சுந்தர் சி கூட்டணியில் அடுத்த இன்னிங்ஸை தொடங்குகிறார் வடிவேலு!


வடிவேலு மீண்டும் நடிப்பாரா? சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல லட்சம் சினிமா ரசிகர்களின் மனதில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்த கேள்வி இதுதான் என்றால் மிகையல்ல.

அவ்வளவு ஏன்... சக சினிமாக்காரர்களே வடிவேலு நகைச்சுவைக்கு மாற்று இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஒன்று. ஆம்... மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பிக்கிறார் வடிவேலு.

தேர்தலுக்குப் பிறகு இடைப்பட்ட இந்த ஐந்து மாத காலத்தில் வேறு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளாமலிருந்தார் வடிவேலு. நானாகத்தான் சினிமாவை விலக்கி வைத்துள்ளேன். என்னை யாரும் விலக்கவில்லை என்று கூறிவந்தார்.

இந்த நிலையில், சுந்தர் சி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் வடிவேலு.

இந்த இருவரும் இணைந்த வின்னர், கிரி, தலைநகரம், நகரம் என அத்தனைப் படங்களுமே நகைச்சுவையில் தனி முத்திரைப் பதித்தவை. ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு முழு வீச்சோடு நடிக்க வரும் வடிவேலுவும், மீண்டும் இயக்கத்தை கையிலெடுத்துள்ள சுந்தர் சியும் மீண்டும் தனி முத்திரை பதிப்பார்கள் என்பதால், இந்தப் படத்துக்கு இப்போதே எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது!

நகைச்சுவைப் புயலே, வாங்க!
 

ரஜினியின் ராணா கைவிடப்படுமா? - கோலிவுட்டில் பரபரப்பு


இதோ அதோ என்று தள்ளிப் போடப்பட்டு வந்த ரஜினியின் ராணா படம் கைவிடப்படக்கூடும் என கோடம்பாக்கத்தில் பலமான வதந்திகள் உலா வர ஆரம்பித்துள்ளன.

ராணா படம் துவங்கிய தினத்தன்றுதான் ரஜினியின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஒரே ஒரு நாள் ஷூட்டிங் நடந்ததோடு சரி. அதன் பிறகு தொடர்ந்து மருத்துவமனை, சிகிச்சை, ஓய்வு என்று போகின்றன ரஜினியின் நாட்கள்.

ஆனாலும், சிங்கப்பூரிலிருந்து சிகிச்சை முடிந்து வந்த ரஜினி, ராணாவை மீண்டும் தொடர ஆர்வம் காட்டி வந்தார். அந்தப் படம் குறித்து தொடர் ஆலோசனைகள் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஜினி இன்னும் 6 மாத காலத்துக்கு கண்டிப்பாக ஓய்வெடுத்தாக வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இயக்குநர் ரவிக்குமார் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "இந்தப் படத்தை இப்போது தொடர முடியாத நிலை உள்ளது. எனவே இதை தள்ளிப் போட்டுவிட்டு, முத்து மாதிரி ஒரு லைட்டான படத்தை எடுக்கலாமா என ரஜினி சார் ஆலோசித்து வருகிறார். இதுகுறித்து இயக்குநர் ரவிக்குமாரும் ரஜினியும் ஆலோசனை நடத்தியது உண்மைதான்," என்றார்.

ஆனால் இதுபற்றி ரஜினியோ ரவிக்குமாரோ அல்லது தயாரிப்பாளரோ இதுவரை எதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தீபாவளி ரேஸில் குதித்தது ஒஸ்தி!


இந்த ஆண்டு தீபாவளி சினிமா ரேஸில் குதித்துவிட்டது சிம்பு நடித்த ஒஸ்தி.

தரணி இயக்கியுள்ள இந்தப் படம், இந்தியில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற தபாங்கின் தழுவல் ஆகும்.

தமன் இசையமைத்துள்ளார். ஒரு பாடலுக்கு மட்டும் மல்லிகா ஷெராவத் ஆடியுள்ளார். அந்தப் பாடலை டி ராஜேந்தரும் எல் ஆர் ஈஸ்வரியும் பாடியுள்ளனர்.

ஏற்கெனவே தீபாவளி பந்தயத்தில் விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் ஏழாம் அறிவு, தனுஷின் மயக்கம் என்ன போன்ற படங்கள் உள்ளன.

இவற்றுடன் ஒஸ்தியும் சேர்ந்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் தரணி கூறுகையில், "சாதாரண காலத்தில் வெளியாவதைவிட, பண்டிகை நாட்களில் வெளியாகும் படங்களுக்கு 10 சதவீதத்துக்கு மேல் கூடுதல் வருவாய் கிடைக்கும். அதை இழக்க விரும்பவில்லை," என்றார்.

