கண்டக்டராகும் முன் மூட்டைத் தூக்கியவர் ரஜினி! - எஸ்பி முத்துராமன்

ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியாக வேலை செய்தாராம். இந்தத் தகவலை திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கவிஞர் பரமசிவன் எழுதிய 'ஒரு தமிழ்க் கவிஞனின் ஆங்கில பாடல்கள்' என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய எஸ்.பி.முத்துராமன், "சினிமாவில் நடிப்பதற்கு முன் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர் எம்.ஜி.ஆர். அதனால்தான், அவர் தமிழக முதல்வரான பின் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

Rajini, a coolie once!

இதேபோல், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் போன்றவர்களும் ஆரம்ப காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டவர்கள். அவர்களது கடின உழைப்பு, திறமை, புத்திசாலித்தனத்தால் சினிமாவில் சாதனை படைத்தனர்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் ரஜினிகாந்த் கண்டக்டர் வேலை செய்து கொண்டிருந்தார் என்பதுதான் எல்லாருக்கும் தெரியும். உண்மையில் ரஜினி கண்டக்டர் வேலைக்கு முன் மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து வந்தார். இதை அவரே என்னிடம் சொன்னார்.

ரஜினியை வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தோம் (ராணுவ வீரன்). அப்போது, அவர் நடிக்க வேண்டிய காட்சியை முடித்து விட்டு, அரிசி ஆலையில் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மீது படுத்து தூங்கிவிட்டார்.

இதற்கிடையே வேறொரு காட்சி எடுத்து முடித்து விட்டு ரஜினி நடிக்க வேண்டிய காட்சிக்காக தேடியபோது, அவர் நெல் மூட்டை மீது தூங்குவதை அறிந்து எழுப்பினேன். 'நெல் மூட்டை மீது படுத்தால் உடம்பு அரிக்காதா?' என கேட்டேன். அதற்கு அவர், 'நான் நடிக்க வருவதற்கு முன் மூட்டை தூக்கும் கூலி வேலை செய்தேன், அதனால் எனக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லே,' என்றார்.

அவரது அந்த கஷ்டத்தின் பலன்தான் இன்றைய சூப்பர் ஸ்டார் அந்தஸ்து," என்றார் எஸ்பி முத்துராமன்.

இதனை ரஜினி தன் உழைப்பாளி படத்திலேயே இரு காட்சிகளில் சொல்லியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பெண்கள் மட்டுமே நடிக்கும் சில்லு... நாடகம் தயாரிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ்!

முதல் முறையாக திரைப்படத் தயாரிப்பில் கால் பதிக்கிறது ராம நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ். இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் நாடகத்துக்கு சில்லு என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

திரை உலகில் நன்கு பரிச்சயமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்போது நாடகத் தயாரிப்பிலும் கால் பதிக்கிறது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் முரளி ராமசாமியும் அவரது மனைவி ஹேமா ருக்மணியும், நாடகங்களுக்கு மறுமலர்ச்சி கொடுக்க வேண்டும், மேலை நாடுகளில் நாடகங்கள் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்படுவது போல நமது கலாச்சாரத்துடன் இணைந்து தரமான நாடகங்களை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புது முயற்சியில் களமிறங்கியிருக்கிறார்கள்.

Thenandal films enters stage drama production

இவர்களது முதல் தயாரிப்பாக ‘சில்லு' என்ற நவீன அறிவியல் புனைவு நாடகத்தை சென்னை நாடக ஆர்வலர்களுக்கு பரிச்சயமான ஸ்ரத்தா அமைப்பு, மற்றும் அமெரிக்க விரிகுடாப் பகுதி நாடகக் குழுவான க்ரியாவுடன் இணைந்து தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்க இருக்கிறது.

ஸ்ரத்தா இதுவரை 18 நாடகங்களை மேடையேற்றியுள்ளது. ஸ்ரத்தாவின் குறிக்கோள், தரமான எழுத்தாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை அறிமுகப்படுத்தவது. க்ரியா இதுவரை 9 முழுநீள நாடகங்களை அமெரிக்காவின் பல இடங்கள் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் மேடையேற்றியுள்ளது.

எதிர் காலத்தில் நடப்பதாக இருக்கும் ‘சில்லு' அறிவியல் புனைவு கதையை தமிழ் வாசகர்களுக்கு நன்கு பரிச்சமாயன பிரபல எழுத்தாளர் இரா.முருகன் எழுதியுள்ளார். இவர் நாடகங்கள் மட்டுமல்லாமல் பல நாவல்கள் மற்றும் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளார். கமல்ஹாசனின் ‘உன்னை போல் ஒருவன்' மற்றும் ‘பில்லா 2' ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார்.

