மோகன்லால் நடிக்கும் அடுத்த நேரடி தமிழ் படம் வெற்றிமாறன்

மோகன்லால் நடிக்கும் அடுத்த நேரடி தமிழ் படம் வெற்றிமாறன்

மலையாளத்தில் எவ்வளவோ இயக்குநர்கள் காத்திருந்தாலும், தொடர்ந்து நேரடி தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் நடிகர் மோகன்லால்.

சமீபத்தில் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்துவரும் அவர், அடுத்து வெற்றிமாறன் என்ற படத்தில் நடிக்கிறார்.

மோகன்லால் மலையாளத்தில் முன்னணியில் இருந்தாலும், வசிப்பது சென்னையில்தான்.

அவர் தமிழில் நடித்த முதல் படம் மணிரத்னம் இயக்கிய இருவர். அடுத்து நாசர் இயக்கிய பாப்கார்ன் படத்தில் நடித்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிவிட்டு கமலுடன் உன்னைப் போல் ஒருவனில் நடித்தார்.

இப்போது விஜய்யுடன் இணைந்து ஜில்லா படத்தில் நடித்து வரும் மோகன்லால் அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை மேஜர் ரவி இயக்குகிறார் ஏற்கெனவே இவர் ஜீவா-மோகன்லாலை வைத்து அரண் படத்தை இயக்கி இருக்கிறார்.

மாணவிகளை கடத்தும் மாஃபியா கும்பலை பற்றி கதையாக இது உருவாகிறது. தூத்துக்குடி துறைமுகப் பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.

 

அடடா... வைகைப் புயலின் செகன்ட் இன்னிங்ஸுக்கு வந்த சோதனை!

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வைகைப் புயல் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார் என்று மகிழ்ந்த வேளையில், அதில் மண்ணள்ளிப் போட்டுவிட்டது ஒரு செய்தி.

அது, அந்தப் படமே கிட்டத்தட்ட ட்ராப் என்பதுதான்.

காரணம், ஒளிப்பதிவாளர் கிடைக்காததோ அல்லது வேறு காரணங்களோ இல்லை. இயக்குநருக்கும் புயலுக்கும் சுத்தமாய் ஒத்துப் போகவில்லையாம்.

ஆரம்பத்திலிருந்தே புயலின் யோசனைகள் எதையும் டைக்டர் கேட்பதாய் இல்லையாம். ஏதோ நாம்தான் அவருக்கு மறுவாழ்க்கை தரப்போகிறோம் என்ற நினைப்பில் டைரக்டர் நடந்து கொண்டதாக புயல் தரப்பில் புகார்.

நம்மைய மதிக்கவே மாட்டேங்குறான்யா அந்தாளு, என டைரக்டர் தரப்பில் பஞ்சாத்து.

இதை ரொம்ப நாளாகப் பார்த்து பொறுமையிழந்த புரொடக்ஷன் தரப்பு, படத்தையே நிறுத்தி விட்டது. இப்போது டைரக்டர் அதே நிறுவனத்துக்காக குதிரை ஓட்டக் கிளம்பிவிட்டார்.

புயலோ சூப்பர் ஸ்டாரின் ஆஸ்தான நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கிறாராம்!

 

தனுஷை பாலிவுட் ஏன் கொண்டாடுகிறது தெரியுமா?

தனுஷை பாலிவுட் ஏன் கொண்டாடுகிறது தெரியுமா?

மும்பை: தனுஷின் முதல் இந்தி படமான ராஞ்ஹனாவைப் பார்த்த வட இந்திய மக்கள் அவரின் நடிப்பை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டுள்ளனர்.

தனுஷ், சோனம் கபூர் நடித்த ராஞ்ஹனா இந்தி படம் கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் தனுஷின் நடிப்பில் அசந்துவிட்டனர். அடடா என்ன அருமையாக நடித்திருக்கிறார், படத்தை தனுஷுக்காக பார்க்கலாம் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

என்னடா, நம்ம தனுஷை நமக்கு தெரியாதா, இவர்கள் என்ன இப்படி கொண்டாடுகிறார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்? காரணம் இருக்கிறது. பாலிவுட் இளம் ஹீரோக்கள், வயதாகியும் ஹீரோவாகவே தொடரும் ஹீரோக்கள் என அனைவரும் 6 பேக்கை காட்டுவதில் தான் குறியாக உள்ளனர். அப்படிபட்டவர்களுக்கு மத்தியில் ஆமீர் கான், ரன்பிர் கபூர், ஷாருக் மாதிரி சிலர் தான் நடிக்கத் தெரிந்தவர்கள் என்று கூறலாம்.

