போலீஸ்கிரியே ரவிக்குமாரின் கடைசி இந்தி படமாக இருக்கட்டும்: என்டிடிவி மூவீஸ்

மும்பை: கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய முதல் இந்தி படமான போலீஸ்கிரி இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

இயக்குனர் ஹரி எடுத்த சாமி படத்தை இந்தியில் கே.எஸ். ரவிக்குமார் போலீஸ்கிரி என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத்தும், த்ரிஷா கதாபாத்திரத்தில் பிராச்சி தேசாயும், கோட்டா ஸ்ரீனிவாச ராவ் வேடத்தில் பிரகாஷ் ராஜும் நடித்துள்ளனர்.

ரவிக்குமார் இயக்கிய முதல் இந்தி படமான போலீஸ்கிரி இன்று ரிலீஸாகியுள்ளது. இந்தப் படம் குறித்து என்.டி.டி.வி. விமர்சனம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்,

போலீஸ்கிரியே ரவிக்குமாரின் கடைசி இந்தி படமாக இருக்கட்டும்: என்டிடிவி மூவீஸ்

பிரபல தமிழ் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் முதல் இந்தி படம் போலீஸ்கிரி. இதுவே கடைசிப் படமாக இருப்பது நல்லது. படம் எடுக்க மும்பையில் ஏற்கனவே நிறைய திறமைசாலிகள் உள்ளனர். போலீஸ்கிரி ஓவர் சத்தமாக உள்ளது. நடிகர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு உரத்த குரலில் பேசியுள்ளனர். பின்னணி இசை காதில் பஞ்சை வைத்து அடைத்தாலும் அதையும் தாண்டிக் கொண்டு செல்லும் அளவுக்கு உள்ளது. கதையே ஒரே சத்தமும், கோபமுமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

சஞ்சய் தத் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் முன்பு நடித்த போலீஸ்கிரிக்கு என்.டி.டி.வி. மூவீஸ் 5க்கு 1 மதிப்பெண் அளித்துள்ளது.

கே.எஸ்.ரவிக்குமாருக்கு 1 மார்க் தான் என்றால், தற்போது பாலிவுட்டில் உள்ள இயக்குனர்களில் சிலரின் படங்களுக்கு பூஜ்ஜியம் தான் மதிப்பெண்ணாக அளிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

சிங்கம் 2 - சிறப்பு விமர்சனம்

எஸ் ஷங்கர்

Rating:
3.0/5

நடிகர்கள்: சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, விவேக், சந்தானம், அஞ்சலி, நாசர், விஜயகுமார், ரகுமான், டேனி

ஒளிப்பதிவு : ப்ரியன்

இசை: தேவி ஸ்ரீபிரசாத்

பிஆர்ஓ: ஜான்சன்

தயாரிப்பு: பிரின்ஸ் பிக்சர்ஸ்

இயக்கம்: ஹரி

எப்போதுமே பெரிய வெற்றியைப் பெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது பெரிய சவாலான விஷயம்.

சிங்கம் படத்தை எடுத்த ஹரி - சூர்யா கூட்டணிக்கு சிங்கம் 2 அப்படி ஒரு சவால்தான். அதில் ஜெயித்தார்களா... பார்த்துட்டா போச்சு!

சிங்கம் 2 - சிறப்பு விமர்சனம்

முதல் பகுதியில் போலீஸ் வேலையை ராஜினாமா செய்வது போல நாடகமாடிவிட்டு, என்சிசி மாஸ்டர் வேடத்தில் தூத்துக்குடியில் தங்கி சமூக விரோதிகளின் ஆயுதக் கடத்தலைக் கண்காணித்து வருகிறார் சூர்யா. அப்போதுதான் தெரிகிறது கடத்தப்படுவது ஆயுதங்கள் அல்ல, பெருமளவு போதைப் பொருள்கள் என்ற உண்மையும், அதில் உள்ளூர் தாதாக்கள் இருவருடன் வெளிநாட்டு கடத்தல்காரன் டேனியின் பங்கும் இருப்பது.

ஆனால் உள்ளூர் போலீசில் ஏகப்பட்ட கருப்பாடுகள். அதைச் சமாளிக்க யாரும் கேள்வி கேட்க முடியாத ஒரு சர்வ பலமிக்க போலீசாக தன்னை மாற்றிக் கொண்டு களமிறங்கும் சூர்யா, அந்த கடத்தல் கும்பலை தென்னாப்பிரிக்கா வரை விரட்டிச் சென்று எப்படிப் பிடிக்கிறார் என்பதுதான் சிங்கம் 2.

