முன்னணி நடிகைகள் பலரும் மிஸ்ஸிங்... மாலையில் வந்தார் கமல்!
சென்னை: நடிகர் சங்கத்தினர் இன்று நடத்திய உண்ணாவிரதத்தில் பெரும்பான்மை நடிகர்கள் ஆஜராகிவிட, பிற்பகலுக்குப் பிறகும்கூட முன்னணி நடிகைகள் வரவே இல்லை.
காலையில் உண்ணாவிரதம் தொடங்கிய உடனே வந்து பந்தலில் அமர்ந்த முதல் நடிகை தன்ஷிகா மட்டுமே. அதன் பிறகு சில சீனியர் நடிகைகள் வந்தனர். ராதிகா, ஊர்வசி, அம்பிகா, ரேகா, கோவை சரளா, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் அடுத்தடுத்து வந்தனர்.
பிற்பகலில் நடிகை நமீதா, மோனிகா, லட்சுமி ராய் ஆகியோர் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் காலையிலேயே வருவதாகக் கூறிய கமல், பின்னர் 12 மணிக்கு வருவதாகக் கூறினார். ஆனால் அவர் மாலையில்தான் உண்ணாவிரதத்துக்கு வந்தார்.
டேட்ஸ் இல்லை: அப்பா கமலுடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண ஸ்ருதி
மும்பை: டேட் இல்லாததால் ஸ்ருதி ஹாசன் தன் அப்பா கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை கை நழுவவிட்டுள்ளார்.
கமல் ஹாசன் தானே திரைக்கதை எழுதி இயக்கும் படம் பிட்டர் சாக்லேட். இதில் கமல் ஹாசனுடன் சேர்ந்து அவரது மூத்த மகள் ஸ்ருதி நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அப்பா நடிக்கும் படத்தில் நடிக்கவில்லை என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நான் அப்பாவுடன் சேர்ந்து பிட்டர் சாக்லேட் படத்தில் நடிக்கவில்லை. என் கையில் தற்போது டேட்ஸே இல்லை என்பதை தெரிவித்துக் கொள்வதில் கவலையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. அடுத்த தடவை பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் 'விஸ்வரூபம்-2'
சென்னை: கமல்ஹாசனின் விஸ்வரூபம் பார்ட்-2 சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட்-15) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே தினத்தில் உலகம் எங்கும் 3000 தியேட்டர்களில் படம் ரிலீஸ் செய்யப்படவுள்ளது என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
படத்தின் என்ஸிகியூட்டிவ் ப்ரொடியூசர்களில் ஒருவரான வி.டி.வி.கணேஷ், இது தொடர்பாக தெரிவித்த தகவலின்படி, விஸ்வரூபம் பார்ட்-2, ரூ50 கோடி பட்ஜெட்டில் தயாராகிறதாம். காரணம், விஸ்வரூபம்-1 படிப்பிடிப்பின்போது பார்ட்-2 க்கான சுமார் 40 வீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.
விஸ்வரூபம்-2 கதைக்களம் இந்தியாவில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. பார்ட்-1ல் ஆன்ட்ரியா வரும் காட்சிகள் பெரிதும் முக்கியத்துவம் இல்லாமல் இருந்த காரணம், பாகம்-2ல் தெரியவரும் எனவும் கூறப்பட்டுள்ளது. பார்ட்-2ல்தான் ஆன்ட்ரியாவின் கேரக்டர் முழுமையாக புரிந்து கொள்ளப்படும் என்கிறார்கள் படத்துடன் தொடர்புடையவர்கள்.
ப்ளீஸ் துளசி, என்னை அங்கிள்னு கூப்பிட்டுறாத... கெஞ்சும் ஜீவா
சென்னை: 'யான்' பட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் , 'இந்த படத்தில் துளசி தான் ஹீரோயின் என்று தெரிந்ததும், அவரிடம் நான் போட்ட முதல் கண்டிஷன், என்னை அங்கிள் என்று அழைக்க கூடாது என்பது தான்' என படத்தின் ஹீரோ ஜீவா கூறினார்.
விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள், இப்போது தயாரிப்பில் இருக்கும் "நீதானே என் பொன் வசந்தம்" ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம், ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட்.
