அடுத்தவர் பணத்தில் உதவி வழங்குவதற்காக வெட்கப்படுகிறேன் - சேரன்


அடுத்தவர் பணத்தில் உதவி வழங்கும் அற்பத்தனத்தை சில நடிகர்கள் செய்கிறார்கள் என்று நடிகர் சிம்புவை காட்டமாக விமர்சித்துள்ளார் இயக்குநர் சேரன்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மக்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் - நடிகர் சேரன் கலந்து கொண்டார். ஏழைகளுக்கு ரூ 10 லட்சம் மதிப்பிலான உதவிப் பொருள்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்கினார்.

எம்எம்டிஏ காலனியில் உள்ள கார்ப்பொரேஷன் பள்ளிக்கு ரூ 1.48 லட்சம் மதிப்பில் கழிப்பறைகள் புதுப்பித்துத் தரப்பட்டன. இவற்றை பள்ளியிடம் அவர் ஒப்படைத்தார். இந்தப் பள்ளிக்கு ரூ 13000 செலவில் கணிப்பொறி அச்சு எந்திரம் வழங்கப்பட்டது.

10 மற்றும் 12-ம் வகுப்புகளில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்தப் பள்ளியில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் அறக்கட்டளை சார்பில் உதவிகள் வழங்கினார் சேரன்.

பின்னர் அவர் பேசுகையில், "இந்த விழாவில் கலந்துகொள்வதில் எனக்கு சந்தோஷம், இளைஞர்கள் இப்படி பட்ட செயல்களை செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற விழாக்களில் கலந்துகொள்ளும் போது எனக்கு மனதில் ஒரு கேள்வி எழும். நடிகனாக, இயக்குனராக நான் அறியப்படாலும்... இங்கே நின்று போட்டோவுக்கு ஃபோஸ் கொடுப்பதில் எனக்கு கொஞ்சம் சங்கடமாக தான் இருக்கிறது.

அதற்காக நான் வெட்கப்படுகிறேன்! இந்த உதவிகளில் எந்த ஈடுபாடும் எனக்கு இல்லை. அதில் 10பைசா கூட நான் உதவியாக கொடுக்கவில்லை. அப்படி எதுவுமே செய்யாமல் இங்கே நின்று போட்டோவுக்கு ஃபோஸ் கொடுப்பது கூச்சமாக தான் இருக்கிறது. யார் இதற்காக உண்மையாக உழைத்தார்களோ, உதவி செய்தார்களோ அவர்களுக்குத்தான் அந்த புகழ் சென்றடைய வேண்டும். உலகில் தலை சிறந்த விஷயம் தர்மம் தான்.

மக்கள் நற்பணி மன்ற இளைஞர்கள் இது போன்ற உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். அடுத்த வருட நிகழ்ச்சிக்கு நான் வருகிறேனோ இல்லையோ என் பங்கும் நிச்சயம் இதில் இருக்கும் என்றார்...
 

மீனவர் பிரச்சினை படமாகிறது... கதை- வசனம் ஜெயமோகன்; இயக்கம் மணிரத்னம்!


சிங்கள கடற்படையினரிடம் சிக்கி தமிழக மீனவர்கள் படும் பாடுகளை திரைப்படமாக உருவாக்குகிறார் மணிரத்னம்.

இந்தப் படத்துக்கான கதை வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார்.

தமிழக மீனவர்களுக்கும் சிங்கள கடற்படையினருக்கும் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. நடுக்கடலில் தமிழ் மீனவர்களை மடக்கி நிர்வாணப்படுத்தி துன்புறுத்தும் சிங்கள வெறியர்கள், பல நேரங்களில் சுட்டுக் கொன்றுவிடுவதும், கைது செய்து இலங்கைச் சிறைகளில் அடைப்பதும் தொடர்கிறது.

இதனை இந்திய அரசு இதுவரை தட்டிக் கேட்கவில்லை. தமிழக அரசின் எதிர்ப்புக் குரலை பொருட்படுத்துவதும் இல்லை மத்திய அரசு.

இந்த தொடர் அவலத்தை ஜெயமோகன் கதை வசனத்தில் ஒரு திரைப்படமாக உருவாக்குகிறார் மணிரத்னம்.

