கொம்பனைத் தொடர்ந்து விஷாலை இயக்கும் முத்தையா

சென்னை: சசிக்குமாரை வைத்து குட்டிப்புலியை இயக்கிய முத்தையா, முதல் படத்தில் சறுக்கினாலும் சில வருடங்கள் கழித்து தனது அடுத்த படத்தில் நடிகர் கார்த்தியை வைத்து கொம்பன் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தார்.

கொம்பன் படத்தை இயக்கியதன் மூலம் முதல் படத்தில் இழந்த வெற்றியையும் சேர்த்து இந்தப் படத்தில் மீட்டெடுத்தார்.

Komban Fame Muthaiah’s Next  Joined With Vishal

கிராமத்துப் பின்னணியில் கதைக்களம் அமைத்து ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் முத்தையா தனது அடுத்தப் படத்தில் நடிகர் விஷாலை இயக்க விருக்கிறார். கொம்பனின் வெற்றியால் கவரப்பட்ட நடிகர் விஷால், முத்தையாவிடம் கதை கேட்டிருக்கிறார். முத்தையா சொன்ன ஒருவரிக் கதை விஷாலைக் கவர உடனடியாக கதையை தயார் செய்யுங்கள் நான் நடிக்கிறேன் என்று சொல்லி விட்டார்.

தற்போது முழுக் கதையையும் இயக்குனர் முத்தையா எழுதி விட்டார். பாயும் புலி படத்தின் இறுதிக் கட்ட வேலைகளில் பரபரப்பாக இருக்கும் விஷால், பாயும் புலி முடிந்தவுடன் இயக்குனர் லிங்குசாமி மற்றும் பாண்டிராஜ் ஆகியோரின் படங்களை முடித்துவிட்டு இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். கதை கிராமத்துக் கதையா இல்லை நகரம் சார்ந்த கதையா என்பது தெரியவில்லை.

 

துவார் சந்திரசேகரின் இரு புதிய படங்கள்... புதுமுக இயக்குநர்கள் இயக்குகிறார்கள்!

எப் சி எஸ் கிரியேசன்ஸ்-துவார் சந்திர சேகர் தனது ஐந்தாவது படமான ‘தொட்டால் தொடரும்' படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களைத் தயாரிக்கவிருக்கிறார்.

வீர சேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பாக்கணும் போல இருக்கு, இருவர் உள்ளம் போன்ற படங்களைத் தந்த எப் சி எஸ் கிரியேசன்ஸ்-துவார் சந்திர சேகர் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் தொட்டால் தொடரும்.

Thuvar Chandrasekar launches two more new projects

தனது தொட்டால் தொடரும் படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது லாபமோ நஷ்டமோ தொடர்ந்து பத்து படங்கள் தயாரிப்பேன். திறமையானவர்களை அறிமுகப்படுத்துவேன் என்று அறிவித்திருந்தார். அப்படி அறிவிப்பு வெளியிட்ட முதல் படம் சறுக்கினாலும், தன் வாக்குறுதியை மறக்காமல் இப்போது இரண்டு புதியவர்களை அறிமுகப்படுத்துகிறார்.

எட்டுத்திக்கும் மதயானை, வம்சம் ஆகிய படங்களில் நடித்தவரும், அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளின் இயக்குனருமான டி. ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு படம் செப்டெம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஊட்டி மற்றும் கோவையில் தொடங்குகிறது. யு கே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். எல் வி கணேஷ் இசையமைக்கிறார். அதோடு மிக முக்கியமான நடிகர் ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்துகொண்டிருக்கிறது.

அடுத்து துவார் சந்திர சேகர் தனது மகன் கோவின் (Govin) நடிக்க, பசங்க மாதிரியான குழந்தைகள் படம் ஒன்றையும் தயாரிக்கிறார். தமிழ் திரையுலகில் தனது மகனையும் அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்வதாகக் குறிப்பிட்ட தயாரிப்பாளர் சந்திர சேகர் இப்படமும் என் வாழ்வில் பெருமை கொள்ளக்கூடிய படமாக அமையும். ஏனெனில் இது குழந்தைகளின் முக்கிய பிரச்சனைகளை பேசக்கூடிய கதை எனக் குறிப்பிட்டார். மற்ற விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றார்.

