தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நாளை கேயார் - எஸ் ஏ சி அணிகள் பலப்பரீட்சை: பலத்த பாதுகாப்பு


சென்னை: நாளை நடைபெறும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பிலிம்சேம்பரில் நாளை காலை இந்த தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், கேயார், டாக்டர் சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

எஸ்.ஏ. சந்திரசேகரன் அணியில் கதிரேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் துணை தலைவர் பதவிக்கும் கே.ஆர்.ஜி., தேனப்பன் ஆகியோர் செயலாளர் பதவிக்கும், கலைப்புலி தாணு பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

கோவைத்தம்பி, எடிட்டர் மோகன், பட்டியல் சேகர், வி. சேகர், அமுதா துரைராஜ், ராதாரவி, பவித்ரன், ஆர்.கே. செல்வமணி, மாதேஷ், சங்கிலிமுருகன், கருணாஸ், பி.டி. செல்வக்குமார் உள்ளிட்ட 21 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

கேயார் அணியில் துணை தலைவர் பதவிக்கு சத்யஜோதி தியாகராஜன், டி. சிவா ஆகியோரும் செயலாளர் பதவிக்கு முரளிதரன், ஏ.எம். ரத்னம் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு அன்பாலயா பிரபாகரனும் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அழகன் தமிழ்மணி, சித்ரா லட்சுமணன், கபார், எஸ்.எஸ். துரைராஜ், கமீலா நாசர், எச்.முரளி, கெட்டப் ராஜேந்திரன், ருக்மாங்கதன், விஜயமுரளி உள்ளிட்ட 21 பேர் போட்டியிடுகின்றனர்.

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஏற்கனவே நடந்த கூட்டங்களில் அடிதடி மோதல் ஏற்பட்டதால் தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்த முறை தேர்தலில் போட்டியிடும் இரு அணிகளுமே அதிமுக ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வைரஸ் காய்ச்சலால் மோகன்லால் அவதி... ப்ரியதர்ஷன் படப்பிடிப்பு ரத்து!


பிரபல நடிகர் மோகன்லால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அவர் நடித்துவந்த அரபியும் ஒட்டகமும் பி மாதவ நாயரும் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.ய

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் மோகன்லால் கலந்து கொண்டு நடித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் அவ்வப்போது சிகிச்சை பெற்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதற்கிடையே நேற்று கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட மோகன்லாலுக்கு தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து டாக்டர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரவழைக்கப்பட்டனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் மோகன்லாலுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும், சில நாட்கள் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

இதையடுத்து மோகன்லால் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் படப்பிடிப்பும் வருகிற 15-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடிகை குஷ்புவின் செல்போன்கள் திருட்டு!


நடிகை குஷ்புவின் செல்போன்களை யாரோ அபேஸ் செய்து விட்டனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளார் குஷ்பு.

ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவின்யூவில் நேற்று மாலை பொருட்கள் வாங்கச் சென்றார் குஷ்பு. அங்குள்ள ஒரு கடை மேஜையில் தனது 2 செல்போனை வைத்து விட்டு பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது மேஜையில் வைத்திருந்த 2 செல்போனையும் காணவில்லையாம். திருட்டுப் போன செல்போன்கள் விலை உயர்ந்த பிளாக்பெர்ரி, ஐ போன் வகையை சேர்ந்தவை.

இது குறித்து குஷ்பு மேலாளர் அன்பு அண்ணா சாலை போலீசில் புகார் செய்துள்ளார்.

குஷ்பு அந்தக் கடைக்கு வந்த போது சில வடமாநில இளைஞர்கள் அங்கு நின்று கொண்டிருந்தார்களாம். செல்போன் மாயமான நேரத்தில் அவர்களும் அங்கிருந்து காணாமல் போய்விட்டார்களாம். எனவே இவர்கள்தான் செல்போன்களை அபேஸ் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
 

ரா ஒன் இசை வெளியீடு... பங்கேற்கிறார் சூப்பர் ஸ்டார்?


உடல் நிலை பாதிக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள ரா ஒன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் திங்கள்கிழமை காலை சென்னையில் நடக்கிறது.

இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆனால் ரஜினி வருவது முற்றிலும் எதிர்ப்பார்க்காத ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்க மறுக்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.

இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர் ஷாரூக்கான் நாளை சென்னை வருகிறார். முதல் வேலையாக, சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது போயஸ் இல்லத்தில் சந்திக்கும் ஷாரூக், பின்னர் ஐபிஎல் போட்டியைக் காணச் செல்கிறார்.

நாளை மறுநாள் சத்யம் திரையரங்கில் இசை வெளியீட்டு விழா நடக்கிறது.

வரும் தீபாவளிக்கு இந்தி மற்றும் தமிழ் (டப்பிங்) மொழிகளில் வெளியாகிறது ரா ஒன். ரஜினி நடித்திருப்பதால் அந்தக் காட்சியைக் காண ரஜினி ரசிகர்களும் பொதுவான ரசிகர்களும் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்தப் படத்தை அபிராமி ராமநாதன் பெரும் விலைக்கு வாங்கியுள்ளார். 20-க்கும் அதிகமாக முதல்நிலை அரங்குகளில் ரா ஒன் வெளியாக உள்ளது.
 

ரஜினியின் புதிய புகைப்படம்... மோகன் பாபு மகள் சந்தித்த போது எடுத்தது!


சூப்பர் ஸ்டார் ரஜினியை, அவரது நண்பரும் நடிகருமான மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு சமீபத்தில் சந்தித்தது நினைவிருக்கலாம்.

இந்தச் சந்திப்பின்போது ரஜினியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பின்னர் வெளியிடுவதாக லட்சுமி மஞ்சு தெரிவித்திருந்தார். அந்தப் படம் இப்போது வெளியாகியுள்ளது.

உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சையில் குணமடைந்த பிறகு சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார் ரஜினி.

ரஜினி முன்பு போல் சுறுசுறுப்பாக இல்லை என்றும் ராணா படத்தை நிறுத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாயின. ராணா வரலாற்று படம் என்பதால் கத்திச் சண்டை போடுவது, குதிரையேற்றம் போன்ற காட்சிகளில் ரஜினியால் நடிக்க இயலாது என்றும் கூறப்பட்டது. அண்ணாமலை, படையப்பா மாதிரியான கதையை தயார் செய்யும்படி ரஜினி அறிவுறுத்தி இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இதனை மறுத்தார்.

'ராணா' படம் நிறுத்தப்படவில்லை என்றும் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் அவர் கூறினார். ரஜினி வீட்டில் ஓய்வு எடுத்த பிறகு அவரது அதிகாரப்பூர்வ படம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனவே அவர் எப்படி இருக்கிறார் என்று அறிய முடியாமல் இது போன்ற சர்ச்சையான கருத்துகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

தற்போது முதல் தடவையாக பூரண குணமடைந்த ரஜினியின் அதிகாரபூர்வ படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை லட்சுமி மஞ்சு தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு தனது தசரா பரிசு எனக் கூறி வெளியிட்டுள்ளார் லட்சுமி!
 

நாளை சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: பாத்திமா பாபு, ஆர்த்தி உள்ளிட்டோர் போட்டி


சென்னை: சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நாளை (9-ந்தேதி) நடக்கிறது. விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர். கல்யாண மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.

அனைத்து டி.வி. நடிகர், நடிகைகளும் இதில் கலந்து கொண்டு ஓட்டு போடுகின்றனர்.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பானுபிரகாஷ், சிவசீனிவாசன், ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பானுபிரகாஷ் அணியில் துணை தலைவர் பதவிக்கு அபிஷேக், பாத்திமாபாபு, ஆகியோரும் பொதுச்செயலாளர் பதவிக்கு பூவிலங்கு மோகனும், பொருளாளர் பதவிக்கு ஸ்ரீதரும் இணை செயலாளர் பதவிக்கு ஆர்த்தி, கமலேஷ், விஸ்வநாத், டிங்கு ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

இதே அணியில் பிரேம், மேஜர் கவுதம் சாக்ஷி, சிவா, விஜய் ஆதிராஜ், பிரியதர்ஷினி, வெங்கட், மீனாகுமாரி, சங்கீதா, சாய்ராம், ஆதித்யா, சுபா கணேஷ், பாபு ஆயோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நிற்கின்றனர்.

