ரோபோ 2... ரஜினியின் அடுத்த பட இயக்குநர் ஷங்கர்?

கோச்சடையான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தெளிவான தகவல்கள் வராத நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் என்ன... இயக்குநர் யார் என்ற பேச்சுகள் மீண்டும் ஒரு ரவுண்ட் வர ஆரம்பித்துள்ளன.

கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படத்தை கேவி ஆனந்த் அல்லது கேஎஸ் ரவிக்குமார் இயக்குவார்கள் என்று பேசப்பட்டுவந்தது.

ரோபோ 2... ரஜினியின் அடுத்த பட இயக்குநர் ஷங்கர்?

ஆனால் இப்போது, ஐ படத்தை ஏப்ரலில் முடித்துவிட்டு, அடுத்து ரஜினியுடன் ஷங்கர் இணைகிறார் என்று செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

ஏற்கெனவே ஷங்கரும் ரஜினியும் நேரில் சந்தித்துப் பேசிய போதும் இதே போன்ற பேச்சுகள் கிளம்பின. ஆனால் இதுபற்றி வழக்கம்போல மவுனம் காத்தனர் ரஜினியும் ஷங்கரும்.

இன்னொரு பக்கம், சந்திரமுகி 2-ம் பாகம் குறித்தும் செய்திகள் கிளம்பியுள்ளன. இயக்குநர் பி வாசுவுடன் இதுபற்றி ரஜினி விவாதித்து வருவதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் வாசு படத்தை ரஜினி ஒப்புக் கொள்வாரா என்பது சந்தேகமே. காரணம், சந்திரமுகி பாகம் 2 ஏற்கெனவே தெலுங்கில் வெளியாகிவிட்டது. அந்தப் படத்தை தமிழில் செய்யும் எண்ணமில்லை என்று ரஜினியும் கூறிவிட்டார்.

எனவே ஷங்கர்தான் ரஜினியின் அடுத்த சாய்ஸாக இருக்கும் என்றும், ஆனால் ரோபோ மாதிரி ரிஸ்க் அதிகம் உள்ள கதையாக இல்லாமல், சிவாஜி மாதிரி பொழுதுபோக்குப் படமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

சூப்பர் ஸ்டாரை வைத்து இன்னொரு முதல்வனை உருவாக்குங்க ஷங்கர்!

 

இந்திய சினிமாவில் இன்னுமா இந்த பேதமிருக்கு?

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், அதுவும் சினிமா - அரசியல் - தமிழ் உணர்வு பின்னிப் பிணைந்து கிடக்கும் தமிழகத்தில் நடக்கும் சந்திப்பில் எப்படி பேச வேண்டும் என்ற நாகரீகமும் லாவகமும் கைவரப்பெற்றவர்களாகக் காட்சி தந்தார்கள் ஆமீர்கானும் அபிஷேக்கும், தூம் 3 பிரஸ் மீட்டில்.

கரணம் தப்பினாலும், Racism என்ற பழிக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

'இங்கிருப்பவர்கள் கேட்கும் பெரும்பாலான கேள்விகளில் நீங்கள் வடக்கத்திகாரங்க.. நாங்க தமிழர்கள்,' என்ற தொனிதான் விரவிக் கிடந்தது. இனி அவர்கள் மறந்தாலும், இவர்கள் விடவே மாட்டார்கள் போலிருக்கிறது.

இந்திய சினிமாவில் இன்னுமா இந்த பேதமிருக்கு?

'வடக்கு தெற்கு என்ற வித்தியாசம் எதுவும் இல்லை. நாங்கள் இந்திய சினிமாவின் ஒரு அங்கம். தமிழ் - இந்தி என்ற வித்தியாசம் எங்களுக்கில்லை. நாங்களும் தமிழ் சினிமாவின் ஒரு அங்கமாகத்தான் இருக்கிறோம். மொழி தெரியாததால் நடிக்கவில்லை. அவ்வளவுதான்,' என்றார்கள்.

கேட்க நன்றாகத்தான் இருந்தது. அவர்கள் சொல்வதும் சரிதான். இப்போதைய சூழலில் பேதங்களின்றி பணியாற்றும் சூழலை, தமிழகத்திலிருந்து போன டெக்னீசியன்கள் மூலம் கேட்க நேர்கிறது. பீகார், வங்காளம், பஞ்சாபிலிருந்து பாலிவுட்டிலோ கோலிவுட்டிலோ கலைஞர்கள் பணியாற்றுவது மாதிரிதான், தென்னகத்திலிருந்து பாலிவுட்டுக்குச் செல்வதும் என்ற இயல்பு நிலை வர கான்களின் ஆதிக்கம் உதவுவது மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.

