தமிழ்ல என்னை ஏன் ஒதுக்கறாங்கன்னே தெரியலயே! - பத்மப்ரியா

Padmapriya Alleges Tamil Directors   

கொச்சி: தமிழ் சினிமாவில் என்னை ஒதுக்குகிறார்கள்.. வாய்ப்பு தருவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் பத்மப்பிரியா.

தொடர்ந்து சர்ச்சைகளின் நாயகியாக திகழ்கிறார் பத்மப்ரியா. கன்னத்தில் அறைந்ததாகக் கூறி, இயக்குநர் சாமியை மன்னிப்புக் கேட்க வைத்தவர், அடுத்து மலையாளத்தில் மேனேஜருக்கு கூடுதல் சம்பளம் கேட்டு பிரச்சினை செய்தார்.

இதனால் நடிகர் நடிகைகள் யாரும் மேனேஜரே வைத்துக் கொள்ளக் கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளது மலையாள சினிமா உலகம்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழ் சினிமா தன்னை ஒதுக்குவதாகக் கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

தமிழில் எனக்கு நீண்ட இடைவெளி விழுந்துள்ளது. படங்களே இல்லை. இயக்குனர்கள் என்னை ஏன் ஒதுக்குகிறார்கள் என்ற காரணமும் தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். நல்ல கதைகள் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். ஏற்கனவே ‘இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம்' படத்தில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளேன்.

இயக்குனர் சாமி அடித்த விவகாரம் மற்றும் மானேஜர் பிரச்சினைகளால் என்னை சர்ச்சைக்குரியவராக பார்ப்பது சரியல்ல. நான் 45 படங்களில் நடித்துள்ளேன்," என்று கூறியுள்ளார்.

ப்ரொபைல் போட்டோ கொடுத்து சான்ஸ் கேட்பது போய், இப்படி பேட்டி கொடுத்து கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் நடிகைகள்!

 

பார்த்திபனின் 'சிவ சிவா' பேச்சுக்கு கண்டனம்... இந்து மக்கள் கட்சி போராட்ட அறிவிப்பு!

Hmk Condemns Actor Parthiban His Slang Against God Shiv

சென்னை: கடவுள் சிவனை, நடிகையுடன் சேர்த்துப் பேசி இந்து மதத்தவர்களின் நம்பிக்கையை இழிவுபடுத்திய நடிகர் பார்த்திபன் உடனடியாக தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.இல்லாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி எச்சரித்துள்ளது.

தில்லுமுல்லு படத்தின் ரீமேக்கில் நடிகர் சிவா, நடிகை இஷா தல்வார் ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட நடிகர்-இயக்குநர் பார்த்திபன் வழக்கம் போல நக்கல் நையாண்டியுடன் பேசினார். அவர் பேசுகையில், சிவாவை விட புதுமுக நாயகி இஷா தல்வார் அழகாக இருக்கிறார். இதுமாதிரி ஒரு கதாநாயகி கிடைத்தால் சிவனே பார்வதியை தள்ளி வைத்து விட்டு ஒரு டூயட் பாடலை பாடி விட்டு வருவார் என்று பேசியிருந்தார்.

இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் பி.ஆர். குமார் என்பவர் இதுதொடர்பாக கூறுகையில்,

நடிகர் பார்த்திபன் பட விழாக்களில் கதாநாயகிகளை கவர்ச்சியாக புகழ்வதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் பேச்சை நடிகைகளின் அம்மா, அப்பா, அண்ணன், தம்பிகள் எந்த அளவு ரசிப்பார்கள் என்பதை உணர்வது இல்லை. அதற்குள் நாங்கள் போகவும் விரும்பவில்லை.

ஆனால் கோடிக்கணக்கான இந்துக்களின் கடவுளான சிவன், நடிகையுடன் டூயட் பாட வருவார் என்று பேசி இருப்பது வரம்பு மீறிய செயல். இந்துக்கள் மனதை பார்த்திபன் புண்புடுத்தி உள்ளார்.

வேறு மதங்களின் கடவுள்கள் பற்றி இதுபோல் அவரால் பேச முடியுமா? பார்த்திபன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டில் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.

ஏம்ப்பா இப்படி வாய் மீறிப் பேசி வம்பை விலை கொடுத்து வாங்குறீங்க...

 

ராஜாவின் இசையை ரசிப்பதைத் தவிர வேறென்ன வேண்டும்?

