வெள்ளி விழா வசந்த்தின்... மீண்டும் கேளடி கண்மணி!

சென்னை: எஸ்.பி.பாலசுப்ரமணியம் - ராதிகா நடிப்பில் 1990 ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் கேளடி கண்மணி.

படம் வெளிவந்து 25 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது அந்தப் படத்தை ரீமேக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் வசந்த்.

Director Vasanth Will Remake in Keladi Kanmani

90களில் அன்றைய இளம் கதாநாயகர்களை வைத்து படமாக்காமல் நடுத்தர வயதினரை வைத்து வித்தியாசமான திரைக்கதை அமைத்திருந்தார் வசந்த். படம் ஹிட்டானது மட்டுமில்லாமல் சுமார் 285 நாட்களைக் கடந்து அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிவாகை சூடியது.

தற்போது இப்படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இருக்கிறாராம் இயக்குனர் வசந்த். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், ‘பழைய படங்களை தற்போது ரீமேக் செய்யும் காலம் வந்துவிட்டது. அப்படி நான் ரீமேக் செய்ய நினைத்தால் ‘கேளடி கண்மணி' படத்தை ரீமேக் செய்வேன்.

ஆனால் இந்த படத்தில் சீனியர் நடிகர்களை வைத்து இயக்க மாட்டேன். இன்றைய கால கட்டத்தில் உள்ள இளம் ஜோடிகளை தேர்வு செய்து நடிக்க வைப்பேன். மேலும் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து புதிய பரிமாணத்தில் இயக்குவேன்' என்று கூறியிருக்கிறார்.

தற்போது இயக்குனர் வசந்த் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்தை இயக்கி வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படம் வெளியான பிறகு ‘கேளடி கண்மணி' படத்தை ரீமேக் செய்வார் என்று கூறுகின்றனர்.

வசந்தின் கேளடி கண்மணி விரைவில் உங்கள் அபிமானத் திரையரங்குகளில்.

 

உங்க கிட்ட நல்ல டைட்டில் இருந்தா பாண்டிராஜுக்கு நீங்க தாராளமா சொல்லலாம்...!

சென்னை: சூர்யா - அமலாபால் நடித்து வரும் ஹைக்கூ படத்திற்கு விரைவில் புதிய பெயர் சூட்டப்படவிருக்கிறது, புதிய பெயரை ரசிகர்கள் தேர்வு செய்து தரலாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய படம் ‘ஹைக்கூ'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார். பசங்க படத்தை போன்று இப்படத்தையும் குழந்தைகளை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் பாண்டிராஜ்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கான தலைப்பை மாற்ற படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

தமிழில் அழகான சிறு கவிதை என்ற அர்த்தம் தொனிக்கக் கூடிய ‘ஹைக்கூ' முறையான தமிழ் வார்த்தை கிடையாது. எனவே, இந்த தலைப்பை பயன்படுத்தினால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது என்பதால் விரைவில் இந்தத் தலைப்பை மாற்ற படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

படத்திற்கு புதிய பெயர் வைக்கவிருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் முறையாக அறிவித்திருக்கும் பாண்டிராஜ், ரசிகர்கள் தங்களுக்குத் தோன்றும் தலைப்புகளை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

மேலும் ரசிகர்கள் அளிக்கும் தலைப்புகள் நன்றாக இருக்கும் பட்சத்தில், ஹைக்கூ படத்திற்கு அந்த தலைப்பை எடுத்துக் கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார்.

இதற்கு பதிலளித்த ரசிகர்கள் குழந்தைகள் படமென்பதால் தளிர்கள், மழலை, மலர்கள் மற்றும் ஓடி விளையாடு பாப்பா என்று பல்வேறு வித்தியாசமான பதில்களை பாண்டிராஜின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இன்னும் சற்று நாட்களில் புதிய தலைப்புடன் ஹைக்கூ படத்தின் போஸ்டர்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆரோல் கோரலி இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர்.

படத்தின் நாயகனான சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் ஹைக்கூ படத்தைத் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

குஞ்சம் குஞ்சம் தமிழ் தெரியும்: புலி விழாவில் ஹன்சிகாவின் கொஞ்சல் பேச்சு

சென்னை: புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹன்சிகா தமிழில் பேச முயற்சி செய்துள்ளார்.

வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ஹன்சிகா புலி படம் மூலம் மீண்டும் அவருடன் சேர்ந்து நடித்துள்ளார். சிம்புதேவன் இயக்கியுள்ள புலி படத்தில் ஸ்ருதி ஹாஸனும் உள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Puli audio launch: Hansika tries to speak in Tamil

விழாவில் ஹன்சிகா பேசுகையில்,

அனைவருக்கும் வணக்கம். நான் தமிழ் கத்துக்கிட்டு இருக்கேன். குஞ்சம் குஞ்சம் தமிழ் பேசுவேன். நான் வேலாயுதம் படத்தில் விஜய் சாருடன் ஜோடியாக நடித்தேன். அதன் பிறகு தற்போது நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த சிம்பு சாருக்கு நன்றி.

கேமராமேன் நட்டி சாருக்கு நன்றி. விஜய் சார் அப்போ இருந்து இப்போ.... நிறைய ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஸ்ரீதேவி மேடமோடு நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றார்.

தமிழில் பேசத் திணறினாலும் முயற்சி செய்தார் அவர். தமிழ் தெரிந்தாலும் கூட பலரும் ஆங்கிலத்தில் பேசுகையில் ஹன்சிகா தமிழில் பேச முயன்றுள்ளார்.

 

'மனைவி' ராதிகா ஆப்தே, 'மகள்' தன்ஷிகாவுடன் "கபாலி"யில் களமிறங்கும் ரஜினி

சென்னை: இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க இருக்கும் கபாலி படத்தின் போட்டோ ஷூட், சமீபத்தில் பழமை வாய்ந்த ஏவிஎம் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த போட்டோ ஷூட்டை மிகவும் ரகசியமாக படப்பிடிப்புக் குழுவினர் நடத்தினர், தற்போது அந்த போட்டோ ஷூட்டைப் பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

Kabali Photo Shoot Rajini Look Recalls Dharma Durai

கபாலி படத்தில் ரஜினி தாதாவாக நடிக்கிறார். அவரின் மனைவியாக ராதிகா ஆப்தேவும், மகளாக தன்ஷிகாவும் படத்தில் நடிக்க இருக்கின்றனர்.

கபாலி போட்டோ ஷூட்டை கொரியன் புகைப்படக்காரரைக் கொண்டு எடுத்து இருக்கின்றனர், இந்த போட்டோ ஷூட்டில் ரஜினிக்கு மேக்-அப் செய்வதற்காக பாலிவுட்டில் இருந்து பிரபல ஒப்பனைக் கலைஞரான பானு பாஷ்யத்தை வரவழைத்து இருக்கின்றனர்.

பானு பாஷ்யம் ரஜினியின் தோற்றத்தை தர்மதுரையில் பார்த்தது போன்று மிகவும் இளமையாக மாற்றியிருக்கிறார் என்று கூறுகின்றனர்.

தலை மற்றும் முகத்தில் லேசான நரை முடிகள் இருப்பது போன்று இந்தப் போட்டோ ஷூட் நடத்தப்பட்டு இருக்கிறது, மேலும் ரஜினியை வைத்து தனியாகவும் நிறைய புகைப்படங்களை எடுத்து இருக்கின்றனர்.

1980களில் வாழ்ந்த பெண்களை பிரதிபலிக்கும் விதத்தில் ராதிகா ஆப்தே சேலை கட்டி இருக்க, சிறுவயது தன்ஷிகாவுடன் ரஜினி நிற்பது போன்ற சில புகைப்படங்களையும் எடுத்து இருக்கின்றனர்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது வயதான தாதாவாக மகள் மற்றும் மனைவியுடன், கபாலியில் ரஜினி களமிறங்குகிறார் என்று உறுதியாகத் தெரிய வந்துள்ளது.

செப்டம்பர் 2 வது வாரத்தில் கபாலி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக படப்பிடிப்புக் குழுவினர் கூறியுள்ளனர், எனினும் கபாலி பற்றி உறுதியான தகவல்கள் வெளியாகும் வரை வழக்கம் போல நாம் காத்திருக்கலாம்.

