கார்த்தி - நாகார்ஜுனாவை இணைத்து புதிய படம்.. பிவிபி சினிமா அறிவிப்பு

'மெட்ராஸ்' படத்தின் வெற்றி கார்த்தியின் சினிமா பார்வையையே மாற்றியிருக்கிறது. மிகுந்த உற்சாகமும் நம்பிக்கையும் பெற்றுள்ள கார்த்தி, அடுத்து பிவிபி சினிமா நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ணுகிறார்.

தமிழ் - தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறார் நாகார்ஜுனா.

முத்தையா இயக்கத்தில் இப்போது கார்த்தி நடிக்கும் 'கொம்பன்' முடிந்ததும், இந்தப் புதிய படம் தொடங்குகிறது. லாவிஷ் புரொடக்‌ஷனும், பிவிபி சினிமாஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.

'முன்னா', 'பிருந்தாவனம்', 'எவடு' ஆகிய படங்களை இயக்கிய வம்சி இப்படத்தை இயக்குகிறார். இன்னும் பெயர் வைக்கவில்லை.

நாயகி உட்பட மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

இரண்டு மாதங்களாக காணவில்லை... எங்கே போனார் குத்து ரம்யா.. தனித்தீவில் உள்ளாரா?

கடந்த இரு மாதங்களாக நடிகை குத்து ரம்யாவைக் காணவில்லை என்றும், அவரிடமிருந்து எந்த தகவல் தொடர்பும் இல்லையென்றும் தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.

தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்தவர் ரம்யா. கன்னடத்தில் முன்னணி நடிகை.

கர்நாடக அரசியலிலும் குதித்து,காங்கிரஸ் கட்சி சார்பில் மாண்டியா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ஆறு மாதங்களுக்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தோல்வியால் மனம் உடைந்தார். அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்தார்.

இரண்டு மாதங்களாக காணவில்லை... எங்கே போனார் குத்து ரம்யா.. தனித்தீவில் உள்ளாரா?

‘ஆர்யன்' என்ற கன்னடப் படத்தில் மட்டும் நடித்தார். அப்படம் ரிலீசாகி விட்டது. அடுத்து புனித் ராஜ்குமார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். பிறகு தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பிறகுதான் அவரைக் காணவில்லையாம்.

ட்விட்டர், பேஸ்புக்கில் மிகவும் ஆக்டிவாக இருந்தவர் ரம்யா. கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்து ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் அவர் எந்த தகவலும் பதியவில்லை.

அரசியல் நிகழ்ச்சிகள், சினிமா விழாக்கள் போன்றவற்றிலும் பங்கேற்கவில்லை. வீட்டில் விசாரித்தால் அவர் இல்லை என்ற பதிலே வருகிறது.

அவர் என்ன ஆனார் என்பது மர்மமாக உள்ளது. பொதுவாக அவர் திடீர் திடீரென ஏதாவது தீவுக்குச் சென்று தனிமையில் அல்லது பிடித்த நண்பர்களுடன் இருப்பார் என்று திரையுலகில் ஒரு தகவல் உலா வருகிறது. இந்த முறை அப்படி எங்காவது சென்றிருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

ராணாவுடன் உறவை முறித்துக் கொண்ட த்ரிஷா?

தெலுங்கு நடிகர் ராணாவுடனான தன் நீண்ட கால நட்பை முறித்துக் கொண்டார் த்ரிஷா என செய்திகள் வெளியாகியுள்ளன.

இருவரும் நாட்களாக நெருங்கிப் பழகி வந்தனர். பட விழாக்களுக்கு ஜோடியாக வந்தார்கள். வெளிநாடுகளில் நடந்த பட விழாக்களுக்கும் ஒன்றாகவே சென்று வந்தார்கள்.

ராணாவுடன் உறவை முறித்துக் கொண்ட த்ரிஷா?