Endrenrum Raja Ilayaraja Concert In Jaya Tv

ஞாயிறு மதியம் உணவருந்தும் நேரத்தில் ரிலாக்ஸ் ஆக ஏதாவது பார்க்கலாமே என்று டிவியை போட்டதில் உணவின் ருசியை விட சுவையான நிகழ்ச்சியை காண நேரிட்டது. அது ஜெயாடிவியில் ராஜா தனது இசை ராஜாங்கத்தை நடத்திக்கொண்டிருந்தார். நிகழ்ச்சி என்னவோ மறு ஒளிபரப்புதான் என்றாலும் ராஜாவின் பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது அல்லவா. உணவு உண்பதைக் கூட மறந்து இசையில் லயித்து விட்டோம்.

என்றென்றும் அவர் இசைக்கு ராஜா என்பதை நிரூபித்த கச்சேரி இது. இதில் எத்தனையோ சுவாரஸ்யங்கள் இருந்தாலும் ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்காமலேயே பூவே செம்பூவே பாடல் பலமுறை ரசிகர்களுக்குப் போய் சேர்ந்தது. ராஜா ரசிகர்களின் மனக்குவியல்களில் இந்த பாடல் ஒரு முத்து. இரண்டாம் இடையிசை மின் கிதாருடன் துவங்குகையிலேயே ரசிகர்களின் ஆராவாரமும் துவங்குகிறது.

அந்த இடையிசையில் வயலின் குழு சேர்கையில் அந்தப் பரவசம் தரும் இன்பத்தை அத்தனை பேரும் மெய்மறந்து அனுபவித்தனர். ஆனால் இடையிசை முடியும் முன்னரே ஜேசுதாஸ் பாடத்துவங்க, வேலையில் கவனமாக இருந்த நடத்துநர் என்ன செய்வதென புரியாமல் ஜேசுதாஸைப் பார்த்தபடியே இசைக்கோர்வையை தொடர எல்லாம் குளருபடியானது. ஆனாலும் இசைஞர்கள் ஜேசுதாஸை மொத்தமாக கைவிடாமல் அவர் பாடும் வரிகளுக்கேற்ற தாளத்துடன் இணைய, நுழைகிறார் ராஜா. இது என் ஷோ. இப்படியிருக்க கூடாது என ஜேசுதாஸை நிறுத்தினார்.

ஜேசுதாஸ் வாழ்நாளில் இவ்வளவு பேர் முன்னிலையில் தாளத்துக்கு தவறி மீண்டும் துவங்கியது இது எத்தனையாவது முறையாக இருக்க முடியும்? ராஜா என்ன சொல்லி நிறுத்தினாரோ... ரிக்கார்டிங்கென்று ஜேசுதாஸ் மைக்கில் சொல்ல... மறுபடியும்... இங்கு ஜனங்களின் ஆராவாரம். இது ராஜாவுக்கு.தங்களுக்குத் தேவையானதை தெளிவாக தரும் அவர்களுடைய ராஜாவிற்கு ரசிகர்கள் கைத்தட்டலை பரிசாகத் தந்தனர்.

இரண்டாம் முறையும் ஜேசுதாஸ் சொதப்ப, ராஜா இந்த முறை வெறும் கையசைவில் அவரை நிறுத்தி இசைஞர்களுக்கு பாதை காட்டுகிறார். முதல் முறை ஜேசுதாஸைக் காப்பாற்றியவர்களை இந்த முறை ராஜா காப்பாற்றுகிறார். பின்னர் ஜேசுதாஸ் சரியான இடத்தில் சரணத்தைத் துவங்க ராஜாவின் முகத்தில் வரும் அந்த நிம்மதி ஆள்காட்டி விரலுடன் அவர் உதிர்க்கும் அந்த புன்னகையில் தெரிந்தது.

பாடல் என்பது வெறும் மனிதர்களின் குரல் அல்ல அது இசையுடன் கூடிய ஒருவித பிணைப்பு. ராஜாவின் பாடல்களில் அநேக பாடல்களில் நிறைவுப் பகுதி அருமையானதாக இருக்கும்.. இந்த நிகழ்விலும், குற்றவுணர்ச்சியுடன் நின்று கொண்டிருந்த ஜேசுதாஸ் பூவேவேஏஏஏஏ க்குப் பின் எனக்காக இன்னொரு வாட்டி பார்க்கலாமா என கேட்கிறார். ராஜாவுக்கும் அப்பொழுது தான் தோன்றுகிறது பாடல் இன்னும் முடியவில்லையென்று. மக்களுக்கும் தெளிவாக்குகிறார். பாட்டு இன்னும் முடியலை அதுக்குள்ள கை தட்டுறீங்களே என்று கேட்க ரசிகர்களின் ஆராவாரம் மெதுவாக அடங்குகிறது.

முடிவு சரி இல்லாமல் எப்படி? ஜேசுதாஸ் பெரிய ஆளுமை. குற்றவுணர்ச்சியுடன் வீடு செல்ல முடியுமா. திருத்திக்கொள்கிறார்.

நடத்துநர் அடுத்த பாடலுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்க ராஜா தானே இசைஞர்களை வழிநடத்த... பதறியபடியே அவர் புத்தகத்தை வைத்துவிட்டு அதே பாடலுக்கான தன் வேலைக்கு மீண்டும் திரும்ப ராஜாவுக்கு சந்தோஷம். கூட்டத்துக்கு தேவையான ஒன்ஸ்மோர்கள் இப்படியாக போய் சேர்கின்றதே என்கிற உற்சாகத்துடன் ராஜா. இந்த முறை ஜேசுதாஸ் சரியான இடத்தில் சரணத்தைத் துவங்க கூட்டத்தில் பலத்த கைதட்டல். அது இசைக்கு அவர்களின் வரவேற்பு, ஜேசுதாஸ் ராஜா எல்லோருக்குமான வாழ்த்து.

நான் செய்த பாவம் என்னோடு போகும் என ஜேசுதாஸ் தன்னை தானே சொல்லிக் கொண்டு தன் பக்கம் விரலைக் காட்டுவதைப் பார்த்த ராஜா கையெடுத்து ஜேசுதாஸை வணங்குவது கலையைத் தாண்டி மனிதத்துக்கான பாடம். அது தரும் நெகிழ்வு அலாதியானது. புல்லாங்குழலும் அதே அமைதிக்கு எல்லாவற்றையும் திருப்ப... ஜேசுதாஸ் முடிக்கிறார்.

இந்த இசைக்கச்சேரி விருந்தினை உண்டபின்பு மதிய உணவாவது ஒன்றாவது. அதுதான் செவிக்கு பலமான விருந்து கிடைத்து மனதும் வயிறும் முழுதாக நிறைந்து விட்டதே. ராஜா இருக்கும் காலத்தில் இசையை ரசனையுடன் கேட்பதைத் தவிர வேறென்ன வேண்டும் இந்த உலகத்தில்?.

 

சுந்தரபாண்டியனில் ரஜினி ரசிகராக நடிக்கும் சசிகுமார்!

Sasikumar Plays Rajini Fan Sundarapandiyan   

சுந்தர் பாண்டியன் படத்தில் ரஜினியின் தீவிர ரசிகராக நடித்துள்ளார் இயக்குநர் - நடிகர் சசிகுமார்.

தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என அனைத்திலும் வெற்றியை ருசித்தவர் எம் சசிகுமார்.

போராளி படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் சுந்தரபாண்டியன். இதில் அவர் ஹீரோ மட்டுமில்லை, தயாரிப்பாளரும் கூட. இந்தப்படத்தை அவரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய எஸ்ஆர் பிரபாகரன் இயக்குகிறார்.

படத்தின் செய்தியாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. அதற்கு முன் படத்தின் பாடல்களை திரையிட்டுக் காட்டினர். ஒரு பாடலில் ரஜினியின் ரசிகராக அவரைக் காட்டியிருந்தனர். அதில் ரஜினி ஸ்டைலில் டான்ஸ் போட்டிருப்பார் சசிகுமார்.

பின்னர் கேள்வி பதில் நேரத்தில், " இந்தப் படத்தில் ரஜினி ரசிகராக நடித்திருக்கிறீர்களா?" என்று கேள்வியை வீசினர்.

