நடிகர் சந்தானம் என் கதையைத்தான் திருடி கண்ணா லட்டு தின்ன ஆசையா என படமாக எடுத்துவிட்டார் என்று உதவி இயக்குநர் ஒருவர் இன்று கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.
தனது இன்று போய் நாளை வா படத்தைத்தான் சந்தானமும் ராம நாராயணனும் மோசடி செய்து படமாக எடுத்துவிட்டனர் என இயக்குநர் கே பாக்யராஜ் போலீசில் புகார் கொடுத்துள்ள நிலையில், இதே கதைக்கு சொந்தம் கொண்டாடி உதவி இயக்குநர் நவீன் சுந்தர் என்பவரும் புகார் கொடுத்துள்ளார்.
அவரது புகாரில், "அன்புள்ள சிம்பு' என்ற கதையை நான் ஒரு கதை எழுதி வைத்திருந்தேன். அதை படமாக்குவதற்காக நடிகர் ஸ்ரீநாத்திடம் கூறினேன். அவர் நடிகர் சந்தானத்திடம் இந்த கதையை கூறி சினிமாவாக எடுப்பதற்கு உதவி செய்வதாக கூறினார்.
அதன்படி மேற்கு மாம்பலத்தில் திருமண மண்டபம் ஒன்றில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்' படப்பிடிப்பின் போது சந்தானத்தை சந்தித்து எனது கதையை கூறினேன். நடிகர் சிம்புவை அந்த படத்தில் நடிக்க வைப்பதற்கும் நான் விரும்பினேன். இதற்கு சந்தானம் உதவி செய்வதாக கூறி எனது கதையை வாங்கி படித்தார்.
இந்நிலையில் நான் கூறிய கதையை வைத்து எனது அனுமதி இல்லாமல் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தை தயாரித்து அதில் சந்தானம் நடித்துள்ளார். சிம்புவும் அந்த படத்தில் நடித்திருக்கிறார்.
இதுபற்றி சந்தானத்திடம் தொடர்பு கொள்ள முயன்றபோது என்னை சந்திப்பதை அவர் தவிர்த்தார். அவருடைய செயல் ஒரு திருட்டு குற்றமாகும். எனவே சந்தானம் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.
இந்தப் புகாரில் உண்மை இருக்கிறதா?
ஒரு படத்தில் வடிவேலுவும் அவரது கூட்டாளியும் கையில் காசில்லாமல் ஓட்டலில் சாப்பிடுவதற்காக ஒரு பலே திட்டம் போடுவார்கள். சாப்பிட்டு முடித்ததும் வடிவேலுவின் ஒட்டைப் பர்சை அடித்துக் கொண்டு கூட்டாளி ஓடுவார். அவரைத் துரத்திக் கொண்டு ஓடுவதுபோல வடிவேலுவும் ஓடி தப்பித்துக் கொள்வதாய் திட்டம்.
ஆனால் ஓட்டலில் வேறு நபரின் நிஜபர்சை அடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்க, வடிவேலு அய்யோ என் பர்ஸை அடிச்சிட்டுப் போறான் என கூப்பாடு போடுவார். பர்சுக்கு நிஜமான சொந்தக்காரர் வடிவேலுவை நாலு சாத்து சாத்துவார்.
இந்த நவீன் சுந்தரின் புகார் கிட்டத்தட்ட, 'என் பர்சைக் காணோம்' என்று வடிவேலு கூப்பாடு போட்டதைப் போலத்தான் இருக்கிறது. காரணம் பாக்யராஜின் படம் வந்தது 1981-ல். இந்த சுந்தர் என்பவர் சொல்லும் கதை 2012-ல் எழுதப்பட்டது. சந்தானமும் ராம நாராயணனுமே 'இது பாக்யராஜின் இன்று போய் நாளை வா படத்தின் ரீமேக்தான்' என்று சொல்லிவிட்ட பிறகு, தனி காமெடி ட்ராக் போட முயற்சிக்கிறார் இந்த உதவி இயக்குநர் என்பதுதான் அவரது புகாரைக் கேட்ட இயக்குநர்கள் அடித்த கமெண்ட்!