சனாகான் ஹிந்தியில் அறிமுகமாகும் படம் ‘மெண்டல்’ இல்லை... ‘ஜெய் ஹோ’

சனாகான் ஹிந்தியில் அறிமுகமாகும் படம் ‘மெண்டல்’ இல்லை... ‘ஜெய் ஹோ’

மும்பை: சல்மான் கானோடு, நமது சனாகான் சேர்ந்து நடிக்கும் படமான ‘மெண்டல்' விரைவில் வேறு பெயரில் திரைக்கு வர இருக்கிறதாம்.

47 வயதான ஹிந்தி நடிகரான சல்மான்கான், தனது ‘மெண்டல்' படத்தின் பெயரை மாற்றும் முடிவில் இருக்கிறாராம். இது குறித்து அப்படத்தின் இயக்குநரும் தனது சகோதரனுமான சோகைல் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம்.

‘மெண்டலை' விட வேறு சிறப்பான தலைப்பாக படத்திற்கு தேடுகிறார்களாம். 'ஜெய் ஹோ' என்ற பெயர் பரிசீலனையில் உள்ளதாம். இருந்தபோதும், வேறு ஏதாவது வித்தியாசமான பெயர் கிடைக்கிறதா என படக்குழுவினருடன் சேர்ந்து ஆலோசித்து வருகிறாராம் சல்மான்கான்.

 

பண்ணைப்புரத்தில் நவீன பள்ளிக்கூடம் கட்டுகிறார் இளையராஜா!

பண்ணைப்புரத்தில் நவீன பள்ளிக்கூடம் கட்டுகிறார் இளையராஜா!

பண்ணைப்புரம்: தான் பிறந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் புதிதாக அனைத்து வசதிகளும் நிறைந்த பள்ளிக்கூடம் கட்டுகிறார் இசைஞானி இளையராஜா.

பண்ணைப்புரத்தில் பிறந்து, பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்த நான்கு சகோதரர்களில் ஒருவர்தான் ராசய்யா எனும் இளையராஜா.

உலகப் புகழ்பெற்ற இசைமேதையாக இன்று அவர் திகழ்ந்தாலும், அந்த ஞானத்துக்கெல்லாம் வேர் தன் சொந்த மண்தான் என்பது ராஜாவின் நம்பிக்கை. தன் தாய் இறந்த பிறகும் கூட தொடர்ந்து தன் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து போவது ராஜாவின் வழக்கம்.

தான் பிறந்த மண்ணுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில், எந்த ஆர்ப்பாட்டமோ அறிவிப்போ இல்லாமல் ஒரு வேலை செய்திருக்கிறார் ராஜா.

அது பண்ணைப் புர குழந்தைகளுக்காக அனைத்து வசதிகளும் நிறைந்த நவீன பள்ளிக்கூடத்துக்கான அடிக்கல்நாட்டு விழா. பண்ணைப்புரத்தில் தனக்கு சொந்தமான பெரிய நிலப்பரப்பில் இந்தப் பள்ளியை உருவாக்குகிறார் இளையராஜா.

இந்தப் பள்ளி மத்திய கல்வி முறையான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இயங்கக் கூடியது. ஆனால் புத்தகக் கல்வி மட்டுமி்ல்லாமல், விளையாட்டு, யோகா, ஆன்மீகம், முக்கியமாக இசை போன்றவையும் கற்றுத் தரப்படும்.

இந்த பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் பண்ணைப்புரத்தில் நடந்தது. இதில் இளையராஜா, அவரது மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, மகள் பவதாரிணி மற்றும் உறவினர்கள் பலரும் பங்கேற்றனர். ஊரில் இளையராஜாவின் நண்பர்கள், உறவினர்கள் பலரும் இந்த நிகழ்ச்சிக்கு திரண்டு வந்து அடிக்கல் நாட்டும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

 

அஜீத் ஒரு சிறந்த மனிதர்: சொல்கிறார் 'டாக்டர். விஜய்'

அஜீத் ஒரு சிறந்த மனிதர்: சொல்கிறார் 'டாக்டர். விஜய்'

சென்னை: அஜீத் குமார் ஒரு சிறந்த மனிதர் என்று கண் மருத்துவர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

அஜீத் குமாரை அவருடன் பணிபுரிபவர்கள் ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து வருகின்றனர். அவர் நேர்மையானவர், நல்லவர் என்று பெயர் எடுத்துள்ளார். இந்நிலையில் டிவி சேனல் ஒன்று அஜீத் குமாரின் நண்பரான கண் மருத்துவர் விஜய் சங்கரை பேட்டி கண்டது.

