திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, திருவண்ணாமலை, தர்மபுரி என ஊர்களின் பெயரில் படமெடுத்துக் கொண்டிருக்கும் இயக்குநர் பேரரசு, அடுத்து தன் படத்துக்கு வைத்திருக்கும் தலைப்பு 'திகார்'!
இந்தப் படத்தை நவீன தொழில்நுட்பத்துடன் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இந்த திகாரை உருவாக்கப் போகிறாராம் பேரரசு.
காட்சன் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் பேரரசுவின் வழக்கமான ஹீரோக்கள் யாருமில்லை. கதாநாயகனாக முகுந்தன் என்பவர் அறிமுகமாகிறார். கதாநயாகியாக மும்பை மாடல் அழகி அகன்ஷா பூரி அறிமுகமாகிறார். இன்னொரு நாயகனாக கார்த்திகேயன். வில்லன் கூட மும்பை இறக்குமதிதான். பெயர் கேசி சங்கர்.
சந்திரமுகி, சிவகாசி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சேகர் வி. ஜோசப் இந்தப் படத்தின் கேமராவைக் கையாள்கிறார். .
கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் பேரரசு. பாடல்களையும் அவரே எழுதுகிறார். தானே இசையமைக்கவும் போவதாக சொல்லிக் கொண்டிருந்தவர், என்ன நினைத்தாரோ... இசைக்கு மட்டும் ஷபீர் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளார்!
படம் பற்றி இயக்குனர் பேரரசுவிடம் கேட்டோம்.
"ஒரு காலத்தில் இந்த நாட்டையே கலக்கிக் கொண்டிருந்த மிகப் பெரிய தாதா அலெக்ஸண்டரின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஜோர்தன், இன்றைய சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் 'திகார்'.
ஆக்ஷன் படம் என்றால் சாதாரணம். இது அதிரடி ஆக்ஷன் படம். இதற்காக பிலிம் சிட்டியில் 25 லட்ச ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு முகுந்தன் - ரியாஸ்கான் மோதும் பாக்சிங் சண்டைக்காட்சி படமானது.
படப்பிடிப்பு துபாய், மும்பை, ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
வழக்கமான என் பாணி படம் இல்லை ‘திகார்'. பரபரப்பான ஆக்ஷன் படம்," என்கிறார் பேரரசு.