ஆல்பட் திரையரங்கில் ஜில்லா நூறாவது நாள் விழா... விஜய் பங்கேற்கிறார்!

சென்னை: மோகன்லால், விஜய் நடித்த ஆல்பட் திரையரங்கில் ஜில்லா நூறாவது நாள் விழா... விஜய் பங்கேற்கிறார்!  

ஆர்பி சவுத்ரி தயாரிப்பில், ஆர் டி நேசன் இயக்கிய படம் ஜில்லா. விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.

இந்தப் படம் இந்த ஆண்டு துவக்கத்தில் பொங்கல் வெளியீடாக வந்தது.

படத்தின் துவக்க வசூலி பிரமாத இருந்தாலும், படம் குறித்த கலவையான விமர்சனங்கள் படத்துக்கான ரசிகர்கள் கூட்டத்தைக் குறைத்துவிட்டது. இருந்தாலும் தம் கூட்ட படத்தை ஓட்டி வந்தனர்.

பிவிஆர், பேபி ஆல்பட் ஆகிய இரண்டு அரங்குகளில் 50 நாள் வரை ஓடியதாக விளம்பரம் வெளியிட்டனர். ஆனால் அப்போது பிவிஆரில் விசாரித்தபோது விஜய் படம் ஓடவில்லை என்றனர்.

பின்னர் பேபி ஆல்பட்டில் மட்டும் ஒரு காட்சியாக ஜில்லா படம் 100 நாள் வரை ஓட்டப்பட்டது.

அதைக் கொண்டாடத்தான் இப்போது ஆல்பட் தியேட்டரில் பெரிய விழாவாக எடுக்கின்றனர்.

 

நடிகர் ஜெய்யும் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவைத் தொடர்ந்து, அவரது நண்பரும் நடிகருமான ஜெய்யும் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்.

கடந்த மார்ச் கடைசி வாரத்திலேயே அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

நடிகர் ஜெய்யும் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்!

சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முஸ்லீம் மதத்துக்கு மாறினார். பின்னர் இதை யுவனும் வெளிப்படையாகவே அறிவித்தார்.

இவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஜெய்யும் முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

'சுப்பிரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவரும் நஸ்ரியாவும் இணைந்து நடிக்கும் ‘திருமணம் எனும் நிக்கா' படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் இவர் மூஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பவர் போன்று நடித்துள்ளார் (நிஜ வாழ்க்கையிலும் ஒரு முஸ்லிம் நடிகையைக் காதலித்து தோற்றதாகக் கூறப்படுகிறது).

இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே முஸ்லீம் மதத்தின் மீது தீவிர பற்று ஏற்பட்டுவிட்டதாம். இதையடுத்தே இவர் முஸ்லீம் மதத்துக்கு மாறியதாகக் கூறப்படுகிறது.

 

தங்கமீன்கள், தலைமுறைகள், வல்லினம்: கோலிவுட்டுக்கு 5 தேசிய விருதுகள்

டெல்லி: 2013ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த பிராந்திய படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் கதைக்காக தலைமுறைகள் என தமிழ் திரையுலகிற்கு மொத்தம் 5 விருதுகள் கிடைத்துள்ளது.

2013ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் அறிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு,

ஷாஹித் இந்தி படத்திற்காக ராஜ்குமார் ராவுக்கும், பேரறியாதவர் மலையாள படத்திற்காக சூரஜ் வெஞ்சரமூடுவுக்கும் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

தங்கமீன்கள், தலைமுறைகள், வல்லினம்: கோலிவுட்டுக்கு 5 தேசிய விருதுகள்

சிறந்த நடிகை: கீதாஞ்சலி தாபா, படம் - லயர்ஸ் டைஸ்

சிறந்த துணை நடிகர் - சௌரப் சுக்லா, படம்- ஜாலி எல்எல்பி

சிறந்த இயக்கம் - ஷாஹித்

சிறந்த குழந்தை நட்சத்திரம்- சாதனா, படம்- தங்கமீன்கள், சோம்நாத் அவ்கதே, படம்- பந்த்ரி