‘சில்லு' நாடகத்தை அமெரிக்காவை சேர்ந்த க்ரியாவின் தீபா ராமானுஜம் இயக்க உள்ளார். இவர், கே.பாலச்சந்தரின் ‘பிரேமி' உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் மேடை நாடகங்கள் மூலம் தமிழ் நாட்டு மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். இதுவரை 9 முழு நீள நாடகங்களை இயக்கியிருக்கிறார். தற்போது இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு-நயன்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் ‘இது நம்ம ஆளு', சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரஜினி முருகன்', விஜய் ஆண்டனி நடிக்கும் ‘பிச்சைக்காரன்' ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

முத்திரை பதித்து வரும் எழுத்தாளர், கவனத்துக்குரிய இயக்குனர், ரசிகர்களுக்கு பரிச்சயமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் - க்ரியா - ஸ்ரத்தா குழுக்களின் கூட்டணி என ‘சில்லு' நாடகத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

புதிய நாடக முயற்சி ஒன்றின் ஃபர்ஸ்ட் லுக் விளம்பரப் போஸ்டரை ஒரு முன்னணி நடிகர் வெளியிடுவது இதுவே முதல் முறை. விஜய் சேதுபதி ‘சில்லு' நாடகத்தின் விளம்பரப் போஸ்டரை கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வெளியிட்டார்.

‘சில்லு' நாடகத்துக்கு பிரபல திரைப்பட கலை இயக்குனர் வி.செல்வக்குமார் மேடையை வடிவமைக்க உள்ளார். பல ஆங்கில நாடகங்களுக்கு இசை அமைத்த அனுபவம் கொண்டவரான அமெரிக்காவை சேர்ந்த கவிதா பாளிகா இந்த நாடகத்திற்கு இசையமைக்கிறார். இவர் ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர். இவர்களோடு ப்ரீதிகாந்தன் ஆடை வடிவமைக்க, 25 நடிகர்கள் இதில் கதாபாத்திரங்களை ஏற்க உள்ளனர். இந்த நடிகர்களின் சராசரி வயது 25. இவர்களில் சிலர் முதன்முறையாக தமிழ் நாடகத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் அடுத்த முயற்சியாக, கார்த்திக் ராஜாவுடன் இணைந்து ‘பட்டணத்தில் பூதம்' என்கிற நாடகத்தினை தயாரிக்கிறது. அந்த குழந்தைகளுக்கான நாடகத்தில், பல திரைப்பட நடிகர்களும் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி திரைப்படத் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் மேடை நாடகத்தில் பங்கேற்க வருவதால் தமிழ் நாடகத்தின் தரம் கூடிய விரைவில் உயரும் என்பதில் சந்தேகமே இல்லை.

‘சில்லு' நாடகம் செப்டம்பர் 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் மாலை 7 மணிக்கு சென்னை நாரத கான சபாவில் நடைபெறுகிறது. 12-ம் தேதி திரை உலக சிறப்பு விருந்தினர்களுக்காக 4 மணி காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘சில்லு' நாடகம் நவம்பர் 22-ம் தேதி அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் மேடையேற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

சங்கத்திற்கு அடிக்கல் நாட்டிய சூது நடிகர்

சில வருடங்களுக்கு முன்பு அந்த சுமார் நடிகருக்கு சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று துடியாய் துடித்த ரசிகர்களை, சங்கம் ஆரம்பிக்கிறதெல்லாம் தப்பு போய் வேலைய பாருங்க என்று அன்பாக அனுப்பி வைத்தார் நடிகர்.

நடிகர் அன்பாக சொல்லியதால் ரசிகர்களும் சரி என்று கூறி திரும்பி சென்று விட்டனர், அதன்பிறகு அந்த மாதிரி கேட்டு யாரும் சூது நடிகரின் வீட்டுக் கதவை தட்டவில்லை.

