தூரத்திலிருந்து துயரப் பூக்களைத் தூவுகிறேன் - கவிஞர் வைரமுத்து அஞ்சலி

தூரத்திலிருந்து துயரப் பூக்களைத் தூவுகிறேன் - கவிஞர் வைரமுத்து அஞ்சலி

போய்வாருங்கள் நண்பரே.... என் துயரப்பூக்களைத் தூரத்திலிருந்தே தூவுகிறேன், என மறைந்த இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து.

ஒரு தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்து சென்றுள்ள கவிஞர் வைரமுத்து, ராம நாராயணன் மறைவு செய்தி குறித்து தகவல் அறிந்தவுடன், அங்கிருந்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

இயக்குநர் ராம நாராயணன் மறைவு இன்று என் பகல் மீது கறுப்பு வண்ணம் பூசிவிட்டது. கலங்கித்தான் போனேன். என் பேச்சுத்துணை ஒன்று போய்விட்டது. திரை உலகின் ஒரு சில உண்மை விளம்பிகளுள் ஒருவர் மறைந்துபோனார். நூறு படங்களுக்கு மேல் இயக்கி சில ஆயிரம் குடும்பங்களுக்குத் தொழில் தந்த ஒரு தயாரிப்பாளரை இழந்துவிட்டது திரை உலகம்.

வாழ்வின் இறுதி நாட்களில் நாள்தோறும் என்னோடு பேசினார். எல்லோருக்கும் நல்ல பிள்ளையாய்த் திகழவேண்டும் என்ற மோசமான முடிவால் அவர் அடைந்த துன்பங்களை நான் அறிவேன். ஆனால் பிறரைப் பழிக்காத பேராண்மை அவரிடம் நிறைந்திருந்தது.

துயரப்பூக்களைத் தூவுகிறேன்

என்னை ஏவி.எம்.மில் அறிமுகம் செய்தவர் அவர்தான். என்னை ஒரு பாடல் காட்சியில் வற்புறுத்தி நடிக்க வைத்ததும் அவர்தான். பாட்டுவரிகளின் நுட்பம் கூறும் செப்பம் அவருக்கு வாய்த்திருந்தது.

கண்ணுக்குத் தெரியாமல் பலபேருக்கு உதவி செய்திருக்கிறார். ஒரு கொடையாளன் போய்விட்டான் என்று குமுறுகிறது நெஞ்சு. அவர் உடல் மீது மலர் தூவ முடியாமல் கடல் தாண்டி நானிருக்கிறேன். என் துக்கம் சுமந்து என் பிள்ளைகள் வந்து அஞ்சலி செலுத்துவார்கள்.

போய்வாருங்கள் நண்பரே.... என் துயரப்பூக்களைத் தூரத்திலிருந்தே தூவுகிறேன். உங்களை என்றும் மறக்காதவர்களின் சிறு கூட்டத்தில் ஒருவனாய் நானுமிருப்பேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

சூறையாடல் - விமர்சனம்

Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: ஸ்ரீபாலாஜி, காயத்ரி, லீமா, ஜெயன், ஜாக் ஜெகன்

ஒளிப்பதிவு: அகிலேஷ்

இசை: மிதுனேஸ்வர்

தயாரிப்பு: திரிலோக் புரொடக்ஷன்ஸ்

இயக்கம்: தாமரைக் கண்ணன்

சினிமாவுக்கே உரிய ஒப்பனைகள், பிரமாண்டங்கள், நாடகத்தனங்கள் ஏதுமின்றி வந்திருக்கும் படம் சூறையாடல். ஒரு கிராமத்துக்குள் நுழைந்து, அந்த வாழ்க்கையை நேரில் பார்த்த மாதிரி ஒரு உணர்வு.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவார கிராமம். தாயைக் கொன்ற தகப்பனைப் பிரிந்து தங்கை லீமாடன் தனி வீட்டுக்குப் போய்விடுகிறார் ஸ்ரீபாலாஜி. தனியொருவனாகவே தன் தங்கைக்கு அனைத்தையும் செய்கிறார். தங்கை வாழ்வே தன் வாழ்க்கை என வாழ்பவர், தங்கை பருவமடைந்ததும் தன் நண்பர்களைக் கூட அருகில் சேர்க்காமல் பார்த்துக் கொள்கிறார்.