சமீபத்தில் மலேசியாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஜோடியாக பங்கேற்றார்கள். அருகருகே உட்கார்ந்து சிரித்து பேசிக் கொண்டும் இருந்தனர். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ராணா நிறைய பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்தது திரிஷாவுக்குப் பிடிக்காததால் இந்த உறவு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இனி சினிமாவில் மட்டுமே முழு கவனமும் என்று த்ரிஷா முடிவெடுத்துவிட்டாராம். ஆனால் இதுகுறித்து ராணா, த்ரிஷா இரு தரப்பிலுமே விளக்கமறிய முயன்றோம். இருவருமே தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளனர்!

 

மெட்ராஸ், கத்தி பாடல்களுக்கு ரசிகராகிவிட்ட இயக்குநர் ஷங்கர்!

மெட்ராஸ் மற்றும் கத்தி படங்களின் பாடல்கள் இயக்குநர் ஷங்கருக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம்.

அதிலும் ஒரு பாடலை அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

தான் என்னதான் பிரமாண்ட இயக்குநர் என்றாலும், அடுத்தவர்களின் படைப்புகளை ரசித்து கருத்து சொல்லத் தயக்கம் காட்டியதே இல்லை ஷங்கர்.

மெட்ராஸ், கத்தி பாடல்களுக்கு ரசிகராகிவிட்ட இயக்குநர் ஷங்கர்!

சமீபத்தில் வெளியான ‘சதுரங்க வேட்டை', ‘வேலையில்லா பட்டதாரி', ‘ஜிகர்தண்டா' போன்ற படங்களை ரசித்ததோடு, அவற்றைப் பற்றி கருத்தும் கூறியிருந்தார்.

தற்போது இந்த வரிசையில் கத்தி படமும் இணைந்து விட்டது. கத்தி படத்தில் இடம்பெற்றுள்ள பக்கம் வந்து பாடலை தினமும் கேட்டுக்கொண்டிருப்பதாக ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், "கத்தி படத்தின் ‘பக்கம் வந்து' பாடல் ராக்கிங், தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அதபோல் ‘மெட்ராஸ்' படத்திலிருந்து ‘நான்... நீ', ‘சென்னை வடசென்னை' பாடல்களையும்தான். புதிதாகவும், தென்றல் போலவும் இருக்கின்றன," என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

விஜய்-சமந்தா நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கியிருக்கும் படம் கத்தி. பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

 

தீபாவளி ஸ்பெஷல்: கத்தி, பூஜை படங்களுக்கு நாளை முதல் ரிசர்வேஷன்!

தீபாவளி வெளியீடுகளான கத்தி, பூஜை படங்களுக்கு நாளை முதல் டிக்கெட்டுகள் முன்பதிவு ஆரம்பம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீபாவளிக்கு கத்தி, பூஜை, புலிப்பார்வை ஆகிய படங்கள் ரிலீசாகவிருக்கின்றன. வாய்ப்பிருந்தால் தங்களின் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தையும் வெளியிட அதன் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் காத்திருக்கிறார்.

தீபாவளி ஸ்பெஷல்: கத்தி, பூஜை படங்களுக்கு நாளை முதல் ரிசர்வேஷன்!

இவற்றில் கத்தி படத்துக்கு 400 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், தமிழ் அமைப்புகள் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் லைகா நிறுவனத்தை கடுமையாக எதிர்ப்பதால், இறுதி முடிவு எடுக்க முடியாமல் காத்திருக்கின்றனர்.

நேற்று முன்தினம் தியேட்டர் உரிமையாளர்களை சந்தித்துப் பேசிய தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு, இன்று மீண்டும் பேசவிருக்கின்றனர். இந்த சந்திப்பில் கத்தி படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான அய்ங்கரன் கருணாவும் பங்கேற்கிறார்.

