குட்டிப் புலி - சிறப்பு விமர்சனம்

Rating:
3.0/5

-எஸ் ஷங்கர்

நடிப்பு: சசிகுமார், லட்சுமி மேனன், சரண்யா, ரமேஷ் பிரபா, முருகதாஸ்

ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி

இசை: ஜிப்ரான்

மக்கள் தொடர்பு: நிகில்

தயாரிப்பு: வில்லேத் தியேட்டர்ஸ் முருகானந்தம்

வெளியீடு: ரெட்ஜெயன்ட்

எழுத்து - இயக்கம்: முத்தையா


இந்த சமூகமே பெண்ணால் ஆனது... காவல் தெய்வங்களாக இருந்து இந்த சமூகத்தை காத்து நின்றவர்கள் பெண்களே... என்பதை ரத்தம் தெறிக்கச் சொல்லியிருக்கிறார்கள், குட்டிப்புலியில்.

தன் தெருப் பெண்ணின் மானங்கெடுத்தவனை கூட்டாளிகளுடன் வீடு தேடிப் போய் வெட்டிவிட்டு திரும்பும்போது மாட்டிக் கொள்கிறார் புலி (லால்). உயிரே போனாலும் பரவாயில்லை, எதிரியிடம் மாட்டிக் கொண்டால் தெருப் பெயர் கெட்டுவிடும் எனக் கூறி தன் தலையை வெட்டச் சொல்லி உயிர் விடுகிறார். அவருக்கு மகனாகப் பிறக்கும் குட்டிப்புலி (சசிகுமார்), தன் மேட்டுத் தெருவுக்காக எதையும் செய்பவராகத் திரிகிறார்.

kutti puli review   

அம்மா (சரண்யா) மீது மட்டும் அப்படியொரு பாசம். மகனுக்கு எப்படியாவது திருமணம் செய்து பார்க்க துடிக்கிறார் சரண்யா. ஆனால் ஊர் முழுக்க பகை வளர்த்து வைத்திருக்கிறோம். யார் எப்போது தீர்த்துக் கட்டுவார்களோ என்ற நிலையில் இருக்கும் தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி, வருகிற பெண்களையெல்லாம் தட்டிக் கழிக்கிறார் சசிகுமார்.

அப்போதுதான், மேட்டுத்தெருவுக்கு குடிவருகிறார் லட்சுமி மேனன். பெண்களைப் பார்த்தாலே குனிந்த தலை நிமிராமல் போகும் சசிகுமாரை அவருக்குப் பிடித்துப் போகிறது. ஆரம்பத்தில் ஒதுங்கிப் போகும் சசி, பின்னர் கட்டினால் லட்சுமிதான் என்ற முடிவுக்கு வர, அம்மா சரண்யா மகிழ்ச்சியில் ஆத்தாளுக்கு பொங்கலே வைக்கிறார்.

சசிகுமாரால் ஏற்கெனவே அவமானப்படுத்தப்பட்டு, தீராப் பகையுடன் திரியும் ராஜசிம்மன் சசிகுமாரை தீர்த்துக் கட்ட நேரம் பார்க்கிறார்.

இதைத் தெரிந்து கொண்ட சரண்யாவும் சசிகுமாரைப் பெறாத இன்னொரு அம்மாவும், திருமணம் செய்து கொண்டு புதுவாழ்க்கை வாழப் போகும் தங்கள் மகனுக்கு விரோதமே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து, சசிகுமாரின் விரோதிகளைத் தேடிப் போய் மன்னிப்பு கேட்க ஆரம்பிக்கிறார்கள்.

ஆனால் அந்த மன்னிப்பை ஏற்க மறுத்து கொலைவாளுடன் நிற்கிறார் ராஜசிம்மன். அந்தப் பகையை எப்படி முடிக்கிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

முறுக்கிய மீசை, மூன்று மாத தாடி, கீழுதட்டை மடித்துக் கடித்து பகை முடிக்கும் பாணி, தூக்கிக் கட்டிய லுங்கி... இதுதான் இந்தப் படத்தில் சசிகுமார். தெற்கத்திய பாசக்கார, கோவக்கார, இளகிய மனசுக்கு சொந்தக்கார இளைஞராக ஈர்க்கிறார். அந்த பஸ் ஸ்டான்ட் சண்டைக் காட்சி செம விறுவிறுப்பு. லட்சுமி மேனனைக் காதலிக்க ஆரம்பித்த பிறகு அவருக்குள்ளும் வெளியிலும் ஏற்படும் மாற்றங்கள் கலகல. ஆனால் சுப்பிரமணியபுரத்திலிருந்து குட்டிப் புலி வரை வசன உச்சரிப்பில், உடல் மொழியில் எந்த மாறுதலும் இல்லை. கவனத்தில் வச்சுக்கங்க சசி!

