நிர்வாண சர்ச்சையில் சிக்கிய பூனம் பாண்டே நடிக்கும் தமிழ்ப் படம் மைதிலி & கோ

கிங்ஸ் எண்டர்பிரைசஸ், டி.ஜி போஸ்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் மைதிலி & கோ படத்தின் நாயகியாக நிர்வாண சர்ச்சையில் சிக்கிய பூனம் பாண்டே நடிக்கும் தமிழ்ப் படம் மைதிலி & கோ   

இசையமைத்து இயக்குகிறார் வீரு.கே.

படம் பற்றி இயக்குனர் வீரு.கே கூறுகையில், "இந்த படம் ஒரு வித்தியாசமான கதை களம் கொண்ட படம். சினிமா துறையில் ஒரு பெண் நினைத்தால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த படம் ஒரு எடுத்துகாட்டாக இருக்கும்.

ஆங்கிலப் படத்திற்கு இணையாக இந்த படம் தயாரிக்கப் பட்டுள்ளது. நாயகியை மையப்படுத்தி முழுக்க முழுக்க கதை உருவாகப் பட்டுள்ளது.

நாயகி இருக்கும் ஊரில் தீவிர வாத கும்பல் ஒன்று வெடிகுண்டு வைக்க சதி திட்டம் தீட்டுகிறார்கள். இது அறிந்த நாயகி அவர்களுடன் மோதி இறுதியில் அந்த திட்டத்தை முறியடித்தாரா என்பது படத்தின் கிளைமாக்ஸ்.

அதிரடியாக ஐந்து சண்டை காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பு முழுவது அமெரிக்கா, ஜெர்மன், மும்பை, ஹைதராபாத் சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. மிக விரைவில் இந்த படம் உலக முழுவது வெளியாக உள்ளது," என்றார்.

 

முட்டி மோதும் அஜித்-விஜய் ரசிகர்களை 'முஸ்தபா..' பாடவைக்க முயற்சிகள் தொடக்கம்!

சென்னை: நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தரக்குறைவான வகையில் சண்டை போட ஆரம்பித்துள்ள நிலையில், இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியிலும் சிலர் இறங்கியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களான டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்தாமல், எந்த ஹீரோ உசத்தி என்று கூறிக்கொள்ள பயன்படுத்தி வருகின்றனர் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள். ஜாலியாக போகும்வரை அந்த தகராறை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி டிவிட்டரில் டிரெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர் இரு ஹீரோக்களின் ரசிகர்களும்.

முட்டி மோதும் அஜித்-விஜய் ரசிகர்களை 'முஸ்தபா..' பாடவைக்க முயற்சிகள் தொடக்கம்!

அகில இந்திய அளவில் டிரெண்ட் செய்வதில் இரு தரப்புக்கும் கடும் போட்டி நிலவுகிறது. ஆனால் அஜித் ரசிகர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று விஜய் ரசிகர்களும், விஜயை விழுப்புரத்தில் ஓடியவர் என்றும், அடிமை என்றும், அஜித் ரசிகர்களும் ஹேஷ்டேக் செய்து டிவிட்டரில் மல்லுகட்டி வருகின்றனர்.

நாடு முழுவதிலும் பல கோடி பேர் பார்க்கும் டிவிட்டரில் இதுபோல தமிழக நடிகர்களின் மானத்தை ரசிகர்கள் கூவி விற்பனை செய்வதை பார்த்து சிலருக்கு மனசு பொறுக்கவில்லை. அதில் ஒருவர்தான், ரேடியோ ஜாக்கியான பாலாஜி. இவர், வடகறி உள்ளிட்ட படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார்.