சிங்கம் 2 - சிறப்பு விமர்சனம்

இடையில் அவருக்காக காத்திருக்கும் காதலி அனுஷ்கா, அவரை விழுந்து விழுந்து காதலிக்கும் பள்ளி மாணவி ஹன்சிகா...

படத்தின் கதை என்னமோ சாதாரண ஆக்ஷன் மசாலாதான். ஆனால் சூர்யாவின் அசாதாரண நடிப்புதான் இந்தப் படசத்தின் ப்ளஸ். அதே நேரம் எதற்கெடுத்தாலும் அவரை சிங்கம் மாதிரி உறும வைத்திருப்பதும், ஒரு மாநில போலீசே துரைசிங்கம் என்ற ஒற்றை அதிகாரிதான் என்பது போல சித்தரித்திருப்பதும் கொஞ்சமல்ல... ரொம்ப ரொம்ப ஓவர்.

அதுவும் தென்னாப்பிரிக்காவுக்குள் போன பிறகு, அந்த நாட்டுப் போலீசுக்கே தெரியாத ரூட்டிலெல்லாம் சர்சர்ரென்று பாய்ந்து வில்லனை வீழ்த்துவது சிரிப்பு போலீசாக்கிவிட்டது ('இதான் இந்தியன் போலீஸ் மாஜிக்' என்று தென்னாப்பிரிக்க போலீஸ் வியப்பது போல வசனம் வேறு !).

படத்துக்கு தலைப்பு சிங்கம் என்று வைத்துவிட்டதாலோ என்னமோ, சண்டைக் காட்சிகளிலெல்லாம் சூர்யா பாய்ந்து பாய்ந்து தாக்குகிறார். சிங்கம் நகங்களால் கிழிப்பது போல கிராபிக்ஸ் வைத்திருக்கிறார்கள். இன்னும் ஓரிரு சதவீதம் ஓவராகிப் போயிருந்தால் கூட, ரசிகர்கள் சீரியஸ் காட்சிகளிலெல்லாம் சிரித்து வைத்திருப்பார்கள்.

சிங்கம் 2 - சிறப்பு விமர்சனம்

ஹீரோ சூர்யாவின் உழைப்பு உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. மனிதர் இதுவரை இல்லாத அளவு அழகு - கம்பீரமாகக் காட்சி தருகிறார். சில காட்சிகள் மிகை என்றாலும் கூட அவரது நடிப்பால் அதை நம்ப வைத்திருக்கிறார். ஊரையே கலாய்க்கும் சந்தானத்தை சமயம் கிடைக்கும்போதெல்லாம் பக்கி பக்கி என வறுத்தெடுக்கிறார்.

குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அசத்துகிறார் சூர்யா. அவரது உடல் மொழி, அபார முயற்சி காரணமாக, நீள நீளமான சண்டைக் காட்சிகளைக் கூட ஆர்வம் குறையாமல் ரசிகர்கள் பார்த்து கைத்தட்டுகிறார்கள். என்சிசி உடையிலிருந்து போலீஸ் யூனிபார்முக்கு அவர் மாறும் காட்சியும், டேனியைப் புரட்டி எடுக்கும் காட்சிகளிலும் முறுக்கேற்றுகிறார், பார்ப்பவர்களையும்.

இதற்கு முன் இல்லாத அளவு நடனக் காட்சிகள்... டபுள் உற்சாகத்துடன் கலக்கலாக ஆடியிருக்கிறார் சூர்யா.

இரண்டு ஹீரோயின்களில் அனுஷ்காதான் சூர்யாவுக்கு ஜோடி. ஆனால் இதிலும் இருவருக்கும் திருமணம் ஆகாமலே படம் முடிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாகத்துக்கு அடிபோட்டிருக்கிறார்கள் போல. சிங்கம் டான்ஸ் பாட்டுக்கு அனுஷ்கா ஆட, பார்ப்பவரின் மனசும் கூடவே அல்லாடுகிறது.

