தமிழைக் கற்றுக் கொண்டு பாட வாருங்கள் - வேற்று மொழி பாடகர்களுக்கு வைரமுத்து அட்வைஸ்

Learn Tamil First Vairamuthu Advice To Non Tamil Singer

சென்னை: தமிழில் பாடவரும் வேறுமொழிக்காரர்கள் தமிழைக் கற்றுக் கொண்டு பாடவர வேண்டும் என்று இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசினார்.

கர்நாடக இசைப் பாடகி எஸ்.ஜே.ஜனனி இசையில் மகாகவி பாரதியாரின் வந்தே மாதரம் என்கிற இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த ஆல்பத்தை வைரமுத்து வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பெற்றுக் கொண்டார். விழாவில் வைரமுத்து பேசுகையில், "இத்தனை ஆண்டுகளுக்குப் பின், இத்தனை தலைமுறைகள் கடந்த பின்னும் பின்னும் பாரதி பாடல்களின் தணல் குறையாமல் இருக்கிறது. அதன் தேவை தீரவில்லை. பாரதியின் பாடல்களுக்கு எத்தனையோ பேர் இசையமைத்துள்ளார்கள்.

ஜி.ராமநாதன், சி.எஸ்.ஜெயரமன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ், எல்.வைத்யநாதன் என எத்தனையோ பேர் இசை வழங்கியுள்ளார்கள். தமிழ் பாடல் பாடும் அத்தனை பேரும் பாரதியின் பாடல்களைப் பாடியிருகிறார்கள்.

இவர்கள் அத்தனை பேரையும் கடந்துவிட்டு பாரதி வரிகள் இன்னும் நிற்கின்றன. இங்கே ஜனனி என்கிற இளங்கொழுந்து தன் திறமையால் - தன் அர்பணிப்பால் பாரதியின் வரிகளை மேற்கத்திய இசை கலந்து நவீனப்படுத்தியிருக்கிறார் என்றால் அது மிகையில்லை.

பாரதியின் வரிகள் இளைஞர்களைச் சென்றடையும் வகையில் அவர்களுக்கு பிடித்த இசையின் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார். இதற்காக ஜனனி பாரதிக்கு கடமைப்பட்டிருக்கிறார். பாரதியும் ஜனனிக்குக் கடமைப் பட்டிருக்கிறார்.

இந்த ஜனனி சிறுமியல்ல பாரதி பாடியது போல இது அக்கினிக் குஞ்சு. நெருப்பில் பெரிது சிறிது இல்லை. நெருப்பு என்றால் சுடவே செய்யும் பிரித்தாலும் தங்கத்தின் மூலக்கூறு தங்கமாகவே வரும். நெருப்பின் கடைசி மூலக்கூறும் நெருப்பாகவே இருக்கும். இந்த ஜனனி சிறுமி என்றாலும் அக்கினி குஞ்சாக இருக்கிறாள்.

இந்த இசைப் பேழையில் மேற்கத்திய இசையின் கலப்பு இருக்கிறது. தோசை பீசா ஆனது மாதிரியான மாற்றம் இது. தோசை பீசா இரண்டுமே வட்டமாக இருப்பதுதானே. காலத்திற்கு ஏற்ப வேறு வழியில்லாமல் ஜனனி பீசா செய்துள்ளார். இதற்காகப் பாடிய எஸ்.பி.பி, வரிகளில் புரியாத சொல்லுக்கு என்னிடம் பொருள் கேட்டார். அவர் தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் பேசினாலும் பொருள் புரியாமல் பாடமாட்டார்.

வேற்று மொழிக்காரர்கள் தமிழ் கடந்து வருகிறார்கள். தமிழக் கற்றுக் கொண்டு வந்து பாடட்டும். தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள். எஸ்.ஜானகியின் தாய்மொழி தெலுங்கு, பி.சுசீலாவின் தாய்மொழி தெலுங்கு, ஜேசுதாஸ் தாய்மொழி மலையாளம், பி.பீ.ஸ்ரீநிவாஸின் தாய்மொழி கன்னடம். ஆனால் எல்லாரும் தமிழைக் கற்றுக் கொண்டு பாடினார்கள். யார் வேண்டுமானாலும் தமிழைக் கற்றுக் கொண்டு பாடட்டும் மொழியைச் சிதைக்காமல் போனால் வணக்கம். இல்லையென்றால் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

கர்நாடக இசைக் கலைஞர்கள் திரைப்படத்தில் பாடுவது பாவமல்ல. எம்.எஸ். அம்மா காற்றினிலே வரும் கீதம் பாடவில்லையா? எம்.எஸ்.வசந்தகுமாரி பாடவில்லையா? ஜனனியை 2013ல் திரைப்படத்தில் பாட வைப்பதாக இருக்கிறேன். நல்ல பாட்டாக அவரது குறிக்கோள், கௌரவம் கெடாத வகையில் பாட வாய்ப்பு வரும். தயாரிப்பாளர் தாணுவும் வாய்ப்பு தந்து உதவலாம். நண்பர்களிடம் கூறலாம்," என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில் காஸ்மிக் மியூசிக் முரளி அனைவரையும் வர வேற்றார். பாஜக தலைவர் இல.கணேசன், டி.என்.பி.எஸ்.சி.தலைவர் ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ், கலைபுலி எஸ்.தாணு, தூர்தர்ஷன் துணை இயக்குநர் எஸ்.மேகநாதன் ஆகியோரும் பேசினர். இரா.சங்கர் கணேஷ் நன்றி கூறினார்.

 

புகைப் பழக்கத்தை அடியோடு விட்டொழியுங்கள்! - சூப்பர் ஸ்டார் ரஜினி

Dont Smoke Rajini S Birthday Advise To Fans

சென்னை: என் பிறந்த நாளில் ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது தயவுசெய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டு விடுங்கள், இதை நான் பட்டு அனுபவித்து சொல்கிறேன், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சென்னை ரசிகர்கள் நடத்திய பிறந்த நாள் விழாவில் ரஜினி பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், "ரசிகர்களைப் பார்க்க எனக்கு கூச்சமா, வெட்கமா இருக்குன்னு ஒரு விழாவில் சொன்னேன். ஏன்னா உடம்பு சரியில்லாமல் இருந்தபோது, நிறைய விஷயங்களை, டாக்டர்களின் ஆலோசனைப்படி என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்கள்.

