பெங்களூர்: பெங்களூரில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலை மக்களுக்கு தரிசனம் தந்தார் ரஜினி.
தன்னைப் பார்க்க வந்தவர்களை வணங்கிய ரஜினி, வீட்டின் பால்கனியில் நின்றபடி மக்களை நோக்கி பறக்கும் முத்தம் தந்தார்.
பெங்களூரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ளது ரஜினியின் வீடு. இரு தினங்களுக்கு முன் இந்த வீட்டுக்கு வந்துவிட்டார் ரஜினி. இன்றுதான் அவர் பெங்களூரில் இருக்கும் தகவல் பரவியது, உடனே அதிகாலையிலேயே அவரைச் சந்திக்க ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் வீட்டுக்கு முன் திரண்டனர்.
உடனே வெளியில் வந்த ரஜினி, பால்கனியிலிருந்து அவர்களைப் பார்த்து வணக்கம் சொன்னார். ரசிகர்களைப் பார்த்து கையசைத்தவர், தலைவா தலைவா என்று வந்த கோஷத்தைப் பார்த்து ஒரு பறக்கம் முத்தம் அனுப்ப, ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.
பின்னர் யாரும் சத்தம் போடாமல், அமைதியாக, பத்திரமாகச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
கீழே இறங்கி வாசலுக்கு வந்த ரஜினியிடம் மீடியாக்காரர்கள் பேட்டி கேட்க, 'அதெல்லாம் வேண்டாமே. ச்சும்மா மக்களப் பார்க்க வந்தேன். பேட்டி வேண்டாம்,' என்றார். ரஜினியுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் உடனிருந்தனர்.