 

இனி வருஷத்துக்கு ஒரு மாஸ், ஒரு கிளாஸ்: இது சூர்யா கணக்கு

சென்னை: ஒரு ஆண்டில் இனி இரண்டு படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளாராம் சூர்யா.

பெரிய நடிகரின் மகன் என்ற பெயருடன் திரை உலகில் நுழைந்த சூர்யா தனது கடின உழைப்பால் தனக்கென்று ஒரு பெயரை எடுத்துள்ளார். சூர்யாவா, படத்தை ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்று பெயர் எடுத்துள்ளார். கதாபாத்திரத்திற்கு ஏற்றது போன்று உடல் எடையை கூட்டி குறைப்பதிலும் வல்லவர் சூர்யா.

One mass+One class= 2: This is Suriya's calculation

ஆண்டுக்கு ஒரு படத்தில் மட்டும் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளார் சூர்யா. அவ்வாறு ஒரு படத்தில் நடிப்பதால் அந்த படம் ஓடவில்லை எனில் அந்த ஆண்டு தோல்வியான ஆண்டாகிவிடுகிறது. இதனால் இனி ஆண்டுக்கு இரண்டு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் சூர்யா. ஒரு படம் மாஸாகவும் மற்றொன்று ஹைக்கூ போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப் போகிறாராம்.

மாஸுக்கு மாஸும் ஆச்சு, கிளாஸுக்கு கிளாஸும் ஆச்சு என்று பார்க்கிறார் சூர்யா. இதுதவிர தனது காதல் மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பது என்றும் முடிவு செய்துள்ளாராம்.

சூர்யா தற்போது 24 படத்தில் தாத்தா, மகன், பேரன் என்று மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சற்குணத்தையும் அதர்வாவையும் இந்த சண்டிவீரன்தான் காப்பாத்தணும்!

சென்னை: தொடர்ந்து சறுக்கி வரும் அதர்வா பெரிதும் நம்பிக் கொண்டிருக்கும் படம் சண்டி வீரன். படத்தின் ட்ரைலர் பார்த்தபோது, அதர்வாவின் நம்பிக்கையில் தவறில்லை என்றுதான் தோன்றியது.

நடிகர் முரளியின் மகனான அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், இரும்புக் குதிரை என்று இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் வரிசையாகத் தோல்வியைத் தழுவி வருகின்றன.

Atharvaa Murali’s ‘Sandi Veeran’

பாலாவின் நடிப்பில் வெளிவந்த பரதேசி படம் தோல்வி வரிசையில் இணைந்தாலும் பரதேசியில் நடித்ததற்காக அதர்வாவுக்கு நல்ல பெயரும் பாராட்டுகளும் ஒருசேரக் கிடைத்தன. அடுத்தடுத்து வரிசையாக படங்கள் குவிந்தாலும் தமிழில் சொல்லிக் கொள்ளும்படி ஒருபடமும் வெற்றிப் படமாக அமையாத நிலையில் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் சண்டி வீரன் படத்தில் நடித்து வருகிறார்.

களவாணி மற்றும் வாகை சூடவா போன்ற நல்ல படங்களை கொடுத்த இயக்குநர் சற்குணத்துக்கும் சண்டி வீரன்தான் பெரிய நம்பிக்கை. நய்யாண்டியில் இழந்த பெயரை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில்.

ஆக, சற்குணம், அதர்வா இருவருக்குமே சண்டி வீரன் முக்கிய படம்.

 

காக்கா முட்டை- விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
4.0/5

நடிகர்கள்: ராஜேஷ், ரமேஷ், ஐஸ்வர்யா, பாபு ஆன்டனி, கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ் திலக், சிம்பு (சிறப்பு தோற்றம்)

ஒளிப்பதிவு: எம் மணிகண்டன்

இசை: ஜிவி பிரகாஷ்

தயாரிப்பு: தனுஷ், வெற்றி மாறன்

எழுத்து - இயக்கம்: எம் மணிகண்டன்

பெரிய நடிகர்களில்லை... பிரமாண்ட காட்சிகளில்லை.. அச்சு பிச்சு காமெடியுமில்லை... இப்படி ஏகப்பட்ட இல்லைகளோடு வந்திருக்கும் ஒரு சிறிய படம் பார்ப்பவர்களை இருக்கையோடு கட்டுப்போடுகிறது. அதுதான் காக்கா முட்டை.

