கமலின் உத்தம வில்லனுடன் மோதும் விஜயகாந்த் மகன்!

விஜய் காந்த் மகன் சண்முகப்பாண்டியன் நாயகனாக அறிமுகமாகும் சகாப்தம் படம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியன்று வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அன்றுதான் கமல் நடித்த உத்தம வில்லன் படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், கமல் படத்துடன் விஜய்காந்த் மகன் படம் மோதப் போகிறதா என்ற கேள்வி கோடம்பாக்கத்தில் உலா வர ஆரம்பித்துள்ளது.

கமலின் உத்தம வில்லனுடன் மோதும் விஜயகாந்த் மகன்!

சகாப்தம் படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள எல்கே சுதீஷ், படத்தின் வெளியீடு குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சகாப்தம் படம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி உலகெங்கும் வெளியாகும் என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி," என்று கூறியுள்ளார்.

சகாப்தம் படத்தில் சண்முகப் பாண்டியனுடன், விஜயகாந்தும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நாயகிகளாக நேஹா, சுப்ரா நடித்துள்ளனர்.

சுரேந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்காக கணிசமான திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணியில் மும்முரமாக உள்ளார் எல்கே சுதீஷ்.

 

ஜில் ஜங் ஜக்... வடிவேலு டயலாக்கைப் பேசத் தயாராகிறார் சித்தார்த்

சென்னை: எனக்குள் ஒருவன் படத்தைத் தொடர்ந்து சித்தார்த் ‘ஜில் ஜங் ஜக்' என்ற காமெடி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'லுசியா' படத்தின் தமிழ் ரீமேக் 'எனக்குள் ஒருவன்'. இப்படத்தில் சித்தார்த் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக தீபா சன்னதியும் நடித்துள்ளனர்.

இப்படத்தை சி.வி.குமார், அபினேஷ் இளங்கோவன், சசிகாந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்க, வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் வெளியிட இருக்கிறது. நாளை இப்படம் ரிலீசாகிறது.

ஜில் ஜங் ஜக்... வடிவேலு டயலாக்கைப் பேசத் தயாராகிறார் சித்தார்த்

சித்தார்த் இரு வேடங்களில் நடித்துள்ள இப்படம், அவரது 25 -வது படம் ஆகும். பாய்ஸ் படத்தில் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் நடித்து 25 -வது படத்தை தொட்டிருக்கிறார்.

'எனக்குள் ஒருவன்' பாடல்கள் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. எனவே இப்படம் குறித்து மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து காமெடி படமொன்றில் நடிக்க உள்ளாராம் சித்தார்த். அப்படத்திற்கு வடிவேலுவின் பிரபல டயலாக்குகளில் ஒன்றான ‘ஜில் ஜங் ஜக்' என வித்தியாசமாகப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. புதுமுக இயக்குநர் ஒருவர் இப்படத்தை இயக்குகிறாராம்.

விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

'கிராமியக் கலைஞர் சம்பளமும் சினிமா நடிகர் சம்பளமும் ஒன்றா?' - சித்தார்த் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

கிராமியக் கலைஞர்களுக்கு சேவை வரி விலக்கு வழங்குவது போல, திரைப்பட நடிகர்களுக்கும் வரி விலக்கு அளிக்கக் கோரி நடிகர் சித்தார்த் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பாய்ஸ், ஜிகர்தண்டா, உதயம் என்.ஹெச். 4, காவியத் தலைவன் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்த சித்தார்த், சினிமாக்காரர்களுக்கும் சேவை வரி விலக்கு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், "கிராமியக் கலைஞர்கள், நாடக நடிகர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோருக்கு சேவை வரிச் சலுகை அளித்து, கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20-ஆம் தேதி மத்திய அரசு ஒரு ஆணை வெளியிட்டது.

'கிராமியக் கலைஞர் சம்பளமும் சினிமா நடிகர் சம்பளமும் ஒன்றா?' - சித்தார்த் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

ஆனால், இது போன்ற வரிச் சலுகை திரைப்பட நடிகர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. நடிப்புத் தொழில் என்பது கிராமியக் கலைஞர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் ஒன்றாகத்தான் உள்ளது.