டாக்டர்கள் சொல்லியிருக்காங்க, எனக்கு பிபி ஜாஸ்தியா இருக்கு, என்ன விஷயமாக இருந்தாலும் என் கவனத்துக்கு கொண்டு போகக்கூடாதுன்னு.

நான் மெட்ராசுக்கு வந்த பிறகுதான் நியூஸ்பேப்பர்ஸ், மேகஸின்ஸ் எல்லாமே நான் பார்த்தேன். என் ரசிகர்கள் எனக்காக நடத்திய பிரேயர்ஸ்... நான் நலம்பெற வேண்டும் என்று பிரார்த்தனை பண்றது, நடந்து போறது, ஆயிரம் பேர் மொட்டை போட்டுக்கிட்டது, மண்சோறு சாப்பிட்டது, விரதமிருக்கிறது, கோயில்ல, சர்ச்ல, மசூதில பிரார்த்தனை செய்ததையும் படிச்சி தெரிந்துகொண்டேன்.

ஒருத்தர் சொன்னாங்க, மலைமேல உள்ள கோயிலுக்கு முட்டி போட்டுக்கிட்டே படியேறி பிரார்த்தனை செய்தேன். அதனால இரண்டு மாசம் ஆஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டேன். ஆனா அதுக்காக எங்க அப்பா அம்மா கூட ஏண்டா இப்டி செஞ்சேன்னு கேக்கலன்னு சொன்னாரு.

இதை அவர் என்கிட்டே சொன்னபோது, அவருக்கு நான் நன்றின்னு சொன்னா.. அது எவ்ளோ சின்ன வார்த்தை... அவருக்கு நான் பணம் கொடுக்க முடியுமா... ஏம்பா இப்டி பண்ணேன்னு கேக்க முடியுமா? அவனுக்கு நான் என்ன திருப்பிக் கொடுபேன்... ரொம்ப வெக்கமா இருக்கு. ராதாரவி சொன்னாரு, ஒரு வாரம் விரதம் இருந்ததா... அதுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல... உடம்பெல்லாம் ஒரு மாதிரி பண்ணுது.

ஏன்னா... நான் ரொம்ப கொடுத்தேன்னு சொல்ல முடியாது. ஆனா டெபனட்டா யார்கிட்டயும் வாங்கியும் பழக்கமில்லே. எப்டி சொல்றது... என்னோட நன்றி!

ராணா பண்ணும்போது உடம்பு சரியில்லாம போச்சு . ராணா என்கிற கேரக்டரை ரொம்ப பெரிசா பர்பார்ம் பண்ணனும்னு முயற்சி பண்றப்பதான் எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு.

அது சீரியஸா போனதுல என் தப்பும் இருக்கு. உடனே மருத்துவமனையில் சேர்ந்தால், தேவையில்லாத வதந்திகள் வரும்னு உடனே டிஸ்சார்ஜ் ஆகி வந்துட்டேன். டாக்டர்கள் சொன்னாங்க, ரெண்டு நாள்ஆஸ்பிடல்ல இருந்து புல் செக்கப் பண்ணிக்கிட்டு சரி பண்ணிட்டு போங்கன்னு சொன்னாங்க. ஆனா நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டு வந்தேன். காரணம், ரெண்டு நாள் ஆஸ்பிட்டல்ல இருந்தா தேவையில்லாம வதந்திகள் வரும் என்பதால், வீட்லே இருந்து பண்ணிக்கலாம்னு வந்துட்டேன். அதனால என் உடல்நிலையை நானே கொஞ்சம் ஜாஸ்தி பண்ணிக்கிட்டேன்.

ஏன்னா... நான் கண்டக்டராக இருந்தபோது, நிறைய மது அருந்தியதுண்டு. அப்போது சில கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் இது நடந்தது. வாழ்க்கைல அப்பா அம்மா, கடவுளை விட, மனைவியை விட நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பதுதான் முக்கியம். அப்பதான் வாழ்க்கை நல்லாருக்கும். நான் சில கெட்ட நண்பர்களால குடிப்பழக்கத்துக்கு ஆளானேன். அதன் பிறகு நடிக்க வந்த பிறகு குடி இன்னும் அதிகமாகிடுச்சி. நல்ல சரக்கு, சரக்குன்னு தேடி குடிக்க ஆரம்பிச்சு, வேலை வேலைன்னு பிஸியாகி, தூக்கமில்லாம நெர்வ்ஸ் பிரேக் ஆன விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியும்.

அதன் பிறகு திருமணத்துக்குப் பிறகு, என் அருமை மனைவி லதாவின் அன்பாலும் ஆதரவினாலும் குடிப் பழக்கத்திலிருந்து மெல்ல மீண்டேன். அதுக்காக நான் ஒரேயடியாக விட்டுட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனால் ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மி பண்ணிக்கிட்டேன். மது இல்லாம தூங்க முடியும், இருக்க முடியும்ங்கிற நிலைக்கு கொண்டு வந்துட்டேன். யோகா, உடற்பயிற்சி என பண்ணிக்கிட்டிருந்தாலும், சிகரெட் பழக்கத்தை மட்டும் விட முடியல.

என் உடம்பு இவ்வளவு மோசமானதுக்கு காரணமே அந்த சிகரெட் பழக்கம்தான். நான் அனுபவிச்சி சொல்றேன், ரொம்ப அடிபட்டு சொல்றேன்... அந்த சிகரெட் பழக்கத்தை மட்டும் உடனே விட்டுடுங்க. தயவு செஞ்சி விட்டுடுங்க.

எனக்கு இஸபெல்லா ஆஸ்பிட்டல்ல இருந்தப்ப நுரையீரல் பாதிப்பை தொடர்ந்து கிட்னியில் பிரச்னை ஏற்பட்டது. முதலில் சென்னையிலும், பிறகு சிங்கப்பூரிலும் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது இது தான், தயவுசெய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டு விடுங்கள்.