சவுண்ட்கிளவுட் மூலமாக ஆடியோ மெசேஜ் கொடுத்துள்ள பாலாஜி, தகாத வார்த்தைகள், குடும்பம் குறித்த வர்ணணைகள் தவிர்க்கப்பட வேண்டியவை என்று இரு ஹீரோக்களின் ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், யூடியூப்பில், அஜித்-விஜய் நட்பை மையப்படுத்தி ஒரு வீடியோ உலாவருகிறது. அதில், காதல் தேசம் படத்தில் இடம்பெற்ற, நட்பை பற்றி உயர்வாக சொல்லும் பாடலான முஸ்தபா... முஸ்தபா பாடலும் பின்னணியில் ஒலிக்கிறது. இரு நடிகர்களுமே டிவி பேட்டிகளில் பரஸ்பரம் உள்ள மரியாதையை வெளிப்படுத்திய காட்சிகள் அந்த வீடியோவில் இணைக்கப்படுள்ளன.

இந்த வீடியோவ பார்த்துட்டாவது, இனிமேல், இரு தரப்பும் முஸ்தப்பா பாடுங்கப்பா.. உங்க அக்கப்போரு தாங்க முடியல...

 

அடுத்து இந்தியில் தனுஷை இயக்குகிறார் மணிரத்னம்

இந்தியில் தான் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷை இயக்குகிறார் மணிரத்னம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மணிரத்னம் இப்போது தமிழில் ஓகே கண்மணி என்ற தமிழ்ப் படத்தை இயக்குகிறார். இதில் துல்க்வார் சல்மான் நடிக்கிறார்.

அடுத்து இந்தியில் தனுஷை இயக்குகிறார் மணிரத்னம்

இந்தப் படம் முடிந்த கையோடு அவர் இந்தியில் ஒரு படம் இயக்குகிறார். இந்தப் படத்தில் நாயகனாக தனுஷ் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ராஞ்ஜனா மூலம் இந்தியில் அறிமுகமான தனுஷ், இப்போது ஷமிதாப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தியில் தனுஷுக்கென நல்ல எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. எனவே தனுஷை இயக்குவதன் மூலம் இந்தியில் தனது நெடுநாளைய வெற்றிக் கனவை நனவாக்க முடியும் என நம்புகிறார் மணிரத்னம்.

 

தயாரிப்பாளர்களை ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கும் ஹன்சிகா?

சென்னை: ஹன்சிகா செலவை கண்டபடி உயர்த்தி தயாரிப்பாளர்களை கண்கலங்க வைக்கிறாராம்.

ஹன்சிகா கோலிவுட்டின் பிசியான ஹீரோயின் ஆவார். அவர் பெரிய தொகையை சம்பளமாக கேட்பதுடன் குறிப்பிட்ட ஸ்டார் ஹோட்டல்களில் தான் தங்குவேன் என்று கறாராக கூறுகிறாராம். படபப்பிடிப்புக்கு அவர் தன்னுடன் 10 உதவியாளர்களை அழைத்து வந்து செலவை கண்டபடி உயர்த்துகிறாராம்.

தயாரிப்பாளர்களை ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கும் ஹன்சிகா?

அந்த 10 பேரும் எப்பொழுது பார்த்தாலும் ஹன்சிகாவுடன் இருப்பதால் அவகர்களுக்கு சேர்த்து தயாரிப்பாளர்கள் செலவு செய்ய வேண்டி உள்ளதாம். ஹன்சிகாவின் பயணம், தங்குமிடம், உணவு ஆகிய செலவுகளுடன் 10 உதவியாளர்களுக்கும் செலவு செய்ய வேண்டியதை நினைத்து தயாரிப்பாளர்கள் வருத்தப்படுகிறார்களாம்.

முன்னணி நடிகைகள் 2 உதவியாளர்களுடன் வருவார்கள். ஆனால் இவர் 10 பேருடன் வருகிறாரே என்று தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்களாம். இந்நிலையில் ஹன்சிகா தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் ரூ.2 கோடி சம்பளம் கேட்கத் துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஹன்சிகா தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

 

ஆமீர்கானின் பீகே படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்?

