சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேனா? - நமீதா விளக்கம்


சினிமாவிலிருந்து விலகிவிட்டதாகவும் கட்டுமானத் தொழிலில் முழு கவனம் செலுத்துவதாகவும் வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை நமீதா.

நடிகை நமீதா குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர். 2002-ல் சினிமாவில் அறிமுகமானார். விஜயகாந்த் ஜோடியாக நடித்த முதல் தமிழ் படம் எங்கள் அண்ணா சூப்பர் ஹிட்டானது.

தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்தார். நமீதா நடிப்பில் கடைசியாக கடந்த வருடம் 'இளைஞன்' படம் ரிலீசானது. அதன் பிறகு படங்கள் இல்லை. தற்போது மும்பையில் கட்டுமான நிறுவனம் தொடங்கி அபார்ட்மெண்ட் வீடுகள் கட்டி கொடுத்து வருகிறார்.

கட்டுமான நிறுவன தொழில் அதிபர் ஆனதால் சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விட்டதாக செய்தி பரவியது. இதுபற்றி கேட்டபோது, நமீதா மறுத்தார். அவர் கூறுகையில், "சினிமாவை விட்டு நான் விலக வில்லை. மும்பையில் கட்டுமான நிறுவனம் தொடங்கி இருப்பது உண்மைதான். அதற்கு நான் உரிமையாளர் மற்றபடி தொழிலை கவனித்துக் கொள்ள நிறைய பேரை நியமித்துள்ளேன்.

நான் சில நாட்கள் மும்பையில் தங்கி தீவிர உடற்பயிற்சி மூலம் எனது உடம்பை குறைத்தேன். இப்போது நிரந்தரமாக சென்னைக்கு குடி வந்துவிட்டேன்.

மங்கை அரிராஜன் இயக்கும் படமொன்றில் நடிக்கிறேன். என்.கே. விஸ்நாதனனின் 'ஓடி விளையாடு பாப்பா' என்ற 'ரீமேக்' படத்திலும் நடிக்கிறேன்.

இது தவிர தெலுங்கு படமொன்றுக்கும் ஒப்பந்தமாகியுள்ளேன். அப்படத்தில் முழுக்க சேலை கட்டி நடிக்கிறேன். நல்ல கதைகளுக்காக காத்து இருக்கிறேன். அப்படி கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.
 

வழிப்போக்கன்... வில்லன்... விவேக்!


முன்னணி காமெடியனான விவேக் வில்லன் வேடத்துக்கு மாறியுள்ளார்.

தமிழ், கன்னட மொழிகளில் தயாராகும் வழிப்போக்கன் என்ற படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார். இது அவரது முதல் வில்லன் வேட படமாகும்.

பெங்களூரில் நடந்த இந்த படத்தின் பூஜையில் பங்கேற்ற பின் விவேக் கூறுகையில், "வழிப்போக்கன் படம் கன்னடம், தமிழ் மொழிகளில் தயாராகிறது.

இது எனது முதல் கன்னட படம். இப்படத்தில் நான் வில்லனாக படம் முழுக்க வருகிறேன். கிளைமாக்சில் எனது வில்லத்தனம் வெளிப்படும். எனக்கு கன்னட மொழி தெரியாது. படப்பிடிப்பில் அதைkd கற்றுக் கொள்வேன்.

கன்னடத்தில் டப்பிங் பேசுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இது எனக்கு சவாலான படமாக இருக்கும்," என்றார்.

சமீப காலமாக வெளியாகும் படங்களில் இவரது காமெடியே வில்லத்தனமாக மாறிவிட்டதால் மெயின் வில்லனாகிவிட்டார் போலிருக்கிறது!
 

அணையின் வரலாறு தெரியாம டேம் 999ல் நடித்துவிட்டேன்: விமலாராமன்


முல்லைப்பெரியாறு அணையின் வரலாறு பற்றி தெரியாமல் டேம் 999 படத்தில் நடித்துவிட்டேன் என்று அப்படத்தின் நாயகி விமலாராமன் தெரிவித்துள்ளார்.

முல்லைப்பெரியாறு அணை உடைவது போன்று எடுக்கப்பட்டுள்ள படம் டேம் 999. இதில் விமலாராமன் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த விமலாராமனுக்கு தமிழ் படங்களில் நடிக்க தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து விமலாராமனை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவர், "நான் தெலுங்குப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் படப்பிடிப்புக்காக கடந்த 1 வார காலமாக குலுமணாலியில் உள்ளேன். படப்பிடிப்பு ஒரு குக்கிராமத்தில் நடப்பதால் டேம் 999 படத்தை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் குறித்து முழுமையாகத் தெரியவில்லை.

சென்னையில் இருக்கும் எனது நண்பர்கள் படத்துக்கு எதிர்ப்பு இருப்பது குறித்து எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள்.