இதே நிறுவனம் அடுத்து, பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு, யான் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. கதாநாயகனாக ஜீவா நடிக்கிறார். கதாநாயகி துளசி. இதுபோக, நாசர், ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
மும்பையை சேர்ந்த ஒருவர் வில்லனாக நடிக்கிறார். இவர் தவிர, பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை எல்ரெட் குமார், ஜெயராமன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு மும்பையிலும், வெளிநாடுகளிலும் நடைபெற இருக்கிறது.
இன்று காலை 10.30 மணி அளவில் 'யான்' பட பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது.இதில் 'யான்'பட தயாரிப்பு குழுவினர் மற்றும் ஜீவா,துளசி நாயர் கலந்துரையாடல் நடைபெற்றது.
அப்போது பேசிய படத்தின் டைரக்டர் ரவி.கே.சந்திரன், யான் படத்தின் கதை முழுக்க முழுக்க அன்றாடம் நாம் செய்தித்தாள்களில் பார்க்கும் செய்திகள் படத்தின் கதை. இப்படத்தில் நடிக்க, நடிகை தேடிய போது, டைரக்டர் மணிரத்னம் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் தான் துளசியை சிபாரிசு செய்தனர். அவர்கள் கூறியதை தொடர்ந்து துளசியை, ஜீவாவுக்கு ஜோடியாக்கினேன். அவரும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றார்.
படத்தின் ஹீரோ ஜீவா பேசும்போது, இந்த படத்தில் துளசி தான் ஹீரோயின் என்று தெரிந்ததும், அவரிடம் நான் போட்ட முதல் கண்டிஷன், என்னை அங்கிள் என்று அழைக்க கூடாது என்பது தான். காரணம், என் வயதில் பாதி வயது தான் துளசிக்கு. வயதில் தான் பாதி, ஆனால் நடிப்பு என்று வந்து விட்டால் என்னை மிஞ்சும் அளவுக்கு நடிக்கிறார்.
அங்கிள் என்று நான் சொல்லக்கூடாது என்றதும், துளசி என்னை ஜீவா ஜி என்று அழைத்தார், இதற்கு நீ பேசாமல் என்னை அங்கிள் என்று அழைத்திருக்கலாம்', என்றேன்.
மேலும் அக்கா-தங்கை இருவருடன் நடித்த அனுபவம் குறித்து கேட்டபோது, கார்த்திகாவிடம் நடிப்பு, டான்ஸ் என்று எல்லாமும் இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்பவும் கலகல என்று இருப்பார். அவர் ஒரு இண்டர்நேஷனல் நடிகை. துளசியை பொறுத்தமட்டில் நம்மூரு நடிகை என்று தான் சொல்ல வேண்டும். அவர் மணிரத்னத்தின் பள்ளியில் இருந்து வந்தால் நடிப்பதற்கு முன்பு தன்னை தயார்படுத்தி தான் நடிப்பார்' ,இவ்வாறு அவர் கூறினார்.
ரூ 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஷாரூக்கான் மீது நடிகர் மனோஜ்குமார் வழக்கு!
மும்பை: ஓம் ஷாந்தி ஓம் படத்தில் தன்னை அவமதிப்பது போல் உள்ள காட்சிகளை, நீதிமன்றம் சொன்ன பிறகும் நீக்காததால் ரூ 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார் மூத்த நடிகர் மனோஜ்குமார்.
பாலிவுட்டில் பிரபலமான நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மனோஜ்குமார். இவரது உப்கார், பி இமான், நந்தா, ரொட்டி கப்டா அவுட் மகான், சன்யாசி, தஸ் நம்பரி, கிராந்தி போன்ற படங்கள் மனோஜ் குமாரை பாலிவுட்டின் முக்கிய சக்தியாக மாற்றின.
அவரது படங்களில் அவருக்கென்று ஒரு பாணி உண்டு. கைகளால் அடிக்கடி முகத்தை மறைத்துக் கொள்வார். அப்படி மறைத்தபடி அவர் ஒரு படத்தின் பிரிமியருக்கு வரும்போது போலீஸ் அவரை போலீஸ் விரட்டுவதுபோல ஒரு காட்சி வைக்கப்பட்டுள்ளது 2007-ல் வெளியான ப்ளாக்பஸ்டர் படமான ஓம் ஷாந்தி ஓமில். மேலும் அவரது இந்த ஸ்டைலைப் பயன்படுத்தி ஷாரூக்கான் அரங்கினுள் நுழைந்துவிடுவதாகவும் காட்சி இடம்பெற்றுள்ளது.
'படத்தில் அந்த காட்சி எழுபதுகளில் நடப்பதாக வைத்துள்ளார்கள். எழுபதுகளில் நான் பெரிய ஹீரோ. என்னை அடையாளம் தெரியாத அளவுக்கா மும்பை போலீஸ் இருப்பார்கள்?' என்று கேட்ட மனோஜ்குமார், இந்தப் படத்தில் தன்னை ஷாரூக்கானும் இயக்குநர் பரா கானும் அவமானப்படுத்திவிட்டதாகக் குற்றம்சாட்டினார். பின்னர் ஷாரூக்கும் பராவும் மன்னிப்புக் கேட்க, மனோஜ்குமாரும் மன்னித்துவிட்டதாகக் கூறினார்.
ஆனால் அந்தப் படத்தை 2008-ல் சோனி டிவியில் ஒளிபரப்ப தயாரானபோது, தன்னை கிண்டல் செய்யும் காட்சிகளை நீக்கக் கோரி மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனோஜ்குமார் ஆட்சேபிக்கும் காட்சிகளை நீக்குமாறு நீதிமன்றமும் தடை விதித்தது.
இப்போது இந்தப் படத்தை ஜப்பானில் சமீபத்தில் வெளியிட்டார் ஷாரூக் கான். ஆனால் மனோஜ்குமார் தொடர்பான காட்சிகள் நீக்கப்படவில்லை.
இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார் மனோஜ்குமார்.
"இரண்டுமுறை அவர்களை நான் மன்னித்தேன். ஆனால் இந்த முறை அப்படி விட முடியாது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதை மதிக்காமல் என்னை கிண்டல் செய்யும் காட்சிகளுடன் படத்தை வெளியிட்டுள்ளனர். எனவேதான் ரூ 100 கோடி கேட்டு மான நஷ்ட வழக்குப் போடுகிறேன்," என்றார்.
படத்தை ஷாரூக்கானும் ஈராஸ் நிறுவனமும் தயாரித்துள்ளனர். இந்தப் படம் ரூ 35 கோடியில் தயாரானது. ரூ 150 கோடிக்கும் மேல் வசூலித்தது.
ஆசியாவின் அழகிய வனப்பகுதி…. டிஸ்கவரி தமிழில் காணலாம்
ஆசியா கண்டத்தில் உள்ள அழகிய வனப்பகுதிகள், மலைகள், கடற்கரைகள், வனவிலங்குகள் என அனைத்தையும் வீட்டின் வரவேற்பு அறைக்கு கொண்டு வருகிறது டிஸ்கவரி சேனல். ‘வைல்டு ஆசியா' நிகழ்ச்சியில் விலங்குகளின் வாழ்விடங்கள் அவற்றின் குணாதிசயங்களை விளக்குகிறது.
அழுது வடியும் சீரியல்களை பார்க்க விருப்பம் இல்லாதவர்கள் இசைச் சேனல்களின் பக்கம் கவனம் செலுத்துவார்கள். சிலரோ ஸ்போர்ட் சேனல்கள் பக்கம் ஒதுங்குவார்கள். விலங்குகளின் காதலர்கள் டிஸ்கவரி, அனிமல் பிளானட் என்று ரிமோட்டை திருப்புவார்கள். அவர்களுக்காகவே டிஸ்கவரி தமிழ் சேனலில் புதன் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது நிகழ்ச்சி வைல்டு ஆசியா.
இந்த தொடரில் ஐலேன்ட் மேஜிக் என்ற தலைப்பில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில், ஆசியாவின் தெற்கு எல்லையோரம் இருக்கும் சுமார் 30 ஆயிரம் தீவுகளில் காணப்படும் தாவரங்களும், விலங்குகளும் மலைக்க வைப்பவை.
இந்த அத்தியாயமானது கடந்த பனியுகம் வரை ஆசியாவின் நிலப்பரப்பில் இருந்த ஜாவா, 70 ஆண்டுகளுக்கு முன்பு உருவான அனக்கிரகடோவா, சுமார் 3 கோடி ஆண்டுகளாக தனித்திருக்கும் சுலவேசி என மூன்று தீவுகளுக்கு பயணிக்கிறது. இந்த பகுதியில் முக்கிய வேட்டை விலங்கான சிறுத்தைப்புலி, அழிந்து வரும் நிலையில் உள்ள யானைகளை காணலாம்.