இந்தப் படத்தில் ஹீரோ ஹீரோயின் என அனைவரும் புதியவர்களே. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கெனவே பம்பாய் படத்தில் மணிரத்னமும் ராஜீவ் மேனனும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தை முழுக்க முழுக்க கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வர கடற்கரைகளில், கடல்பகுதிகளில் எடுக்கிறாராம் மணிரத்னம்.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டம் குறித்து அரைகுறையாக கருத்து ('இது ஆயுத வியாபாரிகளின் போராட்டம்') சொல்லி தமிழ் உணர்வாளர்களின் கண்டனத்துக்கு ஆளானவர் மணிரத்னம். இந்த முறை மீண்டும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான விஷயத்தைக் கையிலெடுக்கிறார்.

அதை எப்படி எடுக்கப் போகிறார் என்பதை தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறார்கள்!
 

அன்னாவை கைது செய்தது தவறு: தெலுங்கு, கன்னட நடிகர், நடிகையர் கண்டனம்


பெங்களூர்: அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர்-நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அன்னாவை கைது செய்தது தான் மத்திய அரசு செய்த தவறு என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

அன்னா ஹஸாரே திஹாரில் இருக்க நாடே அவரைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் அவருக்கு ஆதரவாக போராட்டங்கள், பேரணிகள் நடந்து கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் அவருக்கு ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. இணையதளத்தில் மட்டும் 3 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நாளைய இந்தியாவை ஒளிமயமானதாக்க இன்று அன்னா ஹஸாரேவை ஆதரியுங்கள். ஊழலை ஒழிக்க உதவி செய்யுங்கள். ஜெய் ஹிந்த்! ஜெய் ஜன் லோக்பால் என்று தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா டுவிட்டரில் எழுதியுள்ளார்.

இது குறித்து இயக்குனரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் கூறியதாவது,

அன்னாவின் இயக்கத்தை அரசு எந்த அளவுக்கு அடக்க நினைக்கிறதோ, அந்த அளவுக்கு ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. ஊழலால் பெரிதும் பாதிக்கப்படும் நடுத்தர மக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி அடையும். அன்னா மற்றும் அவரது குழுவின் கோரிக்கைகள் நியாமற்றவை என்று தோன்றவில்லை. நாட்டில் உள்ள அனைவரையும் லோக்பால் மசோதாவில் சேர்ப்பதில் என்ன தவறு?

கர்நாடகாவில் லோக்ஆயுக்தாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எதியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. குற்றம் சாட்டப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அன்னாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

அன்னா ஹஸாரே போன்று ஆயிரம் பேர் வர வேண்டிக் கொண்டிருக்கிறேன் என்று நடிகை குத்து ரம்யா டுவி்ட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் தொடர்ந்து அன்னாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் எழுதி வருகிறார். அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

அன்னாவை கைது செய்ததன் மூலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தவறு செய்துவிட்டது. அரசின் இந்த தவறால் அவர்களுக்கு ஆதரவாக இருந்த சில செய்தி சேனல்கள் கூட தற்போது அன்னாவுக்கு ஆதரவாக மாறியுள்ளன. எதுவும் நடக்கலாம் என்று கூறியுள்ளார்.

தெலுங்கு பாப் பாடகியும், நடிகையுமான ஸ்மிதா அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பிரபல கன்னட பாடகி சைத்ரா பெங்களூர் சுதந்திர பூங்காவில் அன்னாவுக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஊழலை ஒழிக்க வேண்டுமானால் அன்னா ஹஸாரே பின் செல்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

அன்புமணி ராமதாஸ் துவக்கி வைத்த 'சங்கையா!'


திரைப்பட விழாக்களில் அரிதாகக் கலந்துகொள்ளும் அரசியல் தலைவர்களில் ஒருவர் பாமகவின் முக்கியத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ்.

அப்படி அவர் அரிதாகக் கலந்து கொண்ட சினிமா நிகழ்ச்சி 'சங்கையா' திரைப்படத் துவக்கவிழா.

ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று காலை நடந்த இந்தப் படத்தின் பூஜை மற்றும் துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினரே அவர்தான். ஜெகன், பரணி நடிக்கும் இந்தப் படத்தை கேந்திரன் முனியசாமி இயக்குகிறார். இவர் அய்யன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரமுத்து பாடல்களை எழுத, கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். மக்கள் தொடர்பை நிகில் கவனிக்கிறார்.

அருண்குமார் ஒளிப்பதிவு செய்ய, பிரவீண் - ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்கின்றனர்.