அந்த பேட்டியில் அவர் கூறுகையில்,

அஜீத் ஒரு சிறந்த மனிதர். அவர் மிகவும் நல்லவர். அவர் எப்பொழுதும் வரிசையில் நின்று தான் மருத்துவரை சந்திப்பார். தான் ஒரு ஸ்டார் என்பதால் முந்திக் கொண்டு வர மாட்டார். தனக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கவே மாட்டார் என்றார்.

முன்னதாக அஜீத் வாக்களிக்கும்போது  வரிசையில் நின்று வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இங்கிலீ்ஷா.. தனியா வாங்க, தமிழா.. கும்பலா வாங்க! - இது பரத்பாலா பாரபட்சம்

இங்கிலீ்ஷா.. தனியா வாங்க, தமிழா.. கும்பலா வாங்க! - இது பரத்பாலா பாரபட்சம்

மரியான் படத்தின் விளம்பரத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீடியா மீட் அது. ஆங்கில - தமிழ் ஊடகங்களிலிருந்து பெரும்பாலான செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் வந்திருந்தனர்.

9 மணிக்கெல்லாம் செய்தியாளர்களை வரச்சொல்லியிருந்தார்கள். ஆனால் படத்தின் ஹீரோ தனுஷ் 11 மணிக்குத்தான் வந்தார். ஹீரோயின் பார்வதி மேனன், இயக்குநர் பரத்பாலா ஆகியோர் ஒவ்வொராக வீடியோ பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இது போன்ற சந்திப்புகளின் ஆரம்பம் உற்சாகமாகத்தான் இருக்கும். படத்தைப் பற்றி குஷியாக பேச ஆரம்பிப்பார்கள். போகப் போக அந்த உற்சாகம் வடிந்த எரிச்சலும் கடுப்புமாக பேச ஆரம்பிப்பார்கள். ஒன் டு ஒன் இன்டர்வியூ, குரூப் குரூப்பாக நடந்தால் நன்றாக இருக்குமே என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். கடைசியில் விட்டால் போதுமென்று தெறித்து ஓடுவார்கள்.

மரியான் டீம் மீடியா சந்திப்பும் அப்படித்தான் ஆனது. அதற்கு முக்கிய காரணம் இயக்குநர் பரத்பாலாதான்.

தனுஷை எந்த மீடியா முதலில் சந்திக்க வேண்டும் என்ற பிஆர்ஓ வேலையை அவர் கையிலெடுத்துக் கொண்டார். குறிப்பாக தமிழ் மீடியாவை ஓரங்கட்டுவதிலேயே அவர் குறியாக இருந்தார்.

மதிய உணவு நேரம் நெருங்கியது. தமிழ் தொலைக்காட்சிகள், மீடியாக்காரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பரத்பாலா தன் தாய்மொழியான மலையாளம் பேசிக் கொண்டு வந்தவர்களுக்கு முதலிடம் கொடுத்து தனுஷை சந்திக்க அனுப்பினார்.

அடுத்து, வட இந்திய சேனல் என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் வந்ததும், ஹீரோ, ஹீரோயினோடு சேர்ந்து தானும் ஒரு முக்கால் மணிநேரம் பேட்டி கொடுத்தார். அடுத்து வந்த நான்கைந்து தமிழ் தொலைக்காட்சிகளை எல்லாரும் கும்பலா வந்து பேட்டி எடுத்துக்கோங்க, நேரமில்லை என்றார்.

'ஏங்க.. தமிழ்ல படமெடுத்துட்டு, தமிழ் சேனல்களை ஒதுக்கறீங்களே... நாங்க கும்பலா எடுக்கறதுக்கு இது பிரஸ்மீட் இல்லையே... தனித்தனியா பேட்டின்னுதானே கூப்பிட்டீங்க... அதென்ன இங்கிலீஷ் சேனல்களுக்கு தனித்தனியா பேட்டி.. படத்தை வட இந்தியாவிலா ரிலீஸ் பண்ணப் போறீங்க,' என நேருக்கு நேர் பொறிந்தார் ஒரு தமிழ் செய்தியாளர்.

