கத்தி படத்தை வெளியிடக் கூடாது - விநியோகஸ்தர் சங்கத்தில் புகார் தரும் மாணவர் அமைப்பு

சென்னை: ராஜபக்சேவின் தொழில் கூட்டாளியான லைக்கா மொபைல் நிறுவனம் தயாரித்து, விஜய் நடித்துள்ள கத்தி படத்தை வெளியிடக் கூடாது எனக் கூறி மாணவர் அமைப்பு விநியோகஸ்தர்களிடம் புகார் தர முடிவு செய்துள்ளது.

விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள படம் கத்தி.

இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே பெரும் சர்ச்சை மற்றும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.

கத்தி படத்தை வெளியிடக் கூடாது - விநியோகஸ்தர் சங்கத்தில் புகார் தரும்  மாணவர் அமைப்பு

காரணம் அதன் தயாரிப்பாளர்கள். இந்தப் படத்தை முதலில் தயாரிப்பதாக அறிவித்தது அய்ங்கரன் நிறுவனம். பின்னர் லைக்கா மொபைல் நிறுவனம் அவர்களுடன் கைகோர்த்தது. பின்னர் அய்ங்கரன் துணையுடன் முற்று முழுதாக லைக்கா மொபைல் நிறுவனமே கத்தி படத்தைத் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வந்ததிலிருந்தே படத்துக்கு எதிரான கோஷங்கள் கிளம்பிவிட்டன. தமிழினப் படுகொலை செய்த ராஜபக்சேவின் கூட்டாளிகளான லைக்கா மொபைல்காரர்கள் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிப்பதா என்ற எதிர்க்குரல்கள் பலமாக ஒலித்தாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் படத்தை இயக்கினார் முருகதாஸ்.

மேலும் இந்த நிறுவனத்துக்காக படங்கள் இயக்க தமிழ் சினிமாவில் ஆள்பிடிக்கும் வேலையையும் அவர் செய்வதாக புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில், லைக்கா மொபைல் நிறுவனத்தினரின் குடும்ப நிகழ்ச்சிக்கும் சத்தமின்றி போய் வந்திருக்கிறார் படத்தின் ஹீரோ விஜய்.

இப்போது, படத்தை உலகின் எந்தப் பகுதியிலும் வெளியிடவே கூடாது எனக் கூறி மாணவர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

முதல் கட்டமாக வரும் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரை சந்தித்து சிங்கள இனவேறியர்களின் பணத்தில் விஐய் நடிக்கும் கத்தி திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தப் போவதாக முற்போக்கு மாணவர் முன்னணி என்ற அமைப்பு அறிவித்துள்ளது.

 

ஒன் இந்தியாவில் இளையராஜாவின் வாழ்க்கைத் தொடர்! - ரசிகர்கள் கருத்தரங்கில் அறிவிப்பு

லோயர் கேம்ப், கூடலூர்: ஒன் இந்தியா இணைய தளத்தில் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு தொடராக வெளிவருகிறது.

இளையராஜாவின் முன்னிலையில் அவரது லோயர்கேம்ப் இல்லத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

உலக இசை மேதைகளுள் முதன்மையானவராகக் கருதப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப்பட வேண்டும் என்பது பல தரப்பினரும் தொடர்ந்து கூறி வரும் ஒன்றாகும்.

ஒன் இந்தியாவில் இளையராஜாவின் வாழ்க்கைத் தொடர்! - ரசிகர்கள் கருத்தரங்கில் அறிவிப்பு

இந்த நிலையில்தான் ஒன்இந்தியா இணைய தளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனது வாழ்க்கை வரலாற்றை அனுபவத் தொடராக எழுதவேண்டுமென நாம் இசைஞானி இளையராஜாவைக் கேட்டுக் கொண்டோம்.

பலமுறை அவரிடம் இதுபற்றி நாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டதால், முதல் முறையாக தனது வாழ்க்கை அனுபவங்களைத் தொடராக வெளியிட ஒப்புதல் தந்தார்.

