தெனாலிராமன் விமர்சனம்

Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: வடிவேலு, மீனாக்ஷி தீக்ஷித், ராதாரவி, மனோபாலா

இசை: டி இமான்

ஒளிப்பதிவு: ராம்நாத் ஷெட்டி

தயாரிப்பு: கல்பாத்தி எஸ் அகோரம்

இயக்கம்: யுவராஜ் தயாளன்

திரை நகைச்சுவையில் உச்சத்தில் இருந்து திடீரென ஒதுக்கப்பட்ட வடிவேலுவின் மறு வருகை இந்த தெனாலிராமன் மூலம் நிகழ்ந்திருக்கிறது. இதோ... மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் அதே ஆர்ப்பாட்ட வடிவேலு.

இரண்டரை மணி நேரமும் வடிவேலுவின் சிரிப்பு மழையை எதிர்ப்பார்த்து படத்துக்குச் சென்ற ரசிகர்களுக்கு, இந்தப் படம் திருப்தி தந்திருக்கிறதா... பார்ப்போம்!

தெனாலிராமன் விமர்சனம்

விகட நகரப் பேரரசன் மாமன்னனுக்கு 36 மனைவிகள், 52 வாரிசுகள். இந்த பெருங்குடும்பத்தையும் தன் சுகத்தையும் கவனிப்பதிலேயே பெரும் நேரத்தைச் செலவிடும் மாமன்னன், நாட்டைப் பற்றி கிஞ்சித்தும் நினைப்பதில்லை. அவரது நவரத்ன அமைச்சர்களோ, மகா ஊழல் பேர்வழிகள், சோம்பேறிகள், நாட்டையே அந்நியனுக்கு விற்பவர்கள். தங்களுக்குள் நேர்மையாக இருந்த ஒரு அமைச்சரை போட்டுத் தள்ளவும் உடந்தையாக இருக்கிறார்கள்.

செத்துப் போன அந்த அமைச்சருக்குப் பதில், தடைகளைக் கடந்து தேர்வாகிறான் தெனாலிராமன். புரட்சிக் குழுவைச் சேர்ந்த அவன், மன்னனைக் கொல்லத்தான் தந்திரமாக வருகிறான். ஆனால் மன்னனின் இளகிய மனதைப் புரிந்து கொள்கிறான். தனது மதியூகத்தால் மன்னனுக்கு நெருக்கமாகிறான். மன்னன் மகள் இளவரசியின் இதயத்திலும் இடம்பிடிக்கிறான்.

தெனாலிராமன் விமர்சனம்

தெனாலிராமனால் தங்கள் ஊழல்கள் அம்பலமாவது உறுதியானதும், மன்னனையும் வடிவேலுவையும் சதி செய்து பிரிக்கிறார்கள் மற்ற அமைச்சர்கள். ஆனால் சதியைப் புரிந்து தெனாலிராமனை மீண்டும் அரண்மனைக்குள் அழைத்துக் கொள்கிறார் மன்னர்.

அப்போதுதான் நாட்டில் மக்கள் படும் அவலங்கள், திட்டங்கள் மக்களைப் போய்ச் சேராதது, சீன வணிகர்களிடம் நாட்டின் பொருளாதாரமே விற்கப்பட்டிருப்பதையெல்லாம் எடுத்துச் சொல்கிறான் தெனாலிராமன். நம்ப மறுக்கும் மன்னனை ஒரு நாள் மக்களோடு வாழ்ந்து பார்க்கச் சொல்கிறான் தெனாலி. மன்னனோடு பத்து நாள் தங்குவதாகச் சபதம் போட்டு அரண்மனையிலிருந்து வெளியேறுகிறார்.

மக்கள் படும் துன்பங்களை நேரில் பார்க்கும் மன்னன், அடுத்து என்ன செய்கிறார் என்பது மீதிக் கதை.

தெனாலிராமன் விமர்சனம்

கிட்டத்தட்ட இம்சை அரசன் 23-ம் புலிக்கேசியின் ஜெராக்ஸாக திரைக்கதை அமைப்பு. அதைத்தாண்டி வடிவேலு வெளியில் வர விரும்பவில்லை போலத் தெரிகிறது. இம்சை அரசனின் வெற்றிக்குக் காரணமே, அந்த நேரத்தில் அது புதுசாக வந்ததுதான்.