ஆமீர்கானின் வித்தியாசமான படமான 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்தது போல, இப்போது வெளியாகியுள்ள பீகே தமிழ் ரீமேக்கிலும் விஜய் நடிப்பார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது கோடம்பாக்கத்தில்.

சமீபத்தில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்து வரும் ஆமீர்கானின் 'பீகே' படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

ஆமீர்கானின் பீகே படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்?

இந்தப் படத்தில் இந்து மதத்துக்கு எதிராக சர்ச்சை காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆமீர்கானை எதிர்த்து போராட்டங்களும் நடக்கின்றன. அவற்றை மீறி இப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து 'பிகே' படத்தை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன.

இதில் விஜய் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே அமீர்கானின் '3 இடியட்ஸ்' படத்தை தமிழில் 'நண்பன்' என்ற பெயரில் ரீமேக் செய்து விஜய் நடித்தார். ஷங்கர் இயக்கிய இந்தப் படம் விஜய்க்கு நல்ல பெயரைக் கொடுத்தது.

அதேபோல், இந்த படமும் தமிழில் ரீமேக் ஆனால் விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் - த்ரிஷா

திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

12 ஆண்டுகள் கதாநாயகியாக கொடிகட்டிப் பறந்தவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

அஜீத் ஜோடியாக நடித்த ‘என்னை அறிந்தால்' படம் வருகிற 29-ந்தேதி ரிலீசாகிறது. ஜெயம் ரவி, ஜோடியாக நடித்த ‘பூலோகம்' படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ‘அப்பா டக்கர்' என்ற படத்திலும் நடிக்கிறார்.

திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் - த்ரிஷா

இந்த நிலையில் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் த்ரிஷாவுக்கும் திடீர் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாயின.

வருண் மணியன் ‘வாயை மூடி பேசவும்', ‘காவியத் தலைவன்' போன்ற படங்களை தயாரித்து உள்ளார். த்ரிஷாவும் வருண் மணியனும், சமீபத்தில் தனி விமானத்தில் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தனர். இருவருக்கும் வருகிற மார்ச் மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது.

த்ரிஷா தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறும் போது, திருமணத்துக்கு பிறகு நடிகையாக தொடர எனக்கு எண்ணம் இல்லை. ஆனாலும் சினிமாவை விட்டு விலகி செல்லமாட்டேன். சினிமா தொடர்பில்தான் இருப்பேன் என்றார்.

 

என் பெயரில் மோசடி நடக்கிறது - காஜல் அகர்வால் ஆவேசம்

என் பெயரைப் பயன்படுத்தி வணிக விளம்பரங்கள் கொடுத்து சிலர் மோசடி செய்வதாக காஜல் அகர்வால் புகார் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாதில் கட்டப்பட்ட பெரிய மால் ஒன்றை காஜல் அகர்வால் வந்து திறக்கப் போவதாக ஒரு பெரிய விளம்பரம் வெளியானது.

என் பெயரில் மோசடி நடக்கிறது - காஜல் அகர்வால் ஆவேசம்

நகரெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளனழ.

இதுபற்றி காஜல் அகர்வால் கவனத்துக்கு வந்ததும் அதிர்ச்சியானார். அப்படி ஒரு விழா நடப்பதே தனக்குத் தெரியாது என்றும் தன்னை அழைக்காமலேயே விளம்பரத்துக்காக தனது பெயரை போலியாக பயன்படுத்தி இருப்பதாகவும் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து காஜல்அகர்வால் கூறுகையில், "வணிக வளாகம் ஒன்றை நான் திறந்து வைப்பதாக விளம்பரம் வந்துள்ளது. அதுமாதிரி விழாவுக்கு வரும்படி யாரும் என்னை அணுகவில்லை. எனக்கு தெரியாமல் அப்படி விளம்பரம் கொடுத்துள்ளனர். என்னிடம் அமைதி பெறாமல் எனது பெயரைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இது நேர்மையற்ற செயல். கண்டிக்கத்தக்கதாகும்," என்றார்.

