மாஜி காதலனுடன் நடிக்கிறார் தீபிகா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மாஜி காதலனுடன் நடிக்கிறார் தீபிகா

8/1/2011 4:28:48 PM

ரஜினியின் 'ராணா' படத்துக்கு எந்த நேரத்திலும் கால்ஷீட் தரத் தயார் என்று கூறிய தீபிகா படுகோன் பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார். அயன் முகர்ஜி இயக்க ரன்பீர் கபூர் நடிக்கும் படத்தில் கேத்ரினா கைப் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆனார். நவம்பர் மாதம் ஷூட்டிங் போக ஒப்புக்கொண்டிருந்தார். இப்படத்துக்கு கால்ஷீட் தந்த அதே நேரத்தில் யாஷ் சோப்ரா இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்துக்கும் கால்ஷீட் தந்தார்.     

இதனால் பிரச்னை எழுந்தது. ஏற்கனவே அயன் முகர்ஜி படத்துக்கு இதே மாதத்தில் கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறியும் யாஷ் சோப்ரா கண்டுகொள்ளவில்லை. கொடுத்த தேதியில் ஷூட்டிங் வந்தாக வேண்டும் என்றார். தர்மசங்கடத்தில் ஆழ்ந்த கேத்ரினா ஒருவழியாக அயன் முகர்ஜி படத்திலிருந்து விலக முடிவு செய்தார். இந்த தகவல் தீபிகா படுகோனுக்கு தெரியவர, இயக்குனருக்கு தூது விட்டார். இயக்குனரும் ஓகே சொல்ல உடனடியாக கால்ஷீட் கொடுத்தார். ஹீரோ ரன்பீர், தீபிகாவின் முன்னாள் பாய் பிரெண்ட். ஆனாலும் அவருடன் நடிப்பதில் எந்த ப¤ரச்னையும் இல்லை என்று கூறி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் தீபிகா.




 

'ராணா பணிகள் துவங்கிவிட்டன; அக்டோபர் முதல் முழு வீச்சில் ஷூட்டிங்!'- கேஎஸ் ரவிக்குமார்


ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டதாகவும், அக்டோபரில் முழூவீச்சிலான படப்பிடிப்பு தொடங்குவதாகவும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அறிவித்துள்ளார்.

ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பியுள்ளார். தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் ராணா படப்பிடிப்பு சில மாதங்களாக நிறுத்தப்பட்டது.

இப்போது ரஜினி பூரண குணம் அடைந்துள்ளதால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

அக்டோபரில் மீண்டும் தொடங்க உள்ளனர். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட மாட மாளிகை அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாயின.

இதுபற்றி கே.எஸ். ரவிக்குமாரிடம் கேட்ட போது, “ரஜினி முழுக்க தயாரான பிறகே ராணா பட ஷூட்டிங் தொடங்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம்.

இன்னும் செட் அமைக்கவில்லை

ராணா படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் மாளிகை அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளன. அது போன்று அரங்குகள் எதுவும் இன்னும் அமைக்கப்படவில்லை. லொக்கேஷன்களும் இன்னும் முடிவு செய்யவில்லை.

இப்போதைக்கு படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் பாடல் கம்போசிங் பணிகளில்தான் கவனம் செலுத்துகிறோம். ஏ.ஆர். ரஹ்மான் ஏற்கனவே பாடல்களுக்கு இசையமைக்கும் பணியைத் துவங்கி விட்டார்.

படப்பிடிப்பை அக்டோபரில் துவங்க திட்டமிட்டுள்ளோம் என்பது உண்மைதான். படப்பிடிப்பை ஆரம்பித்த பிறகு எந்த தங்குதடையும் இல்லாமல் தொடர்ந்து நடத்துவோம்,” என்றார்.

 

சூர்யா படம்... டாப்ஸி விலகினாரா விலக்கப்பட்டாரா?


எந்த நிருபரைப் பார்த்தாலும், சூர்யா படத்திலிருந்து நானாகத்தான் விலகிவிட்டேன். விரைவில் மீண்டும் ஜோடி சேர்வேன் என்று கூறி வருகிறார் ஆடுகளம் நாயகி டாப்ஸி.

உண்மையில் என்ன நடந்தது?

சூர்யாவை வைத்து மாற்றான் படத்தை கே.வி. ஆனந்த் ஆரம்பிக்க முடிவு செய்து ஹீரோயின் வேட்டையில் இறங்கிய போதுதான், டாப்ஸி நடித்த ஆடுகளம் வெளியானது. மாற்றான் ஹீரோயினாக டாப்ஸியை போட முடிவு செய்தனர்.