எனக்கு உடம்பு மோசமா போனதும், ராமச்சந்திரா ஆஸ்பிடலுக்கு கொண்டு போனாங்க. அங்கு டாக்டர்கள் என்னை அருமையா கவனிச்சிக்கிட்டாங்க. டாக்டர் தணிகாசலம் உள்ளிட்டவர்கள் அப்படி பாத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் நடந்ததையெல்லாம் பின்னாலதான் நான் கேள்விப்பட்டேன். அங்க இருந்தப்போ பெரும்பாலும் என்னை மயக்க நிலையில்தான் வச்சிருந்தாங்க. அதுக்கப்புறம் சிங்கப்பூர் போனேன். சிங்கப்பூர் ஆஸ்பிட்டல்ல இருந்தப்போ என்னோட கிட்னில பாதிப்பு ஏற்பட்டுச்சி. உடம்புல உள்பாகங்கள்ல பாதிப்பு ஏற்பட்டா, ஸ்டெராய்ட் குடுத்துதான் சரிபண்ணுவாங்க. ஸ்டெராய்ட் கொடுக்கும்போது, முதலில் சரியானா கூட, ஆஃப்டர் எஃபெக்ட்ஸ் ரொம்ப மோசமா இருக்கும். எனக்கு நிறைய மெடிசன்ஸ் கொடுத்தாங்க. விவிஐபியா இருக்கிறதுல ப்ளஸ்ஸும் இருக்கு மைனஸும் இருக்கு. எனக்கு மெடிசன்ஸ் அதிகமாயிட்டதால, அதனோட எஃபெக்ட்ஸே ஆறேழு மாசத்துக்கு இருந்தது. இதை நான் இதுவரைக்கும் யாருக்கும் சொல்லல.. ஏன்னா என்னை வாழ வச்ச தெய்வங்களான உங்ககிட்ட இதை முதல்முதலா சொல்றேன்.

இந்த ஸ்டீராய்டு மெடிசன்களால உடம்பு சரியான பிறகுகூட, அந்த பவர் போனதும் அப்படியே உடம்பும் மனசும் வீக்காயிடும். இந்த எஃபெக்ட்லருந்து முழுசா மீண்டு, கடந்த மூணு நாலு மாசமாவே 100 சதவீதம் நான் சரியாகிட்டேன்.

அதுக்கு முக்கிய காரணம், எந்த மெடிசனா இருந்தாலும் அதுக்கு உடம்பு உடனடியா ரியாக்ட் பண்ணனும். உடம்பு ரியாக்ட் பண்ணலன்னா, எந்த மெடிசனும் வேலை செய்யாது. என் உடம்பு வேகமா ரியாக்ட் பண்ண விதத்தைப் பார்த்து டாக்டர்களே அதிசயப்பட்டாங்க. அதைப் பார்த்தபிறகுதான் மருந்தின் அளவை படிப்படியா குறைச்சாங்க.

இப்போ முழுமையாக ஆரோக்கியமா இருக்கேன்னு சொன்னா, அதுக்கு உங்க, அன்பு பிரார்த்தனைகள்தான் காரணம்.

இந்த அன்புக்கு என்ன பண்ணப்போறேன்... எப்படி செய்யப் போறேன்னு தெரியல. ஏன்னா எதுவும் என் கையில இல்லே. ஆனால் பொய்யான நம்பிக்கை கொடுக்க நான் தயாரா இல்லே. ஆனா நிச்சயமா சொல்றேன், நீங்க முதல்ல உங்க குடும்பத்தை பாத்துக்கங்க, அப்பா அம்மா குழந்தைகளைக் கவனிங்க. உங்கள் அனைவருக்குமே என் மனமார்ந்த நன்றிய தெரிவிச்சிக்கிறேன்," என்றார்.

 

பஞ்சாபி, தமிழ் முறைப்படி காதலனை மணந்தார் வித்யா பாலன்: சாப்பாடு தென்னிந்தியா தான்

Vidya Balan Ties Knot With Siddharth Roy Kapur

மும்பை: பாலிவுட் நடிகை வித்யா பாலன் தனது காதலரான யூடிவி தலைவர் சித்தார்த் ராய் கபூரை இன்று பஞ்சாபி மற்றும் தமிழ் முறைப்படி மணந்தார்.

பாலிவுட் நடிகை வித்யா பாலன் யூடிவி தலைவர் சித்தார்த் ராய் கபூரை நீண்ட காலமாக காதலித்து வந்தார். இந்நிலையில் அவர்கள் திருமணம் இன்று மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள கிரீன் மைல் பங்களாவில் பிரமாண்டமாக நடந்தது. அவர்களின் திருமணம் பஞ்சாபி மற்றும் தமிழ் முறைப்படி நடந்தது.

திருமணத்திற்கு வந்திருந்தவர்களக்கு விருந்தில் தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. திருமண நிகழ்ச்சியின்போது வித்யா 3 சேலைகள் மாற்றினார். வித்யா கேரளாவில் பிறந்து மும்பையில் வளர்ந்தவர். கடந்த 2005ம் ஆண்டு வெளியான பரினீதா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் படத்தில் வித்யா சில்காக நடித்தார். அந்த படம் அவருக்கு பெயரும் புகழும் வாங்கிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

என் நண்பேன்டா தனுஷ்: நயன்தாரா

Nayan S Nanbenda Dhanush

சென்னை: நடிகை நயன்தாராவின் நல்ல நண்பராக உள்ளார் நடிகர் தனுஷ்.

தனுஷும், நயன்தாராவும் சேர்ந்து யாரடி நீ மோகினி என்ற படத்தில் நடித்தனர். அதில் அவர்களின் ஜோடி நன்றாக இருந்தது என்று கூறப்பட்டது. இந்நிலையில் நயனின் நல்ல நண்பராக தனுஷ் இருப்பது தெரிய வந்துள்ளது.

தேசிய விருது பெற்ற தனுஷ் நயனின் படங்கள் ரிலீஸாகும் போதெல்லாம் அவரை அழைத்து நயனின் நடிப்பு பற்றி பாராட்டுவதுடன், தனது கருத்தையும் தெரிவிப்பாராம். பிறரை பாராட்டவும் ஒரு மனசு வேண்டும் அல்லவா.

தனுஷ் தயாரித்துள்ள எதிர் நீச்சல் படத்தில் அவருடன் சேர்ந்து ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார் நயன்தாரா. நயன் எப்படி இந்த குத்துப் பாட்டுக்கு ஆட ஒப்புக் கொண்டார் என்று பலரும் நினைத்தனர். நண்பன் தனுஷ் கேட்டு முடியாது என்றா சொல்ல முடியும். நட்புக்கு மரியாதை கொடுத்து தனுஷுடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.

காதல் முறிவுக்கு பிறகு நடிக்க வந்த நயன்தாரா படுபிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரூ.1,000 செலுத்தி ஏர்டெல் டிடிஎச்சில் விஸ்வரூபம் பார்க்கலாம்!