 

கே பாலச்சந்தர் நினைவஞ்சலி.. ரஜினி, கமல் பங்கேற்பு

சென்னை: மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாஸன் ஆகியோர் கலந்து கொண்டு அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

கே பாலச்சந்தர் நினைவஞ்சலி.. ரஜினி, கமல் பங்கேற்பு

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் கடந்த டிசம்பர் 23-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவர் மரணமடைந்து 13-நாட்கள் ஆன நிலையில், 13-ம் நாள் நினைவஞ்சலி நேற்று பிற்பகல் கடைபிடிக்கப்பட்டது.

கே பாலச்சந்தர் நினைவஞ்சலி.. ரஜினி, கமல் பங்கேற்பு

ரஜினிக்கு சொந்தமான ஸ்ரீராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற கே.பாலச்சந்தரின் நினைவஞ்சலி கூட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், சிவகுமார், ராஜேஷ், விவேக், தாமு, லாரன்ஸ், யூகி சேது, நடிகைகள் ஜெயசித்ரா, வாணி ஜெயராம், ஸ்ரீப்ரியா, மானு, குயிலி, லலிதா குமாரி, சுபா வெங்கட், தயாரிப்பாளர்கள் தாணு, பி.எல்.தேனப்பன், எடிட்டர் மோகன், இயக்குனர்கள் மணிரத்னம், சரண், விக்ரமன், வி.சேகர், சுரேஷ் கிருஷ்ணா, ஆர்.கே.செல்வமணி, ஏ.எல்.விஜய் மற்றும் பெப்சி சிவா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் பாலச்சந்தரின் உருவப்படத்துக்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

 

வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த நடிகர் ஆஹூதி பிரசாத் புற்றுநோயால் மரணம்

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகரான ஆஹூதி பிரசாத் நேற்று மருத்துவமனையில் காலமானார்.

புற்று நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 57.

வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த நடிகர் ஆஹூதி பிரசாத் புற்றுநோயால் மரணம்

வேட்டையாடு விளையாடு படத்தில் போலீஸ் கமிஷனராக நடித்துள்ளார் பிரசாத். 1988 ஆம் ஆண்டு ஆஹூதி படத்தில் நடித்திருந்ததால், ஆஹூதி பிரசாத் என்று அழைக்கப்பட்டார்.

100க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்குப் பட உலகில் காமெடி நடிப்பிலும், கதாபாத்திர நடிகராகவும் வலம் வந்தவர் பிரசாத்.

2003 ஆம் ஆண்டிற்கான சிறந்த வில்லனுக்கான நந்தி விருது பெற்றவர் ஆஹூதி பிரசாத். இவருக்கு கார்த்திக் மற்றும் பரணி என்ற இரு மகன்கள் உள்ளனர்.

 

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் பி வாசு?

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறவர் யார் என்ற கேள்வி இப்போது தீவிரமடைந்துள்ளது.

ஏற்கெனவே ஷங்கர், கேஎஸ் ரவிக்குமார் பெயர்கள் இடம்பெற்றிருந்த பட்டியலில் இப்போது பி வாசு பெயரும் சேர்ந்துள்ளது.

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் பி வாசு?

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘லிங்கா'. இப்படம் மெகா ஹிட் என தயாரிப்பாளர்கள் இன்றைய விளம்பரத்தில் அறிவித்திருந்தாலும், சிலர் தொடர்ந்து வசூல் குறித்து சர்ச்சை கிளப்பி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், ரஜினியின் அடுத்த படம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. லிங்காவுக்குப் பிறகு மீண்டும் கே எஸ் ரவிக்குமார் இயக்குவார் என்று முன்பு கூறப்பட்டது.