தமிழில் நடிக்காதது ஏன் என்பதை அவர்களிடம் ஏதோ ஒரு குற்றமாகவே கேட்டு வைக்கிறார்கள் நம் மக்கள். மொழி தெரியாமல் நடிப்பது எத்தனை பெரிய தவறு என அவர்கள் சொன்னாலும், நம்மவர்கள் விடுவதில்லை. அப்புறம் நடிக்க வந்த பிறகு, தமிழை கொலை பண்றானே எனப் புலம்பி என்ன பயன்!

இன்னொன்று... நானும் ரொம்ப நாளாகப் பார்க்கிறேன்... அது ஏன் வடக்கிலிருந்து யார் வந்தாலும், அவர்களிடம் ஒரு பாராட்டு வேண்டி நிற்கிறது தமிழர்கள் என்றே புரியவில்லை.

வட இந்திய இயக்குநர்கள் - தென் இந்திய இயக்குநர்கள், வித்தியாசம் சொல்லுங்க...

தமிழ் சினிமா பத்தி என்ன நினைக்கிறீங்க... தமிழ்ல நடிப்பீங்களா?

இங்கே உங்களுக்கு எந்த நடிகரைப் பிடிக்கும்?

இந்தப் படத்துல எங்காளுங்க யார் நடிச்சிருக்காங்க, வேல செஞ்சிருக்காங்க.. அவங்களோட திறமை பத்தி சொல்லுங்க...

-இதையெல்லாம் கேட்டு என்ன ஆகப் போகிறது? அவர்கள் வந்த வேலை தொடர்பாக கேட்பதை விட்டுவிட்டு... மணிக்கணக்கில் ஜவ்வாக இழுத்து, போதும் போங்கப்பா என ஓடும் நிலைமைக்கு தள்ளுவதே வாடிக்கையாகிவிட்டது. 'பட்டிக்காட்டான் முட்டாய் கடையை முறைச்சுப் பாக்கிற மாதிரி' என்ற பழமொழிக்கும், ஆர்வக் கோளாறு என்ற பதத்துக்கும் அர்த்தம், இந்த மாதிரி தமிழ்நாட்டில் நடக்கும் பாலிவுட் பிரபலங்களின் பிரஸ் மீட்டுக்குப் போனால் தெரிந்து கொள்ளலாம்!

 

எனக்குப் பிடித்தவர் ரஜினிதான்... மனிதநேயமும் எளிமையும் மிக்க மாமனிதர் அவர்! - ஆமீர்கான் பேட்டி

சென்னை: தமிழ் நடிகர்களில் எனக்குப் பிடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். அவரது மனித நேயமும் எளிமையும் என்னை மிகவும் பிடிக்கும். அவருடன் பணியாற்றிய நாட்களை நினைத்தால் பெருமையாக உள்ளது, என்று பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் கூறினார்.

அமீர்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைப் ஆகியோர் நடித்துள்ள படம் தூம் 3. நாளை மறுநாள் உலகெங்கும் வெளியாகிறது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தை விஜய்கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ளார்.

தூம் 3 படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவருகிறது. ஆமீர்கான் படம் தமிழில் டப் செய்யப்படுவது இதுவே முதல் முறை.

எனக்குப் பிடித்தவர் ரஜினிதான்... மனிதநேயமும் எளிமையும் மிக்க மாமனிதர் அவர்! - ஆமீர்கான் பேட்டி

இதையொட்டி ஆமீர்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைப், இயக்குநர் விஜய்கிருஷ்ணா ஆச்சார்யா ஆகியோர் நேற்று இரவு சென்னை கிராண்ட் சோழாவில் நிருபர்களைச் சந்தித்தனர்.

அப்போது ஆமீர்கானிடம், தமிழில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

சற்றும் தாமதிக்காமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று பதிலளித்தார் ஆமீர்கான்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "நான் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன். அவர் நடித்த உத்தர் தக்ஷன், கிராப்தார் ஆகிய படங்களை பார்த்ததில் இருந்து அவருடைய ரசிகனாகி விட்டேன். தமிழில் எனக்குப்பிடித்த நடிகர் ரஜினிகாந்த் முதன்முதலாக அவருடன் ஆதங்கி ஆதங் என்ற படத்தில் நான் சேர்ந்து நடித்தேன்.

அவர் மிகப்பெரிய நடிகர் என்பதால் எனக்கு அவருடன் சேர்ந்து நடிப்பதற்கு பதற்றமாக இருந்தது. அவர் என்னை தைரியப்படுத்தி நடிக்க வைத்தார். அவருடைய எளிமையும், மனித நேயமும் என்னைக் கவர்ந்தவை. எனக்கு அவர் மீது மரியாதை அதிகரித்தது. எனக்குத் தெரிந்து நேரம் தவறாமையிலும், தொழில் பக்தியிலும் அவருக்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது. ஆச்சர்யமான மனிதர்.

ஒரு கலைஞனால், மனிதால் எப்போதும் இத்தனை இனிய சுபாவத்தோடு இருக்க முடியுமா என்று ஆச்சர்யமாக உள்ளது. அவருடன் பணியாற்றிய நாட்களை இப்போது நினைத்தாலும் நம்ப முடியவில்லை, பெருமையாக உள்ளது," என்றார்.

 

தலைமுறைகள்- விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
4.0/5

நடிப்பு: பாலு மகேந்திரா, சசிகுமார், ரம்யா சங்கர், மாஸ்டர் ஸ்ரீகாந்த், இயக்குநர் எம் சசிகுமார்

இசை: இளையராஜா

தயாரிப்பு: எம் சசிகுமார்

எழுத்து- ஒளிப்பதிவு- எடிட்டிங்- இயக்கம்: பாலு மகேந்திரா


இது 'கமர்ஷியல்', இது 'பேரலல்' என்றெல்லாம் நாமாகத்தான் வரையறை வகுத்துக் கொண்டு படம் என்ற பெயரில் நம்மை நாமே படுத்திக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் நல்ல சினிமாவுக்கு இலக்கணம் ஏதும் தேவையில்லை. கதை என்ற சட்டகம் எதுவும் கூட வேண்டாம்.

நிகழ்வுகள்... அதைப் பதிவு செய்யும் விதம், அதற்குத் தேவையான அளவு குறைந்தபட்ச தொழில்நுட்பம் இருந்தால் கூடப் போதும் என இன்றைய தலைமுறைக்கு கிட்டத்தட்ட ட்யூஷன் எடுத்திருக்கிறார் தமிழ் சினிமாவின் மூத்த கலைஞனான பாலுமகேந்திரா, தனது தலைமுறைகள் மூலம்.

தலைமுறைகள்- விமர்சனம்

தமிழ், தமிழ் கிராமங்கள், தமிழர் அடையாளங்கள், தமிழர் பழக்க வழக்கங்கள் எல்லாம் தொலைந்து தொலைந்து தொலைந்து... நன்கு தமிழ் தெரிந்த கணவனும் மனைவியும் முற்றாக ஆங்கிலத்திலேயே உரையாடி, அடுத்த தலைமுறை பிள்ளையின் தாய் மொழியையும் கொல்லும் அவலம் பார்த்து ஆதங்கப்படும் ஒரு ஓய்வு பெற்ற பள்ளிக்கூட வாத்தியாரின் கிழப் பருவத்து நாட்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார் பாலுமகேந்திரா.

இந்த வாழ்க்கைக்கு இனி திரும்பத்தான் முடியுமா என்ற மலைப்பான கேள்வியுடன் கனத்த மவுனத்தைச் சுமந்து வெளியேறுகிறோம்.

உள்ளது உள்ளபடியான பதிவு இது. தாத்தாக்களின் கைகளைப் பிடித்து நடந்த நாட்கள், தாத்தாக்கள் செதுக்கிக் கொடுத்த பொம்மைகளுடன் பொழுது போக்கிய பால்யம், ஆறும் பசும் வயல்களும் சுத்தக் காற்றும் சுவாசித்த கிராமத்துத் தருணங்களை மனதில் தேக்கியிருக்கும் யாரையும் தலைமுறைகள் தளும்ப வைக்கும்.

இயக்குநர் பாலு மகேந்திராதான் இந்தப் படத்தின் முதன்மை பாத்திரம். வாழ்ந்திருக்கிறார். அந்தக் கண்களும், ஏக்கம் சுமந்த பார்வைகளும், ஒரு கலாச்சார சீரழிவைப் பார்த்து நிற்கும் கையாலாகாத்தனமும்.. கண்களிலேயே இன்னும் நிற்கின்றன!