ஆனால் படம் வசூல் ரீதியாக சுமாராகத்தான் போனது. ஹீரோயினைப் பொருத்தவரை, ‘ஆள் வெள்ளையாக இருந்தாலும் அம்சமாக இல்லை’ என்று படக்குழுவினர் சொல்ல, உடனே மேக்னா ராஜை நடிக்க வைக்க முயற்சித்தனர்.

மேக்னாவும் இயக்குநர் கேவி ஆனந்த்தை சென்னையில் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு என்ன நடந்ததோ, ஹீரோயினாக காஜலை முடிவு செய்தனர்.

இந்த செய்தி வெளியாகி தனது மார்க்கெட் பாதிக்குமே என்ற பயத்தில், மாற்றான் படத்தில் என்னை யாரும் விலக்கவில்லை. எனக்கு நிறைய படம் இருக்கு. நான் ரொம்ப பிஸி. அதனால்தான் படத்தில் நடிக்கவில்லை. ஆனால் சூர்யாவுடன் கண்டிப்பாக நடிப்பேன், என்றெல்லாம் கூறி வருகிறார் டாப்ஸி.

இதையெல்லாம் படித்துவிட்டு நமட்டு சிரிப்பு சிரிக்கிறது மாற்றான் யூனிட்!

 

ஊன்றுகோலுடன் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த குஷ்பு: கட்சியினர் பெருமிதம்


இன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே திமுகவினர் நடத்திய போராட்டத்தில் நடிகை குஷ்பூ கலந்துகொண்டார். அவர் போராட்டத்திற்கு ஊன்றுகோலுடன் வந்தார்.

நடிகை குஷ்புவுக்கு திமுகவில் பதவி எதுவும் கொடுக்காவிட்டாலும், அவர் கட்சிப் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். ஆளும் அதிமுக அரசு திமுகவினருக்கு எதிராக பொய் வழக்குகள் போடுவதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வட சென்னையில் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபதற்காக குஷ்பூ ஊன்றுகோலுடன் வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மலையாளப் படபிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கையில் குஷ்பு கால் இடறி கீழே விழுந்ததில் கால் எழும்பு முறிந்தது.

இந்த நிலையிலும் போராட்டத்திற்கு ஊன்றுகோலுடன் குஷ்பு வந்ததைப் பார்த்து கட்சியினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மகளிர் அணியினர் அவரை அழைத்துச் சென்று ஓரமாக அமர வைத்தனர். பின்னர் ஸ்டாலினுடன் சேர்ந்து அவரும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

திமுகவினர் மீது பொய் வழக்குகள் போட்டு கைது செய்து கொண்டிருக்கிறார்கள். அதைக் கண்டித்து தான் இந்த ஆர்ப்பாட்டம். அதிமுக அரசின் அராஜகத்தை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தால் என்ன் மாற்றம் எல்லாம் ஏற்படப்போகிறது என்று பார்ப்போம், என்றார்.

 

வீட்டுக்கொரு மரமா, ஆளுக்கொரு மரமா? -நடிகர் விவேக் சொல்லும் பசுமை கணக்கு


முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் பத்து லட்சம் மரக்கன்றுகளை நடுகிற பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார் நடிகர் விவேக்.

இதுவரை சுமார் மூன்றரை லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடித்திருக்கும் அவர், தனது லட்சியத்தை நிறைவடைய செய்யும் அந்த பத்து லட்சமாவது மரக்கன்றை கடலு£ரில் நட திட்டமிட்டிருக்கிறார். இவ்வளவு மரக்கன்றுகள் அவருக்கு எப்படி கிடைக்கின்றன, அதற்கான முதலீடு யாருடையது என்ற கேள்விகள் எழுமல்லவா? அதை ‘தி கிரீன் சென்டீ’ என்ற நர்சரி தோட்ட திறப்பு விழாவில் நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார் விவேக். இந்த தோட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சென்டீ என்றால் ஜப்பானிய மொழியில் பூத்துக்குலுங்கும் தோட்டமாம்.

விவேக் பேசும் போது கூறியதாவது:

“கலாம் அய்யா என்னிடம் தமிழகம் முழுவதும் டிசம்பர் மாதத்திற்குள் பத்து லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று கேட்டுக் கொண்டவுடன் என்னால் முடியுமா என்ற எண்ணம்தான் முதலில் வந்தது. ஆனால் முயன்றுதான் பார்ப்போமே, அந்த முயற்சியில் தோற்றால் கூட தப்பில்லை. 500 கோடியில் தயாரிக்கும் ராக்கெட்டே புறப்பட்ட பத்தாவது நிமிடத்தில் கடலில் விழுந்துவிடுகிற போது, நமது லட்சியம் சரிவர நிறைவேறாமல் போனால் கலங்கிவிடக் கூடாது. முடிந்தவரை போராடிப் பார்ப்போம் என்று இறங்கினேன்.

ஆரம்பத்தில் நான் இப்படி நினைத்தாலும் இப்போது எனக்கு முழு நம்பிக்கை வந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, மரங்களை நாம் இப்போது நட வேண்டிய அவசியம் என்ன என்பதை விஞ்ஞான பார்வையோடு கலாம் என்னிடம் விளக்கியிருந்தார்.

இந்தியா முழுவதுமே 100 கோடி மரங்களை நட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம் எல்லாரும். அப்படி பார்த்தால் வீட்டுக்கு ஒரு மரம் என்று கூட சொல்ல மாட்டேன். ஆளுக்கொரு மரம் நட்டால்தான் அது முடியும்.

பத்து லட்சம் மரக்கன்றுகளை நான் நட வேண்டும் என்று கிளம்பியபோது ஒவ்வொரு ஊரிலும் எனக்கு பெரிய ஆதரவு கொடுத்தது மக்களும் சமூக அமைப்புகளும்தான். இந்த தோட்டத்தை நான் திறந்து வைக்க வேண்டும் என்று என்னை அழைத்தபோது நான் கேட்டது பணமல்ல. பதிலாக எனக்கு மரக்கன்றுகளை கொடுங்கள். நான் அவற்றை நட்டுக் கொள்கிறேன் என்றேன். நான் கேட்டவுடன் முப்பதாயிரம் மரக்கன்றுகளை தருவதாக கூறினார் தோட்டக்கலை நிபுணர் சரவணன். இவரைப் போன்றவர்களின் உதவியால்தான் நான் இப்படி ஒரு பெரிய காரியத்தை செய்ய முடிகிறது.

பத்து லட்சம் மரக்கன்றுகளை டிசம்பருக்குள் உங்களால் நட்டு விட முடியுமா? அப்படியே நட்டாலும் அதன் பிறகு அவற்றை பராமரித்து கண்காணிக்க முடியுமா என்று கேட்கிறார்கள். இதுவரை மூன்றரை லட்சம் மரக்கன்றுகளை நட்டு விட்டேன். இந்தப் பத்து லட்சம் மரகன்றுகளும் நடப்பட்டு நல்லபடியாக பரமரிக்கப் பட்டு வருகிறது என்ற பசுமைக் கணக்கை புகைபட ஆதாரத்துடன் நான் கலாம் அய்யா அவர்களிடம் ஒப்படைத்தாக வேண்டும். அவரை நான் ஏமாற்றி விட முடியாது.

சரவணன் போல தரமான மரக்கன்றுகளை கொடுத்து உதவ பலர் முன் வந்திருகிறார்கள். நான் ‘க்ரீன் கலாம்’ என்ற இந்த லட்சிய பயணத்தை தொடங்கிய பிறகு தமிழகம் முழுவதும் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்புக்கள் குவிந்த வண்ணம் இருகின்றன. ஒரு நடிகன் என்பதற்காக வரும் அழைப்புகள் அல்ல இவை. நல்ல லட்சியத்துகாக கிடைத்திருக்கும் அங்கீகாரம். ஒரு லட்சியத்தை தேர்ந்தெடுங்கள், அதை நோக்கி போராடுங்கள், அந்த லட்சியப்போராட்டத்தில் நீங்கள் கூட செத்து விடலாம். ஆனால் உங்கள் லட்சியம் ஒருபோதும் சாகாது என்று சொன்னார் சுவாமி விவேகாநந்தர். அவரது வார்த்தைகள்தான் எனக்கு இப்போது வேதம். கலாம் அவர்களின் வழிகாட்டல்தான் எனக்கு வேகம்,” என்றார்.

முன்னதாக நடைபெற்ற கிரீன் சென்டீ திறப்பு விழாவில், தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐஏஎஸ், கே.ஏ.செந்தில்வேலன் ஐபிஎஸ், டாக்டர் முத்துசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். அனைவரையும் தி கிரீன் சென்டீ நிறுவனர் சரவணன் வரவேற்றார்.

 

மம்முட்டி - மோகன்லாலின் நிழல் உலகத் தொடர்புகள்... வருமான வரித்துறை சோதனையின் அதிர்ச்சி பின்னணி!


கொச்சி: பிரபல மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய தொடர் சோதனைகளின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் இப்போது வெளியாகி வருகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் சில சந்தேகத்துக்கிடமான நபர்களுடன் இருவரும் தொடர்பு வைத்திருந்ததே இந்த சோதனைக்கு பிரதான காரணம் என்கிறார்கள்.

இந்த நபர்கள்தான் இப்போது இந்திப் பட உலகையே ஆட்டுவிக்கிறார்களாம். நிழல் உலக தாதாக்களுடன் நெருங்கிய கொண்டுள்ள இந்த நபர்கள், மம்முட்டி மற்றும் மோகன்லாலுடன் தொடர்பிலிருப்பது துபாயில் உள்ள உளவுத் துறை அதிகாரிகள் மூலம் இந்தியாவுக்கு தெரிய வர, உடனடியாக இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

மேலும் இந்த நிழலுலக நபர்களுக்கு தங்களின் படங்களின் செயற்கைக்கோள் உரிமையை வழங்கவும் மம்முட்டியும் மோகன்லாலும் ஒப்பந்தம் போட்டிருந்தார்களாம். இதற்காக பெரும் பணம் கைமாறியுள்ளதாக தெரிகிறது. இந்தப் பணம் மும்பையில் ஏற்கெனவே ஐடி துறையின் சந்தேகப் பார்வையில் உள்ள சிலர் மூலமே மம்முட்டி-மோகன் லாலுக்கு வந்துள்ளது.

இன்னொரு பக்கம், மம்முட்டியும் மோகன்லாலும் இப்போது கோடிகளில் சம்பளம் வாங்கினாலும், கணக்கில் காட்டுவது அதிகபட்சம் ரூ 80 லட்சம்தானாம். இதனை ஆதாரங்களுடன் கண்டுபிடித்த பிறகே இவர்களின் வீடுகளில் சோதனையை நடத்தியதாம் வருமான வரித்துறை.

இந்த சோதனை, அதன் காரணங்கள், பிடிபட்ட பொருள்கள் குறித்து விரைவிலேயே முழு அறிக்கை வெளியிடவிருக்கிறோம் என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருப்பது, மம்முட்டிக்கும் மோகனலாலுக்கும் மேலும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

 

அம்மாவுடன் இணைந்து ரேம்ப் வாக் போன பிபாஷா பாசு


ரேம்ப் வாக் நிகழ்ச்சிகளில் பிபாஷா பாசுவைப் பார்த்து அசந்தவர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சியாக மகளுடன் இணைந்து அழகு நடை நடந்து அசத்தி விட்டார் பிபாஷாவின் தாயார் மமதா பாசு.

மும்பையில் சர்வதேச நகை வார விழா நடந்தது. இதில் பல பிரபலங்கள், நடிகைகள், மாடல்கள் கலந்து கொண்டு ‘பூணை நடை’ போட்டனர். அந்த நடைகளிலேயே அனைவரின் கண்களையும் அதிகம் கவர்ந்தது பிபாஷா பாசுவும், அவரது தாயார் மமதாவும்தான்.

முதல் முறையாக தனது தாயார் பூணை நடை போட்டுள்ளதாக பிபாஷா பெருமையுடன் மேடையில் கூறினார். தான் அழைத்ததற்கிணங்க, தனக்காக கொல்கத்தாவிலிருந்து மும்பை வந்துள்ளார் தனது தாயார் என்றும் அவர் கூறினார். அவருடன் இணைந்து ஜோடியாக நடந்தது பெரு்மையாகவும், பூரிப்பாகவும் இருக்கிறது என்று பிபாஷா கூற, அருகில் நின்றிருந்த அவரது தாயார் வெட்கப் புன்னகை பூக்க அந்த இடமே படு குதூகலமாகி விட்டது.

சும்மா சொல்லக் கூடாது, பிபாஷாவை விட படு அழகாக காணப்பட்டார் மமதா பாசு. பிபாஷாமேலும் பேசுகையில், நமது நாட்டில் ஒரு தாய்க்கும், மகளுக்கும் உள்ள பந்தம் மிகவும் வலுவானது. பெண்களின் பலத்தை பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு குடும்பத்தை தாங்கி நிற்கும் ஆலமரமாக பெண்கள்தான் திகழ்கிறார்கள்.

எனக்கு மூன்று சகோதரிகள். அத்தனை பேரும் எனக்கு மிகவும் பலமாக இருக்கிறார்கள். அதேபோல எங்களது பெற்றோரும், குறிப்பாக எனது தாயார் எங்கள் நால்வருக்கும் மிக மிக பேருதவியாக, பலமாக இருக்கிறார். அவருக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார் நெகிழ்ச்சியுடன்.

உங்களது தாயார் முதல் முறையாக பூணை நடை போட்டது குறித்து என்ன சொன்னார் என்று பிபாஷாவுடன் கேட்டபோது, அவருக்கு மிகவும் நம்பிக்கை இருந்தது. எனக்குத்தான் ரொம்பப் பதட்டமாகி விட்டது என்று கூறிச் சிரித்தார் பிபாஷா.

 

ஆசின் அன்பாக பழக கூடியவர், கூறுகிறார் டோணி


மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி, நடிகை ஆசின் மிகவும் அன்பாகப் பழகுவதாக, கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் நுழைந்த மிகக் குறுகிய நாட்களிலேயே, அணியின் தலைமை ஏற்றவர் மகேந்தர சிங் டோணி. இந்திய அணியின் கேப்டனாக டோணி தலைமையில், டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்தது. சமீபத்தில் ஒருநாள் உலகக் கோப்பையும் வென்றது.

டோணி, மைதானத்தில் மட்டுமல்ல விளம்பர மாடலாக போஸ் கொடுப்பதிலும் திறமையானவர். இந்திய அணியில் விளம்பரங்களில் நடித்து, அதிக வருவாய் ஈட்டும் வரும் நிலையில், டோணி சிக்கும் சர்ச்சைகளுக்கும் குறைவில்லை.

சமீபத்தில், ஷூ விளம்பரம் ஒன்றில் பாலிவுட் கவர்ச்சி நாயகி பிபாஷா பாசுவுடன், டோணி இணைந்து நடித்தார். இதன்மூலம் டோணி அதிகமாக பேசப்பட்ட நிலையில், தற்போது பிக் பஜார் நிறுவனத்திற்காக, தமிழில் இருந்து இந்திக்கு தாவிய ஆசினுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இதற்கு முன் மிரின்டா குளிர்பான விளம்பரத்தில் நடித்த ஆசினுக்கு பல படவாய்ப்புகள் வந்தது. தற்போது மார்க்கெட் சற்று வீழ்ச்சி கண்டுள்ள ஆசின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு பிக்பஜார் விளம்பரம் உதவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விளம்பர படப்பிடிப்பின் இருவரும் பேசி பழகியது குறித்து டோணி கூறுகையி்ல், குழந்தை குணம் கொண்ட ஆசின் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர், என்றார்.

 

ரஜினி படம் என்பதால் எப்போது அழைத்தாலும் வருவேன் - தீபிகா


எனக்கு என்னதான் கால்ஷீட் பிரச்சினை இருந்தாலும், ரஜினி சார் படத்துக்கு மட்டும் எப்போது அழைத்தாலும் வருவேன். எந்தப் படத்தின் கால்ஷீட்டையும் அட்ஜஸ்ட் செய்து தருவேன். ரஜினி இந்திய சினிமாவுக்கு எப்போதுமே ஸ்பெஷல்தான், என்றார் தீபிகா படுகோன்.

ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணாவில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் தீபிகா படுகோன். இந்தப் படத்தில் ரஜினியின் மற்ற இரு வேடங்களுக்கு நாயகிகள் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.

ஆனால் தீபிகா மட்டும் அறிவிக்கப்பட்டுவிட்டார். ரஜினி உடல்நிலை காரணமாக படத்தின் ஷூட்டிங் கேன்சலாகி, கால்ஷீட் பிரச்சினை வந்த பிறகும் கூட, தீபிகா பொறுமையிழக்கவில்லை.

ரஜினி எப்போது குணமாகி வருகிறாரோ அதுவரை காத்திருப்பேன் என்று கூறியிருந்தார்.

இப்போது மீண்டும் அக்டோபரில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் நிலையில், அவரை ஷூட்டிங்குக்கு வருமாறு அழைத்துள்ளார் ரஜினி. இதுகுறித்து தீபிகா கூறுகையில், “ராணா ஷூட்டிங் குறித்து கேஎஸ் ரவிக்குமார் தகவல் அனுப்பியுள்ளார். எனக்கு இதை அவர்கள் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

காரணம் இது ரஜினி படம். அவர் எப்போது அழைத்தாலும் ராணா படப்பிடிப்புக்கு வர தயாராக இருக்கிறேன். எனக்காக அவர்களை காத்திருக்க வைக்கவும் மாட்டேன். ராணாவுக்காக எந்தப் படத்தின் கால்ஷீட்டையும் அட்ஜஸ்ட் செய்து தருவேன். ரஜினி இந்திய சினிமாவுக்கு எப்போதுமே ஸ்பெஷல்தான்”, என்று கூறினார்.

படப்பிடிப்பு துவங்கும் முன், ரஜினிக்காகவும் ராணா படம் சிறப்பாக வரவும் திருப்பதி கோவிலில் வழிபாடு நடத்த முடிவு செய்துள்ளாராம் தீபிகா.

 

நடிகர் மகேஷ்பாபு படப்பிடிப்பில் தெலுங்கானா ஆதரவாளர்கள் ரகளை - 70 லட்சம் சேதம்


ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் 'டூக்கூடு' படப்பிடிப்பு செட்டுக்குள் நேற்று தெலுங்கானா ஆதரவாளர்கள் புகுந்து தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தினர்.

அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த வன்முறையில் ரூ.70 லட்சம் செட் நாசம் செய்யப்பட்டது. மேலும் மகேஷ்பாபு கார் உள்பட 7 கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

ஆந்திராவில் பிரபல நடிகர் கிருஷ்ணாவின் மகனும் தற்போதைய முன்னணி நடிகருமான மகேஷ்பாபு நடிக்கும் 'டூக்கூடு' என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் அருகே உள்ள விக்ராபாத் ரெயில் நிலையம் அருகே நேற்று காலை நடந்தது. இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். படத்தை சீன ஒய்சாலா இயக்குகிறார். இதனை பார்க்க நடிகரின் ரசிகர்களும் அங்கு திரண்டு இருந்தனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புக்காக அந்த பகுதியில் ரூ.80 லட்சம் செலவில் பிரமாண்டமான 'செட்' போடப்பட்டிருந்தது. அதில் நடிகர் மகேஷ்பாபுவின் சண்டைக்காட்சியை இயக்குநர் படமாக்கி கொண்டு இருந்தார்.

அப்போது தெலுங்கானா மாணவர்களின் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த ஏராளமானவர்கள் திடீரென்று படப்பிடிப்பு தளத்துக்குள் காலை 11 மணி அளவில் புகுந்து படப்பிடிப்பை நடத்தக்கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

படப்பிடிப்பில் கடலோர ஆந்திராவினர் பங்கேற்க கூடாது என்றும் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போடப்பட்டிருந்த செட்டுகளையும் அவர்கள் அடித்து நொறுக்கினர்.

படப்பிடிப்புக்காக பாதுகாப்புக்கு வந்த போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதைத்தொடர்ந்து வன்முறை கும்பலினர் திரும்பி சென்றனர். போராட்டக்காரர்கள் சென்ற பின்னர் போலீசாரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

மீண்டும் வன்முறை

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது தெலுங்கானா ஆதரவாளர்கள் ஏராளமானவர்கள் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போலீசாரும் இல்லாததால் அவர்களது வன்முறை தீவிரமானது. இதற்கு அங்கிருந்த நடிகர் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரசிர்களுடன் மோதல்

இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் அங்கிருந்த செட்டுகளை அடித்து நாசமாக்கினார்கள். படப்பிடிப்புக்காக வந்த நடிகர் மகேஷ்பாபு, இயக்குநர் உள்ளிட்டவர்களின் கார்களில் போராட்டக்காரர்கள் ஏறி அமர்ந்து கொண்டு அடித்து நொறுக்கினார்கள். இதில் அந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்தன. போராட்டக்காரர்களின் வன்முறை வெறியாட்டத்தால் அந்த இடம் போர்க்களமானது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து மீண்டும் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். ஆனால் அதற்குள் போராட்டக்காரர்கள் படப்பிடிப்பு தளத்தை முழுமையாக அடித்து நொறுக்கி விட்டனர்.

நிலைமை மோசமானதைத்தொடர்ந்து போலீசார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் மகேஷ்பாபுவை வேறு ஒரு கார் ஏற்பாடு செய்து அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

ரூ.70 லட்சம் சேதம்

தெலுங்கானா ஆதரவாளர்களின் போராட்டத்தில் படப்பிடிப்புக்காக போடப்பட்டிருந்த செட் சேதப்படுத்தப்பட்டதில் ரூ.70 லட்சம் சேதம் அடைந்ததாக படப்பிடிப்புக் குழுவினர் தெரிவித்தனர். இந்த வன்முறை வெளியாட்டத்தில் 7 கார்களும் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.
 

அது விஜய்க்கு மட்டும்தான்... மத்தவங்களுக்கு இல்ல! - அனுயா


சிவா மனசுல சக்தி மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அனுயா. கவர்ச்சிதான் இவர் ப்ளஸ். தொடர்ந்து இவர் நடித்த மதுரை சம்பவம், நகரம் போன்ற படங்கள் வணிக ரீதியில் ஓரளவு நன்றாகவே போனாலும், வாய்ப்புகள்தான் வர மறுக்கின்றன.

இந்த நிலையில்தான் அவர் ஷங்கர் இயக்க விஜய் நடிக்கும் நண்பன் படத்தில் அக்கா வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பெரிய டைரக்டர், அதிக சம்பளம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டார்.

ஆனால் விஷயம் வெளியில் தெரிந்ததும், நிறைய பேர் இதேபோல அக்கா வேடங்களோடு வந்து கதவைத் தட்ட, அவர்களுக்கு நோ சொல்லி திருப்பி அனுப்பிவிட்டாராம் அனுயா. அதுமட்டுமல்ல, ரூ 30 லட்சம் சம்பளம் என்றால் பேசுங்கள், இல்லாவிட்டால் வேறு ஆளைப் பாருங்கள் என்கிறாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "விஜய் மற்றும் ஷங்கர் படம் என்பதால் இந்த வேடத்தை ஏற்றுக் கொண்டேன். மற்றபடி, நான் ஹீரோயின் வேடங்கள்தான் செய்வேன். நான் நல்ல படங்களில் நடித்துள்ளேன். எனக்கான சம்பளத்தை நான் கேட்பதில் என்ன தவறு?" என்றார்.
 

திமுகவில் சேர்ந்த பிறகு முதல்முறையாக கைதாகும் நடிகை குஷ்பு!


சென்னை: திமுகவில் சேர்ந்த பிறகு முதல் முறையாக போராட்டத்தில் இறங்கி, கைதாகியுள்ளார் நடிகை குஷ்பு.

ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர் நடிகை குஷ்பு. ஜெயா டிவியின் ஜாக்பாட் ஷோவில் நிரந்தர தொகுப்பாளராக இருந்தார். அதிமுகவில் சேருவார் என்றெல்லாம் கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென திமுகவில் ஐக்கியமானார் குஷ்பு.

கட்சியில் அவருக்கு தனி பதவி எதுவும் தரப்படாவிட்டாலும், தொடர்ந்து திமுக மேடைகளில் குஷ்புவுக்கு பிரதான இடம் தரப்படுகிறது. தேர்தல் பிரச்சாரம், திமுக கூட்டங்களில் குஷ்புவுக்கு தனி மரியாதைதான்.

திமுக தேர்தலில் தோல்வியடைந்ததும், கட்சியில் எல்லோரையும் விட துணிச்சலாக கருத்து சொன்னவர் குஷ்புதான்.

'இந்த தோல்வியைத் தந்ததற்காக மக்கள்தான் வருந்தப் போகிறார்கள். எங்களுக்கு ஒன்றுமில்லை,' என்று கூறினார்.

இந்தநிலையில், இப்போது திமுகவினர் மீது அடுத்தடுத்து வழக்குகளைப் போட்டு, கைது செய்து வருகிறது ஜெயலலிதா அரசு. இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து திமுகவினர் இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தினர். அதிமுக அரசு இந்த போராட்டத்துக்கு தடை விதித்த நிலையில், அந்த தடையை மீறி நடந்த போராட்டத்தில் முக ஸ்டாலின் உள்பட முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.

வட சென்னையில் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற குஷ்பு, அதிமுக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினார். பொய் வழக்கு போடும் ஜெயலலிதாவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

பின்னர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுடன் அவரும் கைதானார்.

இதன் மூலம் திமுகவுக்காக முதல் முறையாக சிறை சென்றுள்ளார் குஷ்பு.
 

"எந்தப் பணியையும் அப்பா ஆசியுடன்தான் தொடங்குவேன்'' - ஐஸ்வர்யா ரஜினி


சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இப்போது பெரிய பட்ஜெட் படம் ஒன்றின் இயக்குநர். தன் கணவர் தனுஷ் - அமலா பால் ஜோடியாக நடிக்க, புதிய படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

பாபா படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ஐஸ்வர்யா. 'மேக்கிங் ஆஃப் பாபா' என்ற படத்தையும் அப்போது அவர் உருவாக்கினார்.

தனுஷை திருமணம் செய்தபிறகு, செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தின் உதவி இயக்குநராக இருந்தார். 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திலும் ஐஸ்வர்யா உதவி இயக்குநர் பணியைச் செய்தார்.

அப்போதை ஐஸ்வர்யா ஒரு படத்தை இயக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகியது நினைவிருக்கலாம். கடந்த 2 வருடங்களாக தனது படத்துக்கான கதையை உருவாக்கி வந்த அவர், இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவின் மாமனார் கஸ்தூரி ராஜா!

இதையெல்லாம் விட முக்கியம், எந்த விளம்பரமும், ஆடம்பர பூஜையும் இல்லாமல் அமைதியாக படப்பிடிப்பையே தொடங்கிவிட்டார் ஐஸ்வர்யா!

தனுஷை இயக்க முடிவு செய்தது, இயக்குநராக அவதாரமெடுத்தது குறித்து அவரிடம் கேட்டபோது, "படம் இயக்க வேண்டும் என்பது என் நீண்ட கால கனவு. ரொம்ப காலமாகவே அந்த ஆசை எனக்குள் இருந்து வந்தது. ஒரு டாக்டரின் மகள் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்படுவார் அல்லவா? அது மாதிரிதான். ஒரு நடிகரின் மகளான எனக்கு, இயக்க வேண்டும் என்ற ஆசை, என் ரத்தத்தில் ஊறிப்போய் இருந்தது. என் பள்ளி நாட்களிலிருந்தே நான் நிறைய எழுதுவேன்.

'பாபா' படத்தில் நான் உதவி டைரக்டராக பணிபுரிந்ததற்கு அதுதான் காரணம். இடையில், எனக்கு திருமணம்...அப்புறம் குழந்தை என்று ஆனதால், படம் இயக்கும் ஆசையை தற்காலிகமாக தள்ளிவைத்திருந்தேன்.