நேற்று லோயர் கேம்பில் நடந்த இசைஞானி ஃபேன்ஸ் கிளப் ரசிகர்கள் கருத்தரங்கில் பேசிய நடிகர் ராஜேஷ், இசைஞானியின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக பதிவு செய்யப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, இசைஞானி வாழ்க்கை வரலாறு ஒன்இந்தியாவில் தொடராக வரவிருப்பதை ஒரு அறிவிப்பாக இளையராஜா முன்னிலையில் அவரது உதவியாளர் தேனி கண்ணன் அறிவித்தார். அதனை மேடையில் இருந்த இளையராஜாவும் ஆமோதித்தார்.

விரைவில் இந்தத் தொடர் வெளியாகும் தேதியை இசைஞானியே அறிவிப்பார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உலகெங்கும் உள்ள இசைஞானியின் ரசிகர்கள் தொடர்ந்து ஒன்இந்தியாவுடன் இணைந்திருங்கள்... இசைஞானியின் வாழ்க்கைத் தொடரைப் படித்துப் பரவசப்படுங்கள்.

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 13வது நினைவு நாள்.. காங்கிரஸ் சார்பில் அஞ்சலி!

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற நடிகர் எனப் புகழப்படும் சிவாஜி கணேசனின் 13வது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

இணையில்லா நடிகரான சிவாஜி கணேசன் கடந்த 2004-ம் ஆண்டு இதே நாளில் மரணத்தைத் தழுவினார். அவரது நினைவு நாள் ஆண்டு தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 13வது நினைவு நாள்.. காங்கிரஸ் சார்பில் அஞ்சலி!

இந்த ஆண்டு காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சிவாஜி உருப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் சிவாஜி உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் மலர் தூவி வணங்கினர். அண்ணாசாலையில் சிவாஜி சிலைக்கு அவரது மகன் பிரபு மாலை அணிவித்தார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் ஆகியோரும் மாலை அணிவித்தனர். உடல் ஊனமுற்ற பெண்களுக்கு சிவாஜி சமூக நல பேரவை சார்பில் செயற்கை கால் சாதனங்களை சந்திரசேகரன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிவாஜி சமூக நலப் பேரவை மற்றும் ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.

 

அடுத்த வாரமேகூட புது ஆல்பம் தயார்... ஆனால்!- இளையராஜா

ரசிகர்கள் இணையதளங்கள் மூலம் தரவிறக்கம் செய்யாமல், நேரடியாக வாங்கி கேட்கும் நிலை உருவானால், வாரம் ஒரு புதிய ஆல்பம் கூட வெளியிட நான் தயார் என்று இசைஞானி இளையராஜா கூறினார்.

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் உள்ள இளையராஜாவின் வீட்டில், இசைஞானி ஃபேன்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்குக்கு இளையராஜா தலைமை வகித்தார். திரைப்பட நடிகர் ராஜேஷ், இயக்குநர்கள் ரத்னகுமார், சுகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கிடையே இளையராஜா பேசியது:

ரசிகர்களுடனான முதல் சந்திப்பை நான் இங்கு வைத்துகொண்டதுக்கு காரணம், எனது தாயார் மற்றும் மனைவியின் நினைவிடங்கள் இங்குதான் உள்ளன.

தீபாவளியன்று அம்மா நினைவு நாள் என்பதால் ஆண்டுக்கு ஒரு முறை இங்கு வருவேன். தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவேன். தற்போது ரசிகர்களான உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

அடுத்த வாரமேகூட புது ஆல்பம் தயார்... ஆனால்!- இளையராஜா

இத்தனை நாட்களாக, என் பெயரில் என் அனுமதி இல்லாமலேயே நீங்கள் பல ரசிகர் மன்றங்களை ஆரம்பித்திருந்து, ஆளாளுக்கு என்னைப் பந்தாடிக் கொண்டிருந்தீர்கள். எந்த உரிமையில் இப்படிச் செய்து வந்தீர்கள்?

இதையெல்லாம் மாற்றி, உங்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரத்தான் இந்த ஏற்பாடு.

ஆளாளுக்கு ரசிகர் மன்றம் தொடங்குவதில் என்ன நோக்கம் இருக்கிறது? அந்தக் காலத்தில் திண்ணைப் பேச்சு பேசுவார்களே.. அப்படித்தான் தனித்தனி குழுக்களாக இயங்குவது.