வணிக ரீதியான படங்களில் நடித்தாலும், இயக்கினாலும் இப்படி ஒரு கதையைப் படமாகத் தயாரித்த தனுஷ், வெற்றிமாறனின் தொலைநோக்கைப் பாராட்டியாக வேண்டும்.

நாம் நாளும் கடந்து செல்லும் சென்னையின் குடிசைப் பகுதியொன்றில் வசிக்கும் இரு சிறுவர்கள், அவர்களின் குடும்பம், சுற்றி வாழும் மனிதர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட எளிய கதை.

Kakka Muttai Review

இந்த குடிசைப் பகுதியில் வசிக்கும் சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை ஆகிய இரு சிறுவர்களுக்கும், தங்கள் பகுதிக்கு அருகில் புதிதாக கிளை திறக்கும் கடையில் பீட்சா சாப்பிட ஆசை. ஆனால் ஒரு பீட்சா விலை 300 ரூபாய். இதற்காக ரயில் பாதையில் சிந்தும் நிலக்கரியைச் சேர்த்து எடைக்குப் போட்டு காசு சேர்க்க ஆரம்பிக்கிறார்கள். கலாசி தொழிலாளி ஜோ மல்லூரி உதவியுடன் நிறைய கரி சேர்க்கிறார்கள். காசும் சேர்கிறது. சேர்த்த காசை எடுத்துக் கொண்டு பீட்சா கடைக்குப் போனால், அழுக்குடையும் பரட்டைத் தலையும் கொண்ட இந்த காக்கா முட்டைகளை விரட்டியடிக்கிறான் வாயில் காவலாளி. சரி உடைதானே பிரச்சினை என்று, அதற்கும் காசு சேர்த்து இரண்டு புதிய உடைகள் வாங்கி அணிந்து பீட்சா சாப்பிடப் போகிறார்கள். ஆனால் இப்போதும் அதே தடை. கூடுதலாக அடி வேறு.

Kakka Muttai Review

கடைசியில் எப்படித்தான் அவர்களின் பீட்சா கனவு நனவாகியது என்பது சுவாரஸ்ய க்ளைமாக்ஸ்.

கஷ்டப்பட்டு சேர்த்த காசில் உடை வாங்கி அணிந்து இரண்டாம் முறை பீட்சா கடைக்குள் நுழையும்போது, வாயில் காவலனும் அந்த கண்காணிப்பாளனும் சிறுவர்களை அடித்து விரட்டும் காட்சி வரும்போது, பார்வையாளர்களின் ரியாக்ஷனை யாராவது கவனித்திருந்தீர்களென்றால், புரிந்திருக்கும் இந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்தினை. அதை அரங்கில் பார்த்து பிரமித்தேன். அதுதான் இயக்குநர் மணிகண்டனின் பெரும் வெற்றியும்கூட. ஆயிரம் பத்தாயிரம் கட்டுரைகளும் கார்ட்டூன்களும் கூட ஏற்படுத்த முடியாத பிரமாண்ட தாக்கம் அது!

படத்துக்கான கதை, கதைக்கான களம், கதை மாந்தர்கள், நிகழிடங்கள், படமாக்கிய விதம், சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத இயல்பான வசனங்கள்.. இப்படி எல்லாவற்றையுமே மிகக் கச்சிதமாக கையாண்டிருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்தைப் பொறுத்தவரை அவர்தான் நாயகன்

Kakka Muttai Review

பொதுவாக இந்த மாதிரி விருதுப் படங்களை மக்கள் புறக்கணிக்கக் காரணம், அதில் துருத்திக் கொண்டு நிற்கும் பிரச்சார நெடி, கருத்து சொல்கிறோம் பேர்வழி என கடுப்பேற்றும் அதி மேதாவித்தனம்... இவை எதுவுமே இந்தப் படத்தில் இல்லை.

வெகு சீக்கிரம் கதைக்குள் நாம் சென்று, அந்த காக்கா முட்டை பிரதர்சுடன் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறோம். அவர்களின் ஏழ்மைக்காக இரங்குவது, அந்த குடும்பத்தின் நிலைக்காக தவிப்பது என்ற உணர்வெல்லாம் இல்லாமல், அவர்களின் வாழ்க்கையில் நம்மையும் இணைத்துக் கொண்டு பயணிக்க ஆரம்பிப்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.