இந்தியா தொடங்கி இந்தோனேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள கடற்கரைப்பகுதிகள், பாலைவனங்கள், மழைக்காடுகள், என பல்வேறு வகையான பிரதேசங்களை அங்கு வாழும் உயிரினங்களை திரைக்குள் கொண்டு வருகிறது.
உராங் உட்டான் குரங்குகள், சிறுத்தைப்புலிகள், காட்டுக்குதிரைகள், ராட்ஷச பல்லிகள் இப்படி அத்தனையையும் அவற்றின் குணாதிசயத்தோடு காட்சிப்படுத்துகிறது, வைல்ட் ஆசியா நிகழ்ச்சி.
எப்பொழுது பார்த்தாலும் அழுது வடியும் சீரியல்களை பார்த்து போர் அடித்துப் போனவர்கள் கொஞ்சம் டிஸ்கவரி சேனல் பக்கம் போயிட்டு வாங்களேன்.
மக்கள் பிரச்சினைகள் உரக்கச் சொல்லும் சத்தியம் டிவி
சத்தியம் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சி உரக்கச் சொல்கிறோம். சமூகப் பார்வையுள்ள இந்த நிகழ்ச்சி ஞாயிறு தோறும் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
மக்களின் பிரச்சினைகளை மெதுவாகச் சொல்வதை விட உரக்கச் சொன்னால்தான் உலகிற்கு புரியவரும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி உள்ளது. இந்நிகழ்ச்சியில் வரும் சம்பவங்கள் எதுவும் கற்பனையல்ல.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, தகுந்த விமர்சனங்களுடன் நிகழ்ச்சி தயாராகியுள்ளது. பொதுமக்களின் குரலாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில், அரசியல் தொட்டு அடித்தட்டு மக்கள் வரை, பின்னிக் கிடக்கும் பிரச்சினைகள் எடுத்து வரப்படுகின்றன. மறுக்கப்பட்ட உரிமைகள் - மறைக்கப்பட்ட உண்மைகள் என தேடித் தேடி சேகரித்து இந்த நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்கள். உரக்கச் சொல்வோம் நிகழ்ச்சியை இயக்கி தொகுத்து வழங்குகிறார் சுந்தர்.
ஹன்சிகா சம்பளம் வாங்கும் ஸ்டைலே தனி ஸ்டைல்
சென்னை: ஹன்சிகா சம்பளத்தை ஹீரோக்கள் மற்றும் பேனர்களை வைத்து தான் முடிவு செய்கிறாராம்.
இன்றை தேதியில் கை நிறைய படம் வைத்திருக்கும் நடிகை ஹன்சிகா. தமிழக ரசிகர்களுக்கு கொஞ்சம் பூசினாற் போல இருக்கும் ஹன்சிகாவை ரொம்பவே பிடித்துவிட்டது. இதனால் இயக்குனர்களும் தங்கள் படங்களில் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
தனக்கு கிராக்கி இருப்பதை அறிந்து ஹன்சிகாவும் சம்பளத்தை உயர்த்திவிட்டார். அவர் சம்பளத்தை எப்படி நிர்ணயிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடியில் நடிக்க அவரிடம் லம்ப் அமௌண்ட்டை சம்பளமாக வாங்கியுள்ளார். ஆனால் விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடிக்க குறைவான தொகையை வாங்கியுள்ளார்.
அதென்ன கணக்கு என்று கேட்கிறீர்களா? பெரிய பேனர், முன்னணி ஹீரோக்கள் என்றால் அம்மணி சற்றும் யோசிக்காமல் படக்கென்று சம்பளத்தை குறைத்துவிடுகிறாராம்.
''தத்தித்தரிகிடதோம்''...தொழிலதிபருடன் சமரசமானார் பவர்ஸ்டார்.. கேஸ் வாபஸ்!
சென்னை: செக் மோசடி வழக்கைத் தொடர்ந்த நாமக்கல் தொழிலதிபருடன் பவர்ஸ்டார் சீனிவாசன் சமரசமாகி விட்டார். பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார். இதையடுத்து தொழிலதிபர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரில்வசித்து வரும் பவர் ஸ்டார் சீனிவாசன், கடும் முயற்சி மற்றும் செலவுகளுக்குப் பின்னர் தற்போது நடிகராக அவதாரம் எடுத்து பிசியாக நடித்து வருகிறார். இவரது பல்லழகும், பவர்புல் கலரும் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் சினிமாக்காரர்களிடமும் கூட செம கிராக்கியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னைத் தானே பவர் ஸ்டார் என்று அழைக்க ஆரம்பித்த சீனிவாசனை இப்போது அனைவருமே அன்போடு பவர் ஸ்டார், பவர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர். அவரது பெயரே பவராகி விட்டது. சீனிவாசனை அத்தனை பேரும் மறந்து விட்டனர்.
இப்படியாப்பட்ட பவர் ஸ்டார், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரும், ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான பொன்னுச்சாமி என்பவரிடம் ரூ 2 லட்சம் கடன் பெற்றார். இதற்காக கடந்த 2009-ம் ஆண்டு தொடக்கத்தில் செக் கொடுத்தார். அந்த செக் பணம் இல்லாமல் பாங்கியில் இருந்து திரும்பி வந்து விட்டது.
இதனால் பொன்னுச்சாமி சார்பில் அவரது மேலாளர் வெங்கடாசலம் பவர் ஆப் அட்டர்னி பெற்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது நாமக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் வக்கீல் கிருஷ்ணன் என்பவர் மூலம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தொடர்ந்து ஆஜர் ஆகவில்லை. இதனால் 2009-ம் ஆண்டு இறுதியில் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. எனினும் அவர் கைது செய்யப்படாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் அவரை கைது செய்ய வலியுறுத்தி வெங்கடாசலம் மீண்டும் மனு கொடுத்தார். இந்த மனுவை ஏற்று கடந்த மாதம் 15-ந் தேதி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ஜோதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய நாமக்கல் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
போலீஸாரும் அவரை வலை வீசி தேடி வந்தனர். அவர் அந்தமான் பக்கம் போய் விட்டதாக ஒரு தகவல் லீக் ஆனது. ஆனால் போலீஸார் சினிமாப் பட இயக்குநர் போல பவரிடமே பேசி அவர் எங்கே இருக்கிறார் என்பதை அவரது வாயிலிருந்தே வாங்கி விட்டனர். இதனால் வேறு வழியில்லாமல் போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க முன்வந்தார்.
மறுபக்கம், சீனிவாசனின் வக்கீல் நாமக்கல்லில் உள்ள வக்கீல் கிருஷ்ணனுடன் பேசினார். பணத்தை கொடுக்க நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தயாராக இருப்பதாகவும், வழக்கை வாபஸ் பெறுமாறும் கூறினார்.
இது தொடர்பாக நாமக்கல் வக்கீல் கிருஷ்ணனுடன் பேச்சு நடத்த சென்னை வக்கீல் நாமக்கல் விரைந்தார். பேச்சு நடத்தி முடித்து பணத்தைக் கொடுத்து விட்டால் புகாரை வாபஸ் பெற பொன்னுச்சாமி தயாராக இருந்தார்.
இதையடுத்து பவர் தரப்பு, தொழிலதிபரை சந்தித்து உரிய பணத்தைக் கொடுத்து விட்டது. இதையடுத்து தொழிலதிபர் தரப்பில் கோர்ட்டில் ஒரு மனு செய்யபப்பட்டது. அதில், பவர் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மீது இன்று நீதிபதி உத்தரவு பிறப்பிக்கவுள்ளார்.
கேஸ் வாபஸாகி வழக்கிலிருந்து மீள்வதால் அதை ஒரு வெற்றி விழாவாக பவர்ஸ்டாரும் அவரது 'விழுது'களும் கொண்டாடுவார்களா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது... நடந்தாலும் நடக்கலாம், இதுதான் கலியுகமாச்சே!
