இயக்குநர் மிஷ்கின் பெயரில் ஒரு மோசடி... உஷார் மக்களே!

சினிமா திரையில்கூட பார்த்திராத அளவுக்கு பல மோசடிகள் திரையுலகில் நடந்து வருகின்றன.

அப்படி சமீபத்தில் நடந்துள்ள மோசடி, இயக்குநர் மிஷ்கினின் பெயரில் அரங்கேறியுள்ளது. எப்படியாவது சினிமாவில் சேர வேண்டும் என்ற மக்களின் ஆர்வம்தான் இந்த மோசடிக்கு அடிப்படை.

இயக்குநர் மிஷ்கின், தன் புதிய படத்துக்கு நடிகர் நடிகைகளை தேர்வு செய்வதற்காக நேர்முகத் தேர்வு நடத்த இருப்பதாகவும், அதனால் விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட தேதியன்று குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறும் 'ஆதி' என்பவரது பெயரையும், அவரது செல்போன் எண்ணையும் ஒரு அரங்கையும் குறிப்பிட்டு வாட்ஸ்அப் செய்தியொன்று பல வாட்ஸ் அப் குரூப்புகளிலும் பரவ, அதை நம்பிய 300க்கும் அதிகமான மக்கள் குறிப்பிட்ட இடத்தில் குவிந்திருக்கின்றனர்.

Cheating in the name of director Mysskin

ஆனால், மிஷ்கினுக்கு தொ டர்புடைய ஆட்கள் யாரும் வராமல், வேறு யாரோ அங்கு வந்து, நேர்முகத் தேர்வுக்கு உள்ளே போக வேண்டுமென்றால் 300 முதல் 500 வரை நுழைவு கட்டணம் தர வேண்டும் என்று சொல்ல, 'ஆஹா, இது அந்தக் கும்பலா' என்று சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பினார்களாம் மக்கள்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த வாட்ஸ்அப் செய்தியில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு அடுத்தடுத்து பலரும் போன் செய்ய, 'ஃபேக் நியூஸ்' என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவே பெண்கள் போன் செய்தால் 'சில தவிர்க்க முடியாத காரணத்தால் இன்னைக்கு நடக்க வேண்டியது நடக்கலை... ஆனா கண்டிப்பா உங்க போட்டோவை வாட்ஸ்அப்பில் அனுப்புங்க. ஒரு மாசத்துக்குள்ள உங்களை கூப்பிடுறோம்' என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இதுகுறித்து மிஷ்கினின் உதவியாளர் ஒருவரிடம் கேட்டபோது, "எப்பவுமே புதுசா ஒரு படத்துக்கு நடிக்க ஆட்கள் தேவைன்னா அதை நண்பர்கள் பலரிடமும் கூறி, அவர்கள் மூலம் வருபவர்களை நேரடியாக மிஷ்கினோட ஆபிஸுக்கு வரவழைச்சு அவங்கள போட்டோ எடுத்துட்டு அனுப்புவோம். பிடிச்சிருந்தா ஓகே பண்ணுவோம். இதுதான் நடைமுறை.

ஆனா இதை அப்படியே உல்டாவாக்கி யாரோ வாட்ஸ்ஆப் மூலம் பணம் பண்ணப் பார்த்திருக்கிறார்கள். தயவு செய்து யாரும் இதை நம்பாதீங்க'' என்றார்.

இதேபோலவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர், நடிகர் சசிக்குமாரின் பெயரில் போலியான ஃபேஸ்புக் ஐடியை வைத்துக் கொண்டு, இதேபோல நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருந்தது ஒரு கும்பல் உடனே சசிகுமார் போலீசுக்குப் போக, அந்த போலி கணக்கு முடக்கப்பட்டது.

 

"ஊதா கலரு ரிப்பனுக்குப்" போட்டியாக களம் இறங்கிய அக்கா!

சென்னை: ஊதா கலரு ரிப்பன் என்ற ஒரே பாடலின் மூலம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பரவலாக அறியப்பட்ட நடிகை ஸ்ரீதிவ்யாவைத் தொடர்ந்து அவரது அக்காவும் நடிகையாகியுள்ளார்.

