எஸ் ஷங்கர்
நடிப்பு: சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம்
இசை: அனிருத்
ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன்
தயாரிப்பு: ரெட்ஜெயன்ட் மூவீஸ்
இயக்கம்: கிருத்திகா உதயநிதி
கையில் காசிருந்தால் யாரிடமும் உதவியாளராக இருந்து படம் இயக்கக் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை... நான்கைந்து படங்களை சொந்தமாகவே எடுத்து ஒத்திகைப் பார்த்துக் கொள்ளலாம் என நினைக்கும் காலமிது.
பெரிய தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகாவின் முதல் படம். முதல் பாராவில் சொன்ன வரையறையை மீறாத அளவுக்குதான் படமும் வந்திருக்கிறது.
லண்டன் பெண்ணான ப்ரியா ஆனந்துக்கு புகைப்பட பைத்தியம். மொத்த தமிழகத்தையே புகைப்பட வடிவில் சர்வதேச கண்காட்சியில் வைக்க ஆசைப்படுகிறார். சென்னை வருகிறார். தங்க வீடு பார்க்கிறார்.
அதே நேரம் வேலை தேடி சென்னை வரும் சிவாவும் தனக்கென ஒரு வீடு தேடுகிறார். ஒரு புரோக்கர் செய்த வேலையால் இருவரும் ஒரே வீட்டில் தங்கி, கணவன் மனைவி என பொய் சொல்ல நேர்கிறது. அப்புறமென்ன.. க்ளைமாக்ஸ் என்னவாக இருக்கும் எனப் புரிகிறதல்லவா!
எழுபதுகள், எண்பதுகளில் இந்தி, தமிழ்ப் படங்களுக்கு இந்த மாதிரி கதைகள் புதுசாக இருந்தது. இன்றைக்கு? கதைதான் பழசென்றால் காட்சிகளிலும் வௌவால் வாடை..
ஒவ்வொரு காட்சியிலும் தனக்கு இது முதல் படம் என்பதற்கான அடையாளத்தை சுலபத்தில் கண்டுபிடிக்க வைக்கிறார் கிருத்திகா.
ஆணென்ன பெண்ணென்ன... திறமைக்குதான் சினிமாவில், அதுவும் இயக்குநர்கள் உலகில் இடம் எனும்போது, பெண் இயக்குநர் என்பதற்காக இந்த மாதிரி படங்களை சகித்துக் கொள்ள வேண்டியதில்லை!
சிவா.. வசன உச்சரிப்பு, பாடி லாங்குவேஜ் என எல்லாவற்றிலும் அதே சென்னை 28 இளைஞனாகவே இருக்கிறார். தனக்கென தனி பாணி வேண்டாம்... அட்லீஸ்ட் அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ற மாதிரியாகவாவது மாறணுமே.. ம்ஹூம்... எல்லா படத்திலும் அவர் நிஜ மிர்ச்சி சிவாவாகவே இருக்கிறார். இனி படங்களில் இவர் பாத்திரத்துக்கு சிவா என்ற நிஜப் பெயரை மட்டுமே பயன்படுத்தலாம்!
ஒரு ஹீரோயின் என்ற வகையில் ப்ரியா ஆனந்துக்கு இது இன்னொரு படம். அவரது அழகு ஓகே... நடிப்பு பரவாயில்லை. படம் ப்ரியாவுக்கு உதவுகிறதோ இல்லையோ... படத்தின் சில ப்ளஸ்களில் அவரும் ஒருவர்.
படத்துக்கு சின்ன ஆறுதல், கிட்டத்தட்ட பாதிப் படத்துக்குப் பிறகு வரும் சந்தானம். அவரது ஒற்றைவரி காமெடி வசனங்கள், ஆலையில்லா ஊரில் இலுப்பை மாதிரி ஆறுதல் தருகின்றன.
ஹீரோயினின் அப்பா, அந்த ஆன்டி எல்லாருமே மகா எரிச்சல்படுத்துகின்றனர். திரைக்கதை வசதிக்கேற்ப, அவ்வளவு பெரிய வீட்டில் ஒரே பாத்ரூம் மட்டும் வைத்து அவஸ்தைப்படுகிறார்கள், படுத்துகிறார்கள். க்ளைமாக்ஸை ஏன் இப்படி இழுத்தார் இயக்குநர் என்று புரியவில்லை.
அனிருத்தின் இசையில் தண்டம், முண்டம், கண்டம், மொக்கை, பொக்கை என்று இஷ்டத்துக்கும் வரிகள்.. இடையில் 'பாட்ஷா நான்தான்' என்று இரு வார்த்தைகள் போட்டு, ரஜினி டயலாக்குகளை ஓடவிடுகிறார்கள். இதெல்லாம் அவருக்குப் பெருமையான விஷயமில்ல தம்பி...
ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் அந்த மலைகிராம வீடு அழகு.
ஒரு அறிமுக இயக்குநர் என்றாலும், தெளிவான திரைக்கதையும், அதை திரையில் பிழையின்றி காட்சிப்படுத்தும் வித்தையும் அவசியம். அதற்கு கிருத்திகா குறைந்தது இன்னொரு படமாவது எடுக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது!