சுதந்திர தினத்தன்று பிறந்தநாள் கொண்டாடும் ஆக்ஷன் கிங்

சென்னை: ஆக்ஷன் கிங் அர்ஜுன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சுதந்திர தினமான இன்று ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நன்றி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்த அவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சுதந்திர தினத்தன்று பிறந்தநாள் கொண்டாடும் ஆக்ஷன் கிங்

தேசப்பற்றுள்ள அர்ஜுன் தனது கையில் நம் தேசியக் கொடியை பச்சைக் குத்தியுள்ளார். அவர் ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா தந்தை வழியில் நடிப்பைத் தேர்வு செய்துள்ளார். அவர் விஷாலுடன் சேர்ந்து நடித்த பட்டத்து யானை அண்மையில் தான் ரிலீஸ் ஆனது.

முன்னதாக அர்ஜுனுக்கு ஷங்கரின் ஜென்டில்மேன் படம் தான் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. அந்த படத்திற்காக அவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ராதிகா தலைமையிலான சின்னத் திரை சங்கத்துக்கு இனி ஒத்துழைப்பில்லை - பெப்சி அறிவிப்பு

ராதிகா தலைமையிலான சின்னத் திரை சங்கத்துக்கு இனி ஒத்துழைப்பில்லை - பெப்சி அறிவிப்பு

சென்னை: தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்து, சங்கத்தை உடைக்க முயற்சிக்கும் நடிகை ராதிகா தலைமையிலான சின்னத் திரை தயாரிப்பாளர்களுக்கு நாளை முதல் எந்த வித ஒத்துழைப்பும் தருவதில்லை என பெப்சி அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் ராதிகாவின் தன்னிச்சையான போக்கையும் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதுகுறித்து இன்று சென்னையில் பெப்சி தலைவர் இயக்குநர் அமீர் தலைமையில் நடந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை:

சின்னத்திரை தயாரிப்பளர்களிடம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஒப்பந்தம் போடுவது வழக்கம். ஆனால் இந்த முறை ஒப்பந்த காலம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை புதிய ஒப்பந்தம் போடப்படவில்லை. இருப்பினும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட கூடாது என்ற காரணத்தினால சென்ற ஆண்டு தற்காலிக ஒப்பந்தம் போட்டு வேலை செய்துக்கொண்டு இருந்தோம். அதுவும் சென்ற மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இதற்கிடையில் பேச்சுவார்த்தைக்கு பலமுறை சின்னத்திரை நிர்வாகிகளை அழைத்தும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.

தொழிலாளர் நல ஆணையரிடம் புகார் கொடுத்தும், அங்கும் ராதிகா பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் தொழிலாளர் நல ஆணையர் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவு எடுக்கும்படி ஆலோசனை கூறினார். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் மீண்டும் தன்னிடம் புகார் கொடுக்கும்படி கூறினார்.

அதன்படி பேச்சுவார்த்தை நடத்த கடிதம் அனுப்பியும் அதை மதிக்காமல் பெப்ஸியை உடைத்து, புதிதாக ஒரு தொழிற் சங்கத்தை ஆரம்பிப்போம் என்று கூறி, சின்னத்திரையின் தலைவி ராதிகா அவர்கள் தனது ராடான் அலுவலகத்தில் புதிதாக விண்ணப்ப படிவம் கொடுத்து வருகிறார்.

இதைக் கண்டித்து ராதாரவி, சரத்குமார் அவர்களிடன் பல முறை முறையிட்டோம். அவர்களும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி சின்னத்திரை சார்பாக எந்தவித பதிலும் அளிக்காததால் ராதிகா குழுவைச் சார்ந்த சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கு நாளை (ஆகஸ்ட் 16) முதல் எந்தவித தொழி ஒத்துழைப்பும் தருவதில்லை என பெப்ஸி முடிவு செய்துள்ளது.

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 

வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிட்டேனே: புலம்பும் நடிகர்

சென்னை: ரம்ஜானுக்கு வர வேண்டிய படம் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் அந்த படத்திற்கு ஆதரவாக பேசிய மாப்பிள்ளை நடிகர் தானாக வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிவிட்டோமோ என்று புலம்புகிறாராம்.

