கயல் விமர்சனம்

Rating:
3.0/5
எஸ் ஷங்கர்

நடிப்பு: சந்திரன், ஆனந்தி, தேவராஜ், வின்சென்ட்

ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன்

இசை: டி இமான்

தயாரிப்பு: எஸ்கேபி ஆர்டிஸ்ட் மதன் & ஜேம்ஸ்

இயக்கம்: பிரபு சாலமன்

வாழ்க்கையின் வெளிச்சத்தைத் தேடிச் செல்லும் சந்திரன், வின்சென்ட் ஆகிய இருவருக்கும் ஒரே கொள்கைதான். ஆறு மாதம் வேலை.. ஆறு மாதம் ஜாலியாக ஊர் சுற்றுவது எனபதுதான் அது.

கயல் விமர்சனம்

அப்படி ஊர்ஊராக சுற்றிக் கொண்டிருக்கும்போது, ஒரு முறை காதல் ஜோடிக்கு உதவப் போய், காதலனுடன் ஓடிய பெண்ணின் சித்தப்பா யோகி தேவராஜிடம் எக்கச்சக்கமாக மாட்டிக் கொள்கிறார்கள்.

அப்போது தேவராஜ் வீட்டில் வேலை செய்யும் ஆனந்தி ஓடிப்போன பெண்ணைப் பற்றி விசாரிக்க வருகிறாள். அவரைப் பார்த்ததுமே காதல் வந்துவிடுகிறது ஹீரோவுக்கு.

ஓடிப்போன பெண் விஷயத்தில் சந்திரனைக் கொன்றுவிட தேவராஜின் ஆட்கள் முயலும்போதுதான் அந்தப் பெண் திரும்ப வருகிறாள். தன் காதலுக்கும் சந்திரனுக்கும் சம்பந்தமில்லை என்கிறாள். உடனே சந்திரனை ஊரைவிட்டே அனுப்பி விடுகிறார்கள்.

கயல் விமர்சனம்

அவனும் நண்பனும் கன்னியாகுமரிக்குப் போகிறார்கள். அவன் நினைவாகவே வாடும் ஆனந்தி, ஒரு கட்டத்தில் சந்திரனைத் தேடி கன்னியாகுமரி போகிறாள். ஒன்று சேர்ந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.

பிரபு சாலமன் தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த கயலும் அப்படித்தான். ஆனாலும் கதை மாந்தர்களையும் நிகழ்வுகளையும் முடிந்தவரை யதார்த்தமாக காட்சிப்படுத்தியுள்ளார்.

முதல் பாதி ஓரளவு சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், இடைவேளைக்குப் பிந்தைய நிகழ்வுகள் ஒரே இடத்தில் முடங்கிப் போனதைப் போன்ற உணர்வு.

நாயகனாக வரும் சந்திரன் இயல்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். முதல் படத்திலேயே இந்த அளவு நடிப்பது பெரிய விஷயம்தான்.

கயல் விமர்சனம்

படத்தில் ரொம்ப பொருத்தமான வேடத்தில் நடித்திருப்பவர் தேவராஜ். மிக இயல்பான நடிப்பு. படம் பார்ப்பவர்கள் கடைசியில் ஏகத்துக்கும் திட்டிவிட்டுப் போவது இவரைத்தான். அது அவர் நடிப்புக்கான பாராட்டு.

ஆனந்தி பார்க்க பக்கத்து வீட்டிலிருக்கும் சிறு பெண்ணாக இருக்கிறார். அந்த வேடத்துக்கும் கச்சிதமாய் பொருந்துகிறார். கண்களின் வழியே பாவங்களை வெளிப்படுத்தும் கலை நன்றாகவே கைவருகிறது அவருக்கு.

நண்பனாக வரும் வின்சென்ட்டும் தேறிவிடுகிறார்.

காட்சிகள் ஒவ்வொன்றும் ஏன் அவ்வளவு நீள்கின்றன, ஏன் வளவளவென்று பாத்திரங்கள் பேசிக் கொண்டே இருக்கின்றன என்று தெரியவில்லை.

அதேபோல அந்த சுனாமி காட்சி இந்தக் கதைக்கு எந்த அளவு தேவை என்ற கேள்வியும் எழுகிறது. அதே நேரம் சுனாமியைக் காட்சிப்படுத்தியதிலும், அதற்கான ஒலித் தரத்திலும் குறையொன்றுமில்லை.

இமானின் இசையும், வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவும் படத்தின் பாதி குறைகளை மறக்கடிக்கின்றன.

அழகாக படம் எடுக்க வேண்டும் என நினைப்பிலேயே இருந்த இயக்குநர், அந்த அழகான படத்தை சுவாரஸ்யமாகத் தருவதில் சற்று சறுக்கியிருக்கிறார்!

