தலைவா டிவிடி விற்ற கடையை அடித்து நொறுக்கிய விஜய் ரசிகர்கள்!

தலைவா டிவிடி விற்ற கடையை அடித்து நொறுக்கிய விஜய் ரசிகர்கள்!

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தலைவா பட திருட்டு டிவிடிகள் விற்கப்பட்டதை அறிந்து விஜய் ரசிகர்கள் கொந்தளித்துப் போய் கடைய அடித்து நொறுக்கினர்.

பண்ருட்டி அருகே விஜய் நடித்த தலைவா படத்தின் டிவிடிக்களைப் போலீசார் பறிமுதல செய்தனர்.

தலைவா படம் தமிழகத்தில் வெளியாகவில்லை. மற்ற இடங்களில் வெளியாகி ஐந்து நாட்கள் ஆகிவிட்டது.

இப்போது படம் இணையதளங்களிலும் திருட்டு டிவிடிக்களாகவும் கிடைக்கின்றன.

பண்ருட்டியில்...

பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டை கடை வீதியில் புதுப்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

புதுப்பேட்டை கடை வீதியில் கையில் பையுடன் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்றிருந்தார். போலீசார் அவரை பிடித்து பையை சோதனையிட்டனர். அந்த பையில் நடிகர் விஜய் நடித்த ‘தலைவா' படத்தின் டிவிடிக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

திருட்டுத்தனமாக டிவிடி தயாரித்து விற்பனை செய்யப்படுவதை போலீசார் அறிந்தனர். விசாரணையில் அந்த வியாபாரி, பண்ருட்டியை அடுத்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த கணேசன் (46) என்பது தெரியவந்தது.

அதையடுத்து அவர் வைத்திருந்த சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கணேசன் கைது செய்யப்பட்டார்.

அறந்தாங்கியில்...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தலைவா பட திருட்டு டிவிடிகள் விற்கப்பட்டதை அறிந்து விஜய் ரசிகர்கள் கொந்தளித்துப் போய் கடைய அடித்து நொறுக்கினர்.

மற்ற டிவிடிகளை விட 10 ரூபாய் விலை அதிகமாக விற்கிறார்கள் அவற்றை தடுக்க வேண்டும் என்ற அறந்தாங்கி காவல் நிலையத்தில் விஜய் ரசிகர்கள் புகார் சொல்லியும், நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதைப் பார்த்த ரசிகர்கள், தலைவா டிவிடி விற்பனை செய்யும் கடைக்கு முன்பு திரண்டு கடைக்குள் நுழைந்து கடையை அடித்து நொறுக்கியதுடன், அனைத்து டிவிடிகளையும் வெளியில் அள்ளிவந்து கொட்டி உடைத்தார்கள்.

 

சென்னை எக்ஸ்பிரஸை கிழி, கிழின்னு கிழிக்கும் விமர்சகர்கள்: புடி, புடின்னு துரத்தும் ரசிகர்கள்

மும்பை: ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை விமர்சகர்கள் திட்டித் தீர்க்கையில் படம் கல்லாவில் கோடியைத் தாண்டி வசூல் செய்து கொண்டிருக்கிறது.

காமெடி படங்களை எடுப்பதில் வல்லவரான ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் ரம்ஜான் பண்டிகை தினத்தன்று ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸான 4 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

சென்னை எக்ஸ்பிரஸை கிழி, கிழின்னு கிழிக்கும் விமர்சகர்கள்: புடி, புடின்னு துரத்தும் ரசிகர்கள்

படம் என்னவோ தியேட்டர்களில் ஓடு, ஓடு என்று தான் ஓடுகிறது. ஆனால் விமர்சகர்கள் தான் படத்தை நார், நாராக கிழித்துக் கொண்டிருக்கின்றனர். பல படங்களில் இருந்து மசாலாவை எடுத்து அதை ஒரு குடுவையில் போட்டு குலுக்கு குலுக்கி அதையே புதிய மசாலாவாக காட்டியுள்ளார் ரோஹித் என்று விமர்சகர்கள் விளாசுகின்றனர்.

அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள், அறிவுக்கு வேலை என்பதே இல்லை என்று விமர்சகர்கள் பொறிந்து தள்ளினாலும் ரசிகர்கள் அதை காதில் வாங்குவதாகவே இல்லை. நீங்கள் உங்கள் பாட்டுக்கு கறித்துக் கொட்டுங்கள் நாங்கள் படத்தை பார்த்து கல்லாவை நிறப்புகிறோம் என்று தியேட்டர்களில் முந்தியடிக்கின்றனர்.