தளபதியின் லீடர் படம் ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இது குறித்து மாப்பிள்ளை நடிகர் ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இது போன்று படங்களை தடை செய்வதற்கு செலவழிக்கும் நேரத்தை நாட்டை முன்னேற்ற செலவழித்திருந்தால் நாடு எவ்வளவோ முன்னேறி இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தை படித்த அவரது  நலம்விரும்பிகள் பெரிய, பெரிய நடிகர்களே இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக பேச பயந்து கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். இந்நிலையில் இது எல்லாம் உங்களுக்கு தேவையா என்று தெரிவித்துள்ளனர். உடனே மாப்பிள்ளை நடிகர் நான் அரசுக்கு எதிரானவனே இல்லை. நான் கூறிய கருத்தை ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டு தெரிவித்துவிட்டன என்று பல்டி அடித்துவிட்டார். ஆனால் நலம்விரும்பிகள் கூறியது அவருக்கு இன்னும் பயத்தை அளிக்கிறதாம்.

அதனால் வீணாக வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிவிட்டோமோ என்று புலம்பித் தள்ளுகிறாராம்.

 

10க்கும் மேற்பட்ட மொழிகளில் 'டப்' ஆகிறது ஷங்கரின் ஐ?

ஷங்கர் - விக்ரம் கூட்டணியில் உருவாகும் 'ஐ' திரைப்படத்தை 10க்கும் மேற்பட்ட மொழிகளில் டப் செய்து வெளியிடப் போகிறார்களாம்.

நண்பன் படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கும் ஐ படம் கோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

விக்ரம்- எமி ஜாக்சன் நடிக்கும் ஐ படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

10க்கும் மேற்பட்ட மொழிகளில் 'டப்' ஆகிறது ஷங்கரின் ஐ?

ஏற்கெனவே ஷங்கர் - விக்ரம் கூட்டணியில் வந்த அந்நியன் தமிழ் - தெலுங்கில் வெற்றிகரமாக ஓடியது.

கிட்டதட்ட 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஐ படத்தை 10க்கும் மேற்பட்ட மொழிகளில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இதற்குமுன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படம் ஜப்பான் உள்பட 9 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

தலைவா... நிபந்தனை அடிப்படையில் 23-ம் தேதி வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு!

தலைவா... நிபந்தனை அடிப்படையில் 23-ம் தேதி வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு!

சென்னை: விஜய்யின் தலைவா படத்தை சில நிபந்தனைகளின் அடிப்படையில் வரும் 23-ம் தேதி வெளியிடலாம்... என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தலைவா படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிவிட்ட இந்தப் படம் தமிழகத்தில் வெளியாகாததால், திருட்டு டிவிடிகள் வெளியாகிவிட்டன.

இந்த நிலையில் படம் இன்று வருமா நாளை வருமா என தவிப்போடு இருப்பதாக விஜய் வீடியோவில் உருக்கம் காட்டினார். திரையுலக பிரமுகர்கள் சிலரும் படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

இந்தப் படம் வெளியாக முதல்வர் உதவ வேண்டும் என திரும்பத் திரும்ப விஜய்யும் அவரைச் சார்ந்தவர்களும் கூறிவருவது அரசுத் தரப்புக்கு கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தை வெளியிடுவதும் வெளியிடாததும் திரையரங்குகள் விருப்பம். அரசையோ முதல்வரையோ இதில் தொடர்பு படுத்தக் கூடாது என தலைவா படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

எனவே இனி படத்தை வெளியிடுவது தியேட்டர்காரர்கள் கையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று தேனாம்பேட்டையில் தங்கள் சங்க அலுவலகத்தில் கூடிய திரையரங்கு உரிமையாளர்கள், தலைவா படத்தை வரும் 23-ம் தேதி வெளியிடலாமா என ஆலோசித்தனர்.