Viswaroopam On Dth Rs 1000 Per Connection   

சென்னை: விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் ரிலீசாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே டிடிஎச்சில் காணலாம். இதற்காக ஒரு இணைப்புக்கு ரூ 1000 கட்டணமாக வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.

ஜனவரி 11-ந்தேதி கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் வெளி வருகிறது. இந்தப் படம் தியேட்டர்களில் வெளியிடப்படும் அதே நாள் டி.டி.எச்-லும் ஒளிபரப்பாகும் என்று அறிவிப்பை வெளியிட்டார்.

இதனை தியேட்டர் அதிபர்கள் ஏற்கவில்லை. ஆனால் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் கமல் ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கமல்ஹாசனின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டாடா ஸ்கை, ஏர்டெல், ரிலையன்ஸ், வீடியோகான் உள்பட பிரபலாமன டி.டி.எச் நிறுவனங்கள் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்ப ஆர்வம் காட்டின. இதனால் கடும் போட்டி நிலவியது.

இறுதியாக ஏர்டெல் நிறுவனம் விஸ்வரூபம் டிடிஎச் உரிமையைப் பெற்றுள்ளது. இதனால் வீடுகளில் ஏர்டெல் டி.டி.எச் வைத்திருப்பவர்கள் விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டர்களில் ரிலீசாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே தங்கள் வீடுகளில் உள்ள டி.விக்களில் காண முடியும்.

ஏர்டெல் டி.டி.எச். சேவையில் விஸ்வரூபம் சினிமா பார்ப்பதற்காக சந்தாதாரர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே விஸ்வரூபம் படம் ஒளிபரப்பு இணைப்பு கிடைக்கும்.

இதற்கிடையே வெளிநாடுகளிலும் விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். மூலம் ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மலேசியாவின் அஸ்ட்ரோ, சிங்கப்பூரின் சிஸ்டெல் போன்ற வெளிநாட்டு டி.டி.எச் நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் இன்னும் சமரசமாகவில்லை. அவர்கள் விஸ்வரூபம் படத்தைத் திரையிடமாட்டோம் என்று கூறிவருகின்றனர்.

 

பட வாய்ப்பு இல்லை… பியூட்டி பார்லர் தொழிலுக்கு திரும்பிய சந்தியா

Kadhal Sandhya S New Business

சென்னை: காதல் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சந்தியா சொல்லிக் கொள்ளும்படியாக வாய்ப்புகள் அமையாததால் கேரளாவில் புது பிசினஸ் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு முக்கிய நகரங்களில் பியூட்டி பார்லர் தொடங்கியுள்ளாராம் சந்தியா.

காதல் பட ஹிட் சந்தியாவிற்கு அடுத்தடுத்த படவாய்ப்புகளை அமைத்துக் கொடுத்தது. டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா, மகேஷ் சரண்யா மற்றும் பலர், தூண்டில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தவிர மலையாளம்,கன்னடம், தெலுங்கு,படங்களிலும் நடித்துள்ளார்.

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்துக்கு பிறகு தமிழில் சந்தியாவிற்கு வாய்ப்புகள் வரவில்லை. மலையாளப் படங்களில் மட்டும் சிறு வேடங்கள் வரவே சென்னையில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு கேரளாவுக்கு சென்று குடியேறினார் சந்தியா.

இந்த நிலையில் அவத் தனது வருமானத்துக்காக கேரளாவின் முக்கிய நகரங்களில் அழகு நிலையங்களை தொடங்கியுள்ளாராம். நடிகர்-நடிகைகளுக்கு என பிரத்தியேகமான அழகு நிலையங்களை திறந்துள்ள சந்தியா அதை பராமரிக்க தனது தாயாரையே நியமித்துள்ளார். சந்தியாவின் தாயார் ஏற்கனவே பியூட்டி பார்லர் தொழில் நடத்தி வந்தவர் என்பதால் அவரால் எளிதாக இந்த தொழிலை நடத்த முடிகிறது. நல்ல வருமானமும் கிடைக்கிறதாம்.

இயற்கை மூலிகைகளைக் கொண்ட அழகு சாதன பொருட்களை பயன் படுத்துவதால் சந்தியாவின் பியூட்டி பார்லருக்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது என்கின்றனர். எப்படியோ பட வாய்ப்பு குறைந்தாலும் சொந்த தொழில் கைவிடவில்லை சந்தியாவிற்கு என்கின்றனர் கோலிவுட் பட உலகினர்.

 

அசினுக்காக பெங்களூரில் பங்களா வாங்கிப் போட்ட ரசிகர்

Die Hard Fan Gifts Asin Bungalow

மும்பை: நடிகை அசினின் தீவிர ரசிகர் ஒருவர் பெங்களூரில் ஒரு பங்களாவை வாங்கியுள்ளார். மேலும் அந்த நபர் அசின் மீது பைத்தியமாக இருக்கிறார்.

தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் சென்ற நடிகை அசினுக்கு ஒரு தீவிர ரசிகர் உள்ளார். அந்த நபர் அசின் மீது பைத்தியமாகவே உள்ளார். மேலும் அசினையே மணக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காதல் பைத்தியம் முற்றவே அந்த நபர் பெங்களூரில் அசினுக்காக ஒரு பங்களாவை வாங்கிப் போட்டுள்ளார். மேலும் அசின் எப்பொழுது பெங்களூர் வந்தாலும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இந்த தீவிர ரசிகர் தவறாமல் ஆஜராகிவிடுகிறார். தனது பிரிய நடிகைக்கு அந்த நபர் பூக்கள், சாக்லேட் மற்றும் பேஷன் ஐட்டங்களை அனுப்பி வைத்துள்ளார்.

அவர் அசின் மேல் பைத்தியமாக இருக்கலாம். ஆனால் அசினோ பாலிவுட் மீதல்லவா பைத்தியமாக இருக்கிறார். எப்படியாவது அங்கு பெரிய ஆளாகிவிட வேண்டும் என்று போராடி வரும் அவர் இந்த ரசிகரின் அன்புக்கு அடங்குவாரா என்ன?

இதற்கு முன்பு பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நாதியாத்வாலாவின் மகன் சுபான் அசினுக்கு லாலிபப், சாக்லேட், கரடி பொம்மை மற்றும் ரோஜாப் பூக்கள் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

துபாயில் ஆட்டம் போடத் தயாராகிறார் வீணா!