இதையெல்லாம் கவனித்து வந்த ரத்னகுமாரும், வேலுச்சாமியும், ஆல்பர்ட் போன்றவர்களும், நமது சக்தி விரயமாகிறதே என்று உணர்ந்து இந்த அமைப்பை ஆரம்பித்தார்கள், என் அனுமதியுடன்.

இந்த அமைப்பைக் கொண்டு எல்லோரும் இணைந்து உலகத்துக்கு நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

அடுத்த வாரமேகூட புது ஆல்பம் தயார்... ஆனால்!- இளையராஜா

இங்கு கூடிய இசைஞானி பேன்ஸ் கிளப் கூட்டத்தின் நோக்கம் இசையை வளர்ப்பது, ஆன்மீகத்தை காப்பது, சமூக சேவைகளை மக்களுக்கு செய்வது, மரக்கன்றுகள் நடுவதோடு, பொதுச் சேவையோடு, நாட்டை சுத்தமாக வைப்பதோடு, மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள், எனது பெயரில் என் அனுமதி இல்லாமல் இயங்கக்கூடிய ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள், இசைஞானி பேன்ஸ் கிளப் என்ற அமைப்பில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இங்கு பேசியவர்கள், ஹவ் டு நேம் இட் போல புதிய ஆல்பம் ஏன் வெளியிடவில்லை என்று கேட்டார்கள். இங்கே ஆன்லைனில் மட்டும் 20 லட்சம் பேர் ரசிகர்கள் இருப்பதாகச் சொன்னீர்கள் அல்லவா... நீங்கள் மட்டும் எனது பாடல்களை இணையதளத்தில் பதிவு இறக்கம் செய்யக்கூடாதென உறுதி மொழி எடுங்கள். புதிய ஆல்பத்தை சிடியாக வாங்கி கேட்பதென உறுதிஎடுத்து பதிவு செய்யுங்கள்... அடுத்தநாளே ஒரு ஆல்பம் வெளியிட என்னால் முடியும். அது எனக்கு ஒரு பெரிய விஷயமே அல்ல. இசை ஆல்பங்களை வாங்கிக் கேட்க ரசிகர்கள் தயாராக இருந்தால் வாரம் ஒரு ஆல்பம் வெளியிட என்னால் முடியும்," என்றார்.

மேலும், அடுத்தடுத்து, தன் லோயர்கேம்ப் வீட்டில் ரசிகர்களைச் சந்திக்க உள்ளதாகவும் இளையராஜா தெரிவித்தார்.

வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் காலை மற்றும் பிற்பகல் உணவு வழங்கப்பட்டது.

வந்திருந்த ரசிகர்கள் லோயர் கேம்ப் இல்லத்தின் வளாகத்தில் அமைந்துள்ள இளையராஜாவின் அன்னை மற்றும் துணைவியார் நினைவிடங்களில் தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர்.

இந்தக் கருத்தரங்கில், திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர் ஆல்பர்ட், ரேணுகா மில் மோகன், மற்றும் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர்கள் மட்டும் கருத்தரங்கில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இதுவரை இயங்கிவந்த பல ரசிகர் மன்ற குழுக்கள் இசைஞானி பேன்ஸ் கிளப்பில் இணைக்கப்பட்டன.

அடுத்த வாரமேகூட புது ஆல்பம் தயார்... ஆனால்!- இளையராஜா

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தேனிகண்ணன், அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

 

தல 55.. அஜீத்துடன் இணைந்தார் த்ரிஷா!

தல 55 என தற்காலிகமாக அழைக்கப்படும் அஜீத்தின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார் த்ரிஷா.

திரையில் தனக்கு பொருத்தமான ஜோடி என அஜீத்தைக் குறிப்பிட்டுள்ளவர் த்ரிஷா. கிரீடம் படம் தொடங்கி, 4 படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். இப்போது 5வதாக, கவுதம் மேனன் இயக்கும் படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

தல 55 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தில் அஜீத்துடன் அனுஷ்காவும் நடிக்கிறார். ஆனாலும் த்ரிஷாவுக்கு மிக முக்கியமான வேடம் தந்துள்ளாராம் கவுதம் மேனன்.

தல 55.. அஜீத்துடன் இணைந்தார் த்ரிஷா!

தனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய த்ரிஷா, சில தினங்களுக்குப் பிறகு, அஜீத்துடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இதுகுறித்து த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "மிகச் சிறந்த, சக்தி மிக்க படக் குழுவுடன் 'தல 55' படத்தில் நடிக்க ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

அஜீத்தின் ப்ளாஷ்பேக் காதலியாக இந்தப் படத்தில் வருகிறாராம் த்ரிஷா. அருண் விஜய்யும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

 

வேலையில்லா பட்டதாரி - விமர்சனம்

Rating:
3.0/5
எஸ் ஷங்கர்

வழக்கமான, ஒரு வேலையில்லா பட்டதாரி அசத்தல் ஹீரோவாகிவிடும் கதைதான் இந்தப் படமும். ஆனால் அதை அசாத்திய நடிப்பு மற்றும் சொன்ன விதம் மூலம் பார்க்க வைத்துவிடுகிறது தனுஷ் - வேல்ராஜ் கூட்டணி.

தனுஷ் ஒரு வேலையில்லா பட்டதாரி. படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால், அப்படி. தந்தையிடம் தண்டச்சோறு திட்டு வாங்கி, அம்மா ஆதரவுடன் காலம் தள்ளும் அவருக்கும், பக்கத்துக்கு வீட்டு அமலா பாலுக்கும் காதல்.

அம்மாவின் மரணம் தனுஷுக்கு வேலை பெற்றுத் தர, அதில் விக்ரமன் பட ரேஞ்சுக்கு சட்டென்று நல்ல பெயரும் பதவி உயர்வும் பெரிய வாய்ப்பும் வருகிறது. ஆனால் அந்த வாய்ப்பு கைகூடாத கோபத்தில் தனுஷுக்கு எதிரிகள் உருவாகிறார்கள். அவர்களை தனுஷ் எப்படி வெற்றி கொள்கிறார் என்பது மீதி!

வேலையில்லா பட்டதாரி - விமர்சனம்

எண்பதுகளிலிருந்து பார்க்கும் கதைதான். இதே தனுஷ் முன்பு நடித்த பொல்லாதவன் சாயலும்கூட உண்டு. ஆனால் தனுஷின் நவரச நடிப்பும் சரண்யாவின் அனுபவ நடிப்பும் முதல் பாதியை அத்தனை வேகத்தில் கடத்திச் செல்கின்றன.

மரியான் மாதிரி கதைகளை விட, இந்த மாதிரி கதைகளில்தான் தனுஷின் இயல்பான நடிப்பு வெளிப்படுகிறது. இந்தப் படத்தை ரசிக்க முடிகிறது என்றால் அதற்கு தனுஷ், சரண்யா, சமுத்திரக்கனியின் தேர்ந்த நடிப்புதான் காரணம் என்பதில் இருவேறு கருத்திருக்க முடியாது.

வேலையில்லா பட்டதாரி - விமர்சனம்

இடைவேளைக்குப் பிந்தைய கதையோட்டம், சமூகப் பிரச்சினைகளை அலசுகிறது. அதில் சமீபத்தில் நடந்த 11 மாடி கட்டிட விபத்தின் நிழலும் தெரிகிறது.

பக்கத்துவீட்டுப் பெண்ணாக வரும் அமலா பாலுக்கு நிஜமாகவே அப்படியான தோற்றம். அவருக்கும் தனுஷுக்குமான காதலில் பெரிய தீவிரம் இல்லாவிட்டாலும், அந்த இணை ஈர்க்கிறது.

வில்லனாக வரும் அமிதேஷ், தனுஷின் தம்பியாக வரும் ரிஷி, சுரபி என அனைவரது நடிப்பும் மெச்சத் தக்கதாகவே உள்ளது!

வேலையில்லா பட்டதாரி - விமர்சனம்  

விவேக் வரும் காட்சிகள் நிஜமாகவே ஆறுதலாக உள்ளன. தனுஷ் தங்கியிருக்கும் ஒரு தற்காலிக குடிசையை விவேக் வர்ணிக்கும் காட்சி போதும், அவரது நகைச்சுவை இன்னும் வற்றாமலிருப்பதைச் சொல்ல!

அனிருத்தின் இசை ஆஹா ஓஹோ என்றெல்லாம் இல்லை.. காட்சிகளின் சுவாரஸ்யத்தில் பின்னணி இசையை மறந்துபோகிறோம்.

இறுதிக் காட்சிகள் பக்கா நாடகத்தனம்... இந்த மாதிரி கற்பனை சமூகப் புரட்சிக்கு தமிழ் சினிமாக்களில் ஒருபோதும் பஞ்சமிருந்ததில்லை. கேட்க, பார்க்க நன்றாக இருந்தாலும், நடைமுறை தமிழனை நினைத்துப் பார்த்தால் சலிப்பும் வெறுப்பும்தான் மிஞ்சுகிறது.

தனுஷுக்கு இது 25வது படம். ஒரு புதுமுக இயக்குநருக்கு இந்த வாய்ப்பைத் தந்திருப்பது அவரது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. இரண்டாம் பாதியில் நடைமுறை சாத்தியமற்ற காட்சிகள் இருந்தாலும், அவற்றை மறந்து ரசிக்க வைத்திருப்பதில் இயக்குநர் வேல்ராஜ் வென்றிருக்கிறார்!

 

பிரிக்ஸ் சர்வதேச விழாவில் மஞ்சப்பை!

பிரிக்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட மஞ்சப்பை தமிழ்ப் படம் தேர்வாகியுள்ளது.

விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் மஞ்சப்பை.

தாத்தா, பேரன் பாசத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்தை ராகவன் இயக்கியிருந்தார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் நல்ல வசூலைப் பெற்றது.

பிரிக்ஸ் சர்வதேச விழாவில் மஞ்சப்பை!

இப்போது, விருதுகளையும் குவிக்க ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக வருகிற 22-ந் தேதி சென்னை ரஷ்யன் கல்ச்சர் சென்டரில் நடைபெறும் பிரிக்ஸ் எனும் உலக திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படுகிறது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா (Brazil, Russia, India, China, South Africa) ஆகிய நாடுகள் இணைந்ததுதான் இந்த பிரிக்ஸ் (BRICS).

இந்த விழாவில் பல்வேறு நாடுகளின் படங்கள் திரையிடப்பட உள்ளன. ஆனால், தமிழ் மொழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே படம் ‘மஞ்சப்பை' என்பது குறிப்பிடத்தக்கது.


 

பணமோசடி: ஓம் சாந்தி ஓம் திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் கைது

சென்னை: போலியாக கணக்கு எழுதி ரூ.46 லட்சம் பணமோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் அளித்த புகாரின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீகாந்த், புதுமுகம் நீலம் உபாத்யாயா நடித்து வரும் படம் ஓம் சாந்தி ஓம். சூர்ய பிரபாகர் இயக்கி வருகிறார். 8 பாயிண்ட் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அருமை சந்திரன் தயாரித்து வருகிறார். இந்தப் படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கிறது.

தயாரிப்பாளர் அருமை சந்திரன் சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய பிரிவில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் சிங்கப்பூரில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருகிறேன். இதனால் அவர் படத் தயாரிப்பு பொறுப்பை ராஜசேகர், செந்தில்குமார், தினேஷ்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தேன்.

படத்தில் பணியாற்றி நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளத்தை குறைவாக கொடுத்து முழு சம்பளமும் கொடுத்துவிட்டதாக கணக்கு எழுதியுள்ளனர். இவர்களே போலி ரசீது தயாரித்து 46 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர் அருமை சந்திரனின் புகாரின் பேரில் படத்தின் தயாரிப்பு நிர்வாகிகள் ராஜசேகர், செந்தில்குமார், தினேஷ் குமார் ஆகிய 3 பேரை போலீஸ் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து போலி பில்கள், வவுச்சர்கள் மற்றும் லேப் டாப்பை கைப்பற்றி உள்ளனர்.