அதற்கு பதிலளித்த சசிகுமார், "ஆமாம்... நான் ரஜினியின் ரசிகராக இந்தப் படத்தில் வருகிறேன். பா‌டல்‌ கா‌ட்‌சி‌யிலும் அது தெரியும். இது இயக்‌குநர்‌ முடி‌வு‌ செ‌ய்‌து டா‌ன்‌ஸ்‌ மா‌ஸ்‌டர்‌ சொ‌ல்‌லி‌க்‌ கொ‌டுத்‌து நடி‌த்‌தது. வேண்டுமென்று திணிக்கப்பட்டதில்லை. நிஜத்திலும் நான் ரஜினி மற்றும் கமலின் ரசிகன்தான்!," என்றார்.

தாடியை விடமாட்டேன்னு பிடிவாதம் பிடிப்பது ஏன்?

தா‌டி‌ எடுத்‌து நடி‌க்‌கனும்‌னு எனக்கும் ஆசை‌தா‌ன்‌. . ஆனா அது நான் இயக்கி நடிக்கும் படத்தில் நிறைவேறும். சுப்‌பி‌ரமணி‌யபு‌ரம்‌ படத்‌துல தா‌டி‌யோ‌ட நடி‌ச்‌சே‌ன். நாடோடிகள், போராளி, மாஸ்டர்ஸ், இப்போ சுந்தர பாண்டியன் வரைக்கும் என் கேரக்டர் தாடியோட இருக்கலாம்னு முடிவு பண்ணோம். ஆனா அடுத்து நான் இயக்கி நடிக்கும் படத்தில் தாடி இருக்காது!!

 

செப்டம்பர், அக்டோபரில் ரீலீஸாகும் மெகா சினிமாக்கள்... ஒரு பார்வை!

New Releases Tamil Cinema September October    | விஸ்வரூபம்   | சுந்தர் பாண்டியன்   | தாண்டவம்   | பரதேசி  

சென்னை: பொதுவாக தீபாவளிக்கு வெளியாகும் மெகா படங்கள் பற்றித்தான் முன்னோட்டம் எழுதுவது வழக்கம். ஆனால் தமிழ் சினிமாவில் எல்லாமே மாறி வருகிறது. காரணம்.. தீபாவளிக்கு வெளியாகப் போவது ஒரு படமோ.. இரண்டு படங்களோ என்றாகிவிட்டது நிலை.

ஒரு புதிய படம்... அதுவும் முக்கிய நடிகரின் பெரிய படம் ரிலீசாகிறதென்றால், அது கிட்டத்தட்ட தமிழகத்தின் 500க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாவது வழக்கமாகிவிட்டது. இதனால் வேறு படங்களுக்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்காத நிலை... எனவே, கிடைக்கிற இடைவெளியில் படங்களை சோலோவாக அதிக அரங்குகளில் வெளியிட்டு வசூலை அள்ளுவதுதான் இன்றைய ட்ரெண்ட்!

வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கமல் உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகவிருக்கின்றன.

இவற்றில் முக்கியமான சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்...

மாற்றான்

சூர்யாவின் இரட்டை வேட நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட படம். ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்ற கான்செப்டை ஹாலிவுட் படங்கள் சில சொல்லியிருந்தாலும், தமிழில் எப்படித்தான் எடுத்திருப்பார்கள் என்ற ஆர்வக் கேள்வி ரசிகர்கள் அனைவர் மனதிலுமே உண்டு. முற்றிலும் முதல் நிலைக் கலைஞர்கள், முதல் தர இயக்குநர் என எல்லா வகையில் எதிர்ப்பார்ப்பைக் கிளறும் படம். செப்டம்பர் - அக்டோபர் மாத ஷெட்யூலில் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள ஒரே படம் மாற்றான்தான்! அக்டோபர் 12-ம் தேதி வெளியாகிறது.. தியேட்டர்கள் விவரம் விரைவில்.

விஸ்வரூபம்

நட்சத்திர முக்கியத்துவம் என்ற வகையில் பார்த்தால், உலக நாயகன் கமல்ஹாஸனின் விஸ்வரூபம்தான் முதலிடத்தில் நிற்கிறது. அக்டோபரில் வெளியாகவிருக்கும் படம் இது. மாற்றான் 12-ம் தேதி ரிலீஸ் என்பதால் ஓரிரு வாரங்கள் தள்ளிப் போகக்கூடும். பெரும் வியாபாரம், உலகளாவிய ரிலீஸ் என்ற வகையில், தமிழ் சினிமாவின் முக்கிய படமாகக் கருதப்படுகிறது.