படத் துவக்கவிழாவில் பங்கேற்ற அன்புமணி, குழுவினரை வாழ்த்தியதோடு, சமூகத்துக்கு பயனுள்ள படங்களை எடுக்க வேண்டும் என்றார். பசும்பொன் தேவர் கழகத் தலைவர் வெள்ளைச்சாமி தேவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
 

பப்ளிசிட்டிக்காக எங்களை பலியாக்குவதா? - பிரஜின் - சான்ட்ரா ஆதங்கம்


சுற்றுலா படத்தின் பப்ளிசிட்டிக்காக எங்களைப் பலியாக்கிவிட்டனர் அதன் தயாரிப்பாளரும் இயக்குநரும் என சின்னத்திரை நடிகர் பிரஜின் - சான்ட்ரா ஜோடி குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை குன்னூரில் படப்பிடிப்பிலிருந்தபோது பிரஜினும் சான்ட்ராவும் மாயமாகிவிட்டதாக குற்றம்சாட்டினர் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும்.

ஆனால் இதுகுறித்து விசாரிக்கையில் வேறு சில உண்மைகள் தெரிய வந்தன.

இதுகுறித்து பிரஜின் - சான்ட்ராவை தொடர்பு கொண்டு விசாரித்தோம். அவர் கூறுகையில், "இருபத்து மூன்று நாட்கள் தேதி கொடுத்து நடித்தோம். இன்னும் இருபத்தைந்து நாட்கள் எங்களுடைய வேலை பாக்கி இருந்தது. நாங்கள் தொடர்ந்து இருந்து நடித்துவிட்டுப் போகிறோம் என்று இயக்குனரிடம் சொன்னோம். அவர்களோ வேறு காட்சிகளை நாங்கள் சூட் பண்ண வேண்டியிருக்கு. உங்கள் வேலை முடிந்தது. அடுத்த செட்யூலில் உங்கள் தேதி தேவைப்படும். தற்போது நீங்கள் போகலாம் என டிக்கெட் எடுத்து தந்தவர்களே அவர்கள்தான்.

வீடு வந்து சேர்ந்தபோது எங்களுக்கு அதிர்ச்சி. நாங்கள் படப்பிடிப்பில் காணாமல் போய்விட்டோமென.. அப்படி பாதியில் ஓடி வரவேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை. நடிக்க போனவர்கள் முழுமையாக நடிக்காமல் ஏன் வரவேண்டும்? நானும் என் மனைவியும் எப்படியாவது நடித்து ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்றுதான் போராடி நடித்து வருகிறோம்.

இயக்குனர்தான் இப்படி எங்கள் பெயரைக் கெடுத்து செய்தி கொடுத்திருக்கிறார். நீங்கள் நன்றாக விசாரித்துப் பாருங்கள் எங்களைப் பற்றி எந்த சங்கத்திலும் அவர்கள் கம்ப்ளைன்ட் கொடுக்கவே இல்லை. பத்திரிகைகளில் மட்டும் எல்லா சங்கத்திலும் கம்ப்ளைன்ட் கொடுத்ததாக செய்தி வருகிறது. பப்ளிசிட்டிக்காக எங்களை பலிகடாவாக்கிவிட்டார் இயக்குனர். பப்ளிசிட்டிக்காக எங்கள் வாழ்க்கையை ஏன் கெடுக்க வேண்டும்?

அப்படி நாங்கள் தவறு செய்திருந்தால் சங்கங்கள் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். நடிக்காமல் கூட இருந்துவிட்டுப்போகிறோம். அப்படியில்லாவிட்டால் அவர்கள் பத்திரிகையை கூப்பிட்டு உண்மையை சொல்லவேண்டும் அதன்பிறகுதான் மேற்கொண்டு இந்த படத்தில் நடிக்க இருக்கிறோம்," என்றனர்.

பாவம் வளர்ற பிள்ளைகளை ஏம்பா வம்புல மாட்டிவிடுறீங்க?
 

மக்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ 10 லட்சம் உதவி வழங்கிய சேரன்!


சுதந்திர தினத்தையொட்டி மக்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ 10 லட்சம் நல உதவிகளை வழங்கினார் இயக்குநர் சேரன்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மக்கள் கல்வி அறக்கட்டளை பல்வேறு நற்பணிகளைச் செய்துவருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் - நடிகர் சேரன் கலந்து கொண்டார். ஏழைகளுக்கு ரூ 10 லட்சம் மதிப்பிலான உதவிப் பொருள்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்கினார்.

