ஆடியோ நிறுவனம் தொடங்கியது ஸ்டுடியோ கிரீன்.. முதல் ரிலீஸ் கொம்பன்!

தொடர்ந்து வெற்றிப் படங்களாகத் தயாரித்து வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், இப்போது ஆடியோ நிறுவனம் தொடங்கி, சிடிக்களையும் வெளியிட ஆரம்பித்துள்ளது.

2006ம் ஆண்டும் சூர்யா-ஜோதிகா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சில்லுனு ஒரு காதல். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இந்த நிறுவனத்தின் முதல் படம் இது.

ஆடியோ நிறுவனம் தொடங்கியது ஸ்டுடியோ கிரீன்.. முதல் ரிலீஸ் கொம்பன்!  

சூர்யா, கார்த்தி நடித்து வரும் பெரும்பாலான படங்களை ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தயாரிப்பது மட்டுமல்லாமல் படங்களை வாங்கி விநியோகமும் செய்து வருகிறது.

இப்போது இந்நிறுவனம் ஆடியோ நிறுவனத்தையும் தொடங்கவுள்ளது. கார்த்தி-லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள கொம்பன் படம் மூலம் தனது ஆடியோ கம்பெனியான கிரீன் ஆடியோவை அறிமுகம் செய்யவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 5ம் தேதி நடக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘மாஸ்' படத்தின் ஆடியோவையும் கிரீன் ஆடியோ நிறுவனமே வெளியிடுகிறது.

 

பிரபல ஒளிப்பதிவாளர் - இயக்குநர் ஏ வின்சென்ட் மரணம்

மூத்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஏ வின்சென்ட் இன்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.

தமிழில் யார் பையன், உத்தம புத்திரன், கல்யாணப் பரிசு, விடிவெள்ளி, தேன் நிலவு, போலீஸ்காரன் மகள், நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் வின்சென்ட்.

ஸ்ரீதர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் ஒளிப்பதிவாளராகத் திகழ்ந்தார்.

பிரபல ஒளிப்பதிவாளர் - இயக்குநர் ஏ வின்சென்ட் மரணம்

அமரர் எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண் போன்ற படங்களுக்கும், சிவாஜி கணேசன் நடித்த கவுரவம், வசந்த மாளிகை, அவன் ஒரு சரித்திரம் போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏராளமான தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ள வின்சென்ட், 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இரு வீடுகள், எங்களுக்கும் காலம் வரும், நாம் பிறந்த மண், திருமாங்கல்யம் போன்றவை இவர் இயக்கிய தமிழ்ப் படங்களில் சில. மலையாளத்தில் பல படங்கள் இயக்கியுள்ளார்.

1997-ம் ஆண்டு அன்னமய்யா தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ததோடு, ஓய்வை அறிவித்தார்.

2003-ம் ஆண்டு இந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் இவருக்கு கவுரவ உறுப்பினர் பதவி அளித்தது. பிரபல ஒளிப்பதிவாளர்கள் ஜெயனன் வின்சென்ட் மற்றும் அஜயன் வின்சென்ட் இவரது மகன்களாகும்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வின்சென்ட் இன்று மரணமடைந்தார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் வின்சென்டின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

சினிமாக்காரன் சாலை 10: 'ஜாதிகள் உள்ளதடி... அட போப்பா!'

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

1.யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

2. என் தந்தையும் உன் தந்தையும்
ஒரே ஊர்,
வாசுதேவ நல்லூர்.
என் தந்தையும் உன் தந்தையும்
ஒரே ஜாதி,
திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்.
நானும் நீயும் உறவின்முறை,
எனது ஒன்றுவிட்ட
அத்தை பெண் நீ.
எனவே
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே!

இன்று இயக்குநர் கவுதம் வாசுதேவ ‘மேனனு'க்கு பிறந்தநாள் என்று முகநூலில் அவருக்கு குவிந்த வாழ்த்துக்கள் மூலம் தெரிந்துகொண்டேன். ஆயிரம் ரூபாய்க்கு பூச்செண்டு வாங்கி எனது வாழ்த்துக்களையும் கூரியர் மூலம் அனுப்பி இருக்கிறேன் கவுதம். பெற்றுக் கொள்ளுங்கள்.

சினிமாக்காரன் சாலை 10: 'ஜாதிகள் உள்ளதடி... அட போப்பா!'