சிங்கம் 2 - சிறப்பு விமர்சனம்

ஹன்சிகாவை ப்ளஸ்டூ மாணவியாகக் காட்டுவதெல்லாம் டூ டூ மச். அவர் சூர்யா மீது வைக்கும் காதலில் அழுத்தமில்லாவிட்டாலும், அந்தப் பாத்திரத்தின் முடிவு ரசிகர்களிடம் அனுதாபத்தை தேடிக் கொள்கிறது.

இன்ஸ்பெக்டர் எரிமலையாக வரும் விவேக்கும், சூசையாக வரும் சந்தானமும் சிரிக்க வைக்க ரொம்பவே முயற்சிக்கிறார்கள். இருவரில் சந்தானத்துக்கு வாய்ப்பு அதிகமும் கூட. விவேக்கும் குறை வைக்கவில்லை.

சர்வதேச போதை மருந்து கடத்தல்காரன் டேனியாக வரும் ஹாலிவுட் நடிகர் டேனி சபானி மிரட்டலாக அறிமுகமாகிறார். ஆனால் ரொம்ப சவசவவென முடிகிறது அவரது க்ளைமாக்ஸ். மன்சூர் அலிகான், நாசர், ராதாரவி, ரகுமான், வசீம் கான், விஜயகுமார்... எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வசனங்களை ஒப்பித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

ப்ரியன் ஒளிப்பதிவில் உப்பளங்களும், கப்பல் சண்டைக் காட்சிகளும், அந்த ஏரியல் ஷாட்களும் படத்துக்கு புதிய நிறத்தைத் தருகின்றன.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உன் கண்ணுக்குள்ள.. பாட்டு மட்டும் ஆட வைக்கிறது. அதுவும் சிங்கம் படத்தில் இடம்பெற்ற காதல் வந்தாலே சாயல்தான். மற்றவை சொல்லும்படி இல்லை.

படம் 2.46 நிமிடம் ஓடுகிறது. இடைவேளையே இவ்வளவு நீளமா என்ற ஆயாசம் வருவது உண்மைதான். எடுத்த காட்சிகள் எதையுமே வெட்ட ஹரிக்கு மனசில்லை போலும். ஆனாலும் ஆக்ஷன், ரொமான்ஸ், சிரிப்பு, நல்ல லொகேஷன்கள் என பொழுதுபோக்குக்கு குறை வைக்கவில்லை ஹரி என்பதால், படத்தை ரசிக்க நீளம் ஒரு தடையாக இருக்காது!

சிங்கத்தின் உறுமல் கொஞ்சம் ஓவராக இருந்தாலும் சூர்யாவுக்காக இந்தப் படத்தை பார்க்கலாம்!

 

சான்ஸ் தேடும் முன்னாள் ஹீரோக்கள்...

முன்னொரு காலத்தில் ஒரளவு நன்றாகவே பேர் சம்பாதித்த முன்னாள் ஹீரோக்களான, இருக்கு, ஆனா இல்லை என குழப்பும் நடிகரும், குண்டக்கா மண்டக்கா என பேசும் நடிகரும் கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை நடித்தால் ஹீரோ தான் என ஒற்றைக் காலில் நின்று பார்த்தார்கள். ஆனால், சீந்துவாரில்லை.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாக தற்போது தான் இருவருக்கும் அறிவு வந்திருக்கிறதாம். இதற்குள் மியூசிக் என்ற பெயரில் சொந்தப் படம் ஆரம்பித்த குழப்ப நடிகர், மேற்கொண்டு படத்தைத் தொடர வழியில்லாமல் விழித்து நிற்கிறாராம்.

யாராவது வாய்ப்பு இருந்தால் கொடுங்கள் என அரசல் புரசலாக தூது விட்டு வருகிறார்களாம் இப்போது.

 

சிங்கம் 2... எலே படம் நல்லாருக்காம்லே!!

சென்னை: இதுவரை சூர்யா நடித்த எந்தப் படத்துக்கும் இல்லாத பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியாகியுள்ள சிங்கம் 2 படம் பார்த்தவர்கள் படம் விறுவிறுப்பாகவும் ரசிகனை ஒரு நிமிடம் கூட யோசிக்க விடாமல் கட்டிப் போடும் வகையில் இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வருகிற முதல் தகவல் செய்திகளை வைத்துப் பார்க்கும்போது சூர்யாவைப் பொறுத்தவரை இந்தப் படம் அவரை மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து காப்பாற்றியிருக்கிறது.