ஆனால் அவர் ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்' படத்தின் 2-ம் பாகத்தில் நடிப்பார் என்றார்கள்.

இதனை உறுதிப்படுத்துவதுபோல, ஷங்கரைச் சந்தித்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் ரஜினி.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கெனவே, பி.வாசு-ரஜினி கூட்டணியில் பணக்காரன், மன்னன், உழைப்பாளி, சந்திரமுகி மற்றும் குசேலன் என 5 படங்கள் வந்துள்ளன.

‘பாபா' படம் பின்னடைவைத் தந்தபோது, ரஜினிக்கு மெகா ஹிட்டாக அமைந்த சந்திரமுகியை இயக்கியவர் வாசு.

சமீபத்தில் பி.வாசு சொன்ன கதை பிடித்துவிட்டதாகவும், ரஜினியும் சம்மதம் கூறிவிட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

 

இஸ்லாம் மதத்திற்கு மாறிய நடிகை மோனிகா மதுரை தொழிலதிபரை மணக்கிறார்!

சென்னை: இஸ்லாம் மதத்திற்கு மாறிய நடிகை மோனிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த தொழிலதிபரை மணக்கிறார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நாயகியாக உயர்ந்தவர் நடிகை மோனிகா. இவர் அழகி, சண்டைக்கோழி, சிலந்தி, நதிகள் நனைவதில்லை உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில், இஸ்லாமிய மதத்துக்கு மாறிய மோனிகா, தனது பெயரை ரஹீமா என மாற்றிக் கொண்டார். சினிமாவில் நடிப்பதையும் நிறுத்திக் கொண்டார்.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய நடிகை மோனிகா மதுரை தொழிலதிபரை மணக்கிறார்!

இந்நிலையில், இவருக்கும் மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் மாலிக் என்பவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும் 11ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

மதுரையைச் சேர்ந்த மாலிக் சென்னையில் மின்சாதன பொருட்களை வியாபாரம் செய்து வருகிறார். மாலிக் மோனிகாவின் தந்தையின் நண்பர் மகன் என்றபோதும், இது காதல் திருமணம் இல்லையாம். உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் தானாம்.

 

300 அரங்குகளில் 25-ம் நாளாக ஓடும் லிங்கா... மெகா ஹிட்டாம்!

ரஜினியின் 300 அரங்குகளில் 25-ம் நாளாக ஓடும் லிங்கா... மெகா ஹிட்டாம்!

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்ஷி, அனுஷ்கா நடித்து வெளியான படம் லிங்கா. ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி அவரது ரசிகர்களுக்குப் பரிசாக படத்தை வெளியிட்டனர்.

இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது.

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக கிட்டத்தட்ட 700 அரங்குகளிலும் உலகெங்கும் 3000-க்கும் மேற்பட்ட அரங்குகளிலும் வெளியான லிங்கா படம், முதல் மூன்று நாட்களில் ரூ 104 கோடியை வசூலித்து சாதனைப் படைத்தது.

ஆனால் நான்காவது நாளே படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சிலர் புகார் கூறினர். படம் குறித்து அவதூறு பரப்பினால் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என படத்தை வெளியிட்ட வேந்தர் மூவீஸ் எச்சரித்தது.

இப்போது படம் வெளியாகி 25 நாட்கள் ஓடிய நிலையில், மீண்டும் நஷ்டம் என்று கூறி சிலர் புகார் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் படம் 25 நாளைத் தாண்டி ஓடுவதையொட்டி இன்று வெளியிட்டுள்ள விளம்பரத்தில் லிங்கா மெகா ஹிட் என அறிவித்துள்ளனர். இந்தப் படம் பெரும் வசூலை ஈட்டியுள்ளதாகவும், அந்த விவங்களை வரும் 8-ம் தேதி வெளியிடப் போவதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் கூறியுள்ளனர்.