இதையெல்லாம் கண்டுகொள்ளாத தனுஷ், விறுவிறுவென நடையைக் கட்டினார். பேட்டிக்கு வந்தவர்கள் பேந்தப் பேந்த விழிக்க, அழைப்பு விடுத்தவரோ தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார்.

தனுஷ், பரத்பாலா போன்றவர்களுக்கு இந்த மாதிரி சந்திப்புகள் புதிதல்ல. இதற்கெல்லாம் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டல்லவா இத்தகைய சந்திப்புகளுக்கு வரவேண்டும்?

இந்தப் படத்தைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை, ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்றும் புரியவில்லை என தனுஷ் போட்ட ட்வீட்டில் ஏகப்பட்ட சமாச்சாரம் இருக்கும் போலிருக்கே!!

 

தள்ளிப்போகுது விஜய்யின் தலைவா? - குழப்பத்தில் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள்!

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள, கிட்டத்தட்ட அரசியல் படம் என்று வர்ணிக்கப்படுகிற தலைவாவின் ரிலீஸ் தேதி எதுவென்பதில் இன்னும் குழப்பம் நீங்கியபாடில்லை.

இந்தப் படம் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகப் போவதாக ஆரம்பத்தலிருந்து கூறி வந்தனர். வெளிநாடுகளில் திரையிடும் விநியோகஸ்தர்களும் ஆகஸ்ட் 9-ம் தேதி படம் வெளியீடு என விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

தள்ளிப்போகுது விஜய்யின் தலைவா? - குழப்பத்தில் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள்!  

ஐங்கரன் நிறுவனம் வெளிநாட்டு தியேட்டர் லிஸ்டைக் கூட வெளியிட்டுவிட்டது.

இந்த நிலையில் படத்தை ஆகஸ்ட் 15 அல்லது 22-ம் தேதி வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது வெளிநாட்டு விநியோகஸ்தர்களைக் குழப்பியுள்ளது.

விஜய்யின் பிறந்த நாள் விழா சமீபத்தில் திடீரென ரத்தானது நினைவிருக்கலாம். படத்துக்கு அதுபோல ஏதாவது தடை வந்துவிடுமோ என்ற தவிப்பு விஜய் ரசிகர்களுக்கு வர ஆரம்பித்துள்ளது, இந்த தள்ளிப் போடல் காரணமாக.

 

மரியான் ஷூட்டிங்கில் தனுஷுக்கும் எனக்கும் சண்டை வந்தது உண்மைதான்!- பரத்பாலா

மரியான் ஷூட்டிங்கில் தனுஷுக்கும் எனக்கும் சண்டை வந்தது உண்மைதான்!- பரத்பாலா

மரியான் படப்பிடிப்பின்போது நாயகன் தனுஷுடன் தனக்கு மோதல் ஏற்பட்டது உண்மைதான் என்று இயக்குநர் பரத்பாலா தெரிவித்தார்.

இன்று சென்னையில் மீடியா செய்தியாளர்களைச் சந்தித்தனர் மரியான் படக்குழுவினர். அப்போது, படப்பிடிப்பில் உங்களுக்கும் தனுஷுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகினவே, உண்மைதானா என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த பரத்பாலா, "ஒரு படைப்பு என வரும்போது, அதில் பங்கேற்கிற படைப்பாளிகளுக்குள் பல கருத்து பேதங்கள் வருவது இயற்கை. அது அந்த படைப்பை மேலும் மெருகேற்ற உதவும்.

எனக்கும் தனுஷுக்கும் இடையே எழுந்த பிரச்சினையை அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை சண்டை என்று பார்க்க வேண்டியதில்லை. தனுஷ் ஒரு அற்புதமான நடிகர். அவருக்குள் நிறைய கிரியேட்டிவிட்டி இருக்கிறது. அதன் விளைவு, ஒரு விஷயத்தை மாறுபட்ட கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்," என்றார்.

