அதர்வாவின் சண்டிவீரனுக்கு யூ சான்றிதழ் வழங்கியது தணிக்கைக்குழு

சென்னை: நடிகர் அதர்வா - கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் சண்டிவீரன் படத்திற்கு யூ சான்றிதழை அளித்திருக்கின்றனர், தணிக்கைக் குழுவினர். இயக்குநர் சற்குணம் தஞ்சாவூர் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் விதமாக எடுத்திருக்கும் திரைப்படம் சண்டிவீரன்.

களவாணி படம் போல சண்டிவீரனையும் மண் சார்ந்த கதையாக எடுத்திருக்கிறார் சற்குணம். முழுப்படமும் எடுத்து முடித்த பின் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக சென்சார் போர்டுக்கு படத்தை அனுப்பியிருக்கின்றனர் படக்குழுவினர்.

Chandi Veeran Movie Gets U Certificate from Sensor Board

முழுப் படத்தையும் பார்த்த தணிக்கைக் குழுவினர் சண்டிவீரன் படத்திற்கு எந்தக் "கட்"டும் கொடுக்காமல், யூ சான்றிதழ் வழங்கியுள்ளனர். சண்டிவீரன் என்று பெயர் வைத்ததால் பயந்து போயிருந்த படக்குழுவினர் படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்ததால் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதி சண்டிவீரன் திரையைத் தொடலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அதர்வாவிற்கு கைகொடுப்பானா இந்த சண்டிவீரன்... பார்க்கலாம்

 

மாரி படத்தில் அதிகமான புகைபிடிக்கும் காட்சிகள் – மக்கள் மத்தியில் அதிகரிக்கும் எதிர்ப்புகள்

சென்னை: தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் மாரி திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 325 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அண்டை நாடான இலங்கையிலும் சுமார் 16 திரையரங்குகளில் மாரி திரைப்படம் வெளியானது.

இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்திற்கு தற்போது இலங்கை மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து உள்ளது, குறிப்பாக இளைஞர்கள் தனுஷிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Maari Movie Issue

போராட்டத்திற்கு அவர்கள் சொல்லும் காரணம் இதுதான், " படம் முழுவதுமே தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகளே உள்ளன. புகையிலையை ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில் ஒருபடம் முழுவதுமே புகை பிடிப்பது போன்று தனுஷ் நடித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவே இந்தப் போராட்டம் என்று கூறியுள்ளனர். இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக நடிகர் தனுஷின் படத்திற்கு அவர்கள் செருப்பு மாலை அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

இதுதொடர்பாக தனுஷிடம் கேட்டதற்கு " மாரி படத்தில் நான் ஒரு லோக்கல் தாதாவாக நடித்து இருக்கிறேன், அதனால் தான் படம் முழுவதும் புகை பிடிக்கும்படி காட்சிகள் உள்ளன. இயக்குனர்களின் கதையில் நான் தலையிட முடியாது, அதே நேரம் எனது சொந்த வாழ்க்கையில் நான் புகைபிடிப்பது கிடையாது" என்று கூறியிருக்கிறார்.

சொல்வதற்கு ஒன்றும் இல்லை...

 

புலி படத்துக்காக விஜய்யுடன் இணைந்து பின்னணி பாடிய ஸ்ருதி ஹாஸன்

சிம்பு தேவன் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் புலி படத்துக்காக ஒரு பாடலை விஜய்யுடன் இணைந்து பாடியுள்ளார் ஸ்ருதி ஹாஸன்.

தனது ஆரம்பகாலப் படங்களிலிருந்தே சொந்தக் குரலில் பாடி வருகிறார் விஜய். அவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே பெரிய ஹிட் ரகம்தான். அதேபோல ஸ்ருதி ஹாஸன் முறைப்படி இசை கற்றவர். ஒரு படத்துக்கு இசையமைத்தது மட்டுமல்ல, அடிக்கடி சொந்தக் குரலில் பாடி வருகிறார்.

Shruthi Hassan - Vijay duet song in their own voices

புலி திரைப்படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள விஜய்யும் ஸ்ருதி ஹாஸனும் இணைந்து ஒரு டூயட் பாடலுக்கு குரல் கொடுத்துள்ளனர்.