படம் இன்னும் 300-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. சென்னை நகரில் 20 அரங்குகளிலும், புறநகர் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் 50-க்கும் அதிகமான அரங்குகளிலும் ஓடிக் கொண்டுள்ளது இந்தப் படம்.

கோவை மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளில் 40-க்கும் அதிகமான அரங்குகளிலும், திருச்சி - தஞ்சைப் பகுதியில் 20 அரங்குகளிலும் 25 நாளைக் கடந்து ஓடுகிறது லிங்கா.

 

'காக்கிச் சட்டை'க்காக ஆர்.எம்.வீக்கு தனுஷ் கொடுத்த ரூ 25 லட்சம்

காப்பியடித்த கதைகளுக்கே காப்பிரைட் காசு கொடுக்க மறுக்கும் கோடம்பாக்கத்தில், ஒரு தலைப்புக்காக ரூ 25 லட்சத்தைக் கொடுத்திருக்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ்.

சிவகார்த்திகேயனை வைத்து, பொன் ராம் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து வரும் படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் டாணா. கிராமங்களில் போலீஸ்காரர்களை டாணாக்காரன் என்றுதான் முன்பெல்லாம் அழைப்பார்களாம். அதனால் அந்தத் தலைப்பு வைத்தார்கள்.

'காக்கிச் சட்டை'க்காக ஆர்.எம்.வீக்கு தனுஷ் கொடுத்த ரூ 25 லட்சம்

ஆனால் தலைப்பு இன்னும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று நினைத்த தனுஷ் காக்கிச் சட்டையைப் பிடித்துக் கொண்டார். இந்தத் தலைப்புக்குச் சொந்தக்காரர் ஆர் எம் வீரப்பனின் சத்யா மூவீஸ்.

தலைப்புக்காக ரூ 25 லட்சம் கேட்டிருக்கிறார்கள். தனுஷும் மறுபேச்சின்றி கொடுத்துவிட்டார்.

தன் மாமனார் ரஜினி ஜஸ்ட் ஒரு வார்த்தை சொன்னால் போதும், தானாக அந்தத் தலைப்பு வந்துவிடும் என்பது தெரிந்தும், அவரை இதில் இழுக்க வேண்டாம். நாமே பார்த்துக் கொள்வோம் என்று கூறி டீலை முடித்தாராம் இந்த சூப்பர் மருமகன்!

 

மறுபடியும் தலையை ஆட்ட வருகிறார் ஜெய்.... மீண்டும் கை கோர்க்கும் "சுப்ரமணியபுரம் கேங்"!

சென்னை: சசிகுமார் இயக்கி நடித்திருந்த படம் சுப்ரமணியபுரம். இப்படத்தில் ஜெய் மற்றும் சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சுவாதி நாயகியாக நடித்திருந்தார்.

வித்தியாசமான கதைக்களம், வேறுபட்ட கோணம் என சுப்ரமணியபுரம், சசிகுமார், ஜெய்,சுவாதி மற்றும் சமுத்திரக்கனி என அனைவருக்குமே திருப்புமுனையாக அமைந்திருந்தது. இப்பட வெற்றியைத் தொடர்ந்து சசிகுமார், ஜெய் மற்றும் சமுத்திரக்கனி என மூவரும் தனித்தனியே பிரிந்து நடித்து வருகிறார்கள்.

மறுபடியும் தலையை ஆட்ட வருகிறார் ஜெய்.... மீண்டும் கை கோர்க்கும்

இந்நிலையில், தற்போது வசந்த்மணி இயக்கத்தில் மூன்று பேரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தனது கதையை சசி, ஜெய் மற்றும் சமுத்திரக்கனி என மூவரையும் அழைத்து ஒரு சேர கூறினாராம் வசந்த்மணி.

மறுபடியும் தலையை ஆட்ட வருகிறார் ஜெய்.... மீண்டும் கை கோர்க்கும்

மூவருக்கும் கதை பிடித்து விட்டதால், அவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த சந்திப்பின் போது குடித்து விட்டு வண்டி ஓட்டிதற்காக ஜெய்யை திட்டினார்களாம் சசிகுமாரும், சமுத்திரக்கனியும்.