சென்னை எக்ஸ்பிரஸை கிழி, கிழின்னு கிழிக்கும் விமர்சகர்கள்: புடி, புடின்னு துரத்தும் ரசிகர்கள்

ஷாருக்கின் முந்தைய படங்களான ரா ஒன் மற்றும் ஜப் தக் ஹை ஜான் ஆகிய பாடங்கள் எதிர்பார்த்தபடி ஓடாத நிலையில் சென்னை எக்ஸ்பிரஸ் புல்லட் ரயில் வேகத்தில் ஓடுவது அவருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

 

தலைவா ரிலீஸ் ஆகலைனா, குண்டு வைப்பேன்...: ‘திருட்டு’ போனில் மிரட்டல் விடுத்த மர்மநபர்

தலைவா ரிலீஸ் ஆகலைனா, குண்டு வைப்பேன்...: ‘திருட்டு’ போனில் மிரட்டல் விடுத்த மர்மநபர்

சென்னை: தலைவா படத்தை உடனடியாக திரையிட வேண்டும், தாமதப்படுத்தினால் தியேட்டர்களுக்கு குண்டு வைப்பேன் என மிரட்டிய மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இயக்குனர் விஜய் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வரத் தயாராக உள்ள திரைப்படம் ‘தலைவா'. கடந்த வெள்ளியன்றே, ரம்ஜானை ஒட்டி திரைக்கு வரவேண்டிய தலைவா சில பல காரணங்களால் ரிலீசாகவில்லை.

முதலில், படத்தை திரையிட்டாக் தியேட்டரில் குண்டு வெடிக்கும் என வந்த மிரட்டல்களைத் தொடர்ந்து, தற்போது படத்தை வெளியிட தாமதப்படுத்தினால் தியேட்டருக்கு குண்டு வைப்போம் என மிரட்டல் விடுத்துள்ளார் ஒரு மர்மநபர்.

சென்னை உதயம் தியேட்டருக்கு நேற்று முந்தினம் வந்த தொலைபேசி அழைப்பில், ‘ தலைவா படத்தை வெளியிட தாமதம் ஆனால், தியேட்டருக்கு குண்டு வைக்கப்போவதாக மிரட்டியுள்ளான் மர்ம நபர் ஒருவன். பிரகு மீண்டும் அவனே போலீசைத் தொடர்பு கொண்டு கோயம்பேட்டிலும் குண்டு வைத்துள்ளதாகக் அச்சுறுத்தியுள்ளான்.

சென்னை உதயம் தியேட்டரிலும், சென்னை கோயம்பேட்டிலும் குண்டு வைத்துள்ளதாக அடுத்தடுத்து வந்த மர்மப் போனைத் தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மர்மபோன் வந்த தொலைபேசி எண்ணை போலீசார் ஆராய்ந்தபோது, அது மூன்று தினங்களுக்கு முன்னர் காணாமல் போன வடபழனியைச் சேர்ந்த ஒருவருடையது எனத் தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபரைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்ந்து வரும் மிரட்டல்களால் தியேட்டர் அதிபர்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரு தரப்பினர் படத்தை படத்தை வெளியிடக்கோரியும், மற்றொரு தரப்பினர் படத்தை வெளியிடக்கூடாது எனவும் மாறி, மாறி வரும் மிரட்டல்களால் குழப்பத்தில் உள்ளனர் தியேட்டர் முதலாளிகள்.

 

வேண்டாம் இந்தி வாய்ப்பு - நஸ்ரியா நஸீம்

வேண்டாம் இந்தி வாய்ப்பு - நஸ்ரியா நஸீம்

சென்னை: தன்னைத் தேடி வந்த இந்திப் பட வாய்ப்பை வேண்டாம் என மறுத்து சக நடிகைகளை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் நஸ்ரியா நஸீம்.

நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நஸ்ரியா.

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றதால் இவரைத் தேடி நிறைய வாய்ப்புகள்.

தமிழில் தனுஷுடன் 'நய்யாண்டி', ஆர்யாவுடன் 'ராஜா ராணி', ஜெய்யுடன் 'திருமணம் எனும் நிக்காஹ்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இதனிடையே நஸ்ரியாவுக்கு இந்தி படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. நல்ல சம்பளம் பேசியிருக்கிறார்கள். தமிழில் அவர் இப்போது வாங்குவதைவிட கிட்டத்தட்ட இருமடங்கு தர முன்வந்துள்ளனர்.

இருந்தும் அந்த வாய்ப்பை உதறியிருக்கிறார் நஸ்ரியா.

காரணம்?

நல்ல முகவெட்டும், அழகான உடல்கட்டும் உள்ள நஸ்ரியாவை கிட்டத்தட்ட டூ பீஸில் தோன்ற வேண்டும் என்பதை பிரதான நிபந்தனையாக வைத்தார்களாம் இந்திக்காரர்கள்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த டீலுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டாராம் நஸ்ரியா.

 

ஏ.ஆர். ரஹ்மானின் சிட்னி இசை நிகழ்ச்சி திடீர் ரத்து!