சூறையாடல் - விமர்சனம்

வில்லன் மருது ஒரு பெண்ணை கெடுத்துக் கொல்வதை நேரில் பார்க்கும் பாலாஜி அவனை போலீசில் சிக்க வைக்கிறார். சிறையிலிருந்து வந்ததும் பாலாஜியைப் பழிவாங்க தருணம் பார்க்கிறான் வில்லன்.

ஒரு முறை வில்லனிடம் சிக்கிய தங்கையை பாலாஜி காப்பாற்ற, அப்போது மயங்கி விழுகிறாள். உடனே மருத்துவமனையில் சேர்க்க, தங்கை கர்ப்பமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அதிர்ந்து போகும் பாலாஜி, இதைப் பற்றி தங்கையுடன் பேசவும் கூசுகிறான். தங்கை மீது ஆத்திரம், யார் காரணமாக இருக்கக் கூடும் என்ற பதைப்புடன் தேடல், நண்பனாக இருக்குமோ என்ற சந்தேகம்... இப்படி கொடுமையான மனநிலையுடன் நாட்களைக் கடத்தும் பாலாஜி, கடைசியில் தங்கையைக் கொன்று, தானும் சாக முடிவெடுக்கிறான்.

இந்த முடிவை அவன் செயல்படுத்தினானா என்பதுதான் மீதிக் கதை.

சூறையாடல் - விமர்சனம்

ஒரு கிராமத்தில் நிகழ்ந்த நிஜக் கதையை கண்முன் பார்ப்பது போல, இயல்பாக, அதே சமயம் கொஞ்சம் முரட்டுத்தனமான திரைக்கதை - காட்சி அமைப்பு.

ஹீரோவாக நடித்திருக்கும் புதுமுகம் ஸ்ரீபாலாஜிக்கு நடிப்பு நன்றாகவே வருகிறது. குறிப்பாக தங்கையின் கர்ப்பத்தை நினைந்து குமையும் காட்சிகள். அந்த இறுதிக் காட்சி.

தங்கையாக வரும் லீமா, பாலாஜியின் காதலியாக வரும் காயத்ரி இருவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக லீமா. அண்ணன் எதற்கு மலைக்கு கூட்டிச் செல்கிறான் என்ற உண்மை புரியாமல், குதூகலத்துடன் அந்த சின்னப் பெண் நடந்து போகும் காட்சியில் மனம் பதைக்கிறது.

நாயகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள், தங்கைக்கு காதல் கடிதம் கொடுக்கும் அந்தப் பையன் என எல்லோருமே அந்த கிராமத்தின் மனிதர்களாகவே தெரிகிறார்கள்.

சூறையாடல் - விமர்சனம்

ஆத்திரம், எதையும் யோசிக்காமல் கை வைக்கும் ஹீரோவின் முன் கோபம் ஒரு சின்னப் பெண்ணின் வாழ்க்கையை எப்படி கிழித்துப் போடுகிறது என்பதை இயல்பாகக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. அடப்பாவி, குறைந்தபட்சம் வேறு மருத்துவமனையிலாவது காட்டியிருக்கலாமே என பார்வையாளர்களைக் கேட்க வைக்கிறது.

இன்னும் இப்படியெல்லாம் கிராமங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை உணர வைக்கின்றன பல காட்சிகள்.

சூறையாடல் - விமர்சனம்

அகிலேஷின் ஒளிப்பதிவில் அழகைவிட, கிராமத்தின் எளிமையும், ஏழ்மையும் மேலோங்கித் தெரிகின்றன. மிதுனேஸ்வரின் இசை உறுத்தாமல் கடந்து போகிறது.

தாமரைக் கண்ணனுக்கு இது முதல் படம். இயல்பான காட்சியமைப்பும், சினிமாத்தனமில்லாத வசனங்களும் படத்தைப் பார்க்க வைக்கின்றன.

 

ஷூட்டிங்கில் குறும்பு செய்த அமிதாப்: கண்ணீர் விட்ட சரிகா

மும்பை: யுத் தொலைக்காட்சி தொடர் ஷூட்டிங்கின்போது நடிகர் அமிதாப் பச்சன் செய்த குறும்பால் நடிகை சரிகா கண் கலங்கிவிட்டார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல் ஹாஸனின் முன்னாள் மனைவியான சரிகா யுத் என்னும் இந்தி தொலைக்காட்சி தொடரில் நடிக்கிறார்கள்.