கமல், சிம்பு, சூர்யா, மாதவன், அஜீத் என்று பல முன்னணி நடிகர்களை வைத்து ஓரளவுக்கு சிறப்பான படங்களை இயக்கியவர் என்ற முறையில் இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் ஆதர்சம் இந்த கவுதம் மேனன்.

‘மின்னலே' படத்தில் வெறும் கவுதமாக இருந்தவர் சில படங்களுக்குப் பின்னர் கவுதம் மேனன் ஆகி அப்புறம் கவுதம் வாசுதேவ் மேனன் என்று ஆக்கிக்கொண்டார்.

கவிதை 1 குறுந்தொகை இலக்கியத்தில் மட்டுமே சாத்தியம். கவிதை 2 மீரா எழுதியது. காலங்காலமாக நம் சமூகம் ஜாதி விஷயத்தில் மீராவின் கவிதையாகவே இருந்து விடப்போகிறது என்பதில் எவ்வித ஐயமும் எனக்கு இல்லை.

ஏனெனில் கடந்த வாரம் விஜய் டி.வி. ‘நீயா நானா' நிகழ்ச்சியில் கூட வேறு சாதிக்காரனுக்கு, அதுவும் கீழ்சாதிக்காரனுக்கு பொண்ணு தரவே மாட்டோம் என்று வெட்கமில்லாமல் முழங்க ஒரு கூட்டத்தால் முடிகிறது.
அவர்களில் பெரும்பாலும் படிப்பறிவில்லாத பாமரர்கள் என்று சொல்லி ஒதுக்கி விடலாம். அதே நிகழ்ச்சியில் இன்னும் காட்டுமிராண்டிகள் காலத்திலேயே இருக்கிறோம்' என்று சுப.வீ. பொறுமினாரே, அப்படிப் பொறுமிக்கொண்டே இருந்துவிட வேண்டியதுதான்.

ஆனால் கலைத்தாயின் பிள்ளைகள், சமூகத்துக்கு, அதன் விடிவுக்கு வழிகாட்ட வந்தவர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர்கள் மத்தியில் வரவர சாதி உணர்வு வெறிகொண்டு வளர்ந்து வருவதாகவே தோன்றுகிறது.

சமூகத்தின் அத்தனை விரோதிகளையும் தனது ஹீரோவின் துப்பாக்கி கொண்டு சுட்டுப் பொசுக்கும் கவுதம் வாசுதேவனால் தனது பெயரில் வால் போல் நீட்டிக்கொண்டிருக்கும் மேனனை நறுக்க முடியவில்லை. கோட்டுக்கு டை அணிவதுபோல் அவர் தனது ஜாதியை அணிந்துகொண்டு திரிகிறார்.

இந்த கவுதம் மேனன் ஒரு உதாரணம்தான். இன்று சினிமாவில் பாதிக்கும் மேற்பட்டோர் பெயரில் போட்டுக்கொண்டோ, அல்லது வாலைச் சுருட்டி வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரங்களில் எல்லாம் வெளியே எடுத்து ஆட்டிவிட்டுக் கொண்டேதான் திரிகிறார்கள்.

சினிமாக்காரன் சாலை 10: 'ஜாதிகள் உள்ளதடி... அட போப்பா!'

மும்மொழி கண்ட முன்னணி இயக்குநர் அவர். தொடர்ந்து கவனித்து வந்தால் ஒன்று புரியும். எப்போதெல்லாம் பிரச்சினைகள் பெரிதாகின்றதோ அப்போதெல்லாம் ‘எனக்குப் பின்னால் என் சாதிக்காரர்கள் இருக்கிறார்கள்'. என்று மிரட்டுவார். இப்படி சாதி பார்ப்பவர் என் சாதிக்காரர்கள் மட்டும் என் படம் பார்த்தால் போதும் என்று சொல்ல முன்வருவாரா?

தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் மூன்று பேர் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்களது உதவியாளர்களில் 90 சதவிகிதம் பேர் 'தற்செயலாக' அவர்களது ஜாதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இந்த ‘தற்செயலாக சொந்த ஜாதிக்காரர்கள்' அமைகிற ஜாதி பாலிடிக்ஸை, நான் மிகவும் நேசிக்கிற இயக்குநர்கள் அலுவலகத்தில் கூட பல வருடங்களாய் பார்த்துக்கொண்டிருக்கிறேன். தோளில் கைபோட்டு நட்புக்காட்டி அங்கு பூணூல் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துகொள்கிற ஆதிகால டெக்னிக் போல இது சினிமாவெங்கும் பெரும்பாலான இடங்களில் நிரம்பி வழிகிறது.