இந்த நிலையில், கிராமியக் கலைஞர்களுக்கு மட்டும் சேவை வரி விலக்கு அளிப்பது நியாயமற்றது. எனவே, திரைப்பட நடிகர்களுக்கும் சேவை வரிச் சலுகை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்," என கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "வரி விலக்கு அளிப்பது, அளிக்காதது குறித்து முடிவு செய்வது அரசின் அதிகாரத்துக்கு உள்பட்டது. கிராமியக் கலைஞர்கள் லாப நோக்கமின்றி, சேவைகள் செய்து வருகிறார்கள். அதனால், பாரம்பரியக் கலையையும், கலைஞர்களையும் பாதுகாப்பதற்காக மத்திய அரசு அவர்களுக்கு வரி விலக்கு அளித்துள்ளது.

ஆனால், கிராமியக் கலைஞர்களையும், திரைப்பட நடிகர்களையும் ஒன்றாகக் கருத முடியாது. திரைப்படங்கள் பெரும் முதலீட்டில் தயாரிக்கப்படுகிறது. நடிகர்கள் அதிகமான தொகையை ஊதியமாகப் பெறுகின்றனர்.

அதனால், கிராமியக் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளை திரைப்பட நடிகர்கள் கோர முடியாது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதும் அல்ல. பாராம்பரியக் கலைகளையும், கலாசாரங்களையும், கல்வியையும் பாதுகாப்பதற்காக குறிப்பிட்ட மக்களுக்கு சலுகை வழங்கலாம் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, வரிச் சலுகையில் பாகுபாடு ஏதும் இல்லை. வழக்கு விசாரணையின் போது, கிராமியக் கலைஞர்கள் பெறும் சம்பளத்தை, நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்குப் பெறுவார்களா என மனுதாரரின் வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினோம்.

வரிச் சலுகை வழங்கியது குறித்து தவறாகப் புரிந்து கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இதைத் தள்ளுபடி செய்கிறோம்," என தெரிவித்தனர்.

 

மாறி மாறி விசாரித்துக் கொள்ளும் சூப்பரும், தாதாவும்... பூரிப்பில் ‘தாத்தா’!

சென்னை: ஒல்லிப்பிச்சான் நடிகரின் தம்பியாக கொண்டாடப் படுபவர் இந்த வாலிபர் நடிகர்.

இடையில் அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையில் ஏதோ பிரச்சினை என செய்தி தீயாய் பரவியது. அதற்குக் காரணம் ஒல்லி நடிகர் தனது தயாரிப்பில் சுமார் நடிகரை ஒப்பந்தம் செய்தது தான்.

இதனால் தொழில்ரீதியாக வாலிபர் நடிகருக்கும், சுமார் மூஞ்சி நடிகருக்கும் இடையில் போட்டி ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒல்லி நடிகரின் குட்புக்கில் நிரந்தர இடத்தைப் பிடிக்க இருவரும் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வாலிபர் நடிகர் நடிக்கும் படத்திலும், சுமார் மூஞ்சி நடிகர் நடிக்கும் தாதா படத்திலும் என இரண்டிலும் நடித்து வருகிறார் ராசா பட நாயகர்.

படப்பிடிப்பு இடைவேளை நேரங்களில் இரண்டு நடிகர்களும் மாறி, மாறி ஒருவர் மற்றவரைப் பற்றி விசாரித்துக் கொள்கிறார்களாம். அவர் எப்படி நடிக்கிறார் எனக் கேட்கிறார்களாம்.

கடந்த தலைமுறை நடிகர்களைப் போலவே இவர்கள் இருவரும் பெருந்தன்மையோடு விசாரித்துக் கொள்வதாக பெருமையுடன் பேசுகிறாராம் ராசா.

அப்போ போட்டி எல்லாம் இல்லைங்கிறீங்க..?

 

பாஃப்டா.. புதிய திரைப்பட கல்வி நிறுவனம்.. மகேந்திரன், பாக்யராஜ் பாடம் நடத்துகிறார்கள்!

பாஃப்டா என்ற பெயரில் புதிய திரைப்பட கல்வி அகாடமி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. மோசர் பேயர், யுடிவி நிறுவனங்களின் தமிழக நிர்வாகியாக இருந்த தனஞ்செயன் இந்த புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார்.

பாஃப்டா.. புதிய திரைப்பட கல்வி நிறுவனம்.. மகேந்திரன், பாக்யராஜ் பாடம் நடத்துகிறார்கள்!

இந்த நிறுவனத்தின் தொடக்கவிழா நேற்று சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது.