 

ரசிகர்களின் அமோக ஆதரவு... கூடுதலாக 100 தியேட்டர்களில் வெள்ளக்கார துரை ரிலீஸ்

சென்னை : மக்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து வெள்ளக்காரத் துரை படம் கூடுதலாக 100 திரையரங்குகளில் மீண்டும் திரையிடப் பட்டுள்ளது.

1000 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில், எழில் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வெள்ளக்கார துரை.

ரசிகர்களின் அமோக ஆதரவு... கூடுதலாக 100 தியேட்டர்களில் வெள்ளக்கார துரை ரிலீஸ்

விக்ரம் பிரபு முதன்முறையாக காமெடி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று 200 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் விக்ரம் பிரபுவின் ஜோடியாக திவ்யா நடித்துள்ளார்.

எழிலின் சிறந்த திரைக்கதையின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்த இப்படம் வெற்றி பெற்றது. எனவே தற்போது கூடுதலாக 100 திரையரங்குகளில் அப்படம் மீண்டும் திரையிடப் பட்டுள்ளது.

தனது முதல் படம் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக மீண்டும் நிறைய படங்களை தயாரிக்க இருப்பதாக அன்புசெழியன் தெரிவித்துள்ளார்.

 

உயிருக்கு போராடும் ரசிகை... நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன விஜய்!

சென்னை : சென்னையில் கடும் நோய் பாதிப்பில் சிக்கிப் போராடிவரும் ரசிகை ஒருவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் விஜய்.

சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜ புரத்தைச் சேர்ந்த அர்ச்சனா (25), பல லட்சம் பேரில் ஒருவருக்கு ஏற்படும் கடும் நோய் பாதிப்புக்கு ஆளாகி போராடி வருகிறார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லை. டாக்டர்கள் கை விரித்து விட்ட நிலையில், பேச முடியாமல், நடக்க முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார் அர்ச்சனா.

உயிருக்கு போராடும் ரசிகை... நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன விஜய்!

இந்நிலையில், தீவிர விஜய் ரசிகையான அர்ச்சனா, அவரை நேரில் சந்திக்க விரும்புவதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜயின் கவனத்திற்கு கொண்டு சென்றனர் அர்ச்சனாவின் பெற்றோர்.

அதனைத் தொடர்ந்து அர்ச்சனாவின் பிறந்தநாளன்று அவரை நேரில் சந்தித்தார் விஜய். கைகளை பற்றிக் கொண்டு அன்பாக பேசி மகிழ்ந்தார். அர்ச்சனாவின் உடல்நிலை பற்றியும் அவர் கேட்டு அறிந்தார்.

விஜய்யை நேரில் பார்த்ததும் அர்ச்சனா மிகவும் சந்தோஷமானார். முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது. பின்னர் பெற்றோரிடம் அர்ச்சனாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு விஜய் விடை பெற்று சென்றார்.

 

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் ‘புலி’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பெயர் 'புலி' என அதிகார்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

கத்தி படத்தைத் தொடர்ந்து சிம்பு தேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் என இரண்டு நாயகிகள். இது தவிர நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் நேரடி தமிழ்ப்படமாக இப்படத்தில் ஸ்ரீதேவி நடித்து வருகிறார்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தை தமீன் பிலிம்ஸ் மற்றும் பி.டி.செல்வக்குமார் இணைந்து தயாரித்து வருகிறார்கள். நட்டி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் ‘புலி’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஈ.சி.ஆர் சாலையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து இப்படத்தின் பாடல் மற்றும் சண்டைக்காட்சியை படமாக்கப் பட்டது.

இப்படத்தின் தலைப்பு மாரீசன், கருடா, போர்வால் என பல்வேறான யூகங்கள் உலா வந்தன. ஆனால், படக்குழு இன்னும் படத் தலைப்பு எதையும் இறுதி செய்யவில்லை. பொங்கல் அன்று படத் தலைப்பு டுவிட்டர் வாயிலாக வெளியிடப்படும் என்று அறிவித்திருத்தார்கள்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் ‘புலி’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்நிலையில், இன்று விஜய் - சிம்புதேவன் படத்தின் தலைப்பு 'புலி' என்று இறுதிசெய்யப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

கோடை விடுமுறையை ஒட்டி இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் படத்தை ஒரே சமயத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

 

எஸ்.ஜே. சூர்யா வைத்திருந்த "புலி"யை விஜய் கைப்பற்றியது எப்படி?

சென்னை: விஜய் நடித்து வரும் 58வது படத்தின் தலைப்பு புலி என்று அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நேரத்தில் ஒரு பிளாஷ்பேக் நினைவுக்கு வருகிறது.

