ஆபாசமா? நானா? புடவை கட்டித்தானே நடிக்கிறேன்… பொங்கிய பிரியாமணி

I Am Not Exposing Too Much Says Priya Mani   

சண்டி படத்தில் திருமண காட்சிக்காக சேலைதான் உடுத்தி நடிக்கிறேன். இதுதான் ஆபாசமா?" என்று பொங்கி எழுந்துள்ளார், பிரியாமணி.

ஆந்திராவில் உள்ள மல்காஜ்கிரி நீதிமன்றத்தில் நடிகைகள் அனுஷ்கா, பிரியாமணி இருவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ள சமூக ஆர்வலர் சுபுத்தா, "ஆந்திராவில் சமீபத்தில் வெளியான தெலுங்குப் படங்களில் அனுஷ்காவும், பிரியாமணியும் படு கவர்ச்சியான உடைகள், முக்கால்வாசி நிர்வாணம் என்று ஆபாச ரேஞ்சில் நடித்துள்ளனர்.

நடிப்பு என்ற பெயரில் இவர்களின் இப்படிப்பட்ட அதிரடிக் கவர்ச்சி ஆபாசமாக இருப்பதால் இதைப் பார்க்கும் இளைஞர்களை சமூகத்தில் தவறான திசைக்குத் திருப்பும். பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வைக்கும்" என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விவகாரம் மீடியாக்களில் வெளியாகிவிடவே, பிரியாமணியை சந்தித்த செய்தியாளர்கள் பலர், "நீங்க லேட்டஸ்ட்டாக நடிக்கும் படத்தின் ஸ்டில்ஸ்கள் எங்கே கிடைக்கும்?" என்று விசாரித்திருக்கிறார்கள்.

உடனே பொங்கிய பிரியாமணி ‘சண்டி' படத்தில் நான் ஆபாச உடை அணிந்து நடிப்பதாக புகார் கொடுத்தவருக்கு எப்படி தெரியும்? இன்னும் இதன் ஷூட்டிங்கே தொடங்கவில்லை.

இந்த பட ஷூட்டிங்கின்போது, ரிலாக்ஸ்ட்டாக நான் இருந்தபோது யாரோ எடுத்த படங்கள் வெளியே உலாவின. அதை பார்த்துவிட்டு, இந்த புகார் கூறப்பட்டுள்ளது ஆச்சர்யமாக இருக்கிறது. படத்தில் ஆபாச உடை அணிந்திருக்கிறேன் என்று கூறுபவர் அதற்கான ஆதாரம் எதையாவது காட்ட முடியுமா?

படத்தில் இடம்பெறும் காட்சியில்தான் ஆபாசமாக இருக்கக்கூடாது. திருமண காட்சியில் ஒரு வேளை நான் நீச்சல் உடை அணிந்திருந்தால், ஆபாசம்தான். ஆனால் இப்படத்தில் திருமண காட்சிக்காக சேலைதான் உடுத்தி நடிக்கிறேன். இது ஆபாசமா?

தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் யாரும் இதுவரை நான் ஆபாச உடை அணிந்தேன் என்று புகார் கூறியதில்லை. உடை அணிவதற்கான எந்த விதி முறையையும் நான் மீறியதில்லை.

சில விளம்பர படங்கள் உண்மையிலேயே ஆபாசமாக இருக்கிறது. அதுபோன்ற காட்சிகள் மீது ஆட்சேபம் தெரிவித்தால் நியாயமிருக்கும்" என்று பொரிந்து தள்ளிவிட்டார்.

யார் சொல்வதில் உண்மை இருக்கிறது என்று படம் வரட்டும் பார்க்கலாம்.

 

பரதேசி - சிறப்பு விமர்சனம்

Rating:
3.0/5

-எஸ். ஷங்கர்

நடிப்பு: அதர்வா முரளி, வேதிகா, தன்ஷிகா, ஜெர்ரி, ரித்விகா

ஒளிப்பதிவு: செழியன்

வசனம்: நாஞ்சில் நாடன்

இசை: ஜி வி பிரகாஷ்குமார்

மக்கள் தொடர்பு: நிகில்

தயாரிப்பு: பி ஸ்டுடியோஸ்

கதை, திரைக்கதை, இயக்கம்: பாலா


தேயிலைத் தோட்டங்களில் அப்பாவி ஏழைத் தமிழர்கள் எப்படி உரமாக மாறினார்கள் என்ற கண்ணீர் கதையை, கிட்டத்தட்ட ஒரு ஆவணப்படம் மாதிரி விவரிக்கிறது பாலாவின் இந்த பரதேசி.

சாலூர் கிராமத்தில் வசிக்கும் அரைகிறுக்கன் ஒட்டுப் பொறுக்கி எனும் ராசாவுக்கு (அதர்வா) தாய் தந்தை இல்லை. பாட்டிதான் வளர்க்கிறாள். ஊரில் எது நடந்தாலும் தண்டோரா போட்டு, அதில் கிடைப்பதைக் கொண்டு வயிற்றைக் கழுவி வாழ்வதுதான் ராசாவின் தொழில். அதே ஊரில் உள்ள அங்கம்மாவும் (வேதிகா) ராசாவும் ஒருவரையொருவர் 'நினைத்துக் கொள்கிறார்கள்'. அந்த நினைப்பு ஊருக்குத் தெரியாமல் 'உறவா'கிவிடுகிறது.

paradesi special review
இதற்கிடையே ஊரில் ஏகப்பட்ட பஞ்சம். வேலையில்லை. கஞ்சிக்கு வழியில்லை எனும் சூழலில், தேயிலைத் தோட்டத்துக்கு ஆள்பிடிக்க வரும் கங்காணியின் சர்க்கரை வார்த்தையில் சிக்குகிறார்கள்.

ஊரின் பெரும்பகுதி மக்கள் கிளம்புகிறார்கள் தேயிலைத் தோட்டத்துக்கு. கூடவே ராசாவும். அங்கம்மா கிராமத்திலேயே நின்றுவிடுகிறாள். பச்சைமலைக்குப் போனபிறகுதான் அது வேலை செய்யும் இடமல்ல... கடைசி வரை அங்கேயே வெந்து சாக வேண்டிய சுடுகாடு என்பது புரிகிறது. கொட்டும் பனி, அடை மழை, அட்டைக்கடி, அதைவிட மோசமான கங்காணியின் உறிஞ்சல், வெள்ளைக்காரனின் காமப் பசி, கொள்ளை நோய் என அத்தனையையும் சகித்துக் கொண்டு அல்லது பலியாகி மண்ணோடு மண்ணாகிறார்கள்... ஒரு கூட்டத்தில் பாதிக்கும்மேல் செத்துவிழ... அடுத்து புதிய கூட்டம் புறப்பட்டு வருகிறது... அதில் ராசாவின் அங்கம்மாளும்.. அவர்களின் உறவுக்கு சாட்சியாய் பிறந்த குழந்தையும்...

தேயிலை ருசியாகக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது, செத்து விழுந்த மக்களின் உடல் தந்த உரத்தில்!

இந்தப் படம் ரசித்துப் பார்க்கத்தக்க படமா என்றால்.. சத்தியமாய் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பச்சைப் பசேல் என்ற தேயிலைத் தோட்டங்களின் பின்னால் குரூரமாய் சிந்த வைக்கப்பட்ட ரத்தத் துளிகளின் பதிவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதேநேரம், நிறைகளை விட, மனதை நெருடும் முட்களாய் பல காட்சிகள், இசை, பாடல்கள், ஒளிப்பதிவு அமைந்திருப்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது.

எதை வைத்து ஒளிப்பதிவின் தன்மையை தீர்மானிக்கிறார்கள் என்பது கடைசி வரை புரியவில்லை. கதை நிகழும் காலம் எதுவாக இருந்தாலும், இயற்கையின் நிறம் மாறப்போவதில்லை. நன்றாக நினைவிருக்கிறது.. எழுபதுகளின் இறுதியில் தமிழகத்தில் வறட்சி தலை விரித்தாடியது. கற்றாழைக் கிழங்கைப் பிடுங்கி அவித்துத் தின்ற கோர நாட்கள். ஆனால் அன்றும்கூட தமிழகத்தின் எந்த மாவட்ட காடும் நிலங்களும் பச்சைப் பசேல் என்றுதான் இருந்தன. சாம்பல் படிந்த நிறத்தில் எந்த ஊரையும் பார்த்த நினைவில்லை. சரி ஊர்களைத்தான் அப்படி பாதி கருப்பு வெள்ளையில் காட்டுகிறார்கள் என்றால்... தேயிலைத் தோட்டத்துக்குப் போன பிறகும் தேயிலைகள் சாம்பல் பூத்த மாதிரி காட்டியிருப்பது என்ன வகை உலகத் தரமோ.. செழியனும் பாலாவும்தான் விளக்க வேண்டும்.

இசை... பாவம் ஜிவி பிரகாஷ்குமார். அவரிடம் இல்லாத விஷயத்துக்காக திட்டி பிரயோசனமில்லை. அதர்வா தப்பித்து ஓடும் காட்சிக்கு வாசித்திருக்கிறார் பாருங்கள்... பக்கா டெம்ப்ளேட் இசை. அதேபோல தன்ஷிகாவின் மரணத்தை விட கொடூரமாகக் காதுகளைப் பதம் பார்க்கிறது ஜிவியின் பின்னணி. பாடல்களில் வைரமுத்துவை ரொம்ப கவனமாகத் தேடியும் கடைசிவரை கிடைக்கவே இல்லை.

ஆரம்பக் காட்சியில், ஒரு திருணமத்தின் போது பெரியப்பா விக்ரமாதித்யன் செத்துப் போகிறார். அந்த சாவை ஊரறிய சொல்லிவிட்டால் கிராமத்து மக்கள் நெல்லு சோறு சாப்பிடும் பாக்கியம் போய்விடுமே என்று மறைத்து வைக்கிறார்கள். திருமணம் முடிந்து, நாலைந்து பந்தி சோறும் சாப்பிட்டு கையைக் கழுவுகிறது. ஆனால் பெரியப்பன் பிணத்தை அப்படியே விட்டுவிடுகிறார்கள். பாலா படத்தில் இவ்வளவு வெளிப்படையான ஓட்டை இதுதான் முதல் முறை.

இந்தக் காட்சிகளின் போது அதர்வாவை டீஸ் செய்கிறேன் பேர்வழி என வேதிகா செய்யும் ஒவ்வொரு செயலும் மகா அருவருப்பு. 1939-ல் நடக்கும கதைக் களத்தில் பெண்கள் இப்படியெல்லாம் லூசுத்தனமாக நடந்து கொள்வார்களா...

Paradesi Review

அதர்வாவுக்குதான் நன்றாக காதலிக்கத் தெரிகிறது. நல்லது கெட்டது தெரிகிறது.. பெரியப்பா வராமல் தாலி கட்டக் கூடாது என்ற இங்கிதம் தெரிகிறது... கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வலி புரிந்து அவள் குழந்தையை நேசிக்கத் தெரிகிறது.. அப்புறம் ஏன் அவரை கேனயனாகக் காட்ட வேண்டும்?

சோகம் என்பது காட்சிகளில் மறைபொருளாக இருக்க வேண்டும். அதைப் பார்ப்பவர் உணர்ந்து கசிந்துருக வேண்டும். அதுதான் நல்ல காட்சி அமைப்பு. அதை இதற்கு முந்தைய பாலா படங்களில் அனுபவித்தவர்கள் நாம். ஆனால் இந்தப் படத்தில் தங்கள் சோகங்களைச் சொல்லிச் சொல்லி ஓங்கி கதறிக் கொண்டே இருக்கின்றன பெரும்பாலான பாத்திரங்கள். ஆனால் பார்ப்பவரை அந்த சோகம் தாக்கவே இல்லை. அதுதான் பரதேசியின் பிரதான குறைபாடு.

மற்றபடி அன்றைய சமூக நிலையை பாலா கச்சிதமாக சித்தரித்திருக்கிறார். வேலைகேட்டு வரும் ஒரு முன்பின் தெரியாதவனை மாட்டை அடிப்பது போல அடித்துவிட்டு, பின் ஒரு வண்டி விறகை பிளந்து கொடுக்கச் சொல்லி, கடைசியில் அதற்கும் கூட கூலி கொடுக்காமல் விரட்டியடித்தவன் வெள்ளைக்காரனில்லை.. நம்மிடையே வாழ்ந்த கொள்ளைக்காரன்கள்தான் என்பதை வலிக்கிற மாதிரி பதிவு செய்திருக்கிறார் பாலா.

குறிப்பிட்ட மதத்தின் பெயரைச் சொல்லி சமூக சேவை செய்ய வரும் மருத்துவர்கள்கூட, நோயை விரட்டுவதைவிட, தங்கள் மதப் பிரச்சாரத்தை முன்னெடுத்து மக்களை மாற்றுவதிலேயே குறியாக இருப்பதை இத்தனை வெளிப்படையாக யாரும் சொன்னதில்லை.

படத்தின் இன்னொரு ப்ளஸ்.... நாஞ்சில் நாடனின் வசனங்கள். 'கஷ்டம்னு பார்த்தா மூலவியாதிக்காரனுக்கு பேள்றது கூட கஷ்டம்தான்..' போன்றவவை ஒப்பனைகளற்றவை. என்ன... சில பாத்திரங்கள் இந்த வசனங்களை உச்சரிக்கும் விதம் மகா செயற்கையாய் இருப்பது!

படத்தின் பிரதான பாத்திரம்... நம்மைப் பொறுத்தவரை.. வீரமும் தன்மானமும் மனிதாபிமானமும் மிக்க அந்தப் பாட்டி கச்சம்மாள். அவர் நடித்தார் என்று சொல்வது ரொம்ப தப்பு. அந்தப் பாட்டியை அவராகவே இருக்க விட்டிருக்கிறார் பாலா.

பாலாவின் இந்த பரதேசி இயல்பான படம்தான்.. ஆனால் சுவாரஸ்யம் இல்லாத ஆவணம் என்பதையும் மறுப்பதற்கில்லை!

 

அமீருக்கும், தாலிபான்களுக்கும் உள்ள தொடர்பை கண்காணிக்க வேண்டும்: போலீசில் புகார்

Hindu Makkal Katchi Gives Complaint Against Ameer

சென்னை: இயக்குனர் அமீருக்கும், தாலிபான்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சி மாநில அலுவலக செயலாளர் குமரவேல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று சென்று புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

சினிமா டைரக்டர் அமீர் அளித்த ஒரு பேட்டியில் தாலிபான்கள் என்ற ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை ‘போராளிகள்' என்று கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்த தாலிபான்களை இப்படி கூறுவது தமிழக இளைஞர்களை அவர்களது அமைப்பில் சேருவதற்கு பிரச்சாரம் செய்வது போல் உள்ளது. கோவை குண்டு வெடிப்பால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

விஸ்வரூபம் படம் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் டைரக்டர் அமீர் பேட்டி அமைந்து உள்ளது.

அவருக்கும், தாலிபான்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றி போலீசார் கண்காணிக்க வேண்டும். வெளிநாடு சுற்றுப் பயணத்தின் போது அவர் தாலிபான்கள் யாரையாவது சந்தித்தாரா? என்று விசாரிக்க வேண்டும். அமீர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து முன்னணி மாநில தலைராக இருந்து படுகொலை செய்யப்பட்ட ராஜகோபால் கொலையில் அமீருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணை நடத்தி தேசவிரோத சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

கடல் கவுதமை இயக்குகிறார் ரஜினி மகள் ஐஸ்வர்யா!

Aishwarya Rajini Direct Goutham Karthik

கடல் படம் சரியாகப் போகாவிட்டாலும், அதில் நாயகனாக அறிமுகமான கவுதம் கார்த்திக்கு நிறைய வாய்ப்புகள். அப்படி ஒரு வாய்ப்பு ரஜினி மகள் ஐஸ்வர்யாவிடமிருந்து வந்திருக்கிறது.

ஐஸ்வர்யா இயக்கிய முதல் படம் 3. தனுஷ் நடித்த இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல், அந்தப் படத்துக்கு பயங்கர பப்ளிசிட்டியைக் கொடுத்துவிட்டது.

ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு போகவில்லை. அதே நேரம், ஐஸ்வர்யாவுக்கு இயக்குநர் என்ற அங்கீகாரத்தையும் தரத் தவறவில்லை. அமெரிக்காவில் நடந்த திரைப்பட விழாவில் ஐஸ்வர்யாவுக்கு சிறப்பு விருது தரப்பட்டது.

தனது அடுத்த படம் குறித்து எதையும் அறிவிக்காமலிருந்த ஐஸ்வர்யா, சில கதைகளுக்கு பக்காவாக ஸ்க்ரிப்ட் எழுதி வைத்திருந்தார்.

இந்த நிலையில் கார்த்திக் மகன் கவுதம் கார்த்தியை வைத்து அடுத்த படம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் கவுதமை அழைத்து இதுகுறித்துப் பேசியுள்ளார் ஐஸ்வர்யா. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லையாம்.

 

'பப்பாளியோ, ஹனி'யோ ஒரு நாள் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்!

'வேட்டை மன்னன்', 'வாலு' ஆகிய இரு படங்களில் சிம்புவும், ஹன்சிகாவும் ஜோடியாக நடித்து வருகின்றனர். படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், ஹைதராபாத்தில் தெலுங்கு படப்பிடிப்பில் இருந்த ஹன்சிகாவை பார்ப்பதற்காக சிம்பு வந்ததாகவும், இருவரும் அங்குள்ள ஓட்டலில் சந்தித்து பேசியதாகவும் ஆந்திர பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

7 படங்களை கைவசம் கொண்ட பிசியான நடிகையாக ஹன்சிகா தற்போது உள்ளார்.

 

'ஃபர்ஸ்ட் காப்பியெல்லாம் பண்ண முடியாது... ஏன்னா.. எவ்ளோ செலவுன்னு எனக்கே தெரியாது!' - ஷங்கர்

Shankar Denies Do Movie On First Copy Basis

தமிழ் சினிமாவில் இன்று சகஜமாக புழங்கும் வார்த்தை ஃபர்ஸ்ட் காப்பி. புதிதாக வரும் இயக்குநர் கூட, இவ்வளவு தொகையை கொடுத்திடுங்க.. பர்ஸ்ட் காப்பி அடிப்படையில எடுத்துக் கொடுத்திடறேன்.. என்று கண்டிஷன் போடுவதைப் பார்க்கலாம்.

அது என்ன ஃபர்ஸ்ட் காப்பி என்கிறீர்களா..

ஒரு படத்துக்கு இயக்குநர், ஹீரோ, டெக்னீஷியன் உள்ளிட்டோர் சம்பளம் உள்பட ரூ 5 கோடி பட்ஜெட் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தொகையை முதல் பிரதிக்கான தொகையாக எண்ணி இயக்குநரிடம் தந்துவிட் வேண்டும். தயாரிப்பாளர் தலையீடு இல்லாமல் அனைத்தையும் இயக்குநரே தீர்மானித்து முதல் பிரதியை முடித்து தயாரிப்பாளரிடம் கொடுத்துவிடுவார். அதன் பிறகு தேவையான அளவு பிரதிகள் போட்டு தயாரிப்பாளர் வெளியிடுவார்.