பொதுவாக நடிகர்களின் வாரிசுகள் தாங்களும் நடிகர்களாக விரும்புவார்கள். அப்படித்தான் நடந்திருக்கிறது... உங்களுக்கு நடிக்கும் ஆசை இல்லையா?

ஒரு போதும் இல்லை. காரணம் எனக்கு எழுதுவதுதான் பிடிக்கும். ஒரு படைப்பின் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் எனக்கு ஆர்வம் அதிகம். சிறுவயதில் அப்பாவுடன் சாப்பிடும் நேரங்களில், டைனிங் டேபிளில் அமர்ந்தபடி படத்தின் கதையை விவாதித்தது நினைவிருக்கிறது. படத்தின் காட்சிகள், கேமரா கோணங்கள் பற்றியெல்லாம் அப்பா எங்களுடன் விவாதிப்பார். அப்போதிலிருந்தே ஒரு காட்சியை எந்த கோணத்தில் எடுக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் யோசிப்பேன். அதன் விளைவுதான் கல்லூரி முடிந்ததும் சுரேஷ் கிருஷ்ணாவிடம் பணியாற்ற ஆரம்பித்தேன்.

உங்கள் புதுப் பட கதையை ரஜினி சாரிடம் சொல்லியிருக்கிறீர்களா...

இந்தப் படத்தின் கதைக் கருவை மட்டும் சுருக்கமாக அப்பாவிடம் சொன்னேன். அதில் அவருக்கு அழுத்தமான நம்பிக்கை பிறந்துவிட்டது. பின்னர் சமீபத்தில் நான் தொடங்கப் போவதாக அவரிடம் சொன்னதும் அவருக்கு ஒரு சந்தோஷ ஷாக். இன்னொன்று, இந்த மாதிரி சிம்பிளாக படம் தொடங்கியதில் அவருக்கு தனி மகிழ்ச்சி.

அவர் ஆசியுடன்தான் இந்த படத்தைத் துவங்கியுள்ளேன். நான் எந்த ஒரு வேலையை தொடங்கினாலும், அப்பாவிடம் ஆசி பெற்றபின்தான் ஆரம்பிப்பேன். இப்போதும் அப்படித்தான். எப்படி இயக்க வேண்டும்? என்று சில அறிவுரைகளை கூறினார். சில யோசனைகளை சொன்னார். 'எதைச் செய்தாலும் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்...' என்றார்.
 

சாய்பாபா மறையவில்லை, ஆத்மா ஆசிரமத்தில் உலவுகிறது: நடிகை அஞ்சலி தேவி


டெல்லி: சத்ய ஸ்ரீ சாய்பாபா மறையவில்லை. அவரது ஆத்மா புட்டபர்த்தி ஆசிரமத்தில் தான் உலவுகிறது. அவர் சமாதியில் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதாக நடிகை அஞ்சலி தேவி தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி சாய்பாபாவின் தீவிர பக்தை. கடந்த 48 ஆண்டுகளாக புட்டபர்த்தி ஆசரமம் வந்து செல்லும் அவர் நேற்று முன்தினம் சாய்பாபா சமாதியில் வழிபட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது,

புட்டபர்த்தி வந்தால் மன வேதனை நீங்கி அமைதியாகிவிடும். நான் ஒரு இந்தி படம் எடுத்து பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் என் நிம்மதி போனது.

அப்போது தான் நடிகர் நாகையா என்னை புட்டபர்த்திக்கு அழைத்து வந்தார். சாய்பாபாவிடம் ஆசி பெற்றேன். அதன் பிறகு என் வாழ்க்கை நல்லவிதமாக மாறிவிட்டது. பல நல்ல சம்பவங்கள் நடந்தன. என் கஷ்டமெல்லாம் நீங்கியது.

அதனால் தான் சாய்பாபாவுக்கு கோடிக்கணக்கான பக்தைகள் உள்ளனர். தமிழகத்தில் கல்விக் கண் திறந்தவர் என்று காமராஜரை கூறுவார்கள். ஆந்திராவில் பலருக்கு கல்வி வழங்கி வருவது பாபா தான். அவரது கல்வி சேவை இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது.

இது தவிர குடிநீர், மருத்துவ சேவைகளும் செய்து வருகிறார். பாபாவிடம் பணம் இருந்தால் அது நல்ல காரியத்திற்கு தான் செலவிடப்படும் என்று அனைவரும் நம்புகின்றனர். அதனால் தான் தொழில் அதிபர் ரத்தன் டாடா முதல் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் வரை பாபா அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குகின்றனர்.

சாய்பாபா மறையவில்லை, அவர் சமாதியில் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளார். அவரது ஆத்மா புட்டபர்த்தி ஆசிரமத்தில் தான் உலவுகிறது. பாபா செய்த சேவையை தொடர வேண்டும் என்று நான் அறக்கட்டளையை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.