Veena Malik Set Shake Her Leg Eithe

புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு பாலிவுட் நடிகைகளும், நடிகர்களும் தயாராகி வருகிறார்கள். அந்த வரிசையில் பாகிஸ்தான் கவர்ச்சிப் புயல் வீணா மாலிக்கும் பெரும் டான்ஸுக்குத் தயாராகி வருகிறாராம்.

கவர்ச்சி நடிகைகளுக்குத்தான் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது செம கிராக்கி இருக்கும். அவர்களை ஆடக் கூப்பிடுவார்கள், கலை நிகழ்ச்சிகளுக்குக் கூப்பிடுவார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டும் கவர்ச்சி நடிகைகளை ஏற்கனவே பலரும் புக் பண்ண ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் வீணா மாலிக்கும் புத்தாண்டுக்கு எங்கோ புக்காகி விட்டதாக தெரிகிறது.

ஆனால் அவர் எங்கு டான்ஸ் ஆடப் போகிறார்,யாருடன் ஆடப் போகிறார், யாருக்காக ஆடப் போகிறார் என்ற விவரம் தெரியவில்லை. அனேகமாக மும்பை அல்லது துபாயில் அவரது கச்சேரி இருக்கலாம் என்று தெரிகிறது. அவரை யார் புக் செய்துள்ளனர் என்பது குறித்தும் வீணா சொல்ல மறுத்து வருகிறார்.

தனது புத்தாண்டு புரோகிராம் கூறித்து வீணா கூறுகையில், சூறாவளி போன்ற ஆட்டத்துக்கு நான் தயாராகி வருகிறேன். மும்பை அல்லது துபாயில் இது இருக்கலாம். புத்தாண்டை எனது ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட ஆர்வமாக உள்ளேன். அவர்கள்தான் எனது இன்றைய நிலைக்குக் காரணம். அவர்களுக்காக நான் எதையும் செய்வேன். இந்தப் புத்தாண்டை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்றார் உணர்ச்சிவசப்பட்டு.

 

கமல் ரசிகர்கள் என்னை மிரட்டுகிறார்கள்... தயாரிப்பாளர் கே.ராஜன் புகார்

K Rajan Complains Against Kamal Fans

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் நேரடியாக வெளியிடுவதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கமல்ஹாசன் ரசிகர்கள் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். மனித வெடிகுண்டாக வந்து கொல்வோம் என்று கூறுகின்றனர் என்று தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே.ராஜன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து அவர் புகார் கொடுத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்சில் வெளியிட நான் எதிர்த்து வருகிறேன். இதற்காக கமல்ஹாசன் ரசிகர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.

தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலிருந்தும் இடைவிடாமல் என்னுடைய செல்போனுக்கு அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. மனித வெடிகுண்டாக மாறி வந்து கொல்வோம் என்றும் கமல் ரசிகர்கள் என்னை மிரட்டுகின்றனர்.

என்னை மிரட்டும் ரசிகர்கள் மீதும், அவர்களை தூண்டிய கமல்ஹாசன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராஜன். மேலும் தனக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரத்தையும் அவர் போலீஸில் கொடுத்துள்ளாராம்.


 

பாத்ரூமில் உட்கார்ந்து மணிக்கணக்கில் அழுத ஷாருக்கான்

What Made Shahrukh Khan Cry Hours

மும்பை: பாலிவுட் பாதுஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான பாத்ரூமில் உட்கார்ந்து மணிக்கணக்கில் அழுதுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான நடித்த ரா ஒன் இந்தி படம் ஓடவில்லை. அவர் அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தார். படத்தைப் பார்த்தவர்கள் ஷாருக்கானால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் மொக்கை போட முடிகிறது என்றனர். ஷாருக்கானும் அவரது தோழியும், நடிகையுமான ஜூஹி சாவ்லாவும் தான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்கள். ஐபிஎல் போட்டிகளின் முதல் 4 சீசனில் கொல்கத்தா அணி மோசமாக ஆடியது. இதனால் பலரும் ஷாருக்கை கண்டமேனிக்கு பேசினர். இந்நிலையில் ஐபிஎல் 5வது சீசனில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது.

இந்நிலையில் இது குறித்து ஷாருக்கான் கூறுகையில்,

கடந்த 4 ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்ற போதிலும், ரா ஒன் படத்தைப் பற்றியும் பிறர் மோசமாகப் பேசினர். அதைக் கேட்டு என் குழந்தைகளும், நானும் மனமுடைந்தோம். இப்படி நம்மைச் சுற்றியுள்ளவர்கள் தப்பாக பேசுகிறார்களே என்று நினைத்து நான் பாத்ரூமில் உட்கார்ந்து மணிக்கணக்கில் அழுதுள்ளேன். கொல்கத்தா அணி தொடர்ந்து 9 போட்டிகளில் தோற்றபோது கூட நான் அழவில்லை. ஆனால் பிறரின் மோசமான பேச்சைக் கேட்டுத் தான் அழுதுள்ளேன். எனக்கு விளையாட்டு மிகவும் பிடிக்கும். 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் விளையாடி இருக்கிறேன். என்னைப் பற்றி கமெண்ட் அடித்தவர்களை விட எனக்கு நன்றாக கிரிக்கெட் தெரியும் என்றார்.

 

நேரமும் காலமும் நல்லாருந்தாதான் அரசியலில் ஜெயிக்க முடியும் - ரஜினி

Rajini Speaks About His Politics Future

சென்னை: அரசியலுக்கு வருவேன் என்று பொய்யான நம்பிக்கை தர விரும்பவில்லை. ஆனால் நேரமும் காலமும் நல்லாருந்தாதான் அரசியலில் ஜெயிக்க முடியும் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சென்னை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 63வது பிறந்தநாள் விழா சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவில் ரஜினிகாந்த்தை வாழ்த்தி தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர், லாரன்ஸ், கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.வி.ரம ணன், பாண்டு, நமீதா, உட்பட பலர் பேசினர்.

பத்து நிமிடம் மட்டுமே ரஜினி இந்த விழாவில் இருப்பார் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் வந்திருந்தவர்கள் பேசும் முன்பே வந்துவிட்ட ரஜினி அனைவரும் பேசி முடிக்கும் வரை, கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வரை ரசித்து கேட்டார்.

விழாவில் 35 நிமிடங்கள் ரஜினி பேசினார். அவர் அதிகநேரம் பேசிய அரசியல் மேடை இதுவே.

விழாவில் ரஜினி பேசியதாவது:

ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாள் அன்று சென்னையில் இருக்க மாட்டேன். இதற்கு முக்கிய காரணம், 22 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு துயரமான சம்பவம்தான்.

