நாயகன், துப்பாக்கி வரிசையில் 'மும்பையில் ஒரு காதல்'!

நாயகன், துப்பாக்கி போல முழுக்க முழுக்க மும்பையில் நடக்கும் கதையம்சம் கொண்ட படமாக தயாராகிக்கொண்டிருக்கிறது, ‘மும்பையில் ஒரு காதல்'.

ஆனால் இது முழுக்க முழுக்க காதலை கொண்டாடும் படம். படத்தின் பெரும்பகுதி மும்பையிலும், ஒரு சில பகுதிகள் லண்டன், நியூயார்க் மற்றும் சென்னையிலும் படமாகிறது.

சட்டம் ஒரு இருட்டறை, தொட்டால் தொடரும் படங்களின் கதாநாயகன் தமன்குமார் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். தேசிய விருது பெற்ற மலையாள திரைப்படம் குல்மொஹர் படத்தில் இயக்குநர் ஜெயராஜ் அறிமுகம் செய்த ஜென்சி மீனு கதாநாயகியாக நடிக்கிறார்.

நாயகன், துப்பாக்கி வரிசையில் 'மும்பையில் ஒரு காதல்'!

சென்னை திரைப்படக்கல்லூரியில் இயக்குநர் படிப்பில் கோல்ட் மெடலிஸ்ட் மாணவரான கௌதம் வெங்கடேஸ்வரன், ‘மும்பையில் ஒரு காதல்' படத்தை இயக்குகிறார்.

மும்பை விமான நிலையத்தைப் பற்றிய ஆவணப்படம், கேரளா படகு வீடு பற்றிய ஆவணப்படம் போன்ற 100க்கும் மேற்பட்ட ஆவணம் மற்றும் விளம்பர படங்களை சோனி எண்டர்டெயின்ட்மெண்ட், சி.என்.என். ஆசியா, என்.பி.சி.ஆசியா, பி.பி.சி. போன்ற மிகப்பெரிய நிறுவனங்களுக்காக எடுத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குநர் கௌதம் வெங்கடேஸ்வரன்.

படத்தின் ஒளிப்பதிவாளர்களாக ஸ்மிரிதி.ஜி, விஜய்.வி, ராஜ்குமார் இவர்களுடன் இணைந்து இயக்குநர் கௌதம் வெங்கடேஸ்வரனும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

படத்தொகுப்பு கமல்.ஜி. பாடல்கள், முருகன் மந்திரம். டாக்கிங் க்ரோஸ் பிலிம்ஸ், மற்றும் வெங்கி பிக்சர்ஸ் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறது.

கலர்ஃபுல்லான அதே சமயம் வித்தியாசமான காதல் திரைப்படமாக வளர்ந்து வருகிறது "மும்பையில் ஒரு காதல்".

 

ஏப்ரல் 14... ஜெயா டிவியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புப் பேட்டி!

சென்னை: வரும் ஏப்ரல் 14 அன்று ஜெயா டிவியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புப் பேட்டி ஒளிபரப்பாகிறது.

கோச்சடையான் படம் மற்றும் தனது மறக்க முடியாத சினிமா அனுபவங்களை இந்தப் பேட்டியில் பகிர்ந்து கொள்கிறார் ரஜினி.

பொதுவாக எந்த டிவி, பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்காதவர் ரஜினி. ஒருவருக்குக் கொடுத்தால், அடுத்தவர் மனசு குறைபடுமே என்பதற்காக, தான் சொல்ல நினைப்பதை விழா மேடைகளில் வைத்துப் பேசிவிடுவார்.

ஏப்ரல் 14... ஜெயா டிவியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புப் பேட்டி!

ஆனால் நீண்ட நாட்கள் கழித்து ஜெயா டிவிக்கு சிறப்புப் பேட்டி அளிக்கிறார் ரஜினி. இது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. கோச்சடையான் வெளியாகும் நேரம் என்பதால் அந்தப் படத்தை வரவேற்க ரசிகர்களைத் தயார்ப்படுத்த அவர் இந்தப் பேட்டியை அளித்திருப்பதாக சொல்லப்பட்டாலும், ரஜினி அதைத் தாண்டி பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறாராம்.

இன்னொரு பக்கம், இந்தப் பேட்டி ஆளும்கட்சிக்கு பெரிய ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது. 24-ம் தேதி தேர்தல். அதற்கு பத்து தினங்களுக்கு முன் ஆளும் கட்சி டிவிக்கு ரஜினியின் சிறப்புப் பேட்டி. இதை வைத்து பலவிதமாக எழுதவும் ஆரம்பித்துவிட்டனர்.