தலைமுறைகள்- விமர்சனம்

அவரது மகனாக நடித்திருக்கும் சசிகுமார், மருமகளாக வரும் ரம்யா சங்கர், ஊர் மனிதர்களாக தோன்றும் லட்சுமணன், அந்த பாதிரியார்.. எந்தப் பாத்திரத்தையும் சினிமாவில் பார்க்கிற உணர்வே இல்லை.

பேரனாக வரும் சிறுவன் ஸ்ரீகாந்த் அற்புதம். ஒரு காட்சியில் வந்தாலும் படத்தில் நிறைந்திருக்கிறார் இயக்குநர் எம் சசிகுமார்.

படத்தில் இரண்டு காட்சிகளில் சசிகுமாரும் ரம்யாவும் முழுக்க ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்வார்கள், அதுவும் குடும்ப விஷயங்களை. இத்தனைக்கும் கதைப்படி இருவருக்கும் தமிழ் நன்கு தெரியும். இந்தக் காட்சி மனதில் எரிச்சலைக் கிளப்புவது நிஜம். ஆனால், இதோ... பக்கத்து வீட்டில், மகன்- மகள் தமிழ் பேசிவிடக் கூடாது என்று தண்டனை முறையையே அறிவித்துள்ள பெற்றோரை நினைத்துப் பார்த்தால், பாலு மகேந்திரா சரியாகவே இந்த சமூக மாற்றங்களைக் கவனித்து வருகிறார் என்பது புரிந்தது.

அதிகமில்லை, அளந்து அளந்து பேசும் பாலுமகேந்திராத்தனமான வசனங்கள்தான். ஆனால் அது போதுமானதாகவே இருக்கிறது இந்தப் படத்துக்கு.. வளவள என பேசாமல் காட்சிகளைப் பேச வைப்பதுதானே சினிமா மொழி!

விறுவிறுப்பான திரைக்கதை இல்லை.. அதிரடியாக எந்தத் திருப்பமும் இல்லை. ஆனால் இவை ஏதுமில்லாமலேயே, தன் உணர்வுகளை ஒரு ரசிகனுக்குள் கடத்த முயலும் என்பதைக் காட்டியிருக்கிறார் பாலு.

தலைமுறைகள்- விமர்சனம்

35 எம்எம்மில் மீண்டும் காட்சிகளைப் பார்ப்பது கொஞ்சம் புதுசாகத்தான் இருந்தது. அதுவே ஒரு எளிய கவிதைத்தனம் சேர்க்கிறது படத்துக்கு. இயற்கை தந்த ஒளியில், எந்த உறுத்தலான கூடுதல் நுட்பமும் சேர்க்காமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இளையராஜாவின் இசை இந்தப் படத்தில் நிஜமான ஒரு சோதனை முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

வசனங்கள் பேசும் இடங்களில் இசைக்கு வேலையில்லை. காற்றும், நதியும், பறவைகளும் சலசலத்து சங்கமிக்கும் காட்சிகளிலும் இசைக் கருவிகள் அமைதி காக்கின்றன. ஆனால் பாத்திரங்கள் பேசிக் கொள்ளாத காட்சிகளில் மட்டும் உறுத்தாமல் ஒரு தென்றலைப் போல வந்து போகிறது ராஜாவின் இசை... எது நிஜமான பின்னணி இசை என்பதற்கு இளம் தலைமுறையினருக்கு வகுப்பெடுத்திருக்கிறார் இசைஞானி!

தலைமுறைகள்- விமர்சனம்

'அய்யோ தமிழும் தமிழ் கிராமங்களும் கலாச்சாரமும் அழிகிறதே... வீறு கொண்டெழுங்கள்' என்ற பிரச்சார தொனி இல்லாமல், ஆனால் அந்த மாதிரி உணர்வை பார்க்கும் நமக்குள் ஏற்படுத்தியிருக்கிறது பாலுமகேந்திராவின் தலைமுறைகள்.

வணிக ரீதியிலான பலன்களை இரண்டாமிடத்துக்குத் தள்ளிவிட்டு, இந்தப் படத்துக்கு தயாரிப்பாளராக முன்வந்த சசிகுமார் பாராட்டுக்குரியவர்.

 

நாளை மறுநாள் விஜய்யின் ஜில்லா ஆடியோ!

நாளை மறுநாள் விஜய்யின் ஜில்லா ஆடியோ!  

இமான் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில். மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன.