ஆப்பிரிக்க கடற்கொள்ளையர்களால் கடத்தப்படும் தமிழ் மீனவ இளைஞனின் கதைதான் இந்த மரியான். நாளை வெளியாகிறது.

 

ரஜினி- ஷங்கர் சந்திப்பு!

ரஜினி- ஷங்கர் சந்திப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்துப் பேசியுள்ளார் இயக்குநர் ஷங்கர். இது ஜஸ்ட் நட்பு ரீதியிலான சந்திப்பா அல்லது புதிய படத்துக்கான கதை விவாதமா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வந்த எந்திரன் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்தப் படத்தை ஷங்கர் இயக்கினார். வசூலில் இந்தியாவின் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த இந்தப் படத்துக்கு இணையான வெற்றியை இதுவரை வேறு எந்தப் படமும் பெறவில்லை.

எந்திரனுக்குப் பின் ரஜினி நடிப்பதாக அறிவித்த இரு படங்கள் ராணா மற்றும் கோச்சடையான்.

இவற்றில் ராணா படம் தொடங்கிய அன்றே ரஜினி உடல் நிலை சரியில்லாமல் போனதும், அதன் பிறகு அப்படம் கைவிடப்பட்டதும் நினைவிருக்கலாம்.

அடுத்து ஆரம்பிக்கப்பட்ட படம் கோச்சடையான். இது மோஷன் கேப்சரிங் முறையில் 3 டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூன்று ஸ்டில்கள் மட்டும்தான் இதுவரை வெளியாகியுள்ளன.

வேறு ஒரு தகவலும் இல்லை. இதன் ட்ரைலர் வெளியீடு, பாடல் வெளியீடு போன்ற நிகழ்ச்டிகள் குறித்தும் உறுதியான எந்த அறிவிப்பும் இல்லை.

இந்த நிலையில், ரஜினியி்ன் அடுத்த படம் குறித்து அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தி கிளம்பிக்கொண்டே இருக்கிறது.

அவரை கேஎஸ் ரவிக்குமார் இயக்குவார் என்று கூறி வந்தனர். ஆனால் இப்போது வேறொரு செய்தி..

சமீபத்தில் ரஜினியைச் சந்தித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும், அநேகமாக ஐ முடிந்த பிறகு ரஜினியை வைத்து ஷங்கர் மிகப் பிரமாண்டமான படம் ஒன்றை உருவாக்குவார் என்றும் அந்த சந்திப்புக்கு கை கால் இறக்கை வைத்து செய்தி உருவாக்கியுள்ளனர்.

இது நட்பு ரீதியிலான சந்திப்பாகவும் இருக்கலாம்... கோச்சடையான் ட்ரைலரை ஷங்கருக்குக் காட்டுவதற்காக ரஜினி அழைத்திருக்கலாம், என்றும் சொல்கிறார்கள்.

உண்மை என்னவென்பது சந்தித்த அந்த இருவருக்கும்தானே தெரியும்!

 

பிரபல கவிஞர் வாலி மரணம் - திரையுலகம் கண்ணீர்

சென்னை: தமிழ் சினிமாவின் இணையற்ற கவிஞர்களில் ஒருவரும், சாகை வரம் பெற்ற பல தேமதுர தமிழ்ப் பாடல்களைப் படைத்தவருமான கவிஞர் வாலி இன்று மாலை 5 மணிக்கு மரணமடைந்தார்.

அவருக்கு வயது 82.

வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் 1931-ம் ஆண்டு பிறந்தவர். ஆரம்பத்தில் அகில இந்திய வானொலியில் நிலையக் கலைஞராக பணி்யாற்றிய வாலி, பின்னர் சினிமாவில் பாடலாசிரியராக 1958-ல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

மறைந்தார் காவியக் கவிஞர் வாலி... திரையுலகம் கண்ணீர்

எம்ஜிஆருக்காக நல்லவன் வாழ்வான் படத்தில் முதல் முதலாக பாடல் எழுதினார் வாலி. பின்னர் எம்ஜிஆரின் தர்பாரில் ஆஸ்தான கவிஞராக கடைசி வரை இருந்தார்.

திரையுலகில் அதிக பாடல்களை எழுதிய சாதனையாளர் வாலி. இதுவரை 10000 பாடல்களுக்கும் மேல் அவர் எழுதியுள்ளார்.