பெரிய இடைவெளிக்குப் பிறகு வருகிறார் வடிவேலு... அதுவும் கோடை நேரம்... குழந்தைகள்தான் அவரது பெரிய ரசிகர்கள்.. குடும்பம் குடும்பமாகப் பார்க்க வருவார்கள்... காட்சிக்குக் காட்சி சிரிப்பில் அரங்கம் அதிர வேண்டாமா... ம்ஹூம்!

படம் முழுக்க வசனங்கள்... வள வளவென்று காதைப் பதம் பார்க்கின்றன. வடிவேலுவின் பலம் வசனங்களில் இல்லையே!

மன்னனாகவும், தெனாலிராமனாகவும் வடிவேலு. இரண்டு பாத்திரங்களுமே புத்திசாலித்தனமானவை. அதனால்தான் எங்குமே அவரது இயல்பான நகைச்சுவை வெளியில் வர வாய்ப்பே அமையவில்லை. ஆனால் வடிவேலுவின் நடிப்புத் திறன், உடல் மொழி... அவரது சொத்தான குரல் அப்படியேதான் இருக்கிறது.

குடும்ப சுகத்தில் திளைக்கும் மாமன்னனை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். பானைக்குள் யானை போக வேண்டும் என அடம்பிடிப்பதிலும், ஒரு அமைச்சரின் தாய்மொழி தெலுங்கு என்பதைக் கண்டுபிடிப்பதிலும் தெனாலிராம வடிவேலு மிளிர்கிறார்.

நாயகியாக வரும் மீனாக்ஷி தீக்ஷித் முகத்தைக் காட்டுவதை விட முன்னழகைக் காட்டுவதற்குத்தான் சிரத்தை எடுத்திருக்கிறார்கள். முகம் சுமார்தான்! பெரிதாக நடிப்பைக் காட்ட வேண்டிய அவசியமும் படத்தில் அவருக்கு இல்லை.

ராதாரவி, பாலா சிங், ஜிஎம் குமார், மனோபாலா, ஜோ மல்லூரி, சந்தான பாரதி, தேவதர்ஷினி, ராஜேஷ், போஸ் வெங்கட், மன்சூர் அலிகான் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இருக்கிறது. தங்களுக்குக் கொடுத்த வேலையைக் கச்சிதமாகவே செய்து கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு சரித்திரப் படத்தை உருவாக்குவது சாமானிய விஷயமல்ல. ஆடம்பர செட்கள், அன்றைய கிராமங்கள், மக்களின் தோற்றங்களை அப்படியே கொண்டு வருவது பெரிய சாகசம். அந்த வகையில் இந்தப் படத்தை வரவேற்க வேண்டியதுதான்.

தெனாலிராமன் விமர்சனம்

இமானின் இசை பரவாயில்லை ரகம்தான். பாடல்களை இன்னும் கூட இனிமையாகக் கொடுத்திருக்கலாம்.

ஆனால் ராம்நாத் ஷெட்டியின் ஒளிப்பதிவு அருமையோ அருமை. அதுவும் வடிவேலு நடந்து வர, முன்னாள் ஒரு பறவை பறந்து வரும் காட்சியும், அந்த க்ளைமாக்ஸ் நிகழும் பள்ளத்தாக்கு காட்சியும் பிரமாதம்.

இந்தப் படம் வடிவேலு என்ற பெருங்கலைஞனின் மறுவருகையின் தொடக்கம்தான். அவரை ரசித்து ரசித்து திரைக்கதை உருவாக்கும் படைப்பாளிகளுடன் அவர் மீண்டும் இணையப் போகும் படங்களில் மீண்டும் அந்த நகைச்சுவை சாம்ராஜ்யம் விரியும் என்ற நம்பிக்கை இருக்கிறது!

நகைச்சுவைக் காட்சிகள் குறைவு... அல்லது இல்லை என்றே வைத்துக் கொண்டாலும், வடிவேலுவுக்காக இந்த தெனாலிராமனை குழந்தைகளோடு ஒருமுறை பார்க்கலாம்!