செய்திகள், விமர்சனங்களைத் தாண்டி, ஒவ்வொரு ரசிகரும் ஏப்ரல் 14 அன்று ஜெயாடிவி முன்பு காத்திருக்கப் போவது உறுதியாகிவிட்டது.

 

ரஜினி சார் பேட்டியைப் பார்ப்பவர்கள் கண்கள் குளமாகிவிடும் - விவேக்

சென்னை: ஏப்ரல் 14 அன்று ஜெயாடிவியில் ரஜினி சாரின் பேட்டியைப் பார்ப்பவர் கண்கள் நிச்சயம் கலங்கிவிடும். அந்த அளவு நெகிழ்ச்சியான பேட்டியாக அது வந்துள்ளது என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஜெயா டிவிக்கு ரஜினிகாந்த் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

ரஜினி சார் பேட்டியைப் பார்ப்பவர்கள் கண்கள் குளமாகிவிடும் - விவேக்

இந்தப் பேட்டியை எடுத்தவர் நடிகர் விவேக். அந்த அனுபவம் குறித்து விவேக் கூறுகையில், 'ரஜினி சாரின் தீவிர ரசிகன் நான். ஒரு சூப்பர் ஸ்டார் என்பதைத் தாண்டி அவரது மனிதநேயத்தை வெளிப்படுத்த ஒரு முயற்சியாக நினைத்து இந்த பேட்டியை எடுத்தேன்.

நிறைய விஷயங்களை இந்த பேட்டியின்போது அவர் பகிர்ந்து கொண்டார். தன் தனிப்பட்ட வாழ்க்கை.. குறிப்பாக தனது இறுதி காலம் பற்றியெல்லாம் கூட அவர் உணர்ச்சி வசப்பட்டுப் பேச, செட்டிலிருந்த அத்தனை பேரும் கலங்கிவிட்டார்கள்.

நான் நிச்சயம் சொல்வேன், அவரது இந்தப் பேட்டியைப் பார்க்கும் அத்தனை பேரின் கண்களும் குளமாகிவிடும்," என்றார்.

 

என் வழி ரஜினி வழி..! - சூர்யாவின் தெளிவான ரூட்

என் வழி ரஜினி வழி..! - சூர்யாவின் தெளிவான ரூட்

சினிமாவில் என் வழி ரஜினி வழிதான் என்று கூறியுள்ளார் முன்னணி நடிகர் சூர்யா.

போட்டியும் பொறாமையும் நிறைந்த சினிமாவில், தனக்கு அடுத்த தலைமுறை நடிகர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான விஷயங்களை சொல்லித் தருவதில் ரஜினிக்கு நிகர் அவர்தான்.

விஜய்யை அழைத்து, வெறும் காதல் படங்கள் மட்டும் பண்ணாமல் ஆக்ஷன் படங்களும் பண்ணுங்க.. உங்களுக்கு செட் ஆகும் என அறிவுறுத்தியவர் ரஜினிதான்.

தொடர்ந்து தோல்விப் படங்களால் துவண்டிருந்த அஜீத்தை அழைத்து, ஒரு படம் வில்லனா பண்ணுங்க... உங்க கேரியர் மீண்டும் சரியா வரும் என்று கூறி அவருடைய திரை வாழ்க்கையையே சீராக்கிய பெருமை ரஜினிக்கு உண்டு.

வளரும், இளம் நடிகர்கள் அனைவருக்கும் ரஜினி சொல்லும் அட்வைஸ், ஒரே நேரத்தில் நான்கைந்து படங்கள் பண்ணுங்கள். அதுதான் உங்களுக்கு சேஃப் என்பதுதான்.

நடிகர் சூர்யாவுக்கும் இப்படியொரு அறிவுரையை, யோசனையை வழங்கியுள்ளார் ரஜினி.

இதுகுறித்து நடிகர் சூர்யா கூறுகையில், "ஒரு முறை நான் விமானத்தில் பயணித்தபோது, அதில் ரஜினி சார் மற்றும் பிரகாஷ் ராஜைச் சந்தித்தேன். அப்போது 'சூர்யா, உங்களுக்கு சென்டிமென்ட், ஆக்ஷன் இரண்டுமே நன்றாக வருகின்றன. ஒரு படம் அப்படி, ஒரு படம் இப்படி என மாற்றி மாற்றி பண்ணுங்கள். நன்றாக வரும்' என்றார். அவர் சொன்னது போலத்தான் எனக்கு படங்களும் அமைகின்றன. சினிமாவில் அவர் வழிதான் என்னுடையதும்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் அம்பரீஷ்!