சந்திப்பில் இணக்கமான முடிவு ஏற்பட்டால் கத்தி வெளியாவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. அப்படியே பிரச்சினை வந்தாலும் தமிழகம் தவிர்த்து, பிற பகுதிகளில் இதே அளவு அரங்குகளில் வெளியிட மாற்றுத் திட்டம் வைத்துள்ளது லைகா என்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று தியேட்டர்கள் லிஸ்ட் மற்றும் ரிசர்வேஷன் குறித்து கத்தி தயாரிப்பாளர்கள் விளம்பரம் வெளியிட்டுள்ளனர். நாளை முதல் டிக்கெட்டுகள் ரிசர்வ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூஜை படத்துக்கான டிக்கெட் முன்பதிவும் நாளை முதல் தொடங்குவதாக இன்று விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

 

வெளிநாடுகளில் கத்தி பாடல் சிடியை இலவசமாகத் தரும் லைகா!

வெளிநாட்டு கடைகளில் கத்தி படத்தின் பாடல் சிடிகளை இலவசமாகவே வழங்கி வருகிறதாம் லைகா நிறுவனம்.

தீபாவளி வெளியீடாக வருகிறது கத்தி படம். லைகா நிறுவனம் இலங்கை அதிபருக்கு நெருக்கமான நிறுவனம் என்று கூறி இந்தப் படத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு நிலவுகிறது. ஆனால் வெளிநாடுகளில் இந்த நிலை இல்லை.

வெளிநாடுகளில் கத்தி பாடல் சிடியை இலவசமாகத் தரும் லைகா!

விஜய் படத்துக்கு இதுவரை இல்லாத எண்ணிக்கையிலான அரங்குகளில் கத்தியை வெளியிடவிருக்கிறது லைகா நிறுவனம்.

இந்த நிலையில், படத்தின் இசைத்தட்டுகளை (சிடி) தமிழர் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளில் இலவசமாகவே வழங்கி வருகிறது லைகா நிறுவனம். சூப்பர் மார்க்கெட்டுகள், இசைத் தட்டு விற்பனை நிலையங்களில் வாங்கும் பொருட்களுடன் இந்த சிடியை இலவசமாகக் கொடுக்கிறார்களாம்.

 

கத்தி ரிலீசில் உறுதியற்ற நிலை... பூஜை படத்துக்கு கூடுதல் அரங்குகள்!

கத்தி படம் வெளியாவதில் உறுதியற்ற நிலை இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் கருதுவதால், பூஜை படத்துக்கு கூடுதல் அரங்குகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த சூழலைப் பயன்படுத்தி பூலோகம் படத்தை வெளியிடவும் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கத்தி படத்தை வரும் 22-ம் தேதி வெளியாக விடமாட்டோம் என வேல் முருகன் தலைமையிலான தமிழ் அமைப்பினர் கூறியுள்ளனர். இதனை திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை அழைத்து நேரடியாகவும் கூறிவிட்டனர்.

கத்தி ரிலீசில் உறுதியற்ற நிலை... பூஜை படத்துக்கு கூடுதல் அரங்குகள்!

இதனால் படத்தை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் நாளை நடக்கும் கூட்டத்தில் தங்களின் நிலைப்பாட்டினைக் கூறுவதாக வேல் முருகனிடம் திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் கூறியுள்ளனர்.

நாளைய கூட்டத்திலும் கத்திக்கு எதிரான நிலை தொடர்ந்தால், பூஜை படத்துக்கு கூடுதல் அரங்குகள் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தனது பூலோகம் படத்தை திடீரென வெளியிடவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, எந்த எதிர்ப்பையும் பற்றி கவலைப்படாமல், கத்தியை வெளியிடும் வேலையில் மும்முரம் காட்டும் லைகா நிறுவனம், தமிழகத்தைத் தவிர வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் மட்டுமே படத்தை வெளியிடும் சூழல் வந்தால், அதையும் சந்திக்க தயாராக உள்ளதாம்.

 

இந்த தீபாவளி 'தல' தீபாவளி?