 

திருமதியாகிறார் தாமிரபரணி பானு.. கொச்சியில் நிச்சயதார்த்தம்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பானு என்கிற முக்தாவின் திருமண நிச்சயதார்த்தம், நேற்று கொச்சியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் எளிமையாக நடைபெற்றது.

தமிழில் தாமிரபரணி படத்தில் விஷாலின் ஜோடியாக அறிமுகமான நடிகை பானு, தொடர்ந்து 3 பேர் 3 காதல் மற்றும் தேசிங்குராஜா போன்ற படங்களில் நடித்தார்.

Actress Bhanu Engagement

தொடர்ந்து தமிழில் பெரிய அளவில் படங்கள் இல்லை எனவே தாய் மொழியான மலையாளக் கரையோரம் சென்று அங்கெ தனது நடிப்பைத் தொடர்ந்தார்.

படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது மலையாள பின்னணி பாடகி ரிமிடோமியின் சகோதரர் ரிங்கு டோமிக்கும் நடிகை பானுவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து இரு வீட்டாரின் பெற்றோர்கள் இருவரும் இணைந்து பேசி பானு- ரிங்கு டோமியின் திருமணத்தை முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று கொச்சியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நடிகை பானு-ரிங்கு டோமிக் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எளிமையான முறையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் பங்கேற்றனர்.

நடிகை பானு - ரிங்கு டோமிக் திருமணம் வருகிற 30-ந்தேதி கேரள மாநிலம் எடப்பள்ளியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெறுகிறது. இதில் மலையாள பட உலகினர் பலரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

ஓணம் முடிந்து அடுத்த 2 தினங்களில் திருமணம் நடக்கவிருப்பதால் இப்பொழுதே களை கட்டத் தொடங்கியிருக்கிறது பானுவின் திருமண ஏற்பாடுகள்.

பானு ரிங்குவைப் பார்த்த போது "இந்தப் பாடலை பாடியிருப்பாரோ வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு உன்னப் பார்த்தேனே அந்த ராகு கால நேரம் எனக்கு நல்ல நேரமே".

 

விஷால் அணிக்கு முதல் தோல்வி.. சேலம் நாடக நடிகர் சங்கத் தேர்தலில் மண்ணைக் கவ்வியது

சென்னை: நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவது தொடர்பான விவகாரத்தில் நடிகர் சங்கம் இரண்டாக உடைந்தது, நடிகர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும் இளம் நடிகர் விஷால் தலைமையில் ஒரு அணியும் இந்த பிரச்சினையின் மூலம் உருவானது.

கடந்த மாதம் நடக்க இருந்த நடிகர் சங்கத் தேர்தல் சென்னை உயர்நீதி மன்றத்தின் தடை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள நாடக நடிகர் சங்கத்தில் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

Salem Drama Union Election Results

இதில் விஷால் அணியினரும், ராதாரவி அணியினரும் மோதினர். முடிவில் ராதாரவி அணியினர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றனர்.

நடிகர் சங்கத் தேர்தல்

தற்போதைய நடிகர் சங்கத் தலைவராக நடிகர் சரத்குமார் இருக்கின்றார், நடிகர் சங்கத்திற்கு முறையான கட்டிடம் இல்லை எனவே புதிதாக நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று நடிகர் விஷால் குரல் கொடுத்தார். இதனை சரத்குமாரும் ஒப்புக் கொண்டு விரைவில் சங்கக் கட்டிடத்தை கட்டுவோம் என்று உறுதியளித்தார்.

கட்டிடம் முடிந்தால் தான் கல்யாணம்

சரத்குமார் சொன்னபடி கட்டிடம் கட்டும் முயற்சிகளை எடுக்கவில்லை என்று விஷால் குற்றம் சாட்டினார், இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கம் இரண்டாக உடைந்தது. இளம் நடிகர்கள் விஷால் தலைமையில் ஒன்று திரண்டனர். இந்த மோதல் பெரிதாக வெடித்தபோது நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்டி முடித்து விட்டுத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சபதம் செய்தார் விஷால்.