 

என்னோட வெறித்தனமான ரசிகர்கள் உடனிருக்கும் வரை... - விஜய்யின் திடீர் தைரியம்

ஜில்லா பட 100வது நாள் விழாவில் மோடியுடனான சந்திப்பு குறித்தோ, வேறு அரசியல் பற்றியோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை நடிகர் விஜய்.

அதே நேரம் என்னுடைய வெறித்தனமான ரசிகர்கள் உடனிருக்கும்வரை என்னை ஒன்றுமே செய்ய முடியாது என்ற அர்த்தம் வரும் வகையில் பேசினார் விஜய்.

என்னோட வெறித்தனமான ரசிகர்கள் உடனிருக்கும் வரை... - விஜய்யின் திடீர் தைரியம்

ஜில்லா படத்தின் 100 வது நாள் விழாவில் விஜய் பங்கேற்கிறார் என்றதுமே, அவர் ஏதாவது அரசியல் பேசுவார் என்றுதான் எதிர்ப்பார்த்தனர். சமீபத்தில்தான் மோடியை அவர் தேடிப் போய்ப் பார்த்துவிட்டு வந்திருந்ததால், நிச்சயம் அதுபற்றியாவது பேசுவார் என்று மீடியா காத்திருந்தது.

ஆனால் விஜய் அப்படியெல்லாம் எதுவுமே பேசவில்லை. தலைவா படம் குறித்துப் பேசியபோது கூட, அந்தப் பிரச்சினைகளைப் பேசாமல் தவிர்த்தார்.

அதே நேரம், 'என்னோட ஒவ்வொரு படமும் ரிலீசாகும் போதும் இது நல்லா ஓடணும்கிறதுல என்னை விட ஆர்வமாகவும், வெறியாகவும் இருக்காங்க. அப்படிப்பட்ட ரசிகர்கள் என் கூட இருக்கிற வரைக்கும்....? சரி விடுங்க...!' என்று தன் பேச்சின் நடுவே குறிப்பிட்டதில் வேண்டுமானால் அரசியல் இருக்குமோ.. இது தலைவாவுக்கு பிரச்சினை ஏற்படுத்தியவர்களுக்கு எதிரான குரலா... என்றெல்லாம் அர்த்தம் பார்க்க ஆரம்பித்துவிட்டனர் மீடியாக்காரர்கள்!

 

'முதல் திரையரங்க நிறுவனர்' சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்த தினம்.. ஒரு வித்தியாச விழா!

சின்ன வயதில் டூரிங் கொட்டகைகளில் படம் பார்த்த நினைவுகளைக் கிளறிவிட்டது நேற்று நடந்த ஒன்பது குழு சம்பத் படத்தின் இசை வெளியீட்டு விழா.

இது வெறும் இசை வெளியீட்டு விழா அல்ல... சினிமா தியேட்டர்களை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய சாமிக்கண்ணு வின்சென்ட்டின் பிறந்த நாளைக் கொண்டாடும் விழாவாக அமைந்தது. அவர் பிறந்த நாளை திரையரங்கு தினமாக நேற்று அறிவித்தனர்.

'முதல் திரையரங்க நிறுவனர்' சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்த தினம்.. ஒரு வித்தியாச விழா!

இதற்காக திறந்த வெளியில் ஒரு பெரிய திரை அமைத்து, டூரிங் டாக்கீஸ் செட்டப்பை போட்டிருந்தார்கள். டீ ஸ்டால் எல்லாம் அமைத்து, காளி மார்க் குளிர்பானங்களை வழங்கி, அந்த பழைய நினைவுகளுக்கே அழைத்துப் போய்விட்டார்கள்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் நாசர், அப்புக்குட்டி, வேதிகா, இயக்குனர்கள் நவீன், கமலக் கண்ணன், குழந்தை வேலப்பன், தயாரிப்பாளர் தனஞ்செயன் கலந்துகொண்டனர்.