ஏ.ஆர். ரஹ்மானின் சிட்னி இசை நிகழ்ச்சி திடீர் ரத்து!

சிட்னி: ஏ.ஆர். ரஹ்மான் வரும் 24-ந் தேதி ஆஸ்திரேலியாவில் நடத்த இருந்த இசை நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதை இணையம் மூலம் அறிவித்துள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

இதற்காக www.ticketek.com.au/contactus என்ற இணையதளம் மூலமாகவும் பணத்தை திரும்பக் கொடுக்கக் கோரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் டிக்கெட் வாங்கியோர் டிக்கெட் வாங்கிய இடத்தில் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.

 

கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் 49ஓ!

கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் 49ஓ!

அதிரடியாக தனது அடுத்த இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள காமெடி கிங் கவுண்டமணி, அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவற்றில் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கிறார்!

சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தாலும், தமிழ் சினிமாவிலும், தொலைக்காட்சிகளிலும் கவுண்டமணியின் ஆதிக்கம் நீக்கமற நிறைந்திருப்பதைக் காணலாம்.

தொலைக்காட்சிகளில் சரி... சினிமாவில் எப்படி என்கிறீர்களா... அதான் சந்தானம் இருக்காரே... அவரது ஒவ்வொரு வசனங்களிலும் அதை உச்சரிப்பதிலும் கவுண்டரை அப்பட்டமாகக் காணலாம்.

இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவுண்டமணி. 12 படங்களில் ஹீரோவாக நடித்து, அவற்றில் சில படங்கள் நூறு நாட்களையும் தாண்டின. பல படங்களில் ஹீரோ என வேறு யார் பெயர் இருந்தாலும், கவுண்டர்தான் படத்தின் நிஜ நாயகனாக ஆதிக்கம் செலுத்தியிருந்தார்.

இடையில் எத்தனையோ படங்களில் வாய்ப்புகள் வந்தும் அவர் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை.

தங்கம் படத்துக்குப் பிறகு இப்போதுதான், சாந்தனுவுடன் 'வாய்மை' என்ற படத்தில் நடித்து வருகிறார் கவுண்டமணி.

அதைத் தொடர்ந்து ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறார். கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த ஆரோக்கியதாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

படத்திற்கு '49ஓ' என பெயர் வைத்திருக்கிறார்கள். இதில், விவசாயி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கவுண்டமணி. அவருடன் சத்யன், விடிவி கணேஷ், சோமசுந்தரம் ஆகியோர் நடிக்கிறார்கள். இது விவசாயிகள் பிரச்சினைகளைப் பேசும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வெற்றி மாறன் தயாரிக்கும் ஒரு படத்திலும் ஹீரோவாக நடிக்க கவுண்டமணி ஒப்புக் கொண்டுள்ளார்.

 

மென்டலா இசையமைச்சா மென்டலாத்தான் போகணும்! - இளையராஜா

மென்டலா இசையமைச்சா மென்டலாத்தான் போகணும்! - இளையராஜா

சென்னை: மென்டலாக யோசித்து யோசித்து உருவாக்கும் இசை இதயத்தைத் தொடாது. இசை என்பது தானாக வரவேண்டும். அதுதான் மனசைத் தொடும் என்றார் இசையமைப்பாளர் இளையராஜா.

லண்டன் மாநகரில் முதல் முறையாக இளையராஜாவின் 'ராஜா தி ராஜா' என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 24-ஆம் தேதி லண்டனின் புகழ் பெற்ற "ஓ 2' அரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜெயச்சந்திரன், எஸ்.பி.சைலஜா, யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக்ராஜா, மது பாலகிருஷ்ணன், சுசித்ரா, சின்மயி, பவதாரணி உள்ளிட்ட பாடகர்களும் 75-க்கும் அதிகமான இசைக் கலைஞர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் இளையராஜா கூறியது:

லண்டன் வாழ் தமிழர்களுக்கு மிகச் சிறந்த இசை நிகழ்ச்சியாக இது அமையும் என நினைக்கிறேன். மொத்தம் 43 பாடல்கள் இந்த நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஐந்து மணி நேரம் நடக்கும் நிகழ்ச்சிக்குத் தேவையான பாடல்கள் அதில் இடம்பெறும்.

அந்த காலத்தில் அரை மணி நேரத்தில் மெட்டுப் போட்டு 2 மணி நேரத்தில் உருவான பாடல்கள் இவை. அதே பாடல்களை இப்போது இந்த நிகழ்ச்சிக்காக இசைத்தும், பாடியும் பயிற்சி எடுக்கும் போது 2 நாள்கள் தேவைப்படுகின்றன.

பின்னணி இசைக்காக 3 நாள்களுக்கு மேல் எந்தப் படத்துக்கும் நான் எடுத்துக் கொண்டதில்லை. அப்படித்தான் இதுவரை 750-க்கும் அதிகமான படங்களை முடித்திருக்கிறேன்.

இன்றைக்கு மின்னணு சாதனங்கள் இசையில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த பிறகு, அந்த வேகம் குறைந்து விட்டது. இசை நிகழ்ச்சிக்காக குறிப்பிட்ட சில பாடல்களை இசைத்துப் பார்க்கும் இசைக் கலைஞர்கள் எப்படி இது போன்ற பாடல்களை உருவாக்கினீர்கள் என ஆச்சரியப்படுகிறார்கள். அது தானாக வந்தது... அதை அப்படியே தந்துவிட்டேன். யோசித்து யோசித்து மென்டலாக செய்தால் மென்டலாகத்தான் போகணும்...

ப்ரியா இசை

நான் இசை அமைத்த ப்ரியா படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் சிங்கப்பூரை சுற்றி பார்ப்பது போன்று பத்து நிமிடங்களுக்கு காட்சி வைத்திருப்பார்கள். தெருவில் நடப்பது, ஷாப்பிங் பண்ணுவது, டால்பின் ஷோ பார்ப்பது, இப்படி அந்த காட்சிகள் இருக்கும். இதற்கு பத்து நிமிடம் தொடர்ந்து பின்னணி இசை அமைக்க வேண்டும்.

ஒவ்வொரு ஷாட்டுக்கும் அது தனித்தனியாக இருக்க வேண்டும். அதற்கு நான் ஒரு மணி நேரத்தில் இசை அமைத்தேன். இப்போதுள்ள இசை அமைப்பாளர்கள் ஏன் உலகத்தில் உள்ள எந்த இசை அமைப்பாளரிடமும் இந்தக் காட்சியை கொடுங்கள்; குறைந்தது ஒரு மாதம், இரண்டு மாதம் எடுத்துக் கொள்வார்கள்.

மின்னனு சாதனங்களின் வருகையால் இசையமைப்பாளர்கள் சோம்பேறிகளாக்கிவிட்டது. எல்லா வேலையையும் கம்ப்யூட்டரே செய்வதால், இவர்கள் சோம்பேறிகளாகி விட்டார்கள்," என்றார்.

 

மெட்ராஸ் கஃபேவில் பிரபாகரனாக அஜய் ரத்னம்?

மெட்ராஸ் கஃபேவில் பிரபாகரனாக அஜய் ரத்னம்?

மும்பை: மெட்ராஸ் கஃபே படத்தில் அஜய் ரத்னம் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரன் போன்று உடையணிந்து, மீசை வைத்துள்ளார்.

ஷூஜித் சர்கார் இயக்கத்தில் ஜான் ஆபிரகாம், நர்கிஸ் ஃபக்ரி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தி படம் மெட்ராஸ் கஃபே. படத்தில் 1990களில் இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போர் குறித்து காட்டுகிறார்களாம். படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் போன்று சித்தரித்துள்ளனர் என்று தமிழ் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள அஜய் ரத்னத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்று உடை அணிந்துள்ளார். மேலும் அவரைப் போன்றே மீசையும் வைத்துள்ளார். அஜய்யை பார்த்தால் பிரபாகரன் தான் நினைவுக்கு வருகிறார். இதனால் அஜய் பிரபாகரனாக நடித்துள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இயக்குனரை கேட்டால் இது ஒரு படம், தயவு செய்து எதுவும் யூகிக்காதீர்கள் என்கிறார்.

 

கள்ளநோட்டுகளுடன் வங்கியில் சிக்கிய சினிமா நிர்வாகி!

சென்னை: வங்கியில் கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற சினிமா நிர்வாகியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் வங்கி ஊழியர்கள்.

சென்னை தியாகராயர் நகர் பசுல்லா ரோட்டில் உள்ள பிரபல தனியார் வங்கியில் இந்த சம்பவம் நடந்தது.

சோமசுந்தரம் என்ற சினிமா தயாரிப்பு நிர்வாகி நேற்று மாலையில் பணம் டெபாசிட் செய்ய வங்கிக்கு வந்தார்.

அவர் டெபாசிட் செய்ய முயன்ற பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 27 இருந்தன. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி நிர்வாகத்தினர், கள்ளநோட்டுகளையும், அதனை டெபாசிட் செய்த சோமசுந்தரத்தையும் பாண்டிபஜார் போலீசில் ஒப்படைத்தனர்.

பாண்டிபஜார் போலீசார் கள்ள நோட்டுகளை கைப்பற்றி, சோமசுந்தரத்திடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சோமசுந்தரம், பிரபல டிவி தொடர் தயாரிப்பாளரிடம் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி வருவது தெரியவந்தது. அந்த டிவி தொடர் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர், பழம்பெரும் சினிமா இயக்குநர் மகன் ஆவார்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.