ஆனால் சமீப காலமாக தனது படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறத் தவறி வருவதால், என்ன செய்வது எப்படி இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பது என்று ரூம் போட்டு யோசித்த நடிகர் பேசாமல் நடிகர் சங்கம் ஆரம்பித்தால் என்ன என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு வந்த ரசிகப் பெருமக்களை அழைத்து ரசிகர் மன்றம் ஆரம்பிங்க ஒன்னும் தப்பில்லை என கூறியுள்ளாராம். நடிகரே சொல்லிவிட்டதால் உற்சாகமாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனராம் ரசிகக் கண்மணிகள்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய்....பாலகுமாரா

 

மண்டபம்தானே, தாராளமா எடுத்துக்கங்க..!- விஷால் அணிக்கு ரஜினி தந்த அனுமதி

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்துக்கு தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை தந்துள்ளார் ரஜினிகாந்த்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைே நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மேல் நிலைப் பள்ளியில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Rajini gave permission to Vishal Team

தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் வாக்களிக்கத் தகுதியுள்ள 3 ஆயிரத்து 139 நடிகர், நடிகைகள் ஓட்டு போடுகின்றனர். தேர்தல் பற்றிய அறிவிப்பு, நடிகர் சங்கம் சார்பில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது தலைவராக உள்ள சரத்குமாரும் பொதுச்செயலாளர் ராதாரவியும் அதே பதவிக்கு மீண்டும் போட்டியிடுகின்றனர். விஷால் அணி சார்பில், தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலுக்காக இரு அணியினருமே ரஜினி,கமல் உட்பட அனைத்து முன்னணி நடிகர் நடிகைகளையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தை விஷால் அணியினரும் அவர்களைத் தொடர்ந்து சரத்குமாரும் சந்தித்து ஆதரவு கேட்டனர். அப்போது அவர் இரு அணியினருக்குமே 'பார்க்கலாம்' எனப் பதில் கூறி அனுப்பினார்.

இந்நிலையில், விஷால் அணியினர் தங்களது ஆதரவாளர்கள் கூட்டத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் நடத்தத் திட்டமிட்டனர். அதற்காக நடிகர் நாசர், ராகவேந்திரா மண்டப நிர்வாகி மற்றும் ரஜினிகாந்திடம் அனுமதி கேட்டார்.

அந்த நாளில் மண்டபத்தில் வேறு நிகழ்ச்சிகள் இல்லை என்பதால், "மண்டபம் தானே? தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்", என்று அனுமதி தந்தாராம் ரஜினி.

உடனே, இதை வைத்து ரஜினி ஆதரவு பெற்ற அணி எங்களுடையது என விஷால் தரப்பு பிரச்சாரம் செய்து வருகிறது. அதை முறியடிக்கவே ஒரு காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார் சரத்குமார்.

 

கவுண்டமணிக்கு நிகரான நடிகரில்லை! - 49ஓ இயக்குநர்

எத்தனை சவாலான விஷயங்களையும் சுவாரஸ்யமாகச் சொல்வதில் கவுண்டமணிக்கு நிகரான நடிகரில்லை என்று இயக்குநர் ஆரோக்கியதாஸ் கூறினார்.

49ஓ படத்தில் கவுண்டமணியை நாயகனாக்கி இயக்கி வருகிறார் ஆரோக்கியதாஸ். இவர் கவுதம் மேனன், விக்ரம் குமார் ஆகியோரிடம் பணியாற்றியவர்.

49O Director hails Goundamani

49 ஓ படத்தில் நாயகனாக கவுண்டமணியைத் தேர்வு செய்தது குறித்து அவர் கூறுகையில், "கவுண்டமணி எல்லா சென்டரும் விரும்பும் நாயகன். ஏபிசி என்ற பாகுபாடே அவருக்குக் கிடையாது.

இன்றைய தகவல் தொழிநுட்ப யுகத்தில் இளைஞர்களால் கொண்டாடப்படும் நடிகராகத் திகழ்கிறார். அவரளவுக்கு அப்டேட்டட் நடிகரைப் பார்க்க முடியாது.

எந்த ஒரு கடுமையான விஷயத்தையும் நாசூக்காகவும் நகைச்சுவையாகவும் வெளிப்படுத்துவதில் கவுண்டருக்கு நிகரான நடிகரில்லை. அவரை வைத்து படம் இயக்கியது பெரிய அனுபவம். எனக்கு முதல் படத்திலேயே அது கிடைத்துவிட்டது," என்றார்.

 

பல மணி நேரம் காத்திருந்து எம்ஜிஆர் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரஜினி!

அமரர் எம்ஜிஆரின் நான் ஆணையிட்டால் படத்தை பெங்களூரில் பல மணி நேரம் காத்திருந்து முதல் நாள் முதல் காட்சி பார்த்த தன் இளம் வயது அனுபவத்தை நேற்று ஆர் எம் வீரப்பன் பிறந்த நாள் விழாவில் ரஜினி பகிர்ந்து கொண்டார்.