ராஜேந்திரன் அணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராஜ்காந்த், துணை தலைவர் பதவிக்கு மனோபாலா, விஜய்பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர். சிவ சீனிவாசன், அணியில் பொதுச் செயலாளர் பதவிக்கு பரத் கல்யாண் நிற்கிறார்.
 

பாட்டெழுத சென்றபோது படகு கவிழ்ந்து கடலில் விழுந்த சினேகன்!


மலேசியா தீவுக்கருகில் பாட்டெழுத படகில் சென்றபோது கடலில் விழுந்தார் கவிஞர் சினேகன். நீச்சல் தெரிந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

பிரபல சினிமா பாடலாசிரியர் சினேகன். 'உயர்திரு 420' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஆனாலும் பாட்டெழுதுவதைத் தொடர்கிறார். இப்போது ரணம் என்ற படத்துக்கு பாடல் எழுதுகிறார் சினேகன். இப்படத்தின் பாடலை உருவாக்க இசையமைப்பாளர் மரியா மனோகர், இயக்குனர் விஜய் சேகரன், ஆகியோருடன் சினேகன் மலேசியா அருகில் உள்ள லங்காவி தீவுக்கு சென்றார்.

அங்கு படகில் பயணம் செய்தபோது திடீரென்று படகு கவிழ்ந்தது. சினேகன் கடலில் மூழ்கி தத்தளித்தார். நீச்சல் தெரிந்ததால் உயிர் தப்பினார். படகில் பயணம் செய்து மூழ்கிய இதர பயணிகள் சிலரையும் சினேகன் காப்பாற்றினார். தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று பயணிகளை மீட்டனர்.
 

விஜய் - சூர்யா போன்ற பெரிய நடிகர்களுடன் நடிக்கணும்! - அனன்யா


முதல் படமான நாடோடிகள் வெற்றிபெற்றபோது கூட அனன்யாவுக்கு இவ்வளவு வாய்ப்புகள் வந்ததில்லை.

எங்கேயும் எப்போதும் படம் அனன்யாவுக்கு புதிய உலகையே திறந்துவிட்டுள்ளது. நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன.

ஆனால் மிக நிதானமாகவும், தேர்ந்தெடுத்தும் கதைகளை ஒப்புக் கொள்கிறாராம் அவர்.

தனது அடுத்த படங்கள், திட்டங்கள் குறித்து அவர் கூறுகையில், "எங்கேயும் எப்போதும் படம் பெரிய ஹிட்டானது மகிழ்ச்சி அளிக்கிறது. வருகிற வாய்ப்புகள் அனைத்தையும் ஒப்புக் கொள்வதில்லை.

மலையாளத்தில் நான்கு படங்கள் கைவசம் உள்ளன. ஒரு தமிழ் படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறேன். விஜய், அஜித், சூர்யா போன்றோருடன் நடிக்க ஆர்வம் உள்ளது. அவர்களின் படங்களுக்கு முன்னுரிமை தருவேன்," என்றார்.

ஓடு மீன் ஓட... என்பார்களே, அதானா இது!
 

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு - ஜெ-விடம் நேரில் தெரிவித்த எஸ்ஏசி


சென்னை: உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஜெயலலிதாவை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் சந்தித்து தெரிவித்தார்.

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று பிற்பகல் திரைப்பட இயக்குனரும், விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் சந்தித்து, நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலில், அ.தி.மு.க.விற்கு, 'விஜய் மக்கள் இயக்கம்' முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

அதற்கு, கழகப் பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார், என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்றத்தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்காக தேர்தல் வேலை பார்த்தது. ஆனால் கடைசி வரை நடிகர் விஜய் நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை.

அதிமுக ஜெயித்ததும், நாம் விரும்பியது நடந்தது என்று அறிக்கை மட்டும் அளித்தார்.