மலையாளிகளை மட்டுமல்லாமல் தமிழர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் திலகன். பழம்பெறும் நடிகரான திலகன் தமிழிலும் கமல்ஹாசனின் சாணக்கியன், விஜயகாந்த்தின் சத்திரியன் உள்ளிட்ட படங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.
திலகன் மறைவு குறித்து கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
எனக்கு கேரள நடிகர்களுடன் முன்பு இருந்த அளவுக்கு தொடர்பு இல்லாமல் போனாலும் இருதரப்பிலும் அன்பு குறையாமல் இருப்பது என் பாக்கியமே.
கேரளத்தில் நல்ல நடிகர்களுக்கான பஞ்சம் வராத அளவிற்கு சராசரி நடிப்பின் தரம் உயர்ந்து இருக்கிறது. எனினும் திரு.திலகன் போன்றவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அனுபவமும் அபார தன்னபிக்கையும் உள்ளவர்.
சாணக்கியன் படப்பிடிப்பின் போது திரு.ஜிஜோ எனக்கு அவரை அறிமுகப் படுத்தியது "formidable actor" என்றுதான். திலகனைக் கண்டு படித்தவர்கள் நன்றியுடன் கண்ணீர் சிந்துவர்.
கண்டு வியந்தவர் இனி எங்கே என்று மயங்குவர். மயங்கத் தேவையில்லை இனியும் வருவர் நல்ல கலைஞர்கள். ஆனால் இவர் போல் இருக்காது. சாயல் தெரியலாம் ஆனால் அசல் போனது போனதுதான். இத்தனை நாள் எங்களுடன் இருந்ததற்காக நன்றி, யாம் பெற்றதற்காகத் தனி நன்றி தோழரே என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.