உத்தமர், மத்திமர் ஆகிய மற்ற இரு காமெடியன்கள் யாரென்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். மூன்றாமவர் கருணாஸ் லொடுக்குப் பாண்டியாக அறிமுகமாகி கொண்டாடப்பட்டபோது அவரது ஜாதி, ஜனங்களுக்குத் தெரியாது. அவரைத் திரையில் பார்த்தாலே சிரித்தார்கள். அறிமுகமான சம்பந்தப்பட்ட ஆண்டிலேயே கமல், ரஜினி படங்கள் உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கொடி கட்டிப்பறந்தார். சம்பாத்தியம் கோடிகளை எட்டியது. எப்போதும் இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் மட்டுமே பயணம் செய்தார்.

ஆனால் இன்று 'வருங்கால முதல்வர்' கனவில் ஒரு ஜாதி சங்கத்தை துவக்கிக் கொண்டு தெருத் தெருவாய் போஸ்டர்கள் ஒட்டித் தள்ளுகிறார். இதனாலேயே சொந்த ஜாதிக்காரர்கள் உட்பட அனைவருமே இவரது நகைச்சுவைக்கு சிரிக்கத் தெரியாமல் முழிக்கிறார்கள். மார்க்கெட் முற்றிலும் சரிந்து, ‘எனக்கு படம் தயாரித்த வகையில் 9 கோடி ரூபாய் கடன் இருக்கிறது' என்று கண்ணீர் வடிக்கிறார்.

இந்தக் கொடூர காமெடிகளுக்கு மத்தியில் சமீப காலமாக ஜாதி நச்சு அதிகமாக வெளிப்பட ஆரம்பித்திருப்பது நடிகைகள் மத்தியில். நவ்யா நாயர்கள், லட்சுமி மேனன்கள், ஜனனி அய்யர்கள், லேகா ஷெட்டிகள், மீரா ரெட்டிகள் என்று ஜாதிப்பெயர் இல்லாமல் எந்த நடிகையும் இண்டஸ்ட்ரிக்குள் கால் எடுத்து வைப்பதில்லை.

சினிமாக்காரன் சாலை 10: 'ஜாதிகள் உள்ளதடி... அட போப்பா!'

குப்புற, மல்லாக்க, பக்கவாட்டில் என்று எப்படிப் படுத்து யோசித்தாலும் பெயருக்குப் பின்னால் இருக்கும் இந்த ஜாதி வால்கள் எந்த இயக்குநரையோ, நடிகரையோ, நடிகையையோ வாழ வைத்ததாக எனக்கு நினைவுகள் இல்லை. ஆனாலும் எதற்காகவோ அந்த முட்டாள்தனத்தைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள்.

நடிகர் சங்கம், சின்னத்திரை நடிகர் சங்கம் போல் எதிர்காலத்தில் அய்யர் நடிகைகள் சங்கம், ஷெட்டி நடிகைகள் சங்கம், மேனன் நடிகைகள் யூனியன் என்று துவங்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே தோணுகிறது!

 

நூறாவது நாள் படம்: மணிவண்ணன் மகன் மீது தயாரிப்பாளர் மகள் புகார்

நூறாவது நாள் படத்தின் உரிமை எங்களிடம் உள்ளது. ஆனால் எங்கள் அனுமதி பெறாமல் படத்தை ரீமேக் செய்ய முயல்கிறார் மணிவண்ணன் மகன் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

விஜயகாந்த், மோகன், சத்யராஜ், நளினி நடித்து, மணிவண்ணன் இயக்கிய படம், ‘நூறாவது நாள்.' எண்பதுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திகில் படம் அது.

இந்த படத்தை மீண்டும் எடுக்கப் போவதாகவும், அதில் ‘சதுரங்க வேட்டை' புகழ் நட்ராஜ் நடிக்கப் போவதாகவும் இயக்குநர் மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன் கூறியிருந்தார்.