லட்சுமி மேனன் இன்னும் அம்சமாக இருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச வேலை நடந்துகொண்டே சசிகுமாரைப் பார்த்து காதல் லுக் விடுவது. தியேட்டரே சொக்கிப் போகிறது அந்த லுக்கில்!

பிரதான காமெடியன் இல்லை. அதைச் சரிகட்ட, லட்சுமியைக் காதலிக்கத் துரத்தும் அந்தத் தெரு விடலைகளை வைத்து அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டப் பார்க்கிறார்கள்.

Kutti Puli

சரண்யாவும், அவருடனே எப்போதும் இருக்கும் ரமேஷ் பிரபாவும் தங்கள் பாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். மகன் அடிப்பட்டு மருத்துவமனையில் சாகப் பிழைக்க கிடக்க, பணத்துக்கு அலையும் சரண்யாவைப் பார்க்கும்போது, பல கிராமத்து அம்மாக்கள் கண்முன் வந்து போகிறார்கள்!

இடைவேளைக்குப் பின் வரும் பகுதியில் சசிகுமார் - லட்சுமிமேனன் காதல் காட்சிகள், 'படமே இப்போதுதான் ஆரம்பிக்கிறதா' என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது.

மகன் நிம்மதியாக வாழ வேண்டுமே என்பதற்காக அவனது விரோதிகளைத் தேடிப்போய் மன்னிப்புக் கேட்கும் படலம் புதுசுதான்!

மகேஷ் முத்துசாமியின் காமிராவே, இந்தப் படத்தின் தன்மை என்ன என்பதைக் காட்டி விடுகிறது. அந்த பஸ்டான்ட் சண்டைக் காட்சியிலும், கோயில் பூஜையின் போது சசிகுமாரை சேஸ் செய்யும் காட்சியிலும் அபாரம்!

படத்துக்கு இசை ஜிப்ரான் என டைட்டிலில் போடுகிறார்கள். ஆனால் பெரும்பகுதி காட்சிகளில் இளையராஜாவின் பாடல்களும் இசையும்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒரு டூயட் பாடலுக்கு, ரஜினி நடித்த கழுகு படத்தில் இடம்பெற்ற ராஜாவின் 'பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்...' பாடலை முழுமையாக அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாக பாடல் காட்சிகளில் தம்முக்கு ஒதுங்கும் கூட்டம் கூட அப்படியே கிறங்கிப் போய் பார்த்து ரசித்தது இந்தப் பாடலை.

சசிகுமாரின் உதவியாளராக இருந்த முத்தையாவுக்கு இது முதல் படம். சுந்தரபாண்டியனில் சசிகுமாருக்கு கிடைத்த பாக்ஸ் ஆபீஸ் ரெஸ்பான்ஸைப் பார்த்து அதே Genre- ல் இந்தப் படத்தையும் உருவாக்கி விட்டார் போலிருக்கிறது!

படத்தில் குறைகள் இருந்தாலும், அந்த இறுதிக் காட்சி தரும் அதிர்ச்சியில் ஒரு கணம் அவற்றை மறந்து போகிறார்கள் பார்வையாளர்கள். க்ளைமேக்ஸ் கொடூரமா இல்லையா, இப்படியெல்லாம் நடந்ததா என்ற விவாதத்துக்கப்பால், ஒரு தாயின் பாசத்துக்கு முன் எதுவுமே நிற்க முடியாது என்ற உண்மைதான் கண்களைத் தளும்ப வைக்கிறது.

குட்டிப் புலி ஓட்டத்தில் பழுதில்லை!