ரிலையன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது. அக்டோபர் 26-ம் தேதி 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் திரையிடத் திட்டமிட்டுள்ளனர்.
 

நடிகர் கார்த்திக்கிடம் தயாரிப்பாளர் சங்கத்தினர் மோசடி - எஸ்ஏசி புகார்


சென்னை: நடிகர் கார்த்திக்கிடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சிலர் பண மோசடி செய்துள்ளதாக தயாரிப்பாளர் சங்க பொறுப்புத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் குற்றம் சாட்டினார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வருகிற 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

இதில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். ஆகியோர் போட்டியிடுகின்றனர். எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியில் துணைத்தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு கே.ஆர்.ஜி., பி.எல்.தேனப்பன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு கலைப்புலி தாணுவும் போட்டியிடுகின்றனர்.

இவர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் தியாகராயநகரில் நடந்தது.

இதில் பங்கேற்று எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசுகையில், "தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த நிர்வாகத்தில் கேபிள் டி.வி. உரிமை வழங்கியதில் ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் அணி வென்றால் அந்த தொகை மீட்கப்படும்.

முதல்வரிடம் பேசி சிறு தயாரிப்பாளர்களுக்கான மானிய தொகையை பெற்றுத் தருவோம். டெலிவிஷன்களில் விளம்பர கட்டுப்பாடு கொண்டு வரப்படும். தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.

கார்த்திக்கிடம் மோசடி

நடிகர் கார்த்திக் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது ஒன்பது தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பணம் வாங்கி விட்டு அவர்கள் படங்களில் நடிக்கவில்லை என புகார் கூறப்பட்டது. தற்போது கார்த்திக் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படத்தில் இருந்தும் ரூ.5 லட்சம் வசூலித்து ஒன்பது தயாரிப்பாளர்களுக்கும் பிரித்து கொடுப்பது என சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கார்த்திக் நடித்து ரிலீசான கலக்குற சந்துரு, ராவணன், மாஞ்சாவேலு ஆகிய படங்களில் இருந்து ரூ.15 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

அதில் 7 லட்சம் பணத்தை தயாரிப்பாளர்களுக்கு திருப்பி கொடுக்காமல் மோசடி செய்யப்பட்டுள்ளது. கேபிள் டி.வி. மூலம் வசூலான பணத்திலும் மோசடி நடந்துள்ளது.

சங்கம் சார்பில் வெளிவரும் இதழுக்கு விளம்பர கட்டணம் என்ற பெயரில் 400 தயாரிப்பாளர்களிடம் டி.டி. வாங்கி 4 ஆண்டாக வங்கியில் போடப்படவில்லை.

இது போன்ற பல குற்றற்சாட்டுகளை போலீசில் புகாராக அளித்துள்ளோம். எங்கள் அணி வென்றால் சேவை மையமாக சங்கம் செயல்படும்," என்றார்.

இந்தக் கூட்டத்தில் கே.ஆர்.ஜி., நடிகர் ராதாரவி, முக்தா சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

நடிகையுடன் இரண்டாம் திருமணம் - நடிகர் டிங்கு மீது முதல் மனைவி புகார்


சென்னை: நடிகர் டிங்கு தனக்குத் தெரியாமல் மோசடியாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று அவரது மனைவி சுப்ரியா போலீசில் புகார் செய்துள்ளார்.

டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமானவர் டிங்கு. இவருக்கு சுப்ரியா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நடிகர் டிங்குவின் மனைவி சுப்ரியா திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில், "ஒரு பட்டதாரி பெண்ணான நான் 1999-ல் சின்னத்திரை நடிகரான டிங்கு என்கிற அருண்காந்தை காதலித்து திருமணம் செய்தேன். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆரம்பத்தில் எனது குடும்பத்துக்கு எங்கள் திருமணம் பற்றி தெரியாது. தெரிந்த பிறகு எனது பெற்றோர் எங்களுடைய திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி வைத்தார்கள்.

ரூ 30 லட்சம் நகைகள்

திருமணத்தின்போது ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் எனக்கு அணிவிக்கப்பட்டது. 15 கிலோ வெள்ளி பாத்திரங்கள் சீதனமாக தந்தார்கள். என் கணவருக்கு ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள திருமண உடைகள் வாங்கி கொடுத்தனர். கணவர் வீட்டுக்கு சென்ற பிறகு அவரது தாயார் அஞ்சனாதேவி, எனது நகைகளையும், சீதன பொருட்களையும் வாங்கிக் கொண்டார்.

பின்னர் 'எனது தாய் வீட்டில் இருந்து வரதட்சணையாக கார் வாங்கி வரவேண்டும்' என்றார். எனது மாமியாரும், கணவரின் சகோதரி நடிகை சோனியா போஸும் கார் வாங்கி வரும்படி தொடர்ந்து வற்புறுத்தினார்கள். என்னை கேவலமாகவும் ஏசினார்கள். எனது கணவரும், `கார் வாங்கி வராவிட்டால் உன்னுடன் சேர்ந்து வாழமாட்டேன்' என்று மிரட்டினார்.

மாமியார் மிரட்டல்

கார் வராவிட்டால் வேறு பெண்ணை என் மகனுக்கு கட்டி வைத்து விடுவேன் என்று மாமியார் அஞ்சனாதேவி சொல்லி வந்தார். ஆரம்பத்தில் என்னிடம் அன்பாக இருந்த என் கணவர் டிங்கு, குழந்தை பிறந்த பிறகு வீட்டுக்கு தாமதமாக வந்தார்.

சில நாட்கள் வீட்டுக்கே வருவது இல்லை. இதற்கிடையே என் கணவர் கவிதா என்ற நடன நடிகையை 2-வது திருமணம் செய்தது எனக்கு தெரியவந்தது. எனக்கு தெரியாமல் சட்டவிரோதமாக அந்த பெண்ணை அவர் மணந்துள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. எனவே எனது கணவர் டிங்கு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறப்பட்டிருந்தது.

முன்ஜாமீன் மனு

இதையடுத்து டி.வி. நடிகர் டிங்கு இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில் 'எனது மனைவி சுப்ரியா என் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளார். அவருடன்தான் நான் வாழ்ந்தேன். குழந்தை பிறந்த பிறகு நிலமை மாறியது. தேவை இல்லாமல் தகராறு செய்தார். என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனவே நான் தனியாக வாழ்கிறேன். எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

'வரதட்சணையை திருப்பிக் கொடு'

இந்த மனுவுக்கு சுப்ரியா சார்பில் கோர்ட்டில் ஆஜர் ஆன வக்கீல்கள் நடராஜன், சங்கர் ஆகியோர் நடிகர் டிங்குவுக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டனர். ரூ.25 லட்சம் மதிப்புள்ள சுப்ரியாவின் நகை, பொருட்கள் டிங்குவிடம் இருப்பதாகவும், பெங்களூரில் உள்ள கோவிலில் அவர் 2-வது திருமணம் செய்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

டிங்கு தரப்பில் முன் ஜாமீன் கேட்டு வாதம் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி தேவதாஸ் முன்ஜாமீன் மீதான தீர்ப்பை 20-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

இது குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கு. எனவே கணவன்-மனைவி தங்கள் பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்கு வசதியாக 2 பேரையும் சமரச மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

காங்கிரஸ் பிரமுகர்

நடிகர் டிங்கு காங்கிரஸ் கட்சியில் உள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மனு கொடுத்திருந்தார்.

நடிகை சோனியா இவரது சகோதரியாவார். நடிகர் போஸ் வெங்கட்டின் மனைவி. இவர் மீதும் வரதட்சணைக் கொடுமை புகாரைக் கொடுத்துள்ளார் டிங்கு மனைவி சுப்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.
 

தீபாவளி திரைவிருந்து... விஜய் - சூர்யா - தனுஷ் படங்கள் மோதல்!


நெருங்கி வருகிறது உற்சாகத் திருநாளான தீபாவளிப் பண்டிகை. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஹீரோக்கள் தங்களின் படங்களை தீபாவளிக்கு கொண்டுவரும் முனைப்பில் உள்ளனர்.

இந்த ஆண்டு விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் 7-ஆம் அறிவு, தனுசின் மயக்கம் என்ன ஆகிய மூன்று பெரிய பட்ஜெட் படங்கள் தீபாவளிக்கு வருவது உறுதியாகியுள்ளது. இவற்றுக்கான தியேட்டர் புக்கிங்கும் துவங்கிவிட்டன.

தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பான்மை தியேட்டர்களை இந்த மூன்று படங்களும் ஆக்கிரமித்துக் கொள்ளும் நிலை உள்ளது. இதோடு பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஷாருக்கானின் 'ரா ஒன்' படத்தையும் தமிழில் டப்பிங் செய்து தீபாவளிக்கு வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன.