சுந்தர் பாண்டியன்

இயக்குனர் சசிகுமார் தயாரிப்பில், அவரே நாயகனாக நடிக்கு அவரிடம் இணை இயக்கநராக இருந்த எஸ்ஆர் பிரபாகரன் இயக்கும் படம் ‘சுந்தர பாண்டியன்'. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் சசிகுமாருக்கு இப்படமும் வெற்றிப்படமாக அமையும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

இந்தப் படம் செப்டம்பர் 14-ல் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. தேதி மாறவும் வாய்ப்புள்ளது.

தாண்டவம்

விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்ஸன் நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளிவரும் படம் தாண்டவம். கிட்டத்தட்ட லண்டனிலேயே முக்கால்வாசிப் படத்தை முடித்திருக்கிறார்கள். இயக்குநர் விஜய்க்கு இந்தப் படம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தெய்வத்திருமகள் வெற்றியை அவர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அடுத்து விஜய் படத்தை இயக்கவிருப்பதால் ரசிகர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியாக வேண்டும். படத்தைப் பார்த்தவர்கள் நிச்சய வெற்றி என்கிறார்கள். செப்டம்பர் இறுதியில் வெளியாகும் படம் இது.

பரதேசி

பாலா இயக்கத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் படம் பரதேசி. பொதுவாக பாலாவின் படங்கள் எப்போது தொடங்கி, எப்போது முடிந்து, எப்போது திரையைத் தொடும் என்பதை முன்கூட்டி கணிப்பது சிரமம். ஆனால் பரதேசி அவற்றையெல்லாம் பொய்யாக்கிவிட்டது.

படத்தின் கடைசி காட்சி எடுத்த மறுநாளே எப்போது ரிலீஸ் என்பதை அறிவித்திருக்கிறார்கள். இப்போதைக்கு தயாரிப்பாளரும் பாலாதான். மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடித்துள்ளனர். அக்டோபர்19-ல் படம் வெளியாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் லண்டனில் இசை வெளியீட்டை வைத்திருக்கிறார்கள்.

இவற்றைத் தவிர அமீரின் ஆதி பகவன், விஜய் நடிக்கும் துப்பாக்கி, கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன், செல்வராகவனின் இரண்டாம் உலகம், பிரபு சாலமனின் கும்கி போன்ற படங்களும் உள்ளன. ஆனால் இவை அக்டோபருக்குப் பிறகே ரிலீசாகும் என்று தெரிகிறது. இடையில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சிறு படங்கள் வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது.

சிவாஜி 3 டி

இவற்றை விட மிக முக்கியமான படமாக இப்போது முன் நிற்பது சூப்பர் ஸ்டாரின் அதிரடிப் படமான சிவாஜி. ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வசூலை அள்ளிய இந்தப் படம் பக்கா 3 டியில் தயாராகி, புதிய படங்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பதுதான் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை மற்ற நடிகர்களின் புதிய படங்களுக்கு பாதிப்பில்லாமல் முன்கூட்டியே வெளியிட்டுவிடுங்கள் என ரஜினியே ஏவிஎம் நிறுவனத்தினரைக் கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

 

ஒரு மாதம் ஒன்றாக வசித்த இயக்குநர் திடீரென ஓடியதால் சுஜிபாலா தற்கொலை முயற்சி?

Why Sujibala Attempts Suicide   

சென்னை: நிச்சயம் செய்த பிறகு தன்னுடன் ஒருமாதம் ஒன்றாக வசித்த இயக்குநர் ரவிக்குமார், திருமணத்துக்கு மறுத்து திடீரென்று ஓடிவிட்டதால்தான் சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் கசிந்துள்ளது.

அய்யாவழி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சுஜிபாலா. கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, கிச்சா வயது 16, ரஜினியின் சந்திரமுகி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது சொந்த ஊர் நாகர்கோவில் வைத்தியநாதபுரம். தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். படத்தை இயக்கி நடிக்கும் ரவிக்குமார் சுஜிபாலாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.

சுஜிபாலாவின் பெற்றோரை ரவிக்குமார் சந்தித்து திருமணத்துக்கு சம்மதம் பெற்றார். அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 5-ந்தேதி சுஜிபாலாவுக்கும், ரவிக்குமாருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஈத்தாமொழி அருகே உள்ள கொய்யன் விளையில் நடந்தது. நடிகைகள் ஷகீலா, கும்தாஜ், பாபி லோனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதில் பங்கேற்றனர்.