மறுபடியும் தலையை ஆட்ட வருகிறார் ஜெய்.... மீண்டும் கை கோர்க்கும்

அதுக்கு சுப்பிரமணியபுரத்தில் செய்வதைப் போல தலையை ஆட்டி ஆட்டி சிரித்தபடி சமாளித்தாரா ஜெய் என்று தெரியவில்லை!

 

சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்த வரும் சேரனின் சி2எச்.. பொங்கல் முதல் ஆரம்பம்!

சென்னை: சி2எச் சேவை மூலம் சினிமாவை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்கிறோம் என்று திரைப்பட இயக்குநர் சேரன் தெரிவித்தார்.

புதிய திரைப்படங்களை தயாரிப்பாளர்களின் அனுமதியுடன் டி.வி.டி.க்களாக மாற்றி அதனை பொதுமக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்லும் சி2எச் என்ற நிறுவனத்தை திரைப்பட இயக்குநர் சேரன் தொடங்கியுள்ளார்.

சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்த வரும் சேரனின் சி2எச்.. பொங்கல் முதல் ஆரம்பம்!

இந் நிறுவனத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வீடு, வீடாகச் சென்று மக்களிடம் புதிய திரைப்படங்களின் டி.வி.டி.க்களை விற்பனை செய்ய உள்ளனர்.

இந்த டி.வி.டி.க்களை போலியாக தயாரித்து விற்பனை செய்வதைத் தடுக்க போலீஸார் போதிய ஒத்துழைப்பு வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களைச் சந்தித்து மனு கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் விழுப்புரம் மாவட்ட எஸ்பி விக்கிரமனை இயக்குநர் சேரன் சந்தித்து மனு அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

புதிய திரைப்படங்களை தயாரிப்பாளர்களின் அனுமதியுடன் டி.வி.டி.க்களாக மாற்றி, அதனை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டத்தை செயல்படுத்த சி2எச் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் ஒரிஜினல் டிவிடிக்கள் ரூ.50-க்கு கிடைக்கும்.

புதிய திரைப்படங்களை டிவிடிக்களாக வெளியிடுவதன் மூலம் திரையரங்குகள் பாதிக்கப்படும் என்று கூறுவதை ஏற்க முடியாது.

இதுகுறித்து நடிகர் கமல் ஹாசன் கருத்து தெரிவிக்கும்போது, கோயில் கட்டினாலும், வீட்டில் சாமி வைத்துக் கொள்வதில்லையா? வீட்டில் சாமி இருக்கிறது என்பதற்காக கோயிலுக்கு போகாமலா இருக்கிறார்கள்? என்று கூறியுள்ளார். இதை விட இந்த விஷயத்தை எளிதில் யாரும் விளக்க முடியாது.

திரையரங்குகள் பாதிக்கப்படுவதை பற்றி மட்டும் பேசுபவர்கள், தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதையும் சிந்திக்க வேண்டும். சில பெரிய படங்களை மட்டுமே திரையரங்க உரிமையாளர்கள் திரையிடுகின்றனர். இதன்காரணமாக, குறைந்த செலவில் படம் எடுப்போர் திரையரங்குகள் கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.
சினிமாவை சி2எச் மூலம் நாங்கள் அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்கிறோம்.

முதலில் சி2எச் மூலம் "ஜே.கே. எனது நண்பன்' என்ற திரைப்படத்தை வெளியிடுகிறோம். இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களை வெளியிட உள்ளோம். நாங்கள் வெளியிடும்போதே திரையரங்குகளும் வெளியிட விரும்பினால் அவர்களுக்கு வழங்குவோம்.

ஜனவரி 15 முதல் வாரம் ஒரு படத்தை இந்த சி2எச் மூலம் வழங்கப் போகிறோம்," என்றார்.