'இவங்க ட்ரம்ஸ் வாசிக்க எங்க பம்ஸ்தான் கிடைச்சிதா!'- ஹீரோக்கள் மீது சத்யராஜ் பாய்ச்சல்
சென்னை: முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடிக்கமாட்டேன். இவர்கள் பெயர் வாங்க நாங்கள் அடி வாங்க வேண்டுமா... அது முடியாது, என்றார் நடிகர் சத்யராஜ்
அமைதிப்படை 2 படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "எனக்கு அரசியல் தெரியாது. வேண்டவும் வேண்டாம். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் சொல்வேன். இந்த தமிழகத்துக்கு இப்போது தேவையானது சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிதான்.
இவர் தலைமையில்தான் தமிழகம் புதிய மாற்றங்களைக் காணப் போகிறது.
எனக்கு வில்லனாக நடிப்பதுதான் பிடிக்கும். அப்படி நடித்த காலத்தில் மிகுந்த சந்தோஷமாக இருந்தேன். எந்த பொறுப்பும் கிடையாது.
ஆனால் ஹீரோவான பிறகு இருந்த சந்தோஷமெல்லாம் போயிடுச்சி. 1994-ம் ஆண்டு மணிவண்ணன் சார் என்கிட்ட அமைதிப்படை கதையைச் சொன்னார். வில்லனா இருந்து ஹீரோவாகி நமக்குன்னு ஒரு இடத்தைப் பிடிச்சிக்கிட்டிருந்த நேரத்துல மீண்டும் வில்லனான்னு மணி கிட்ட கேட்டேன். அவரோ, ஹீரோவும் நீங்கதான், வில்லனும் நீங்கதான்னு சொன்னார். நான் இந்தப் படத்தோட கதை பிடிக்கலைன்னு கூறி தப்பிச்சிடலாம்னு நினைச்சேன்.
ஆனால் அவர் சொன்ன கதை அற்புதமாக இருந்தது. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். நடிச்சேன். இருபது ஆண்டுகள் கழித்து இப்போது இந்தப் படத்தோட இரண்டாம் பாகம். மிக அருமையான அரசியல் படமாக வந்திருக்கிறது அமைதிப்படை 2.
அந்தக் கட்சி, இந்தக் கட்சி என்றில்லாமல், இன்றைய அரசியலைப் பேசுகிறது படம்.
வில்லனா நடிக்கிறது பத்தி கவலைப்படல. ஆனால் அதுக்காக சும்மா ஹீரோகிட்ட அடிவாங்கிட்டு போற மாதிரி சப்பையான வேடங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை.
இவங்க ஹீரோவாகிறதுக்கு நாம அடிவாங்கணுமா? வேகமா நடக்கிறது, ஸ்லோமோஷனில் நடக்கிறது, விரலசைவுக்கு சவுண்ட் கொடுக்கிற பில்ட் அப்பெல்லாம் வேற எங்காவது வெச்சிக்கட்டும். இந்தப் படத்துலகூட, 'இவங்க ட்ரம்ஸ் வாசிக்க எங்க பம்ஸ்தான் கிடைச்சுதா'-ன்னு ஒரு வசனம் வச்சிருக்காங்க (பின்பக்கம் திருப்பிக் காட்டுகிறார்).
வில்லனா நடிக்கணும்னா, அந்தப் பாத்திரம் அதிகபட்ச வீச்சோட இருக்கணும். எனக்குத் தெரிஞ்சு, இந்த சினிமாவுல பிரமாதமான வில்லன் வேடம் அமைதிப்படை அமாவாசைதான். அதை முறியடிக்கிற மாதிரி இன்னொரு வில்லன் வேடத்தை மணிவண்ணன் தவிர யாராலும் உருவாக்க முடியாதுன்னு நான் அடிச்சி சொல்றேன்," என்றார்.
நம்ம வடிவேலு வண்டு முருகனாக சவுண்ட் விடற மாதிரி ஒரு எஃபெக்ட்!
கேடி பில்லா கில்லாடி ரங்கா - விமர்சனம்
-எஸ். ஷங்கர்
நடிப்பு: விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, முத்துராமன், டெல்லி கணேஷன், சுஜாதா
ஒளிப்பதிவு: விஜய்
இசை: யுவன் சங்கர் ராஜா
மக்கள் தொடர்பு: ஜான்சன்
தயாரிப்பு: பசங்க புரொடக்ஷன்ஸ்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்: பாண்டிராஜ்
பசங்க, வம்சம், மெரினா என மூன்று படங்களை மூன்று விதமாய் தந்த பாண்டிராஜ், தனது நான்காவது படத்தை முழுக்க முழுக்க காமெடிக் கதம்பமாகத் தந்திருக்கிறார், நல்ல மணத்தோடு!
விமலும் சிவகார்த்திகேயனும் எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாய் சுற்றும் இளைஞர்கள். அப்பாக்கள் பேச்சைக் கேட்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர்கள். ஒரே லட்சியம் எப்படியாவது அரசியலில் குதித்து, கவுன்சிலராகி சம்பாதிக்க வேண்டும் என்பதுதான்.
திருச்சி பொன்மலைதான் படத்தின் களம். படத்தின் முதல் பாதியை சரக்கும் முறுக்கும் மாதிரி, டாஸ்மாக்கையையும் காமெடிக் காட்சிகளையும் மிக்ஸ் பண்ணிக் கொடுத்த பாண்டி, இரண்டாம் பாதியில் அப்பா - மகன் சென்டிமெண்டை அழுத்தமாகக் கொடுத்து மனதைத் தொடுகிறார்.
விமல்தான் ஹீரோ என்று சொல்ல முடியாததற்குக் காரணம், அவரது நடிப்பு. ஏன் இப்படி ஒரே மாதிரி நடித்துக் கொண்டிருக்கிறார்? இந்தப் படத்தில் பாண்டிராஜ் கொடுத்த அருமையான வாய்ப்பை அவர் இன்னும் கூட சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
ரஜினி ரசிகன் என்பதாலோ என்னமோ 'தர்மத்தின் தலைவன்' கெட்டப்பில் வரும் சிவகார்த்திகேயனை சுலபத்தில் ஏற்க முடிகிறது. அவர் செய்யும் காமெடிகளையும், சமயத்தில் காமெடி என்ற பெயரில் அவரது கடிகளையும் பொறுத்துக் கொள்ள முடிகிறது.
விமலுக்கு ஜோடியாக வரும் பிந்து மாதவியின் கண்களை வைத்தே காட்சிகளை அமைத்திருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். சிவகார்த்திகேயனும் அவர் ஜோடி ரெஜினாவும் அடிக்கும் காதல் லூட்டிகள் இளமைக் குறும்புகள்.
படம் கொஞ்சம் டல்லடிக்கும் போதெல்லாம் கலகலப்பை கன்டினியூ பண்ண உதவுகிறார், வீட்டோடு மாப்பிள்ளையாக வரும் பரோட்டா சூரி.
யுவனின் இசை, விஜய்யின் ஒளிப்பதிவு எல்லாமே இந்தப் படத்தின் தன்மைக்கு போதுமான அளவுக்கு உள்ளன.
படத்தின் பெரிய பலம் பாண்டிராஜின் வசனங்கள். ஒரு சில இடங்களில் பத்திரிகை ஜோக்குகள் கூட எட்டிப் பார்க்கின்றன. ஆனாலும், மனதை லேசாக்கும் அளவுக்கு சரவெடியாக அமைந்துள்ளதை பாராட்ட வேண்டும்.
முதல் பாதியில் முணுக்கென்றால் எட்டிப் பார்க்கும் டாஸ்மாக் சமாச்சாரத்தையும் இரட்டை அர்த்த வசனங்களையும் குறைத்திருக்கலாம்.
ஒரு படத்தை அல்லது அதை உருவாக்கும் இயக்குநரை ஏ பி சி என்றெல்லாம் தரம் பிரிப்பது எத்தனை பெரிய தவறு... பசங்க படம் பார்த்து கைத்தட்டிய அதே கூட்டம்தான் கேடி பில்லா கில்லாடி ரங்காவுக்கும் கைத்தட்டுகிறது.
ஒவ்வொரு பார்வையாளனுக்குள்ளும் அனைத்து வகை ரசனைகளும் ஒளிந்து கிடக்கின்றன. அந்த ரசனைக்கு தீனி போடுமளவுக்கு படம் தரத் தெரிந்தவர்கள் தர அளவுகளைத் தாண்டிவிடுகிறார்கள்.
இந்தப் படத்தில் அத்தனை தரப்பையும் திருப்திப்படுத்தும் வித்தை தனக்கும் கைவரும் என்பதை நிரூபித்திருக்கிறார் பாண்டிராஜ்!