தொடர்ந்து தாவணி பாவாடையிலேயே நடிக்க இளைஞர்கள் ஸ்ரீதிவ்யாவைத் தங்கள் கனவுக் கன்னியாக ஏற்றுக் கொண்டனர்.

SriDivya Competitor Her Sister SriRamya?

தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் ஸ்ரீதிவ்யாவுக்கு போட்டியாக அவரது வீட்டில் இருந்தே சத்தமில்லாமல், இன்னொரு நடிகை உருவாகி விட்டார் அவருக்கு தங்கை கிடையாதே என்று நினைக்காதீர்கள்.

அக்கா இருக்கிறார் என்னது அக்காவா ன்னு ஜெர்க் ஆகாதீங்கப்பா, அக்காதான் நடிக்க வரப்போகிறார். அவரின் பெயர் ஸ்ரீரம்யா. இவரின் முதல் படம் 1940லோ ஒக கிராமம் என்ற தெலுங்குப் படம். இதில் நடித்தற்காக நந்தி விருது பெற்றிருக்கிறார்.

தமிழில் யமுனா என்ற படத்திலும் நடித்திருக்கிறார், தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ரீரம்யா தங்கை ஸ்ரீதிவ்யாவை ஒருபோதும் போட்டியாக நினைத்தது இல்லையாம் (பாசம்).

சக்கரவாக்கம் என்ற தெலுங்கு சீரியலில் இருவரும் பாசமான அக்கா, தங்கையாக நடித்திருக்கிறோம் என்று கூறும் ஸ்ரீரம்யா இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்றால் தங்கை ஸ்ரீதிவ்யாவுடன் சேர்ந்து நடிப்பதற்கும் தயாராக இருக்கிறாராம் (நல்லது).

 

கமலின் பாபநாசம் படத்தால் அருள்நிதி படத்துக்கு வந்த சிக்கல்!

கமலின் பாபநாசம் படம் ஜூலை 3-ம் தேதி வெளியாவதால், பிற படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அன்று வெளியாகவிருந்த அருள்நிதி நடித்த நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படம் தள்ளிப் போய்விட்டது.

அறிமுக இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், சிங்கம்புலி, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

Papanasam postpones Arulnidhi movie to July 31st

வருகிற ஜூலை 3-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாபநாசம்' படம் ஜூலை 3-ந் தேதி வெளியிடுவதாக திடீரென அறிவித்தனர். அன்றைய தினத்தில் விவேக் நாயகனாக நடித்த பாலக்காட்டு மாதவன் உள்ளிட்ட மேலும் சில படங்களும் வெளிவருகின்றன.

இதனால், ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்' படத்தின் ரீலீஸ் தேதியை இப்படத்தை வெளியிடும் ஜே.எஸ்.கே நிறுவனம் ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து ஜே.எஸ்.கே நிறுவனத்தின் நிர்வாகி சதீஷ்குமார் கூறும்போது, எங்கள் நிறுவனம் சார்பாக ஜூலை 3-ம் தேதி வெளியாக இருந்த ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்' திரைப்படம் தற்போது கமல் நடித்த ‘‘பாபநாசம்' திரைப்படம் அதே தேதியில் வெளியாவதால், எங்களது விநியோஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜூலை 31-ந் தேதி படத்தை வெளியிடப் போகிறோம், தெரிவித்துள்ளார்.

 

பாபநாசம் வந்தா வரட்டும்... பாலக்காட்டு மாதவன் அதன் கதைக்காக ஓடும்!- தயாரிப்பாளரின் தில்

விவேக் நாயகனாக நடித்துள்ள காமெடிப் படமான பாலக்காட்டு மாதவன், அருள்நிதி நடித்த காமெடிப் படமான நாலு போலீசும் நல்லாருந்த ஊரும், பரஞ்சோதி, ஒரு தோழன் ஒரு தோழி, ஒரேஒரு ராஜா மொக்கராஜா ஆகிய ஐந்து படங்கள் ரிலீஸ் தேதியை ஒரு மாதம் முன்பே, ஜூலை 3 ரிலீஸ் என அறிவித்து விளம்பரங்கள் கொடுத்து வந்தன.