தயாரிப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்எம் வீரப்பனின் 90வது பிறந்த நாள் விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்றுப் பேசும்போது, "என் நண்பன் ஒருவன் 'எங்களோட வாத்தியார் எம்ஜிஆர் படத்தை பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ நீ டிக்கெட் வாங்கி பாத்துட்டு வந்தா உனக்கு என்ன வேணாலும் நான் கொடுக்கிறேன்'னு சேலஞ்ச் பண்ணான். அப்போ வந்து நான் ஆணையிட்டால் படம் ரிலீசாகியிருந்தது.

Rajinikanth's FDFS experience for MGR movie

அப்போ டிக்கெட் விலை 65 பைசா, ரூ 1.10 பைசா, ரூ 2.10 பால்கனி... அப்புறம் இன்னொரு க்ளாஸ். 65 பைசாதான் என் ரேஞ்ச். தமிழ்நாட்ல அவருக்கு எப்படின்னு தெரியும்... ஆனா அதைவிட ஜாஸ்தி, கர்நாடகாவுல உள்ள தமிழர்கள் எம்ஜிஆர் பேன்ஸ். வெறியனுங்கன்னு சொன்னா, அங்க மாதிரி எங்கும் கிடையாது. அதாவது நாடு விட்டு நாடு வந்த அவங்க அங்க சேரும்போது அந்த ஒற்றுமை ரொம்ப ஜாஸ்தியா இருக்கும். எப்பவுமே தமிழரோட ஒற்றுமை தமிழ்நாட்டைவிட வெளியேதான் அதிகமா இருக்கும்.

காலைல 5.30-க்குப் போயி டிக்கெட் வாங்கணும். கன்னட ராஜ்குமார் படங்களுக்கு 8, 8.30 மணிக்கு.. ஆனா இந்தப் படத்துக்கு 5.30 மணிக்கோ போயி 12 மணி வரை வேர்த்து விறுத்து, பக்கெட்ல தண்ணி எடுத்து ஊத்துவாங்க.. அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கிட்டேன். டிக்கெட் வாங்கி படம் பாத்துட்டு வந்தேன். என் ப்ரெண்ட் ஆடிப் போயிட்டான்.

அந்தப் படத்தோட தயாரிப்பாளர்தான் நம்ம ஆர்எம்வீ அவர்கள். சத்யா மூவீஸ்.. நான் ஆணையிட்டால்.

நான் வந்து... பெரிய ஆர்டிஸ்ட் ஆன பிறகு, ராணுவ வீரன்.. முதல் படம், சத்யா மூவீஸுக்கு நான் பண்ண முதல் படம். அந்தப் படம் பண்ணும்போது எனக்கு அந்த பெங்களூர் சம்பவம்தான் நினைவுக்கு வந்தது.

65 பைசா கொடுத்து கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கி நான் பாத்த நான் ஆணையிட்டால் படத்தின் தயாரிப்பாளர் ஆர்எம்வீ பேனர்ல நான் படம் பண்ணது, நாத்திகர்கள் காலத்தின் கட்டாயம்னு சொல்வாங்க.. ஆன்மீகவாதிகள் விதி, தெய்வச் செயல்னு சொல்வாங்க... என்னை காலம் எங்கிருந்து எங்க கொண்டு வந்திருக்கிறது பாருங்க...

அதன் பிறகு ஆர்எம்வீ கூட நிறைய பழகியிருக்கேன். அவரிடம் போனில் பேசும்போது, நான் வீரப்பன் பேசறேன் என்பார். அப்போது எனக்கு பெரியார் ஞாபகத்துக்கு வருவார், அண்ணா ஞாபகத்துக்கு வருவார், காமராஜர் ஞாபகத்துக்கு வருவார், எம்ஜிஆர் ஞாபகத்துக்கு வருவார்... இன்னும் பெரிய பெரியவர்கள்கிட்டேயெல்லாம் 'நான் வீரப்பன் பேசறேன்' அப்டி பேசின அதே குரலை நானும் கேட்கறேன்னு நினைக்கும்போது எனக்கு புரியாத ஒரு உணர்வு ஏற்படும்.

ஆர்எம்வீ கூட பழகப் பழக எனக்கு எம்ஜிஆர் அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் அதிகமாச்சு.. இவ்வளவு பெரிய அறிவாளி, இவ்வளவு ஒழுக்கமுள்ளவர், இவ்வளவு பெரிய மனிதர் அவருடன் பழகி, அவர் இவரை வேலை வாங்கியிருக்கிறாரே என்றபோது ஆச்சர்யம் அதிகமாச்சு.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு பத்தி எனக்குத் தெரியாது. ஆனா அவற்றை ஆர்எம்வீயிடம் நான் பார்க்கிறேன்.