பெங்களூர்: சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து நலமுடன் பெங்களூர் திரும்பினார் நடிகர் அம்பரீஷ்.

பிரபல நடிகரும், கர்நாடக வீட்டுவசதித்துறை அமைச்சருமான நடிகர் அம்பரீஷுக்கு மூச்சுத் திணறல், சிறு நீரகப் பிரச்சினை ஏற்பட்டு, உடல்நிலை மோசமானது.

ஆரம்பத்தில் பெங்களூரில் சிகிச்சை பெற்ற, உற்ற நண்பர் நடிகர் ரஜினியின் ஆலோசனையின்பேரில் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் அம்பரீஷ்!

சிங்கப்பூரில் 40 நாட்கள் சிகிச்சை முடிந்து அம்பரீஷ் மனைவி நடிகை சுமலதாவுடன் பெங்களூர் திரும்பினார்.

விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள், ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது வீட்டில் சில பெண்கள் ஆரத்தி எடுத்தனர். ரசிகர்கள் மத்தியில் அம்பரீஷ் பேசுகையில், "சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் நான் சில நாட்கள் சிகிச்சை பெற்றேன். எனது உடல்நலத்துக்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கு நன்றி.

அடுத்து நான் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன்," என்றார்.

அவர் மாண்டியா தொகுதியில் காங்கிரசுக்காக பிரசாரம் செய்வார் என்று தெரிகிறது.

 

சூர்யாவுடன் மீண்டும் இணைகிறார் ஸ்ருதி?

சூர்யாவுடன் மீண்டும் ஸ்ருதி ஹாஸன் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா - ஸ்ருதி ஹாஸன் இரண்டு பேரும் ஏற்கனேவே 7-ம் அறிவு படத்தில் நடித்தனர்.

அதனை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சூர்யா-ஸ்ருதி ஹாசன் இரண்டாவது முறையாக ஜோடி சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூர்யாவுடன் மீண்டும் இணைகிறார் ஸ்ருதி?

இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

தற்போது சூர்யா அஞ்சான் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் உள்ளார். அவர் சென்னை திரும்பிய பிறகு புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.

ஸ்ருதி ஹாசன் விஷாலின் 'பூஜை' படத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே தெலுங்கு, இந்தியில் பரபரப்பான நாயகியாக உள்ளார்.

 

வீடு மாறியதால் ஓட்டு 'பணால்'- மம்முட்டி” ஓட்டு போட முடியவில்லை

திருவனந்தபுரம்: நடிகர் மம்முட்டியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாததால் அவரால் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க இயலாமல் போய்விட்டது.

கேரளாவில் நேற்று நடந்த லோக்சபா தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.

பெரும்பாலான மலையாள நடிகர், நடிகைகள் தங்கள் வாக்குகளை காலையிலேயே பதிவு செய்தனர்.

வீடு மாறியதால் ஓட்டு 'பணால்'-  மம்முட்டி” ஓட்டு போட முடியவில்லை

"இன்னசென்ட்" ஓட்டு:

நடிகரும், சாலக்குடி தொகுதி மார்க்சிஸ்ட் ஆதரவு பெற்ற வேட்பாளருமான "இன்னசென்ட்" சாலக்குடியிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மனைவி ஆலீசுடன் வந்து ஓட்டு போட்டார்.

பிரபலங்களின் "வாக்கு":

நடிகர் சுரேஷ் கோபி திருவனந்தபுரம் சாஸ்தமங்கலத்திலும், திலீப் ஆலுவாவிலும், ஜகதீஷ் காலடியிலும், மணியன் பிள்ளை ராஜு திருவனந்தபுரத்திலும், நடிகை காவ்யா மாதவன் எர்ணாகுளத்திலும், அன்சிபா கான் கோழிக்கோட்டிலும், பின்னணி பாடகர் ஜி.வேணுகோபால் திருவனந்தபுரம் பட்டத்திலும், ஓட்டு போட்டனர்.