ஏற்கெனவே விஜய்யும் ப்ரியங்கா சோப்ராவும் தமிழன் படத்துக்காக ஒரு டூயட் பாடலைப் பாடி நடித்திருந்தனர். அதற்குப் பிறகு இப்போதுதான் நாயகன் நாயகி இருவருமே பின்னணிப் பாடி நடித்துள்ள பாடல் வருகிறது. இந்த இரண்டு பாடல்களையுமே விஜய் பாடியிருக்கிறார் என்பது சிறப்பு.

Shruthi Hassan - Vijay duet song in their own voices

'கறுப்பு வெள்ளை பட காலத்தில்தான் ஹீரோ ஹீரோயின் திரைக்குப் பின்னாலும், திரையிலும் சொந்தக் குரலில் பாடி நடித்தனர். அதன் பிறகு அப்படி ஒரு நிகழ்வு விஜய் படங்களில்தான் நடந்திருக்கிறது,' என்கிறார் தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் பெருமிதத்துடன்!

 

நயன்தாரா நடித்த பேய்ப் படம் மாயாவுக்கு யு சான்று தர மறுப்பு!

நயன்தாரா நடித்துள்ள பேய்ப் படமான மாயாவுக்கு யு சான்று தர மறுத்த சென்சார் குழு, யூ ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

இது பேய்ப் பட சீஸன் என்பதால், நயன்தாராவும் தன் பங்குக்கு அப்படி ஒரு படத்தில் நடித்துள்ளார். அதுதான் மாயா. இவருடன் சூரி, அம்ஷத்கான், லட்சுமிபிரியா, சந்திரமவுலி, ரோபோ சங்கர் போன்றோரும் நடித்தனர்.

UA for Nayanthara's Maaya

அஷ்வின் சரவணன் இயக்கினார். இதன் பட வேலைகள் முடிவடைந்து தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை உறுப்பினர்கள் படத்தை பார்த்து ‘யு' சான்று அளிக்க மறுத்து விட்டனர். சில காட்சிகளை நீக்கினால் யு சான்று தர பரிசீலிப்பதாகக் கூறினார்.

UA for Nayanthara's Maaya

ஆனால் இதற்கு படக்குழு உடன்படாததால், ‘யுஏ' சான்று அளித்தனர் தணிக்கைக் குழுவினர்.

யு சான்றிதழ் கிடைத்தால்தான் அரசின் வரி விலக்கு பெற தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் இம்மாதம் இறுதியில் ரிலீசாகிறது.

 

காட்டு யானை மீது சவாரி செய்த நடிகைகள் நஸ்ரியா, ரஞ்சனி மீது புகார்

பிராணிகள் நலச் சங்க அனுமதி பெறாமல் காட்டு யானை மீது சவாரி செய்ததாக நடிகைகள் நஸ்ரியா, ரஞ்சனி ஆகியோர் மீது புகார் கிளம்பியுள்ளது.

பிரபல மலையாள நடிகைகள் நஸ்ரியா நசீம், ரஞ்சனி ஹரிதாஸ் இருவரும் கேரள வனத்துறைக்கு சொந்தமான யானை மீது சவாரி செய்துள்ளனர்.

Elephant Ride: Complaint on Nazria, Ranjani

இதனை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த செயலாளர் வெங்கடாசலம் என்பவர் திருச்சூரில் உள்ள பிராணிகள் நல வாரியத்திடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில், "2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந்தேதி உயர்நீதி மன்ற உத்தரவுப்படி பிராணிகள் நலவாரியத்தின் அனுமதி இல்லாமல் யானைகள் மீது சவாரி செய்வது குற்றமாகும். பிராணிகள் நலவாரியத்திடம் எந்தவித அனுமதியும் பெறாமல் நடிகைகள் இருவரும் சில குழந்தைகளுடன் யானை மீது சவாரி செய்துள்ளனர்.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதற்கு துணை போன வனத்துறை அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ரஞ்சனி, தெருநாய்கள் நலனுக்காக குரல் கொடுத்தவர். அவர் இப்படியொரு புகாருக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

3டியில் ருத்ரமாதேவி.. ஆனா கண்ணாடி போடாமலேயே பார்க்கலாம்!

பாகுபலிக்கு அடுத்து, சினிமா ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கும் படம் ருத்ரமாதேவி. குணசேகர் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படம் பாகுபலிக்கு ஒரு வாரம் முன்பே வரவிருந்தது.