அப்போது நடந்த என் பிறந்தநாள் விழாவுக்கு வெளியூரிலிருந்து வந்த 3 பேர் ஊருக்கு திரும்பிச் சென்றபோது, விபத்தில் சிக்கி இறந்தனர். அவர்களின் பெற்றோர் என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டனர். அதை இங்கே சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதற்குப் பிறகுதான் இனி சென்னையில் இருக்க வேண்டாம், பிறந்தநாளன்று என்ற முடிவுக்கு வந்தேன்.

வெளியூருக்கு…

என் பிறந்தநாளில் வெளியூருக்கு சென்றுவிடுவேன். அங்கு தனியாக அமர்ந்து, இதுவரை நான் என்ன செய்தேன்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன்? இனி என்ன செய்யப் போகிறேன் என்று நினைத்துப் பார்ப்பேன். என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. அது ஆண்டவன் கையில் இருக்கிறது.

மிகப் பெரிய பிளான் போட்டால், அது நடக்காது. மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று ஒருவன் நினைத்தால், அப்படியே நடந்து விடாது. 500 ரூபாய் சம்பாதிக்கலாம். அல்லது 2000 சம்பாதிக்கலாம். ஆனால் 1000 சம்பாதிக்க முடியாது. இதிகாசம், புராணங்களில் கூட நினைத்தது அப்படியே நடந்து விடாது.

உயிர் நண்பன் மரணம்…

நேத்து என் பிறந்த நாள் அன்று நான் உங்களைச் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. 12.12.12 என்பதை அவாய்ட் பண்ணக்கூடாது, அது நல்லாருக்காது. அதுவும் நான் உடம்பு சரியில்லாம இருந்து வந்த பிறகு ரசிகர்கள்லாம் பார்க்க ஆவலா இருக்காங்க. அவர்களை சந்திக்காம இருந்தா நல்லாருக்காதுன்னு சொன்னாங்க. சரி இப்ப சந்திக்கலாம்னு நினைச்சிக்கிட்டிருந்தபோது, என்னுடைய அருமையான நண்பன், உயிர் நண்பன், எப்படி சொல்றதுன்னு தெரியல. அவனை வெளிய நெறய பேருக்கு தெரியாது. ரொம்ப சிலருக்குத்தான் தெரியும். அந்த நண்பன், எனக்கு அனுமான் மாதிரி இருந்த காந்தி… மாரடைப்பால் 10-ம் தேதி இறந்துபோனான். 11-ம் தேதி அடக்கம் பண்ணிட்டு வந்தேன். அந்த சோகத்தை மைன்ட்ல வச்சிருந்து வருத்தத்தோட இருந்தேன்.

என் அப்பா இறந்திருக்கார், அண்ணா இறந்திருக்கார், அம்மா இறந்திருக்காங்க… ஆனா அதைவிட எனக்கு அதிக வேதனையைத் தந்தது காந்தியின் மரணம்.

அப்பா இறந்த போது ரொம்ப வயசாகியிருந்தார். அண்ணன் இறந்ததுக்கு காரணமிருக்கு. அம்மா இறந்தபோது நான் சின்னப் பையன். இன்னும் சில நண்பர்களும் இறந்திருக்காங்க.

காந்தியின் இறந்து போனப்ப ரொம்ப வருத்தப்பட்டேன். ஏன்னா… சில வியாதிகள் உடம்பிலிருக்கும்போது, அதை வெளிய யாரும் சொல்றதில்லை. வெளிய சொன்னா தொந்தரவா இருக்கும்னு நினைச்சி உள்ளயே வச்சிக்கிட்டு காந்தி அதை யார்கிட்டயும் சொல்லல. திடீர்னு சில தினங்களுக்கு முன் காந்தி மருத்துவமனையில சேர்த்திருக்கிறதா சொன்னாங்க. பத்தாம்தேதி கேட்டப்ப இப்போ பரவால்லன்னாங்க. ஆனா அன்னிக்கு நைட் இறந்து போயிட்டதா செய்தி வந்தது.

ஒருவேளை அங்கே உடனே போய் அவனைப் பார்த்து, வேற ஆஸ்பிடலுக்கு ஷிப்ட் பண்ணியிருந்தா காந்தி பொழச்சிருப்பானோ என்ற உறுத்தல் எனக்கு இருந்துகிட்டே இருந்தது.

அந்த பெய்ன்ல நான் நேத்து முழுக்க தூங்கவே இல்லை. அந்த சோகத்தை மறக்க முடியாம இருந்தேன். ரசிகர்கள் எத்தனை மணிக்கு வருவாங்கன்னு கேட்டேன். எட்டு ஒன்பது மணிக்கு வருவாங்கன்னு சொன்னாங்க.

என் வேதனையை மறக்கடித்த ரசிகர்கள்…

ஆனா காலைல 6 மணிக்கே முன்னூறு நானூறு பேர் வந்திட்டிருந்தாங்க. அதுக்கப்புறம் குளிச்சி பூஜை முடிச்சி வெளிய வந்து உங்களையெல்லாம் பாத்தேன். அப்போ என் மனம் அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவில்லை.

உங்களையெல்லாம் பாத்தாதான் அந்த வலி தீரும்னு ஆண்டவன் முடிவு செஞ்சிருக்கான். அது ஆயிரம் கோடி கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி.. உங்களைப் பார்த்ததும் கிடைச்சது. அந்த காந்தி என்ற நண்பனின் மரணம் தந்த வலியை உங்களை பார்க்க வைத்து தீர்க்க வச்சது நிச்சயம் ஆண்டவன் செயல்தான்.

கூட்டம் சேர்க்க முயன்றதில்லை…

அதுக்கடுத்த நாள் வெளியில் போகலாம்னு நினைச்சேன். ஆனால் அன்னிக்கு இதுபோல நிகழ்ச்சி இருக்கு, ரசிகர்கள்லாம் உங்களைப் பார்க்க ஆர்வமா காத்துக்கிட்டிருக்காங்கன்னு சொன்னாங்க. அதனால இங்க வந்திருக்கேன்.

நான் பொதுவா எப்பவுமே கூட்டம் சேர்க்க முயற்சி பண்ணதில்லை. ஏன்னா அதுக்கு எனக்கு அவசியமே இல்லை. கூட்டம் சேர்த்தா மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்கும். என்னால யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாதுன்னுதான் நான் கூட்டம் சேர்ப்பதில்லை.