கடந்த 2007-ல் தீபாவளியன்று இது போல் விஜய்யின் அழகிய தமிழ் மகன், சூர்யாவின் வேல், தனுசின் பொல்லாதவன் படங்கள் மோதியது நினைவிருக்கலாம்.

அப்போது இருந்ததை விட இப்போது 3 நடிகர்களின் ரேஞ்சும் உயர்ந்துள்ளது. வியாபாரமும் உலக அளவில் விரிந்துள்ளது. எனவே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

7-ம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக ஸ்ருதி, நடித்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. சீனாவில் தற்காப்பு கலையை அறிமுகம் செய்த போதி தர்மர் என்ற தமிழரை பற்றிய கதையே இப்படம்.

வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஹன்சிகா, ஜெனிலியா என இரு ஜோடிகள் கிராமத்தில் பிறந்த சாதாரண இளைஞன் படிப்படியாக உயர்ந்து தலைவனாவதே கதை. ராஜா இயக்கியுள்ளார்.

மயக்கம் என்ன படத்தில் தனுஷ் ஜோடி ரிச்சா. செல்வராகவன் இயக்கியுள்ளார். இது அடுத்த தலைமுறை கதை என்று சுருக்கமாக சொல்கிறார் செல்வராகவன். ஏற்கெனவே தனுஷுக்காக செல்வராகவன் உருவாக்கிய டாக்டர்ஸ் என்ற படம்தான் இது என்கிறார்கள்.

இவற்றைத் தவிர, மேலும் சில படங்களும் கடைசி நேரத்தில் வெளியாகும் வாய்ப்புள்ளது.
 

"கமல்ஹாசன் படத்தை 100 தடவை பார்த்தவன் நான்'' - சாருஹாசன் பேச்சு


கமல்ஹாசனின் படத்தை யாராவது 100 தடவை பார்த்திருப்பார்களா... ஆனால் அவரது முதல் படத்தை தியேட்டர், தியேட்டராக போய், 100 தடவை பார்த்தேன், என்று நடிகர் சாருஹாசன் கூறினார்.

கமல்ஹாசன் கவுர வேடத்தில் நடித்த மலையாள படம், '4 ப்ரெண்ட்ஸ்.' இந்த படத்தில் அவருடன் ஜெயராம், ஜெயசூர்யா, மீராஜாஸ்மின் ஆகியோரும் நடித்துள்ளனர். சாஜி சுரேந்திரன் இயக்கியுள்ளார்.

புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 4 நண்பர்களை பற்றிய படம். உயிருக்கு கெடு வைக்கப்பட்ட அந்த 4 பேர்களின் கவலைகளை போக்கி, உற்சாகமூட்டுகிற வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். படத்தில் நடித்ததற்காக அவர் சம்பளம் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை. சமூக கருத்துள்ள படம் என்பதால், இலவசமாகவே நடித்துக்கொடுத்தார்.

இந்த படத்தை, 'அன்புள்ள கமல்' என்ற பெயரில், தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார், பிரதீப். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஏவி.எம்.ஸ்டூடியோவில் நடந்தது.

பாடல்களை, கமல்ஹாசனின் அண்ணன் நடிகர் சாருஹாசன் வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:

"அன்புள்ள கமல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படவிழாவில் கலந்துகொள்ள எனக்கு அதிக உரிமை இருக்கிறது. கமல்ஹாசன் பிறப்பதற்கு முன்பே எனக்கு திருமணம் ஆகிவிட்டது.

யாராவது அவரது படத்தை 100 தடவை பார்த்தவர்கள் இருக்கிறீர்களா? நான் பார்த்து இருக்கிறேன். அது, கமல்ஹாசன் நடித்த முதல் படம், 'களத்தூர் கண்ணம்மா.'

கமல்ஹாசனை குழந்தையாக தூக்கிக்கொண்டு தியேட்டர், தியேட்டராக போனேன். எல்லா தியேட்டர்களிலும் அந்த படத்தை பார்த்து கண்ணீர் விட்டேன். என் தம்பியை முதன்முதலாக திரையில் பார்த்தபோது, ஆனந்த கண்ணீர் விட்டேன்.

அதுபோல் ஒரு படம் வெற்றி பெற்றால், அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆனந்த கண்ணீர் வரவேண்டும்,'' என்றார்.

விழாவில், திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் `கலைப்புலி' ஜி.சேகரன், நடிகர்கள் விதார்த், ரவிகாந்த், இசையமைப்பாளர் ஜான், பூண்டி மாதா கோவில் பங்கு தந்தை அகஸ்டின் பீட்டர், பட அதிபர் பிரதீப் ஆகியோர் பங்கேற்றனர்.