சிறந்த பிராந்திய படம் - தங்க மீன்கள்

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படத்திற்கான நர்கிஸ் தத் விருது - தலைமுறைகள்

சிறந்த இயக்குனர் - ஹன்சல் மேத்தா, படம்- ஷாஹித்

சிறந்த பொழுதுபோக்கு படம் - பாக் மில்கா பாக்

சிறந்த பாடலாசிரியர்: நா. முத்துக்குமார், படம்- தங்க மீன்கள்

சிறந்த எடிடிங்கிற்கான நடுவர்கள் விருது- சாபு ஜோசப், படம் - வல்லினம்

தேசிய அளவில் சிறந்த படம்: ஷிப் ஆப் தீசியஸ்

சிறந்த துணை நடிகை: ஐடா எல்காஷெஃப்(ஷிப் ஆப் தீசியஸ்), பெங்காளி நடிகை அம்ருதா சுபாஷ்(ஆஸ்து)

சிறந்த பாடகர்(ஆண்): ரூபாங்கர், படம்- ஜதீஷ்வர்(பெங்காளி)

சிறந்த பாடகி(பெண்): பெலா ஷிண்டே, மராத்தி பாடல் கோடா கோடா

சிறந்த நடன அமைப்பு: கணேஷ் ஆச்சார்யா, படம்- பாக் மில்கா பாக்

சமூக பிரச்சனைகளை அலசும் படம் - குலாபி கேங்(இந்தி)

சிறந்த இந்தி படம் - ஜாலி எல்எல்பி

 

வடிவேலு படத்துக்கு தீர்ந்தது சிக்கல்... தெலுங்கு அமைப்புகளுடன் சுமூக உடன்பாடு.. சிக்கலின்றி ரிலீஸ்!

சென்னை: நடிகர் வடிவேலு நடித்த தெனாலிராமன் திரைப்படத்துக்கு எதிராகக் கிளம்பிய தெலுங்கு அமைப்புகள், அவருடன் சுமூகப் போய்விட்டன.

இதனால் திட்டமிட்டபடி நாளை மறுதினம் திரைக்கு வருகிறது தெனாலிராமன்.

இப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் இந்தபடத்தை தெலுங்கு அமைப்பினருக்கு திரையிட்டுக்காட்ட மாட்டேன் என்று பிடிவாதம் காட்டியதால், தெலுங்கு அமைப்பினரும் முரட்டுப் பிடிவாதம் காட்டி வந்தனர். ஆனால் படம் சுமூகமாக வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த வடிவேலுவின் மென்மையான அணுகுமுறையால் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

வடிவேலு படத்துக்கு தீர்ந்தது சிக்கல்... தெலுங்கு அமைப்புகளுடன் சுமூக உடன்பாடு.. சிக்கலின்றி ரிலீஸ்!

இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று கூறி வந்தார்கள். நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்தார்கள். அவை தள்ளுபடி செய்யப்பட்டன.

அப்படியும் சமாதானம் ஆகாத அமைப்பினர், படத்தை எங்களூக்கு திரையிட்டுக் காட்டாமல் ரிலீஸ் செய்தால், போராட்டம் நடத்துவோம் என்று கூறினர். வடிவேலுவுக்கு எதிராக போராட்டம் செய்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று சீமான், பாரதிராஜா உள்பட பலர் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி, சமரசம் ஆவதே நல்லது என்று முடி வெடுத்த வடிவேலு, சென்னை ரெசிடென்சி ஓட்டலில் இன்று தெலுங்கு அமைப்பினர்களை சந்தித்து சமரச முயற்சியில் ஈடுபட்டார்.

இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை திட்டமிட்டபடி தெனாலிராமன் எந்தவித சிக்கலும் இல்லாமல் திரைக்கு வருகிறது.

சமரசப் பேச்சு முடிந்த பிறகு வடிவேலு செய்தியாளர்களிடம் பேசுகையில், "உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் இந்தப்படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்தபடி படத்தில் அத்தனை விசயங்களும் .

