கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயில் சாமி சிலையை நடிகை ஜெயமாலா தொட்டதாக கூறியது உண்மையல்ல, நாடகம் என்று ஜெயமாலா மீது கோயில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜோதிடர் பி.உன்னிகிருஷ்ண பணிக்கர், அவரது உதவியாளர் ஏ.என்.ரகுபதி ஆகியோரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
2006-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி சபரிமலையில் தேவ பிரசன்னம் பார்த்த ஜோதிடர் பி. உன்னிகிருஷ்ண பணிக்கர், கோயில் கருவறைக்குள் பெண் ஒருவர் நுழைந்து சுவாமி சிலையை தொட்டுவிட்டதாகக் கூறினார். அந்தப் பெண் ஒரு நடிகை என்றும், நடனம் தெரிந்தவர் என்றும் கூறினார். சபரிமலை கோயிலுக்குள் செல்ல 10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதியில்லை என்பதால், இத்தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது; கோயிலின் புனிதம் கெட்டுவிட்டது எனப் புகார் கூறப்பட்டது.
இந்நிலையில், சபரிமலைக்கு வந்திருந்தபோது சுவாமி சிலையை தொட்டதாக நடிகை ஜெயமாலா, கோயில் செயல் அலுவலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மூவரும் சேர்ந்து கூட்டுச் சதி செய்து, நாடகத்தை நடத்தியதாக போலீஸார் கண்டறிந்தனர்.
இதையடுத்து ஜெயமாலா உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், மத நம்பிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும், கூட்டுச் சதி செய்து தவறான தகவலைப் பரப்பியதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. தங்கள் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி
ஜெயமாலா உள்ளிட்ட மூவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த வழக்கை கேரள உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சதீஷ் சந்திரன் விசாரித்தார்.
அவர் அளித்த தீர்ப்பில், "பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ் ஜெயமாலா, உன்னிகிருஷ்ண பணிக்கர், ரகுபதி ஆகியோர் மீது குற்றவியல் சட்ட நடவடிக்கையை தொடர முடியாது. எனவே அவர்கள் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது; வழக்கும் தள்ளுபடி செய்யப்படுகிறது," என்று குறிப்பிட்டிருந்தார்.