 

அட, அவுகதான் அப்படி டிரஸ் போடச் சொன்னாங்கப்பா... ஜெனீபர் லோபஸ்

Britain S Got Talent Producers Asked Me To Wear Outfit

பிரிட்டன்ஸ் காட் டேலன்ட் ஷோவில் கலந்து கொண்டு படு கவர்ச்சிகரமான, அதேசமயம் விஹாரமான டிரஸ் அணிந்து பெரும் சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் உள்ளான நடிகை - பாடகி ஜெனீபர் லோபஸ், தானாக விரும்பி அந்தடிரஸ்ஸைப் போடவில்லை என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் இப்படிப்பட்ட டிரஸ்ஸைக் கொடுத்து போட்டுக்கொண்டு ஆடுமாறு கேட்டுக் கொண்டதாக அவர் காரணம் கூறியுள்ளார்.

மே 28ம் தேதி நடந்த இந்த நிகழ்ச்சியின்போது லோபஸ் போட்டிருந்த டிரஸ்ஸைப் பார்த்து பலரும் முகம் சுளித்தனர். கருப்பு நிறத்திலான அந்த உடையில், லோபஸின் பின்பக்கம் கிட்டத்தட்ட முழுமையாக தெரியும் வகையில் இருந்தது. பெரும் விஹாரமாக அந்த டிரஸ்ஸில் காட்சி அளித்தார் லோபஸ். அதேபோல முன்புறமும் விஹாரமாக காட்சி தந்தது.

இப்படியா டிரஸ் போடுவது என்று சகட்டுமேனிக்கு பலரும் லோபஸை திட்டித்தீர்த்து விட்டனர். ரொம்ப அசிங்கமாக, அறுவறுப்பாக இருப்பதாக இந்த டிரஸ் குறித்து லோபஸுக்கு விமர்சனங்கள் வந்து குவிந்தன.

இதையடுத்து அவர் விளக்கம் அளித்துள்ளார். நானாக இந்த டிரஸ்ஸைப் போடவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் இந்த டிரஸ்ஸைக் கொடுத்துப் போடச் சொன்னார்கள்.

எனக்கேகூடஇது பெரும் கவர்ச்சியாகத்தான் இருந்தது. இருந்தாலும் போட்டுத்தான் பார்ப்போமே என்று தைரியமாக போட்டேன். அப்போது யாரும் புகார் செய்யவில்லை.

அது ஒன்றும் ரொம்ப அசிங்கமாக இல்லை என்பது எனது கருத்து. உடம்போடு ஒட்டிய டிரஸ் அது. மேடையில் ஆடும்போது போடக் கூடிய டிரஸ்தான் என்று கூறியுள்ளார் லோபஸ்.

லோபஸுக்கு 43 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது....

 

லயன் டேட்ஸ் நிறுவனத்திடம் ரூ. 80,000 மோசடி செய்தவர் லீலாவின் காதலன் சுகேஷ்

Sukesh Conned Tn Based Date Importer Of Rs 80k

பெங்களூர் பிரபலமான லயன் டேட்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ. 80,000 பணத்தை மோசடியாக பெற்றதாக நடிகை லீலா மரியா பாலின் காதலன் சுகாஷ் சந்திரசேகர் மீது ஏற்கனவே புகார் பதிவாகியுள்ளது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக சுகாஷ் மீது வழக்கும் நிலுவையில் உள்ளதாம்.அதுகுறித்துதம் தற்போது பெங்களூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கேரளத்தைச் சேர்ந்த நடிகை லீனா மரியா பால். ரூ.19 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்டு, சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார்.

அவரும் அவரது காதலர் சுகேஷ் சந்திரசேகரும் சேர்ந்து பெரும் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இந்தநிலையில் சுகாஷ் செய்தமேலும் ஒரு மோசடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

லீனா பால் ஏற்கனவே கைதாகி விட்ட நிலையில் சுகாஷ் மட்டும் இன்னும் கைதாகாமல் தலைமறைவாகவே இருக்கிறார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் லயன்டேட்ஸ் மோசடி குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பெங்களூர் வி்தான செளதா போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்தது லயன் டேட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் கொடுத்த வழக்குதான் விதான செளதா காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வழக்கை சிசிபி போலீஸாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார் பெங்களூர் கமிஷனர் ஜோதிபிரகாஷ் மிர்ஜி.

முன்னதாக லயன் டேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொன்னுதுரை, கடந்த ஜனவரி 11ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது....