மம்முட்டியால் முடியவில்லை:

நடிகர் சுரேஷ் கோபி கடந்த சில தினங்களுக்கு முன் துபாய் சென்றிருந்தார். ஓட்டு போடுவதற்காகவே துபாயிலிருந்து வந்ததாக அவர் தெரிவித்தார். இதற்கிடையே பிரபல நடிகர் மம்மூட்டியால் இம்முறை ஓட்டு போட முடியவில்லை.

முகவரி மாற்றம்:

மார்க்சிஸ்ட் ஆதரவாளரான இவர் அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் ஓட்டு போடுவது வழக்கம். எர்ணாகுளம் காந்தி நகரில்தான் கடந்த தேர்தல் வரை இவருக்கு ஓட்டு இருந்தது. சமீபத்தில்தான் இவர் பனம்பிள்ளி நகரிலுள்ள வீட்டுக்கு மாறினார். ஆனால் வாக்காளர் பட்டியலில் இருந்து இவர் தனது பெயரை புதிய முகவரிக்கு மாற்ற மறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

பட்டியலில் நீக்கம்:

நேற்று காலை ஓட்டு போடுவதற்காக மம்மூட்டி புறப்பட்டார். அப்போது தான் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை என தெரியவந்தது.

ஓட்டு போடவில்லை:

மம்மூட்டி வீடு மாறியதும் அவரது பெயர் காந்தி நகர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதும் பின்னர் தான் தெரியவந்தது. இதையடுத்து மம்மூட்டியால் இந்த தேர்தலில் ஓட்டு போட முடியவில்லை.

 

ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் எதுக்கு? - புதுமுகங்களுக்கு பேரரசு அட்வைஸ்

புதுமுக நடிகர்கள் எடுத்த எடுப்பிலேயே ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் காட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றார் இயக்குநர் பேரரசு.

ஜெகோவா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தேவன் நடிக்கும் "காதல் பஞ்சாயத்து" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேரரசு புதுமுக நடிகர் மற்றும் இயக்குனர்களுக்குக் கூறியதாவது:

ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் எதுக்கு? - புதுமுகங்களுக்கு பேரரசு அட்வைஸ்

"இப்போதெல்லாம் முதல் படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் தங்களது படங்களில் ரஜினி அளவிற்கு பில்டப் பாடலை அறிமுக பாடலாக வைத்து நடிக்கிறார்கள். முதல் படத்திலேயே ரஜினி, விஜய், அஜீத் ரேஞ்சுக்கு பாடல்களை வைக்காதீர்கள். அது படம் பார்க்க வருபவர்களை எரிச்சல் ஊட்டும்.

படிப்படியாக வளருங்கள். மக்கள் உங்களை ரசிக்க ஆரம்பித்தவுடன் அந்த மாதிரி பாடலில் நடியுங்கள். புதுமுகங்களை வைத்து இயக்கும் இயக்குனர்களிடம் இதை வேண்டுகோளாக வைக்கிறேன்.

நான் திருப்பாச்சி படத்தை இயக்கிய போது விஜய் அக்ஷன் ஹீரோவாக பெரிய ஆளாகி விட்ட நேரம் "நீ எந்த ஊரு நான் எந்த ஊரு" என்ற பாடலை பதிவு செய்து போட்டு காட்டினோம் அதை கேட்ட விஜய் இது சரியா வருமா? இவ்வளவு பில்டப் எடுபடுமா? என்று கேட்டார்.அவரை சமாதானப் படுத்தி நடிக்க வைத்தேன் அவ்வளவு பெரிய நடிகரே பயந்த நேரம் உண்டு," என்றார்.

தமிழன் நடித்த படத்துக்கு எதிர்ப்பா?

ஜாக்குவார் தங்கம் பேசுகையில், "ஒரு தமிழன் நடித்த தெனாலிராமன் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று சிலர் அறிக்கை விடுகிறார்கள், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் அவர்களிடம் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.

நீங்கள் தடுத்துப் பாருங்கள், நாங்கள் திரண்டு வந்து தற்கொலை படையாக மாறிக் கூட படத்தை திரையிட வைப்போம். மீறி தடுத்துத்தான் பாருங்களேன்.." என்றார்.

விழாவில் கலைபுலி .எஸ்.தாணு , பி.எல்.தேனப்பன், பட்டியல் சேகர்,இயக்குனர் சுராஜ், இயக்குனர் கலைசங்கர், நடிகர் தேவன் ஆகியோர் பேசினர்.