ஒரு படம் எப்படி எடுக்கணும், அதை எப்படி பிஸினஸ் பண்ணனும், எப்படி மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்கணும் போன்றவற்றில் ஏவிஎம் சரணவணனை அடிச்சிக்க ஆள் இல்ல. ஆனால் ஆர்எம்வீ சார்கிட்ட ஒரு மாஸ் ஹீரோவ கொடுத்திட்டா அந்தப் படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கறதுக்கு அவரை விட்டா ஆளில்லை....," என்றார்.

 

பாட்ஷாவை மிஞ்ச இனி ஒரு படம் வரப்போவதில்லை!- ரஜினி

சென்னை: பாட்ஷா படத்தை கபாலி மிஞ்சுமா என பலர் என்னிடம் கேட்கிறார்கள். ஒரு பாட்ஷாதான். அதை மிஞ்ச எந்தப் படமும் இல்லை என்றார் ரஜினிகாந்த்.

தயாரிப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர் எம் வீரப்பனின் 90வது பிறந்த நாள் விழா இன்று சென்னை ராணி சீதை அரங்கில் நடந்தது.

Basha cant be replaced any movie, says Rajini

விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ஆர்எம் வீரப்பன் தயாரிச்ச பாட்ஷா படத்தோட 125 வது நாள் விழாவில் கலந்துகிட்டேன். அப்போ ஆர்எம்வீ அமைச்சராக இருந்தார். அந்த மேடையில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றிப் பேசினேன். அன்று இரவே ஆர்எம்வீக்கு பதவி போய்விட்டது. அடுத்த நாள் விஷயம் தெரிஞ்சு, கொஞ்சம் பயத்தோடதான் அவருக்குப் போன் பண்ணேன். வருத்தத்தைத் தெரிவிச்சப்ப, அவர் சிரிச்சிக்கிட்டே,
'வருத்தப்படாதீங்க.. இது காலத்தின் கட்டாயம்'-னு சொன்னார்.

Basha cant be replaced any movie, says Rajini

ஆர்எம் வீரப்பன் சார் ஒரு முறை கூட ஆஸ்பிடலுக்கு போனதே இல்லைனு சொல்லுவாங்க. ஆஸ்பிடலுக்குப் போன வேதனையை அனுபவிச்சவன் நான். தயவு செய்து யாரும் ஆஸ்பிடலுக்கு போகாத அளவுக்கு உடம்பை வச்சிக்கங்க. 50 வயசுக்கு மேல இருக்கிறவங்க தினமும் எக்ஸர்ஸைஸ் பண்ணுங்க...!

என்கிட்ட பலர் இப்போ நான் நடிக்கிற கபாலி, பாட்ஷாவை மிஞ்சுமான்னு கேட்கிறாங்க. பாட்ஷாவை மிஞ்சும் அளவுக்கு இன்னொரு படம் வருமான்னு தெரியல. ஒரு பாட்ஷாதான்," என்றார்.

 

காமெடியன்தான்... ஆனாலும் கருணாகரன் இந்த விஷயத்தில் ஹீரோய்யா!

தமிழ் சினிமாவில் உள்ளவர்களை சட்டென்று திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் நகைச்சுவை நடிகர் கருணாகரன்.

இனி ஒவ்வொரு படத்துக்கும் தான் வாங்கும் சம்பளத்திலிருந்து ஒரு லட்ச ரூபாயை விவசாயிகளுக்குக் கொடுக்கப் போகிறாராம்.

Comedian Karunakaran's heroic effort!

இதுகுறித்த தனது அறிவிப்பில், "ஒவ்வொரு படத்திற்கும் நான் வாங்கும் சம்பளத்தில் ஒரு லட்சத்தை போராடி வரும் ஏழை விவசாயக் குடும்பங்களுக்குக் கொடுக்க இருக்கிறேன். அதை இன்றிலிருந்தே ஆரம்பிக்க உள்ளேன்," என்று கூறியுள்ளார்.

இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் கிராமத்தில் உள்ள இறந்துபோன 113 விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து பண உதவிகள் கொடுத்தார் நானா படேகர். அவரது வழியில் தமிழகத்தில் கருணாகரன் இந்த நல்ல காரியத்தை ஆரம்பித்துள்ளார்.

Comedian Karunakaran's heroic effort!

விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்கும் பெரு முயற்சிக்கு கருணாகரனின் இந்த செயல் ஒரு நல்ல அடித்தளமாக அமையும்!

வாழ்த்துகள்!