தொடர் தோல்விகளால் தடுமாற்றத்தில் விஜய் இருந்த நேரம் அது. அந்த சமயத்தில், விஜய்க்கு தமிழ் சினிமாவில் குஷி என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. இப்படம்தான் விஜய்க்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்து அவரது மார்க்கெட் ஏறுமுகத்தை நோக்கி ஸ்திரமாக உயர்ந்தது. தனக்கு புது வாழ்க்கை அமைத்துக் கொடுத்த படம் குஷி என்று விஜய்யே பலமுறை கூறியுள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா வைத்திருந்த

இந்த நிலையில் சூர்யாவும், விஜய்யும், அப்பச்சன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் இணையத் திட்டமிட்டனர். படத்திற்குப் புலி என்று பெயர் வைத்தார் சூர்யா. ஆனால் திடீரென இந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டார் விஜய். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. இந்தப் படத்தின் திரைக்கதை வடிவமைப்பில் நடிகர் சிம்பு தலையிட்டதாகவும், இதை விஜய் விரும்பாமல் விலகிக் கொண்டதாகவும் பேச்சு அடிபட்டது.

அதன் பின்னர் தெலுங்கில் தனது புலியை வேறு பெயரில், வேறு விதமான கதையில் படமாக்கி ஹிட்டாக்கினார் சூர்யா. அதன் பின்னர் விஜய்யும், சூர்யாவும் இணையவில்லை. ஷங்கரின் நண்பன் படத்தில் நடிகர்களாக வந்து போயிருந்தார்கள். இடையில் எஸ்.ஜே.சூர்யாவின் இசை படத்தின் ஆடியோ ரிலீஸின்போது சிறப்பு விருந்தினராக விஜய் கலந்து கொண்டார்.

தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் என இரண்டு நாயகிகள்.

இப்படத்திற்கு மாரீசன், கருடா, போர்வாள், புலி எனப் பல்வேறான பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இறுதியில் புலி என்ற பெயரே சரியாக இருக்கும் எனப் படக்குழுவினர் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து விஜய்யே நேரடியாக சூர்யாவிடம் பேசி டைட்டிலை தருமாறு கேட்டாராம். அதை உடனடியாக ஏற்றுக் கொண்ட சூர்யா, டைட்டிலை விட்டுக் கொடுத்து விட்டதாக சொல்கிறார்கள்.

விஜய்க்காக டைட்டில்தானம் செய்வது சூர்யாவுக்கு இது முதல் முறையல்ல. இதற்குமுன் வில்லு என்ற டைட்டிலையும் எஸ்.ஜே.சூர்யா தான் வைத்திருந்தார் என்பதும் விஜய் கேட்டதால் அதை விட்டுக்கொடுத்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

தற்போது புலியையும் விட்டுக் கொடுத்துள்ளார்.. வில்லு கதி நேராமல் புலி வென்றால் சரிதான்!

 

என் மகள் ரேஞ்சே வேற, என்ன சம்பளம் கொடுக்கிறீங்க: பஞ்ச் பேசும் நடிகையின் அம்மா

சென்னை: ஊதா கலரு ரிப்பன் நடிகையின் தாய் தனது மகளுக்கு அளிக்கப்படும் சம்பளம் பற்றி தயாரிப்பாளர்களிடம் ஓவராக பேசுகிறாராம்.

சங்கத் தலைவர் படத்தின் மூலம் பிரபலமானவர் ஊதா கலரு ரிப்பன் நடிகை. அவர் நடித்த படம் ஒன்று அண்மையில் வெளியானது. நடிகைக்கும் சங்கத் தலைவருக்கும் நெருக்கம் அதிகரித்துவிட்டது என்றும், இதனால் நடிகரின் வீட்டில் பிரச்சனை என்றும் செய்திகள் வெளியானது.

என் மகள் ரேஞ்சுக்கு இதெல்லாம் ஒரு சம்பளமா: நடிகையின் அம்மா பஞ்ச்

இதையடுத்து நடிகர் தனது குடும்பத்துடன் பேட்டி அளித்து எங்களுக்குள் பிரச்சனை எல்லாம் இல்லை என்று கூறி வருகிறார். இந்நிலையில் நடிகை தனது சம்பள விஷயத்தை கவனிக்கும் பொறுப்பை தனது தாயிடம் ஒப்படைத்துள்ளாராம்.

நடிகையின் அம்மாவோ ஹே, ஹே, என் மகள் யாரு, அவர் ரேஞ்சு என்ன தெரியுமா? அப்படிபட்டவருக்கு நீங்கள் கொடுக்கும் சம்பளமா இது என்று ஓவராக பேசுகிறாராம். மகளை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்களிடம் தாய்க்குலம் சம்பளம் பற்றி பேசி கடுப்பேற்றுகிறாராம்.

இதற்கிடையே நடிகையோ தனக்கு தளபதியை மிகவும் பிடிக்கும் என்று ஒரு பிட்டை போட்டுள்ளார்.