தமிழ், தெலுங்கு, இந்தியில் ரிலீஸாகும் விஜய் ஆண்டனியின் சலீம்

சென்னை: நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் சலீம் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் ரிலீஸாக இருக்கிறது.

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சலீம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆண்டனிக்கு ஜோடியாக அக்ஷா பர்தசானி நடித்துள்ளார். நான் படத்தில் நடிகராக வெற்றி கண்ட ஆண்டனி தற்போது சலீம் படம் மூலம் மீண்டும் நடிகராக ரசிகர்களை சந்திக்கவிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தியில் ரிலீஸாகும் விஜய் ஆண்டனியின் சலீம்

இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என்று ஒரே நேரத்தில் 3 மொழிகளில் ரிலீஸ் ஆகவிருக்கிறது என்று ஆண்டனி தெரிவித்துள்ளார். படத்தை 3 மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீயா வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

நான் படத்தை போன்றே சலீமும் தனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று ஆண்டனி நம்புகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தியில் ரிலீஸாகும் விஜய் ஆண்டனியின் சலீம்
 

அஜீத் ஈகோ பிடித்தவர், பிரச்சனைக்காரர் என்று நினைத்தேன்: ரகுமான்

அஜீத் ஈகோ பிடித்தவர், பிரச்சனைக்காரர் என்று நினைத்தேன்: ரகுமான்

சென்னை: அஜீத் ஈகோ பிடித்தவர், பிரச்சனைக்காரர் என்று தான் நினைத்ததாக நடிகர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரகுமான் பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

சிங்கம் 2 படத்தில் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரியுடன் சேர்ந்து பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. அவர்கள் இருவருமே மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பதால் தான் தொடர்ந்து வெற்றி பெறுகின்றனர்.

பில்லா படத்தில் நடிக்க முதலில் தயங்கினேன். பில்லா ஹீரோ அஜீத் ஈகோ பிடித்தவர், பிரச்சனைக்காரர் என்று நான் முதலில் நினைத்தேன். அஜீத்துடன் பணியாற்றுவது மிகவும் கஷ்டம் என்று கேள்விப்பட்டதை நம்பினேன். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று இயக்குனர் விஷ்ணுவர்தன் உறுதி அளித்த பிறகே படத்தில் நடிகக் ஒப்புக் கொண்டேன்.

ஷூட்டிங் துவங்கியதும் அஜீத்தை பற்றி நான் கேள்விப்பட்டது தவறு என்பது தெரிந்தது. அவர் ஒரு இனிமையான மனிதர். அவர் மதிய வேளையில் சாப்பிட தனது கேரவனுக்கு செல்வதற்கு பதில் எங்களுடன் வந்து உட்கார்ந்து சாப்பிடுவார் என்றார்.

 

தலைவா: ஒரு விஜய் ரசிகனின் கவலை...

சென்னை: தலைவா படம் குறித்து தீவிர விஜய் ரசிகர் ஒருவர் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

இளையதளபதியின் தலைவா படம் வரும் ரம்ஜான் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் தனது கவலையை தெரிவித்துள்ளார். விஜய் படம் எப்பொழுது ரிலீஸ் ஆனாலும் முதல் நாள் முதல் காட்சிக்கு தான் மட்டும் போகாமல் தனது சொந்த செலவில் தனது நண்பர்களையும் அழைத்துச் செல்பவர் அந்த ரசிகர்.

அவர் தலைவா குறித்து நம்மிடம் கூறுகையில்,

விஜய்யின் துப்பாக்கி படத்திற்கு கூட இந்த அளவுக்கு பில்ட்அப் கொடுக்கவில்லை. ஆனால் தலைவா படத்திற்கு சூப்பர் ஸ்டார் பட ரேஞ்சில் விளம்பரம் செய்கின்றனர். எந்த பில்ட்அப்பும் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்தால் கூட அது எங்கள் விஜய்க்கு வெற்றிகரமானதாக அமையும். ஆனால் தற்போது ஓவர் பில்ட்அப் கொடுத்துள்ளதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அது தான் பயமாக இருக்கிறது என்றார்.

 

ஜெனிலியாவுக்கு ‘நவ்ரா’ அனுப்பிய முதலும், கடைசியுமான ‘தந்தி’...

ஜெனிலியாவுக்கு ‘நவ்ரா’ அனுப்பிய முதலும், கடைசியுமான ‘தந்தி’...

மும்பை: பாலிவுட்டில் தற்போது ஜெனிலியா மற்றும் அவரது காதல் கணவர் ரித்திஷ் தேஷ்முக்கின் காதல் மிகவும் பிரபலம். எதையாவது வித்தியாசமாக செய்து தன் அன்பு மனைவிக்கு பரிசளிக்க நினைத்த ரித்திஷ்க்கு ஞாபகத்தில் வந்தது ‘தந்தி'.

கடந்த மாதம் 15ம் தேதி தனது 160 வருடக் காலச்சேவையை நிறுத்திக் கொண்டது தந்தி. கடைசி தினமான அன்று நடிகை ஜெனிலியாவிற்கு அவரது கணவர் தந்தி ஒன்றை அனுப்பினாராம்.

கடந்த 2003ம் ஆண்டு ஒன்றாக சேர்ந்து நடித்த போது, ஜெனிலியாவிற்கும் ரித்திதிற்கும் காதல் பூத்தது என வதந்திகள் பரவின. முதலில் இதை மறுத்த அவர்கள், பின்னர் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இதுவரை ஒரு தந்தி கூட ஜெனியாவிற்கு வந்ததில்லையாம். எனவே, கணவர் அனுப்பிய முதலும் கடைசியுமான தந்தியை ட்வீட்டரில் படமெடுத்துப் போட்டுள்ளார் ஜெனிலியா. மேலும், அதில் ஜெனிலியா தெரிவித்திருப்பதாவது...

எனது முதலும்,கடைசியுமான தந்தியை எனக்கு அனுப்பியது எனது நவ்ரா தான். தேங்யூ ரித்திஷ்... நான் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன்...' எனத் தெரிவித்துள்ளார் ஜெனிலியா.

நவ்ரா என்றால் மராத்தியில் கணவர் என்று பொருளாம்.

 

பெற்றோர் வேண்டாம், காதலன் மட்டுமே வேண்டும்: இயக்குனர் சேரனின் மகள் அடம்

பெற்றோர் வேண்டாம், காதலன் மட்டுமே வேண்டும்: இயக்குனர் சேரனின் மகள் அடம்

சென்னை: சேரனின் மகள் தனக்கு பெற்றோர் வேண்டாம், காதலன் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்.

இயக்குனர் சேரனின் இரண்டாவது மகள் தாமினி(20) சந்துரு என்பவரை காதலிக்கிறார். சந்துரு நல்லவர் இல்லை. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அதனால் தான் அவர்களின் காதலை எதிர்க்கிறேன் என்று நேற்று சேரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தெரிவித்தார். அப்போது அவர் கண்ணீர் சிந்தினார்.

இதையடுத்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வைத்து மகளிர் போலீசார் தாமினிக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். ஆனால் தாமினியோ யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. எனக்கு என் காதலன் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார். நேற்று பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அவருக்கு உதவி கமிஷனர் ஷியாமளாதேவி அறிவுரை வழங்கியுள்ளார்.

முதலில் படித்து முடி. உன் காதலை நாங்கள் எதிர்க்கவில்லை. அதற்குள் உன் காதலனும் நல்ல வேலையில் சேரட்டும். அதுவரை பொறுமையாக இரு என்று தாமினியிடம் போலீசார் தெரிவித்தனர். அதற்கு தாமினி கூறுகையில், கூழோ, கஞ்சியோ குடித்து வாழ்வேன். ஆனால் சந்துருவை மட்டும் பிரிந்திருக்க என்னால் முடியாது என்றார்.

தாமினியிடம் மணிக்கணக்கில் பேசியும் பலனில்லை. அவரோ தன் காதலன் மட்டுமே வேண்டும் என்றும், இனியும் பெற்றோருடன் சேர்ந்து இருக்க முடியாது என்றும் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் தாமினியை மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் நேற்று நள்ளிரவில் சேர்த்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படவிருக்கிறது. அப்போது தாமினிக்கு மீண்டும் கவுன்சிலிங் கொடுக்கப்பட உள்ளது.