Kakka Muttai Review

குடிசைப் பகுதி மக்களைச் சுற்றிச் சுழலும் அரசியல், லோக்கல் அரசியல் புள்ளிகள், அவர்களின் எடுப்புகள், ஒரு பிரச்சினை அரசியலாக்கப்படும் விதம் என அனைத்திலும் நுணுக்கமான பதிவைப் பார்க்க முடிகிறது.

பிரச்சினையில் சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு எந்தப் பலனும் கிடைக்காமல், அதை அவரவர் வசதிக்கேற்ப தூக்கித் திரிபவர்கள் பலனடையவதை இத்தனை சிறப்பாக இதற்கு முன் யாரும் சொன்னதில்லை.

பீட்சாவுக்கு ஏங்கும் சிறுவர்களுக்காக, பாட்டி வீட்டுக்குள்ளேயே தோசையை பீட்சா மாதிரி சுட்டுக் கொடுக்கும்போது தட்டிவிடும் சிறுவர்கள், பீட்சாவின் உண்மையான ருசி அறிந்து வெறுத்துப் போய், 'ஆயா சுட்ட தோசையே நல்லாருந்துச்சில்ல..' எனும்போது தியேட்டர் அதிர்கிறது.

சிம்புவை மிகக் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். "சிம்பு பீட்சா திண்ணானா.. ஏன் ரசம் சாதம் சாப்பிட மாட்டானா?' என ரசம் சாதப் ப்ரியரான ஜோ மல்லூரி கமெண்ட் அடிக்கும் இடம் கலகலக்க வைக்கிறது.

Kakka Muttai Review

காக்கா முட்டை பிரதர்ஸாக வரும் விக்னேஷ், ரமேஷ் இருவரையும் சினிமாவில் நடித்த குழந்தைகளாகப் பார்க்கவில்லை. சைதாப்பேட்டை பாலத்தையொட்டி வாழும் சிறுவர்களாகவே பார்க்க முடிந்தது. தேசிய விருதுக்கு தகுதியானவர்கள்தான்.

ஐஸ்வர்யா, அந்தப் பாட்டி, பழரசம் என்ற பெயரில் வரும் ஜோ மல்லூரி, பாபு ஆன்டனி, அந்த அல்லைக்கைகள், கிருஷ்ணமூர்த்தி என எல்லோருமே மில்லி மீட்டர் கூட மிகையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷின் இசை படத்தின் இயல்பு கொஞ்சமும் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. கிஷோரின் எடிட்டிங்கும்தான். எங்கும் துருத்திக் கொண்டு நிற்கவில்லை காட்சிகள்.

முதல் படத்திலேயே இப்படியொரு அழுத்தமான முத்திரை பதித்துள்ள இயக்குநர் மணிகண்டனுக்கு வாழ்த்துகள். வரவேற்புகள்!

 

இன்னுமொரு செவ்வாய் கிரக சினிமா... ரிட்லி ஸ்காட்டின் பிரமாண்ட 'தி மார்ஷியன்' ட்ரைலர்!

லாஸ் ஏஞ்செல்ஸ்: மீண்டும் செவ்வாய் கிரகத்தை மையமாகக் கொண்டு ஒரு படம் வருகிறது ஹாலிவுட்டிலிருந்து.

படத்தின் பெயர் தி மார்டியன். ஒரு நாவலைத் தழுவித்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

'The Martian' Movie Trailer Shows Scientifically Accurate

விண்வெளி தொடர்பான படங்களில் கிராவிட்டி மற்றும் இண்டர்ஸ்டெல்லெர் போன்ற படங்களின் வரிசையில் இந்தப் படமும் இடம்பிடிக்கிறது.

'The Martian' Movie Trailer Shows Scientifically Accurate

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளிக் குழு அங்கு வீசும் பிரம்மாண்டமான புயலின் காரணமாக தப்பித்தோம், பிழைத்தோம் என்று பூமிக்குத் திரும்புகிறது. அந்தக் குழுவில் இடம்பெற்ற நாயகன் மட்டும் தவறுதலாக செவ்வாய் கிரகத்தில் மாட்டிக் கொள்கிறார். அவர் அங்கிருந்து எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் மீதிக் கதை.