எம்எம்டிஏ காலனியில் உள்ள கார்ப்பொரேஷன் பள்ளிக்கு ரூ 1.48 லட்சம் மதிப்பில் கழிப்பறைகள் புதுப்பித்துத் தரப்பட்டன. இவற்றை பள்ளியிடம் அவர் ஒப்படைத்தார். இந்தப் பள்ளிக்கு ரூ 13000 செலவில் கணிப்பொறி அச்சு எந்திரம் வழங்கப்பட்டது.

10 மற்றும் 12-ம் வகுப்புகளில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்தப் பள்ளியில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் அறக்கட்டளை சார்பில் உதவிகள் வழங்கினார் சேரன்.
 

சம்பந்தமே இல்லாமல் என்மீது புகாரா? - நடிகர் ஆர்கே மறுப்பு


சென்னை: வேலைக்கு தேர்வு செய்த நபரை விட்டுவிட்டு, சம்பந்தமே இல்லாமல் என்மீது சில இளைஞர்கள் புகார் செய்துள்ளனர், என்று நடிகர் ஆர்கே தெரிவித்தார்.

‘எல்லாம் அவன் செயல்’, ‘அவன் இவன்’ போன்ற படங்களில் நடித்தவர் ஆர்.கே. பி வாசு இயக்கத்தில் இவர் நடித்துள்ள, ‘புலி வேசம்’ என்ற படம் விரைவில் வெளிவர உள்ளது. அதற்கான வேலைகளில் தீவிரமாக உள்ளார்.

இந்த நிலையில் இவர்மீது நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் சில இளைஞர்கள் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

சென்னை தியாகராயநகரில் ‘இன்டர்நேஷனல் பிஸ்னஸ் டெவலப்மெண்ட் கார்ப்ரேஷன்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் உள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் ஆர்.கே.வும், தலைமை நிர்வாக அதிகாரியாக விஜயகுமார் என்பவரும் செயல்பட்டதாகவும் கூறிய அவர்கள், அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தற்கான சம்பளத்தை தரவில்லை என்றும் கூறினர்.

இந்த மனு மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆர்.கே. மறுப்பு

இந்த புகார் தொடர்பாக நடிகர் ஆர்.கே.விடம், நிருபர்கள் கேட்டபோது, அந்த புகார் தவறானது என்றும், அவர்களை வேலைக்கு எடுத்தது விஜயகுமார் என்றும், அவர்தான் அதற்கு பொறுப்பாளி என்றும், தனக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவித்தார்.

“யார் பெயரை சொன்னால் உடனடி கவனம் பெறுமோ அவர் பெயரை பிரயோகப்படுத்தும் டெக்னிக் இது. போலீசார் தாராளமாக விசாரிக்கலாம். எந்த வகையில் இதில் சம்பந்தப்படாத என்பெயரை எதற்காக இழுக்க வேண்டும்?”, என்றார் அவர்.

 

விஜய்யின் 'ரோல் மாடல்' எம்.ஜி.ஆர்.: எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி


சென்னை: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் வரும் 28-ம் தேதி மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது.

இது குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. அரசியலில் இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்றில்லை. வேலாயுதம் வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அல்லது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும். தமிழகத்தில் ஆட்சி மாறிய பிறகு தான் திரைத்துறைக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது.

கடந்த ஆட்சியில் ஒரு சில நடிகர்கள் தான் கஷ்டப்பட்டார்கள் என்று கூற முடியாது. ஒட்டு மொத்த திரையுலகமே கட்டுண்டு கிடந்தது.

நடிகர் விஜய் மாதாமாதம் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். கடந்த மாதம் சேலத்தில் பிரமாண்டமான நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. இந்த மாதம் வரும் 28-ம் தேதி மதுரை புதூர் மூன்றுமாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. மைதானத்தில் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை தொண்டரணி தலைவர் மகேஸ்வரன், மாநகர தலைவர் தங்கப்பாண்டியன், புறநகர் தலைவர் இன்பராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய் 1992-ம் ஆண்டு திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. அது நற்பணி இயக்கமாகவும், தற்போது மக்கள் இயக்கமாகவும் மாறியுள்ளது. இது ஏழைகளுக்காகவும், தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பதோடு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது. ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம். இன்னும் பல நல்ல காரியங்களை செய்து வருகிறோம்.