அப்போது திருமணத்தை திருச்செந்தூர் கோவிலில் இன்று நடத்த முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் சுஜிபாலா நேற்று முன்தினம் திடீரென அதிக தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

வீட்டில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதலில் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகவே சுஜிபாலா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர் இதை மறுத்தனர். காய்ச்சல் காரணமாகத்தான் சுஜிபாலா சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறினர்.

ஆனால் இப்போது பலவித தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

சுஜிபாலாவை மணக்க இயக்குனர் ரவிக்குமார் திடீரென மறுத்ததால் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியுள்ளது. சுஜிபாலா சம்மதத்துடனேயே நிச்சயதார்த்தம் நடந்ததாம். அதன் பிறகு கடந்த ஒரு மாதமாக இருவரும் கணவன் மனைவியாகவே வசித்தார்களாம். ஆனால் இப்போது ரவிக்குமார் மனம் மாறி திருமணத்துக்கு மறுப்பு சொன்னதால் தற்கொலைக்கு முயன்றார் என்கிறார்கள்.

நிச்சயதார்த்ததுக்கு முன்பே சுஜிபாலாவுக்கும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி இயக்குநராகப் பணியாற்றும் ஒருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. இது தெரிந்ததால் இயக்குநர் திருமணத்துக்கு மறுத்து ஓடிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

சுஜிபாலா தற்கொலை முயற்சி காரணமாக திருச்செந்தூரில் நடக்க இருந்த திருமணம் நின்றது. ரவிக்குமாரையும். சுஜிபாலாவை உடல்நலம் விசாரிக்கவும் அவர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்குது.

 

சல்மான் கானுக்கு ரூ.100 கோடி சம்பளம் தர தயாராகும் பாலிவுட்

Salman Khan Offered Rs 100 Cr A Movie

மும்பை: தொடர் வெற்றிப்படங்கள் கொடுத்து வரும் சல்மான் கானுக்கு ரூ.100 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளாராம் பாலிவுட் தயாரிப்பாளர் ரமேஷ் தாராணி. மேலும் சல்மானுக்கு ரூ.100 கோடி சம்பளம் கொடுக்க தயாராக உள்ளார் இயக்குனர் சுபாஷ் கை.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் காட்டில் பண மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. சல்மான் கானின் தபாங்(ரூ.147 கோடி), ரெடி(ரூ.122 கோடி) மற்றும் பாடிகார்ட் (ரூ.148 கோடி) ஆகிய படங்கள் ரம்ஜான் பண்டிகையன்று ரிலீஸாகி ரூ.100 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் அவர் முன்னாள் காதலி கத்ரீனா கைபுடன் சேர்ந்து நடித்த ஏக் தா டைகர் படம் சுதந்திர தினதன்று ரிலீஸனது. ரிலீஸான 5 நாட்களிலேயே ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.

இந்நிலையில் ரிலீஸான 2 வாரத்திற்குள் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் ஆமீர் கானின் 3 இடியட்ஸ் படத்திற்கு அடுத்தபடியாக அதிகம் வசூல் செய்துள்ள படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

அவரது இந்த அபார வெற்றியைப் பார்த்த பாலிவுட் தயாரிப்பாளர் ரமேஷ் தாராணி தனது புதிய படத்தில் நடிக்க சல்மானுக்கு ரூ.100 கோடி சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இது உண்மை என்றால் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் சல்மான் கான் தான்.

தனது திரைப்பட பள்ளியான விஸ்லிங் உட்ஸ் இன்டர்நேஷனலை கவனிக்கும் பொருட்டு டைரக்ஷனில் இருந்து ஒதுங்கி இருந்த சுபாஷ் கை தற்போது மீண்டும் இயக்கத்தில் குதித்துவிட்டார். அவர் சல்மான் கானை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்கிறார். அந்த படத்திற்காக அவர் சல்மானுக்கு ரூ.100 கோடி சம்பளம் கொடுக்க தயாராக உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் மீண்டும் படங்கள் எடுக்கவிருக்கிறேன். இரண்டு படங்கள் எடுக்கிறேன். ஒரு படத்திற்கு சல்மான் கானை ஒப்பந்தம் செய்துள்ளேன். அந்த படம் அடுத்த ஆண்டு துவங்கும். மற்றொரு படம் இந்த ஆண்டு துவங்கும். சல்மான் கான் ரூ.100 கோடி சம்பளம் கேட்டால் அதை சந்தோஷமாகத் தருவேன். எங்கள் படம் ரூ.200 கோடி வசூல் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

வாண்டட் படத்திற்கு பிறகு மக்கள் சல்மானை ஆக்ஷன் ஹீரோவாகப் பார்க்கின்றனர். அப்படி இருக்கையில் அவரை ரொமான்டிக் படமான யுவராஜில் நடிக்க வைத்தது எங்கள் தவறு தான். தற்போது எடுக்கும் படம் ஆக்ஷன் கலந்த மசாலா படமாக இருக்கும் என்றார்.