அதிலும் பரஞ்சோதி, ஒரு தோழன் ஒரு தோழி படங்கள் பத்திரிகையாளர்களுக்கும் போட்டுக் காட்டப்பட்டுவிட்டன.

Palakkattu Madhavan Vs Papanasam

இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த விதிகளுக்கும் கட்டுப்படாமல் திடீரென பாபநாசம் படத்தின் வெளியீட்டுத் தேதியை ஜூலை 3 என அறிவித்துவிட்டனர்.

இதனால் மேற்கண்ட ஐந்து படங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. நாலு போலீசும் நல்லாருந்த ஊரும் ஜூலை 31-க்குத் தள்ளிப் போக, மற்ற சிறு படங்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

ஆனால் விவேக் நடித்துள்ள பாலக்காட்டு மாதவன் தயாரிப்பாளர் லாரன்ஸ் அசரவில்லை. 'ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை. அதே ஜூலை 3-ல் படத்தை வெளியிடுவேன்' என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் கடந்த மே மாதமே ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு, புரமோஷன் செய்து வருகிறேன். இப்போது திடீரென்று கமல் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அந்தப் படத்துக்காக என் படத்தை தள்ளிப் போட்டால் எனக்குத்தான் ஏகப்பட்ட நஷ்டம் வரும்.

எனக்கு பாலக்காட்டு மாதவன் கதை, காமெடிக் காட்சிகள் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. பாபநாசம் வந்தாலும், என் படம் அதன் சிறப்பான உருவாக்கத்துக்காக நிச்சயம் மக்களிடம் வரவேற்பைப் பெறும்," என்றார்.

 

'கவலை வேண்டாம்' ஜீவா.. கீர்த்தி சுரேஷ் ஜோடி!

யாமிருக்க பயமே என்ற அசத்தலான வெற்றிப் படத்தைக் கொடுத்த டிகே அடுத்து இயக்கும் படம் கவலை வேண்டாம். இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக நடிக்க, எல்ரெட் குமாரின் ஆர் எஸ் இன்போடெயின்மென்ட் தயாரிக்கிறது.

ஜீவாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்தப் படம் குறித்து இயக்குனர் டிகேவிடம் பேசினோம்: "அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அமைந்துள்ள இப்படத்தில் ஜீவா, கீர்த்தி சுரேஷ் மிகவும் தேர்ந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு மிகவும் அனுபவம் வாய்ந்த கதாநாயகி தேவைப்பட்டார்.

Jiiva's next titled as Kavalai Vendam

ஆனால் கீர்த்தி இந்த கதாப்பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தினார். ரசிகர்களுக்கு கூடுதல் சுவாரஸ்யமாக பாபிசிம்ஹா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அடுத்த மாதம் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம்," என்றார்.

ஜீவா இப்போது திருநாள் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் கவலை வேண்டாம் ஆரம்பமாகிறது.

 

விஜய்யின் அடுத்த படமே வரப் போகுது.. ஆனா கத்தி கதை வழக்கு முடியவில்லை!

விஜய்யின் அடுத்த படமான புலியும், கத்தி கதை வழக்கின் தீர்ப்பும் ஒன்றாகத்தான் ரிலீசாகும் போலிருக்கிறது.

கத்தி படத்தின் கதை திருடப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து தஞ்சை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Kaththi story case postponed to July 15th

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தின் கதை, தான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதை என்றும், தன்னுடைய கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டதாகவும், அதற்கு நஷ்ட ஈடு கோரியும், வேறு எந்த மொழியிலும் கத்தி திரைப்படத்தை மொழியாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமம் கீழத்தெருவை சேர்ந்த அன்பு.ராஜசேகர் (வயது32) என்பவர் தஞ்சை மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம் ஆகிய 5 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கை அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

சமூக வலைதளங்களில் பரபரவென பரவும் தனுஷின் மாரி ட்ரைலர்!

சென்னை: நடிகர் தனுஷ் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் மாரி படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. வெளியான 16 மணி நேரங்களுக்குள்ளேயே இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான பேரால் பார்த்து ரசிக்கப்பட்டு இருக்கிறது மாரி டிரைலர்.