நான் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர். நான் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவள். கே. பாலசந்தர் தனது 'பொய்' படம் மூலம் என்னை அறிமுகப்படுத்தினார். எனக்கு அணையின் வரலாறு பற்றி எதுவும் தெரியாது. இயக்குனர் என்னிடம் கதை சொன்னபோது அதை படமாகத் தான் பார்த்தேன். தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் எண்ணமே எனக்கு இல்லை," என்றார்.
 

சுல்தான் தி வாரியர் வேறு; கோச்சடையான் வேறு! - கே எஸ் ரவிக்குமார்


கோச்சடையான் படம் புதிய கதை, புதிய தொழில்நுட்பத்துடன் உருவாகிறது. சுல்தான் படத்துக்கும் கோச்சடையானுக்கும் தொடர்பில்லை என்றார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் சுல்தான் - தி வாரியர் என்ற படத்தை தயாரித்து இயக்குவதாக அறிவித்தார் சௌந்தர்யா ரஜினி. அனிமேஷன் தொழில் நுட்பத்தில் அந்தப் படத்தை உருவாக்கினார். இடையில் ரஜினி எந்திரனில் நடிக்கத் தொடங்கியதால், அந்தப் படம் நிறுத்தப்பட்டது.

எந்திரன் வெளியான பிறகு சுல்தான் வரும் என்றார்கள். ஆனால் பல்வேறு தடைகளால் சுல்தான் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்ட நிலையில் ராணா படத்தை அறிவித்தார் ரஜினி.

ராணா தொடங்கிய ஏப்ரல் 29-ம் தேதியன்றே, ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்ததெல்லாம் ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

சிங்கப்பூரிலிருந்து சிகிச்சை முடிந்து வந்த ரஜினி, ராணா படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிப்பார் என்று கூறப்பட்டது. இதோ அதோ என பல தேதிகளை பத்திரிகைகள் ஹேஷ்யங்களாக வெளியிட்டு வந்தன. ஆனால் ரஜினி தரப்பில் இதுகுறித்து எதுவும் சொல்லப்பட வில்லை. வரும் ஜனவரியில் இதுகுறித்து சொல்வதாக கூறியிருந்தனர். ரஜினியும் இதை பின்னர் உறுதி செய்தார்.

இந்த நிலையில், திடீரென ரஜினியின் புதிய படம் கோச்சடையான் அறிவிக்கப்பட்டது.

இந்தப் படம் அனிமேஷனாகக் கூட இல்லாமல், ஜோம்ஸ் கேமரூனின் அவதார், ஸ்பீல்பெர்கின் டின் டின் படங்களைப் போல மோஷன் கேப்சரிங் உத்தியில் படமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க 3 டி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியானால் இந்தப் படம் முன்பு கைவிடப்பட்டதாக கூறப்பட்ட சுல்தானா என்று கேட்டபோது, இந்தப் படத்தின் இயக்குநர் மேற்பார்வை பொறுப்பை ஏற்றுள்ள ரவிக்குமார் கூறுகையில், "சுல்தான்தான் ராணா என்று முன்பு சொன்னார்கள். இரண்டு வேறு வேறு என்று முன்பு நான் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன், சுல்தானுக்கும் கோச்சடையானுக்கும் சம்பந்தமில்லை. கோச்சடையான் முற்றிலும் புதிய கதை, புதிய திரைக்கதை.

ரஜினி சார்தான் இதில் நடிக்கிறார். இதில் ஒரு ஹைடெக் செட்டுக்குள் அவர் நடிக்கும் காட்சிகளை படமாக்கி, அவற்றை மோஷன் கேப்சரிங் உத்தியில் மாற்றுகிறோம். அவ்வளவுதான். மற்றபடி, இது முழுக்க முழுக்க ரஜினி படம்.

ராணா ஒரு ஹெவியான படம். அதற்கு முன் இந்தப் படத்தில் நடிப்பது ரஜினிக்கு ஒரு ரிலாக்ஸான அதேநேரம் சுமையற்றதாக இருக்கும். அதனால்தான் இந்த முடிவு. ராணா நிச்சயம் 2012-ல் தொடங்கும்," என்றார்.
 

ரஜினி ஜோடி அனுஷ்கா?


கோச்சடையான் படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்தே, ரஜினியின் ஜோடி யார் என்ற பேச்சும் கிளம்பிவிட்டது.

இந்தப் படத்தில் அனுஷ்கா ஜோடியாக நடிப்பார் என்கிறார்கள்.

கோச்சடையான் கி.பி. 735-ல் வாழ்ந்த பாண்டிய மன்னன் ஆவான். வீரதீரம் நிறைந்த அவனது வரலாற்றை அடிப்படையாக வைத்து இப்படம் தயாராவதாகக் கூறப்படுகிறது.

உலகிலேயே அதிக வசூல் குவித்த அவதார் மற்றும் டின் டின் படங்களின் அதி நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ஷன் மேற்பார்வையை கே.எஸ். ரவிக்குமார் கவனிக்கிறார்.

ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இப்படத்துக்கு இதர நடிகர், நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. கதாநாயகியாக நடிக்க அனுஷ்கா, அசின், வித்யாபாலன் ஆகியோர் பரிசீலிக்கப்படுகின்றனர்.

அனுஷ்காவுக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அனுஷ்கா தற்போது விக்ரம் ஜோடியாக தாண்டவம் படத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே இவர் ராணா படத்துக்கு கால்ஷீட் தரத் தயாராக இருந்தார். ஆனால் அந்த நேரத்தில்தான் படப்பிடிப்பு தள்ளிப் போனது.
 

மத்திய அரசு தடுக்கவில்லை... தமிழகம் தவிர பிற பகுதிகளில் 'டேம் 999'!


டெல்லி: மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட டேம் 999 படம், தமிழகம் தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் 550 திரையரங்குகளில் வெளியானது.

முல்லை பெரியாறு அணையால் தமிழக, கேரள மக்களுக்கு ஆபத்து என்றும், 30 லட்சம் தமிழர்கள் இறந்துவிடுவார்கள் என்றும் சித்தரிக்கும் வகையில் கேரள இயக்குனர் சோஹன் ராய் எடுத்த டேம் 999.

இந்தப் படத்துக்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. 100 ஆண்டு பழமையான இந்த அணையை உடைத்து புது அணை கட்ட வேண்டும் என்றும் இல்லையேல் அணை உடைந்து பேரழிவு ஏற்படும் என்றும் படத்தில் வலியுறுத்தப்பட்டுயுள்ளது.

அனைத்து கட்சி தலைவர்களும் இந்த படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று வற்புறுத்தினர். இதையடுத்து தமிழக அரசு டேம் 999 படத்துக்கு தடை விதித்தது. இந்தியா முழுவதும் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட கட்சிகள் வற்புறுத்தின. பிரதமருக்கும் கடிதம் எழுதப்பட்டது.

ஆனால் எதிர்ப்பை மீறி தமிழகம் தவிர இந்தியா முழுவதும் டேம் 999 படம் இன்று ரிலீசானது. இந்த படத்தின் முன்னோட்ட சிறப்பு காட்சியை மத்திய அரசின் பிலிம் டிவிஷன் நேற்று டெல்லியில் உள்ள திரைப்பட வர்த்தக சபையில் திரையிட்டது. பத்திரிகையாளர்களுக்காக இந்த சிறப்பு காட்சி திரையிடப்படுவதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

பெரிய அணை, சிறிய அணை என இரு அணைகள் படத்தில் காண்பிக்கப்படுகின்றன. அணை பிடிப்பில் உள்ள மக்கள் மலையாளத்தில் பேசுகிறார்கள். புதிதாக கட்டப்படும் சிறிய அணை பலவீனமாக உள்ளது என கூறி அதற்கு திறப்பு விழா நடத்த மேயர் மறுத்து விடுகிறார். இதனால் பெரிய அணையில் உள்ள தண்ணீர் சிறிய அணையில் திறந்து விட மறுக்கப்படுகிறது.

திடீர் என புயல், நில நடுக்கம் ஏற்படுகிறது. இதில் மேல் அணை உடைந்து விடுகிறது. தண்ணீர் சீற்றத்தினால் இன்னொரு அணையும் உடைகிறது. இதில் ஏராளமானோர் உயிரிழக்கிறார்கள் என்பது போல் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. படத்துக்கு தடை விதிக்கும் படி தமிழகத்தில் இருந்து வந்த கோரிக்கைகள் மீது மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

கேரளாவில் இந்த படம் இன்று பலத்த எதிர்ப்பார்ப்புடன் ரிலீஸ் ஆனது. அங்குள்ள ரசிகர்கள் படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டினார்கள். இதனால் படம் ரிலீசான அனைத்து தியேட்டர்களிலும் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக ஓடியது.

மீடியாவில் எழுந்த சர்ச்சைகள், தலைவர்களின் எதிர்ப்புகளே படத்துக்கு பெரிய விளம்பரமாக அமைந்ததால், சுமாரான இந்தப் படத்துக்கு எக்கச்சக்க வசூல் கிடைத்துவிட்டது முதல்நாளில்!
 

டேம் 999க்கு நான் ஆதரவு தெரிவித்தேனா?: நயன்தாரா மறுக்கிறார்


டேம் 999 படத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. என் பெயரில் யாரோ போலியாக டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்கள் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

முல்லைப்பெரியாறு அணை உடைவது போலவும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவது போன்றும் டேம் 999 என்ற படத்தில் காட்டியுள்ளனர். மலையாள இயக்குனர் சோஹன்ராய் எடுத்த இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா பெயரில் டேம் 999 படத்துக்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்து பதறிப்போன நயன்தாரா அதை மறுத்தும், கண்டனம் தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"நான் டுவிட்டரிலும் இல்லை. பேஸ்புக்கிலும் இல்லை. என் பெயரில், யாரோ வேண்டாதவர்கள் மோசடி வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். `டேம் 999' படம் பற்றி நான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. என் பெயரில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.