கடந்த 2008ம் ஆண்டில் சல்மான், கத்ரினாவை வைத்து சுபாஷ் கை எடுத்த யுவராஜ் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாலிவுட்டின் 'தந்தை' ஏ.கே.ஹங்கல் உடல் தகனம்...ஒரு 'மகனும்' வரவில்லை!

A K Hangal Cremation Bollywood Biggies Miss Funeral

மும்பை: பாலிவுட் நட்சத்திரங்களுக்கு தந்தையாக, தாத்தாவாக, மாமனாராக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்று, நேற்று மரணமடைந்த பழம்பெரும் நடிகர் ஏ.கே.ஹங்கலின் உடல் தகனம் செய்யப்பட்டது. ஆனால் இறுதிச் சடங்கில் பாலிவுட்டைச் சேர்ந்த முன்னணிக் கலைஞர்கள் யாருமே இதில் கலந்து கொள்ளவில்லை.

அந்தக் காலத்து சூப்பர் ஸ்டார் நடிகர்கள், நடிகைகளுக்கு தாத்தாவாக, அப்பாவாக, மாமனாராக நடித்துப் புகழ் பெற்றவர் ஹங்கல். தனது இயல்பான, எதார்த்தமான, உருக்கமான நடிப்புக்காக பேசப்பட்டவர். முன்னணி நடிகர்களை விடவும் பிசியாக இருந்தவர், பிரபலமாக திகழ்ந்தவர். நேற்று ஹங்கல் மரணமடைந்தார்.அவருக்கு் வயது 98. அவரது இறுதிச் சடங்குகள் மும்பையில் நடந்தன.

ஹங்கலின் மகன் விஜய் தனது தந்தையின் உடலுக்கு தீமூட்டினார். இறுதிச் சடங்கில் பாலிவுட்டைச் சேர்ந்த சாதாரண நடிகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மாறாக முன்னணி நடிகர், நடிகையர் யாருமே கலந்து கொள்ளவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பிரபலப் பாடகியும், நடிகையுமான இலா அருண் கூறுகையில், அத்தனை சூப்பர் ஸ்டார்களுடனும் அவர் நடித்துள்ளார். ஆனால் அதில் ஒருவர் கூட இறுதிச்சடங்குக்கு வராதது வருத்தம் தருகிறது என்றார். இறுதிச் சடங்குக்கு வந்திருந்த ஒரு சிலரில் இலாவும் ஒருவர்.

ஹங்கலுக்கு மகளாக நடித்தவர்களான ஜெயா பச்சன், ஹேமமாலினி, ரேகா, பேரனாக நடித்த சன்னி தியோல் என ஒருவருமே வராமல் போனது பாலிவுட்டில் முனுமுனுப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவைப் பொறுத்தவதரை ஓடும் குதிரைக்குத்தான் மதிப்பு. ஆனால் வெற்றிகரமாக ஓடியிருந்தாலும், ஓய்வு பெற்று விட்டால் அவ்வளவுதான்...!

 

நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி

Actress Sujibala Suicide Attempt

நாகர்கோவில்: நடிகை சுஜிபாலா அதிக அளவு தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

இயக்குநர் தங்கபர்ச்சானின் பள்ளிக்கூட்டம், இயக்குநர் ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுஜிபாலா. தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை ரவிக்குமார் இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். சுஜிபாலாவை ரவிக்குமார் திருமணம் செய்ய விரும்பி அவரது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜூலை 5-ந் தேதியன்று ரவிக்குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் திடீரென சுஜிபாலா அதிக அளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமணத்துக்கு விருப்பம் இல்லாதநிலையில்தான் சுஜிபாலா தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது உடல்நிலை தேறியுள்ள சுஜிபாலா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.