 

யாருடா அந்த சண்டாளன்: துப்பறியும் நம்பர் நடிகையின் அம்மா

சென்னை: கோலிவுட்டில் இருந்து தனது மகளை ஒதுக்கப் பார்க்கும் அந்த நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளாராம் சின்ன நம்பர் நடிகையின் அம்மா.

12 ஆண்டுகளாக தொடர்ந்து ஹீரோயினாகவே நடித்து வருபவர் சின்ன நம்பர் நடிகை. முன்பு போல மவுசு இல்லாவிட்டாலும் அவரை தேடி பட வாய்ப்புகள் வரத் தான் செய்கின்றன. இந்நிலையில் தான் அவருக்கும் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபருக்கும் திருமணம் என்ற செய்தி தீயாக பரவியது. இந்த திருமண செய்தியை நடிகையும், அவரது தாய்க்குலமும் மறுத்தாலும் ஊர் உலகம் அவர்களின் பேச்சை நம்ப தயாராக இல்லை.

யாருடா அந்த சண்டாளன்: துப்பறியும் நம்பர் நடிகையின் அம்மா

விளைவு நடிகைக்கு வந்த பட வாய்ப்பு கை நழுவிப் போனது. இதனால் நடிகை கோபத்தில் உள்ளாராம். யாரோ தன்னை வேண்டும் என்றே கோலிவுட்டில் இருந்து பேக்கப் செய்ய முயற்சி செய்வதாக நடிகை கருதுகிறாராம்.

இதையடுத்து தனது மகளை ஓரங்கட்ட நினைக்கும் அந்த நபர் யார் என்று துப்பறிந்து கொண்டிருக்கிறாராம் நடிகையின் அம்மா. இத்தனை பரபரப்புக்கு இடையே நடிகைக்கு சங்கத் தலைவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

திருமண செய்தியை மறுத்த கையோடு நடிகை அந்த தொழில் அதிபருடன் தனி விமானம் மூலம் காதல் சின்னத்தை பார்க்க டெல்லி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’... இது பேச்சுலர்ஸ் கதை!

‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை...' - இச்சொற்றொடரின் மகத்துவம் அறிந்தோர் பலர் இருந்தாலும் உணர்ந்தோர் சிலரே. இங்கு உழைக்க தெரிந்தவன் பிழைத்து கொள்வான். இத்தகைய பெருமிதத்தின் நடுவே பெயர் தெரியா ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் இளைஞர்கள் பலர்.

பேச்சுலர்ஸ் என அழைக்கப்படும் இவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு திரைப்படமாக வருகிறது, "சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது"

'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’... இது பேச்சுலர்ஸ் கதை!

கரியாம்பட்டி ஸ்டுடியோஸ், ஏடிஎம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் "சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது " படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குனர் மருதுபாண்டியன்.

பாபி சிம்ஹா, பிரபஞ்சன், லிங்கா, புதுமுகம் சரண்யா நடிக்கும் இப்படத்தை சென்னையின் பல பகுதிகளிலும், தமிழகத்தின் தென்கோடியில் உள்ள சில கிராமங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’... இது பேச்சுலர்ஸ் கதை!  

"ரோட்டு கடை இட்லியின் சூட்டால் நாக்கை புண்ணாக்கி கொண்டு, அடி கதவு இல்லா கழிவறை, ஆறுக்கு இரண்டு அளவே கொண்ட ரூம்களின் விஸ்தாரத்தில் கனவு காணும் சென்னையில் வாழ நினைக்கும் பேச்சுலர்ஸ்களின் கதை இது. எனது வாழ்கையில் நடந்த உண்மையான சம்பவங்களின் நகைச்சுவை நிறைந்த கோர்வையே இந்த திரைப்படம். 2015 ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளோம்" என்கிறார் இயக்குனர் மருதுபாண்டியன்.