"திரைத் துறையின் வல்லுனர்கள் மற்றும் நிபுணர்களின் ஆதரவுடனும் அவர்களின் வழிகாட்டுதலுடனும் தென்னிந்தியாவின் புகழ் வாய்ந்த சினிமா மற்றும் தொலைக்காட்சி அகாடமியாக மாற வேண்டும் என்பதுதான் பாஃப்டா-வின் லட்சியம்," என்று விழாவில் தெரிவித்தனர்.

பாஃப்டா-வின் ஆசிரியர் குழு:

இயக்குநர் பாடத்தின் துறைத் தலைவர்: இயக்குநர் மகேந்திரன்
திரைக்கதை பாடத்தின் துறைத் தலைவர்: இயக்குநர் கே. பாக்யராஜ்
நடிப்பு பாடத்தின் துறைத் தலைவர்: நடிகர் நாஸர்
ஒளிப்பதிவு பாடத்தின் துறைத் தலைவர்: ஒளிப்பதிவாளர் மது அம்பாட்
எடிட்டிங் பாடத்தின் துறைத் தலைவர் : எடிட்டர் பி லெனின்
திரைப்பட இதழியல் பாடத்தின் துறைத் தலைவர்: கார்ட்டூனிஸ்ட் மதன்
தொலைக்காட்சித் தயாரிப்பு பாடத்தின் துறைத் தலைவர்: நடிகை குட்டி பத்மினி
திரைப்படத் தயாரிப்பு மேனேஜ்மன்ட் பாடத்தின் துறைத் தலைவர்: தயாரிப்பாளர் டி. சிவா

மேற்கண்ட துறைகளின் மூத்த ஆசிரியர் குழு:

இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதும் பயிற்சி: இயக்குனர்கள் ஆர். பார்த்திபன், மனோபாலா, ஞான ராஜசேகரன், கே. ராஜேஷ்வர், சசி, வெங்கட் பிரபு, விஷ்ணுவர்த்தன், விஜய், பாண்டிராஜ், ராம், கார்த்திக் சுப்பராஜ், ஆர். எஸ். பிரசன்னா, எழுத்தாளர் கருந்தேள் ராஜேஷ் மற்றும் வரலாற்று ஆசிரியர் அறந்தை மணியன்.

பாஃப்டா.. புதிய திரைப்பட கல்வி நிறுவனம்.. மகேந்திரன், பாக்யராஜ் பாடம் நடத்துகிறார்கள்!

இந்த ஒரு ஆண்டு பயிற்சியின் முதல் வருப்பு 2015, ஜூலை 1 தேதியில் தொடங்குகிறது. அட்மிஷன்கள் இன்றிலிருந்து தொடங்குகின்றன. காலை 9.30 முதல் மாலை 4.30 வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த வகுப்புகள் நடைபெறும்.

தமிழ் திரைப்படத் துறையின் மையத்திற்கு (கோலிவுட்) வெகு அருகில், பாஃப்டா, ரவி பிரசாத் ஃபிலிம் லேப்ஸ், எண்.8 -11, வி.ஓ.சி. முதல் மெய்ன் தெரு, ராம் தியேட்டர் முதல் சந்து, கோடம்பாக்கம், சென்னை- 600 024 என்ற முகவரியில் மூன்று மாடிக் கட்டடத்தில் இந்த அகாடமி உருவாக்கப்பட்டுள்ளது.

மியுசிக் அகாடமியில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் இயக்குநர்கள் மகேந்திரன், கே பாக்யராஜ், ஆர் பார்த்திபன், மனோபாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

'ரியல் எஸ்டேட் பிஸினஸ் மாதிரிதான் இந்த பாஃப்டா!' - தொடக்க விழாவில் பார்த்திபன் பேச்சு

சென்னை: ரியல் எஸ்டேட் பிஸினஸ் மாதிரிதான் இந்த பாஃப்டா நிறுவன வியாபாரமும். என்ன, இங்கு நாங்கள் வானத்தையே உங்களிடம் விற்கப் போகிறோம், என்றார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன்.

பாஃப்டா திரைப்பட கல்வி அகாடமியின் தொடக்கவிழா நேற்று மியூசிக் அகாடமியில் நடந்தது. இந்த நிறுவனத்தில் மூத்த ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ளார் பார்த்திபன்.