நாசர் பேசுகையில், "சாமிக்கண்ணு அய்யாவுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்திருந்தால், எந்த அளவுக்கு சினிமாவின் மேல் காதல் இருந்திருந்தால் அந்தக் காலத்திலேயே திரையரங்கைக் கட்டியிருக்க வேண்டும்," என்றார்.

‘மூடர்கூடம்' நவீன் பேசும்போது,

"தியேட்டர்கள் தேவையா?'' என்று என்னிடம் கேட்டால் ‘நான் தேவைதான்' என்றே கூறுவேன். காரணம் மக்களிடையே சமத்துவத்தை உண்டுபண்ணுவதே தியேட்டர்கள்தான்.

‘மூடர்கூடம்' படத்தின் ஒருபாடலுக்காக ஒரு பள்ளியில் ஷூட்டிங் நடத்தும்போதுதான் தெரிந்தது அங்கே படிக்கும் குழந்தைகளிடத்தில் கூட ஏற்றத் தாழ்வை உண்டு பண்ணியிருக்கும் வேளையில் அனைத்து மக்களிடையே சமத்துவத்தை உருவாக்குவதே தியேட்டர்கள்தான். அப்படிப்பட்ட தியேட்டரை உருவாக்கிய சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்தநாளை ‘தியேட்டர் டே'யாக அறிவிக்கும் இவ்விழாவுக்கு என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி!''

தனஞ்செயன்

யுடிவி தனஞ்செயன் பேசும்போது, "இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரைப் பார்க்கும்போது ‘பருத்தி வீரன்' படத்தை நினைவுபடுத்துகிறது. நிச்சயம் அப்படம் போலவே இப்படமும் வெற்றி பெற வேண்டும். ஏப்ரல் 18ஆம் நாளை இனி வரும் ஒவ்வொரு வருடமும் சாமிக்கண்ணு வின்சென்ட்டை நாம் நினைத்துப் பார்த்துக் கொண்டேயிருப்போம். அதற்கு காரணம் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாதான்.

திருட்டு டிவிடியை நம்மால் ஒழிக்க முடியாது. ஆனால் சிறந்த படங்களை எடுத்தால் கண்டிப்பாக மக்கள் தியேட்டருக்கு வந்தே பார்ப்பார்கள். இது நான் பலமுறை நேரில் கண்ட உண்மை. இந்தப் படம் வெற்றிபெற என் வாழ்த்துகள்,'' என்றார்.

நடிகை வேதிகா

நடிகை வேதிகா பேசும்போது, "நான் சிறுவயதிலிருந்தே குடும்பத்தோடு ஞாயிற்றுக் கிழமை, வெள்ளிகிழமைகளில் படங்களை தியேட்டருக்கு சென்று பார்ப்போம். கொஞ்சம் பெரியவளானவுடன் என் நண்பர்களுடன் சென்று பார்ப்பேன்.

தியேட்டர்கள்தான் நம்மில் எந்தப் பாகுபாட்டையும் ஏற்படுத்தாமல் நம்மை ரசிக்க வைக்கின்றன. சந்தோசப்பட வைக்கின்றன. எனவே அப்படிப்பட்ட தியேட்டரை உருவாக்கிய சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்களின் பிறந்த நாளை திரையரங்க தினமாகக் கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி," என்றார்.

‘மதுபானக்கடை' கமலக்கண்ணன் பேசும்போது,

‘'என் தாத்தா ஒரு தியேட்டர் ஓனர். எனவே நான் சிறு வயதில் தியேட்டர் ஆபரேட்டர் ரூமிலியே இருப்பேன். படம் பார்க்கும் மக்கள் படம் பார்த்து சந்தோசப்படுவதை நேரடியாகவே பார்த்தவன் நான். அப்படிப்பட்ட தியேட்டரை உருவாக்கிய சாமிக்கண்ணு வின்சென்ட்டின் பிறந்த நாளை பிறந்த நாளை திரையரங்க தினமாகக் கொண்டாடுவதில் எனக்கு பெருமையே'', என்றார்.