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படம் வரும் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என்று இயக்குநர் பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

நேற்று வெளியான மாரி டிரைலர் சமூக ஊடங்களில் தொடர்ந்து காட்டுத்தீ வேகத்தில் பரவி வருகின்றது, டிரைலர் நன்றாக இருப்பதாக தனுஷின் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளனர்.

மேலும் பேஸ்புக்கிலும் இன்று காலையில் இருந்தே தொடர்ந்து ட்ரெண்டாகிக் கொண்டு இருக்கிறது மாரி டிரைலர்.

 

அர்னால்டின் டெர்மினேட்டர் படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்!

அர்னால்டின் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தை அவ்ரா சினிமாஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கி வெளியிடுகிறது எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம்.

அர்னால்ட் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் திரைப்படம் இந்தியாவில் வரும் ஜூலை 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. வெளிநாடுகளில் ஜூலை 1-ம் தேதியே வெளியாகவிருக்கிறது.

Escape Artist Motion Pictures bagged Arnold’s Terminator Genisys

இப்படத்தை தென்னிந்தியா முழுதும் வெளியிடும் மகேஷ் கோவிந்த ராஜின் அவ்ரா சினிமாஸ் விநியோகிக்கிறது.

Escape Artist Motion Pictures bagged Arnold’s Terminator Genisys

டெர்மினேட்டர் படத்தின் தமிழக விநியோக உரிமையை அவ்ரா சினிமாஸிடமிருந்து வாங்கியுள்ளது எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம்.

டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தை தமிழகத்தில் வெளியிடுவதைப் பற்றி குறிப்பிடுகையில், "ஹாலிவுட் திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அர்னால்டின் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தை தமிழகத்தில் வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. ‘He is back' என்ற அந்த வார்த்தையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது," என்றார் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்.

 

டெய்லி பல்லு விளக்குவது போல யோகாவும் மஸ்ட்.. தமன்னா "அட்வைஸ்"

மும்பை: நடிகர் துஷார் கபூரும், நடிகை தமன்னாவும் இணைந்து யோகா பற்றிய புத்தகம் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

பாயல் கிட்வானி திவாரியின் "உடல் கடவுளர்: பெண்களுக்கான முழுமையான யோகா பற்றிய புத்தகம்" என்ற அந்தப் புத்தகத்தினை இருவரும் இணைந்து வெளியிட்டனர்.

Tamannaah Tusshar launch yoga book for women

இதுகுறித்து தமன்னா, "கடந்த இரண்டரை மாதங்களாக பாயல் எனக்கு யோகப் பயிற்சி அளித்து வருகின்றார். இதனால் என் உடலில் மகத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது. யோகா உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மனரீதியாகவும் உதவக் கூடியது.

அதனால் நான் தினமும் பற்களைச் சுத்தம் செய்வதுபோலவே யோகாவையும் செய்து வருவது எனக்கு மிகவும் ஆதரவாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

துஷார் கபூரோ, "முதலில் எனக்கு மிகவும் கடுப்பாக இருந்தது யோகா. ஆனால், கொஞ்ச நாளிலேயே இது எனக்குள் பெரிய மாற்றத்தினை தந்தது. யோகா உங்களை மிகவும் சுதந்திரமாகவும், தன்னம்பிக்கை உடையவராகவும் நினைக்கச் செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகம் உலக யோகா தினத்தினையொட்டி வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாகுபலி படப்பிடிப்பில் ஹீரோவாகி நடிகையின் மானம் காத்த தமன்னா

ஹைதராபாத்: பாகுபலி படப்பிடிப்பின்போது நடிகை நோரா பதேஹியின் மேலாடை கழன்றுவிழ ஓடிப் போய் அவரது மானத்தை காப்பாற்றியுள்ளார் தமன்னா.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் அனுஷ்கா, பிரபாஸ், ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள மெகா பட்ஜெட் படம் பாகுபலி. அந்த படத்தில் மனோகரி என்ற குத்தாட்டப் பாடல் உள்ளது. அந்த பாட்டுக்கு மொராக்கோவைச் சேர்ந்த மாடலும், நடிகையுமான நோரா பதேஹி குத்தாட்டம் போட்டுள்ளார்.

