புறம்போக்கு எங்களுக்கே சொந்தம்- யுடிவி அறிவிப்பு

புறம்போக்கு படத்தின் தலைப்பு எங்களுக்கே சொந்தம், இதில் குழப்பம் தேவையில்லை என்று யுடிவி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆர்யா - விஜய் சேதுபதியை வைத்து எஸ்பி ஜனநாதன் புதிதாக இயக்கவிருக்கும் படத்துக்கு புறம்போக்கு புறம்போக்கு என தலைப்பிட்டிருந்தனர்.

ஆனால் இந்தத் தலைப்பை தான் முன்பே பதிவு செய்து வைத்துவிட்டதாக, திரைப்பட ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

புறம்போக்கு எங்களுக்கே சொந்தம்- யுடிவி அறிவிப்பு

அது உண்மையாக இருந்தால் பேசித் தீர்ப்போம் அல்லது நட்ராஜுக்கு இந்தத் தலைப்பு கட்டாயம் வேண்டுமென்றால் விட்டுக் கொடுப்பேன் என்று எஸ்பி ஜனநாதன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், புறம்போக்கு தலைப்பு எங்களுக்கே சொந்தம் என யுடிவி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று யுடிவி வெளியிட்ட அறிக்கையில், "புறம்போக்கு தலைப்பு யாருக்கு சொந்தம் என்ற குழப்பம் இனியும் தேவையில்லை. இந்தத் தலைப்பு எங்களுக்குதான் சொந்தம் என பிலிம்சேம்பர் மற்றும் தயாரிப்பாளர் கில்ட் ஆகியவை கடிதம் அளித்துள்ளன," என்று தெரிவித்துள்ளது.

 

சைவத்திற்கு அசைவ சேவல்... தயாரிப்பாளராக மாறிய விஜய்...

சைவம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

தலைவா' படத்திற்கு இயக்குனர் விஜய் இயக்கும் புதிய படம் ‘சைவம்'. தொடர்ந்து பெரிய ஹீரோக்களை வைத்து இயக்கி வரும் விஜய் இப்படத்தில் புதிய முயற்சியாக ‘தெய்வத்திருமகள்' படத்தில் விக்ரமின் குழந்தையாக நடித்த பேபி சாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து இயக்கி வருகிறார்.

இந்த குழந்தைதான் படத்தின் நாயகி. சைவம் படத்திற்கு வேறு நாயகன், நாயகி கிடையாது. இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சைவத்திற்கு அசைவ சேவல்... தயாரிப்பாளராக மாறிய விஜய்...

தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கின்றனர். ‘சைவம்' என பெயரிடப்பட்டு அசைவமான சேவலை வைத்து வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டர் அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த படத்திற்கு விஜய்-யின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜீ.வி.பிரகாஷே இசையமைக்கிறார். இப்படத்தை விஜய் தின்க் பிக் ஸ்டுடியோஸ் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

 

கோச்சடையான்... இதுவரை 750 அரங்குகள் ரிசர்வ்!

சென்னை: கோச்சடையான் படம் ஜனவரி 10-ம் தேதி ரிலீஸ் என நேற்றுதான் அறிவிப்பு வெளியானது. அதற்குள் இந்தப் படத்துக்கு 750 அரங்குகளை ரிசர்வ் செய்து வைத்துவிட்டனர் அதன் உரிமையாளர்கள்.

மீதமிருக்கும் 250 அரங்குகளில் பெரும்பாலானவை ரஜினி படத்தை வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றன.

முன்பு எந்திரன் வெளியான போது, கிட்டத்தட்ட 900 அரங்குகள் வரை அந்தப் படத்துக்கு ஒதுக்கப்பட்டது. மல்டிப்ளெக்ஸ்களில் அத்தனை திரைகளிலும் எந்திரனே ஓடியது. மாயாஜாலின் 16 திரையரங்குகளிலும் தொடர்ந்து எந்திரன் மட்டுமே ஓடியது, முதல் இரு வாரங்களுக்கு.

கோச்சடையான்... இதுவரை 750 அரங்குகள் ரிசர்வ்!