அதனாலதான் 12-ம் தேதி சென்னையிலேயே இருக்கணும்னு பத்து நாளைக்கு முன்னயே முடிவு பண்ணிட்டாலும் அதை பதினொண்ணாம் தேதி ராத்திரிதான் எல்லோருக்கும் சொன்னேன்.

நான் முன்கூட்டியே சொன்னா நிறைய பேரு வெளியூர்கள்லருந்து பஸ், லாரி, வேன்னு கிளம்பி வருவாங்க. அப்படி வந்த பிறகு பாதுகாப்பா பத்திரமா திரும்பிப் போகணுமேன்னுதான், 11-ம் தேதி சொன்னேன்.

மற்றவங்களுக்கு தொந்தரவு கூடாது… ரசிகர்கள் பாதுகாப்பா இருக்கணும் என்பதால்தான் நான் முன்கூட்டி இதைச் சொல்லல.

என் ரசிகர்கள் வெறியனுங்க… 100 பேர் ஆயிரம் பேருக்கு சமம்!

யாருக்கும் சொல்லலியே… கூட்டம் வரலன்னா என்ன பண்றது, வெளிய மட்டமா பேசுவாங்களேன்னு சொன்னாங்க. பரவால்ல… நூறு பேர் இருந்தா கூட போதும். என் ரசிகர்கள் நூறு பேர் ஆயிரம் பேருக்கு சமம்… அவங்க பிரம்ம ராட்சசர்கள்.. வெறியனுங்க…

அரசியல்…

இங்க வந்திருப்பவர்கள் அரசியல் பற்றி பேசினார்கள். அரசியல் கடல் மாதிரி. அதுபற்றி நான் பேச விரும்பவில்லை. இங்கு அ.தி.மு.க கூட்டணியில் உள்ள சரத்குமார், தி.மு.கவில் உள்ள சந்திரசேகர் எல்லாம் வந்திருக்கிறார்கள். போயஸ் கார்டனும் வந்திருக்கிறது. கோபாலபுரமும் இங்கதானிருக்கு.

வாகை சந்திரசேகர் டாக்டர் கலைஞரிடம் போய் ஐயா நான் ரஜினி விழாவுக்கு போகணும்னு சொல்லி கேட்டிருந்தா போய் வாங்கன்னு அனுப்பியிருப்பார். அதே போல ஜெயலலிதாகிட்ட சரத்குமாரும் ராதாரவியும் கேட்டிருந்தாலும் அனுப்பியிருப்பார். காரணம், நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். நான் தமிழ் மக்களைச் சேர்ந்தவன். தமிழ் மக்கள்தான் என்னை வாழ வைத்த தெய்வங்கள். அவர்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும்.

கோழையாக மட்டும் சாகமாட்டேன்…

1996ல் நடந்த அரசியல் நிகழ்வுகள் பற்றி எல்லாருக்கும் தெரியும். அதற்குப் பிறகு என் பெயரையோ, போட்டோவையோ ரசிகர்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொன்னேன்.

அப்போது இந்தியாவிலுள்ள மிகப் பெரிய அரசியல் தலைவர்கள், அவர்கள் பெயரைச் சொல்ல விரும்பவில்லை, அவர்கள் எல்லாரும், ‘உங்க ஆதரவு யாருக்கு? நீங்க பிரசாரத்துக்கு கூட வர வேணாம். ஆதரவை மட்டும் தெரிவிச்சா போதும்’ என்று கேட்டுக்கொண்டார்கள். நான் எந்த பதிலும் சொல்லவில்லை.

உடனே, நீங்கள் பிரச்சாரத்துக்குக் கூட வரவேண்டாம். ஆனால் இப்போது நீங்கள் உங்கள் நிலையை தெரிவிக்கவில்லை என்றால், உங்களை கோழையாக நினைத்து விடுவார்கள் என்றார்கள். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். பிச்சை எடுத்தாலும் எடுப்பேன். கோழையாக வாழ விரும்ப மாட்டேன்.

அதன் பிறகு ஆட்சியிலிருந்தவர்கள் நல்லது செய்தார்களா, கெட்டது செய்தார்களா என்றெல்லாம் பார்க்காமல், நான் முதலில் ஆதரித்து விட்டேன் என்பதற்காக, 5 வருடங்கள் அவர்களை தொடர்ந்து ஆதரித்தேன். கூட்டணி தர்மத்தை மதித்தேன். அதன் பிறகு நான் யாரையும் ஆதரிக்கவில்லை.

என் அருமையான நண்பர் கலைஞர் – அவரை அருமை நண்பர் என்று கூப்பிட எனக்கு என்ன தகுதி இருக்கிறதென்று தெரியவில்லை. ஆனால் அவர் என்னை நண்பர் என்று அழைப்பதால், நானும் அப்படியே குறிப்பிடுகிறேன்- நான் எப்போது சந்தித்தாலும் அரசியல் பேசமாட்டார். நானாக பேசினாலும் கூட, இல்லை தம்பி வேண்டாம் என்று மறுத்துவிடுவார். அதன் பிறகு அவரிடம் நான் அரசியல் பேசவே இல்லை.

அதன் பிறகு ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது கூட நம்ம படம் தொடர்பாக, ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியிருந்தது. அவர்களை கீழே தள்ள வேண்டும் என்று எதிர்க்கவில்லை. நாம் கோழைகள் அல்ல என்பதைக் காட்ட. அவர்கள் சொன்ன விஷயம் சரி. ஆனால் சொன்ன விதம் தவறு. அதை எதிர்க்கவே களமிறங்கினேன். அவர்கள் ஒழுங்கா, கரெக்டா, நியாயமா சொல்லலேன்னுதான் எதிர்த்தேன். அன்றைக்கே நான் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன். படங்களில் அன்று விட்ட சிகரெட்டை இன்றுவரை தொடவில்லை. வீம்புக்காக அதை படங்களில் செய்திருக்கலாம். ஆனால் சொன்ன விஷயம் நல்லது. அதனால் அதை மதித்துவிட்டுவிட்டேன்.

பொய்யான வாக்குறுதி தரமாட்டேன்…

அரசியல் சாதாரண விஷயம் அல்ல. ரொம்ப ரொம்ப கஷ்டம். யாரையும் சந்தோஷப்படுத்துவதற்காக, பொய்யான வாக்குறுதியை அளிக்க நான் விரும்பவில்லை.