நூறாவது நாள் படம்: மணிவண்ணன் மகன் மீது தயாரிப்பாளர் மகள் புகார்

ரகு மணிவண்ணன் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ளார். அமைதிப்படை 2-ல் பிரதான வேடத்தில் நடித்தார். ‘நூறாவது நாள்' படத்தை ஹாலிவுட் பாணியில், ‘ரீபூட்' என்ற தொழில்நுட்பத்தில் தானே இயக்கப் போவதாக அவர் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு ரகு மணிவண்ணன் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், ‘நூறாவது நாள்' படத்தை தயாரித்த எஸ்.என்.எஸ்.திருமாலின் மகள் ஜே.பத்மாவதி ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில், "‘மணிவண்ணன் இயக்கிய நூறாவது நாள், 24 மணி நேரம் ஆகிய 2 படங்களையும் என் தந்தை எஸ்.என்.எஸ்.திருமால் தயாரித்தார் அந்த படங்களின் உரிமைகள் என்னிடம் உள்ளன. இதனை இயக்குநர் மணிவண்ணனே எழுதிக் கொடுத்துள்ளார்.

இப்போது ‘நூறாவது நாள்' படத்தை மீண்டும் இயக்கப் போவதாக ரகு மணிவண்ணன் கூறியிருக்கிறார். இதற்காக, அவர் என்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. படத்தின் உரிமை தயாரிப்பாளரிடம் இருக்கும்போது, அனுமதி பெறாமல் அதை மீண்டும் தயாரிப்பது சட்டப்படி குற்றமாகும்.

இதுதொடர்பாக, ரகு மணிவண்ணனுடன் வேறு யாராவது தொடர்பு வைத்திருந்தால், அவர்களும் அந்த குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதாக கருதப்படுவார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

முனி 3 அல்ல... காஞ்சனா 2!

லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படம் சுமாராகப் போனாலும், அதன் அடுத்த பகுதியான காஞ்சனா பெரும் வரவேற்பைப் பெற்றது. சிறுவர், பெரியவர் என அனைவருமே ரசித்து மகிழ்ந்த படம் அது.

இப்போது அதன் தொடர்ச்சியாக மூன்றாவது பாகத்தை இயக்குகிறார் லாரன்ஸ்.

இந்தப் படத்துக்கு முதலில் 'முனி 3 கங்கா' என்று பொதுவாக பெயர் சூட்டப்பட்டது.

ஆனால் தற்போது இப்படத்தின் தலைப்பை காஞ்சனா-2 ஆக மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.

முனி 3 அல்ல... காஞ்சனா 2!

அதிக பொருட்செலவில் திகில் படமாக தயாராகியுள்ள இப்படத்தை காஞ்சனா போலவே வித்தியாசமான மிரட்டலான படமாக உருவாக்கியிருக்கிறார்களாம். ஆதலால் இப்படத்தின் தலைப்பை மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்திலும் லாரன்சே நாயகனாக நடித்து இயக்குகிறார். இதில் நாயகிகளாக டாப்ஸி, நித்யா மேனன் நடிக்கின்றனர். ஸ்ரீமன், கோவை சரளா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள்.

முதல் இரு பாகங்களிலும் முறையே வேதிகா மற்றும் லட்சுமி ராய் நாயகிகளாக நடித்தனர்.

ஏப்ரல் மாதம் கோடை ஸ்பெஷலாக இப்படம் வெளியாகவுள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.

 

பீகே ரீமேக்... கமலை இயக்கப் போகிறார் பாபநாசம் இயக்குநர்!

இந்தியில் பெரும் வெற்றிப் பெற்ற பீகே படத்தின் தமிழ் ரீமேக் பற்றி தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தப் படத்தில் தான் நடிக்கப் போவதாக கமல் இதுவரை ஒரு சின்ன குறிப்பு கூட தரவில்லை. ஆனாலும் அவர்தான் நடிக்கிறார் என ஏகப்பட்ட செய்திகள்.

இப்போது அவரை இயக்கப் போவது யார் என்ற தகவல் கூட வெளியாகிவிட்டது.

பீகே ரீமேக்... கமலை இயக்கப் போகிறார் பாபநாசம் இயக்குநர்!

கமல் ஹாஸனை வைத்து த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கான பாபநாசத்தை இயக்கியுள்ள ஜீத்து ஜோசப்தான், பீகே ரீமேக்கிலும் கமலை இயக்கப் போகிறாராம்.

இதுகுறித்து ஜீத்து ஜோசப் கூறுகையில், "பீகே ரீமேக்கில் கமலை இயக்கும் வாய்ப்பு வந்திருப்பது உண்மைதான். இதுகுறித்துப் பேசி வருகிறோம். விரைவில் விவரங்களைச் சொல்கிறேன்," என்று கூறியுள்ளார்.

பாபநாசம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.