சின்னச் சின்ன ஊர்களில் இருந்த திரையரங்குகள் கூட எந்திரனை ரிலீஸ் செய்தன. தமிழ் சினிமா வரலாற்றிலேயே தமிழகத்தில் மிக அதிக அரங்குகளில் வெளியான படம் எந்திரன் மட்டுமே. இந்த சாதனைக்கு நிகரான சாதனையைப் படைக்கவிருக்கிறது கோச்சடையான்.

இந்தப் படம் வெளியாவது குறித்து நேற்று காலைதான் செய்தி வெளியானது. அதற்குள் மொத்த திரையரங்குகள், குறிப்பாக மல்டிப்ளெக்ஸ்களும் கோச்சடையானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இப்போதைய நிலவரப்படி, மாநிலத்தில் உள்ள 950 திரையரங்குகளில் 750 அரங்குகள் கோச்சடையானுக்கென ரிசர்வ் செய்யப்பட்டுள்ளன.

 

நண்டு ஜெகனின் ‘கனெக்சன்’ விஜய் டிவியில் கேம் ஷோ

சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்குப் போன நண்டு ஜெகன் மீண்டும் விஜய் டிவியில் கேம்ஷோ ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.

விஜய் டி.வியில் கடவுள் பாதி மிருகம் பாதி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜெகன். அதன் பிறகு கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார்.

அயன் படத்தில் சூர்யாவின் நண்பனாக நடித்து பிரபலமானார். பையா, கோ, அம்புலி, மரியான், உள்பட பல படங்களில் நடித்தார். இப்போதும் நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவில் பிசியாக இருந்தாலும் மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளார்.

நண்டு ஜெகனின் ‘கனெக்சன்’ விஜய் டிவியில் கேம் ஷோ

விஜய் டி.வியில் வருகிற நவம்பர் 10ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் கனெக்ஷன் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ஜெகன். இது சின்னத்திரை கலைஞர்களும் அவர்களின் நண்பர்களும் பங்கேற்கும் கேம் ஷோ.

கனெக்சன் என்று இந்த நிகழ்ச்சிக்கு பெயர் வைத்த காரணத்தை விளக்கினார் தொகுப்பாளர் ஜெகன். முதல் நிகழ்ச்சியில் பாவனா, ஆர்.ஜெ. ஒபிலியா, மாகாபா. ஆனந்த் ஆகிய சின்னத்திரை நட்சத்திர குரூப் பங்கேற்றனர்.

பேட்டி, போட்டி என கலகலப்பாக தயாராகி இருக்கும் நிகழ்ச்சி. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மதியம் 1 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

 

’நாதஸ்வரம்’ கோபி அலுவலகத்தில் பணம் திருட்டு... போலீஸ் விசாரணை

சென்னை: நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரின் இயக்குனர் திருமுருகனின் வளரசவாக்கத்தில் உள்ள அலுவல கத்தில் இருந்து 30,000 ரூபாய் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெட்டிஒலி' என்ற சீரியலை இயக்கி நடித்ததன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் திருமுருகன். இவர், எம்-மகன், முனியாண்டி விலங்கியல் 3-ம் ஆண்டு ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். தற்போது நாதஸ்வரம் என்ற சீரியலை இயக்கி அதில் நடித்தும் வருகிறார்.

’நாதஸ்வரம்’ கோபி அலுவலகத்தில் பணம் திருட்டு... போலீஸ் விசாரணை

இவரது அலுவலகம் வளசரவாக்கம், பிரகாசம் சாலை, ஜானகி நகரில் உள்ளது. இந்த அலுவலகம் மேலாளர் செல்வக்குமார் என்பவரின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. இதில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று மதியம் அலுவலகத்தை மூடிவிட்டு அனைவரும் சாப்பிட சென்று விட்டனர். 1 மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த ரூ.30ஆயிரம் பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேலாளர் செல்வக்குமார் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து மேற்கொண்டுள்ளனர்.

 

தமிழகத்தின் அத்தனை அரங்குகளும் கோச்சடையானுக்கே!