படத்தை வழக்கம் போல பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்கள். பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரிட்லி ஸ்காட் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மாட் டாமன் மற்றும் ஜெசிகா செஸ்டன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

 

சீயான் கூப்பிட்டாரு... குதூகலப்படும் காதல் கண்மணி!

நான் எப்படி சொல்வேன்... என்னாலே சந்தோசத்தை தாங்க முடியலையே... என்று சந்தோசத்தில் துள்ளிக்குதிக்கிறார் தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக மாறியுள்ள அந்த ரம்யம். விசயம் இதுதான். சீயான் நடிகர் தொடங்கியுள்ள புதிய ஷாப்பிங் டிவி சேனலை தொடங்கியுள்ளனர். இதன் தொடக்கவிழா சமீபத்தில் நடைபெற்றது.

இதில் பாலிவுட் நட்சத்திரமும், தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் மாறி மாறி புகழ்ந்து கொண்டதோடு அவர் படத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றும் மேடையிலேயே அறிவித்தனர். அடடா ரூட் மாறுதே என்று நினைக்கவேண்டாம். விசயமே இனிமேல்தான். இந்த தொடக்கவிழாவை தொகுத்து வழங்கியவர் ரம்யம்தான். அப்போதுதான் லக்கி பிரைஸ் அடித்ததாம்.

கண்மணியில் நடிகையின் நடிப்பை பார்த்த சீயான் தனது படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தாராம். இதனால்தான் குதூகலம் அடைந்துள்ளார் ரம்யம். தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் இதனை பகிர்ந்து கொண்ட நாயகி, நன்றி கூறியுள்ளார். அதோடு பாலிவுட் நட்சத்திரத்தையும் பாராட்டியுள்ளார்.

 

கோடம்பாக்கத்தின் அடுத்த பேய் யார்யா?

சென்னை: தமிழ் சினிமாவில் காமெடியும் காதலும் சரிவிகிதத்தில் கலந்து நடித்துக் கொண்டிருந்த நடிகர் ஆர்யா, ஊரோடு ஒத்து வாழணும் என்ற பழமொழிகேற்ப தற்போது தமிழ் சினிமாவின் அடுத்த பேயாக அவதாரம் எடுக்கப் போகிறார்.

அறிந்தும் அறியாமலும் படத்தில் இயக்குநர் விஷ்ணுவர்தன் மூலமாக சினிமாவில் நுழைந்த ஆர்யா தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் கூட.

Who Is Next Ghost In Tamil Cinema?

ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடித்த அமர காவியம் படத்தை இயக்கிய இயக்குநர் ஜீவா ஷங்கர், தற்போதைய பேய் டிரெண்டுக்கு ஏத்த மாதிரி ஒரு கதையை ஆர்யாவிடம் சொல்லியிருக்கிறார். அந்தக் கதையால் கவரப் பட்ட ஆர்யா, இதில் நான் நடிப்பதோடு சொந்தமாக எனது பேனரிலே தயாரிக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம்.

மற்ற நடிகர், நடிகைகள் படத்தில் பணியாற்றும் டெக்னிஷியன்கள் தேர்வு முடிந்த பின் முறைப்படி படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்களாம்.

தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, இல்லையோ பேய்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது. இதனைப் புரிந்து கொள்பவர்கள் நான் ஒரு முன்னணி ஹீரோ நான் எப்படி பேயாக நடிப்பது என்பது பற்றியெல்லாம் சிந்திப்பது கிடையாது, பேய் படமா பிடிங்க கால்ஷீட்டை என்று உடனடியாக தேதிகளை அள்ளிக் கொடுக்க தயாராகி விட்டார்கள்.

 

48 வயதில் 'டெகட் ஆப் ஹாட்னஸ்' விருது பெற்ற ஹாலிவுட் நடிகை சல்மா ஹாயக்

நியூயார்க்: ஹாலிவுட் நடிகை சல்மா ஹாயக் 48 வயதில் 'டெகேட் ஆப் ஹாட்னஸ்' விருதை பெற்றுள்ளார்.