தள்ளிப்போன தேர்தல்

இந்நிலையில் கடந்த மாதம் நடிகர் சங்கத் தேர்தல் நடக்க இருந்தபோது அதனை எதிர்த்து விஷால் கோர்ட் படியேற, சங்கத் தேர்தலை தள்ளி வைத்து தீர்ப்பு வழங்கினர் நீதிபதிகள்.

சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கம்

சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததால் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.

தேர்தலில் மோதிய ராதாரவி - விஷால் அணியினர்

இதில் தலைவராக அத்தியப்பனும், துணைத்தலைவராக கண்ணனும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். செயலாளர் பதவிக்கு நடிகர் ராதாரவி அணியில் மேயர் சவுண்டப்பனும், விஷால் அணி தரப்பில் ரகுபதியும் போட்டியிட்டனர். இதேபோல் துணைச்செயலாளர் பதவிக்கு முத்துகிருஷ்ணன், ராஜசிகாமணி ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு ஏ.பி.சக்திவேல் மற்றும் சுந்தரமும் போட்டியிட்டனர். இதுதவிர, 10 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு (ஆண்-7, பெண்-3) 18 பேர் போட்டியிட்டனர்.

அமைதியாக நடைபெற்ற தேர்தல்

சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தில் 217 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சேலம் கல்லாங்குத்து பகுதியில் உள்ள நாடக நடிகர் சங்க கட்டிடத்தில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதில் மூத்த நாடக நடிகர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். முடிவில் 217 வாக்குகளில் 205 வாக்குகள் பதிவானது. ஒரு வாக்கு செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது.

மண்ணைக் கவ்விய விஷால் அணியினர்

அதைத் தொடர்ந்து பதிவான வாக்குகள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டன. முடிவில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மேயர் சவுண்டப்பன் 131 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரகுபதிக்கு 74 வாக்குகள் (விஷால் அணி) கிடைத்தது. இதேபோல் ராதாரவி அணியில் இருந்து துணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட முத்துகிருஷ்ணன் 138 வாக்குகளும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட ஏ.பி.சக்திவேல் 152 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கத் தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சவுண்டப்பன் தற்போது 10வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விஷால் அணி, ராதாரவி அணி இங்கே கிடையாது

செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சேலம் மேயர் சவுண்டப்பன் கூறுகையில், '' கடந்த 40 வருடங்களாக இதில் நான் உறுப்பினராக இருக்கிறேன்.எங்களுக்குள் எந்த பிரிவும் இல்லை. ஒரு பிரிவினர்தான் தங்களை விஷால் அணியினர் என்று கூறிக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டனர். இப்போது அவர்கள்தான் தோல்வியை சந்தித்துள்ளனர் என்றார். இங்கு ராதாரவி அணி என்றோ விஷால் அணி என்றோ கிடையாது. சவுண்டப்பன் அணிதான் உண்டு என்றார்.

எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி

சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க தேர்தல் முடிவு குறித்து நடிகர் விஷால் அணியின் பிரதிநிதி ஜெரால்டு, செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்த ரகுபதி ஆகியோர் தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். சேலம் நாடக நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியை சேர்ந்த செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ரகுபதிக்கு 74 ஓட்டுகள் கிடைத்தது. அவர் தோல்வி அடைந்தாலும் இதுவே விஷால் அணிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று பல்வேறு மிரட்டல்கள் வந்தது. இருப்பினும் துணிச்சலுடன் போட்டியிட்டோம். எங்களுக்கு கிடைத்த 74 ஓட்டுகளும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க கூடிய தகுதியுள்ளவர்களின் ஓட்டுகள் ஆகும். நடிகர் சங்க தேர்தலுக்கு இன்னும் காலஅவகாசம் இருப்பதால் மீதியுள்ள ஓட்டுகளை பெறுவதற்கு மற்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்போம். என்று சற்றும் மனம் தளராது விஷால் அணியினர் கூறியிருக்கின்றனர்.

எங்கே முடியும் இந்தத் தேர்தல் யாரோ யாரோ அறிவார்.