சென்னை: பொங்கல் ஸ்பெஷலாக வரும் கோச்சடையானுக்காக தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகளும் இப்போதே ரிசர்வ் செய்யப்பட்டுள்ளன.

ரஜினி படம் வெளியான சில வாரங்களுக்குப் பிறகே மற்ற படங்களுக்கு அரங்குகள் ஒதுக்க முடியும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, ரஜினி படங்கள் வெளியாகும் தேதிதான் நிஜமான பண்டிகைக் காலம். தியேட்டரின் டிக்கெட் கவுண்டர் தொடங்கி, வாகனங்களுக்கு டோக்கன் கொடுப்பவர், திண்பண்டம் விற்பவர் என அத்தனை பேருக்கும் லாபம் தருவது ரஜினியின் படம் மட்டுமே.

தமிழகத்தின் அத்தனை அரங்குகளும் கோச்சடையானுக்கே!

முன்பு சிவாஜி படத்தோடு ஒரு இந்திப் படம் வெளியானபோது, 'சிவாஜி படத்தின் வாகன நிறுத்தக் கட்டணத்தோடு வேண்டுமானால் இந்தப் படத்தின் வசூலை ஒப்பிடலாம்' என பிரபல பாலிவுட் விமர்சகர் தரண் ஆதர்ஷ் எழுதியது நினைவிருக்கலாம்!

எனவே ரஜினியின் படங்களுக்கே திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை தருவதில் வியப்பில்லை.

இந்தப் பொங்கலுக்கு அஜீத் நடித்த வீரம், விஜய் நடித்த ஜில்லா போன்ற படங்கள் வருவதாக இருந்தன. கமலின் விஸ்வரூபம் 2 கூட பொங்கலுக்கு வெளியாகும் என்றார்கள்.

ஆனால் கோச்சடையான் ரிலீஸ் தேதி அறிவிப்பு, அத்தனை பேரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது என்றால் மிகையல்ல.

திரையரங்க உரிமையாளர்களும், தங்கள் அரங்குகளை ரஜினியின் கோச்சடையானுக்கே ஒதுக்கியுள்ளனர். குறிப்பாக மல்டிப்ளக்ஸ் அரங்குகள் அத்தனை திரைகளிலும் முதல் வாரம் முழுக்க கோச்சடையானை மட்டுமே திரையிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஒற்றைத் திரை அரங்குகள் நிலை பற்றிச் சொல்லவே வேண்டாம். அவை அதிகபட்ச வசூல் பார்ப்பதே ரஜினி படங்கள் ரிலீசாகும்போதுதான்.

இப்போதுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் குறைந்தது 900 அரங்குகளில் கோச்சடையான் திரையிடப்படும் எனத் தெரிகிறது.

 

சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் கோச்சடையான் இசை!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி, அவரது கோச்சடையான் இசை உலகமெங்கும் வெளியாகிறது.

சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினி - தீபிகா படுகோன் நடித்துள்ள கோச்சடையான் படத்தின் வெளியீட்டுத் தேதி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 10-ம் தேதி இந்தப் படம் உலகமெங்கும் வெளியாகிறது.

அதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளில் இந்தப் படத்தின் இசையை வெளியிடுவதாக இன்று நாளிதழ்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர் கோச்சடையான் குழுவினர்.

சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் கோச்சடையான் இசை!

ஏஆர் ரஹ்மான் இசையமைக்க அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். படத்தின் பாடல்களுக்கு சாம்பிளாக ஒரு டீசரை வெளியிட்டிருந்தனர் சமீபத்தில். எங்கே போகுதோ வானம் என்ற அந்தப் பாடல் அத்தனை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றது.

இந்தப் படத்துக்காக தமிழ் மற்றும் இந்தியில் ரஜினியே சொந்தக் குரலில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

கோச்சடையான் பாடல்களுக்கான எதிர்ப்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இணையதளங்களில் இந்தப் படத்தின் பாடல் இசைத் தட்டுக்களுக்கான முன்பதிவு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.