Baahubali actress suffers wardrobe malfunction

படப்பிடிப்பில் அவர் கேமரா முன்பு குத்துப்பாடலுக்கு ஆடிக் கொண்டிருக்கையில் அவரது மேலாடை கழன்றுவிழ அவர் அதிர்ச்சி அடைந்தார். இதை பார்த்த தமன்னா ஓடிப் போய் அவரது மானத்தை காத்தார்.

இந்நிலையில் இது குறித்து நோரா கூறுகையில்,

அது மிகவும் பயங்கரமான தருணம். நல்ல வேளை தமன்னா வந்து என் மானத்தை காத்தார். அதற்காக நான் தமன்னாவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றார்.

 

மனச்சோர்வுக்கு மருத்துவ ஆலோசனை தரும் இனியவளே உனக்காக

விரக்தி, மனஅழுத்தம், கவலை, பலவீனம், தனிமை சோர்வு என இன்றைக்கு பலருக்கும் உளவியல் சார்ந்த பல பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு அளிக்கும் விதமாக "இனியவளேஉனக்காக" என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது சத்தியம் தொலைக்காட்சி.

Sathiyam TV programme Ineyavale Unakaga

உளவியல் ரீதியான பல பிரச்சினைகள் உடல்நல பிரச்சினைகளுக்கு காரணமாகிறது. இந்த பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்பது பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது. எனவே சத்தியம் தொலைக்காட்சியில் உளவியல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு தொலைப்பேசி உரையாடலில் தெளிவான தீர்வும், முழுமையான ஆலோசனையும் தருகிறார் டெய்சி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் மற்றும் குடும்பநல ஆலோசகருமான திருமதி.டெய்சிசரண்.

Sathiyam TV programme Ineyavale Unakaga

இந்நிகழ்ச்சியின் நேரடி ஒளிப்பரப்பினை வாரந்தோறும் புதன்கிழமை இரவு 8.30 மணிக்கும் இதனுடைய மறு ஒளிபரப்பினை வாரந்தோறும் திங்கள் காலை 11 மணி முதல் 12 மணி வரை சத்தியம் தொலைக்காட்சியில் காணலாம்.

 

மிஸ் தனக்பூர் ஹாசிர் கோ- படத்தைப் பார்த்து உங்கள் பணத்தை வீணடிக்காதீர்கள்

மும்பை: இன்று திரைக்கு வந்திருக்கும் மிஸ் தனக்பூர் ஹாசிர் கோ படத்தைப் பற்றி பரவலான விமர்சனங்கள், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பதிவிடப் பட்டுள்ளன.

வட மாநிலங்களில் நடைபெறும் பஞ்சாயத்துக்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப் பட்டிருக்கிறது, சில நாட்களுக்கு முன்னர் கூட இந்தப் படத்தின் இயக்குநர் வினோத் கப்ரி தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு 51 எருமை மாடுகள் பரிசாகத் தரப்படும் என்று "காப்" என்று அழைக்கப் படும் பஞ்சாயத்து அமைப்புகள் கூறியது.

'Miss Tanakpur Haazir Ho'

ஏனெனில் இவர்களின் அடாவடிகளை மையமாகக் கொண்டு அரசியல் நையாண்டியாகத் தான் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. எருமை மாட்டை பலாத்காரம் செய்து விட்டதாக இளைஞன் ஒருவன் தண்டிக்கப்படுவதும் அதைத் தொடர்ந்த காட்சிகளும் தான் படத்தின் கதையாம் ( முடியல)

ஓம் புரி, அணில் கபூர், ரவி கிஷான், ராகுல் பாகா மற்றும் ஹ்ரிஷிதா பட் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சில இடங்களில் இந்தப் படத்திற்கு தடைகளும் விதிக்கப்பட்டு உள்ளது.

சமூக ஊடகங்களில் படம் நன்றாக இருக்கிறது என்று ஒருசிலரும் ,படத்தைப் பார்த்து பணத்தை இழக்காதீர்கள் என்று வேறு சிலரும் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

பெரும்பாலான ஊடகங்களின் விமர்சனங்களும் படத்திற்கு எதிராகவே இருக்கிறது, இதன் தாக்கம் வசூலில் எதிரொலிக்கிறதா என்று பார்க்கலாம்.