சிங்கம் 2... எலே படம் நல்லாருக்காம்லே!!

சூர்யா நடித்த ஏழாம் அறிவு படம் அவருக்கு வசூல் ரீதியாக நன்றாக அமைந்தாலும், எதிர்மறை விமர்சனங்களையே சந்தித்தது. சமீபத்தில் வெளியான மாற்றான் படம் தோல்வியைத் தழுவியது.

இந்த சூழலில் சிங்கம் 2 படம் குறித்து ஆரம்பத்தில் அவ்வளவு உற்சாகமான செய்திகள் வரவில்லை. இதனால் சூர்யா சற்று நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தார்.

இப்போதோ, சிங்கம் 2 படம் குறித்த முதல் தகவல்கள் சூர்யாவையும் அவரது ரசிகர்களையும் உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.

இந்தப் படத்தை ஒரு நாள் முன்பாகவே வெளிநாடுகளில் திரையிட்டுவிட்டனர். படம் பார்த்த ரசிகர்களில் ஒருவர், "இதற்கு முன் சூர்யாவுக்கு இப்படி ஒரு படம் அமையவே இல்லை. சிங்கம் படத்தை விட, இந்த இரண்டாம் பாகம் இரு மடங்கு விறுவிறுப்பாகவும் பொழுதுபோக்காகவும் உள்ளது. ஹரியின் கடும் உழைப்பு, சூர்யாவின் அநாயாசமான நடிப்பு, விவேக் - சந்தானத்தின் காமெடி, இந்தப் படத்தை வசூலில் அள்ள வைக்கப் போதுமானது," என்று கூறியுள்ளார்.

சிங்கம் 2... எலே படம் நல்லாருக்காம்லே!!

ஒரு இணையதளம் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், "இரண்டே முக்கால் மணிநேரம் இந்தப் படம் ஓடினாலும், ஒரு இடத்தில் கூட போரடிக்கவில்லை," என்று குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் இன்று சிங்கம் 2 ஏக அமர்க்களத்துடன் வெளியாகியுள்ளது. காலையிலேயே சிறப்புக் காட்சிகள் பார்த்தவர்கள் படம் குறித்து நல்லவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நம்ம விமர்சனம் எப்போங்கிறீங்களா... தோ... படத்துக்கு கிளம்பிட்டே இருக்கேன்!

சிங்கம் 2... எலே படம் நல்லாருக்காம்லே!!
 

சிங்கம் 2ல் ஆசிரியர்களை வம்பிழுத்துள்ள சந்தானம்

சிங்கம் 2ல் ஆசிரியர்களை வம்பிழுத்துள்ள சந்தானம்

சென்னை: சிங்கம் 2 படத்தில் சந்தானம் ஆசிரயர்களை வம்புக்கு இழுத்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா. ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ள சிங்கம் 2 இன்று தமிழகத்தில் ரிலீஸாகியுள்ளது. நேற்றே தியேட்டர்கள் முன்பு சிங்கம் 2 போஸ்டர்கள், பிளெக்ஸ் போர்டுகள் என்று அலங்காரம் தூள் கிளப்பியுள்ளது.

படம் நேற்றே வெளிநாடுகளில் ரிலீஸாகியுள்ளது. படத்தைப் பார்த்தவர்கள் சூர்யாவின் நடிப்பை புகழ்ந்து தள்ளியுள்ளனர். அப்படி என்றால் இந்த படம் சூர்யாவின் திரையுலக வரலாற்றில் மறக்கவே முடியாத படமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இந்நிலையில் படத்தில் காமெடியில் கலக்கி இருக்கும் சந்தானம் ஒரு வசனத்தில் ஆசிரியர்களை வம்புக்கு இழுத்துள்ளார். அந்த வசனம் இது தான், "தகுதி இல்லாதவன் தமிழ் வாத்தியார், புத்தி இல்லாதவன் புவியியல் வாத்தியார், அறிவே இல்லாதவன் அறிவியல் வாத்தியார்."

 

கோலிவுட்டுக்கு தாவத் துடிக்கும் அசினுக்கு உதவுவாரா கௌதம் மேனன்?

கோலிவுட்டுக்கு தாவத் துடிக்கும் அசினுக்கு உதவுவாரா கௌதம் மேனன்?