படத்தில் ராஜா கேரக்டரை உயர்வாகத்தான் காட்டியிருக்கிறோம். ஆனால், தெலுங்கு அமைப்பினர் தவறாக காட்டியிருக்கிறோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் படத்தை பற்றி தெளிவாக விளக்கினேன். அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். மேலும் அவர்களுக்கு சந்தேகம் இருப்பதால் படத்தை திரையிட்டுக்காட்ட சம்மதித்துள்ளேன்.

'யாராவது எதையாவது கொளுத்தி போட்டுடுவாங்க. அதையெல்லாம் கண்டுக்கிடாதீங்க. நாம எல்லாரும் இந்த மண்ணுல தாயா புள்ளயா, அண்ணன், தம்பியா வாழணும்னு அவுங்க கிட்ட கேட்டுக்கிட்டேன். சந்தோஷமா போயிருக்காங்க," என்றார்.

 

வடிவேலுவின் தெனாலிராமனுக்கு தடைகோரிய மனு டிஸ்மிஸ்!

மதுரை: வடிவேலு நடித்த தெனாலிராமன் திரைப்படத்தை வெளியிட தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக பழந்தமிழர் மக்கள் கட்சி நிர்வாகி வீரகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "நடிகர் வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதில், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். கிருஷ்ணதேவராயர் சிறந்த போர்வீரர். சிறப்பான ஆட்சி நடத்தியவர். தென்னிந்தியாவில் இஸ்லாமிய படையெடுப்பை தடுத்தவர் என பள்ளி வரலாற்று பாடத்தில் படித்திருக்கிறேன்.

வடிவேலுவின் தெனாலிராமனுக்கு தடைகோரிய மனு  டிஸ்மிஸ்!

கோமாளி

அவரது வேடத்தை ஏற்றுள்ள வடிவேலு கோமாளி போன்று காட்சி தருகிறார். மேலும், மூடர்கள் பேசுவது போல் அவரது வசனங்கள் உள்ளன. கிருஷ்ண தேவராயருக்கு 36 மனைவியர் 52 குழந்தைகள் இருப்பதாகவும் படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற வரலாற்று தகவல் கிடையாது.

தடை விதிக்கணும்

ஒரு பேரரசரின் வரலாற்றை திரித்துக்கூறி பணம் சம்பாதிக்க முற்படுவதை ஏற்கக்கூடாது. மேலும் இந்த படத்தை பார்க்கும் குழந்தைகள் கிருஷ்ணதேவராயரை ஒரு கோமாளி போல் கற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்,'' என அதில் குறிப்பிட்டிருந்தார்.

தள்ளுபடி

இம்மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. "வரலாறுகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எழுதியிருக்கின்றனர். எனவே வரலாறு அடிப்படையில் திரைப்படத்துக்கு தடை கோருவதை ஏற்கமுடியாது," என குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

சென்னை நீதிமன்றத்திலும்...

இதே போன்றதொரு மனு சென்னை உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கைப் பரிசீலித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், 'தமிழ் மொழி தெரியாததால் இந்த வழக்கை தாங்கள் விசாரிக்க விரும்பவில்லை. வேறு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும்," என்றும் உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

 

தெலுங்கு அமைப்புகளுடன் வடிவேலு சமரசப் பேச்சு?

சென்னை: தெனாலிராமன் படம் பிரச்சினையின்றி வெளியாக வேண்டும் என்பதற்காக, தெலுங்கு அமைப்புகளுடன் வடிவேலு சமரசப் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடிவேலு நடித்துள்ள நாளை மறுதினம் திரைக்கு வரவிருக்கிறது தெனாலிராமன் திரைப்படம். சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவரும் இத்திரைப் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகம் இருக்கிறது.

தெலுங்கு அமைப்புகளுடன் வடிவேலு சமரசப் பேச்சு?

இந்நிலையில் இந்த படத்திற்கு சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று கூறி வருகிறார்கள்.

