கவுண்டமணி நகைச்சுவை நாயகனாகவும், தனி நாயகனாகவும் நடித்த நாட்களில் கூட கிடைக்காத வரவேற்பும் மரியாதையும் இன்றைய இளைஞர்கள் மத்தியில் அவருக்குக் கிடைத்து வருகிறது.
காரணம் காலத்தை வென்ற பல பிரமாதமான காமெடி வசனங்கள்... அடுத்த பல ஆண்டுகள் கழித்து வரப் போகும் அரசியல் நிலைமைகளை முன்னுணர்ந்த மாதிரி அமைக்கப்பட்ட அவரது நகைச்சுவைக் காட்சிகள்...
இன்று அத்தனை பேரின் காமெடியும் பார்க்கும்போது சற்று சலிப்பு தோன்றினாலும், கவுண்டமணியின் காமெடி என்றதும் தொலைக்காட்சி சேனலை மாற்றுவதற்கு மனசே வருவதில்லை.
அந்த எவர்கிரீன் காமெடி மன்னன் மீண்டும் கதாநாயகனாகக் களமிறங்கியிருக்கிறார் 49 ஓ படம் மூலம். படம் வெளியாக சற்று தாமதமானாலும், அதன் ட்ரெயிலர் மற்றும் பாடல்களுக்கு அப்படியொரு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
நேற்று சென்னை பிரசாத் லேப் அரங்கில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
சிவகார்த்திகேயன், சத்யராஜ், கலைப்புலி தாணு, சித்ரா லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு கவுண்டமணியை வாழ்த்தினார்கள்.
விழாவில் கவுண்டமணி பேசும்போது, "இந்தப் படத்தின் இயக்குநர் ஆரோக்கியதாஸ் என்கிட்ட வந்து கதை சொன்னார். ஒரு வருஷமா அலைஞ்சார். நான் ஒரு நாள் அவர்கிட்ட, ‘முன்னாடி விட்ருங்க. பின்னாடியும் விட்ருங்க. நடுவுல ரெண்டே ரெண்டு லைன்ல கதை சொல்லுங்க'ன்னு சொன்னேன். ‘ஆறடி தாய் மண்ணு' ன்னு சொன்னார். அதைக் கேட்டுட்டு நான் ஒத்துக்கிட்டேன்.
இந்த படத்தில் என்னை டான்ஸ் ஆட வைத்திருக்கிறார்கள். நான் ஆடும்போது பக்கத்தில் ஆடுற பொம்பள புள்ளங்களோட காலை மிதிச்சி வெச்சிடுவேன். ஆனாலும் அவங்க பொறுத்துக்கிட்டாங்க. எப்படியோ என்னை விடாமல் டான்ஸ் ஆட வெச்சிருக்காங்க.
இங்க பேசின சத்யராஜ், சிவகார்த்திகேயன் ரெண்டு பேரும் காமெடியா பேசி கலக்கிட்டாங்க. இதுக்கு மேல நான் காமெடி பண்ணினால் இங்க எடுபடாது. படத்துல வேணா பண்ணிக்கலாம்.
இந்தப் படத்தை இளம் இயக்குநர் ஆரோக்யதாஸ் எழுதியிருக்கார். அதை யுகபாரதி ரெண்டே வரியில் சொல்லிட்டு போய்ட்டார். விவசாயம் இல்லேன்னா ‘உலகேதுடா உயிரேதுடா..பல கட்டடங்க கட்டத்தான் வயக்காட்ட அழிச்சாங்க'-ன்னு.
விவசாயம் நாட்டுக்கு அவசியம் தேவை. விவசாயி இல்லேன்னா சாப்பாட்டுக்கு என்ன பண்றது. அந்த விவசாயிங்க அழியக்கூடாது. விவாசாயிங்களுக்கு மண்ணுதான் உயிர், மானம் மரியாதை... அந்த மண்ணை அவங்க விட்றக்கூடாது. அது ஒரு ஏக்கரா இருந்தாலும் சரி அரை ஏக்கரா இருந்தாலும் சரி, முக்கால் ஏக்கரா இருந்தாலும் சரி அதிலதான் அவன் வாழணும். விடாமல் விவசாயம் பண்ணனும்.
ஒரு வருஷம் மழை இல்லேன்னா அடுத்த வருஷம் விவசாயம் பண்ணுங்க. மழை இல்லேங்கிறதுக்காக நிலத்தை வித்துட்டேன்னு சொல்லக்கூடாது. ஒருதொழில்ல நஷ்டம் வந்தால் இன்னொரு தொழில் செய்து ஜெயிக்கறதில்லையா. அதுபோலத்தான்.. ஒரு பயில் போட முடியலன்னா, அதுக்கு மாத்தா வேறு பயிர்!
இப்பல்லாம் விவசாயிங்கள சந்திக்க மூணு பேரு வந்துகிட்டே இருக்காங்க. ரியல் எஸ்டேட் பண்றவங்க, கார்பரேட் கம்பெனிகாரங்க, தொழிலதிபர்கள்... இவங்கதான் வர்றாங்க. எதுக்கு... துக்கம் விசாரிக்கவா...சொந்தம் கொண்டாடவா..?
இல்ல... கால் ஏக்கராவது வாங்கிடமாட்டோமான்னுதான் வர்றாங்க. அந்த இடத்துலதான் சில விவசாய்ங்க ஏமாந்துடுறாங்க. சில பேரு காசுக்கு ஆசைப்பட்டு இடத்தை வித்துடுறாங்க. இப்படியே எல்லோரும் வித்துட்டா அந்த இடத்தில் கட்டடம்தான் இருக்குமே தவிர விளை நிலம் எங்க இருக்கும். நாம எதை சாப்பிடறது?
விவசாயிங்க விவசாயிங்களாதான் இருக்கணும். இதை சொல்ற படம்தான் இந்த 49ஓ. இது இந்திய விவசாயிங்களுக்கு மட்டுமான படம் இல்லை. அமெரிக்க, ஆப்பிரிக்க இங்கிலாந்து நாட்டுல இருக்கும் விவசாயிங்களுக்கும் சேர்த்து வந்திருக்கும் படம். அமெரிக்காவில் ஜீன்ஸ் போட்டுகிட்டு உழுகிறான். இங்க வேட்டி கட்டிகிட்டு உழுகிறோம். நெல்லு விளையிற நிலமானானும் கோதுமை விளையிற நிலமானாலும், உலகத்துல எந்த மூலையில விவாசாயிங்க இருந்தாலும் சரி... அவன் நிலத்தை காப்பாத்தனும். அப்போதான் மக்கள் வயிறார சாப்பிட முடியும்.
இந்த படம் ஏபிசிடி இசட் என்று எல்லா செண்டர்களிலும் ஓடக்கூடிய படம். நான் மறுக்கா மறுக்கா சொல்றேன் 49-ஓ இஸ் த பெஸ்ட் மூவி," என்று கவுண்டமணி பேச ரசிகர்களும் மீடியாக்களும் கைதட்டி ரசித்து உற்சாகமானார்கள்.