ஒரு சிலர் போட்ட பட்ஜெட்டுக்குள் எடுத்து பணத்தை மிச்சப்படுத்திக் கொள்வார்கள். பாலா, அமீர் மாதிரி இயக்குநர்கள் பட்ஜெட்டை விட கூடுதலாகச் செலவு செய்துவிட்டு, தயாரிப்பாளர்களுடன் மோதுவார்கள். தயாரிப்பாளர் ஒப்புக் கொள்ளாவிட்டால், அவர்கள் கொடுத்த தொகையை திருப்பித் தந்துவிட்டு, தங்கள் பேனரிலேயே வெளியிடவும் செய்வார்கள்... இப்போது பரதேசி வருவது அப்படித்தான்.

இதை சொல்ல வந்ததே வேறு ஒரு செய்தியைச் சொல்லத்தான்...

சமீபத்தில் இயக்குநர் ஷங்கரிடம் போய் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ஒரு படம் பண்ணித் தாருங்கள். உங்கள் பட்ஜெட்டைக் கொடுங்கள் என்று கேட்டாராம் ஒரு தயாரிப்பாளர்.

ஆனால் ஷங்கர் அது தன்னால் முடியாது என்று கூறிவிட்டாராம். ஏன்?

'எனது படமாக்கும் ஸ்டைலே வேறு. எந்த காட்சியை எப்படி எடுப்பேன், எவ்வளவு செலவாகும் என்ற கணக்குப் பார்க்காமல் எடுப்பதே என் வழக்கம். சமயத்தில் நான் கொடுப்பதை விட இருமடங்கு கூட செலவாகலாம். எனவே அதெல்லாம் சரிப்பட்டு வராது. முழுப்படத்தையும் முடிக்கும் வரை செலவு செய்ய நீங்கள் தயாரென்றால் மேலே பேசலாம்," என்றாராம்.

 

பாலாவின் பரதேசி வெளிநாடுகளில் நேற்றே ரிலீஸ்... பார்த்தவர்கள் பாராட்டு!

Paradesi Gets Rave Reviews From Viewers   

பாலாவின் பரதேசி திரைப்படம் இன்றுதான் இந்தியாவில் வெளியாகிறது. ஆனால் இந்தப் படம் நேற்று மாலையே வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பகுதிகளில் வெளியாகிவிட்டது.

படம் பார்த்த பலரும் இந்தப் படத்தை வெகுவாக சிலாகிக்க ஆரம்பித்துள்ளனர். பாலா எடுத்த படங்களிலேயே இதுதான் ஆகச் சிறந்த படம் என ஏற்கெனவே இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியதையே இப்போது வழிமொழிந்துள்ளனர்.

பாலா இயக்கத்தில், அதர்வா முரளி, வேதிகா, தன்ஷிகா நடிக்க, ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள படம் இது. சமீபத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ரியலிட்டி டீஸர் வெளியாகியிருந்தது. அதில் நடிகர் நடிகைகளை பாலா வேலை வாங்கும் விதம் குறித்து பலவித விமர்சனங்கள் எழுந்தன.

இது படத்துக்கு எதிர்மறையான ஒரு விளம்பரமாக அமைந்தது. இந்த நிலையில் படம் வெளியான பிறகு, அதைப் பார்த்தவர்கள் தங்கள் நினைப்பையே முற்றாக மாற்றிக் கொண்டுள்ளனர்.

தமிழில் சிறந்த இயக்குநர் என்றால் மகேந்திரனுக்குப் பின் பாலாதான் என்று சிலர் கூறியுள்ளனர்.

இந்தப் படத்தின் பாதிப்பு மனதைவிட்டு அகல இன்னும் சில நாட்கள் ஆகும் என்றும் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு காட்சியும் கச்சிதமாக இருப்பதாகவும், யாரும் வில்லனாக இல்லாமல் சூழலுக்கேற்ப வாழும் சாதாரண மனித இயல்புடையவர்களாகவே அமைந்திருப்பதாகவும் பாராட்டியுள்ளனர். நிச்சயம் இந்த ஆண்டின் சிறந்த படம், சிறந்த இயக்குநர் விருது பாலாவுக்குத்தான் என்கிறார்கள்.

பாலாவை கடுமையாக விமர்சனம் செய்யும் பலரும் இந்தப் படத்தை சிலாகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் பலரும் சொல்லியிருக்கும் ஒரே விஷயம் (குறையாக அல்ல..), படத்துக்கு இளையராஜாவின் இசை இருந்திருந்தால் ஒரு காவியம் முழுமை பெற்ற உணர்வு கிடைத்திருக்கும் என்பதுதான். அது யார் கையிலும் இல்லையே!

 

நான் தமிழ் பையன், எனக்கும் தமிழுணர்வு உள்ளது: மாணவர்கள் உண்ணாவிரத பந்தலில் சிம்பு பேச்சு

சென்னை: இலங்கை விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்து வரும் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களை நடிகர் சிம்பு சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அம்பேதகர் சட்டக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் பந்தலுக்கு நேற்று நடிகர் சிலம்பரசன் வந்தார்.

அவர் மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

simbu visits fasting ambedkar law college students

அப்போது சிம்பு பேசியதாவது,

நானும் ஒரு தமிழ் பையன். எனக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது என்பதால் தான் இங்கு வந்துள்ளேன். பிறர் முன்பு பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக நான் இங்கு வரவில்லை. அந்த பெயரை நான் நன்றாகவே சம்பாதித்து வைத்துள்ளேன்.

மாணவர்கள் என்றால் நன்றாக படம் பார்ப்போம், ஜாலியாக இருப்போம், நன்றாக சுற்றுவோம் என்ற கருத்து சமுதாயத்தில் உள்ளது. ஒரு முக்கியமான விஷயத்திற்கு மாணவர்களாலும் குரல் கொடுக்க முடியும் என்பதை தெரிவிக்கும் வகையில் நீங்கள் போராடி வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எனவே, ஒரு தமிழனாக நானும் உங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்துள்ளேன்.

மனதை தளரவிட வேண்டாம். நிச்சயமாக நல்ல விஷயம் ஒன்று நடக்கும் என்று நினைக்கிறேன். சிறியதாக நடக்கிற ஒரு விஷயம் தான் நாளைக்கு பெரிதாக மாறும். என்றைக்குமே என் ஆதரவு உங்களுக்கு உண்டு. தைரியமாக இருங்கள் என்றார்.

 

அம்மா பார்த்த உறவுக்கார மாப்பிள்ளையை மணக்கும் த்ரிஷா?

Trisha Settle Down This Year   

சென்னை: நடிகை த்ரிஷா உறவுக்காரர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார். த்ரிஷா இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே அவருக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் காதல் என்று பல காலமாக பேசப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவருமே தாங்கள் நண்பர்கள் தான் என்று கூறி வந்தனர்.

இந்நிலையில் த்ரிஷாவின் அம்மா உமா தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளாராம். மாப்பிள்ளை வேறு யாருமில்லை அவர்களுடைய உறவுக்காரர் தானாம். அவர்கள் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் என்று கூறப்படுகிறது.

த்ரிஷா ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படங்களில் நடித்து வருகிறார். அவரைத் தேடி வாய்ப்புகள் வந்தாலும் அதை அவர் ஏற்கவில்லை. திருமணத்தை மனதில் வைத்து தான் அவர் புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

 

'9'தாராவின் ராசி நம்பர் 5!.

Nayanthara S Numerology Sentiment

அழகு தேவதை நயன்தாராவிற்கு இப்பொழுது நியூமராலஜியில் அதிக நம்பிக்கை வந்துள்ளதாம். பெயரில் 9 இருந்தாலும் அவரது அதிர்ஷ்ட எண் 5ஆம்.

முன்பு சிம்புவுடனும், பிரபுதேவாவுடனும் பரபரப்பாக செய்திகளில் வலம் வந்த நயன்தாரா, பின்பு இருவராலுமே அதிக மனக்கஷ்டத்திற்கு உள்ளானது அனைவரும் அறிந்ததே. வாழ்க்கையில் துன்பம் வரும் வேளையில் , மனிதர்களுக்கு ஜோசியம் மீது அதீத நம்பிக்கை வருவது சகஜமே. நயன்தாராவும் அதற்கு விதி விலக்கல்ல...

தற்போது, நியூமராலஜியில் அதிக நம்பிக்கை பிறந்துள்ளதாம் நயனதாராவுக்கு. அவரது அதிர்ஷ்ட எண் 5 ஆம். இதையடுத்து தனது வண்டியின் பதிவு எண்களாக 5ன் கூட்டுத்தொகை வருமாறு பார்த்துக்கொள்கிறாராம். பொதுவாக, நியூமராலஜியில் 5ம் எண் என்பது வெற்றியின் எண்ணாக சொல்லப்பட்டாலும், கொந்தளிப்பையும், ஏற்ற இறக்கத்தையும் தரும் குணமும் அந்த எண்ணிற்கு உண்டாம்.

நயனதாராவுக்கு என்ன கொந்தளிப்பு ஏற்படப் போகிறதோ....

 

கன்னடப் படத்துக்காக அர்ஜூனுக்கு சிறந்த நடிகர் விருது!

Best Actor Award Arjun

பிரசாத் என்ற கன்னடப் படத்தில் நடித்ததற்காக அர்ஜுனுக்கு கர்நாடக அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது.

கன்னடத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் பிரசாத். இளையராஜா இசையில், மனோஜ் சாத்தி இயக்கியிருந்தார். மாதுரி பட்டாச்சார்யா ஹீரோயினாக நடித்திருந்தார்.

பிரபல தொழிலதிபர் அசோக் கெனி தயாரித்த படம் இது. ரஜினி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தை ஏற்கெனவே பாராட்டியிருந்தனர்.

இந்தப் படம் பெர்லின் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. இப்போது கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருது, படத்தின் நாயகன் அர்ஜூனுக்குக் கிடைத்துள்ளது.

இதுகுறித்து நடிகர் அர்ஜூன் கூறுகையில், "பிரசாத் என் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படம். எனக்குப் பிடித்த படம். இந்த விருது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது," என்றார்.

 

தந்தி டிவியில் செல்லப்பிராணிகளுக்கான செல்லமே!

Pet Show On Thanthi Tv

மனிதர்களுடன் நட்பு பாராட்டும் நன்றியுள்ள பிராணிக்களுக்காக செல்லமே நிகழ்ச்சி தந்தி டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் நாய் வளர்க்கவேண்டும் என்று அனைவருக்கும் ஆசை வருமாம்.

இந்த பரந்த உலகம் மானுடனுக்கு மட்டுமல்ல... பிற ஜீவராசிகளுக்கும் சேர்த்து தான். மனிதனுக்கு மனிதன் தோழமையோடு இருப்பது புதுமையல்ல... பலருக்கு தேவையின் அடிப்படையில் இந்த தோழமை நீடிக்கிறது. ஆனால் ஒரு பங்கு அன்பு செலுத்தினால் ஆயிரம் மடங்கு திரும்ப வழங்கும் பிராணிகள், மனிதர்களுக்கும் செல்லம் தானே.

‘செல்லமே' நிகழ்ச்சியை வழங்கும் ஷாலினி, செல்லப் பிராணிகளை வளர்க்கும் வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்து, அவற்றோடு அளவளாவுவார். சிரிப்பார். கண் கலங்குவார். பார்ப்போரை நெகிழ வைப்பார். தெரு நாய்கள் கூட அவரது அன்புப் பார்வையிலிருந்து தப்புவதில்லை.

செல்லப்பிராணிகளின் இயல்புகள், அவற்றின் உணவு, அவற்றை பராமரிக்க தேவைப்படும் மருந்துகள், இருப்பிட வசதி போன்ற நம் அவசரயுக வாழ்க்கையில் நாம் யோசிக்காத பல மென்மையான விஷயங்களை இந்நிகழ்ச்சி பேசுகிறது.

தந்தி தொலைக்காட்சியில் செவ்வாய்க்கிழமை தோறும் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது ‘செல்லமே' நிகழ்ச்சி.