படத்தின் இசையை ஆர்பி சவுத்ரியின் சொந்த ஆடியோ கம்பெனியான ஸ்டார் மியூசிக் வெளியிடுகிறது.

நாளை மறுநாள் எம்எம் நிலையத்தில் இசை வெளியீடு நடந்த கையோடு, நேரடியாகக் கடைகளுக்கு ஆடியோ சிடிகள் அனுப்பப்படுகின்றன.

நாளை மறுநாள் விஜய்யின் ஜில்லா ஆடியோ!  

ஜில்லா படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இடையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வீடுகள் - அலுவலகங்களில் நேற்று வருமான வரி சோதனை நடந்தது.

வேறு எந்த பிரச்சினையுமில்லாமல் படம் வெளியாக வேண்டுமே என்ற தவிப்பில் உள்ளனர் தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ தரப்பில்!

 

மல்லுக்கட்டிய நடிகை: தலையில் அடித்துக் கொள்ளும் இயக்குனர்

சென்னை: புஸு புஸு நடிகை தான் நடித்து வரும் 6 எழுத்துப் பட இயக்குனருடன் படப்பிடிப்பில் சண்டை போட்டாராம்.

விரல் வித்தை நடிகரின் காதலியான புஸு புஸு நடிகை கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு வந்து ஜொலிக்கும் சிவமான நடிகரை வைத்து குமரமான இயக்குனர் 6 எழுத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் புஸு புஸு நடிகையைத் தான் ஹீரோயினாக போட வேண்டும் என்று இயக்குனர் ஒத்த காலில் நின்று தயாரிப்பாளரிடம் அனுமதி பெற்றார். இந்நிலையில் அம்மணி படப்பிடிப்புக்கு வந்த உடனேயே நான் இன்றைக்கு சீக்கிரம் கிளம்ப வேண்டும். எனக்கு வேறு ஒரு படப்பிடிப்பும் உள்ளது என்ற டயலாக்கை தான் முதலில் கூறுவாராம்.

மேலும் சிவமான நடிகரின் படப்பிடிப்புக்கு அவ்வப்போது டிமிக்கியும் கொடுத்துவிடுவாராம். இப்படி நடிகை டிமிக்கி கொடுப்பது, படப்பிடிப்பில் பாதியிலேயே நழுவிவிடுவதை பார்த்த இயக்குனர் ஒரு நாள் கடுப்பாகி நடிகையை பிடித்து விளாசினாரம். பதிலுக்கு நடிகையும் எகிற படப்பிடிப்பில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தார்களாம்.

இந்த நடிகையை போய் என் படத்திற்கு வேண்டும் என்று அடம்பிடித்து ஒப்பந்தம் செய்துவிட்டேனே என்று இயக்குனர் தற்போது புலம்புகிறாராம்.

 

விதார்த் நடிக்கும் புதுப்படம் அருத்தாபத்தி!

‘மைனா', ‘கொள்ளைக்காரன்', முதல் இடம் போன்ற படங்களில் நடித்த விதார்த், ஹீரோவாக நடிக்கும் புதிய படம் அருத்தாபத்தி.

இந்த படத்தை சஜின் வர்கீஸ் என்பவர் இயக்குகிறார். இவர் தமிழில் ‘காசி', ‘அற்புதத்தீவு' உள்ளிட்ட படங்களை எடுத்த இயக்குனர் வினயனிடம் அசோசியேட்டாக பணியாற்றியவர்.

விதார்த் நடிக்கும் புதுப்படம் அருத்தாபத்தி!

இதில் விதார்த்துக்கு ஜோடியாக கொல்கத்தா மாடல் அழகி ஐஸ்வர்யா தத் நடிக்கிறார். மேலும் தம்பி ராமையா, மனோபாலா, தேவதர்ஷினி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

வித்தியாசமான கதையமைப்போடு, பரபரப்பூட்டும் காட்சிகள் கொண்ட த்ரில்லராக அருத்தாபத்தி உருவாகிறது.

ஒளிப்பதிவை நவாஸ் கவனிக்கிறார். இசையை லஜ்ஜாவதி பாடல் புகழ் ஜாஸி கிஃப்ட் அமைக்கிறார். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் துவக்க விழா நேற்று சென்னை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஆரம்பமாகியது. படக் குழுவினர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி ஷூட்டிங்கைத் தொடங்கி வைத்தனர்.

