உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் திருவிழாவான ரஜினி பிறந்த நாளுக்கு இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. இந்த வாரம் முழுவதும், ரஜினி பல்வேறு நிகழ்ச்சிகளில் கூறிய புகழ்பெற்ற குட்டிச் சிறுகதைகளை தொகுத்து வழங்குகிறது ஒன் இந்தியா.
ரஜினி என்றால் நட்பு. நண்பனின் மகத்துவத்தை கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் தவறாமல் சொல்லி வருபவர் ரஜினி. அதேபோல, நட்புக்கு எந்த மேக்கப்பும் கூடாது என்பதில் கண்டிப்பாக இருப்பவர்.
நட்பின் மேன்மையைச் சொல்ல, தனது நண்பர்களில் ஒருவரான கலைப்புலி தாணுவின் முதல் படம் 'யார்?' வெற்றி விழாவில் ரஜினி சொன்ன குட்டிக் கதை இது. (இந்த விழாவுக்காக மும்பையில் தனது இந்திப் பட ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு வந்ததாக தாணு சொல்லி நெகிழ்ந்தார்... ஆண்டு 1985.)
விழாவில் ரஜினி சொன்ன கதை இது:
ஓரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு வந்துடுச்சி.
அந்த நேரத்துல அங்கு வந்த ஏழை நண்பன், எரிச்சலும், கவலையோடும் இருக்கும் தன் பணக்கார நண்பனைப் பார்த்து எப்பிடி டா இருக்கே என்று வழக்கம் போல கேட்டான்.
எரிச்சலான மனநிலையில் இருந்த பணக்கார நண்பன், 'எனக்கு உடனே இருபது லட்சம் ரூபாய் தேவை. உன்னால் முடியுமா?' என்று கோபமாக கேட்டு விட்டு தன் அறைக்குள் சென்றான் .
அவன் பின்னாடியே போன ஏழை நண்பன், 'அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா?' என்று கேட்டான்.
பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி.
ஏழை நண்பனை ஏளனமாக பார்த்தான்.
அரைமணி நேரத்தில் பணம் வந்தது.
பணக்கார நண்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
பணத்தை குடுத்தவாறு ஏழை நண்பன் சொன்னான்:
நீ எப்போ பார்த்தாலும் அதிகமா பணத்தைத்தான் சேர்த்தாய் நண்பா.. நல்ல நண்பர்களை சேர்க்க மறந்துவிட்டாய். நான் அதைச் சம்பாதித்து கொண்டேன்டா!", என்றான்.
இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள்.
இந்த உலகத்திலே எதை சேர்ப்பதைக் காட்டிலும் உண்மையான நண்பர்களைச் சேர்ப்பதுதான் உயிருக்கு பலம் தரும்... ஆகவே நட்பையும் நேசிப்போம்!"