மெக்சிகோவில் பிறந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வருபவர் சல்மா ஹாயக்(48). வயதானாலும் ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் அவர் இன்னும் அழகாக உள்ளார். இந்நிலையில் ஸ்பைக் டிவியின் கைஸ் சாய்ஸ் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

Salma Hayek crowned 'Decade of Hotness' at 48

அந்த விழாவில் சல்மா ஹாயக்கிற்கு 'டெகேட் ஆப் ஹாட்னஸ்' அதாவது கடந்த 10 ஆண்டுகளில் அவர் தான் மிகவும் கவர்ச்சியானவர் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவருக்கு அந்த விருதை ஹாலிவுட் நடிகர் லியம் நீசன் வழங்கினார்.

சல்மா தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ஒரு ஹாலிவுட் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. சல்மா உங்களின் வயது அதிகரித்துக் கொண்டே போவது போன்று அழகும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே ஏதாவது அறுவை சிகிச்சை செய்தீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில்,

வயதானாலும் அழகை மேம்படுத்த அறுவை சிகிச்சை செய்ய மாட்டேன், கிரீம்களே எனக்கு போதும். மாத்திரை, ஊசி, அறுவை சிகிச்சை எல்லாம் வேண்டவே வேண்டாம் என்றார்.

 

"பாகுபலியை ரஜினிக்கு ஏன் முதலில் போட்டுக் காட்டணும்னு ஆசைப்படறோம் தெரியுமா?"

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளம்.. அதனால்தான் எங்கள் பாகுபலி படத்தை அவருக்கு முதலில் திரையிட்டு மரியாதை செய்ய விரும்புகிறோம், என்று நடிகை அனுஷ்கா கூறினார்.

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி படத்தின் முதல் பாகம் வரும் ஜூலை 10-ம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகிறது.

Rajinikanth is the epitome of Indian Cinema, says Anushka

இந்தப் படம்தான் இந்தியாவில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்ற அறிவிப்போடு வெளியாகிறது. இதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகிறது.

இந்தியா சினிமா மட்டுமின்றி, உலகமே பெரும் ஆர்வத்துடன் இன்றைக்கு எதிர்நோக்கும் படமாக பாகுபலி மாறிவிட்டது.

படத்தின் ட்ரைலர் வெளியீட்டின்போது, இந்தப் படத்தை முதலில் யாருக்கு திரையிட்டுக் காட்ட விரும்புகிறீர்கள் என்று நடிகை அனுஷ்காவிடமும், நாயகன் பிரபாஸிடமும் கேட்டபோது, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்குதான் முதலில் திரையிட்டுக் காட்ட விரும்புகிறோம்," என்று கூறினர்.

'ஏன் ரஜினிக்குதான் படத்தை முதலில் காட்ட வேண்டும் என விரும்புகிறீர்கள்.. சிறப்புக் காரணம் உண்டா?' என்று கேட்டதற்கு அனுஷ்கா சொன்ன விளக்கம் இது:

"ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் பெருமைக்குரியவர். இந்திய சினிமாவுக்கான சந்தையை உலக அளவில் பெரிதாக்கித் தந்தவர்.

அவரை நமது சினிமாவின் அடையாளமாகப் பார்க்கிறோம். இந்தப் படத்தை அவருக்கு முதலில் திரையிட்டுக் காட்டி மரியாதை செய்ய விரும்புகிறோம்," என்றார்.

 

'எங்கேயும் எப்போதும்' பட டைரக்டர் சரவணன் கார் விபத்தில் காயம்!

திருச்சி : பிரபல திரைப்பட இயக்குநர் சரவணன் கார் விபத்தில் காயமடைந்து, சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் சரவணன். இவர் தனது உறவினரும் காரில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திருச்சி அருகே சென்னை நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அவர்களது காரின் முன்புற டயர் வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய கார் விபத்தில் சிக்கியது.

Director Saravanan met with accident

விபத்தின் காரணமாக காயமடைந்த சரவணன் மற்றும் அவரது உறவினர் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், மேல்சிகிச்சைக்காக அவர் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

சரவணன் மற்றும் அவரது உறவினருக்கு விபத்தினால் சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தில்லை என்றும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரவணனின் ‘எங்கேயும் எப்போதும்' படமே பஸ் விபத்து, சாலை விபத்து குறித்த படம்தான் என்பது நினைவிருக்கலாம்.

 

தீயாக வேலை பார்த்த சிம்பு, செல்வராகவன்: வியப்பில் வாயை பிளந்த கோலிவுட்

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் படுவேகமாக நடப்பதை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

ஒரு காலத்தில் முட்டி மோதிய சிம்புவும், தனுஷும் தற்போது நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். ட்விட்டரில் அண்ணா, தம்பி என்று இருவரும் பாசமாக பேசிக் கொள்கிறார்கள். இந்நிலையில் தான் சிம்பு தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

Simbu, Selvaraghavan stun Kollywood

இந்த படம் குறித்து அறிந்த பலரும் சிம்புவும், செல்வராகவனுமா படம் வெளங்கிடும். ஒரு பக்கம் செல்வா படத்தை முடிக்க 2 ஆண்டுகளாக்கிவிடுவார். மறுபக்கம் சிம்புவோ படப்பிடிப்புக்கே வர மாட்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றினால் அந்த படம் நிச்சயம் தற்போதைக்கு முடியாது என பலர் கிண்டல் செய்தார்கள்.

இந்நிலையில் தான் கிண்டல் செய்தவர்களை வெட்கி தலை குனிய வைத்துள்ளனர் சிம்புவும், செல்வாவும். ஆமாம், முதல்கட்ட படப்பிடிப்பை 12 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டு வெறும் 9 நாட்களிலேயே முடித்துவிட்டனர்.

சிம்பு, செல்வராகவன் ஆகியோரால் கூட தீயாக வேலை செய்ய முடியுமா என்று கோலிவுட்டில் பலரும் தற்போது வியந்து வருகிறார்கள்.

 

காக்கா முட்டைக்கு குவியும் கூட்டம்... தியேட்டர்கள், காட்சிகள் அதிகரிப்பு

தேசிய விருது பெற்ற படங்கள் என்றால் பெரும்பாலும் தியேட்டர்கள் காத்து வாங்கும். ஆனால் காக்கா முட்டை விதிவிலக்கு.

கடந்த வெள்ளிக்கிழமை மிகக் குறைந்த அரங்குகளில், அதுவும் சிறு அரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, அடுத்த நாளே மேலும் 75 அரங்குகளில் திரையிட்டார்கள்.

Kakka Muttai, a runaway hit

நேற்று வாரத்தின் முதல் நாள். ஆனாலும் திரையிட்ட இடங்களிலெல்லாம் நல்ல கூட்டம். சில லட்சங்களில் எடுக்கப்பட்டு, சில லட்சங்கள் விளம்பரத்துக்காக செலவிடப்பட்ட இந்த காக்கா முட்டை, இப்போது பொன் முட்டையாக மாறி தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றி மாறனை சந்தோஷப்படுத்தி வருகிறது.

படத்துக்கான முக்கிய விளம்பரமே என்பது, மவுத் டாக் எனப்படும் இலவச வாய் வழி பிரச்சாரம்தான். வழக்கமாக ஒரு படத்தை கவிழ்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் சமூக வலைத் தளங்கள், காக்கா முட்டையைக் காக்கப் பயன்பட்டிருப்பது இன்னொரு ப்ளஸ்!

 

தாத்தா, அப்பா, பேரன்... மூன்றுமே சூர்யா.. 3 வித்தியாசமான வேடங்களில்!

சென்னை: மாசு படத்துக்குப் பிறகு, விக்ரம் குமாரின் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் '24' படத்தில் தாத்தா, அப்பா மற்றும் பேரன் என மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.

யாவரும் நலம் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தை இயக்க விருந்தார் இயக்குநர் விக்ரம் குமார், இடையில் சில காரணங்களால் படம் தள்ளிப் போய்விட்டது. உடனே தெலுங்கில் மனம் என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் பெரிய வெற்றிப் படமானது.

Suriya As Son, Father And Grandfather In 24?

அதே படத்தை இப்போது சூர்யாவை வைத்து ரீமேக் செய்து வருகிறார். சூர்யா இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் தோன்றுகிறார். மூன்று வேடங்களிலும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்ற முனைப்போடு சூர்யா கடுமையாக உழைத்து வருகிறார்.

