விஜய்யையும் முருகதாஸையும் லைகாகாரர்கள் மிரட்டிட்டார்களாமே!

இப்படி ஒரு கதை சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

கத்தி படத்தின் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து லைகா நிறுவனம் விலகிக் கொண்டால் போதும், சிக்கலின்றி படம் வெளியாகும் என்பதுதான் படத்தின் தற்போதைய நிலை.

அதாவது கிளம்பியிருக்கும் எதிர்ப்பு என்பது கத்தி படத்துக்கு எதிரானதுதான். நடிகர் விஜய்க்கோ, இயக்கநர் ஏ ஆர் முருகதாசுக்கோ எதிரானதல்ல என்று தெளிவாக்கியுள்ளனர் போராட்டக்காரர்கள்.

விஜய்யையும் முருகதாஸையும் லைகாகாரர்கள் மிரட்டிட்டார்களாமே!

எனவே படத்தை லைகாவிடமிருந்து ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்குக் கைமாற்றிவிட விஜய்யும் முருகதாசும் பெரும் முயற்சி மேற்கொண்டதாகவும், அதற்கு லைகாகாரர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நாமும் கடந்த சனிக்கிழமை செய்தி வெளியிட்டோம்.

இப்போது இன்னொரு கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. அதாவது படத்திலிருந்து லைகாகாரர்கள் விலக மறுத்ததோடு நில்லாமல், விஜய், முருகதாஸ் தங்களுடன் போட்டுள்ள ஒப்பந்தங்களைக் காட்டி மிரட்டினார்களாம். படத்தில் யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது நாங்கள்தான். உங்களுக்கு கேட்ட சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது, என்றார்களாம்.

இந்தப் படம் குறித்தும், இதுபோன்ற செய்திகள் குறித்தும் தெளிவாக விஜய்யும் முருகதாஸும் லைகாகாரர்களும் தெளிவுபடுத்தும் இதுபோன்ற கதைகள் தொடரும் போல் தெரிகிறது!

 

ரூ 10 லட்சம் கட்டுங்க... இல்லன்னா கமலின் 'பாபநாச'த்துக்கு தடைதான்! - கேரள நீதிமன்றம்

கொச்சி: த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தை எடுக்க வேண்டுமென்றால், அதற்கு முன் நீதிமன்றத்தில் ரூ 10 லட்சத்தைக் கட்டுமாறு இயக்குநர் ஜீத்து ஜோசப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்குக்கு தடைகேட்டு எழுத்தாளர் சதீஷ் பால் என்பவர் கொச்சி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ததையும், அந்த வழக்கில் இந்தப் படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதையும் ஏற்கெனவே செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

இந்த சதீஷ் பால் எழுதிய ஒரு மழைக்காலத்து என்ற நாவல்தான் த்ரிஷ்யம் படத்தின் ஒரிஜினல் கதை. நாவலைப் படித்தபிறகு, த்ரிஷ்யம் படத்தைப் போட்டுப் பார்த்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி விஎஸ் வாசன் குற்றச்சாட்டை உறுதி செய்தார்.

ரூ 10 லட்சம் கட்டுங்க... இல்லன்னா கமலின் 'பாபநாச'த்துக்கு தடைதான்! - கேரள நீதிமன்றம்

இந்த வழக்கில் அவர் அளித்துள்ள தீர்ப்பில், "ஒரு மழைக்காலத்து நாவலுக்கும் த்ரிஷ்யம் படத்துக்கும் மிகச் சிறிய வித்தியாசம்தான் உள்ளது. மற்றபடி அந்த நாவலைத் தழுத்தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. இது காப்புரிமை விதி மீறலாகும்.

த்ரிஷ்யம் படத்தை தமிழில் உருவாக்க வேண்டும் என்றால், முன்கூட்டியே ரூ 10 லட்சத்தை பிணைத் தொகையாக நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்," என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்தப் படத்துக்கு தமிழில் பாபநாசம் என தலைப்பிடப்பட்டு, பூஜையும் போடப்பட்டுவிட்டது. இன்னும் சில தினங்களில் படப்பிடிப்புக்குச் செல்ல கமல் தயாராக இருந்த நிலையில் இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது.

அநேகமாக, நீதிமன்றம் சொன்ன தொகையைச் செலுத்தி, படப்பிடிப்புக்குச் செல்லவே கமல் விரும்புவார் என்று தெரிகிறது.

 

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் ரஜினிகாந்த் வழிபாடு!

கொல்லூர்: கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு நடத்தினார்.

ரஜினிகாந்த் இப்போது தனது லிங்கா படப்பிடிப்புக்காக கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் தங்கியுள்ளார். இன்னும் மூன்று வாரங்கள் வரை ஷிமோகாவைச் சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் ரஜினிகாந்த் வழிபாடு!

இந்த நிலையில், தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

கோயிலுக்கு வந்த அவரை, கோயில் நிர்வாகத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். கோயிலின் நிர்வாக அலுவலர் எல் எஸ் மூர்த்தி, கண்காணிப்பாளர் ராமகிருஷ்ண அடிகா ஆகியோரும் ரஜினியை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

 

காந்தி படத்தை இயக்கிய ரிச்சர்ட் அட்டன்பரோ மரணம்!