ஆனால் சட்டென்று ரிலீஸைத் தள்ளிப் போட்டுவிட்டார் இயக்குநர் குணசேகர்.

Rudhramadevi comes with new technology

இப்போது பாகுபலி பட்டயக் கிளப்பிக் கொண்டிருக்க, இன்னும் சில நவீன தொழில்நுட்பங்களுடன் ருத்ரமாதேவியை களமிறக்கப் போகிறார்களாம்.

பாகுபலி 3டி வெளியாகவிருந்தது. ஆனால் ஏனோ 2 டியிலேயே வெளியிட்டுவிட்டார் ராஜமவுலி.

ஆனால் குணசேகரோ, ருத்ரமாதேவியை 3 டியில் கொண்டுவருவதில் உறுதியாக உள்ளார். ஆனால் இந்த 3 டியிலும் ஒரு புதுமை. பொதுவாக கண்ணாடி அணிந்துதான் 3 டி படத்தைப் பார்க்க முடியும். ஆனால் ருத்ரமாதேவியை கண்ணாடி அணியாமலேயே 3டி எஃபெக்டோடு பார்க்க முடியுமாம். அதற்கான வேலைகளைத்தான் குணசேகரன் அன்ட் டீம் செய்து வருகிறது.

Rudhramadevi comes with new technology

இந்தப் பணிகள் முடிந்ததும் ருத்ரமாதேவி வரப் போகிறதாம்.

 

நடிப்பது பேய் சீரியல்… இரவில் நடுங்கும் சேச்சி நடிகை

சூரிய தொலைக்காட்சியில் பாசமான சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் அந்த மல்லுவுட் நடிகை. இயக்குநர் மாறிய உடனேயே நட்சத்திரங்களும் மாறிவிடவே, வந்த வழியாக மலையாள டிவி சீரியலுக்கே திரும்பினார்.

அங்கே குடும்பங்கள் போற்றும் விளக்கு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கூடவே பட்டப்படிப்பும் படித்து வருகிறார். தமிழ் சீரியலில் நடித்த போது திடீரென்று பாதியில் போனது பற்றி இதுவரை வாய் திறக்காத அந்த நடிகை மீண்டும் புதிய தமிழ் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் பேய் சீரியலில் நடித்து வருகிறார்.

முக்கிய கதபாத்திரம் என்பதை விட, இயக்குநர் பழைய பாசமான சீரியலை இயக்கியவர் என்பதாலும்தான் ஒத்துக்கொண்டாராம். ஆனால் பேய் சீரியலில் நடித்துவிட்டு இரவெல்லாம் தூக்கம் வராமல் தவிக்கிறாராம் அந்த சேச்சி நடிகை.

 

சம்பாதிச்சது போதுங்க... இனி புதியவர்கள் வரட்டும்! - கானா பாலா

வருமான விஷயத்தில் போதும் என்று சொல்லும் மனசு அத்தனை சுலபத்தில் யாருக்கும் வந்துவிடுவதில்லை.

ஆனால் கானா பாலா சம்பாதிச்ச வரைக்கும் போதும் என்று கூறி ஆச்சர்யப்படுத்துகிறார்.

Gana Bala's new decision

'பதினோரு பேரு ஆட்டம்...' என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் கானா பாலா. 'அட்டகத்தி' படத்தில் இவர் பாடிய ‘ஆடி போனா ஆவணி...', ‘நடுகடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா...' பாடல்கள் இவரை முன்னணி பாடகராக்கின. சில படங்களில் அவரே தோன்றி நடிக்கவும் நடனமாடவும் செய்கிறார்.

கானா பாலா இதுவரை 75 படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார். மேலும் 300க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். நிறைய பேருக்கு சத்தமில்லாமல் உதவியும் வருகிறார் பாலா.

இப்போது கானா பாடல்கள் எழுதுவதை, பாடுவதை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம்.

ஏன் இந்த முடிவு?

கானா பாலா சொல்கிறார்:

"நிறைய பாடல்கள் பாடிவிட்டேன். நான் நன்றாக சம்பாதித்தும்விட்டேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், என்னைப் போல் பல பாடகர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அவர்களின், முன்னேற்றத்திற்காக பாடல்கள் எழுதுவதையும், பாடுவதையும் குறைத்து வருகிறேன். எனக்காகவே வரும் வாய்ப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்கிறேன்," என்றார்.