விஜய்க்கு எம்.ஜி.ஆர். என்றால் ரொம்ப இஷ்டம். அவர் நடிகனாக வாழ்க்கையைத் துவங்கி, முதல்வராகி உலகை விட்டு மறைந்தும் மக்கள் மனதில் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் செய்த நல்ல விஷயங்கள் விஜய்க்கு ரொம்ப பிடிக்கும்.

அவரை ரோல் மாடலாக வைத்து தான் விஜய்யும் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார் என்றார்.
 

ரூ 5 கோடி கேட்டு சினிமா தயாரிப்பாளர் மகன் கடத்தல்!


தூத்துக்குடி: மார்கழி 16 என்ற படத்தின் தயாரிப்பாளர் ராஜ்குமாரின் 4 வயது மகனை சிலர் கடத்திச் சென்று ரூ 5 கோடி தருமாறு மிரட்டி வருகின்ரனர்.

தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார், தூத்துக்குடியில் ஷிப்பிங் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். மார்கழி 16 என்ற படத்தை எடுத்துள்ளார். இவரது மனைவி பிளவர் தூத்துக்குடி மாநகராட்சி 16-வது வார்டு தி.மு.க.கவுன்சிலராக உள்ளார். இவர்களது மகன் ஜெயவிஷால் உமேஷ் ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான்.

இன்று காலை ஜெயவிஷால் உமேஷை கார் டிரைவர் தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் பள்ளிக்கு அழைத்து சென்றார். சிறிது நேரம் கழித்து , ராஜ்குமார் வீட்டிற்கு ஒரு போன் வந்தது.

எதிர்முனையில் பேசிய நபர், ஜெயவிஷால் உமேசையும், டிரைவர் பாலகிருஷ்ணனையும் காருடன் கடத்தி வைத்துள்ளோம். அவர்களை விடுவிக்க ரூ.5 கோடி பணம் தர வேண்டும் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தூத்துக்குடி தென்பாகம் போலீசில் பிளவர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயவிஷால் உமேசை கடத்தி சென்றவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சினிமா படம் தயாரித்தது தொடர்பாக ராஜ்குமாருக்கும், சிலருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தக் கடத்தலுக்கு இவர்கள்தான் காரணமாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

டிரைவர் மீதும் போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். ராஜ்குமாரும் அவர் மனைவியும் திமுகவினர் என்பதால், அரசியல் ரீதியான பழிவாங்கல் ஏதேனும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கார் கிடைத்தது

இதற்கிடையே, திருச்செந்தூர் செல்லும் சாலையில் டிரைவரும் உமேஷும் சென்ற கார் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

காமசூத்ரா விளம்பரம்... தவறொன்றுமில்லையே! - ஸ்வேதா மேனன்


காமசூத்ரா விளம்பரப் படத்தில் நடித்ததில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. அது ஒன்றும் தவறான விளம்பரமும் அல்ல. செக்ஸ் ஊக்கமருந்து விளம்பரத்தில் நடிப்பதுதான் தவறே தவிர, காண்டம் விளம்பரத்தில் நடிப்பதல்ல, என்கிறார் ஸ்வேதா மேன்.

காம சூத்ரா விளம்பரத்தில் நடித்து புகழ்பெற்றவர் பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன்.

இந்த விளம்பரத்தில் நடிக்க கூச்சமாக இல்லையா, இதை தவறாக உணர்கிறீர்களா? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஸ்வேதா, "காமசூத்ரா விளம்பரத்தில் நான் நடித்ததில் எந்த தவறும் இல்லை. எந்த தர்மத்தையும் மீறி அதில் நான் தோன்றவில்லை. மக்கள் தொகையைக் கட்டுப் படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கு உதவியாகத்தான் நான் இருந்திருக்கிறேன்.

ஆண்கள் ஆணுறைகள் பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்கும் விளம்பரப் படம் அது. அவ்வளவுதான். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த அதை நானும் ஆதரிக்கிறேன். ஆனால் செக்ஸ் ஊக்க மருந்து காட்சிகளில் நடிப்பதுதான் தவறு. அதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்," என்றார்.
 

நாடு முழுவதும் தடங்கல்கள், தடைகளைக் கடந்து ஆரக்ஷன் வசூல் மழை


நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்புகள், போராட்ங்கள், தடைகள், தடங்கல்கள் இருந்தும் பிரகாஷ்ஜா இயக்கத்தில் வெளியான ஆரக்ஷன் படத்துக்கு அமோக வசூல்குவிந்து வருகிறதாம். வெளியான நான்கு நாட்களிலேயே அது ரூ.26 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது இன்னும் சில நாட்களில் இரட்டிப்பாகும் என்றும் பெரும் வசூலை அள்ளும் என்றும் பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அமிதாப் பச்சன், சைப் அலி கான்,தீபிகா படுகோன்உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வெள்ளிக்கிழமை வெளியானது. ரூ. 42 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் அதை விட இரண்டு மடங்கு வசூலை அள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தைத் திரையிட உ.பி., பஞ்சாப், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது பஞ்சாப் மற்றும் ஆந்திராவில் தடை நீக்கப்பட்டு விட்டது. இருப்பினும் இந்தி பேசும் மக்களின் தாயகமான உ.பிதான் முக்கியமானது என்பதால் அங்கும் தடை நீக்கப்பட்டால் படம் மிகப் பெரிய வசூலை எட்டும், புதிய சாதனை படைக்கும்எ ன பிரகாஷ் ஜா கூறுகிறார்.

உ.பியிலும் படத்தைத் திரையிடுவதற்கான சூழல் நெருங்கிவருவதாக ஜா நம்பிக்கையுடன் உள்ளார்.
 

விக்ரம் மறுத்ததால் கோபிசந்துடன் கைகோர்க்கும் பூபதி பாண்டியன்!


விக்ரமை ஹீரோவாக வைத்து ராஜ காளியம்மன் மூவீசுக்காக ஒரு படம் இயக்குவதாக முன்பு ஒப்புக் கொண்டிருந்தார் இயக்குநர் பூபதி பாண்டியன்.

வெடி என்று அதற்கு தலைப்பு கூட வைத்த நிலையில், திடீரென கதை பிடிக்கவில்லை என்று படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் விக்ரம். அதற்கு பதில்தான் விஜய் இயக்கத்தில் தெய்வத் திருமகளில் அவர் நடித்தார் என்பது நினைவிருக்கலாம்.

விக்ரமால் நிராகரிக்கப்பட்ட தனது ஸ்க்ரிப்டை அப்படியே தெலுங்குக்கு கொண்டுபோனார் பூபதி பாண்டியன். கதையைக் கேட்ட கோபிசந்த் தெலுங்கில் உடனே படத்தைத் தொடங்குங்கள், நான் தருகிறேன் கால்ஷீட் என்று உறுதியளிக்க, உற்சாகமாக வேலையை ஆரம்பித்துவிட்டார் பூபதி பாண்டியன்.

இந்தப் படத்தில் தமன்னா நாயகியாக நடிக்கிறார்.

பூபதி பாண்டியனுக்கு தெலுங்கில் இதுதான் முதல்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

அமலா பாலுக்கு பதில் நடிக்க ஒப்பந்தமானார் ஸ்ருதி ஹாஸன்!


ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் புதிய பட விவகாரத்தில் ஒரேநாளில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இன்று காலைதான் இந்தப் படத்திலிருந்து அதன் நாயகி அமலா பால் நீக்கப்பட்டார். தெலுங்குப் படங்களில் நடிக்க அவர் கால்ஷீட் கொடுத்துவிட்டதால், ஐஸ்வர்யா தனுஷின் ’3′ படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் தனுஷின் ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார் கமல் மகள் ஸ்ருதிஹாஸன்.

இந்தப் படத்துக்கு முதலில் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டவர் ஸ்ருதிதான். இவரை மனதில் கொண்டே கதையை எழுதியதாக ஐஸ்வர்யா தனுஷ் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

ஆனால் தெலுங்கில் பிஸியாக இருப்பதால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை என ஸ்ருதி தெரிவித்ததால் அமலா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இப்போது, ஸ்ருதியின் தெலுங்குப் படம் ஒன்று இரண்டு மாதங்களுக்கு தள்ளிப் போய்விட்டது. இந்த இடைவெளியில் ’3′ படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டார் ஸ்ருதி.

இதைத் தொடர்ந்து 3 படம் மிகப் பெரிய அந்தஸ்தைப் பெற்றுவிட்டது.

பின்னே, சூப்பர் ஸ்டாரின் மகள் இயக்குகிறார், சூப்பர் ஸ்டாரின் மருமகன் ஹீரோவா நடிக்கிறார், உலக நாயகன் கமல்ஹாஸன் மகள் ஹீரோயினாக நடிக்கிறார் என்றால் சும்மாவா!