 

நள்ளிரவில் 2 பேர் வீட்டுக்குள் புகுந்து ரகளை செய்தும் புகார் கொடுக்காத அஜீத்

சென்னை: தனது வீட்டுக்கு 2 வாலிபர்கள் குடிபோதையில் நள்ளிரவில் வந்து ரகளை செய்தும் அவர்கள் மீது நடிகர் அஜீத் குமார் புகார் கொடுக்கவில்லை. இதனால் தான் அவர்கள் இருவரையும் போலீசார் விடுவித்தனர்.

அஜீத் குமாரின் வீடு சென்னை திருவான்மியூர் சீ வேர்டு சாலையில் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு 2 மர்ம நபர்கள் அஜீத்தின் வீட்டு கேட்டை தட்டினர். தாங்கள் அஜீத்தின் ரசிகர்கள் என்றும், அவரை சந்திக்க வந்ததாகவும் கூறி ரகளை செய்தனர்.

நள்ளிரவில் 2 பேர் வீட்டுக்குள் புகுந்து ரகளை செய்தும் புகார் கொடுக்காத அஜீத்

அஜீத் வீட்டில் இல்லை காலையில் வாருங்கள் என்று காவலாளி கூறியும் அவர்கள் அதை காதில் வாங்காமல் கத்தி கூச்சலிட்டனர். இந்நிலையில் அஜீத் காரில் வந்ததைப் பார்த்த அந்த 2 பேரும் காரின் பின்னாலேயே வீட்டுக்குள் நுழைந்தனர். இந்நிலையில் இது குறித்து தகவல் கிடைத்த திருவான்மியூர் போலீசார் அஜீத்தின் வீட்டுக்கு வந்து அந்த 2 பேரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

நள்ளிரவில் தனது வீட்டில் 2 குடிகாரர்கள் கலாட்டா செய்தும் அஜீத் குமார் அவர்கள் மீது புகார் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் போலீசார் அந்த இருவரையும் விடுவித்தனர். இது அஜீத்தின் அரிய குணத்தை காட்டுகிறது.

அவர் நினைத்திருந்தால் அவர்கள் மீது புகார் கொடுத்து சிறையில் தள்ளியிருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜாமீன் மனுதான் தள்ளுபடியாகிடுச்சே, இன்னும் ஏன் பைசூலை கைது செய்யல? - 'குடாயும்' ராதா

சென்னை: சென்னை போலீசாருக்கு பெரும் குடைச்சலாக மாறியுள்ளார் சுந்தரா டிராவல்ஸ் ராதா.

சினிமா பைனான்சியர் பைசூலின் ஜாமீன் மனு மூன்று முறை தள்ளுபடி ஆகியும் கைதாகாமல் இருப்பது ஏன் என தொடர்ந்து அவர் கேள்வி எழுப்பி வருகிறார்.

ஜாமீன் மனுதான் தள்ளுபடியாகிடுச்சே, இன்னும் ஏன் பைசூலை கைது செய்யல? - 'குடாயும்' ராதா

சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, மானஸ்தன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. இவர், தொழிலதிபரும், சினிமா பைனான்சியருமான பைசூல் மீது செக்ஸ் மற்றும் பண மோசடி புகார் அளித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பைசூல், போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தற்போது தலைமறைவாக உள்ளார். தலைமறைவாக உள்ள பைசூல் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

இந்நிலையில் நிருபர்களை சந்தித்த நடிகை ராதா, ''பைசூல் ஜாமீன் மனுக்கள் மூன்று முறை நீதிமன்றத்தில் தள்ளுபடியாகி விட்டன. அதன் பிறகும் அவர் கைது செய்யப்படாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. சில முக்கிய புள்ளிகள் பைசூலுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். அவர்கள் யார் என்ற விபரங்களை விரைவில் வெளியிடுவேன்.

பல்வேறு பெண்கள் அமைப்பினர் என்னை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். சட்டத்தை ஏமாற்றி தலைமறைவாக இருக்கும் பைசூலை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும். என்னிடம் இருந்து அபகரித்த ரூ.50 லட்சத்தையும் மீட்டு தர வேண்டும்," என்றார்.

கடந்த மூன்று நாட்களில் நான்காவது முறையாக மீடியாவைச் சந்தித்து புகார் கூறியுள்ளார் ராதா.