'ரியல் எஸ்டேட் பிஸினஸ் மாதிரிதான் இந்த பாஃப்டா!' - தொடக்க விழாவில் பார்த்திபன் பேச்சு

தொடக்க விழாவில் இயக்குநர் ஆர் பார்த்திபன் பேசுகையில், "இங்கே படிக்க வரும் நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள். பெரும் சாதனையாளர்களிடமிருந்து கற்கப் போகிறீர்கள்.

ஒரு விதத்தில் 500 கிமீ தூரத்தில் இருக்கும் இடத்தைக் காட்டி, மீனம்பாக்கத்துக்கு மிக அருகில் சகல வசதிகளுடன் வீட்டுமனை என்று விற்கும் ரியல் எஸ்டேட் பிஸினஸ் மாதிரிதான் இந்த பாஃப்டாவும். என்ன.. அவர்கள் நிலத்தை விற்பார்கள்.. நாங்கள் வானத்தையே உங்களுக்கு விற்கிறேோம்.

'ரியல் எஸ்டேட் பிஸினஸ் மாதிரிதான் இந்த பாஃப்டா!' - தொடக்க விழாவில் பார்த்திபன் பேச்சு

பொதுவாக குழந்தைகள் 60 மார்க் வாங்குவது அம்மாக்களால்தான். ஆனால் அம்மாக்கள் தலையிடாவிட்டால் 90 மார்க் வாங்குவார்கள். அந்த அம்மாக்களைப் போலத்தான் நாங்கள் இங்கே, இந்த பாஃப்டாவில்.

பொதுவாக வெளியிலிருந்து வரும் நீங்கள் எல்லாம் புதிய விஷயங்களுடன் வருவீர்கள். அதை கட்டணமில்லாமல் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளப் போகிறோம். நீங்கள் பீஸ் கொடுத்து கற்றுக் கொள்ளப் போகிறீர்கள். அவ்வளவுதான்," என்றார்.

 

நிர்வாணப் படங்களை வெளியிடுவது கற்பழிப்பைவிட மோசமானது! - ஹன்சிகா ஆவேசம்

சென்னை: நடிகைகளின் நிர்வாணப் படங்கள், ஆபாச வீடியோக்களை மோசடியாக உருவாக்கி வெளியிடுவது கற்பழிப்பை விட மோசமானது என்று ஆவேசமாகக் கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா.

சமீபத்தில் ஹன்சிகாவின் குளியல் வீடியோ என்ற பெயரில் வெளியான சில நிமிட ஆபாசப் படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிர்வாணப் படங்களை வெளியிடுவது கற்பழிப்பைவிட மோசமானது! - ஹன்சிகா ஆவேசம்

குளியலறையில் கேமராவை மறைத்து வைத்து, ஹன்சிகா அல்லது அவரைப் போன்ற பெண் குளிப்பதைப் படமாக்கியுள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் படத்திலிருப்பது ஹன்சிகாதான் என நம்பினர். அந்த அளவுக்கு ஹன்சிகாவின் முகம் தெளிவாகத் தெரிந்தது படத்தில்.

இதுகுறித்து ஹன்சிகா தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. போலீசிலும் அவர் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் இப்போது அந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "இந்த மாதிரி வீடியோக்கள் வெளியாவது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் இது. சினிமாவில் நாங்கள் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. 365 நாட்களும் கஷ்டப்பட்டு உழைத்து, மற்றவர்களைச் சந்தோஷமாக வைக்கிறோம்.

ஆனால் எங்களை இழிவுபடுத்துவதற்கு எப்படி மனசு வருகிறது என்று புரியவில்லை. இது, கற்பழிப்பை விட கொடுமையானது. எங்கள் மனதை புண்படுத்துகிறவர்களை கடவுள்தான் தண்டிக்க வேண்டும்," என்றார்.

சரி.. போலீசில் புகார் கொடுத்திருக்கலாமே... ஏன் கொடுக்கவில்லை? என்று கேட்டதற்கு, "அந்த படத்தில் இருப்பது நான் அல்ல. பின்னர் ஏன் புகார் செய்ய வேண்டும்?,'' என்றார்.

இதேபோன்ற பிரச்சினையில் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை த்ரிஷா சிக்கினார். அவர் உடனடியாக சைபர் க்ரைமில் புகார் செய்ததன் பேரில் அவரது குளியல் வீடியோ இணையதளங்களிலிருந்து நீக்கப்பட்டது நினைவிருக்கலாம்.