ஜெயக்குமார் என்ற நபர் 09916725484 என்ற எண்ணிலிருந்து எங்களைத் தொடர்பு கொண்டார். தான் கர்நாடக முதல்வரின் இணைச்செயலாளர் என்றும், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும் கூறிக் கொண்டார்.

கர்நாடக அரசு ஒரு வருட காலத்திற்கு மாதந்தோறும் ரூ. 5 லட்சத்திற்கு 500 கிராம் எடை கொண்ட பேரீச்சம் பழ பாக்கெட்களை வாங்க விரும்புவதாக தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின்மொத்த மதிப்பு ரூ. 7 கோடியாகும். பள்ளிக் குழந்தைகளுக்கும், பார்வையற்றோருக்கும் தருவதற்காக இதை வாங்குவதாகவும் அவர் கூறினார்.

நாங்கள் அவரது பேச்சை நம்பி சுகாஷ் சந்திரசேகர் என்ற பெயரில் ரூ. 80,000க்கு AQAPL4131C என்ற பேன் எண் கொண்ட, கெங்கேரி ஆந்திரா வங்கி கிளையில் பணம் போட்டோம். அந்தவங்கிக் கணக்கு எண் 1352110004510. அதன் பின்னர் வருடாந்திர உறுப்பிர் தொகையாக ரூ.2.05 லட்சம் கட்டுமாறு அந்த நபர் எங்களிடம் கூறினார்.

ஆனால் இதுகுறித்து முறையாக அரசு லெட்டர் பேடில் கடிதம் அனுப்புமாறு நாங்கள் ஜெயக்குமாருக்கு பலமுறை இமெயில் அனுப்பியும் வரவில்லை. எனவே நாங்கள் கட்டிய ரூ. 80,000 பணத்தை மோசடி செய்து விட்டதாக உணர்ந்து புகார் கொடுக்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.

இந்தப் புகார் குறித்தும் தற்போது போலீஸார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

3 முறை கைதானவரும் கூட

அதேபோல சுகாஷ் 3முறை கைதான மோசடிப் பேர்வழியும் கூட என்ற தகவலும் கசிந்துள்ளது. கடந்த 2007 முதல் 3 முறை கைது செய்யப்பட்டுள்ளார் சுகாஷ். ஆனால் மூன்று முறையும் அவர் பெங்களூர் கோர்ட்டில் ஜாமீன் பெற்று விடுதலையாகியுள்ளார்.

இவர் நூற்றுக்கணக்கானோரை மோசடி செய்த பின்னணியைக் கொண்டவர் என்றும் பெங்களூர் போலீஸார் கூறுகின்றனர். இவர் பெங்களூர் பால்ட்வின் பள்ளியில் பியூசி படித்து வந்தார். பின்னர் படிப்பை பாதியில் விட்டு விட்டார். அதன்பிறகுதான் மோசடிகளில் குதித்துள்ளார்.

முன்பு ஒருமுறை திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் என்று கூறி மோசடி செய்துள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கெளடாவின் நெருங்கிய நண்பர் என்றும் மோசடி செய்துள்ளார். தமிழக நிதியமைச்சராக இருந்த அன்பழகனின் உறவினர் என்று கூறியும் மோசடி செய்துள்ளார்.

இவர் மீது கடந்த 2007ம் ஆண்டு முதல் புகார் பதிவானது. 75 வயதான சுப்ரமணியா என்பவரிடம் பிடிஏ வீட்டு மனையை வாங்கித் தருவதாக கூறி. ரூ. 1.14 கோடி பணத்தை மோசடி செய்து சிக்கினார். மேலும் மோசடியாக ஒரு ஆவணத்தை சுப்ரமணியாவிடம் காட்டி அவரை நம்ப வைத்துள்ளார். இதுதொடர்பாக ஹுலிமாவு போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் சுகாஷ் மற்றும் அவரது பெற்றோரைக் கைது செய்தனர். ஆனால் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.

அதன் பின்னர் 2009ம்ஆண்டு ஒரு தொழிலதிபரை மோசடி செய்தார். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் என்று கூறி இந்த மோசடியைச் செய்தார் சுகாஷ். அந்த வழக்கிலும் அவர் ஜாமீனில் தப்பி விட்டார்.

கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி சென்னை ஏவிஎம் ஸ்டூடியோ அருகே வைத்து கைது செய்யப்பட்டார். அப்போது அவர் கருணாநிதியின் மகன் என்று கூறி ரூ. 10 கோடி அளவுக்கு மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, ஹரியானாவில் சுகாஷ் மீ்து 13 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.

 

லக்ஷ்மி மேனன் எஸ்.எஸ்.எல்.சி. ஃபெயில்: ட்விட்டர், ஃபேஸ்புக்கில் தீயா பரவும் செய்தி

Lakshmi Menon Failed Sslc Exams

சென்னை: லக்ஷ்மி மேனன் பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டதாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் செய்தி பரவுகிறது. ஆனால் இதை அவரது தாயார் மறுத்துள்ளார்.

சுந்தர பாண்டியன் படம் மூலம் கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் லகஷ்மி மேனன். அவர் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் லக்ஷ்மி 85 சதவீத மதிப்பெண்கள்
வாங்கி தேர்ச்சி பெற்றார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் அவர் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டார் என்ற செய்தி பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக அவர் அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்ததாக செய்தி பரவுகிறது.

இது குறித்து லக்ஷ்மி மேனனின் தாய் கூறுகையில்,

என் மகள் தேர்வில் தோல்வி அடையவில்லை. பர்ஸ்ட் கிளாஸில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்றார்.

 

இளையராஜா இசையில் பாடல் வாய்ப்பா? - மதன் கார்க்கி மறுப்பு

Madhan Karky Denies Reports On His Association

இளையராஜா இசையில் பாடல் எழுதும் வாய்ப்பு வந்தால் மகிழ்வேன். ஆனால் இப்போது அப்படி ஒரு சூழல் ஏற்படவில்லை என்று பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் இளையராஜா இசையில் வைரமுத்து மகன் மதன் கார்க்கி பாடல் எழுதப் போவதாக கடந்த சனிக்கிழமை தகவல் வெளியானது.

முன்னணி ஆங்கில நாளிதழில் வெளியான இந்த செய்தியை இளையராஜாவின் பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்கள். எனவே இந்த செய்தி பரபரப்பாக பரவ ஆரம்பித்தது.

ஆனால் இப்போது மதன் கார்க்கி இந்த செய்தியை மறுத்துள்ளார். இளையராஜா இசையில் பாடல் எழுதும் வாய்ப்பு வந்தால் மகிழ்வேன். ஆனால் இப்போது அப்படி ஒரு சூழல் ஏற்படவில்லை, என்று அவர் தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு யுவன் சங்கர் ராஜா இசையில் மட்டும் ஒரு படத்தில் பாடல் எழுதுகிறார் மதன் கார்க்கி.

 

கமல் பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்- பிஆர்ஓ

Kamal Hassan Is Fake

சென்னை: கமல் ஹாசன் பெயரில் இருக்கும் ட்விட்டர் கணக்கு போலியானது என்று அவரது பி.ஆர்.ஓ. தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாசன் ஃபேஸ்புக்கில் உள்ளார். அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை எம்ஏஐஏஎம் குழு நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் @maiamkhassan என்ற பெயரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இந்த கணக்கைப் பார்த்த ரசிகர்கள் கமல் தான் ட்விட்டருக்கு வந்துவிட்டார் என்று நினைத்து அவரை வரவேற்கத் துவங்கிவிட்டனர்.

ஆனால் உண்மையில் யாரோ விஷமி தான் கமல் பெயரில் போலி கணக்கை துவங்கியுள்ளார். இது கமலின் பி.ஆர்.ஓ. கூறித் தான் தெரிய வந்துள்ளது. மேலும் கமல் பெயரில் போலி கணக்கு துவங்கி அவரின் ரசிகர்களை ஏமாற்றியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பி.ஆர்.ஓ. தெரிவித்துள்ளார்.

பிரபலங்களின் பெயரில் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பல போலி கணக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருணாநிதிக்கு ரஜினி பிறந்த நாள் வாழ்த்து!

சென்னை: இன்று 90வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியலைத் தாண்டி கருணாநிதியுடன் நட்பு பாராட்டி வருபவர் ரஜினிகாந்த். கருணாநிதியை இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஸ்டேட்ஸ்மேன், அன்புக்குரிய நண்பர் என்றே அவர் எப்போதும் கூறிவந்துள்ளார்.

rajini wishes karunanidhi

கருணாநிதியும் ரஜினி விஷயத்தில் மிகுந்த அக்கறை காட்டுபவர். அவர் படங்களின் முதல் ரசிகராக இருந்து பாராட்டுவதும் வாழ்த்துவதும் வழக்கம்.