படக் குழுவினரோ, அப்படி காட்சிகள் எதுவும் எடுக்கவில்லை என்கிறார்கள். அப்படியானால் படத்தை எங்களுக்கு திரையிட்டுக் காட்டுங்கள் என்கிறார்கள் தெலுங்கு அமைப்பினர். ஆரம்பத்தில் படத்தைத் திரையிட்டுக் காட்டுவதாகக் கூறிய இயக்குநர் யுவராஜ், இப்போது அதுபற்றி எதுவும் கூற மறுப்பதாக தெலுங்கு அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

படத்தை எங்களூக்கு திரையிட்டுக்காட்டாமல் ரிலீஸ் செய்தால், போராட்டம் நடத்துவோம் என்று தெலுங்கு அமைப்பினர் கூறுகின்றனர்.

வடிவேலுவுக்கு எதிராக போராட்டம் செய்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று சீமான் உள்பட பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலைய்படம் திரைக்கு வர ஒரு நாள் மட்டும்தான் இருக்கிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி, சமரசம் ஆவதே நல்லது என்று முடிவெடுத்த வடிவேலு, ரெசிடென்சி ஓட்டலில் தெலுங்கு அமைப்பினர்களை சந்தித்து சமரசப் பேச்சு நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு அமைப்பினரோ, எங்களுக்குப் படத்தை திரையிட்டுக்காட்டினால்தான் சமரசம் ஆவோம் என்று கூறி வருகிறார்களாம்.

 

தெனாலிராமன்... முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

சென்னை: வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்துக்கு இன்றுமுதல் கட்டணச்சீட்டு முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் வடிவேலு படம் என்பதால் இந்தப் படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. சென்னையில் 30-க்கும் மேற்பட்ட அரங்குகளில் தெனாலிராமன் படம் வெளியாகிறது.

தெனாலிராமன்... முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

தமிழகமெங்கும் 300-க்கும் அதிகமான அரங்குகளில் படத்தை வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.

நாளை மறுநாள் வெளியாகும் இந்தப் படத்துக்கான கட்டணச்சீட்டு முன்பதிவு இன்று முதல் ஆரம்பமாகிறது. நிறைய ரசிகர்கள் ஆவலுடன் இந்தப் படத்துக்கு முன்பதிவு செய்ய வந்ததாக திரையரங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் முன்பதிவு நன்றாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம் குறித்து வடிவேலு கூறுகையில், "என் படத்துக்கு குடும்பம் குடும்பமாக மக்கள் வருவார்கள். காரணம், எந்த ஒரு சிறு அருவருப்பான விஷயமும் இல்லாத, நல்ல படம் இந்த தெனாலிராமன். எல்லோரும் குடும்பத்தோடு சிரித்து மகிழ ஒரு வாய்ப்பாக இந்தப் படம் அமையும்," என்று கூறியுள்ளார்.

 

இப்படி என் மானத்த வாங்குகிறாரே..: கணவர் மீது கடுப்பில் நடிகை

சென்னை: மோக்கியா படத்தில் இப்படி காமெடி பீஸாக நடித்து என் இமேஜை டேமேஜ் செய்கிறாரே என்று நடிகை தனது இயக்குனர் கணவர் மீது கோபத்தில் உள்ளாராம்.

பெரிய திரையில் கலக்கி ஓய்ந்த பிறகு சின்னத் திரைக்கு வந்த கோலங்கள் நாயகி ராஜ புத்திரன் இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகு அவர்கள் ஜோடியாக நடித்த படம் கூட ரிலீஸானது. அந்த படத்தில் இருந்து அவரது கணவர் சோலாராகிவிட்டார். சோலார் தற்போது மோக்கியா ஹீரோவாக நடித்துள்ள படத்தில் காமெடி பீஸாக நடித்துள்ளார் சோலார்.

லட்டு படத்தில் மோக்கியா பவரை கலாய்த்து கலாய்த்து படத்தை ஓட்டினார். தற்போது அவர் சோலாரை படத்தில் சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்துள்ளாராம். இது குறித்து அறிந்த நடிகை கடுப்பாகிவிட்டாராம். இந்த மனிதர் இப்படி என் இமேஜை டேமேஜ் செய்கிறாரே என்று கணவர் மீது கோபத்தில் உள்ளாராம்.

மனைவியின் பேச்சை தட்டாத சோலார் இந்த விஷயத்தில் அவர் கூறுவதை காதில் வாங்குவதே இல்லையாம். இந்த விவகாரத்தில் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம்.