 

நடிகர் மன்சூர் அலிகான் மகன் மீது கார் மோதி விபத்து: தீவிர சிகிச்சை

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் மகன் மீது அடையாளம் தெரியாத கார் மோதி விபத்துக்குள்ளானதில் பாடுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் குடும்பத்துடன் வசிக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான், இவரது மகன் துக்ளக்அலிகான் (வயது 17) பிளஸ் 2 படித்து வருகிறார். தற்போது ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் புதன்கிழமை இரவு தொழுகையை முடித்து விட்டு இரவு அடையாறு சென்றுள்ளார். அதிகாலை ஒரு மணி அளவில் சர்தார் பட்டேல் சாலை வழியாக தனது நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று அலிகான் துக்ளக் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில், அவர் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார்.

Mansoor Ali Khan’s Son Injured In Accident

விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டது. இதற்கிடையில், காயம் அடைந்த அலிகான் துக்ளக் ரத்தகாயத்துடன் சாலையில் விழுந்து கிடந்தார். அவருடன் வந்த நண்பர் ஜெயனூன், காயம் ஏதும் இல்லாமல் தப்பினார். விபத்து குறித்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயம் அடைந்த துக்ளக்கை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது முகத்தில் காயம் அதிக அளவில் காணப்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

நடிகர் மன்சூர் அலிகான், மருத்துவமனையில் மகன் அருகில் இருந்து கவனித்து வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தப்பிச்சென்ற கார் டிரைவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

 

ரொம்ப நாள் காத்திருக்க வேண்டாம்... ஜனவரியிலேயே பாகுபலி 2 வருகிறது!

ஊரெல்லாம் பாகுபலி பற்றிய பேச்சாகவே இருக்கிறது. 'என்னய்யா படத்தை இப்படி சடக்குன்னு முடிச்சிட்டாரே.. அடுத்த பாகம் எப்போ வரும்..? இதே மாதிரி ரெண்டு மூணு வருசம் காத்திருக்கணுமோ..' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவ்வளவு நாளெல்லாம் காத்திருக்கத் தேவையில்லை என்று கூறும் வகையில், இப்போதே பாகுபலி 2ம் பாக வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார் இயக்குநர் ராஜமவுலி.

Bahubali 2 will be hits screens in Jan 2016

வரும் ஜனவரி மாதமே பாகுபலி இரண்டாம் பாகத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். இன்னும் இரண்டு மாதங்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இறுதிப் பணிகளைத் தொடங்கப் போகிறாராம்.

Bahubali 2 will be hits screens in Jan 2016

இரண்டாம் பாகப் பணிகள் இவ்வளவு சீக்கிரம் முடியக் காரணம், ஏற்கெனவே முக்கியமான பிரமாண்ட காட்சிகளையெல்லாம் எடுத்து விட்டாராம் ராஜமவுலி. இனி பேட்ச் ஒர்க் மாதிரி சில காட்சிகள் எடுத்தால் போதுமாம். கிராபிக்ஸ் காட்சிகளில் பெருமளவு முடிந்துவிட்டதாம்.

முதல் பாகத்தை 3 டியில் தர முயற்சி செய்தார் ராஜமவுலி. ஆனால் முடியவில்லை. எனவே இரண்டாம் பாகத்தை முழுக்க 3 டியில் வெளியிட முடிவு செய்துள்ளாராம்.

பொங்கலுக்கு அஜீத் படம், கமல் படமெல்லாம் வரப்போவதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த சூழலில் பாகுபலி 2 வரப் போவதை உறுதிப்படுத்தியிருப்பபது கோலிவுட்டை திகைக்க வைத்துள்ளது. காரணம் பாகுபலி முதல் பாகம் வரலாறு காணாத வரவேற்புடன் தமிழில் ஓடிக் கொண்டுள்ளது. இரண்டாம் பாகத்துக்கு ஏக எதிர்ப்பார்ப்பு உள்ளதால், பொங்கலுக்கு வேறு படங்களுக்கு போதிய திரையரங்குகள் கிடைப்பது கடினம் என்ற சூழல் உருவாகியுள்ளது.