ஷூட்டிங்கில் குறும்பு செய்த அமிதாப்: கண்ணீர் விட்ட சரிகா

இந்த நிகழ்ச்சியில் சரிகா அமிதாபின் முன்னாள் மனைவியாக நடிக்கிறார். இந்நிலையில் அமிதாப் முகத்தில் சரிகா கோபமாக கதவை சாத்தும் காட்சி எடுக்கப்பட்டது.

அப்போது எங்கே ஓங்கி கதவை சாத்தினால் அமிதாபுக்கு அடிபட்டு விடுமோ என்ற பயத்தில் சரிதா இருந்தார். அப்போது அவர் கதவை சாத்த அமிதாப் தனக்கு அடிபட்டுவிட்டது என்று கூறி வலியால் அலறினார். இதை பார்த்த சரிகா உள்ளிட்ட மொத்த யூனிட்டும் பதறிப் போனார்கள்.

சரிகாவுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்துவிட்டது. கடைசியில் பார்த்தால் அமிதாப் கதவை திறந்து கொண்டு சிரித்துக் கொண்டே சும்மா விளையாடினேன் என்றார்.

 

இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி.. இன்று சென்னையில் படப்பிடிப்புகள் ரத்து!

சென்னை: இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று சென்னையில் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உலக சாதனைப் புரிந்த இயக்குநர் ராம நாராயணன், சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

அவருடைய உடல் விமானம் மூலம் நேற்று நள்ளிரவில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி.. இன்று சென்னையில் படப்பிடிப்புகள் ரத்து!

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இறுதிச்சடங்குகள் நடந்தபின், இன்று பிற்பகல் 2-30 மணி அளவில் ராம நாராயணன் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

படப்பிடிப்புகள் ரத்து

ராம நாராயணன் மறைவையொட்டி, சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திரைப்படம் தொடர்பான அனைத்து வேலைகளும் நடைபெறாது என்றும், இதற்கு திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களும் ஒத்துழைப்பு தருகின்றன என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நடிகர் சங்கம்

இதற்கிடையே ராம நாராயணன் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் இரங்கல் செய்தி விடுத்துள்ளனர். அதில்,

"திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ராம நாராயணன் உடல்நலக்குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் 22-6-2014 அன்று காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

திரையுலகில் மிக அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமைக்குரியவர், அவர். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அவருடன் பணிபுரியும் சக இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழிலாளர்களுடன் மிக அன்புடன் பழகக்கூடியவர்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கலையுலகினருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

வடகறி விமர்சனம்

Rating:
2.5/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: ஜெய், சுவாதி, பாலாஜி, அருள்தாஸ், வெங்கட் பிரபு, சன்னி லியோன், கஸ்தூரி

ஒளிப்பதிவு: எஸ் வெங்கடேஷ்

இசை: விவேக் ஷிவா, மெர்வின் சாலமன்

தயாரிப்பு: தயாநிதி அழகிரி

இயக்கம்: சரவணராஜன்

எளிய கதை, சின்னச் சின்ன சம்பவங்கள், சுவாரஸ்யமான காதல் காட்சிகளின் தொகுப்பாக வந்திருக்கிறது வடகறி.

சென்னையின் நடுத்தரக் குடும்பத்துப் பையன் ஜெய். ஆட்டோக்கார அண்ணன் அருள்தாஸ், அண்ணி கஸ்தூரியுடன் வசிக்கும் அவருக்கு, மெடிக்கல் ரெப் வேலை கிடைக்கிறது. ஒரு நல்ல போன் வாங்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் ஒரு கொரியன் செட்தான் வாங்க முடிகிறது. அந்த போனோ, போகிற இடங்களிலெல்லாம் ரிங்டோன் என்ற பெயரில் லவுட்ஸ்பீக்கர் கணக்கில் சத்தம் போட்டுத் தொலைகிறது.

வடகறி விமர்சனம்

ஒருநாள் 'ஆளுக்கு 500 ரூபா போட்டு ஒரு நல்ல போனாவது வாங்கிக் கொடுங்கடா' என வெங்கட் பிரபு கமெண்ட் அடிக்க, அன்று பார்த்து ஒரு ஐபோனை அநாதையாகக் கண்டெடுக்கிறார். திருப்பிக் கொடுக்கலாம் என முயற்சிக்கும்போது, 'தேடி வந்த அதிர்ஷ்டத்தை விட்டுடாத மச்சி,' என அட்வைஸ் தருகிறார் பாலாஜி. ஐபோன் இருந்தாதான் பெண்கள் விழுவார்கள் என்ற உபரித் தகவலைத் வேறு தர, திருப்பித் தரும் எண்ணத்தை தள்ளிப் போடுகிறார்.

வடகறி விமர்சனம்

பாலாஜி வீட்டு எதிர்வீட்டில் உள்ள தோழி வீட்டுக்கு அடிக்கடி வரும் சுவாதியைப் பார்த்ததுமே காதல் கொள்கிறார் ஜெய். ஆனால், 'அவளுக்கு ஏற்கெனவே ஆள் இருக்கான், நீ அவ ப்ரெண்டை லவ் பண்ணு' என பாலாஜி கொடுத்த யோசனையை நம்பி, தோழியிடம் காதல் சொல்ல முயலும்போதுதான், சுவாதிக்கு காதலன் என யாருமில்லை என ஜெய்க்கு தெரிகிறது.

உடனே, அந்தத் தோழியிடமே சுவாதி மீதான தன் காதலைச் சொல்கிறார். உடைந்து போகும் தோழி, சுவாதியிடம் சண்டைக்குப் போக, வீம்புக்காகவே ஜெய்யை காதலிக்க ஆரம்பிக்கிறார் சுவாதி. தன்னிடம் உள்ள ஐபோனைப் பார்த்து மயங்கித்தான் சுவாதி காதலிப்பதாக நம்புகிறார் ஜெய்.

வடகறி விமர்சனம்

இதை சுவாதியிடம் சொல்ல, பெண்கள் என்ன அவ்வளவு கேவலமா என வெளுக்கிறார் அவர். சுவாதியின் மனநிலை, எம்ஜிஆர் ரசிகரான தன் அண்ணனின் நேர்மையை நினைத்துப் பார்க்கும் ஜெய், அந்த ஐபோனை உரியவரிடம் திருப்பித் தர முயற்சிக்கிறார். அந்த முயற்சியே அவரை பெரும் சிக்கலில் இழுத்துவிடுகிறது.

அதிலிருந்து ஜெய் தப்பிப்பது மீதிக் கதை!

வடகறி விமர்சனம்

அப்பாவி சென்னை இளைஞன் பாத்திரம் ஜெய்க்கு நன்றாகப் பொருந்தியிருக்கிறது. ஆனால், இந்த வேடத்தை இன்னும் சிறப்பாக ஜெய்யால் செய்திருக்க முடியும். அவரோ, எல்லா காட்சியிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு காட்சி விதிவிலக்கு... வில்லன்களிடம் மிதிபட்டு முகத்தில் ரத்தக் கறையோடு வரும் அவரை, 'அதென்ன லிப்ஸ்டிக்' என சுவாதி கேட்க, அதற்கு ஜெய் காட்டும் ரியாக்ஷன் செம!

சுவாதிக்கு பெரிய வேலையில்லை. 'தெத்துப் பல் தெரிய சிரிக்க வேண்டும்... அப்புறம் கழுத்திலிருந்து கால் வரை முழுவதும் மூடப்பட்ட காஸ்ட்யூமுடன் ஸ்கூட்டி ஓட்ட வேண்டும்.. அவ்ளோதான் உங்க போர்ஷன்,' என்று சொல்லியிருப்பார் போலிருக்கிறது இயக்குநர்.

ஆர்ஜே பாலாஜிக்கு இதில் 'சந்தான' வேடம். அதாவது ஹீரோவுக்கு ப்ரெண்ட்! படபடவென ரேடியோவில் பேசுவது மாதிரியே பேசுகிறார். ஜெய் சொல்வது போல, சில நகைச்சுவைக் காட்சிகள் நாளைக்கு சிரித்துக் கொள்ளலாம் ரகம்தான்!

வடகறி விமர்சனம்

பணயக் கைதியாக பிடித்து வைக்கப்படும் பாலாஜி, மெதுவாக அந்த கும்பலுடன் நட்பாகும் அந்த மூன்று காட்சிகள், புதுசு.

தோழியாக வரும் பெண், வெங்கட் பிரபு, அந்த வில்லன் குரூப் சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனால் மெயின் வில்லன் என்று ஒருவரைக் காட்டும்போது இம்மியளவுக்குக் கூட த்ரில் இல்லை. அதான் தெரியுமே என்கிற மாதிரி ஆகிவிடுகிறது அந்தக் காட்சியில்!

சன்னி லியோன் ஒரு பாடலுக்கு வந்து ஆடிவிட்டுப் போகிறார். அதற்கு மேல் அந்தப் பாடல் பற்றிச் சொல்ல ஏதுமில்லை.

வடகறி விமர்சனம்

சுற்றிச் சுற்றி சென்னையையே காட்டினாலும் வெங்கடேஷ் ஒளிப்பதிவு அருமை.

புதிய இசையமைப்பாளர்கள் விவேக் ஷிவா, மெர்வின் சாலமன் இசையில் ஒரு பாடல் பரவாயில்லை. அந்த செல்போன் கேம் பாடல் புதிதாக இருந்தாலும், இன்னொரு முறை கேட்கும்படி, அல்லது பார்க்கும்படி இல்லை!

வடகறி விமர்சனம்

காதல் காட்சிகளை ரகளையாக அமைத்திருக்கும் சரவண ராஜன், அதே சுவாரஸ்யத்தோடு பின்பாதியில் சம்பவங்களை அமைக்கத் தவறியிருக்கிறார். ஆனால் பொழுதுபோக்குக்கு மினிமம் கியாரண்டி இருப்பதால்... பார்க்கலாம்!

 

இன்று மாலை வாங்கடே ஸ்டேடியத்தில் வாக்குமூலம் அளிக்கும் ப்ரீத்தி: நெஸ் வாடியாவுக்கு சிக்கல்?

மும்பை: தனது முன்னாள் காதலர் மீது பாலியல் புகார் கூறிய இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா மும்பை போலீசாரிடம் இன்று மாலை 4 மணிக்கு வாக்குமூலம் அளிக்கவிருக்கிறார்.

பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா கடந்த மே மாதம் 30ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடந்தபோது தன்னை தகாத வார்த்தைகளால், திட்டி, கண்ட இடத்தில் தொட்டு, தள்ளிவிட்டதாக போலீசில் புகார் கொடுத்தார். உன்னை காணாமல் ஆக்கிவிடுவேன் என்று நெஸ் தன்னை மிரட்டியதாக ப்ரீத்தி தெரிவித்தார்.

இன்று மாலை  வாங்கடே ஸ்டேடியத்தில் வாக்குமூலம் அளிக்கும் ப்ரீத்தி: நெஸ் வாடியாவுக்கு சிக்கல்?

இதையடுத்து அமெரிக்கா சென்ற ப்ரீத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை திரும்பினார். இந்நிலையில் சம்பவம் நடந்த வாங்கடே ஸ்டேடியத்தில் வைத்து இன்று மாலை 4 மணிக்கு ப்ரீத்தி போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்கிறார். அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நெஸ் வாடியாவுக்கு சம்மன் அனுப்பப்படும்.

இதற்கிடையே ப்ரீத்தியை தொந்தரவு செய்தால் வாடியா குழுமம் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று நிழல் உலக தாதா ரவி பூஜாரி நெஸ்ஸின் தந்தை நுஸ்லி வாடியாவை மிரட்டினார். இதையடுத்து நுஸ்லி இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன் பிறகு வாடியா குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை ஆன இளம்நடிகை

சென்னை: தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை ஆகியுள்ளார் மங்களகரமான மேனன் நடிகை.

பள்ளிக்கூட படிப்பையும், நடிப்பையும் ஒரே நேரத்தில் பேலன்ஸ் செய்து வருபவர் மங்களகரமான மேனன் நடிகை. பக்கத்து வீட்டு பெண் போன்று உள்ள அவரது நடிப்பில் இதுவரை வந்த படங்கள் ஹிட்டாகியுள்ளன.

இந்நிலையில் அண்மையில் வெளியான பேக் படம் ஹிட்டான சந்தோஷத்தில் உள்ளார் நடிகை. இதனால் மங்களகரமான மேனனை நடிக்க வைத்தால் நஷ்டம் ஏற்படாது என்று தயாரிப்பாளர்கள் கருதுகிறார்கள். அதனால் நம்பி அவரை படங்களில் ஒப்பந்தம் செய்யலாம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இப்படி தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையாகிவிட்டார் நடிகை.

கோலிவுட்டில் தனது கெரியர் ஹிட்டடிப்பதை மல்லுவுட்டில் பெருமையாக பேசி வருகிறாராம் நடிகை. தமிழில் நான் நடிக்கும் படங்கள் எல்லாமே ஹிட் அதனால் சம்பளத்தை தாராளமாக கொடுங்கள் என்று சேட்டன்களிடம் நடிகை கூறுகிறாராம்.