மாநில அரசியல் கட்சி தலைவர்கள் படும் கஷ்டங்களை அருகிலிருந்து பார்க்கிறேன். எந்த அரசியல் கட்சி தலைவரும் சந்தோஷமா.. நிம்மதியா இல்லீங்க.

அரசியல் தலைவர்கள் நல்லவர்கள்தான்…

அரசியல் தலைவர்கள் யாரும் ஜனங்களுக்கு கெட்டது செய்ய வேண்டும் என்று மனசார ஆசைப்படுவதில்லை. நல்லது செய்யத்தான் விரும்பி வருகிறார்கள். ஆனால் அவர்களால் செய்ய முடியாது. ‘சிஸ்டம்’ அப்படி இருக்கு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல. எல்லா மாநிலங்களிலும் இதுதான் நடக்கிறது.

தயவு செய்து அரசியல் தலைவர்களைக் குற்றம் சொல்லாதீர்கள். ஒரு கட்சியின் பலமே, அஸ்திவாரமே அதன் தொண்டர்கள்தான். தொண்டர்கள் சரியாக இருக்க வேண்டும். தங்கள் தலைவர்கள் மனநிம்மதியோடு இருந்து, நல்லது செய்ய பாடுபட வேண்டும்.

நேரம் காலம் கனிஞ்சா…

ஒவ்வொரு மாநிலத்திலும், நாட்டிலும் யார் தலைவராக வரவேண்டும் என்பதை நிர்ணயிக்க ஒரு சக்தி இருக்கிறது. நேரம், சூழல் நன்றாக அமைந்தால்தான் அரசியலில் எல்லாம் நடக்கும்.

நேரமும் சூழலும் சந்தர்ப்பங்களும் சரியாக அமைந்தால்தான் அரசியலில் எல்லாம் நடக்கும். ஒருத்தர் வந்து தன்னுடைய அருமை பெருமைகளாலோ, பேச்சாலோ, உழைப்பாலோ ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது நடக்காது. நேரம்தான் அரசியல் மிக முக்கியமான விஷயம். இல்லாவிட்டால், காமராஜர் மாதிரி ஒரு தலைவர் தோற்றிருப்பாரா? யாராவது நினைச்சிப் பாத்திருப்பாங்களா?

நேரம்தான் காலம்தான் அரசியல் வெற்றியைத் தீர்மானிக்கிறது,” என்றார் சூப்பர் ஸ்டார்.

 

நயன்தாராவின் வெள்ளி விழா நாயகன் உதயநிதி ஸ்டாலின்?

சென்னை: நயன்தாராவின் வெள்ளி விழா ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் ஆகியுள்ளார்.

நயன்தாரா கடந்த 2003ம் ஆண்டு ஜெயராமின் மலையாள படம் மூலம் நடிகையானார். 2005ல் அவர் சரத்குமாரின் ஐயா மூலம் கோலிவுட் வந்தார். அடுத்த ஆண்டே அதாவது 2006ல் வெங்கடேஷின் படம் மூலம் டோலிவுட் போனார். கடந்த 2010ம் ஆண்டு கன்னட சூபப்ர் ஸ்டார் உபேந்திராவின் சூப்பர் படம் மூலம் சாண்டல்வுட்டும் போனார்.

இதுவரை அவர் ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன் லால், வெங்கடேஷ், நாகர்ஜுனா, பாலகிருஷ்ணா, உபேந்திரா, அஜீத் குமார், விஜய், சூர்யா, ஜூனியர் என்டிஆர், சரத் குமார், ஜெயராம், சிம்பு, ஜீவா, தனுஷ், விஷால், ஆர்யா, ஜெய், பிரபாஸ், ரவி தேஜா, கோபி சந்த், ராணா டக்குபாட்டி, திலீப் ஆகிய 24 ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் அவர் நடித்தால் நயனின் வெள்ளி விழா நாயகன் உதயநிதி ஸ்டாலின் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார்கள், மூத்த நடிகர்கள், நடுத்தர வயது நடிகர்கள், இளம் நடிகர்கள், வளர்ந்து வரும் நடிகர்கள் என்று பல தரப்பட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார் நயன்.

 

'பாட்ஷாவும் நானும்' புத்தகத்தில் பாபாவை மறந்த சுரேஷ் கிருஷ்ணா!

Director Suresh Krishna Forgets Bab   

தமிழ் சினிமாவில் என்றைக்குமே தன் தோல்விப் படங்களை தவறிப் போய்க்கூட குறிப்பிடுவதில்லை இயக்குநர்கள் அல்லது நடிகர்கள்.

இவர்கள் வரிசையில் சேர்ந்திருப்பவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. பெரிய இயக்குநர் என்று பெயரெடுத்தும், வெற்றி - தோல்வியை மறைக்க முயலாத ரஜினியுடன் பழகியும் கூட, ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சங்கடத்தை உருவாக்கியிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா தனது பாட்ஷாவும் நானும் புத்தகம் மூலம்.

ரஜினியை வைத்து தான் இயக்கிய ப்ளாக்பஸ்டர் படமான பாட்ஷாவின் பெயரை புத்தகத்தின் தலைப்புக்குப் பயன்படுத்தியுள்ள சுரேஷ் கிருஷ்ணா, அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் தான் இயக்கிய மற்றொரு முக்கிய படமான பாபா பற்றி குறிப்பிடவே இல்லை.

அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் இயக்குநர் என்றுதான் அதில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளப் போவதாக மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியை வைத்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய மற்றொரு முக்கிய படம் பாபா. அந்தப் படம் அன்றைய காலகட்டத்தில் மிகப் பரபரப்பாக பேசப்பட்டது. இன்றும் ரஜினி ரசிகர்கள் தங்களை அடையாளம் காட்ட பாபா முத்திரையைத்தான் காட்டுகிறார்கள். மூன்று வயது குழந்தையும்கூட ரஜினி என்றால் பாபா முத்திரைதான் காட்டுகிறது.

அந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமே என இன்றைக்கு தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் கூறி வருகின்றனர்.

ஆனால் தனது திரையுலக அனுபவப் புத்தகத்திலோ அந்த பாபாவைப் பற்றி பேசவே அதன் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயக்கம் காட்டியுள்ளதை, ரசிகர்கள் கவனிக்கத் தவறவில்லை.

ரஜினி ரசிகர்களை மட்டுமே குறிவைத்து வெளியாகியுள்ள இந்தப் புத்தகத்தில் இந்தக் குறைபாடு வரலாமா?