கருணாநிதி முதல்வராக இருந்த 2011-ல் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களில் முதல்வர் கருணாநிதி சக்கர நாற்காலியில் அமர்ந்து போய் ரஜினியைப் பார்த்து நலம் விசாரித்தார். அடுத்த சில தினங்களில் ஆட்சியே மாறியது. கருணாநிதி முன்னாள் முதல்வரானார். உடல் நிலை தேறி வீடு திரும்பிய ரஜினி நேரில் போய் கருணாநிதியைப் பார்த்து நலம் விசாரித்து, நன்றி தெரிவித்துவிட்டு வந்தார்.

இந்த ஆண்டு 90 வயதில் அடியெடுத்து வைக்கும் கருணாநிதிக்கு, தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த ரஜினி, நூறு ஆண்டுகளைத் தாண்டியும் நலமோடு நீங்கள் வாழ வேண்டும் என்று கூறினார்.

 

சிங்கம் 3-லும் நடிக்கணும்!- சூர்யா ஆசை

சென்னை: நேரமும் சூழலும் அமைந்தால் சிங்கம் 3 படத்திலும் நடிக்க விரும்புகிறேன், என்றார் நடிகர் சூர்யா.

'சிங்கம்-2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடந்தது.

இசைத் தட்டை கன்னட நடிகர் சுதீப் வெளியிட்டார்.

surya hints singam 3   

இவ்விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா பேசுகையில், "சிங்கம்-2ஐ உருவாக்க நாங்கள் 8 மாதங்கள் உழைத்துள்ளோம். அடுத்த பாகத்தை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு நேரம் ஒத்துழைக்க வேண்டும்.

இயக்குனர் ஹரிக்கு பொறுமையும், நேரமும் இருந்தால் சிங்கம்-3 படத்தில் நடிக்கவும் நான் விரும்புகிறேன். சிங்கம்-2ல் நடித்தபோது ஏற்பட்ட ஆர்வமும் உற்சாகமும் சிங்கம்-3லும் நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ஹரி அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். நேரம் ஒத்துழைத்தால் சிங்கம்-3ல் நாங்கள் மீண்டும் ஒன்றாக இணைவோம்," என்றார்.

இயக்குநர் ஹரி பேசுகையில், "சிங்கம் படத்தை எடுக்கும்போதே, சிங்கம் 2 படம் குறித்த ஐடியா இருந்தது. சிங்கம் 3 உருவாக்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

Singam 2 Aido Launch

சூர்யாவுடன் அனுஷ்கா ஷெட்டி, ஹன்சிகா மோட்வானி, நாசர், விஜயகுமார், சந்தானம், விவேக், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சிங்கம்-2' வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது.

 

இப்போது ஏ ஆர் ரஹ்மான் முறை... யுவன் இசையில் பாடுகிறார்!

Ar Rahman Sing Yuvan Shankar Raja

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் அஜீத்துக்காக குரல் கொடுக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.

தனுஷின் மரியான் படத்தில் கடல் ராசா.. என்ற பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருந்தார். சிடி வெளியானதுமே சூப்பர் ஹிட்டான பாட்டு என்ற பெருமையைப் பெற்றது இந்தப் பாடல். யுவன், ரஹ்மானின் இந்தப் புதிய கூட்டணி கோலிவுட்டையே கலக்க ஆரம்பித்துள்ளது.

இப்போது ரஹ்மான் முறை. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் யுவன்சங்கர் ராஜா, இந்தப் படத்தில் அஜீத்துக்காக ஒரு பாடல் பாட ஏ.ஆர்.ரஹ்மானை அழைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானும் உடனே பாடி தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

விரைவில் பாடல் பதிவு செய்யப்படவிருக்கிறது.

சமீப நாட்களாக ரஹ்மான் இசை கோலிவுட்டில் பெரிய அளவில் இல்லை என்ற ரஹ்மான் ரசிகர்களின் ஆதங்கத்தை இந்த ஆண்டு மொத்தமாகத் தீரப் போகிறது.