ஆனால் அன்று தேசிங்கு ராஜா படத்துக்கு 350 அரங்குகள் கொடுத்திருப்பதால், விஜய் தரப்பு கேட்கும் 500 அரங்குகளில் வெளியிடுவது சாத்தியமில்லை என்று தெரிவித்தனர். 250 முத்ல 300 அரங்குகளில், சதவீத அடிப்படையில் வேண்டுமானால் தலைவாவை வெளியிடலாம். மினிமம் கியாரண்டி அடிப்படையில் என்றால், படத்தை வெளியிட முடியாது என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.

இந்த நிபந்தனைக்கு விஜய் தரப்பு ஒப்புக் கொண்டால், தலைவா படம் அடுத்த வாரம் வெளியாகக் கூடும்.

 

ஷாஹித் அப்ரிதியை டென்ஷனாக்கிய முத்தம்!

கராச்சி: மெய்ன் ஹூன் அப்ரிதி படத்தில் வரும் முத்தக் காட்சி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதியை கோபமடைய செய்துள்ளது.

பாகிஸ்தானில் எடுக்கப்பட்டுள்ள படம் மெய்ன் ஹூன் அப்ரிதி. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி போன்று ஆக வேண்டும் என்று அசைப்படும் ஒரு இளைஞனின் கதை தான் மெய்ன் ஹூன் அப்ரிதி. இந்த படத்தில் ஹீரோ நைட் கிளப்பில் ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து முத்தமிடும் காட்சி உள்ளது. இந்த காட்சியை படத்தின் டிரெய்லரில் வைத்துள்ளனர்.

ஷாஹித் அப்ரிதியை டென்ஷனாக்கிய முத்தம்!

இதைப் பார்த்த அப்ரிதி கடுப்பாகிவிட்டார்.

படம் குறித்து அவர் கூறுகையில்,

மெய்ன் ஹூன் அப்ரிதி படம் என் வாழ்க்கையைப் பற்றியது அல்ல. குழந்தைகள் மத்தியில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் தான் நான் இந்த படத்திற்கு அனுமதி அளித்தேன். ஆனால் அந்த படத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத காட்சிகள் இருக்கக் கூடாது. பல குடும்பங்கள், குழந்தைகள் எனக்காக இந்த படத்தை பார்க்கச் செல்வார்கள். அவர்கள் படத்தை பார்த்துவிட்டு வருத்தப்படக் கூடாது. அதனால் அந்த காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

 

'தலைவா' பிரச்சனையை தீர்க்க விஜய்யுடன் சேர்ந்து சரத் சார் பாடுபடுகிறார்: ராதிகா

'தலைவா' பிரச்சனையை தீர்க்க விஜய்யுடன் சேர்ந்து சரத் சார் பாடுபடுகிறார்: ராதிகா

சென்னை: தலைவா பட பிரச்சனையை தீர்க்க விஜய்யுடன் சேர்ந்து சரத்குமார் பாடுபடுவதாக ராதிகா தெரிவித்துள்ளார்.

தலைவா படம் தமிழகத்தில் என்று ரிலீஸாகும் என்பது தான் விஜய் ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி. படத்தை ரிலீஸ் செய்ய விஜய்யும் தன்னால் முடிந்தவற்றை எல்லாம் செய்து வருகிறார். ஆனால் இன்னும் ஒரு தீர்வு கிடைக்கவில்லை.

இதற்கிடையே தலைவா திருட்டு சிடிக்கள் விற்பனை விஜய்யை வேதனைப்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்களோ திரையுலகினர் யாரும் உதவமாட்டார்களா என்று எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்து ராதிகா சரத்குமார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அமைதியாக செயல்படுவது சரியா? இல்லை பேசிக் கொண்டு ஒன்றுமே செய்யாமல் இருப்பது சரியா? விஜய் ரசிகர்களே, பிரச்சனையை தீர்க்க சரத் சார் விஜய்யுடன் சேர்ந்து பாடுபடுகிறார். அவர்களை பணியாற்ற விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

திட்டமிட்டு 'கொல்லப்படும்' ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்... காப்பாரா ஜெயலலிதா?

ஊட்டி: அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் கிட்டத்தட்ட மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஏப்ரல், மே மாத சம்பளத்தையே வழங்காமல் இழுத்தடித்த நிர்வாகம், இப்போது கவர்ச்சிகரமான விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது.

