு மாத இடைவெளிக்குப் பின் பிரசாந்துடன் கலக்க வரும் வடிவேலு!!


கிட்டத்தட்ட 11 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் வடிவேலுவின் வெடி நகைச்சுவையை தமிழ் ரசிகர்கள் அனுபவிக்கப் போகிறார்கள்.

பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மம்பட்டியான் படத்தில் வடிவேலு மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நீண்ட காலம் அதிமுக அனுதாபியாக இருந்த போதும், பின்னர் கலைஞர் பக்கம் வந்த பிறகும், இருக்கிற இடம் எதுவாக இருந்தாலும் மிக விசுவாசமானவர் என்ற பெயர் தியாகராஜனுக்கு உண்டு.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வடிவேலுவை தங்கள் படங்களில் நடிக்க வைக்கக் கூட எந்த இயக்குநரும் முன்வராத நிலையில், அவரை வைத்து படம் எடுக்கக் கூடாது என சில அதிகாரமிக்கவர்கள் வாய்மொழி உத்தரவு போட்டிருந்தும்கூட, அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் வடிவேலுவை தான் இயக்கும் மம்பட்டியான் படத்தில் தொடர வைத்தார் (திமுக ஆட்சியிலேயே தொடங்கப்பட்ட படம் இது).

இப்போது வரும் டிசம்பர் 16-ம் தேதி மம்பட்டியான் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தில் பிரசாந்த் உடன் படம் முழுக்க நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் வருகிறார் வடிவேலு. ஒரிஜினல் படமான மலையூர் மம்பட்டியானில் கவுண்டமணி செய்த மைனர் வேடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்தும் வடிவேலும் இணைந்து நடித்த வின்னர் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் பார்வையாளர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வடிவேலுவுடன் நடித்தது குறித்து பிரசாந்த் கூறுகையில், "மம்பட்டியான்’ல படம் முழுக்க என்னோடு வடிவேலு வருவார். இத்தனை நாள் இடைவேளைக்கும் சேர்த்து அன்லிமிடெட் ஃபுல் மீல்ஸ் விருந்து வெச்சிருக்கார் மனுஷன். 'சிங்கம்தான்யா’னு வாய்விட்டுப் பாராட்டுற அளவுக்கு மிரட்டி எடுத்திருக்கார்," என்றார்.
 

'உச்சிதனை முகர்ந்தால்'... - சிங்கள வெறியர்களால் சிதைக்கப்பட்ட ஒரு ஈழத்துச் சிறுமியின் கதை!


ஈழப்போரில் தமிழ்ப் பெண்கள், இளம் சிறுமிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை கொஞ்சமல்ல.

பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல் மடிந்த சோகங்கள் சொல்லி முடியாதவை.

அத்தகைய சோகக் கதைகளில் ஒன்றுதான் உச்சிதனை முகர்ந்தால் என்ற தலைப்பில் படமாக வருகிறது. தமிழ் உணர்வாளரும் காற்றுக்கென்ன வேலி போன்ற மாற்று சினிமா படைப்பாளியுமான புகழேந்தி தங்கராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

தமிழீழத்தில் சிங்கள ராணுவத்தால் சூறையாடப்பட்ட 13 வயது தமிழ்ச் சிறுமியின் கதைதான் இந்தப் படம். நீனிகா என்ற சிறுமி இந்த வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த தம்பதியர்களாக சத்தியராஜும் சங்கீதாவும் நடித்துள்ளனர். சீமான், நாசர், லட்சுமி ராமகிருஷ்ணன் என தேர்ந்தெடுத்த நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களைச் செய்துள்ளனர்.

ஈழத்தின் துயரங்களுக்கு இந்தியாவும் ஒரு காரணம் என்பது படத்தில் மறைபொருளாக சுட்டிக்காட்டப்பட்டிருப்பதால், இந்தப் படம் சென்சாருக்குப்போனபோது, ஏகப்பட்ட பிரச்சினைகள், வெட்டுக்களைச் சந்திக்க நேர்ந்தது. இறுதியில் யு ஏ சான்றுடன் வெளியாக அனுமதிக்கப்பட்டது.

இதையெல்லாம் விட மிக முக்கியம், இந்தப் படத்துக்கு வணிக சினிமாவில் முன்னணியில் உள்ள ஜெமினி பிலிம் சர்க்யூட் ஆதரவளித்திருப்பது. படத்தை தங்கள் பேனரிலேயே ஜெமினி நிறுவனம் விநியோகிக்கிறது.

வரும் 16-ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளி்ல் உச்சிதனை முகர்ந்தால் படம் வெளியாகிறது.

தன் இனத்துக்கு நேர்ந்து கொடுமைகளை திரும்ப நினைத்துப் பார்ப்பது, அந்த சோகத்தை நினைத்து கண்ணீர் விட மட்டுமல்ல, இனவிடுதலையின் அடுத்த நகர்வு குறித்த விழிப்புணர்வையும் கோபத்தையும் நீர்த்துப் போகாமல் இருக்கச் செய்யவுமே.

அந்த வகையில் உச்சிதனை முகர்ந்தால் தமிழர் வாழ்வில் முக்கிய சினிமாவாக அமையும் என்கின்றனர் தமிழ் உணர்வாளர்கள்!
 

இயக்குநர் ஆர்.சி.சக்தி கவலைக்கிடம்!


பிரபல இயக்குநர் ஆர் சி சக்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளார்.

உணர்ச்சிகள், சிறை, வரம், உண்மைகள், பத்தினிப்பெண், தாலி தானம் உள்பட பல படங்களை இயக்கியவர் செய்தவர், ஆர்.சி.சக்தி. நடிகர் கமல்ஹாஸனுக்கு நெருக்கமானவர்.

கடந்த சில வருடங்களாக இவர், சிறுநீரக வியாதியினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக, அவருக்கு 'டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆர்.சி.சக்தியின் உடல்நிலை மோசமானது. உடனடியாக அவரை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.