 

மான் கராத்தே- விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
2.5/5

நடிப்பு: சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சூரி, வம்சி கிருஷ்ணா, சதீஷ்

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: சுகுமார்

தயாரிப்பு: எஸ்கேப் ஆர்டிஸ்ட் - ஏ ஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ்

கதை: ஏ ஆர் முருகதாஸ்

இயக்கம்: திருக்குமரன்

நான்கைந்து மாதங்களுக்குப் பின்னால் நடப்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டால்..?

இந்த சுவாரஸ்ய கேள்வியையே ஒரு திரைக்கதயைக்கியிருக்கிறார்கள், கொஞ்சம் அசுவாரஸ்யமாக!

மான் கராத்தே- விமர்சனம்

காட்டுக்கு சுற்றுலா செல்லும் ஐடி பணியாளர்கள் சதீஷ் அண்ட் கோ, அங்கே ஒரு சித்தரைச் சந்திக்கிறார்கள். அவரிடம் நான்கு மாதங்கள் கழித்து ஆயுதபூஜைக்கு அடுத்த நாள் வரும் தினத்தந்தி செய்தித்தாளைக் கேட்கிறார்கள். சித்தரும் கொடுக்கிறார்.

அதில் பார்த்தால், இவர்கள் வேலைப் பார்க்கும் ஐடி நிறுவனத்தை நான்கு மாதங்களுக்கு முன்பே மூடிவிட்டதாக செய்தி வந்திருக்கிறது.

நம்ப முடியாமல் காட்டிலிருந்து கம்பெனிக்குத் திரும்பினால்... செய்தி உண்மையாகிவிடுகிறது. ஊழல் பிரச்சினையில் கம்பெனியை மூடுவதாக அறிவிப்பு வருகிறது.

மான் கராத்தே- விமர்சனம்

ஆஹா.. அப்போ இந்த பேப்பரில் வந்திருப்பதெல்லாம் நடக்கப் போகிறதா என்ற ஆர்வத்துடன், செய்திகளை மேய, அதில் பீட்டர் என்ற ராயபுரம் பார்ட்டிக்கு குத்துச் சண்டையில் ரூ 2 கோடி பரிசு விழுந்ததாக இன்னொரு செய்தி.

உடனே அந்த பீட்டரைத் தேடிப் போகிறார்கள். அந்த பீட்டர்தான் சிவகார்த்திகேயன். குத்துச் சண்டையென்றால் என்னவென்றே தெரியாத சிவகார்த்தியை குத்துச் சண்டைக்கு தயார்ப்படுத்துகிறார்கள். ஆனால் சிவகார்த்திக்கு இதில் நாட்டமில்லை.

இடையில் ஹன்சிகாவுக்கும் சிவகார்த்திக்கும் காதல். விளையாட்டில் மிகுந்த ஈடுபாாடு காட்டும் ஹன்சிகா வேண்டுமென்றால், குத்துச் சண்டையில் கலந்து கொண்டு ஜெயிக்க வேண்டும் என்று சிவகார்த்துக்கு தூண்டில் போடுகிறார்கள்.

இந்த நேரத்தில் உண்மையிலேய் பீட்டர் என்ற பெயரில் வேறு ஒரு குத்துச்சண்டை வீரன் இருப்பது தெரிய வருகிறது. இந்த பீட்டரைத்தான், கைப்புள்ள சிவகார்த்திகேயன் தோற்கடிக்க வேண்டும். தோற்கடித்து பரிசு வென்றாரா... ஹன்சிகா கைப்பிடித்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

சிவகார்த்திகேயனுக்கு நடிக்க பெரிய வாய்ப்பில்லை. ஆனால் வேறு டிபார்ட்மென்களில் கலக்க சரியான வாய்ப்பு. குறிப்பாக நடனக் காட்சிகளில் நிஜமாகவே ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

திருக்குறளை வைத்து காமெடி காட்சிகள் அமைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

மான் கராத்தே- விமர்சனம்

ஹன்சிகா மெலிந்து இன்னும் அழகாகக் காட்சி தருகிறார். க்ளைமாக்ஸில் நடிக்க அப்படி திணறுகிறார்.

நடுவராக வரும் சூரி, ஐடி காரராக வரும் சதீஷ், நிஜ குத்துச் சண்டை வீரராக வரும் வம்சி கிருஷ்ணா என அனைவருமே தங்கள் கேரக்டர்களை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.