இப்படி நடிப்பை விட்டு பாடியில் கவனம் செலுத்தும் நடிகர்களுக்கு மத்தியில் நடிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். ஆள் பார்க்க சுள்ளானாக இருந்தாலும் நடிப்பில் தன்னை யார் என்று நிரூபித்திருக்கிறார். அதனால் தான் பாலிவுட்டும், வட இந்திய மீடியாக்களும் அவரை கொண்டாடுகிறது. படத்தின் நாயகி சோனம் கபூர் பற்றி ஒருத்தர் கூட பேச மாட்டேன் என்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் ராஞ்ஹனா படம் ரூ.21 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

முருகதாஸ் படத்தில் நடிக்க உங்களுக்கு ஆசையா?

முருகதாஸ் படத்தில் நடிக்க உங்களுக்கு ஆசையா?

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் தனது படத்தில் நடிக்க ஆட்கள் தேவை என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டின் வெற்றி இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். கோலிவுட் தவிர பாலிவுட்டுக்கும் சென்று அங்கும் வெற்றி பெற்றுள்ளார். அவரது படத்தில் நடிக்க ஆட்கள் தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நடிப்பில் ஆர்வமுள்ள 65 முதல் 75 வயது வரை உள்ள 3 முதியவர்கள் தேவை. விருப்பமுள்ளவர்கள் உங்கள் புகைப்படங்களை Teammurugadoss@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். நாடகம் மற்றும் மேடையில் நடிப்பவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

 

ஜொலிக்குமா சூர்யாவின் 'துருவ நட்சத்திரம்'?

ஜொலிக்குமா சூர்யாவின் 'துருவ நட்சத்திரம்'?

கவுதம் மேனன் இயக்கம், தமிழ் சினிமாவில் இன்றைக்கு அனைவருக்கும் பிடித்தமான ஹீரோவாகத் திகழும் சூர்யா நடிப்பு, இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இயக்கம்... என பெரிய எதிர்ப்பார்ப்புடன் அறிவிக்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம், இன்னும் அறிவிப்போடே நிற்கிறது.

கடந்த ஜூன் 17-ம் தேதியே படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கவுதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் தயாராக நிற்கிறார்கள். ஆனால் சூர்யாதான் இன்னும் தயாராக இல்லை.

பொதுவாக ஒரு படத்துக்கு கமிட் ஆன பின், இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளமாட்டார் சூர்யா. ஆனால் முதல் முறையாக அவர் படப்பிடிப்பை ஆரம்பிக்க முடியாத அளவு தயக்கம் காட்டி வருகிறார்.

இந்தப் படத்தை கவுதம் மேனனே தன் போட்டான் கதாஸ் மூலம் தயாரிக்கிறார். சூர்யாவுடன், சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஆனால் சூர்யாவின் ஜோடி யார் என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை. இந்தப் படத்துக்காக முதலில் த்ரிஷாவை அணுகினாராம் இயக்குநர். அவரும் ஒப்புக் கொண் நிலையில், படப்பிடிப்பு தாமதமானதால் த்ரிஷா விலகிக் கொண்டதாக கூறுகிறார்கள். ஆனால் த்ரிஷா வேண்டவே வேண்டாம் என சூர்யா கண்டிப்புடன் கூறியதால்தான் த்ரிஷா நடிக்கவில்லை என்று ஒரு பேச்சு நிலவுகிறது. மேலும் சூர்யாதான் அமலா பாலை ஒப்பந்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம்.

ஆனால் இப்போது அமலாவும் இந்தப் படத்தில் இல்லை என்கிறார்கள். படம் எப்போது தொடங்கும் என்பதும் நிச்சயமாகத் தெரியவில்லை. இதனால் துருவ நட்சத்திரம் தொடங்குமா, அல்லது யோஹன் மாதிரி ஆகிவிடுமா என கவலையோடு கைபிசைகிறது கவுதம் யூனிட்!

 

இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் கூட கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகணுங்க!- விஷால்

இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் கூட கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகணுங்க!- விஷால்

சென்னை: ஒரு படம் சிறப்பாக வர ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தால் மட்டும் போதாதுங்க... ஹீரோவுக்கும் இயக்குநருக்கும் கூட கெமிஸ்ட்ரி நன்றாக இருக்க வேண்டும், என்றார் நடிகர் விஷால்.