நடிகர் அப்புக்குட்டி பேசும்போது,

‘'இந்த விழாவைப் பார்க்கும்போது எனக்கு என் ஊரில் படம் பார்க்கும் ஞாபகம் வந்துவிட்டது. தரையில் மண் குவித்து அதன் மேல் உட்கார்ந்து படம் பார்த்த ஞாபகம் வந்துவிட்டது. இந்த இசை வெளியீட்டு விழாவில் தியேட்டரை கண்டுபிடித்தவருக்கு பெருமை சேர்த்திருப்பது சூப்பர். இப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் பெரிய வெற்றி பெற்று, எனக்கும் அதிக சம்பளம் கொடுத்து மீண்டும் நடிக்க வாய்ப்பளிக்க வேண்டும்," என்றார்.

ரஞ்சித்குமார் தயாரிப்பில், முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜா.ரகுபதி இயக்கியுள்ள ‘ஒன்பது குழி சம்பத்' விரைவில் திரைக்கு வருகிறது.

 

ரஜினி, கமல் படங்களோடு போட்டி போடாதீர்கள் - இளம் நடிகர்களுக்கு நாசர் அட்வைஸ்

சென்னை: இளம் நடிகர்கள் ரஜினி, கமல், அஜீத் படங்களுடன் போட்டி போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் நடிகர் நாசர்.

ஒன்பது குழி சம்பத் இசை வெளியீட்டு விழா மற்றும் முதல் திரையரங்கை நிறுவிய சாமிக்கண்ணு வின்சென்ட்டின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற நாசர் பேசியதாவது:

ரஜினி, கமல் படங்களோடு போட்டி போடாதீர்கள் - இளம் நடிகர்களுக்கு நாசர் அட்வைஸ்

எனக்கு நானே

விழாவில் நடிகர் நாசர் பேசுகையில், "இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்த திருவுக்கு நன்றி. அதே நேரத்தில் என்னை அழைக்கும்போது இப்படத்தின் இசை வெளியீடு பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. இருந்தாலும் எனக்கு கோபம் இல்லை. சமீப காலமாக நான் மிக அதிகமாக பேச ஆரம்பித்திருக்கிறேன். எனக்கு நானே தனியாககூட பேசிக் கொண்டிருக்கிறேன்.

ஒரே மாதிரி...

எனக்கு சுதந்திர தினம், மகளிர் தினம், புத்தாண்டு தினம் இவற்றிற்கெல்லாம் வித்தியாசங்கள் தெரியவில்லை. எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் தோன்றுகிறது.

இதனால்தான் இந்தப் படக் குழுவிடம், சாமிக்கண்ணு அய்யாவின் பிறந்தநாளை திரை அரங்கு தினமாக அறிவிக்க வேண்டியிருப்பதற்கு தேவையான நடைமுறை சாத்தியங்களில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுமாறு சொல்லி இருக்கிறேன்.

அவருக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்திருந்தால், எந்த அளவுக்கு சினிமாவின் மேல் காதல் இருந்திருந்தால் அந்தக் காலத்திலேயே திரையரங்கைக் கட்டியிருக்க வேண்டும்.

அழிவில் தியேட்டர்கள்

இப்போது தியேட்டர்கள் அழிந்து வருவதைக் கண்டு நாம் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது இங்கு மட்டும்தான். நான் லண்டனில் நடைபெற்ற ‘தாண்டவம்' படத்தின் ஷூட்டிங்கின்போது, அங்கே நாடகங்களுக்கு சென்றேன். அங்கே சாதாரணமாக வருடத்திற்கு குறைந்தது 100 நாடகங்கள் நடைபெறும். ஒரு காட்சியின் டிக்கட்டின் விலை நம்மூர் மதிப்பின்படி ரூபாய் 2000 முதல் 7500 வரை ஆகும்.

மல்டிப்ளெக்ஸ்கள்...

நான் நடிக்க வாய்ப்பு தேடி அலையும் காலகட்டத்திலேயே தியேட்டர் இடிப்பதைக் கண்டு "நம் எதிர்காலம் என்னவாகுமோ?" என்று பயந்துள்ளேன். ஆனால் இப்போது அப்படியல்ல. காரணம் தியேட்டர்கள் இடிக்கப்பட்டாலும் நிறைய மல்டிப்ளக்ஸ்கள் வந்துகொண்டிருப்பது சந்தோஷமாக உள்ளது.

திருட்டு டிவிடியை அழிக்க முடியாது

திருட்டு டிவிடியை நாம் அழிக்க முடியாது. ஆனால் நாம் கண்டிப்பாக நல்ல படம் எடுத்தால் நிச்சயம் மக்கள் தியேட்டருக்கு வந்துதான் பார்ப்பார்கள்.

மேலும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் நல்ல படங்கள் கமல், ரஜினி, அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களோடு மோத வேண்டாம். காரணம் வெகுஜன சினிமாக்களோடு மோத வேண்டிய சூழ்நிலையால் கதைக்குத் தேவையில்லாத காதல், பாட்டு, சண்டை போன்றவற்றைத் திணிக்க வேண்டியுள்ளது.

சினிமா இல்லாமல் தமிழன் இல்லை

தமிழர்களின் வாழ்க்கையை இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று அரசியல் இன்னொன்று சினிமா. தமிழர்கள் சோறு தண்ணியில்லாமல் கூட இருந்துவிடுவார்கள். ஆனால் சினிமா இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது.

தியேட்டர்கள் இடிப்பதை நான் பொருளாதார சிக்கலாகப் பார்க்கவில்லை. கலாச்சார சீரழிவாகத்தான் பார்க்கிறேன். தயவு செய்து சினிமாவை வியாபாரமாகப் பார்க்க வேண்டாம். பொதுவாக ஒரு நடிகரின் படம் ரிலீசாகும்போது தியேட்டரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். ஆனால் நான் அதை வெறுக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில், படம் பார்க்கும்போது ரசிகனின் மனதில்தான் திருவிழாக்கோல உணர்வு இருக்க வேண்டும்," என்றார்.

 

நரேந்திர மோடி சினிமாவுக்கு தடை கோரும் காங்கிரஸ்!

டெல்லி: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்தரிக்கும் திரைப்படத்துக்கு தடை கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி.

நரேந்திர மோடியின் வாழ்க்கைச் சம்பவங்களை வைத்து ‘நமோ சவ்னே கமோ' (நமோவை அனைவரும் நேசிக்கின்றனர்) என்ற பெயரில் குஜராத்தி மொழி திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் குஜராத் முழுவதும் நேற்று ரிலீஸ் ஆவதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்த ஷரத் ஷர்மா அசப்பில் மோடி மாதிரிதான் இருந்தார். படத்தின் போஸ்டர்கள் இல்லை எனும் அளவுக்கு விளம்பரப்படுத்தி இருந்தார்கள்.

ஒன்றரை ஆண்டுகளாக இந்தப் படம் தயாரிப்பிலிருந்தது.

தேர்தல் தேதி நெருங்கும்போது பரபரப்பாக இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குஜராத் மாவட்ட காங்கிரஸ் சட்டத் துறை ஒருங்கிணைப்பாளர் நிகுஞ்ச் பாலார் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

‘இந்த யுக்தி தேர்தல் காலத்தில் மோடியை விளம்பரப்படுத்தும் பிரசார முயற்சியாகும். ஆனால், இவ்விவகாரத்தில் பா.ஜ.க.வின் பங்கு ஏதுமில்லாதது போல் காட்டிக் கொண்டு, இந்த விளம்பர செலவு முழுவதும் அந்த சினிமாவின் தயாரிப்பாளருடையது என்று காட்டிக் கொள்ள நினைக்கும் பா.ஜ.க.வின் போக்குக்கு தேர்தல் கமிஷன் இடம் அளித்துவிடக் கூடாது.

எனவே, தேர்தல்கள் நடந்து முடியும் வரை இந்த படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும்' என்று அந்த கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதே கோரிக்கையுடன் குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் சந்தோஷ் சிங் என்பவரும் மாநில தேர்தல் கமிஷனை அணுகியுள்ளார்.

இதற்கிடையில், இந்த படத்தை திரையிடுவதாக இருந்த பல திரையரங்குகள் சர்ச்சைகளுக்கு இடம் அளிக்காத வகையில் நேற்றைய ரிலீஸை நிறுத்தி வைத்துவிட்டன.