அரசாங்கம் நினைத்தால் இப்போது கூட இந்தத் தொழிற்சாலையை இந்தியாவின் மிக லாபகரமான தொழிற்சாலையாக மாற்றிவிட முடியும்.

திட்டமிட்டு 'கொல்லப்படும்' ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்... காப்பாரா ஜெயலலிதா?

1960-ல் தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலைதான், தென்கிழக்கு ஆசியாவிலேயே பிலிம் சுருள்கள், எக்ஸ்ரே பிலிம்கள், மேக்னடிக் ஒலிநாடாக்கள், பாலியெஸ்டர் எக்ஸ்ரே பிலிம்கள் தயாரிக்கும் ஒரே ஆலை என்ற பெருமைக்குரியதாக உள்ளது இன்று வரை!

ஆனால் இந்த ஆலையில் கடந்த ஆறு மாத காலமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இயக்கு முதலீடு ரூ 70 கோடி தேவைப்படுவதால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. ஆனால் ரூ 40 கோடி வரை மருத்துவத்துறை உற்பத்தி ஆர்டர் கிடைத்தும் உற்பத்தியை நிறுவனம் தொடங்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் பணியாளர்கள்.

இந்து என்ற பெயரில் வெளியான பிலிம் சுருள்கள் மற்றும் எக்ஸ்ரே பிலிம்கள் உலகெங்கும் மிகப் பிரபலம். இந்திய திரைத்துறை ஒரு காலத்தில் இந்த தொழிற்சாலையை நம்பித்தான் இருந்தது. கச்சா பிலிம்களை மொத்தமாக இந்த நிறுவனமே திரைத்துறைக்கு வழங்கி வந்தது.

பிலிம் சுருள்கள், மேக்னடிக் சுருள்களின் தேவை கணிசமாகக் குறைந்துவிட்டாலும், எக்ஸ் ரே மற்றும் பாலியெஸ்டர் பிலிம் சுருள்கள் உலகம் முழுக்க ஏராளமாகத் தேவைப்படுகின்றன.

இந்த எண்பதுகளின் இறுதிவரை இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட 5000 பணியாளர்கள் இருந்தனர். ஊட்டியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த தொழிற்சாலையின் இன்றைய பணியாளர் எண்ணிக்கை 734.

இப்போதும் இவர்களை மட்டுமே அல்லது இன்னும் சில தொழிலாளர்களை புதிதாகச் சேர்த்துக் கொண்டு எக்ஸ்ரே மற்றும் பாலியெஸ்டர் எக்ஸ்ரே, குறைந்த அளலில் பிலிம் சுருள்களைத் தயாரித்தால் கூட ஆண்டுக்கு ரூ 400 முதஸல் 500 கோடிக்கு மேல் லாபம் சம்பாதிக்க முடியும்.

ஆனால் ஆட்சியாளர்களுக்கு இதை இழுத்து மூடுவதே பிரதான நோக்கமாக இருந்தது, இருக்கிறது. 1996-ல் நலிந்த தொழிற்சாலையாக அறிவிக்கப்பட்ட எச்பிஎப்பை, 2003-லேயே நிரந்தரமாக மூட திட்டமிட்டனர். தமிழக கட்சிகளின் தொடர் போராட்டங்கற், தொழிலாளர் போராட்டங்கள், வழக்குகள் காரணமாக இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டுள்ளது.

இன்றைக்கோ நாளைக்கோ என இழுத்துக் கொண்டிருக்கும் ஆலை இது என்ற தோற்றத்தை வெற்றிகரமாக உருவாக்கினார்கள் ஆட்சியாளர்கள்.

திடீரென கடந்த ஆண்டு ரூ 302 கோடி திட்டத்தில் ஆலையை புதுப்பிக்கப் போவதாக அறிவித்தனர். அடுத்த சில வாரங்களுக்குள் அந்தத் திட்டம் கைவிடப்படுவதாகக் கூறினர்.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக 6 மாத சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது நிர்வாகம். இதைப் பெற்றுத் தரும் எந்த திட்டமும் தொழிற்சாலை நிர்வாகத்திடம் இல்லையாம்.