முருகதாசின் கதை ஓகேதான். ஆனால் அதற்கு திரைக்கதை எழுதிய திருக்குமரன் பிற்பாதியில் ஏகத்துக்கும் சொதப்பியிருக்கிறார். முன்பாதியில் இருந்த வேகமும் சுவாரஸ்யமும் பின்பாதியில் சுத்தமாக இல்லை.

சிவகார்த்திகேயன் இன்ஸ்டன்ட் பாக்ஸராவதெல்லாம், டீக்கடைப் பையன் திடீரென நாசா விஞ்ஞானியாகிவிடுவது மாதிரிதான் இருக்கிறது.

அனிருத்தின் இசை, சுகுமாரின் ஒளிப்பதிவு இரண்டுமே படத்துக்கு ப்ளஸ்.

மான் கராத்தே- விமர்சனம்

திரைக்கதையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் திருக்குமரன் இந்தப் படத்தில் க்ளீன் வின்னராக இருந்திருப்பார்... ஜஸ்ட் மிஸ்!

 

மாமனாரின் பேச்சு வெட்கப்படும்படி இருக்கிறது: அபு ஆஸ்மியின் மருமகள் நடிகை ஆயிஷா

மும்பை: பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களையும் தூக்கிலிட வேண்டும் என்ற சமாஜ்வாடி கட்சி தலைவர் அபு ஆஸ்மியின் பேச்சுக்கு அவரது மருமகளும், நடிகையுமான ஆயிஷா தாக்கியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் என்னவென்றால் ஆண்கள் என்றால் தவறு செய்யத் தான் செய்வார்கள். பாலியல் பலாத்காரம் செய்வதற்கு எல்லாம் தூக்கிலிடுவதா என்று கேட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதையடுத்து முலாயம் கட்சியைச் சேர்ந்த அபு ஆஸ்மியோ ஒருபடி மேலே சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணையும் தூக்கிலிட வேண்டும் என்று கூறினார்.

மாமனாரின் பேச்சு வெட்கப்படும்படி இருக்கிறது: அபு ஆஸ்மியின் மருமகள் நடிகை ஆயிஷா

இது குறித்து அபு ஆஸ்மியின் மருமகளும், பாலிவுட் நடிகையுமான ஆயிஷா தாக்கியா ட்விட்டரில் கூறுகையில்,

என் மாமனார் பற்றி நான் படிப்பது உண்மை என்றால் நானும் என் கணவர் ஃபர்ஹானும் வெட்கப்படுகிறோம். அனைவரும் ஒரே மாதிரி யோசிக்க மாட்டார்கள். ஆனால் இந்த விவகாரம் உண்மை என்றால் அதற்காக வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

எந்த பெண்ணாவது அது திருமணமானவராக இருக்கட்டும், ஆகாதவராக இருக்கட்டும் அவர் சம்மதித்தோ, சம்மதம் இல்லாமலோ ஒரு ஆணுடன் சென்றால் அப்பெண்ணை தூக்கிலிட வேண்டும். இருவரையுமே தூக்கிலிட வேண்டும் என்றார் அபு ஆஸ்மி. நினைத்ததை செய்து, சுதந்திரமாக செயல்படும் மருமகளை வீட்டில் வைத்துக் கொண்டு அவர் இப்படி பேசி வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

 

ஜெய்பூர் கபடி அணியை வாங்கிய நடிகர் அபிஷேக் பச்சன்

மும்பை: பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கபடி லீக் போட்டிக்கான ஜெய்பூர் அணியை வாங்கியுள்ளார்.

கிரிக்கெட்டில் எப்படி ஐ.பி.எல். உள்ளதோ அதே போன்று கபடி லீக் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த லீக்கில் மும்பை, பெங்களூர், சென்னை, டெல்லி, கொல்கத்தா, புனே, பாட்னா மற்றும் ஜெய்பூர் ஆகிய 8 அணிகள் உள்ளன.

ஜெய்பூர் கபடி அணியை வாங்கிய நடிகர் அபிஷேக் பச்சன்

இதில் ஜெய்பூர் அணியை பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் வாங்கியுள்ளார். பெங்களூர் அணியை தவிர மீதமுள்ள அணிகள் வாங்கப்பட்டுவிட்டன. இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 28 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 100 கபடி வீரர்கள் ஏலத்தில் விடப்படுவார்கள்.