சென்னை: பாலிவுட்டில் இருந்து மீண்டும் கோலிவுட் பக்கம் போய்விடலாமா என்ற யோசனையில் இருக்கும் அசினுக்கு கௌதம் மேனன் உதவி செய்வாரா?

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தபோது அசின் பாலிவுட்டில் சாதிக்க வேண்டும் என்று மும்பையில் செட்டிலானார். பாலிவுட்டில் நான் தான் நம்பர் 1 ஹீரோயின் என்று அவர் கூறியதை யாரும் காது கொடுத்து கேட்கவில்லை. அங்கு அவருக்கு அப்படி ஒன்றும் பட வாய்ப்புகளும் வருவதில்லை.

இந்நிலையில் அவருக்கு வெளிநாட்டில் காதலர் உள்ளதாகவும் அதனால் தான் அவர் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வருவதாகவும் வட இந்திய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. பேசாமல் பாலிவுட்டில் இருந்து கோலிவுட் பக்கம் போய்விடலாமா என்று அசின் நீண்ட நாட்களாக யோசனையில் உள்ளார்.

இந்நிலையில் கௌதம் மேனன் தனது துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின் அல்லது சோனம் கபூரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். அப்படி அவர் அசினை தேர்வு செய்தால் அவருக்கு இது பெரிய உதவியாக இருக்கும். அதே சமயம் அண்மையில் தமிழகத்தில் வெளியான அம்பிகாபதி படத்தில் நடித்துள்ள சோனம் கபூரை நம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. இதையும் மனதில் வைத்து தான் கௌதம் ஹீரோயினை தேர்வு செய்யக்கூடும்.

 

அங்கிள்ஸா... நோ சான்ஸ் : பட வாய்ப்புகளை ஒதுக்கும் இன்னொரு நடிகை

ஏற்கனவே ஒரு நடிகை வயதான ஹீரோக்கள் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டுள்ள நிலையில், கேரளத்தில் இருந்து வந்த அந்த சுந்தரமான யானை நடிகைக்கும் மூத்த ஹீரோக்களுடன் நடித்து ரொம்பவே போரடித்து விட்டதாம்.

அம்மணியின் அழகில் மயங்கி மேற்கொண்டு சில பெரிய மூத்த நடிகர்கள் தங்களது படத்தில் நடிக்க இந்த மிஸஸ் புலியை அணுகினார்களாம். ஆனால், அம்மணியோ ஆளை விடுங்கப்பா, நா இப்போ தான் ஸ்கூல் படிக்கிறேன். உங்க கூடலாம் நடிச்சா சீக்கிரமா என்னையும் கிழவினு வீட்டுல உட்கார வச்சுடுவாங்க நு சொல்லிட்டாராம்.

அதனால, கதையோட சேர்த்து ஹீரோவும் பிடிச்சா தான் அம்மணி நடிக்க ஒத்துக் கொள்கிறாராம்.

புத்திசாலிப் பொண்ணு, ஏற்கனவே கண்ணழகி மூத்த நடிகர்களுடன் நடித்து இள நடிகர்களுக்கு ஆன்டியான கதை இவருக்கும் தெரிந்து விட்டது போலும்...

 

சிங்கம் 2: முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் டோணி?

சிங்கம் 2: முதல் நாள் முதல் ஷோ பார்த்த டோணி?

சென்னை: பிரியா ஆனந்த் சிங்கம் 2 படம் பார்க்க சென்றார். அவருடன் விசாகா சிங்கும், டோணியும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள சிங்கம் 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் நடிகை பிரியா ஆனந்த் மல்டிபிளக்ஸ் ஒன்றில் சிங்கம் 2 படத்தின் முதல் நாள் முதல் ஷோவை பார்க்க சென்றிருந்தார்.

அவருடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா நாயகி விசாகா சிங்கும் சென்றிருந்தார்.

இது குறித்து பிரியா ஆனந்த் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சிங்கம் 2 பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் குரல் போய்விட்டது. விசாகா சிங் மற்றும் டோணி உடன் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

அவர் டோணி என்று போட்டிருப்பதைப் பார்த்து பலரும் அவரிடம் ட்விட்டரில் டோணியா இல்லை அவரது மனைவியா என்று கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பிரியா இன்னும் பதில் அளிக்கவில்லை.