சென்னை: இந்த தீபாவளிக்கு தல ரசிகர்களுக்கு அவர் நடித்து வரும் படம் பற்றி நல்ல செய்தி காத்திருக்கிறது.

ஏற்கனவே பலமுறை நாங்கள் கை டைப் செய்து நீங்கள் கண் வலிக்க படித்தது தான். இருந்தாலும் மீண்டும் ஒரு முறை எழுத வேண்டியுள்ளது. நீங்களும் படிக்க வேண்டி உள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடித்து வரும் தற்போதைக்கு தல 55 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது தெரிந்த தகவல் தெரியாத தகவல் இதோ.

இந்த தீபாவளி 'தல' தீபாவளி?

படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. தீபாவளிக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும், படம் பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது. தீபாவளிக்கு தல 55 படத்தின் விளம்பர காட்சிகள் வெளியிடப்படலாமாம். மேலும் கௌதம் இத்தனை நாட்களாக தேடித் தேடி தேர்வு செய்துள்ள படத்தின் பெயரையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறார்களாம்.

முன்னதாக சிறுத்தை சிவாவும் தல படத்தின் தலைப்பை உடனே தெரிவிக்காமல் இழுத்தடித்து கடைசியில் தான் ஆரம்பம் என்று தெரிவித்தார். கௌதம் அப்படி என்ன தலைப்பை தேர்வு செய்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள நிச்சயம் தீபாவளி வரை நீங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் கலக்கினால் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டமும் உள்ளதாம் கௌதமுக்கு.

 

இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த அகி மியூசிக் உள்பட 5 நிறுவனங்களுக்குத் தடை நீட்டிப்பு!

இசையமைப்பாளர் இளையராஜாவின் காப்புரிமை பெற்ற இசை வடிவங்களைப் பிற நிறுவனங்கள் காப்புரிமை தராமல் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த நிறுவனங்கள் வெளியிட்ட இசைத்தட்டுகள், ஐட்யூனில் விற்றுவந்த பாடல்களை தொடர்ந்து விற்பனை செய்ய உடனடித் தடை விதித்ததுடன், கடைகளில் உள்ள அந்த இசைத் தட்டுகளை பறிமுதல் செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட்டது.

இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த அகி மியூசிக் உள்பட 5 நிறுவனங்களுக்குத் தடை நீட்டிப்பு!

கடந்த 1976-ஆம் ஆண்டு முதல் இசையமைத்து வரும் இளையராஜா, ஆறாயிரம் பாடல்களுக்கு மேல் இளையராஜா இசையமைத்துள்ளார். சர்வதேச சினிமாவில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்தவர் என்ற பெருமையை இளையராஜா பெற்றுள்ளார்.

இந்நிலையில் அகி மியூசிக் என்ற நிறுவனம் உள்பட ஐந்து நிறுவனங்கள் இளையராஜாவின் இசை வடிவங்களை வெவ்வேறு கட்டத்தில் பயன்படுத்தி வந்தன. அகி மியூசிக் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக இளையராஜாவின் பெரும்பாலான பாடல்களை மறு வெளியீடு செய்து பெரும் வருவாய் ஈட்டி வந்தது.

ஐட்யூனில் இளையராஜாவின் பாடல்களுக்கு பெரும் வருவாயும் வரவேற்பும் கிடைத்தன. ஆனால் இளையராஜாவுக்கு கோடிக்கணக்கில் காப்புரிமைத் தொகையைத் தராமல் இந்த நிறுவனம் ஏமாற்றி வந்தது. இதனை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார் இளையராஜா.

காப்புரிமை பெறப்பட்ட தனது பாடல்களை இந்த நிறுவனங்கள் பயன்படுத்துவதால், அதற்குத் தடை விதிக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனுவை கடந்த முறை விசாரணை செய்த நீதிபதி எஸ்.தமிழ்வாணன், இளையராஜாவின் இசை வடிவங்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு வியாழக்கிழமை மீண்டும் வந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை அக்டோபர் 20-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.