கபடி லீக் போட்டிகள் ஜூலை மாதம் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இது குறித்து அபிஷேக் பச்சன் கூறுகையில்,

இது பெருமைக்குரிய விஷயம். ஆற்றல் அதிகம் தேவைப்படும் விளையாட்டு இது. பள்ளியில் கபடி விளையாடியதாலும், விளையாட்டு பிடிக்கும் என்பதாலும் கபடி லீக்கில் அங்கம் வகிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

 

தமிழ் பெயரில் படங்கள்: வரிவிலக்கு தொடர்பான அரசாணைக்கு இடைக்காலத் தடை!

சென்னை: தமிழில் பெயர் சூட்டும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் மோட்சம் மற்றும் படத்தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுவில்,கூறியிருப்பதாவது:

தமிழில் பெயர் சூட்டும் படங்களுக்கு வரி விலக்கு அளிப்பதில் அரசு பாரபட்சம் காட்டுகிறது. அரசு விதித்த விதிமுறைகளின்படி, படத்தின் தலைப்போ, கதையின் வசனங்களோ இடம்பெறவில்லை என்றாலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதனால், அரசு உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தற்காலிகத் தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் பல முறை அறிவுறுத்தியும், இதுவரை அரசுத் தரப்பில் சரியான பதில் அளிக்கவில்லை.

எனவே, கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழில் பெயர் சூட்டும் படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக திருத்தம் கொண்டு வந்த அரசாணைக்கு இரண்டு வாரத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கிறோம் என உத்தரவிட்டனர்.

 

தெனாலிராமன் படத்துக்கு தடை கேட்டு வழக்கு!

சென்னை: வடிவேலு நடித்துள்ள தெனாலிராமன் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி தெலுங்கு அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை நிறுவன தலைவர் பாலகுருசாமி, தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி தலைவர் கே.ஜெகதீஸ்வர ரெட்டி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:

தெனாலிராமன் படத்துக்கு தடை கேட்டு வழக்கு!

"ஏ.ஜி.எஸ். எண்டெர்டைன்மென்ட் நிறுவனம், நடிகர் வடிவேலு நடித்துள்ள ‘தெனாலிராமன்' என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில், மன்னர் கிருஷ்ண தேவராயரை ஒரு நகைச்சுவை கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், தெலுங்கு மொழி பேசும் மக்கள் கடுமையான வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினோம். இதற்கு பதிலளித்த அந்த நிறுவனம், கிருஷ்ணதேவராயரை அவமரியாதை செய்யும் விதமாக எந்த ஒரு காட்சியும் இடம் பெறவில்லை என்று கூறியுள்ளது.

ஆனால், இதற்கு முரணான தகவலை இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள காமெடி நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். இந்த படத்தை தெலுங்கு மக்களின் பிரதிநிதிகளிடம் போட்டுக் காட்ட வேண்டும் என்று ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்".

-இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ் குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தலைமை நீதிபதி, ‘இந்தhd படம் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளதால், படத்தின் கதை, வசனம் உள்ளிட்டவைகள் குறித்து என்னால் பரிசீலிக்க முடியாது. எனவே, இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு அனுப்பி வைக்கிறேன்' என்று உத்தர விட்டார்.

 

மில்க், லீடர் இயக்குனர் திருமணத்திற்கு மண்டபம் புக் பண்ணியாச்சாமே!

சென்னை: மில்க் நடிகை, லீடர் இயக்குனரின் திருமணத்திற்கு சென்னையில் உள்ள மேயர் ராமாதன் திருமண மண்டபத்தை புக் செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன,

மில்க் நடிகைக்கும், லீடர் பட இயக்குனருக்கும் காதல் என்று மீடியாக்கள் கதறியபோது அவர்கள் பிற ஜோடிகள் கூறும் அதே புளித்துப்போன டயலாக் அதாங்க நாங்கள் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் இயக்குனரின் புதுப்பட இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அந்த விழாவில் மேடையில் பேசிய சீனியர் நடிகர் ஒருவர் அவர்களின் காதல் விவகாரத்தை அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டார். இதையடுத்து அறிக்கை வெளியிட்ட நடிகையோ இயக்குனர் வெளிநாட்டில் இருந்து வந்ததும் திருமணம் பற்றி அறிவிப்போம் என்றார்.

ஆனால் அவர்களின் திருமணத்திற்கு சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபம் புக் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.