காந்தி படத்தை இயக்கிய ரிச்சர்ட் அட்டன்பரோ மரணம்!

லண்டன்: பிரிட்டனைச் சேர்ந்த பிரபல ஆங்கிலப் பட இயக்குநரும் நடிகருமான ரிச்சர்ட் அட்டன்பரோ நேற்று உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90.

60 ஆண்டு காலம் சினிமாவில் பணியாற்றிய அவர் ஆஸ்கர் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றவர். 1982-ம் ஆண்டு காந்தி திரைப்படத்தை இயக்கி, அந்தப் படத்துக்கு சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 8 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.

இயக்குநராக இரு ஆஸ்கர் விருதுகளையும், கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகளையும் வென்றவர் ரிச்சர்ட் அட்டன்பரோ.

பிரிட்டிஷ் சினிமாவின் தனிப்பெரும் அடையாளமாக திகழ்ந்த ரிச்சர்ட் அட்டென்பரோ, பல ஆங்கிலப் படங்களை தயாரித்து, இயக்கி, நடித்ததுடன் பல்வேறு திரைப்பட விழாக்களின் நடுவர்கள் குழுவிலும், விருதுகளுக்கான தேர்வுக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு மனிதநேய காரியங்களுக்கான நல்லெண்ணத் தூதராகவும் பணியாற்றியுள்ளார். ஜூராஸிக் பார்க், தி கிரேட் எஸ்கேப் உள்ளிட்ட பல படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது. 11 படங்களை இயக்கியுள்ள ரிச்சர்ட் அட்டன்பரோ, 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 13 படங்களைத் தயாரித்துள்ளார்.

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மபூஷன்', பிரிட்டனின் உயரிய ‘லார்ட்' உள்ளிட்ட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர் ரிச்சர்ட் அட்டன்பரோ.

சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தவர் நேற்று மரணமடைந்ததாக அவரது மகன் மைக்கேல் அட்டன்பரோ பிபிசிக்கு தெரிவித்தார்.

 

களஞ்சியம் உயிரைக் காப்பாத்துங்க!- நடிகை அஞ்சலிக்கு ஒரு விநோத வேண்டுகோள்

அஞ்சலி எப்படி சென்னை வருகிறார் பார்க்கிறேன்.. என் படத்தில் நடிக்காவிட்டால் எந்த மொழிப் படங்களிலும் நடிக்க முடியாது என்றெல்லாம் மிரட்டிக் கொண்டிருந்த இயக்குநர் களஞ்சியம், இப்போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் உள்ளார்.

அவரது உயிரைக் காப்பாற்றும்படி நடிகை அஞ்சலிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் களஞ்சியம் தரப்பினர்.

களஞ்சியம் உயிரைக் காப்பாத்துங்க!- நடிகை அஞ்சலிக்கு ஒரு விநோத வேண்டுகோள்

இயக்குனர் களஞ்சியம் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி ஓங்கோல் என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால் ஓங்கோலிலிருந்து திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.

உடம்பு முழுவதும் பலத்த அடி பட்டிருப்பதால் அவரால் முழுமையாக எதையும் உணர முடியவில்லையாம். யாரைப் பார்த்தாலும் முதலில் அவர்கள் அணிந்திருக்கும் உடையின் நிறம் மட்டுமே அவருக்குத் தெரிகிறதாம்.

இன்னும் எவ்வளவு காலம் சிகிச்சையில் இருப்பார் என்பது தெரியவில்லை. அஞ்சலி நடித்த ஊர்சுற்றிப் புராணம் படம் வேறு பாதியில் நிற்கிறது. சிகிச்சைக்காக யாரிடம் போய் உதவி கேட்டாலும் ஏற்கெனவே படத்திற்காக கொடுத்த பணம் என்ன ஆச்சு? என்று உதவ மறுக்கிறார்களாம்.

அதுவேறு இல்லாமல் களஞ்சியத்தின் உடல் நிலையை காரணம் காட்டி சிலர் கடனைக் கேட்டு நெருக்குகிறார்களாம். இந்த நெருக்கடியான சூழ்நிலையை மனதில் வைத்து அஞ்சலி பணம் கொடுத்தால் களஞ்சியத்தின் உயிர் காக்க முடியும்.

இதற்கான முயற்சியில் திரைப்பட சங்கங்கள் முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு உயிர் இழப்புக்கு காரணமாக வேண்டும் என்று அவர் சார்பில் கோரிக்கை வைத்துள்ளார்கள். செய்தியாளர்களுக்கும் அறிக்கை அனுப்பி வருகிறார்கள்.

தன் சொத்துகளை சித்தி பாரதி தேவியுடன் சேர்ந்து அபகரித்தார், தன்னைத் துன்புறுத்தினார் என்று களஞ்சியம் மீது அஞ்சலி புகார் கூறியது நினைவிருக்கலாம். அவரது ஊர் சுற்றிப் புராணத்தில் நடிக்க பணம் எதுவும் பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் களஞ்சியம் உயிரைக் காக்க பணம் கொடுங்கள் என்று அவர் தரப்பில் கேட்டுள்ளது விநோதமான கோரிக்கையாக உள்ளது.