இன்று, சுதந்திரத் திருநாளில், நிறுவனத்தை ஒரேயடியாக இழுத்து மூட முதல் கட்டமாக, விஆர்எஸ் திட்டத்தை அறிவித்துள்ளனர். திட்டத்துக்கு பெயர் "Attractive VRS for HPF employees".

பாஜக, காங்கிரஸ் என பாரபட்சமில்லாமல், எல்லோருமே இந்த சீரழிவுக்குப் பொறுப்பு என்ற குற்றச்சாட்டு, இந்த நிறுவனத்தின் இந்நாள், முன்னாள் பணியாளர் மத்தியில் நிலவுகிறது.

இவர்களுக்கு இப்போதுள்ள ஒரே நம்பிக்கை முதல்வர் ஜெயலலிதா. நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை ரூ 500 கோடிக்கு வாங்கி, தனியார் ஆதிக்கம் வராமல் காத்தது போல, இந்த எச்பிஎப் ஆலையையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து மீண்டும் உற்பத்தியைத் தொடங்க வழி வகுப்பார் என எதிர்ப்பார்க்கிறார்கள். நடக்குமா?

 

படிப்பு முடியும் வரை காதல் வேண்டாம்- சேரன் மகளுக்கு கவுன்சிலிங்

படிப்பு முடியும் வரை காதல் வேண்டாம்- சேரன் மகளுக்கு கவுன்சிலிங்

சென்னை: 'காதல் பற்றி யோசிக்காமல் படிப்பில் கவனம் செலுத்து. பின்னர் திருமணத்தை நாங்களே முன் நின்று நடத்தி வைக்கிறோம்,' என சேரன் மகள் தாமினிக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.

தாமினிக்கும், சந்துரு என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டு, அதை சேரனும் ஆரம்பத்தில் எதிர்க்காமல் விட்டுவிட்டார். திருமணம் செய்து வைக்கும் அளவுக்குத் தயாராக இருந்தார் சேரன்.

ஆனால் சந்துருவின் நடத்தை மற்றும் நோக்கம் குறித்து சந்தேகம் எழுந்ததால், இப்போது இந்தக் காதலை ஏற்க மறுக்கிறார்கள் சேரன் தரப்பில்.

ஆனால் தாமினியோ சந்துருவைத்தான் திருமணம் செய்வேன் என அடம் பிடித்து வருகிறார். விஷயம் காவல் நிலையம், நீதிமன்றம் என போய்விட்டது.

கடந்த 6-ந்தேதி இரு தரப்பினரையும் அழைத்து நீதிபதி விசாரித்தார். பின்னர் தாமினி படித்த பள்ளிக்கூடத்தின் தாளாளர் வீட்டில் அவர் தங்கி இருக்க வேண்டும் என்றும் வருகிற 21-ந்தேதி மீண்டும் தாமினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

சந்துருவின் குடும்பம் பணம் பறிக்கும் கும்பல் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர் சேரன் தரப்பைச் சேர்ந்த இயக்குநர்கள் அமீர், ராம், சமுத்திரக்கனி உள்ளிட்டோர். அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இதையெல்லாம் சேரன் மகளுக்கு விளக்கி, அவரை இப்போதைக்கு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வைக்க ஆலோசனை கொடுக்கப்பட்டு வருகிறது.

படிப்பு முடியும் தருவாயில், சந்துருவும் உண்மையிலேயே காதலித்தால் திருமணம் செய்து வைக்கிறோம். அதுவரை எந்தப் பிரச்சினையும் செய்ய வேண்டாம் என்று அவருக்கு கவுன்சிலிங் தந்து வருகின்றனர்.

இவற்றை தாமினி ஏற்றுக் கொண்டு தந்தை பக்கம் திரும்புவாரா என்பதுதான் கேள்வி. தன் நிலையில் அப்போதும் தாமினி உறுதியாக இருந்தால் நீதிமன்றத்துக்கு வேறு வழி இல்லை. தாமினி விருப்பப்படி வாழ விடுவதைத் தவிர!