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் பட்டத்து யானை. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அறிமுகமாகிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

விழாவில் விஷால் பேசும்போது, ''பட்டத்து யானை முழு நேர நகைச்சுவை படமாக வந்துள்ளது. கமர்சியலாகவும், அதே சமயம் தரமான பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். கதாநாயகி ஐஸ்வர்யாவுக்கு இது முதல் படம். என் குருநாதர் அர்ஜுனின் மகள். நல்ல திறமைசாலி. எங்கள் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் அவருக்கு அனைவரின் ஆதரவையும் கோருகிறேன்.

ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது கதாநாயகன்- நாயகிக்கிடையே உள்ள கெமிஸ்டிரி சிறப்பாக இருந்தால் படம் நன்றான வரும் என்கிறார்கள். ஆனால், கதாநாயகனுக்கும்- இயக்குனருக்கும் இடையே கெமிஸ்டிரி சிறப்பாக இருந்தாலும் படம் நன்றாக அமையும். இந்த படத்தில் எனக்கும், இயக்குனர் பூபதி பாண்டியனுக்கு இடையே கெமிஸ்டிரி நன்றாக இருந்தது,'' என்றார்.

 

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் - சைந்தவி திருமணம் - ஜூன் 27-ம் தேதி நடக்கிறது!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் - சைந்தவி திருமணம் - ஜூன் 27-ம் தேதி நடக்கிறது!

சென்னை: முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிவி பிரகாஷ்குமார் - பின்னணி பாடகி சைந்தவி திருமணம் வரும் ஜூன் 27-ம் தேதி வியாழக்கிழமை சென்னையில் நடக்கிறது.

‘வெயில்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர், ஜி.வி.பிரகாஷ் குமார். இவர், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார்.

கிரீடம், மதராச பட்டினம், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, தெய்வத்திருமகள், தாண்டவம், பரதேசி, தலைவா ஆகிய படங்களுக்கும் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார். பாரதிராஜா, மகேந்திரன் போன்ற இயக்குநர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இவருக்கும், சினிமா பின்னணி பாடகி சைந்தவிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்துக்கு இருவரது பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து நிச்சயதார்த்தம் நடந்தது.

ஜீ.வி.பிரகாஷ் குமார்-சைந்தவி திருமணம் வருகிற 27-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில் நடக்கிறது. மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, அன்று மாலை 6-30 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இருதரப்பு குடும்பத்தினரும் கவனித்து வருகிறார்கள்.

 

சோலார் பேனல் மோசடி: நடிகை ஷாலு மேனனிடம் போலீஸ் விசாரணை!

சோலார் பேனல் மோசடி: நடிகை ஷாலு மேனனிடம் போலீஸ் விசாரணை!

திருவனந்தபுரம்: கேரள சோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை ஷாலு மேனனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கேரளாவில் சோலார் பேனல் மோசடி விவகாரம் தொடர்பாக தொழில் அதிபர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் பிஜூ ராதாகிருஷ்ணன் மீது அவரது முதல் மனைவியை கொலை செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. அது தொடர்பாகவும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் பாதுகாவலர் உள்பட 3 அரசு ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். உம்மன் சாண்டி ராஜினாமா செய்யக்கோரி எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொழில் அதிபர் பிஜூ ராதாகிருஷ்ணனுடன் நடிகை ஷாலு மேனனுக்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறப்பட்டது. அதனை ஆரம்பத்தில் ஷாலு மேனன் மறுத்து இருந்தார்.

இந்த நிலையில் நடிகை ஷாலுமேனனை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பினர்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 4.15 மணிக்கு திருவல்லா டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு தனது தாயார் கலா தேவியுடன் சென்று ஷாலு மேனன் ஆஜரானார்.

அவரிடம் கூடுதல் டி.ஜ.பி. ஹேமச்சந்திரன், திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் பிரஜி ஜேக்கப், கோட்டயம் டி.எஸ்.பி. அஜித் ஆகியோர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரது தாயார் கலா தேவியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பின் வெளியில் வந்த ஷாலு மேனன் பத்திரிகையாளர்களின் கேள்விகளைக் கண்டு கொள்ளாமல் காரில் ஏறிச் சென்றார்.

 

இனி ஹீரோயின்களுக்கு சம்பளம் பாக்கி வையுங்கள்! - கேயார் போட்ட குண்டு

இனி ஹீரோயின்களுக்கு சம்பளம் பாக்கி வையுங்கள்!- கேயார் போட்ட குண்டு

சென்னை: இனி ஹீரோயின்களுக்கு கொஞ்சம் சம்பள பாக்கி வையுங்கள் என்று அதிரடியாக கருத்து தெரிவித்தார் இயக்குநரும் தயாரிப்பாளருமான கேயார்.

பட்டத்து யானை பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "இப்போதெல்லாம் ஹீரோயின்கள் பெரும்பாலும் ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. ஆனால் பாலிவுட்டில் அப்படியில்லை. அங்கே விளம்பர நிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் ஹீரோயின்கள் வந்தே தீர வேண்டும்.

இந்தப் படத்தின் ஹீரோயின் ஐஸ்வர்யா அர்ஜுன் பரவாயில்லை... புரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவரைப் பாராட்டுகிறேன்.

ஒரு படத்தில் நடித்தவர்கள் அனைவரும் அந்தப் படம் தொடர்பான நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும். ஆகையால் படம் முடிந்தவுடன் சம்பளம் முழுவதையும் கொடுக்காமல், சிறிதளவு சம்பளத்தை பாக்கி வைத்து, படம் விளம்பரப்படுத்துதல் வேலை முடிந்ததும் அந்த சம்பளத்தை கொடுக்கலாம்,'' என்றார்.

கேயாரின் பேச்சு நடிகர் நடிகையர் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதில் நடிகர் சங்கம் தலையிட வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

மாமிக்கு என்னாச்சி... ஷூட்டிங்கையே காலி பண்றாங்களே!

இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள் பத்துவருஷமாக கோலிவுட்டில் கொடி நாட்டி வரும் அந்த டாப் ஹீரோயின் பற்றி.

காரணம், அம்மணி காட்டும் அலட்சியமும் ஷூட்டிங்கை அடிக்கடி கேன்ல் செய்து கடபப்பேற்றுவதும்தானாம்.

அவ்வப்போது பார்ட்டி சர்ச்சைகளில் சிக்கினாலும் சமீப காலம் வரை தொழிலில் ரொம்பவே சின்சியர் சிகாமணியாகத்தான் இருந்தாராம் நடிகை. ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவரின் அட்ராசிட்டி தாங்க முடிவில்லை என கதறுகிறார்கள் படக்குழுவினர்.

ஒன்று படப்பிடிப்புக்கே வருவதில்லை... அப்படியே வந்தாலும் படக்குழுவினரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் மணிக்கணக்காக நண்பர்களுடன் அரட்டையில் இறங்கிவிடுகிறாராம். குறிப்பாக சிரிப்பு படப்பிடிப்பில் தன் அம்மாவை அவமானப்படுத்தியதிலிருந்து அந்தக் குழுவை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லையாம்.

என்னாச்சி... சீரியஸாகவே மாப்பிள்ளை பார்க்கிறார்களோ!

 

மரண பயம் ஏஞ்சலீனா ஜோலியின் கண்களில் தெரிகிறதாம்...

லண்டன்: பரம்பரை நோயாக துரத்தி வரும் கேன்சரினால், விரைவாக மரணம் ஏற்பட்டு விடுமோ என அஞ்சுகிறாராம் ஏஞ்சலினா ஜோலி.

ஏஞ்சலீனாவின் அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி மற்றும் ஒரு சித்தி முதலானோர் கேன்சர் பாதிப்பினாலேயே சீக்கிரமாகவே உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக, கேன்சரினால் பாதிக்கப்பட்ட 38 வயது ஏஞ்சலினா சமீபத்தில் அறுவைச் சிகிச்சை மூலம் தனது மார்பகங்களை அகற்றினார்.

மரண பயம் ஏஞ்சலீனா ஜோலியின் கண்களில் தெரிகிறதாம்...

ஏஞ்சலீனாவுக்கு மரண பயம் ஏற்பட்டதனாலேயே விரைவாக மார்பக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதாக அவரது நெருங்கிய தோழி மரியா தெரிவித்துள்ளார். மேலும், ஏஞ்சலீனாவின் சொந்த மகள்களான 7 வயது ஷிலாக் மற்றும் 4 வயது விவினி குறித்தும் ஏஞ்சலினாவிற்கு கவலை அதிகரித்துள்ளதாம். ஏனென்றால், கேன்சர் அவர்களது ரத்தத்தில் பாரம்பரியமாக கலந்துள்ளதாம்.