 

தமிழகத்தில் தெலுங்கு படங்களை ஓட விட மாட்டோம்! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை

சென்னை: தென்னாலிராமன் படத்துக்கு எதிராக தொடர்ந்து பிரச்சினை செய்தால், தமிழகத்தில் எந்த தெலுங்குப் படத்தையும் ஓடவிடமாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் தெலுங்கு படங்களை ஓட விட மாட்டோம்! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் அதியமான் கூறியது:

மூன்று ஆண்டுகளுக்கு பின் தமிழ் நகைச்சுவை நடிகர் வடிவேலு தெனாலிராமன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தெலுங்கு மன்னன் கிருஷ்ண தேவராயரை கேலி செய்வது போல காட்சிகள் வருவதாக தமிழகத்தில் வாழும் தெலுங்கு மக்கள் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இப்படத்தை திரையிட விடமாட்டோம் என்று மிரட்டி வருகின்றனர் .

தமிழ்நாட்டில் பல இலட்சம் தெலுங்கு மக்கள் எந்த வித பயமும் இன்றி பாதுகாப்புடன் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் மக்களிடையே வணிகம் செய்து சிறப்பாக வாழ்கின்றனர். தமிழ் மக்களும் தெலுங்கு மக்களோடு அண்ணன் தம்பிகள் போலத்தான் பழகி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள பெரிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் தான். இருந்தும் தமிழர்கள் இந்த கட்சிகளுக்கு வாக்களித்து தெலுங்கு தலைவர்களை தங்கள் நாட்டை ஆட்சி செய்ய அனுமதித்தும் உள்ளனர்.

தமிழகத்தில் தெலுங்கு படங்களை ஓட விட மாட்டோம்! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை

வேறு எந்த மாநிலத்திலும் வேற்று மொழியினரை ஆட்சி செய்ய அனுமதிப்பது இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமே தெலுங்கு மொழி பேசும் தலைவர்களை ஆட்சி செய்ய வைத்துள்ளனர் தமிழர்கள். அந்த அளவிற்கு தமிழர்கள் சகிப்புத் தன்மை மிக்கவர்கள், பரந்த எண்ணம் கொண்டவர்கள் என்பதை தெலுங்கு அமைப்புகள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள பெரு வணிக நிறுவனங்கள் எல்லாம் தெலுங்கர்கள்தான் நடத்துகின்றனர். இவர்கள் தமிழ்நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வணிகம் நடத்துகின்றனர்.

இருப்பினும் இப்போது தெலுங்கு அமைப்புகள் ஒரு தமிழ் படத்தை தமிழ்நாட்டில் ஓடவிட மாட்டோம் என அறைகூவல் விடுப்பது தமிழர்களின் தன்மானத்தை சோதித்து பார்க்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

தெனாலிராமன் படத்தில் தெலுங்கு மன்னனை இழிவு செய்யவோ அல்லது அவரது பெயரை பயன்படுத்தவோ இல்லை என்று வடிவேலு தெளிவாக சொல்லிவிட்ட பிறகும் இந்த தெலுங்கு மக்கள் அமைப்பு வடிவேலுவின் படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது, வடிவேலு வீட்டை முற்றுகையிட்டுள்ளது , திரையரங்கில் படத்தை ஓடவிட மாட்டோம் என எச்சரிக்கை செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் இத்தனை காலம் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வரும் தெலுங்கர்கள் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக இல்லாமல், தமிழர் உணர்வுகளை மதிக்காமல் ஒரு சிறந்த தமிழ் நகைச்சுவை நடிகரின் படத்தை திரையிட விட மாட்டோம் எனச் சொல்வது தமிழர்களை சீண்டிப் பார்க்கும் செயலாகும்.

இவர்களுக்கு பின்னணியில் வடிவேலுவை விரும்பாத சில தெலுங்கு அரசியல் கட்சிகள் செயல்படுவதாக நாங்கள் சந்தேக்கிறோம்.

மண்ணின் மைந்தன்

எங்கள் மண்ணின் மைந்தரான வடிவேலுவின் படத்திற்கு இந்த தெலுங்கு அமைப்புகள் இனியும் இடையூறு செய்தால் தமிழர்கள் நாங்கள் சும்மா இருந்து விட மாட்டோம். தமிழகத்தில் தெலுங்கு திரைப்படங்களை திரையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம், தமிழ் நாட்டில் நடைபெறும் தெலுங்கு வணிகத்தை தமிழர்கள் புறக்கணிக்குமாறு பரப்புரை செய்வோம். இதனால் தமிழகத்தில் உள்ள தெலுங்கு மக்கள் பாதிப்படைவார்கள், பெரும் இழப்பை சந்திப்பார்கள் என எச்சரிக்கை விடுக்கிறோம்.

தமிழகத்தில் இதுவரை இணக்கமாக வாழும் தமிழ் தெலுங்கு சமூகங்களுக்கு இடையே தயவு செய்து பிரிவினையை , பகைமையை உருவாக்க வேண்டாம்," என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

ரோமியோ ஜூலியட் பூஜை... எஸ் ஜே சூர்யா க்ளாப் அடித்து துவக்கி வைத்தார்!

ரோமியோ ஜூலியட் பூஜை... எஸ் ஜே சூர்யா க்ளாப் அடித்து துவக்கி வைத்தார்!  

எங்கேயும் காதல் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவியும் ஹன்சிகாவும் இணையும் படம் இது.

ரோமியோ ஜூலியட் படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு நேற்று 14.04.2014 காலை அடையாரில் உள்ள கோவிலில் நடைபெற்றது.

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் க்ளாப் போர்டு அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

 

நான் சிகப்பு மனிதன் - விமர்சனம்

Rating:
3.5/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: விஷால், லட்சுமி மேனன், சரண்யா, ஜெயப்பிரகாஷ், சுந்தர்ராமு, ஜெகன்

இசை: ஜிவி பிரகாஷ்

காமிரா: ரிச்சர்ட் எம் நாதன்

தயாரிப்பு: விஷால் - சித்தார்த் ராய் கபூர்

இயக்கம்: திரு

பழிவாங்கல் கதைதான். ஆனால் சற்று வித்தியாசமாக சிந்தித்து உருவாக்கப்பட்ட திரைக்கதை படத்துக்கு புதிய பரிமாணம் தருகிறது.. கடைசி வரை ஈர்ப்புடன் பார்க்க வைக்கிறது.

1985-ல் ரஜினி நடித்து வெளியான நான் சிகப்பு மனிதன் கதைக்கும், இப்போது விஷால் எடுத்துள்ள நான் சிகப்பு மனிதன் கதைக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். ரஜினி படத்தில் வில்லன்கள் அவரை தலைகீழாக கட்டித் தொங்க விட்டு, அவர் கண்ணெதிரிலேயே தாயைக் கொன்று, தங்கையைக் கற்பழிப்பார்கள். அதற்கு பழிவாங்கப் போய் ராபின் ஹூட்டாக மாறி அநியாயத்தைத் தட்டிக் கேட்பார்.

நான் சிகப்பு மனிதன் - விமர்சனம்  

இந்தப் படத்தில், ஹீரோ விஷால் நார்கோலப்சி வியாதியால் தூக்கத்திலிருக்கும்போது, அவர் எதிரிலேயே அவரது காதலியை துடிக்கத் துடிக்க கூட்டு வன்புணர்வு செய்கிறார்கள். அதற்கு பழி வாங்கப் புறப்படுகிறான் நாயகன.

இந்த ஒன்று தவிர, மற்ற அனைத்திலுமே விஷாலின் நான் சிகப்பு மனிதன் முற்றிலும் வேறுபட்ட படைப்புதான்.

விஷாலுக்கு நார்கோலப்சி நோய். அதிக சந்தோஷம், அதிர்ச்சி, பயம் எதுவாக இருந்தாலும் உடனே தூக்கத்தில் ஆழ்ந்துவிடும் வியாதி. ஆனால் விழி மூடிக்கிடந்தாலும் சுற்றிலும் நடப்பதை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு.

மருத்துவத்தால் இதனைச் சரி செய்ய வழி இல்லை என்றானதும், அந்த நோயுடனும் உற்ற நண்பர்களுடனும் வாழ்கிறார். எங்கும் அவரால் தனித்து போக முடியாத நிலை. ஒரு நாள் அப்படிப் போக முயலும் போது, நடுச்சாலையில் மயங்கிச் சரிந்து தூக்கத்திலாழ்கிறார்.

நான் சிகப்பு மனிதன் - விமர்சனம்

அவரை பிணமாகக் காட்டி பணம் பறிக்கும் முயற்சியில் மயில்சாமி இறங்க, பரிதாபப்பட்டு பணம் தருகிறார் லட்சுமி மேனன். ஆனால் அடுத்த காட்சியிலேயே விஷாலை ஒரு மாலில் பார்த்து, அதிர்ச்சியில் லட்சுமி மயங்கி விழுகிறார். பின்னர் உண்மை தெரிந்து விஷால் மீது பரிதாபம் கொள்கிறார். அந்த பரிதாபம் மெல்ல காதலாகிறது. ஆனால் இப்படியொரு வியாதி உள்ளவரால் எப்படி செக்ஸ் சுகம் தர முடியும் என்ற கேள்வி. வாரிசு தர முடியாத விஷாலை திருமணம் செய்து வைக்க முடியாது என மறுக்கிறார் லட்சுமியின் தந்தை ஜெயப்பிரகாஷ்.

ஆனால் தன் முடிவில் உறுதியாக இருக்கும் லட்சுமி மேனன், விஷால் எந்த சூழலில் தூங்காமலிருப்பார் என்பதைத் தெரிந்து அந்த நேரத்தில் அவருடன் உறவு கொள்கிறார். கர்ப்பிணியாகிறார். ஒரு மழை இரவில் இருவரும் காரில் செல்லும்போது இன்னொரு கார் மோதுவது போல வந்து மடக்க, அதிர்ச்சியில் தூங்கிப் போகிறார் விஷால். அப்போது ஒரு கும்பல் லட்சுமி மேனனை இழுத்து கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறார்கள். மனைவிக்கு நேரும் கொடுமையை கண்களில் நீர்வழிய கேட்க மட்டுமே முடிகிறது விஷாலால்...

கற்பழித்தவர்கள் யார்.. காரணம் என்ன... அவர்கள் முகம்... வேறு எதாவது துப்பு... ஒன்றும் கிடைக்காத நிலையில், அவர்கள் பேசிய அந்த வார்த்தைகளை மட்டுமே வைத்துக் கொண்டு, விஷால் எப்படிப் பழிவாங்குகிறார் என்பது பிற்பாதி கதை.

இந்தப் படத்தில் முதல் பாராட்டுக்குரியவர் ஹீரோ விஷால். வாவ்... இப்படியொரு நேர்த்தியான நடிப்பு, நம்பும்படியான உடல் மொழியை சமீபத்தில் வேறு எந்த ஹீரோவும் காட்டியதில்லை. அதிர்ச்சியில் அல்லது சந்தோஷத்தில் மயங்கி தடாலென விழும் காட்சிகளிலெல்லாம் அதிர வைக்கிறார். ஒரு காட்சியில் அவர் முகம் தரையில் டமாலென்று விழும். லட்சுமி கோமாவில் கிடக்க, அவரைக் கண்டு உருகி அழும் காட்சிகளில் நெகிழ்த்துகிறார். படம் முழுக்க ஒரு ஹீரோவாக இல்லாமல், அந்த பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். க்ளைமாக்ஸ் சண்டை அசத்தல்!

லட்சுமி மேனன் இந்தப் படத்தின் சொத்து எனலாம். முதல் பாதி முழுக்க லட்சுமி மேனன் ராஜ்ஜியம்தான். அவரும் விஷாலும் நிஜ காதலர்களாக, நெருக்கமான காட்சிகளில் நிஜ கணவன் மனைவி மாதிரி தெரிகிறார்கள். A Perfect pair!

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி அவர் கோமாவில் படுத்துவிடும் காட்சிகளில் மனசு கலங்குகிறது.