 

பிக் பாஸ் 7: நடிகை சோபியாவை துடைப்பத்தால் அடித்து, அசிங்கமாக திட்டிய நடிகர் கைது

பிக் பாஸ் 7: நடிகை சோபியாவை துடைப்பத்தால் அடித்து, அசிங்கமாக திட்டிய நடிகர் கைது

மும்பை: பிக் பாஸ் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் அர்மான் கோஹ்லி சக போட்டியாளரும், நடிகையுமான சோபியா ஹயாத்தை தாக்கி, அசிங்கமகா திட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.

பிக் பாஸ் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்தைச் சேர்ந்த பாடகியும், நடிகையுமான சோபியா ஹயாத் கலந்து கொண்டார். ஆனால் சோபியா பிக் பாஸ் வீட்டில் இருந்து அண்மையில் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அவர் கடந்த புதன்கிழமை மும்பை சான்டாக்ரூஸ் காவல் நிலையத்தில் பிக் பாஸ் போட்டியாளர் அர்மான் கோஹ்லி மீது புகார் கொடுத்தார்.

தான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அர்மான் துடைப்பத்தால் தன்னை தாக்கியதாகவும், கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகார் லோனாவால காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. சோபியாவை உடல் ரீதியாக துன்புறுத்தியதற்காக அர்மான் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தவற்றை தெரிந்துகொள்ள போலீசார் வீடியோ பதிவுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கேட்டுள்ளனர்.

 

பிக் பாஸ் வீட்டு பாத்ரூமில் ஆணும், பெண்ணும் கசமுசா: கேஆர்கே தாக்கு

பிக் பாஸ் வீட்டு பாத்ரூமில் ஆணும், பெண்ணும் கசமுசா: கேஆர்கே தாக்கு

மும்பை: பிக் பாஸ் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சி நடக்கும் வீட்டின் பாத்ரூம்களில் ஆண்களும், பெண்களும் உறவு கொள்வதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும், நடிகருமான கமால் ஆர். கான் குற்றம் சாட்டியுள்ளார்.

பிக் பாஸ் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியின் 7வது சீசனில் நடிகர் அர்மான் கோஹ்லியும், நடிகை கஜோலின் தங்கை தனிஷாவும் ஆடை இன்றி நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும், நடிகருமான கமால் ஆர் கான் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இந்த வெட்கம் கெட்டவர்கள் உறவு கொள்வதை தேசிய டிவி சேனலில் பார்ப்பதற்கு முன்பு அவர்களின் பெற்றோர் ஏன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் ஆண்களும், பெண்களும் பாத்ரூம்களில் உறவு கொள்கிறார்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இதை தயாரிப்பாளர்கள் தேசிய டிவியில் வேறு ஒளிபரப்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

'ஷேவ்' செஞ்சா மோடி பார்க்க சூப்பரா இருப்பார்.. 'ஜொள்கிறார்' சித்ராங்கதா சிங்!

பெங்களூர்: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நீட்டாக ஷேவ் செய்து தாடியை எடுத்து விட்டால் பார்க்க பிரமாதமாக இருப்பார் என்று கூறியுள்ளார் நடிகை சித்ராங்கதா சிங்.

பெங்களூரில் ஜில்லெட் நிறுவனம் சார்பில் நடந்த ஷேவிங் குறித்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார் சித்ராங்கதா. அப்போதுதான் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டார் அவர்.

'ஷேவ்' செஞ்சா மோடி பார்க்க சூப்பரா இருப்பார்.. 'ஜொள்கிறார்' சித்ராங்கதா சிங்!

நிகழ்ச்சியின்போது சித்ராங்கதா பேசுகையில், தனது தாடியை எடுப்பது குறித்து நரேந்திர மோடி சிந்திக்க வேண்டும். அவரது முக அழகுக்கு தாடி பெரும் இடையூறாக இருப்பதாக நான் கருதுகிறேன்.

சுத்தமாக ஷேவ் செய்து பளிச்சென அவர் மாறினால் பார்க்க பிரமாதமாக இருப்பார். அழகாக இருப்பார். இப்போது இருப்பதை விட அவரது முகம் இன்னும் வசீகரமாக இருக்கும் என்றார் சித்ராங்கதா.

மேலும் அவர் கூறுகையில், தினசரி ஷேவ் செய்தாலே ஆண்களே முகம் பளிச்சென திருத்தமாக இருக்கும் என்றார்.

ரஜினிக்கு தாடி ஓ.கே.வாம்...!

சரி தாடி வைத்த ஆண்களில் யாரை உங்களுக்குப் பிடிக்கும் என்ற கேள்விக்கு, ரஜினிகாந்த்தான். அவர் எப்படி இருந்தாலும் அழகாக இருக்கும் என்றார் சிரித்தபடி.