பேரன் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்து வருகிறார். மற்ற இரண்டு வேடங்களுக்கும் ஜோடி இருக்கிறார்களா, என்பது குறித்து ரகசியம் காக்கிறார் இயக்குநர்.

யாவரும் நலம் படத்தைப் பார்த்தவர்களை மிரட்டிய விக்ரம் குமார், இந்தப் புதிய படத்தை குடும்பக் காவியமாகக் காட்டப் போகிறார்.

 

பிக்கு படத்தை ரசித்துப் பார்த்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

மும்பை: கடந்த மாதம் அமிதாப், தீபிகா படுகோனே மற்றும் இர்பான் நடிப்பில் வெளிவந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற பிக்கு படம், இப்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பாராட்டையும் பெற்றுள்ளது.

கடந்த மாதம் இந்தியில் வெளிவந்த, குடும்ப பின்னணியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த பிக்கு படம் இதுவரை சுமார் 100 கோடி ரூபாயை வசூல் செய்து இந்த ஆண்டின் முதல் 100 கோடி வசூல் செய்த படம் என்று பெயரைப் பெற்றுள்ளது.

Piku'  Movie screening at Rashtrapati Bhavan

படத்தின் வெற்றியால் ஈர்க்கப் பட்ட தெலுங்குலகம் இந்தப் படத்தை ரீமேக் செய்ய முன்வந்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் அதில் நடித்த அமிதாப் மற்றும் தீபிகா உள்ளிட்டோர் பரவலான பாராட்டுகளைப் பெற்ற நிலையில், தற்போது இந்தப்படத்தை நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடிகர் அமிதாப் பச்சன் திரையிட்டார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் நடிகர் அமிதாப் மற்றும் படத்தின் இயக்குநர் சுஜித் சிர்கார் ஆகியோர் இந்தப் படத்தை பார்த்தனர்.

படத்தைப் பார்த்த பிரணாப் மிகவும் நன்றாக இருந்தது என்று ரசித்துப் பாராட்டியதாக அமிதாப் தனது வலைத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இரவு உணவின் போதும் பிரணாப் அவர்கள் உணவு மேஜையிலும் இதனைப் பற்றியே பேசினார்.

குறிப்பாக எனது பெங்காலி உச்சரிப்பைப் பற்றி நன்றாக இருந்ததாக பாராட்டினார், இது எனது வாழ்கையில் கிடைத்த மிகப் பெரிய கவுரமாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை தீபிகா மற்றும் நடிகர் இர்பான்கான் ஆகியோர் படப்பிடிப்பு தொடர்பாக வெளிநாடுகளில் இருந்ததால் இந்த நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

 

"அதையும், இதையும்" கலந்தா "தர லோக்கல்" மச்சி... எகிறும் தனுஷ் புகழ்!

சென்னை: 3 மற்றும் வேலையில்லாப் பட்டதாரி படங்களைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் - தனுஷுடன் இணைந்திருக்கும் மூன்றாவது படம் மாரி.

மாரி படத்தில் தனுஷ் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறார். படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகின.

Thara local Album by danush and Aniruth

தரலோக்கல்... பாடல் அநேகன் படத்தின் டங்காமாரி மற்றும் அஜித்தின் அதாரு உதாரு பாடல் இரண்டையும் கலந்தது போன்று இருக்கிறது. நல்ல உற்சாகமெட்டில் பெயருக்கு ஏற்றார் போன்று தர லோக்கலாகவே அமைந்து ரசிகர்களை சந்தோசப் படுத்தியிருக்கிறது இந்தப் பாடல்.

தற்போது பட்டி தொட்டியெங்கும் மாரி படத்தின் பாடல்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. மேலும் ஒரு சிறப்பு அம்சமாக தரலோக்கல் பாடலில் நடிகர் தனுஷுடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருக்கிறார் கொலைவெறி அனிருத்.

படத்தை தியேட்டரில் பார்க்கும் ரசிகர்களும் நிச்சயம் ஆட்டம் போட்டு ரசிக்கும் விதமாக அனைத்துப் பாடல்களும் அமைந்து விட்டதால், தனுஷின் ரசிகர்களும் தற்போது படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

படத்திற்குப் படம் தனுஷின் புகழ் தங்கம் விலை போலவே உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது!