சிங்கம் 2வில் பவர்ஸ்டார் சீனிவாசன்!

Power Star Srinivasan Singam 2

ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் சிங்கம் 2 திரைப்படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா, அனுஷ்கா நடித்து ஹிட்டான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் ‘சிங்கம்-2′ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்திலும் சூர்யா-அனுஷ்கா ஜோடி சேருகின்றனர்.

நகைச்சுவைக்கு முதல் படத்தில் நடித்த விவேக், அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சந்தானம் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் பவர்ஸ்டார் சீனிவாசன் புதிதாக இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து இயக்குனர் ஹரி கூறும் போது, விவேக்கும், சந்தானமும் முன்னணி காமெடியர்களாக உள்ளனர். இருவரும் சிங்கம்-2 படத்தில் நடிக்கிறார்கள். இப்போது லட்டு புகழ் ஸ்ரீனிவாசனையும் சேர்க்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

ஏற்கனவே இதன் முதல் பாகத்தில் விவேக் ஏட்டு ஏழுமலை என்ற கேரக்டரில் நடித்து இருந்தார். ‘சிங்கம்-2′ விலும் அதே வேடத்தில் நடிக்கிறார். சந்தானம் மற்றும் பவர் ஸ்டார் காமெடிகளுக்காக ஸ்பெஷல் டிஸ்கஷன் நடப்பதால் படத்தில் இன்னொரு சிறப்பான அம்சமாக இருக்கும் என்றார்.

சிங்கம் 2ல் மூன்று காமெடியர்கள் நடிப்பதால் காமெடி காட்சிகள் களை கட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. மூவருக்கும் தனித் தனியாக காமெடி சீன்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாக இயக்குநர் ஹரி கூறினார்.

லட்டு தின்ன ஆசையா? பட ரிலீசுக்குப் பின்னர் பவர் ஸ்டாருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது என்பதால் ஏராளமான இயக்குநர்கள் அவரை புக் செய்ய போட்டி போட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

 

சகோதரர் ரஜினிக்கு நன்றி... - தமுமுக தலைவர் கடிதம்!

Tmmk Thaned Rajinikanth

சென்னை: விஸ்வரூபம் படம் குறித்த ரஜினிகாந்த் அவர்களின் ஆலோசனைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், என தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஜேஎஸ் ரிபாயீ வெளியிட்டுள்ள அறிக்கை:

இஸ்லாமியர்களின் நண்பராக விளங்கும் ரஜினிகாந்த் அவர்கள், தனது ஆருயிர் நண்பர் கமலஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டிருக்கும் தடையை கவனத்தில் கொண்டு, இஸ்லாமிய சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியிருக்கிறார்.

பண்பட்ட மனிதர் ரஜினி...

அன்புச் சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் பண்பட்ட மனிதர், ஆன்மீகவாதி. யாரையும் காயப்படுத்தும்படி பேசாதவர். அவரது திரைப்படங்களில் கூட எந்த ஒரு தனி மனிதரையும் சமூகத்தையும் தாக்கி வசனமோ காட்சிகளோ இடம்பெறாது.

வெந்த புண்ணுக்கு மருந்திட்டவர்...

1998ஆம் ஆண்டு கோவை மாநகரில் தொடர் குண்டுகள் வெடித்து தமிழகமே பதற்றமாக இருந்த சமயத்தில், சீனாவில் சுற்றுப்பயணத்தில் இருந்த திரு. ரஜினிகாந்த் அவர்கள் பாதியிலேயே சென்னைக்குத் திரும்பி வந்தார்.

"எனது அருமை இஸ்லாமிய சகோதரர்கள் இந்தப் பாதக செயலை செய்திருக்க மாட்டார்கள்' என்று கூறி தமிழகத்தை சூழ்ந்திருந்த பதற்றம் தணிய காரணமாக இருந்தார். அன்று அவரது ஆதரவான குரல், முஸ்லிம்களுக்கு, வெந்த புண்ணில் மருந்திடுவதாக அமைந்தது. இன்றும் அதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்.

முற்போக்காளர் கமல்

நண்பர் கமலஹாசன் அவர்களும் முஸ்லிம் சமூகத்தின் மீது நட்பும் சகோதர வாஞ்சையும் கொண்டவர்தான் என்பதை நாங்கள் அறிவோம். அவர், முற்போக்கு சிந்தனைக் கொண்டவர். பிறரது உணர்வுகளைப் புரிந்து கொள்பவர்.

1992ல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து நண்பர் கமலஹாசன் அவர்கள், பிரதமர் நரசிம்மராவை நேரில் சந்தித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் என்பதையும் நாங்கள் மறக்கவில்லை.

இப்போதும் நாங்கள் கமலஹாசனை எதிரியாகக் கருதவில்லை. அவர் எடுத்திருக்கும் திரைப்படம் ஏற்படுத்தப் போகும் பாதிப்பைக் கருத்தில் கொண்டுதான் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்.

நாங்கள் விஸ்வரூபம் திரைப்படம் விஷயத்தில் பொறுமைக் காத்தோம். மூன்று மாதங்களுக்கு முன்னரே திரைப்படத்தை காண்பிக்கும்படி கேட்டுக் கொண்டோம். அவர் காலம் தாழ்த்திக் கொண்டே வந்தார். திரையிட வெகு சமீபமாகத்தான் படத்தைப் போட்டுக் காண்பித்தார்.

நாங்கள் காயப்பட்டிருக்கிறோம்..

படத்தில் அவர் சித்தரித்திருக்கும் காட்சிகள் எங்களைக் கவலையுறச் செய்தது. உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விரும்பத்தகாத செயல்கள் காரணமாக முஸ்லிம்களாகிய நாங்கள் ஏற்கனவே மனவேதனை அடைந்திருக்கிறோம். காயம் பட்டிருக்கும் எங்களை ஒரு நண்பராக இருந்து கொண்டு கமலஹாசன் அவர்களும் இப்படியானதொரு திரைப்படத்தை எடுத்திருப்பதுதான் எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

நமது நாட்டில் சினிமாவின் மூலமாக புகழ்பெறும் ஒருவர் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆகமுடியும் என்றால், அதே சினிமாவைக் கொண்டு ஒரு சமூகத்தைக் குற்றவாளியாக சித்தரிக்கவும் முடியும். இதை ஏன் கமலஹாசன் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் எங்கள் வருத்தம். இதனை சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.

விஸ்வரூபம் படம் குறித்த ரஜினிகாந்த் அவர்களின் ஆலோசனைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

இது மதச் சார்பற்ற நாடுதானா? - அஜீத் திடீர் கேள்வி

Ajith Questions On India Secularism

இந்தியா மதச் சார்பற்ற நாடுதானா... ஜனநாயகமும் சம உரிமையும் உண்மையிலேயே உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் அஜீத்.

நடிகர் அஜித்குமார் நேற்று திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டார்.

ஆனால் என்ன காரணம், எதற்காக அவர் கோபப்படுகிறார் என எதையுமே குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக அந்த அறிக்கை அமைந்துள்ளது.

அந்த அறிக்கை விவரம்:

இந்திய அரசியல் சட்டம் நமது இந்திய திருநாடு ஒரு மத சார்பற்ற ஜனநாயக நாடு என்றும் இதன்மூலமாக ஒரு இந்திய குடிமகனுக்கு சமநீதி, உரிமை, சமத்துவம் என்று உத்தரவாதம் அளிக்கின்றது.

ஆனால், இன்றைய நிலை என்ன தெரியுமா? இந்த உத்தரவாதங்கள் திரிக்கப்பட்ட வாசகங்களும், வார்த்தைகளும், புறம் பேசி பிரித்தாள்வதும், சுயநலப் போக்கும்தான் என்றாகிவிட்டது.

மதச்சார்பின்மை என்றால் அரசியல் அமைப்பும் சரி, சமூக அமைப்பும் சரி, மத சார்புள்ள நம்பிக்கையையும் வழிபாட்டையும் ஏற்றுக் கொள்ளாததே.

நமது நாடு மத சார்பற்ற நாடுதானா என்று ஐயம் வாக்கு வங்கி அரசியலைப் பார்க்கும்போதும், உணரும் போதும் தோன்றவே செய்கிறது.

நமது நாட்டில் ஜனநாயகமும் மதசார்பற்ற நிலையும் ஒரு புரிந்து கொள்ளப்படாதது அல்ல. தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தையாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. நமது நாடு சென்று கொண்டிருக்கும் நிலையும், நாம் இருந்திருக்க வேண்டிய நிலையையும் நாம் கவனத்தோடு நினைத்துப் பார்க்க இதுவே சரியான தருணம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒரு வேளை குடியரசு தின ஸ்பெஷல் அறிக்கையோ? உங்களுக்கு ஏதாவது புரிஞ்சதா!!

 

'தந்தி' தொலைக்காட்சியில் விஸ்வரூப வில்லங்கம்

கமல் இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையினால் திரைப்படத்துறையின் எதிர்காலம் பற்றி தந்தி தொலைக்காட்சியின் ‘ஆயுத எழுத்து' நிகழ்ச்சியில் மிகச் சிறப்பான விவாதம் நடைபெற்றது.

இந்த திரைப்படத்திற்கு தடை விதித்த இஸ்லாமிய அமைப்பைப்ச் சேர்ந்தவர்களும், திரைத்துறை சார்பில் நடிகர் டெல்லி கணேஷ் மற்றும் நடிகர் ரமேஷ் கண்ணா ஆகியோர் பங்கேற்றனர்.

திரைப்படத்தை முன்னதாகவே பார்வையிட்டும் அதற்கு தடை கோரியது சரியா? என்ற ரீதியில் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சியமைப்புகள் உள்ளது என்றும் இஸ்லாமியர்கள் மட்டும்தான் தீவிரவாதிகளாக உள்ளனரா? எங்கள் சமூகத்தைப் பற்றி மட்டும் ஏன் திரைப்படத்தில் சித்தரிக்க வேண்டும் என்றும் வலியுடன் கேள்வி எழுப்பினர் இஸ்லாமிய அமைப்பினர்.

திரைப்படத்திற்கு சென்சார் போர்டு இருக்கிறது. விஸ்வரூபம் திரைப்படத்தை நான்கு மாநில சென்சார் போர்டு அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். ஆனாலும் இதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அப்புறம் நாங்கள் யாரை நம்பி படம் எடுப்பது. 100 கோடி செலவு செய்து எடுத்த கமல்ஹாசன் இந்த பிரச்சினையில் தைரியமாக போராடுகிறார். ஆனால் வேறு தயாரிப்பாளராக இது போன்ற தடையை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று கூறினார் ரமேஷ் கண்ணா.

நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையேயும் சூடு பறந்தது. நாங்கள் நடிகர் கமல்ஹாசனுக்கோ, தமிழ் சினிமாவுக்கோ எதிரியில்லை. ஆனால் மத உணர்வுகளை புண்படுத்தாமல் படம் எடுத்தால் நாங்கள் ஏன் தடை செய்யப் போகிறோம் என்று கேள்வி எழுப்பினர்.

 

நல்ல தமிழ்க் கலைஞன் கமல் ஹாஸனை காயப்படுத்தாதீர்கள்! - பாரதிராஜா

Bharathiraja Supports Kamal Hassan

ஒரு நல்ல தமிழ்க் கலைஞனான கமலை வாழ விடுங்கள், என்று இயக்குநர் பாரதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

இயக்குநர் பாரதி ராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒரு கலைஞன் என்பவன் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் நெஞ்சுறுதியோடு, பாரதியைப் போல சமூக விழிப்புணர்வுக்காக போராடுபவன்.

எழுத்தாளராகட்டும், கவிஞராகட்டும், திரைப்பட கலைஞனாகட்டும், எந்த துறையின் விமர்சகனுமாகட்டும், ஒரு படைப்பாளியாக துணிச்சலுடன் தன் கருத்த பதிவு செய்பவனாக இருக்கவேண்டும். அதுதான் அன் பொது வாழ்வின் சமூகக் கடமை. பயந்து ஒளிபவன் படைப்பாளியாக, எழுத்தாளனாக, கலைஞனாக இருக்க முடியாது.

ஆனால் தங்களை படைப்பாளிகள், கலைஞர்கள் என்று கூறிக்கொள்ளும் எங்கள் திரையுலக சகோதரர்கள் ஏன் இந்த விஸ்வரூபம் எடுத்திருக்கும் ஒரு தமிழ் கலைஞன் கமல்ஹாசன் விஷயத்தில் வாய் மூடி மெளனிகளாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

திரையுலகில் ஒரு சிலர் மட்டும்தான் ஆதரிக்க வேண்டுமா ? அவர்கள் மட்டும்தான் கலைஞர்களா ?

திரையுலகில் இத்தனை அமைப்புகள் இருந்தும், அமைப்புகள் பிளவுபட்டு கிடப்பதாலோ, அல்லது தனிப்பட்ட மன மாச்சரியங்களாலோ யாரும் வாய் திறக்க மறுக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

இன்று கமல்ஹாசனுக்குத்தானே தலைவலி, வயிற்று வலி என்று நினைத்தால் நாளை நம்மில் ஒருவருக்கு இதே நிலை வரும் போது நிவாரணத்துக்கு யாரைத் தேடுவீர்கள்? எங்கே போவீர்கள் ? நமக்குள் ஒற்றுமை இல்லை.

கமல் என்ற தமிழ்க் கலைஞன் வியாபாரத்திற்காக தன்னை ஒரு போதும் அடகு வைத்தவன் அல்ல. சமூக பொறுப்புள்ளவன், மூட நம்பிக்கையை முறியடிக்க வேண்டும் என்ற தத்துவத்தில் திரையுலகில் மீசை வைக்காத பாரதியார். அவன் இந்த சமூகத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று படம் எடுப்பானா?

ஒரு முஸ்லீம் அங்கத்தினர் உட்பட தணிக்கைக் குழு அங்கீகரித்த ஒரு திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்று சிலர் சொன்னால் இந்த அரசியல் சட்டத்தில் நாம் எங்கே நின்று நியாயம் கேட்க வேண்டும் என்று புரியவில்லை.

இந்திய அரசியல் சட்டம் எங்கே நின்று என்னைப் போன்ற சாதாரண, குடிமகனை கலைஞனை பாதுகாக்கும் என்று புரியவில்லை.

ஒரு நல்ல கலைஞனை, ஒரு தமிழ் கலைஞனை, தமிழ்த் திரையுலகிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு கலைஞனை ஏதோ ஒரு சில காரணங்களுக்காக அவனை காயப்படுத்தி அதில் வழியும் ரத்தத்தை ருசி பார்க்க எண்ணாதீர்கள்.

என் இனிய தமிழ் மக்களே,

நீங்கள் யோசிக்கத் தெரிந்தவர்கள், சிந்தித்துப் பாருங்கள். நியாயத்திற்கு போராடி ஒரு நடுநிலை கலைஞனுக்கு கை கொடுக்க வேண்டியது உங்களின் தார்மீக கடமை. தவறுகள் இல்லா தமிழன் என்று சொல்லுவோம். தலை நிமிர்ந்து நிற்போம்".

-இவ்வாறு பாராதிராஜா தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.