விஷாலின் அம்மாவாக வரும் சரண்யா... ஒட்டுமொத்த மகன்களின் ஓட்டும் இந்த அம்மாவுக்குதான் போங்க. அப்படி ஒரு அருமையான நடிப்பு.

நான் சிகப்பு மனிதன் - விமர்சனம்

ஜெயப்பிரகாஷ்... இந்த பாத்திரத்தை வேறு யார் செய்திருந்தாலும் இத்தனை கச்சிதமாக இருந்திருக்காது.

விஷாலுக்கு பைக் ட்ரைவராக வரும் ஜெகன், இன்னொரு நாயகியாக வரும் இனியா, அவரை கள்ளத்தனமான காதலிப்பவர்அந்த நான்கு வில்லன்கள்... எல்லோருமே கச்சிதம்.

ஆனால் நண்பன் - கம் - வில்லனாக வரும் சுந்தர்ராமு சரியான செலக்ஷனாகத் தெரியவில்லை. அத்தனை பவர்புல் பாத்திரத்துக்கு அவர் பொருத்தமாகவும் இல்லை.

படத்தின் குறை என்று பார்த்தால் அந்த இரண்டாம் பாதியில் வரும் இனியா பகுதி. இன்னும்கூட வேறு மாதிரி அதை உருவாக்கியிருக்கலாம்.

வளவளவென இல்லாமல் நறுக்குத் தெறித்த மாதிரி வசனங்கள். எந்தக் காட்சியையும் ஜவ்வாக இழுக்காதது இன்னொரு ஆறுதல். இரண்டாம் பாதி முழுக்க ஹீரோயினே இல்லை. ஆனாலும் அது தெரியாத வகையில் விறுவிறுவென திரைக்கதையைக் கொண்டுபோயிருப்பது திருவின் சாமர்த்தியம்.

பெரிதாகப் பேசப்பட்ட முத்தக் காட்சி, நீச்சல் குள நெருக்கக் காட்சிகளுக்கு கதையில் எந்த அளவு முக்கியத்துவம் உள்ளது என்பதை நிச்சயம் தியேட்டரில் போய் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஜிவியின் பின்னணி இசை, பாடல்கள் இரண்டிலும் அவரது பழைய படங்களின் சாயல்... ஆனால் விஷால் - லட்சுமி மேனனுக்காக அந்த இரண்டு பாடல்களையும் பார்க்கலாம்!

ரிச்சர்டு எம் நாதனின் ஒளிப்பதிவு படத்துக்கு இன்னொரு ப்ளஸ். இரவு நேரக் காட்சி, உயரத்திலிருந்து விழும் வில்லனின் உருவத்தை நீரில் பிரதிபலிக்கும் காட்சி... அத்தனையிலும் முத்திரை பதித்திருக்கிறது.

நான் சிகப்பு மனிதன்.. பார்த்து ஆதரிக்க வேண்டிய வித்தியாசமான முயற்சி!

 

கனடாவில் ஐ பட இசை வெளியீடு.. அர்னால்ட் பங்கேற்பு

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா கனடாவில் நடக்கிறது. இதில் ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். குறிப்பாக எவர்கிரீன் ஆக்ஷன் ஹீரோ அர்னால்ட் ஷ்வார்ஸ்நேக்கர் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் - எமி ஜாக்ஸன் ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.

கனடாவில் ஐ பட இசை வெளியீடு.. அர்னால்ட் பங்கேற்பு

இதில் விக்ரம் தனது அநியாயத்துக்கு ஏற்றி இறக்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளாராம். இனி இப்படியெல்லாம் விஷப் பரீட்சை செய்யக் கூடாது என மருத்துவர்களே எச்சரிக்கும் அளவுக்கு மெனக்கெட்டு நடித்துள்ளார் விக்ரம். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் ஆவலை ஏகத்துக்கும் கிளப்பியிருக்கும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை கனடாவில் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

கனடாவில் நடக்கும் இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் பங்கேற்கின்றனர். அர்னால்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.

கமல் ஹாஸனின் தசாவதாரம் படத்துக்காக ஜாக்கி சானை சென்னைக்கு வரவழைத்தவர் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்பது நினைவிருக்கலாம்.