ஏற்கெனவே இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட வாலிக்கு, நுரையீரல் தொற்று மற்றும் அதிகமான சளியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

40 நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 2 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. 1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் துவங்கிய கவிஞர் வாலி இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். சில படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ள வாலி, தமிழ் இலக்கியத்துக்கு தன் பங்களிப்பாக அவதார புருஷன் உள்ளிட்ட பல அரிய நூல்களை எழுதியுள்ளார்.

பொய்க்கால் குதிரை, சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் பாராட்டுப் பெற்றுள்ளார்.

வாலியின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார்.

வயது வித்தியாசம், ஈகோ மோதல் எதுவுமின்றி அனைவருடனும் இனிமையாகவும் உரிமையாகவும் பழகிய கவிஞரின் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

 

கவிஞர் வாலிக்கு தீவிர சிகிச்சை... பிரார்த்திக்கும் திரையுலகம்

கவிஞர் வாலிக்கு தீவிர சிகிச்சை... பிரார்த்திக்கும் திரையுலகம்

வாலிபக் கவிஞர் என்றும் காவியக் கவிஞர் என்றும் திரையுலகில் போற்றப்படும் கவிஞர் வாலியைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அவர் நலமடைந்து வந்து மீண்டும் பாடல்களை புனைய வேண்டும் என தமிழ் திரையுலகமே பிரார்த்திக்க ஆரம்பித்துள்ளது.

82 வயது வாலி, கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இப்போது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கவிஞர் வாலியின் உடல்நிலை மோசம் அடைந்ததையடுத்து, அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடிகர் கமல், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்டோர் நேரில் போய் வாலியைப் பார்த்துவிட்டு வந்தனர். ஆனால் அவரால் வந்திருந்தவர்களை அடையாளம் காண முடியாத நிலை.

இப்போது வாலியின் உடல் நலமடைய வேண்டி தமிழ் திரையுலகமே பிரார்த்தனை செய்து வருகிறது.

நூற்றாண்டைக் கொண்டாடும் இந்திய சினிமாவில் நூறாண்டு வாழ்ந்து கலைச் சே்வை செய்ய எழுந்து வாருங்கள் கவிஞரே!

 

இளைஞர்களிடம் வன்முறை குறைய இசையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் - இளையராஜா

இளைஞர்களிடம் வன்முறை குறைய இசையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் - இளையராஜா

மதுரை: இசையை கட்டாயப் பாடமாக்கினால் இளைஞர்கள் மனதில் வன்முறை உணர்வு குறையும், என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

மதுரை தியாகராஜர் கல்லூரியின் இசை ஆய்வு மையத்தை நேற்று அவர் தொடங்கி வைத்துப் பேசுகையில் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "தமிழ் இசை மிகவும் பாரம்பரிய கலாச்சாரம் மிகுந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவான இந்த இசை, பல சோதனைகளைத் தாண்டி வந்துள்ளது. நமது பாரம்பரிய இசையைக் காக்க, அதை பள்ளிப் பாடங்களில் ஒரு அங்கமாக அரசு சேர்க்க வேண்டும்.

சமீபத்தில் வெளியான தமிழ் இசை அகராதியைப் பார்த்தபோது பல ஆயிரம் இசை வார்த்தைகளை அதில் படிக்க நேர்ந்தது. அவற்றில் பல எனக்குத் தெரியாதது. ஆனால் நமது இசை எந்த அளவு பெரிய வரலாற்றைக் கொண்டது என்பதைப் புரிய வைத்தது.

நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் பெருகி வருகின்றன. இதைக் குறைக்கிற வல்லமை இசைக்குத்தான் உள்ளது. இசையின் நினைப்பு வந்தாலே மனதிலிருக்கிற வன்முறை உணர்வு தானாகக் குறைந்துவிடும். அதனால் இசையை மாணவப் பருவத்திலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும்," என்றார்.

பின்னர் தான் எழுதி இசைத்துப் பாடிய இதயம் ஒரு கோயில் பாடலை மாணவர் மத்தியில் பாட, அனைவரும் நெஞ்சுருகக் கேட்டனர்.