 

ஜில்லாவுக்கு ஆரம்பமானது தொல்லை... ஆர்பி சவுத்ரி அலுவலகத்தில் அதிரடி ரெய்டு!

சென்னை: விஜய் நடிக்கும் ஜில்லா படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியில் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிரடி ரெய்டை ஆரம்பித்துள்ளனர் வருமான வரித்துறையினர்.

ஆர்பி சவுத்ரியின் அலுவலகம் மட்டுமல்லாமல், அவரது வீடுகள், அவரது மகன்கள் நடிகர்கள் ஜீவா, ரமேஷ் (இருவரும் ஜில்லா பட இணை தயாரிப்பாளர்கள்) உள்ளிட்டோர் வீடு, அலுவலகங்களிலும் இந்த சோதனை தொடர்கிறது.

ஜில்லா படத்தின் விநியோக உரிமை விற்பனை சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில் சோதனை நடப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் முந்தைய படம் தலைவா வெளியாவதில் பெரிய சிக்கல் இருந்ததால், ஜில்லாவை பிரச்சினை இன்றி வெளியிட முயன்றார் ஆர்பி சவுத்ரி. இதற்காகவே படத்தில் அரசியல் வசனங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டாராம். இப்போது முதல் சிக்கல் வருமான வரி சோதனை மூலம் வந்துள்ளது. இத்தோடு முடியுமா, அரசியல் ரீதியாக சிக்கல் தொடருமா தெரியவில்லை.

ஜில்லாவுக்கு ஆரம்பமானது தொல்லை... ஆர்பி சவுத்ரி அலுவலகத்தில் அதிரடி ரெய்டு!

அதே நேரம், பெரிய படம் ரிலீஸை நெருங்கும் சமயத்தில் இதுபோன்ற சோதனைகள் வருவது கோலிவுட்டில் வழக்கம்தான்.

தீபாவளிக்கு வெளியான ஆரம்பம், ஆல்இன்ஆல் அழகுராஜா போன்ற படங்களின் தயாரிப்பாளர்கள் அலுவலகங்கள், மற்றும் இயக்குநர் லிங்குசாமியின் அலுவலகங்களில் பெரிய ரெய்டு நடந்தது நினைவிருக்கலாம்.

 

எதிர்ப்பை மீறி தன்னைவிட இளையவரை ரகசிய திருமணம் செய்தாரா காம்னா?

ஹைதராபாத்: தன்னை விட இளையவரை காதலித்த காம்னா, இருதரப்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி பிடிவாதம் பிடித்ததால் ரகசிய திருமணம் செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

எதிர்ப்பை மீறி தன்னைவிட இளையவரை ரகசிய திருமணம் செய்தாரா காம்னா?

ஜெயம் ரவியுடன் இதயத்திருடன் படத்தில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு கன்னடத்தில் பிரபலமானவர் காம்னா. சமீபத்தில் தன் காதலரை திடீரென ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது.

பெங்களூரைச் சேர்ந்த சுராஜ் என்ற தொழிலதிபரை சில ஆண்டுகளாக காம்னா காதலித்து வந்தார்.

எதிர்ப்பை மீறி தன்னைவிட இளையவரை ரகசிய திருமணம் செய்தாரா காம்னா?

தனது சினிமா நண்பர்களுக்குக் கூட இந்த திருமணம் குறித்து தகவல் தராமல் இந்த திருமணத்தை முடித்துவிட்டார்களாம்.

காம்னாவுக்கு வயசு 28. அவர் காதலருக்கு காம்னாவை விட சில ஆண்டு வயது குறைவாம். தன்னைவிட வயதில் குறைந்தவரை காதல் செய்ததால் முதலில் இருவீட்டிலும் எதிர்ப்பு இருந்ததாம்.

ஆனால், காதலர்கள் பிடிவாதமாக இருந்ததால் பின்னர் இருவீட்டினரும் சம்மதித்து, காதும்-காதும் வைத்தது போல் திருமணம் செய்துவைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

எதிர்ப்பை மீறி தன்னைவிட இளையவரை ரகசிய திருமணம் செய்தாரா காம்னா?

மேலும், காம்னாவை தனது மகனுக்குத்தான் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று அவரது உறவினர் ஒருவர் தகராறு செய்து வந்ததால் திருமணத்தை வெகுவிமரிசையாக செய்யாமல் ரகசியமாக முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.