மும்பை: கன்னபின்னாவென்று மோதல் இருந்தாலும் காத்ரீனா கைபுக்கு தேவையான நேரத்தில் கை கொடுக்கத் தவறுவதில்லை சல்மான் கான். தற்போது கூட ஒரு மேக்கப் மேன் விஷயத்தில் உதவி புரிந்துள்ளார் நடிகர் சல்மான் கான்.
சல்மான் கானுக்கும், காத்ரீனா கைபுக்கும் இடையே மோதல், ஊடல் என்றாலும் கூட காத்ரீனாவுக்கு ஏதாவது என்றால் உடனே ஓடி வந்து விடுகிறார் சல்மான்.
இப்படித்தான் முன்பு ஒரு படத்தை புக் செய்வது குறித்து காத்ரீனாவுக்கு குழப்பம் வந்தது. உடனே சல்மானிடம் ஆலோசனை கேட்டார். அவரும் உடனடியாக அதைப் பரிசீலித்து இந்தப் படம் வேண்டாம் என்று கூறி விட்டார்.
மேக்கப் மேன் பிரச்சனை:
அதேபோல சமீபத்தில் மும்பையில் ஒரு படப்பிடிப்பில் இருந்தார் காத்ரீனா. அவருக்கு மேக்கப் போடுவதற்காக வெளிநாட்டு மேக்கப் கலைஞரான டேனியல் பியூர் வந்திருந்தார்.
எதிர்த்த மும்பை சங்கம்:
அவர் மும்பை மேக்கப் மேன்கள் சங்கத்தில் பதிவு செய்யாதவர் என்பதால் அவர் பணியாற்ற எதிர்ப்பு தெரிவித்து சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் போராட்டத்தில் குதித்தனர்.
டேனியல் பியூர்:
இந்த டேனியல் பியூர் மேக்கப் துறையில் மிகவும் பிரபலமானவர். பல புகழ் பெற்ற நிறுவனங்களுக்காக மேக்கப் ஆலோசகராக பணியாற்றுகிறார். பாலிவுட்டிலும் ஐஸ்வர்யா ராய் போன்ற பிரபலங்களுக்கு மேக்கப்பில் ஈடுபடுகிறார்.
சல்மானால் நின்ற போராட்டம்:
காத்ரீனாவுக்கு டேனியலை விட மனமில்லை. இதையடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் உடனே சல்மானுக்குப் போனைப் போட்டார். அடுத்த சில நிமிடங்களில் சல்மான் தரப்பிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மேக்கப் கலைஞர்களுக்கு போன் வந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை உடனே கைவிட்டுவிட்டார்கள்.
இன்னும் காதல் இருக்குய்யா:
மோதல் இருந்தாலும் கூட தனிப்பட்ட முறையில் காத்ரீனா மீது சல்மான் பாசமாகத்தான் இருக்கிறார். காத்ரீனாவும் கூட சல்மானை விட்டு விடாமல் அன்புடன்தான் இருக்கின்றார் என்பதுதான் இந்த நிகழ்வின் மூலம் தெரியவந்துள்ளது என்கின்றனர் விசயம் தெரிந்தவர்கள்.